கடந்த வாரத்தின் தொடர்....
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்மை இந்த பூமியில் படைத்து நம் வாழ்விற்குத் தேவையான அனைத்தையும் தந்திருக்கின்றான். கடந்த காலத்து மனிதர்களை விட அனைத்திலும் அல்லாஹ் நம்மை உயர்வாகவே வைத்திருக்கின்றான். நிறைய வசதிவாய்ப்புக்களை தந்திருக்கின்றான். வாழ்வின் எல்லா சௌகரீகங்களையும் வழங்கியிருக்கின்றான். கடந்து காலத்து மனிதர்கள் சௌகரீகங்கள் குறைவாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.மன நிறைவான வாழ்வைப் பெற்றிருந்தார்கள்.ஆனால் இன்றைக்கு அனைத்து வசதிகள் இருந்தும் மகிழ்ச்சியும் இல்லை.மனநிறைவான வாழ்வும் இல்லை. காரணம் ஒன்றே ஒன்று தான். அவர்கள் ஷரீஅத்தை முழுமையாக பின்பற்றினார்கள்.நாம் பின்பற்றுவதில்லை. அவர்கள் அல்லாஹ்விற்கு பயந்து வாழ்ந்தார்கள். நாம் அல்லாஹ்விற்கு பயப்படுவதில்லை. பொருளாதாரத்தைத் தேடுவதில் பேணுதல் இல்லை.
மனித வாழ்வில் மிக முக்கியமாக கருதப்படுகின்ற பொருளாதாரம் குறித்தும் அந்த பொருளாதாரத்தில் ஹலால் ஹராமைப் பேணுவது குறித்தும் கடந்த வாரம் பார்த்தோம். ஹலாலான சம்பாத்தியம் தான் அனைத்திற்குமான அடிப்படை. நாம் செய்கின்ற அமல்கள் ஏற்கப்படுவதற்கும் துஆக்கள் கபூலாகுவதற்கும் நம் சம்பாத்தியம் ஹலாலாக இருக்க வேண்டும் என்று பேசப்பட்டது. இன்றைக்கு நம் வாழ்வில் நம் சம்பாத்தியத்தில் நம் உணவில் தெரிந்தோ தெரியாமலோ ஹராம் கலந்து விடுகிறது. அதில் மிகவும் மோசமான மார்க்கம் அதிகம் எச்சரித்திருக்கிற ஒரு ஹராமைக் குறித்து இன்று நாம் பார்க்க இருக்கிறோம்.
இன்றைக்கு நம்
சமூகத்தில் தடுக்கப்பட்ட காரியங்கள் நிறையவே தோன்றி விட்டன. பொருளாசையும்
பொருளாதாரத்தைப் பெருக்க வேண்டும் என்ற எண்ணமும் இன்றைக்கு நம் சமூகத்தை தவறான
முறையில் பொருளாதாரத்தை திரட்டுவதற்கு தூண்டி விட்டது. ஒரு காலம் இருந்தது. தங்கள்
வாழ்வில் ஒரு துளி கூட ஹராம் கலந்து விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக
இருந்தார்கள்.அன்றைக்கு வாழ்ந்த பெண்கள் தங்களின் கணவன்மார்களை வீட்டிலிருந்து
அனுப்புகின்ற பொழுது, காசு கிடைக்கா விட்டாலும் பரவாயில்லை. ஹராம் விஷயத்தில்
ரொம்ப கவனமாக இருங்க என்று சொல்லி அனுப்புவார்கள். ஆனால் இன்றைக்குள்ள பெண்கள் ஹலால்
ஹராம் என்று சொல்லி பணத்தை விட்டு விடாதீர்கள். பணத்தோடு வாங்க என்று சொல்லி
அனுப்புகிறார்கள்.பொருளாதாரத்தில் பேணுதல் என்பது இன்றைக்கு அறவே காணாமல் போய்
விட்டது.
இன்றைக்கு முஸ்லிம்களை
மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித சமூகத்தையும் அழித்து நாசப்படுத்திக் கொண்டிருக்கிற மிக
மோசமான விஷயங்களில் முதல் இடத்தில் இருப்பது வட்டி.நம் சமூகத்தில் அத்தனை பேரும்
தெரிந்தோ தெரியாமலோ மொத்தமாக விழுந்து கிடப்பது இந்த வட்டியில் தான்.
இந்த காலத்தில்
வட்டியில்லாமல் வாழ முடியுமா என்று சிலர் வியாக்கியானம் பேசுவார்கள். குடும்ப
சூழ்நிலை, வேறு வழியில்லை. அதனால் அதில் நுழைய வேண்டிய நிலை வந்து விட்டது என்று
சிலர் சமாளிப்பார்கள். அது தான் எங்களை காப்பாற்றியிருக்கிறது. அதன் மூலம் தான்
நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று சிலர் புரியாமல் பேசுவார்கள்.
ஆனால் இஸ்லாம் கடுமையாக
எச்சரித்திருக்கின்ற வட்டியும் வட்டி சார்ந்த விஷயங்களும் நிச்சயமாக மகிழ்ச்சியைத்
தராது. வாழ்வின் உயர்விற்கு காரணமாக இருக்காது.
يَمْحَقُ
اللّٰهُ الرِّبٰوا وَيُرْبِى الصَّدَقٰتِ وَاللّٰهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ
اَثِيْمٍ
அல்லாஹ்
வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும்
தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன்
கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன்
: 2:276)
இந்த
வசனத்தில் அல்மஹ்க் (அழித்தல்) என்ற வார்த்தை பயன்படுத்தபட்டுள்ளது. ஒரு பொருள்
படிப்படியாக குறைவதற்கு மஹ்க் என்று சொல்லப்படும். அமாவாசைக்கும் இதே
மூலச்சொல்லிலிருந்து உருவான முஹாக் என்ற வார்த்தையே பயன்படுத்தப்படுகிறது. (தஃப்ஸீருல்
கபீர்) அதாவது சந்திரன் முழு நிலாவாக இருக்கும் போது மிகப்பெரிய வட்டமாகத்
தோன்றும். ஆனால் ஒரே நாளில் அமாவாசையாகி விடுவதில்லை. ஒவ்வொரு நாளும் கொஞ்சம்
கொஞ்சமாக குறைந்து கடைசியில் (அமாவாசையன்று) ஒன்றுமே தெரியாமல் போய் விடுகிறது.
அவ்வாறே வட்டியும் பார்வைக்கு வளர்ச்சியாகத் தோன்றும் இறுதியில் மாபெரும் நஷ்டத்தை
விளைவித்து விடும். அதுதான் இன்று நடந்துகொண்டிருக்கிறது. வட்டியின்
கோரத்தாண்டவத்தால் உலகின் பொருளாதாரமே சின்னாபின்னமாகி விட்டது.
1930
களில் உலக அளவில் மாபெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அச்சமயம் பொருளாதார
நிபுணர்கள் தங்களின் பொருளாதாரக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை
ஏற்பட்டது. சில நிபுணர்கள் வட்டி தான் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என்றும் அது
பொருளாதாரத்தையும் உலக நாடுகளையும் நாசமாக்கி விடும் என்றும் கருத்து
தெரிவித்திருந்தனர். ஒரு மேற்குலக ஆய்வாளர் வட்டியிலிருந்து விடை பெற்றால் தான்
பொருளாதாரம் உற்சாகமடையும், எனறு கூறினார். 1933
ஆம் ஆண்டு ஜனவரி 19
ந்தேதியன்று நியூயார்க்கில் உரை நிகழ்த்திய லாரன்ஸ் பின்ஸ் என்ற சிந்தனையாளர்,
அரிஸ்ட்டில், கத்தோலிக்க பிஷப்புகள் போன்றோர்களும்
யூதர்களின் தௌராத் வேதமும் வட்டிக்கடனை தடை செய்திருக்கிறது, என்று
பேசினார்.
எனினும்
இந்த நிபுணர்களின் கருத்தை உலக நாடுகள் காதில் போட்டுக் கொள்ள வில்லை. அதனால்
ஏற்பட்ட மோசமான விளைவை இன்றைக்கும் நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
வட்டியினால்
ஏற்பட்ட பொருளாதார பின்னடைவு மற்றும் பொருளாதார அழிவுகள் பெரிய நாடுகள் முதல்
சிறிய குடும்பங்களை வரை ஏற்பட்டிருக்கின்றது.
தொழில்
நடத்தலாம் என்ற நோக்கத்தோடு வட்டிக்குப் பணம் வாங்கியவர்கள் வட்டி கட்ட முடியாமல்
தங்கள் தொழில் நட்டப்பட்டு முன்பு இருந்த நிலையை விட மோசமான நிலைக்குத் தள்ளப் படுவதை
யாரும் மறுக்க முடியாது. இந்த வட்டி அடிப்படையில் கடன் வாங்கிய எத்தனையோ நாடுகள்,
தான் வாங்கிய கடனுக்கு மேல் பல மடங்கு அதிகமான வட்டி கொடுத்த
பின்னரும் தான் கடனாக வாங்கிய தொகை குறையாமல் அப்படியே இருப்பதைக் கண்டு
வருந்துவதைக் காண்கிறோம். இவ்வாறு வட்டியினால் ஏற்படும் கொடுமைகளுக்கும்
கேடுகளுக்கும் அளவே இல்லை.
அட்டிகை
செய்வதற்கு வட்டிக்கு வாங்கினேன். வட்டியைக் கட்ட முடியாமல் அட்டிகையை விற்று
வட்டியைக் கட்டினேன். – பழமொழி அட்டிகையை விற்றும் வட்டிக் கணக்கு முடியாமல்
புட்டி விஷத்தில் மொத்தக் கணக்கையும் முடித்துக் கொண்டவர்கள் இன்று எத்தனையோப்
பேர்.
உங்கொப்பன் செத்தால் என்ன ? நீ வட்டியைக் கட்டு, உன் கணவன் செத்தால் என்ன ? நீ வட்டியைக் கட்டு என்று கல்நெஞ்சர்கள் மனைவி, பிள்ளைகளை விரட்டுவார்கள் என்பதால் அவர்கள் வாயிலும் விஷத்தை ஊற்றி என்னுடன் அழைத்துச் சென்று விட்டேன் என்று வட்டிக்கடன் அடைக்க முடியாமல் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டவர்களின் காலுக்கடியில் இருக்கும் கடிதத்தில் மேற்காணும் விதம் எழுதப்பட்டிருந்ததை நாம் அறிவோம்.
கடந்த மாதம் கூட வேலூர் மாவட்டத்தில் ஒரு
ஃபைனான்ஸ் கம்பெனியிலிருந்து வாங்கிய சுமார் 30 இலட்சம் கடனை திருப்பிச்
செலுத்துமாறு அந்த ஃபைனான்ஸ் கம்பெனியின் ஊழியர் ஒருவர் வீட்டுக்கு வந்து
மிரட்டியதால் அவமானம் தாங்காமல் இஸ்லாமிய குடும்பத்தைச் சார்ந்த ஒரு தாயும் 28
வயதான அவரது மகனும் தற்கொலை செய்து கொண்ட செய்தியை ஊடகங்கள் வழியாக நாம் அறிந்திருப்போம்.
வட்டிக்
கொடுமையால் பல தொழில் நிருவனங்கள் மூடப்பட்டு அதன் அதிபர்கள் எஸ்கேப், அல்லது
சூஸைட்.
எத்தனையோ
கிராமப்புறங்களில் வாங்கிய தொகைக்கு வட்டி கொடுக்க முடியாத பெண்கள் அதற்கு ஈடாகத்
தம் மானத்தையே இழக்கும் சூழ்நிலைக்கும் செல்கின்றார்கள். அதே போன்று எத்தனையோ
அப்பாவி ஆண்கள் வட்டி கட்ட முடியாததால் தன் மனைவியையோ அல்லது தன் வீட்டிலுள்ள மற்ற
நபரையோ அந்தப் பணத்திற்கு ஈடாக வைத்து அந்தப் பணத்தைச் செலுத்திய பின்னரே அவர்களை
மீட்டிக் செல்லும் அவலங்கள் இன்றும் பல கிராமங்களில் நடந்து கொண்டிருக்கின்றது. இதில்
மானத்திற்கு அஞ்சி தற்கொலை செய்து கொள்பவர்களும் உண்டு.
வாழ்ந்து
கெட்டவர்கள் என்று சொல்வதுண்டு வட்டியால் அழிந்து கெட்டவர்களே அதிகம்.
1400
வருடங்களுக்கு முன்னரே வட்டி எனும் தீமை வளர்வது போல் தெரிந்தாலும் அதன் இறுதிப்
பலன் அழிவையே தரும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிச் சென்றார்கள்.
ما أحدٌ أكثرَ
من الربا إلَّا كان عاقبةُ أمرِه إلى قِلَّةٍ
வட்டி
வெளிப்படையாக) அதிகமானாலும் இறுதியில் நஷ்டத்தில் தான் முடியும். (இப்னுமாஜா : 2279(
வட்டி தடை செய்யப்பட்டதற்கான காரணத்தை மார்க்க
அறிஞர்கள் குறிப்பிடுவார்கள் ;
عِلَّةُ
تَحْرِيمِ الرِّبَا بِالنِّسْيَةِ لِعِلَّةِ ذَهَابِ الْمَعْرُوفِ وَ تَلَفِ
الْأَمْوَالِ وَ رَغْبَةِ النَّاسِ فِي الرِّبْحِ وَ تَرْكِهِمُ الْقَرْضَ وَ
الْفَرْضَ وَ صَنَائِعَ الْمَعْرُوفِ، وَ لِمَا فِي ذَلِكَ مِنَ الْفَسَادِ وَ
الظُّلْمِ وَ فَنَاءِ الْأَمْوَالِ"
وَ سَأَلَ
هِشَامُ بْنُ الْحَكَمِ أَبَا عَبْدِ اللَّهِ عَنْ عِلَّةِ تَحْرِيمِ الرِّبَا ؟
فَقَالَ:
"إِنَّهُ لَوْ كَانَ الرِّبَا حَلَالًا لَتَرَكَ النَّاسُ التِّجَارَاتِ وَ
مَا يَحْتَاجُونَ إِلَيْهِ فَحَرَّمَ اللَّهُ الرِّبَا لِيَفِرَّ النَّاسُ مِنَ
الْحَرَامِ إِلَى الْحَلَالِ وَ إِلَى التِّجَارَاتِ وَ إِلَى الْبَيْعِ وَ
الشِّرَاءِ فَيَبْقَى ذَلِكَ بَيْنَهُمْ فِي الْقَرْضِ"
இஸ்லாத்தில்
வட்டி ஏன் தடை செய்யப்பட்டிருக்கின்றது என்ற கேள்விக்கு மார்க்க அறிஞர்கள் பதில்
கூறினார்கள் ;
1, வட்டி அனுமதிக்கப்பட்டிருந்தால்
அனைவரும் வியாபாரத்தை விட்டு விட்டு இதில் ஈடுபட ஆரம்பித்து விடுவார்கள்.
2, கஷ்டத்தில்
இருப்பவருக்கு உதவி செய்து நன்மையைப் பெற வேண்டும் என்ற எண்ணம் மக்களிடத்திலிருந்து
காணாமல் போய் விடும்.
3, பொருளாதாரம்
வீணாக்கப்படும் நிலை வரும்.
4, நல்லெண்ணம் குறைந்து இரக்கமில்லாத
தன்மையும் அநீதமும் பெருகி விடும்.
வட்டி அனுமதிக்கப்படுவதின்
மூலம் ஏற்படும் என்னென்ன தீமைகள் ஆபத்துக்கள் ஏற்படும் என்று கூறினார்களோ அவை
அனைத்தையும் இன்றைக்கு நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
வட்டி
பயன்பாட்டாளர்களைப் பற்றி இறைவன் தனது திருமறையில் பல இடங்களில் எச்சரிக்கின்றான்.
الَّذِيْنَ
يَاْكُلُوْنَ الرِّبٰوا لَا يَقُوْمُوْنَ اِلَّا كَمَا يَقُوْمُ الَّذِىْ
يَتَخَبَّطُهُ الشَّيْطٰنُ مِنَ الْمَسِّ ذٰ لِكَ بِاَنَّهُمْ قَالُوْۤا اِنَّمَا
الْبَيْعُ مِثْلُ الرِّبٰوا ۘ وَاَحَلَّ اللّٰهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبٰوا فَمَنْ جَآءَهٗ مَوْعِظَةٌ مِّنْ رَّبِّهٖ
فَانْتَهٰى فَلَهٗ مَا سَلَفَ وَاَمْرُهٗۤ اِلَى اللّٰهِ وَمَنْ عَادَ
فَاُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ
யார்
வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள்
(மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது
போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்: இதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக
வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ்
வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்;
ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும்
விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது
- என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால்
யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள்
நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும்
தங்கிவிடுவார்கள். (அல்குர்ஆன்
: 2:275)
يٰۤـاَيُّهَا
الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَذَرُوْا مَا بَقِىَ مِنَ الرِّبٰٓوا اِنْ
كُنْتُمْ مُّؤْمِنِيْنَ
ஈமான்
கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு
அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். (அல்குர்ஆன் : 2:278)
فَاِنْ لَّمْ
تَفْعَلُوْا فَاْذَنُوْا بِحَرْبٍ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖ وَاِنْ تُبْتُمْ
فَلَـكُمْ رُءُوْسُ اَمْوَالِكُمْ لَا تَظْلِمُوْنَ وَلَا تُظْلَمُوْنَ
இவ்வாறு
நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய
தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)-
நீங்கள் தவ்பா செய்து (இப்பாவத்திலிருந்தும் ) மீண்டுவிட்டால், உங்கள்
பொருள்களின் அசல் - முதல் - உங்களுக்குண்டு; (கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள், - நீங்களும்
அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன் : 2:279)
جاء رجل إلى
مالك بن أنس فقال : يا أبا عبد الله ، إني رأيت رجلا سكرانا يتعاقر يريد أن يأخذ
القمر ، فقلت : امرأتي طالق إن كان يدخل جوف ابن آدم أشر من الخمر . فقال : ارجع
حتى أنظر في مسألتك . فأتاه من الغد فقال له : ارجع حتى أنظر في مسألتك فأتاه من
الغد فقال له : امرأتك طالق ، إني تصفحت كتاب الله وسنة نبيه فلم أر شيئا أشر من
الربا ؛ لأن الله أذن فيه بالحرب
ஒரு மனிதர் இமாம் மாலிக் ரஹ் அவர்களிடம் ஒரு சட்ட
விளக்கம் கேட்க வந்தார். அவர் கூறினார் ; மதுவில் மிதந்த ஒரு மனிதரைப் பார்த்தேன். அவர் அளவுக்கு அதிகமாக மதுவைக்
குடித்து போதையின் உச்சத்திற்கு சென்று சந்திரன் தலைக்கு அருகில் இருப்பதாக நினைத்துக்
கொண்டு அதை கையால் எட்டிப் பிடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்து
மக்களெல்லாம் சிரித்துக் கொண்டிருந்தார்கள். தன்னைப் பார்த்துத் தான் அவர்கள்
சிரிக்கிறார்கள் என்பதும் அவருக்குத் தெரிய வில்லை.அப்போது தான் மது ரொம்பக் கொடுமையானது
என்பதை உணர்ந்து கொண்டேன். அந்த நேரத்தில் என் மனைவியைப் பார்த்து இந்த மதுவை விட
மிக மோசமான மனித உடம்பிற்குள் செல்லும் ஒரு பொருள் இருக்குமானால் நீ தலாக் என்று
கூறி விட்டேன். இதன் மூலம் தலாக் நிகழுமா என்று கேட்டார். பிறகு வா அதற்கான விளக்கத்தைத்
தருகிறேன் என்று மாலிக் ரஹ் அவர்கள் சொன்னார்கள். அவர் மறுமுறை வந்த போது உன்
மனைவி தலாக் ஆகி விட்டாள். ஏனென்றால் நான் அல்குர்ஆனையும் நபி ஸல் அவர்களின்
ஹதீஸ்களையும் புரட்டிப் பார்த்தேன். அதில் வட்டியை விட மிக மோசமான ஒன்றை நான் காண
வில்லை. ஏனெனில் அதில் ஈடுபடக்கூடியவரோடு அல்லாஹ் போர் பிரகடனம் செய்கிறான் என்று
கூறினார்கள். (தஃப்ஸீர் குர்துபீ)
மனித
குலத்தைப் பெரும் அழிவில் ஆழ்த்தும் வட்டி எனும் தீமையை பெரும் பாவங்களின்
பட்டியலில் இஸ்லாம் சேர்த்திருக்கின்றது. மட்டுமல்ல, அந்தப் பெரும் பாவத்தை
செய்பவர்களுக்கு ரைட் அன்ட் லெஃப்டாக துணை நிற்பவர்கள், அதில்
ஊழியம் செய்து கூலி பெறுபவர்கள் அனைவருக்கும் இறைவனின் சாபம் ஏற்படும் என்று
எச்சரிக்கின்றது.
لَعَنَ رَسولُ
اللهِ ﷺ آكِلَ الرِّبا ، وَمُؤْكِلَهُ، وَكاتِبَهُ، وَشاهِدَيْهِ، وَقالَ: هُمْ
سَواءٌ
வட்டியை
வாங்கி உண்ணுபவன், அதனை உண்ணச் செய்பவன், அதற்காகக்
கணக்கு எழுதுபவன், அதற்கு சாட்சியம் கூறும் இருவர்
ஆகியோரை நபி(ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். இன்னும் அவர்கள் அனைவரும் குற்றத்தில்
சமமானவர்கள் என்றார்கள். (முஸ்லிம்
; 1598)
வட்டி
கொடுப்பவன் கொடுத்தால் தான் வட்டி வாங்குபவன் அதை வாங்குவான். எனவே வட்டி
வாங்குபவன், வட்டி கொடுப்பவன் ஆகிய இருவருமே குற்றவாளிகள்
என இஸ்லாம் கூறுகிறது. எழுதுபவன் சாட்சியானவர்கள் ஆகியோர் இவர்கள் செய்யும்
குற்றத்திற்குத் துணை போனதால் அவர்களையும் இஸ்லாம் குற்றவாளிக் கூண்டில்
ஏற்றுகிறது. மேலும் தெரிந்து கொண்டே அக்குற்றத்தைச் செய்வதால் அனைவரும்
குற்றத்தில் சமம் என்றும் தீர்ப்பளிக்கின்றது இஸ்லாம். எனவே வட்டி வாங்கக் கூடாது
என்பது மட்டுமல்லாமல் வட்டிக்காக எவ்விதத்திலும் துணையும் நிற்கலாகாது என்பதையும்
மனதில் அழமாகப் பதித்திட வேண்டும்.
இமாம்களின் பார்வையில் வட்டியை விட மிகக்
கடுமையான குற்றம் வேறு எதுவும் இல்லை.
இன்றைய
தினம் உலகில் வட்டியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தைக் கையாளாத நாடே இல்லை
என்ற நிலை உருவாகி விட்டது. இது ஒன்றும் ஆச்சரியமானதல்ல, உண்மை
பேசுபவன்., ஒழுக்க மாண்புடையவன், நியாயமானவன்,
அநியாயத்தை எதிர்ப்பவன், என்றெல்லாம்
பெயர் பெற்ற முஸ்லிம்கள் மத்தியில் இந்த வட்டி முறைப் பொருளாதாரம் தன் கைவரிசையைக்
காட்டிக் கொண்டிருப்பது தான் மிகவும் ஆச்சரியமான ஒன்றாக இருக்கிறது.
يأتي على
الناسِ زمانٌ يأكلون فيه الرِّبا فيأكلُ ناسٌ أو الناسُ كلُّهم فمن لم يأكُلْ منه
نالَه مِن غُباَرِه
மக்களிடையே ஒரு காலம் வரும். அப்போது அனைவரும்
வட்டியை சாப்பிடுவார்கள். ஒருவர் அதை சாப்பிட வில்லையானாலும் அதன் தூசியையாவது
பெற்றுக் கொள்வார். (அபூதாவூது
: 3331)
வட்டி
விஷயத்தில் ஸஹாபாக்களின் பேணுதல்
عَنْ أَبِي
بُرْدَةَ قَالَ: أَرْسَلَنِي أَبِي إِلَى عَبْدِ اللَّهِ بْنِ سَلامٍ أَتَعَلَّمُ
مِنْهُ. فَجِئْتُهُ فَسَأَلَنِي: مَنْ أَنْتَ؟ فَأَخْبَرْتُهُ. فَرَحَّبَ بِي
فَقُلْتُ: إِنَّ أَبِي أَرْسَلَنِي إِلَيْكَ لأَسْأَلَكَ وَأَتَعَلَّمَ مِنْكَ.
قَالَ: يَا ابْنَ أَخِي إِنَّكُمْ بِأَرْضِ تُجَّارٍ فَإِذَا كَانَ لَكَ عَلَى
أَحَدٍ مَالٌ فَأَهْدَى لَكَ حَمْلَةً من تبن فلا تقبلها فإنها ربا. قَالَ:
أَخْبَرَنَا عَارِمُ بْنُ الْفَضْلِ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ
قَالَ: حَدَّثَنَا لَيْثٌ قَالَ: حَدَّثَنَا أَبُو بُرْدَةَ قَالَ: قَدِمْتُ
الْمَدِينَةَ فَلَقِيتُ عَبْدَ اللَّهِ بْنَ سَلامٍ فَقَالَ: أَلا تَدْخُلُ
بَيْتًا دَخَلَهُ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -
وَتُصَلِّي فِي بَيْتٍ صَلَّى فِيهِ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ - وَنُطْعِمُكَ تَمْرًا وَسَوِيقًا؟ قَالَ: وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ
سَلامٍ: يَا ابْنَ أَخٍ إِنَّكَ بِأَرْضٍ الرِّبَا بِهَا فَاشٍ خَفِيٌّ. أَلَيْسَ
مِنْكُمْ مَنْ إِذَا أَقْرَضَ قَرْضًا فَحَلَّ جَاءَ صَاحِبُهُ مَعَهُ
بِالْحَامِلَةِ مِنَ الطَّعَامِ وَالْحَامِلَةِ مِنَ الْعَلَفِ؟ وَذَلِكَ هُوَ
الرِّبَا.
அபூ
மூஸா அல் அஷ்அரீ ரலி அவர்களின் மகனார் அபூபுர்தா ஆமிர் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ;
நான்
மதீனாவுக்கு வந்து அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) அவர்களைச் சந்தித்தேன். அவர்கள்
(என்னிடம்), ‘நீங்கள் (என்னுடன்) வர மாட்டீர்களா? உங்களுக்கு
நான் மாவையும் பேரீச்சம் பழத்தையும் உண்ணத் தருவேன். மேலும் நீங்கள் நபி (ஸல்)
அவர்கள் வருகை தந்த என்) வீட்டிற்கு வந்ததாகவும் இருக்கும். அவர்கள் நின்று தொழுத
இடத்தில் தொழுத பாக்கியமும் கிடைக்கும்” என்று கேட்டார்கள். பிறகு, ‘நீங்கள்
வட்டி மலிந்துள்ள (இராக்) நாட்டில் வசிக்கிறீர்கள்.உங்களுக்கு ஒருவர் கடனைத்
திருப்பிச் செலுத்த வேண்டியிருந்து. அவர் ஒரு வைக்கோல் போரையோ, வாற்கோதுமை
மூட்டையையோ, கால்நடைத் தீவன மூட்டையையோ அன்பளிப்பாகக்
கொடுத்தாலும் அதுவும் வட்டியாகும்” என்று கூறினார்கள். (தபகாத்துல்
குப்ரா)
அதாவது
அபூ புர்தா ஆமிர் ரஹ் அவர்கள்
வட்டிக்குக் கொடுத்து வாங்க வில்லை. மாறாக வட்டிப் புழக்கத்தில் இருக்கும்
நாட்டில் குடி இருந்தார்கள். அங்கு அவர்கள் தொடர்ந்து குடி இருப்பதையே
தடுக்கின்றார்கள்.
ஏன்
என்றால் ?
வட்டிப்
புழங்குகின்ற ஊரில் குடி இருந்தால் எந்த வழியிலாவது வட்டி உணவில் கலந்து விடும்
என்பதை பெருமானார் (ஸல்) அவர்கள் வாயிலாக அறிந்திருந்தார்கள்.
فمن لم يأكُلْ
منه نالَه مِن غُباَرِه
மக்களிடையே ஒரு காலம் வரும். அப்போது அனைவரும்
வட்டியை சாப்பிடுவார்கள். ஒருவர் அதை சாப்பிட வில்லையானாலும் அதன் தூசியையாவது
பெற்றுக் கொள்வார்.
வட்டி
மலிந்து விட்ட ஊரில் குடி இருக்கும் பொழுது எதாவது ஒரு வழியில் வட்டி புகுந்து
விடுகிறது. அதில் மாட்டிக் கொண்ட ஒருவர் நமக்கு நெருக்கமானவராக இருந்து விட்டால்
அவருடைய உணவின் மூலம் அது நம்மிலும் புகுந்து கொள்வதற்கு பெரிதும்
வாய்ப்பிருக்கிறது என்பதால் தான் வட்டியை உண்ணவில்லையென்றாலும் அதன் புழுதியாவது
படும் என்று பெருமானார் (ஸல்) சொன்னார்கள். பெருமானாரின் அந்த எச்சரிக்கையை
கருத்தில் கொண்டு தான் இராக்கில் குடி இருக்கும் தமது தோழர் அபூ புர்தா ஆமிர் அவர்களை
அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்கள் எச்சிக்கின்றார்கள்.
வட்டி விஷயத்திலும் ஸஹாபாக்கள் எவ்வளவு தூரம்
எச்சரிக்கையாக இருந்தார்கள் என்பதை இந்த வரலாறு சுட்டிக் காட்டுகின்றது.
கொடும் வட்டியிலிருந்தும் அது சார்ந்த பொருளாதார
காரியங்களிலிருந்தும் நம்மையும் நம் சமூகத்தையும் அல்லாஹ் பாதுகாப்பானாக!
No comments:
Post a Comment