Pages

Pages

Thursday, October 3, 2013

சிறுவர் பயான் ; தொழுகை

      
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திரு நாமம் கூறி எனதுரையைதுவக்குகிறேன்.

பேசுவதற்கு நாவையும்,துதிப்பதற்கு உள்ளத்தையும் வழங்கிய வல்ல இறைவனுக்கே புகழ் அனைத்தும் உண்டாவதாக.உலகைத்திருத்த வந்த உத்தம நபி ஸல் அவர்களின் மீதும் அவர்கள் வழி நடந்த ஸஹாபாக்கள் நல்லோர்கள்,நம் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ஆமீன்.எனக்கு வழங்கப்பட்டுள்ள மகுடம் தொழுகை.



அன்பிற்குறிய அல்லாஹ்வின் நல்லடியார்களே நாம் இப்போது ரபீவுல் ஆகிர் மாதத்திலே இருந்து கொண்டிருக்கிறோம்.இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமான முஹர்ரம் மாதம்---- ஹுஸைன் ரலி அவர்களின் தியாகத்தையும்,அல்லாஹ்வின் உத்தரவுக்காக தன் குடும்பத்தையும்,தன் மனைவி மக்களையும்,தன் சொத்துக்களையும்,தியாகம் செய்து தன் சொந்த ஊரையும் விட்டு வந்த முஹாஜிர்களின் தியாகத்தைநமக்கு உணர்த்துகிறது,அதேபொன்று மதீனா வந்த முஹாஜிர்களுக்காக தன் சொத்துக்களையும்,தன் வீடுகளையும்,ஏன் தன் மனைவியைக்கூட விட்டுக்கொடுத்த அன்சாரிகளின் தியாகத்தை நமக்கு உணர்த்துகிறது.அதேபோன்று இறுதி மாதமான துல்ஹஜ் மாதம்-----இப்ராஹீம் நபியின் குடும்பத்தார் செய்த தியாகத்தை நமக்கு நினைவுபடுத்தும்.ஆண்டின் தொடக்கமும் தியாகம்,இறுதியும் தியாகம்.முதலும் தியாகம்,முடிவும் தியாகம்.
அன்பிற்குறிய அல்லாஹ்வின் நல்லடியார்களே தொடக்கத்திலும்,முடிவிலும் தியாகத்தை அமைத்து வைத்த இறைவன் நமக்கு சொல்லும் செய்தி என்னவென்றால்-முஸ்லிமாக பிறந்த ஒருவன் வாழுகிறபோது தியாக உணர்வோடு வாழ வேண்டும்,அல்லாஹ்விற்காக எதையும் தியாகம் செய்யத் துணிய வேண்டும்,மார்க்க சட்ட திட்டங்களை செயலாற்றுவதில் ஏற்படும் சிரமங்களைத்தாங்கிக் கொள்ள வேண்டும்.நல்லதை செய்வதிலும்,தீயதை விட்டு விலகுவதிலும் ஏற்படும் கஷ்டங்களை சகித்துப் பொறுமை கொள்ள வேண்டும் என்பதை இறைவன் நமக்கு இந்த மாதங்களின் வழியாக சொல்கிறான். 

சுருங்கச்சொல்ல வேண்டும் என்றால் நாம் வாழ்க்கையில் அனுபவித்துக்கொண்டிருக்கிற அனைத்தும் இறைவன் தந்தவை.உண்ணும் உணவு, உடுத்தும் உடை, தங்கும் இருப்பிடம்,செலவழிக்கும் பணம், ஏன் நமது பேச்சி முதல் நமது மூச்சி வரை எல்லாம் அல்லாஹ் கொடுத்தவை.அவைகளை தேவைக்குப்பயன்படுத்துகிற நாம் தேவைப்படுகிறபோது அவைகளை இறைவனுக்காக தியாகமும் செய்ய வேண்டும். அப்போது தான் நாம் உண்மை முஸ்லிம்களாக ஆக முடியும். இப்ராஹீம் நபி மற்றும் முஹாஜிர்கள், அன்சாரிகளின் வாழ்க்கை நமக்கு இதைத்தான் உணர்த்துகிறது.

 ஆனால் இன்றைக்கு நமது நிலை என்ன? ஆயிரம் ஆயிரமாக சம்பாதிக்கிற நாம் அதில் இரண்டரை சதவீதம் ஜக்காத் கொடுக்க முடியவில்லை.பல லட்சம் சம்பாதிக்கும் நம்மால் அல்லாஹ்வுக்காக ஒரு ஹஜ் செய்ய முடியவில்லை.பல மணி நேரங்களை அரட்டையிலும், குரட்டையிலும், சீரியல் பார்ப்பதிலும்,வீண்விளையாட்டுகளிலும் கழிக்கிற நாம் ஒரு பத்து நிமிடத்தை தொழுகைக்காக ஒதுக்குவதில்லை. இதுதான் நமது நிலை.அல்லாஹ்விற்காக உலகத்தை ஒதுக்க வேண்டும்.ஆனால் இன்றைக்கு நாம் உலகத்திற்காக அல்லாஹ்வையே ஒதுக்கி விட்டோம். காரணம் நமக்கு தொழுகையின் மகத்துவம் புரியவில்லை.தொழுகையின் அருமை விளங்கவில்லை. ஒரு நாளைக்கு பத்து மணி நேரத்தை டீவிக்காகவும், சீரியலுக்காகவும் ஒதுக்குகிற நாம் ஒரு 10 நிமிடத்தை அல்லாஹ்வுக்காகவும்,தொழுகைக்காகவும் ஒதுக்குவதில்லை.அத்திப்பூக்கள் என்றவுடன் இருக்கிற எல்லா வேலைகளையும் விட்டு விட்டு ,அடுப்புல கெடக்குற மீன் குழம்ப கூட மறந்துட்டு ,களைத்து நொந்து நூடுல்ஸாக வந்திருக்கிற கணவனக்கூட கவனிக்காம ,அழுதுகொண்டிருக்கிற குழந்தையக்கூட பொருட்படுத்தாம, வேகமா போய் டீவி முன்னால உக்கார்ர நாம அல்லாஹு அக்பர் என்றவுடன் முஸல்லாவுல உக்கார்ரதில்ல. உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் என்றவுடன்  தூக்கத்துல இருந்து பதறிப்போய் எழந்திருக்கிற நாம சுபுஹுக்கு அப்பா பாங்கு சொன்னவுடன் அப்டி எழுந்திருக்கிறதில்ல.கூட இன்னும் கொஞ்சம் போர்வைய இழுத்துப்போட்டுட்டு தூங்கத்தான் செய்வோம். 

 அல்லாஹு அக்பர் என்றும் ஹய்ய அலஸ்ஸலா என்றும் கூப்பிடுறது என்ன நம்ம மோதினார் அப்பாவா---- நம்மைப்படைத்த இறைவனல்லவா கூப்பிடுகிறான்.நாம தினமும் அல்லாஹ்வோட அழைப்பையல்லவா அலட்சியம் செய்கிறோம் என்ற அச்சம் என்ற பயம் கொஞ்சமாவது நம்ம உள்ளத்துல இருக்குதா-----சீரியல் தான் கதி என்று இருக்கிறோமே நாம இறந்த பிறகு நம்ம கப்ரு குழிக்கு அத்திப்பூக்கள் வரப்போவுதா------ அல்லது உறவுகள் வரப்போவுதா--- இல்லையே நாம செய்த நன்மைகளும் நாம தொழுத தொழுகையம் தானே வரப்போவுது.  

இன்னைக்கு காத்து இல்லாம ஒரு நிமிஷங்கூட நம்மளால இருக்க முடியல ஆனா நம்ம இறந்த பிறகு காத்தில்லாத வெளிச்சமில்லாத அந்த இருட்டறைல நம்மள போட்டுட்டு வந்துறுவாங்களே பல ஆண்டுகள் அதுல இருக்கனுமே எப்டி இருக்கப்போறோம் அப்டின்னு சிந்திக்க வேண்டாமா---- அன்பிற்குறியவர்களே இன்னைக்கு நாம தொழுகாம இருக்குறத ரொம்ப சாதாரணமா நினைக்கிறோம். ஆனா அது எந்த அளவுக்கு அல்லாவின் கோபத்தையும் வேதனையையும் ஏற்படுத்தும் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.


ஒருவர் காட்டு வனாந்திரத்தில் தங்கியிருந்தார். கூடவே அவனோடு ஒரு ஷைத்தானும் தங்கியிருந்தான் இரவு நேரம் வந்ததும் அவரை விட்டு ஷைத்தான் விரண்டோடினான். ஏன் திடீரென்று ஓடுகிறாய் என்று அந்த மனிதர் கேட்டார். அப்போது ஷைத்தான் சொன்னான்.----நான் ஒரு நாள் முழுதும் உன்கூட இருந்திருக்கிறேன்.இந்த ஒரு நாள்ள நீ ஒரு தொழுகையையும் தொழுகல்ல. வாழ்க்கைல ஒரே ஒரு தடவ அல்லாவுடைய கட்டளையை மீறினேன்.அதுக்கே என் நிலம இப்டி ஆயிப்பேச்சு ஆனா நீ ஒரு நாளைக்கே 5 தடவ அல்லோட கட்டளைய மீர்ர,அதனால எப்டியும் அவனோட கோபப்பார்வையும் வேதனையும் இறங்குறது நிச்சயம் அந்த நேரத்துல நான் உன்கூட இருக்கக்கூடாதுன்னுதான் ஓடுறேன் அப்டின்னு சொன்னான். அன்பானவர்களே ஒரு நாளைக்கு 5 வேளை தொழுகையை விட்டதுக்கே வேதனை இறங்கும் என்றால் ஒவ்வொரு நாளும் விடக்கூடிய நமது நிலை என்னவாகும் என்று யோசித்துப்பார்க்க வேண்டாமா. 

ஒருமுஸ்லிமுக்கும் ஒரு காஃபிருக்கும் மத்தியில் வித்தியாசமே தொழுகைதான் என்றார்கள் நபி ஸல் அவர்கள்.எனவே நம்மில் எத்தனை பேர் முஸ்லிம்களாக இருக்கிறோம் எத்தனை பேர் காஃபிர்களாக இருக்கிறோம் என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.

 நாளை கியாமத் நாளில் நரக வாசிகளைப்பார்த்து நீங்கள் எதன்காரணமாக நரகம் வந்தீர்கள் என்று சொர்க்கவாசிகள் கேக்கும்போது லம் நகு மினல் முஸல்லீன் நாங்கள் உலகத்தில் தொழாமல் இருந்தோம் என்று நரகவாதிகள் சொல்வார்கள் என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.எனவே நாம் செல்லும் இடம் எதுவென்று நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.


அதுமட்டுமல்ல சகோகரர்களே பேணுதலாக அனுதினமும் தொழுபவர்தான் உண்மை முஸ்லிம் என்று அல்லாஹ் கூறுகிறான்.தொழுகையில் பேணுதல் இல்லாதவர்கள் ஃபிர்அவ்ன் ஹாமான் அபூஜஹ்ல் போன்ற கொடியவர்களோடு எழுப்பப்படுவான் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

ஆனால் இன்றைக்கு தொழுகையில் நமது நிலை எப்டி இருக்குது----வீட்ல ஏதாவது விஷேஷம்னா தொழுவோம் இல்லன்னா தொழமாட்டோம்.வீட்ல ஏதாவது பிரச்சனன்னா தொழுவோம் இல்லன்னா தொழமாட்டோம்.சும்மா இருந்தா தொழுவோம் வேலை இருந்தா தொழமாட்டோம். முழிச்சிகிட்டு இருந்தா தொழுவோம் .தூங்குனா தொழமாட்டோம் இப்டி அல்லா கடமையாக்கிய தொழுகைய என்னமோ நாமலே உருவாக்குனமாதிரி நம்ம தேவைக்கு பயன்படுத்திகிட்டு இருக்கோம். 

அன்பிற்குறியவர்களே நாம் தொழுகையில் விளையாடுகிற இந்த விளையாட்டை இறைவன் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பதை நாம் நம் நினைவில் வைக்க வேண்டும். இன்னைக்கி தொழுகாத நாம தொழுகாட்டியும் நாம செய்ற மற்ற நல்ல காரியம் நம்மை சொர்க்கம் செல்ல வைக்கும் என்று கணக்கு போட்டு வைத்திருக்கிறோம் ஆனால் இது தப்பு கணக்கு என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.ஏனென்றால் கியாமத் நாளில் முதன் முதலில் ஒருவனிடம் தொழுகையைத்தான் பார்க்கப்படும் அது ஒழுங்காக இருந்தால் தான் மற்ற அமல்களை இறைவன் பார்க்கிறான் தொழுகை இல்லையென்றால் மற்ற எந்த அமலையும் இறைவன் பார்ப்பதில்லை என்று கண்மனி நாயகம் ஸல் அவர்கள் கூறுகிறார்கள். 

எனவே தொழுகை இல்லாமல் மற்ற எந்த அமலும் பிரயோஜனம் தராது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே எல்லாவற்றிற்கும் அடிப்படை ஆதாரம் தொழுகைதான்.அந்த தொழுகையில் கவனம் செலுத்துவோம் அல்லாஹ்வின் கோபப்பார்வையிலிருந்துதப்பித்து ஈருலகிலும் ஏற்றம் பெறுவோம் அல்லாஹ் நம் எல்லோருக்கும் அருள்புரிவானாக ஆமீன்.

1 comment: