Pages

Pages

Wednesday, March 12, 2014

இரக்கம் மகிழ்ச்சியைத் தரும்



அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்] அன்பு நேயர்களே! இன்றைக்கு பலரின் வாழ்வு கவலைகளும்,துக்கங்களும், மனக்கஷ்டங்களும் நிறந்ததாகத்தான் அமைந்திருக்கிறது. இந்த கவலைகளையும், மனக்கஷ்டங்களையும் நாம் சாதாரணமாக நினைத்து விட முடியாது.


இன்றைக்கு பல தம்பதிகளுக்குள் விரிசல் ஏற்படுவது,பலர் வியாபாரத்தில் உயர முடியாமல் துவண்டு போவது,பலர் கல்வியில் கவனம் செலுத்தாமல் பின்னடைவை சந்திப்பது, துடிப்பான பல இளம் வாலிபர்கள் செயல் பட விடாமல், தங்களது கனவுகளை எட்ட முடியாமல் முடங்கி இருப்பது,இன்றைக்கு சமூகத்தில் நடைபெறும் அதிகமான விபத்துக்கள்,தற்கொலைகள் இப்படி எண்ணிலடங்காத பல்வேறு சமூக விளைவுகளுக்கும் பின்னனியில் மறைந்திருப்பது இந்த மனக்கஷ்டங்கள் தான்.  

ஒருவன் என்னதான் திறமையுள்ளவனாக, விவேகம் நிறைந்த வனாக,வீரனாக,கல்வியாளனாக,கலை நயம் உள்ளவனாக இருந்தாலும் கவலை அவனை சூழ்ந்து விட்டால்,மனக்கஷ்டங்கள் அவனிடம் குடி கொண்டு விட்டால் அவனிடம் இருக்கும் அத்தனை திறமைகளும் பயனற்றுப் போய் விடுகிறது.

வாழ்க்கையில் ஒவ்வொருவரும் எத்தனையோ கண்மூடித்தனமான பள்ளங்களையும், முகம் சுழிக்கும் நிகழ்வுகளையும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அது நம் சூழலையும் நிம்மதியையும் எந்த அளவிற்கு பாதிக்கிறது என்பது நாம் அறிந்த விஷயம்.

இவ்வளவு பெரிய விளைவுகளையும் ஆபத்துகளையும் உருவாக்கும் மனக்கஷ்டங்களைப் போக்கும் மருந்து நம்மிடம் தான் உள்ளது.
எவர் அடுத்தவர் மீது எந்த காழ்ப்புணர்ச்சியும், வெறுப்பும், எரிச்சலும் இன்றி உண்மையான அன்புடன், இரக்கம் செலுத்துகிறாரோ அவருடைய மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி பிறக்கிறது,அதனால் அவரின் ஆயுளும் அதிகரிக்கிறது என்பதை இன்றைய நிதர்சன ஆய்வு உறுதி செய்திருக்கிறது.

இன்றைக்கு நாம், நமது நெருக்கமானவர்களுக்கு மட்டும் உதவி செய்வதற்கும்,அன்பு செலுத்துவதற்கும்,இரக்கம் காட்டுவதற்கும் பழகி இருக்கிறோம். ஆனால் நெருக்கமானவர்களுக்கு செய்யும் உதவிகளாலும்,நெருக்கமானவர்களின் மீது நாம் காட்டும் பரிவாலும் கிடைக்கப் பெரும் மகிழ்ச்சியை விட பன்மடங்கு மகிழ்ச்சியை முன்பின் அறியாத ஒருவரிடம் நாம் காட்டும் அன்பும், இரக்கமும், அவருக்கு நாம் புரியும் சேவையும் நமக்குப் பெற்றுத்தருவதாக அந்த ஆய்வின் முடிவு சொல்கிறது.
போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவிக்கும் வேளையில் ஒதுங்கி இயலாதவர்களுக்கு வழிவிடுவது, பயணச்சீட்டு வாங்கும் வரிசையில் அவசரமாக பயணம் மேற்கொள்ள வேண்டியவருக்கு தன் இடத்தை விட்டுக் கொடுப்பது, ஆதரவின்றி,உறவுகள் இன்றி தனிமையில் வாடுபவர்களுக்கு நம்மால் ஆன உதவிகளை செய்வது, மருத்துவமனைகளில் சிரமப்படும் நோயாளிகளின் மீது இரக்கம் கொண்டு ஆறுதலான வார்த்தைகளை கூறுவது இதுவெல்லாம் தம்மையே தாம் நல்ல குணவான் என்ற உணர்வை ஏற்படுத்தி நம் மனதில் மகிழ்ச்சி வெள்ளத்தை பாயச்செய்வது நிரூபணமாகி யிருக்கிறது.
மண்ணிலுள்ளவர்களின் மீது நீ கருணை காட்டு விண்ணிலுள்ள வன் உன் மீது கருணை மழை பொழிவான் என்ற நபிமொழி இந்த ஆய்வைத்தான் சுட்டிக் காட்டுகிறது.அல்லாஹுத்தஆலா அந்த கருணை உள்ளத்தை நம் அனைவருக்கும் வழங்குவானாக!








No comments:

Post a Comment