Friday, October 8, 2021

ஹதீஸ் எண் 35 الا اريك امراة من اهل الجنة

 

عن عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ: قَالَ لِي ابْنُ عَبَّاسٍ: أَلاَ أُرِيكَ امْرَأَةً مِنْ أَهْلِ الجَنَّةِ؟ قُلْتُ: بَلَى، قَالَ: هَذِهِ المَرْأَةُ السَّوْدَاءُ، أَتَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَتْ: إِنِّي أُصْرَعُ، وَإِنِّي أَتَكَشَّفُ؛ فَادْعُ اللَّهَ لِي، قَالَ: «إِنْ شِئْتِ صَبَرْتِ وَلَكِ الجَنَّةُ، وَإِنْ شِئْتِ دَعَوْتُ اللَّهَ أَنْ يُعَافِيَكِ»، فَقَالَتْ: أَصْبِرُ، فَقَالَتْ: إِنِّي أَتَكَشَّفُ، فَادْعُ اللَّهَ لِي أَنْ لاَ أَتَكَشَّفَ، فَدَعَا لَهَا

அதாஃ பின் அபீ ரபாஹ் ரலி அவர்கள் கூறுகிறார்கள் ;

சொர்க்க வாதியான ஒரு பெண்ணை உனக்கு நான் காட்டட்டுமா என்று என்னுடைய உஸ்தாது இப்னு அப்பாஸ் ரழி அவர்கள் என்னிடம் கேட்டார்கள். சரி என்று நான் கூறினேன். இதோ இந்த கருப்பு நிற பெண் தான் என்று அவர்கள் கூறினார்கள். இப்பெண் ஒருநாள் நபி அவர்களிடம் வந்து நான் வலிப்பு நோயாளி. இதனால் என ஆடை விலகி விடும் நிலை ஏற்படுபவளாக நான் இருக்கிறேன். எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறினாள். அப்போது நபி அவர்கள் நீ விரும்பினால் பொறுமையாக இரு. உனக்கு சொர்க்கம் உண்டு. நீ நாடினால் உனக்கு சுகம் கிடைக்க அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன் என்று கூறினார்கள். அதற்கு அப்பெண்மணி நான் பொறுமையாக இருக்கிறேன். ஆனால் நான் ஆடை திறக்கப்பட்டு விடும் நிலை உள்ளவனாக இருக்கிறேன். எனவே எனது ஆடை விலகாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்று கேட்டார். பெண்ணுக்காக நபி அவர்கள் துஆ செய்தார்கள். (புகாரி ; 5652)

சொர்க்க வாதிகளை இரண்டு வகையாக மார்க்க அறிஞர்கள் பிரிக்கிறார்கள். ஒன்று சில குறிப்பிட்ட தன்மைகளைக் கொண்டு சொர்க்கவாசிகள் என்று அல்லாஹ்வாலும் ரசூலாலும் அடையாளம் காணப்பட்டவர்கள். இறையச்சம் உள்ளவர்களுக்கு இந்த சுவனம் தயார் செய்யப்பட்டுள்ளது என்று அல்லாஹ் குறிப்பிடுவதைப் போல. தனக்கு மிகவும் பிரியமான ஒருவர் மரணத்தைத் தழுவும் போது பொறுமையோடு அதை ஏற்றுக்கொண்டு இறைவனிடத்தில் நன்மையை எதிர்பார்ப்பவருக்கு சொர்க்கம் உண்டு என்று இதற்கு முன் நாம் படித்த ஹதீஸைப் போல.

இரண்டாவது வகை, நபி அவர்களால் பெயர் குறிப்பிடப்பட்டு இவர்கள் சொர்க்கம் செல்வார்கள் என்று அடையாளம் காட்டப்பட்டவர்கள். நான்கு கலீஃபாக்கள், சுவனத்தை கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்ட பத்து நபர்களில் மீதி ஆறு நபர்கள். சாபித் பின் கைஸ் ரலி, ஸஃது பின் முஆத் ரலி, அப்துல்லாஹ் பின் ஸலாம் ரலி, பிலால் ரலி போன்றவர்கள் இந்த இரண்டாவது வகையைச் சார்ந்த சொர்க்க வாதிகள். இந்த ஹதீஸில் வந்திருக்கிற அந்த பெண்மணியும் இந்த இரண்டாவது வகையை சார்ந்த சொர்க்கத்திற்கு செல்ல கூடிய கூடியவர்களில் ஒருவர் தான்.

நபி அவர்கள் தன் இனத்தின் மீது பேராவல் கொண்டவர்கள், மிகவும் அக்கறையும் கவனமும் உள்ளவர்கள், தன் சமூகம் மறுமையில் வெற்றி பெற வேண்டும், உயர்ந்த இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் என்பதையும் இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது. அந்தப் பெண்மணி எனக்கு இந்த நோய் இருக்கிறது. எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறிய போது நபியவர்கள் நினைத்திருந்தால் உடனே சுகத்திற்காக துஆ செய்திருக்கலாம். அவர்கள் துஆ செய்திருந்தால் சுகமும் கிடைத்திருக்கும். ஆனால் நபியவர்கள் அந்தப் பெண்ணுடைய மறுமையை எண்ணிப் பார்க்கிறார்கள். இந்த உலகில் சிறிய சிரமம் ஏற்பட்டாலும் மறுமையில் அந்த பெயருக்கு மிக உயர்ந்த அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். தன் சிந்தனையை குறுகிய வட்டத்திற்குள் வைத்து விடாமல் விசாலமாக்குகிறார்கள். அதனால் தான் நீ பொறுமையாக இருந்தால் உனக்கு சொர்க்கம் உண்டு என்று உணர்த்தினார்கள்.

அந்தப் பெண்ணுடைய மிக உயர்ந்த பொறுமையும் இந்த ஹதீஸில் நமக்கு தெரிகிறது. வலிப்பு நோய் என்பது மிகவும் ஆபத்தான ஒரு நோய். எந்த சூழ்நிலையில் வரும், எந்த இடத்தில் வரும் என்று தெரியாது. அந்த நேரத்தில் அவர்கள் தன் சுய நினைவை இழந்து தன் நாவை கடித்துக் கொள்வார்கள். தன் கரத்தை கடித்துக் கொள்வார்கள். ரோட்டில் விழுந்து கிடப்பார்கள். மிகவும் அவமானத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தக்கூடிய மிகவும் ஆபத்தான ஒரு நோய். ஆனால் மறுமையில் தனக்கு சொர்க்கம் கிடைக்கும் என்ற சுபச் செய்தியைக் கேட்டு அந்த நோயைக் கூட பொறுமையாக தாங்கிக் கொண்டார்கள் இந்த பெண்மணி.

இவ்வுலகத்தில் நமக்கு ஏற்படும் சிரமங்களை எந்த அளவிற்கு நாம் பொறுமையோடு தாங்கிக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு மறுமையில் நமக்கு உயர்ந்த அந்தஸ்து கிடைக்கும் என்பதும் இந்த ஹதீஸ் சொல்லக்கூடிய அழுத்தமான செய்தியாக இருக்கிறது.

No comments:

Post a Comment