Pages

Pages

Sunday, October 24, 2021

ஹதீஸ் எண் 42 فمن يعدل اذا لم يعدل الله ورسوله

 

عَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ: لَمَّا كَانَ يَومُ حُنَينٍ آثَرَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَاسًا فِي الْقِسْمَةِ، فَأَعْطَى الْأَقْرَعَ بْنَ حَابِسٍ مِائَةً مِنَ الْإِبِلِ، وَأَعْطَى عُيَيْنَةَ بْنَ حِصْنٍ مِثْلَ ذَلِكَ، وَأَعْطَى نَاسًا مِنْ أَشْرَافِ الْعَرَبِ، وَآثَرَهُمْ يَوْمَئِذٍ فِي الْقِسْمَةِ، فَقَالَ رَجُلٌ: وَاللهِ إِنَّ هَذِهِ قِسْمَةٌ مَا عُدِلَ فِيهَا، وَمَا أُرِيدَ فِيهَا وَجْهُ اللهِ، فَقُلْتُ: وَاللهِ لَأُخْبِرَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَتَيْتُهُ فَأَخْبَرْتُهُ بِمَا قَالَ، فَتَغَيَّرَ وَجْهُهُ حَتَّى كَانَ كَالصِّرْفِ، ثُمَّ قَالَ: «فَمَنْ يَعْدِلُ إِذَا لَمْ يَعْدِلِ اللهُ وَرَسُولُهُ؟»، ثُمَّ قَالَ: «يَرْحَمُ اللهُ مُوسَى، قَدْ أُوذِيَ بِأَكْثَرَ مِنْ هَذَا فَصَبَرَ»، فَقُلْتُ: لَا جَرَمَ لَا أَرْفَعُ إِلَيْهِ بَعْدَهَا حَدِيثًا[1]؛ متفق عليه

ஹுனைன் போரின் போது நபி ஸல் அவர்கள் அந்தப் போரில் கிடைத்த கனிமத் பொருள்களை பங்கீடு செய்வதில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது அக்ரஃ பின் ஹாபிஸ் அவர்களுக்கு நூறு ஒட்டகங்களைக் கொடுத்தார்கள். உயைனா பின் மிஹ்ஸன் அவர்களுக்கும் அதே போல் கொடுத்தார்கள். மேலும் அரபு மக்களில் முக்கியமானவர்களுக்கும் கொடுத்தார்கள். அந்நாளில் அல்லாஹ்வின் மீது சத்தியமாக நிச்சயமாக இந்த பங்கீட்டில் நீதி கடைப்பிடிக்கப்பட வில்லை, அல்லாஹ்வின் திருப்பியும் இதில் நாடப்பட வில்லை என்று ஒரு மனிதர் கூறினார். அதைக் கேட்டு விட்டு அல்லாஹ்வின் மீது சத்தியமாக இதை நான் நபி ஸல் அவர்களிடம் கூறுவேன் என்று சொல்லி விட்டு உடனே அவர்களிடம் வந்து அவர் கூறியதை சொன்னேன். அப்போது சிவப்பு சாயம் போல் அவர்களின் முகம் மாறியது. அல்லாஹ்வும் அவனது தூதரும் நீதமாக நடக்க வில்லை என்றால் வேறு யார் நீதமாக நடப்பார் என்று கூறி விட்டு, அல்லாஹ் மூஸா நபி அவர்களுக்கு அருள் புரிவானாக. இதை விட மிக அதிகமாக அவர் நோவினை செய்யப்பட்டார். அப்போது அவர் பொறுமையாக இருந்தார் என்று கூறினார்கள். இந்த நிகழ்வுக்குப் பின்னர் ஒரு செய்தியை நபி ஸல் அவர்களிடம் நான் கூறாமல் இருப்பது குற்றமல்ல என்று நான் கூறிக் கொண்டேன். (புகாரி ; 3150)

ஹுனைன் போர்க்களம் இஸ்லாமிய வரலாற்றில் நடந்த மிக முக்கியமான போர்க்காலங்களில் ஒன்று. ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு மக்கா வெற்றி கொள்ளப்பட்டது. அந்த மக்கா வெற்றிக்குப் பிறகு நடந்த போர் தான் ஹுனைன் போராகும். அந்த போர்க்களத்தில் இஸ்லாமியர்களுக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்ததோடு ஏராளமான கனீமத் பொருட்களும் கிடைத்தது. நபியவர்கள் போர்க்களம் முடிந்து அங்கிருந்து வந்து கொண்டிருக்கின்ற பொழுது பயணத்தின் இடையில் ஒரு இடத்தில் போர்க்களத்திலே கிடைத்த அந்தப் பொருள்களை  பங்கு வைத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது சில குறிப்பிட்ட நபர்களுக்கு நூறு ஒட்டகங்கள் வரைக்கும் தந்தார்கள். இதைப் பார்த்த முனாஃபிக்குகளில் ஒருவன் சொன்ன வார்த்தை தான் இந்த ஹதீஸில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.நபியவர்கள் நீதமாக நடந்து கொள்ள வில்லை. அவர்கள் செய்த பங்கீட்டில் நீதம் பேணப்படவில்லை என்று அவன் சொன்னான்.

நபியவர்கள் எல்லோருக்கும் சமமாக பங்கு வைக்காமல் ஏன் அவ்வாறு வித்தியாசப் படுத்தினார்கள். சில நபர்களுக்கு மட்டும் ஏன் அதிகப்படுத்தி தந்தார்கள் என்பதற்கான விடையை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களுக்கும் கோத்திரத்தின் உடைய தலைவர்களுக்கும் குறிப்பாக நபியவர்கள் அதிகமாக கொடுத்தார்கள். ஏனென்றால் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களுக்கு அவ்வாறு தருகின்ற பொழுது அவர்களது ஈமான் பலப்படும். இஸ்லாத்தின் பெயரிலும் நபியின் பெயரிலும் நல்ல அபிப்பிராயம் அவர்களுக்கு ஏற்படும். எனவே அவர்களுக்கு அதிகமாக கொடுத்தார்கள். சில கோத்திரத்தின் தலைவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு அதிகமாக ஏன் கொடுத்தார்கள் என்றால், அவ்வாறு கொடுக்கின்ற பொழுது அவர்கள் மகிழ்வார்கள். நபியை பற்றி அவர்களுக்கு நல்ல அபிப்பிராயம் ஏற்படும். அவர்கள் அதைப் பற்றி தன் சமூகத்திடம் எடுத்துச் சொல்வார்கள். அதனால் அவர்களது உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்கு இது காரணமாக அமையும்.

ஸஃப்வான் ரலி அவர்கள் கூறுகிறார்கள் ; எனக்கு நபியவர்கள் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். எனவே அதுவரை எனக்கு மிகவும் வெறுப்பான முகமாக நபியின் முகம் தான் இருந்தது. ஆனால் அந்த நிகழ்வுக்குப் பிறகு உலகத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த முகமாக நபியின் முகம் மாறி விட்டது என்று கூறுகிறார்கள்.

உலகத்திற்கே நீதம் என்றால் என்ன என்பதை கற்றுக்கொடுத்த நபியவர்களை பார்த்து நீங்கள் நீதமாக நடந்து கொள்ளவில்லை. உங்களிடத்தில் நீதம் இல்லை என்று சொன்ன போது, நபியவர்கள் அதை கேட்டு விட்டு கோபப்படாமல் வேக படாமல் எனக்கு முன்னால் நபிமார்கள் அனுபவித்த கொடுமைகளை நினைத்துப் பார்த்து பொறுமையை மேற்கொள்கிறார்கள். எனவே சமுதாயத்தின் தலைவர்களாக, சமுதாயத்தை வழி நடத்தக்கூடிய பொறுப்பாளர்களாக இருப்பவர்கள், அவர்கள் தங்கள் பொறுப்புக்களை செய்கின்ற பொழுது இது மாதிரியான அவதூறான வார்த்தைகளையும் பழிச் சொற்களையும் கேட்க வேண்டிய நிலை ஏற்படலாம். அவ்வாறு ஏற்படுகின்ற பொழுது வேகப் படாமல் அதை இலகுவான முறையில் எடுத்துக் கொள்ள வேண்டும். பொறுமையோடு அதை மேற்கொள்ள வேண்டும் என்பதை ஹதீஸிலிருந்து நபியவர்கள் நமக்கு கற்றுத் தருகிறார்கள்.

No comments:

Post a Comment