Pages

Pages

Friday, August 29, 2014

வாய்மை


அஸ்ஸலாமு அலைக்கும் {வரஹ்} அன்பு நேயர்களே இஸ்லாம் ஓர் உயர்ந்த மார்க்கம்.மனிதன் உயர்ந்தவனாக,சிறந்தவனாகத் திகழ உன்னதமான பண்பாடுகளையும்,நாகரீகங்களையும் கற்றுத்தரும் இஸ்லாம், தீய செய்களை தவிர்ந்து கொள்ளும்படியும் அவனை எச்சரிக்கிறது.


அந்த வகையில் இஸ்லாம்,உண்மையைப் போற்றி,பொய்யை எச்சரிக்கிறது. உள்ளத்தால் மட்டும் உண்மையாக இருப்பதற்கு உண்மை என்றும், உள்ளத்தாலும், நாவாலும் உண்மையாக இருப்பதற்கு வாய்மை என்றும்,உள்ளத்தாலும்,நாவாலும், செய்கையாலும் உண்மையாக இருப்பதற்கு மெய்மை என்றும் பெயரிட்டு, சான்றோர்கள் உண்மையை மூன்று வகையாகப் பிரிப்பர்.

இதில் மூன்றாவது வகையைத்தான்,அதாவது, உள்ளத்தாலும், நாவாலும்,செய்கையாலும் உண்மையாக இருப்பதைத்தான் இஸ்லாம் போற்றுகிறது.

இன்று பொய் என்பது மலிந்து போனது,உண்மை அரிதாகிப் போனது.உறவுகளில் உண்மை சிதைந்து விட்டது,வியாபாரத்தில் உண்மை மறைந்து விட்டது,நீதிமன்றங்களில் உண்மை காணாமல் போய் விட்டது.

உண்மையைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்.உண்மை உங்களை நன்மையில் சேர்க்கும்,நன்மை உங்களை சுவனத்தில் சேர்க்கும் என்பது நபிமொழி.

எவர் விளையாட்டுக்குக் கூட பொய் பேசுவதை விட்டு விடுகிறாரோ அவருக்கு சுவனத்தின் மத்தியப் பகுதியில் ஒரு வீடு கிடைக்க நான் பொறுப் பேற்றுக் கொள்கிறேன் என்பது சத்திய நபியின் சத்திய வாக்கு.
ஒரு பெண்மனி தன் குழந்தையிடம் இங்கே வா! நான் உனக்கு ஒன்று தருகிறேன் எனக் கூறி அழைத்தாள். அதை செவியுற்ற ஏந்தல் நபி {ஸல்} அவர்கள்,அப்பெண்மனியை அழைத்து, இங்கே வா நான் உனக்கு ஒன்றைத் தருகிறேன் என உன் குழந்தையை அழைத்து நீ எதையும் கொடுக்க வில்லையென்றால் பொய் சொன்னவர்களில் உன் பெயரையும் அல்லாஹ் எழுதி விடுவான் என எச்சரித்தார்கள். 

ஒரு முறை அண்ணல் நபியவர்கள் அங்கசுத்தி செய்து கொண்டிருந் தார்கள்.அப்போது அவர்களது தோழர்கள் நபியின் மேனியிலிருந்து வழிந்தோடிய தண்ணீரைப் பிடித்து தங்கள் மேனியில் தடவிக் கொண்டிருந்தார்கள்.ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என அண்ணல் நபி {ஸல்} அவர்கள் கேட்ட போது, யாரசூலல்லாஹ்! அல்லாஹ்வின் மீதும்,அவனது தூதர் மீதும் உள்ள பிரியத்தால் இவ்வாறு செய்கிறோம் என்றார்கள்.

அப்போது நபி {ஸல்} அவர்கள்,அல்லாஹ்வும்,அவனது தூதரும் உங்களை நேசிக்க வேண்டுமெனில் நீங்கள் அமானிதத்தைப் பேணுங்கள்,உண்மையையே பேசுங்கள்,அண்டை வீட்டாருடன் நன்முறையில் நடந்து கொள்ளுங்கள் என்றார்கள்.

நபி {ஸல்} அவர்கள் மக்களிடையே உண்மையாளர்,நம்பிக்கையாளர் என்ற பெயரைப் பெற்ற பிறகு தான், தான் ஒரு இறைத் தூதர் என்பதை வெளிப்படுத்தினார்கள்.அவர்களின் உண்மைத் தன்மையைக் கண்டு தான், பலர் அவர்களை ஏற்று இஸ்லாத்தில் கால் பதித்தனர்.இன்றும் இஸ்லாம் விண்ணைத் தொடும் உயரத்தில் வளர்ந்தோங்க அந்த வாஞ்சை நபியின் வாய்மை தான் காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

வல்ல இறைவன் அந்த வாய்மையை நம் வாழ்வில் நிலைக்கச் செய்வானாக!


No comments:

Post a Comment