Pages

Pages

Wednesday, December 18, 2013

குழந்தை வளர்ப்பு



அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்].அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருநாமம் கூறி தொடங்குகிறேன்.
     
அன்பு நிறைந்த அல்லாஹ்வின் நல்லடியார்களே.அல்லாஹ் ஜல்ல ஷானுஹு தஆலா நமக்கு குழந்தைச் செல்வத்தை வழங்கியிருக் கிறான்.குழந்தைகள் நமக்கு கிடைத்திருக்கிற மிகப்பெரிய கிஃப்டாகும்.
நாம் நாடியவர்களுக்கு பெண் குழந்தையையும், நாடியவர்களுக்கு ஆண் குழந்தைகளையும்,நாடியவர்களுக்கு ஆண்,பெண் இரண்டையும் பரிசாக வழங்குகிறோம் என்பது அல்லாஹ்வின் வாக்கு. உங்கள் குழந்தைகளுக்கு நல் ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுங்கள் ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வால் உங்களுக்கு வழங்கப்பட்ட கிஃப்ட்டாகும் என்பது அண்ணல் நபியின் வாக்கு.
    
ஒருவர் ஒரு கிஃப்டை எந்த நோக்கத்திற்காக கொடுக்கிறாரோ அதற்குத்தான் பயன் படுத்த வேண்டும். இல்லையெனில் அவர் கோபம் கொள்வார். நம் குழந்தைகள் அல்லாஹ் கொடுத்த கிஃப்ட்டாக இருக்கிறார்கள். குழந்தைகளுக்கு நல்ல ஒழுக்கத்தையும், மார்க்கத்தையும் கொடுத்து வளர்ப்பது தான் அல்லாஹ்வின் விருப்பம். அதை நாம் செய்யத்தவறினால் அல்லாஹ்வின் கோபத்தைப் பெற வேண்டிய சூழல் ஏற்படும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
  
நமது குழந்தைகளுக்கு ஒழுக்கத்தையும்,நன்னடத்தைகளையும், குர்ஆனையும்,ஹதீஸையும் கற்றுக்கொடுக்க வேண்டும். நம்மிடம் தான் அவர்களின் சிறந்த எதிர்காலம் அடங்கியிருக்கிறது.குழந்தைகளை வளர்ப்பதில் நாம் கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலும் நம் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.
   
குழந்தைகள் தங்கம்,வெள்ளியைப் போன்றவர்கள்.தங்கத்தில் சேர்க்க வேண்டியதை சேர்த்து,நீக்க வேண்டியதை நீக்கினால் தான் அது விலை மதிப்புள்ள ஒரு பொருளாக மாறும்.அதுபோன்று குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டியதை கொடுக்க வேண்டும்.நீக்க வேண்டியதை நீக்க வேண்டும்.

குழந்தைகள் விவசாய நிலத்தைப்போன்றவர்கள்.விவசாய நிலத்தில் தேவையானதை சேர்த்து,அதில் உள்ள பூச்சிக்களை நீக்கினால் தான் அது பயன் தரும்.அதுபோன்றே நம் பிள்ளைகள்.சரியான நேரத்தில் கவனிக்க வில்லையென்றால் அவர்கள் பயன் தராத விவசாய நிலத்தைப் போன்றே ஆகிவிடுவார்கள்.

ஒரு அறிஞரிடம் ஒருவர் வந்து ;என் மகன் என்னை மதிப்பதே இல்லை.என் சொல்படி நடப்பதே இல்லை என்று முறையிட்டார். அப்போது அந்த அறிஞர் ;உன் மகனுக்கு குர்ஆனை கற்றுக் கொடுத்தாயா என்று கேட்க இல்லையென்றார் அவர். உன் மகனுக்கு நபியின் வாழ்க்கையை கற்றுக்கொடுத்தாயா என்று கேட்க இல்லையென்றார் அவர்.உன் மனுக்கு நல்ஒழுக்கத்தை கற்றுக் கொடுத்தாயா என்று கேட்க அதற்கும் இல்லையென்றே பதில் வந்தது. அப்போது அந்த அறிஞர் ;நீ அல்லாஹ்விற்கு ஷுக்ர் செய் என்றார்கள்.ஏனென்று கேட்டபோது நீ தூங்கிக் கொண்டிருக்கின்ற போது உன் தலையில் கல்லைப் போடவில்லையே அதற்காக என்றார்கள்.

எனவே நம் குழந்தைகளிடம் மார்க்கம் இல்லையெனில் எந்த நல்ல குணத்தையும் அவர்களிடம் நாம் எதிர்பார்க்க முடியாது

எனவே நம் குழந்தைகளுக்கு குர்ஆனையும்,அண்ணல் நபியின் வாழ்வையும் கற்றுத்தருவோம்.வல்ல அல்லாஹ்வின் அருளைப் பெறுவோம். யா அல்லாஹ் எங்கள் குழந்தைகளை நீயும் உனது ரசூலும் விரும்பிய வழியில் வளர்ப்பதற்கு அருள் புரிவாயாக.   

No comments:

Post a Comment