Pages

Pages

Monday, June 29, 2020

இஸ்லாத்தின் பார்வையில் விரைவாக செய்ய வேண்டிய காரியம் 6 ; தவ்பா



தாமதிக்காமல் விரைவாக செய்ய வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்திய அடுத்த விஷயம் தவ்பா. நாம் தவறு செய்து விட்டால் அதற்கான தவ்பாவை அல்லாஹ்விடம் உடனடியாக தேடிக் கொள்ள வேண்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம்,கடைசி காலத்தில் செய்து கொள்ளலாம் என்று அதை தள்ளிப் போடுவது ஆரோக்கியமானதல்ல என்று இஸ்லாம் கூறுகிறது.

 كل بني ادم خطاء وخير الخطائين التوابون  
மனிதர்கள் அனைவரும் பாவம் செய்பவர்கள்,பாவம் செய்பவர்களில் சிறந்தவர்கள் தவ்பா செய்பவர்கள். (அல்ஜாமிவுஸ் ஸகீர் ; 6274)
பாவம் செய்பவர்களில் தவ்பா செய்யக் கூடியவர்கள் சிறந்தவர்கள் என்றால் அந்த தவ்பா செய்பவர்களில் மிகச்சிறந்தவர்கள் அதை பிற்படுத்தாமல் உடனே செய்பவர்கள் தான்.

قال لقمان لابنه: "يا بنيّ، لا تؤخر التوبة؛ فإن الموت يأتي بغتة". الجامع لشعب الايمان
லுக்மான் அலை அவர்கள் தன் மகனுக்கு செய்த உபதேசங்களில் ஒன்று ; என் அன்பு மகனே! தவ்பாவை நீ தள்ளிப் போடாதே! ஏனென்றால் மரணம் திடீரென்று வந்து விடும். (அல்ஜாமிவு லிஷுஃபுல் ஈமான்)

அல்குர்ஆனில் யாருக்கு தவ்பா கிடைக்கும் யாருக்கு தவ்பா கிடைக்காது, யாருடைய தவ்பா ஏற்றுக் கொள்ளப்படும் யாருடைய தவ்பா ஏற்றுக் கொள்ளப்படாது என்று ஒரு இடத்தில் அல்லாஹ் தெளிவாகப் பேசுகிறான்.
إِنَّمَا التَّوْبَةُ عَلَى اللَّهِ لِلَّذِينَ يَعْمَلُونَ السُّوءَ بِجَهَالَةٍ ثُمَّ يَتُوبُونَ مِن قَرِيبٍ فَأُولَٰئِكَ يَتُوبُ اللَّهُ عَلَيْهِمْ ۗ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا 
எவர்கள் அறியாமையினால் தீமை செய்து விட்டு பின்பு விரைவாக தவ்பா செய்கிறார்களோ அவர்களுக்குத்தான் அல்லாஹ்விடம் மன்னிப்பு உண்டு. அல்லாஹ் அவர்களின் தவ்பாவை ஏற்றுக் கொள்கிறான்.(அல்குர்ஆன் : 4 ; 17)

அல்லாஹ் தவ்பாவின் வாசலை திறந்தே வைத்திருக்கிறான்.அடியான், தான் செய்த பாவங்களுக்காக, தான் செய்த குற்றங்களுக்காக வருந்தி திருந்தி கண்ணீர் வடித்து எப்போது தவ்பா கேட்டாலும் அதை ஏற்றுக் கொள்ள அல்லாஹ் தயாராக இருக்கிறான். அல்லாஹ்விடத்தில் தவ்பாவின் வாசல்கள் மூடப்படுவதே இல்லை. இருந்தாலும் இரண்டு விஷயங்கள் நடப்பதற்கு முன்பு தவ்பா செய்து விட வேண்டும். அந்த இரண்டு விஷயங்கள் நடந்து விட்டால் அல்லாஹ் தவ்பாவை ஏற்றுக் கொள்வதில்லை.ஒன்று கியாமத் வந்து விடுவது. அதைக் குறித்து நபி அவர்கள் இப்படி சொல்வார்கள்.

إنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَبْسُطُ يَدَهُ باللَّيْلِ لِيَتُوبَ مُسِيءُ النَّهَارِ، وَيَبْسُطُ يَدَهُ بالنَّهَارِ لِيَتُوبَ مُسِيءُ اللَّيْلِ، حتَّى تَطْلُعَ الشَّمْسُ مِن مَغْرِبِهَا
சூரியன் மேற்கிலிருந்து உதிக்கும் வரை, பகலில் தீங்கிழைத்தவன் தவ்பா செய்வதற்காக இரவிலும், இரவில் தீங்கிழைத்தவன் தவ்பா செய்வதற்காக பகலிலும் அல்லாஹ் தன் கரத்தை விரித்து வைத்திருக்கிறான். (முஸ்லிம் ; 2759)

இரண்டாவது மவ்த் நிகழ்வது. குறிப்பாக ரூஹ் பிடுங்கப்படும் வேளையில் அந்த ரூஹ் தொண்டைக்குழியை அடையும் வரை அல்லாஹ் தவ்பாவை ஏற்றுக் கொள்கிறான். அதற்குப் பிறகு தவ்பாவை ஏற்றுக் கொள்வதில்லை.
إنَّ اللهَ يقبلُ توبةَ العبدِ ما لم يُغَرْغِرْ .
ஒரு அடியானின் ரூஹ் அவனின் தொண்டைக்குழியை அடையும் வரை அவனின் தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். (திர்மிதி ; 3537)

அதுவரை எண்ணற்ற அட்டூழியங்களையும் அநியாயங்களையும் செய்து கொண்டும் இறைவனை மறுத்துக் கொண்டும் தன்னையே இறைவன் என்று சொல்லிக் கொண்டுமிருந்த ஃபிர்அவன் மூழ்கடிக்கப்படும் அந்த வேளையில் தன் அழிவை உணர்ந்து கொண்டதும் மரணத்தின் விழிம்பில் நின்று கொண்டு

 آمَنتُ أَنَّهُ لا إِلِهَ إِلاَّ الَّذِي آمَنَتْ بِهِ بَنُو إِسْرَائِيلَ وَأَنَاْ مِنَ الْمُسْلِمِينَ
பனூ இஸ்ராயீல்கள் யாரைக்கொண்டு ஈமான் கொண்டுள்ளார்களோ அவனைத் தவிர இறைவன் வேறு யாருமில்லை என்று நான் ஈமான் கொண்டேன்.நானும் முஸ்லிம்களில் ஒருவன் என்று சொன்னான். (அல்குர்ஆன் : 10 ; 90)
 آلآنَ وَقَدْ عَصَيْتَ قَبْلُ وَكُنتَ مِنَ الْمُفْسِدِينَ 
இதற்கு முன்பு எனக்கு மாறு செய்து கொண்டு குழப்பம் செய்பவர்களில் ஒருவனாக இருந்தாய். இப்போது தான் ஈமான் கொள்கிறாயா (அல்குர்ஆன் : 10 ; 91) என்று சொல்லி இறைவன் மறுத்து விட்டான்.

மரணத்தின் விளிம்புக்கு வந்த பிறகு அழிவின் அடையாளங்களைப் பார்த்த பிறகு செய்யப்படும் தவ்பா பயன் தராமல் போய் விடும்.எனவே பாவம் செய்தவர்கள் அந்த பாவத்திற்கான தவ்பாவை விரைவாகச் செய்து விட வேண்டும்.

இன்றைக்கு உலகத்தில் பாவமன்னிப்பின் ரூபங்கள் பல விதமாக இருக்கிறது. பாவமன்னிப்பின் விதங்கள் பல மாறியாக இருக்கிறது.அதுவும் சில மதங்களில்  பாவமன்னிப்பைப் பெறுவதற்காக செய்யப்படும் காரியங்களைப் பார்த்தால் ரொம்ப வேடிக்கையாக இருக்கும்.கோயிலில் போய் 100 தேங்காய் உடைப்பார்கள், கேட்டால் பாவ மன்னிப்பு என்பார்கள், கோயில் உண்டியலில் 1000 ரூபாய் போடுவார்கள், கேட்டால் பாவமன்னிப்பு என்பார்கள், கங்கை ஆத்தில் மூழ்கி விட்டு வருவார்கள், கேட்டால் பாவமன்னிப்பு என்பார்கள், இதுவெல்லாம் பாவமன்னிப்பைப் பெறுவதற்கு ஹிந்து மதத்தில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகள். கிருத்துவ மதத்தில் பார்த்தால் இன்னும் வேடிக்கையாக இருக்கும். இருக்கிற எல்லா பாவத்தையும் செய்து விட்டு நான் இன்னன்ன பாவங்களை செய்து விட்டேன். என்னை ஆசிர்வதியுங்கள் என்று சொல்வார்கள், அங்கே அவரும் உன்னை கர்த்தர் மன்னிப்பாராக என்று சொல்வார், அதோட அவர்களின் பாவமன்னிப்பு முடிந்து விடும். பாவங்களுக்கான மன்னிப்பைப் பெறுவதை இன்றைக்கு மதங்கள் இந்தளவு கேளிக்கூத்தாக ஆக்கி வைத்திருக்கிறது.

ஒரு மதகுரு கிருத்துவ ஆலயத்தில் சொற்பொழிவாற்றினார். "மனிதர்களே நீங்கள் பாவிகளாக இருக்கிறீர்கள். உங்கள் பாவங்களுக்காக இறைவன் நிச்சயம் உங்களை தண்டிப்பான். இறைவனுடைய தண்டனையிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் என்னிடம் ஒரு பாவமன்னிப்பு சீட்டு இருக்கிறது.ஒரு சீட்டு 50 ரூபாய் தான். அதை வாங்குங்கள்." என்று சொன்னார்.எல்லாரும் வாங்கினார்கள். அதில் ஒருவர் மட்டும் 100 கொடுத்து இரண்டு சீட்டுக்களை வாங்கினார்கள்.ஏனென்று கேட்ட போது காரணம் இருக்கிறது என்று சொன்னார்.எல்லா சீட்டுக்களையும் விற்று விட்டு கட்டுக் கட்டாக பண்ணத்தை அள்ளிக் கொண்டு அந்த கிருத்துவ மத குரு அங்கிருந்து கிளம்பினார். இடையில் ஒருவன் வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி அத்தனை பணத்தையும் பறித்து விட்டான். பறித்து விட்டு, நான் இதற்குத்தான் உங்களிடம் இரண்டு சீட்டுக்களை வாங்கினேன் என்று கூறினான்.

பாவமன்னிப்பு என்பது மற்ற மதங்களிலும் சமயங்களிலும் கேளியாகவும் கூத்தாகவும் வேடிக்கையாகவும் ஆக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இஸ்லாத்தில் பாவமன்னிப்பு என்பது மிக மிக உயர்வானது மிக மிக கண்ணியமானது. யாரிடத்திலும் சென்று நம் பாவச் சுமைகளை இறக்கி வைக்க வேண்டிய தேவையில்லை.இறக்கி வைக்கவும் முடியாது. செய்த பாவங்களை நினைத்து மனம் வருந்தி இறைவனிடம் மன்றாட வேண்டும்.  இது தான் இஸ்லாம் சொல்லித்தருகிற பாவமன்னிப்பு.

பாவிகளைப் பொறுத்த வரை அவர் செய்த பாவங்கள் அவர்களுக்கும் அல்லாஹ்வுக்கும் மத்தியில் உள்ளது.அதை அல்லாஹ் பெரும்பாலும் வெளிப்படுத்துவதில்லை.பாவம் செய்தவர் தவ்பா செய்தால் அதை மன்னித்து விடுகிறான்.இல்லையென்றால் அதற்கான தண்டனையை மறுமையில் தருகிறான்.அவர் பாவி என்பதற்காக அவர் பாவங்களை மக்கள் மன்றத்தில் வெளிப்படுத்தி அவரை ஒரு பொழுதும் கேவலப் படுத்துவதில்லை.

பாவமன்னிப்பு விஷயத்தில் இஸ்லாத்தின் தனிச்சிறப்பு இது தான். ஒருவர் எத்தனை பெரிய குற்றங்களை செய்து மிக மோசமானவராக இருந்தாலும் அவரின் குற்றங்கள் யாருக்கும் தெரியாமலேயே மன்னிக்கப்பட்டு விடும்.

رُوي أنه لحق بني إسرائيل قحطٌ على عهد النبي موسى عليه السلام, فاجتمع الناس إليه فقالوا: يا كليم الله، ادعُ لنا الله أن يسقينا الغيث, فقام معهم، وخرجوا إلى الصحراء وهم سبعون ألفًا أو يزيدون, فقال موسى عليه السلام: إلهي، أسقنا غيثك, وانشرْ علينا رحمتك, وارحمنا بالأطفال الرُّضَّع, والبهائم الرتع, والشيوخ الركع, فما زادت السَّماء إلا تقشعًا, والشمس إلا حرارة، فتعجب النبي موسى عليه السلام, وسأل ربَّه عن ذلك, فأوحى الله إليه: إنَّ فيكم عبدًا يبارزني بالمعاصي منذ أربعين سنة، فنادِ في الناس حتى يخرج من بين أظهركم, فبه منعتكم، فقال موسى: إلهي وسيدي، أنا عبد ضعيف، وصوتي ضعيف، فأين يبلغ وهم سبعون ألفًا أو يزيدون؟ فأوحى الله إليه: منك النداء، ومنا البلاغ, فقام النبي موسى مناديًا: يا أيها العبد العاصي، الذي يبارز الله بالمعاصي، منذ أربعين سَنة, اخرُجْ من بين أظهرنا؛ فبِكَ مُنعنا المطر, فنظر العبد العاصي ذات اليمين وذات الشمال, فلم يرَ أحدًا خرج منهم, فعلم أنه المطلوب, فقال في نفسه: إن أنا خرجت من بين هذا الخَلق فَضَحتُ نفسي، وإن قعدت معهم مُنعوا لأجلي, فأدخل رأسه في ثيابه نادمًا على فِعاله، وقال: إلهي وسيدي، عصيتُك أربعين سنة وأمهلتني، وقد أتيتك طائعًا فاقبلني, فلم يستتم كلامه حتى ارتفعت سحابة بيضاء, فأمطرت كأفواه القِرَب, فقال موسى: إلهي وسيدي، بماذا سقيتنا وما خرج من بين أظهرنا أحد؟ فقال الله: يا موسى, سقيتكم بالذي منعتكم! فقال موسى: إلهي, أرني هذا العبد الطائع, فقال الله: يا موسى, لم أفضحْه وهو يعصيني، أأفضحه وهو يطيعني؟!)). ابن كثير
நபி மூஸா அலை அவர்களின் காலத்தில் பனீஇஸ்ரவேலர்களுக்கு பெரும் பஞ்சம் ஏற்பட்டது.அப்போது மக்கள் நபி மூஸா அலை அவர்களிடம் வந்து மழைக்காக துஆச்செய்யும்படி வேண்டினார்கள்.சுமார் எழுபதாயிரம் மக்களை ஒரு பாலைபெருவெளியில் ஒன்று திரட்டிய நபி மூஸா அலை அவர்கள்,யா அல்லாஹ்!எங்களுக்கு மழை பொழிவாயாக.உன் அருளை எங்கள் மீது இறக்கிவைப்பாயாக.பால் குடிக்கும் குழந்தைகள்.மேய்ந்து திரியும், கால்நடைகள்,வணக்கங்களில் ஈடுபடும் பெரியவர்களின் பொருட்டால் எங்களுக்கு இறக்கம் காட்டுவாயாக என்று எவ்வளவு கெஞ்சியும் வானம் தன் உஷ்னத்தை குறைக்கவில்லை. அப்போது அல்லாஹ் தஆலா சொன்னான். நாற்பது ஆண்டுகள் பாவம் செய்த ஒருவன் உங்கள் கூட்டத்தில் இருக்கிறான்.  அவனால் உங்களின் மழை தடுக்கப்பட்டிருக்கிறது. முதலில் அவனை வெளியேற்றுங்கள் என்று கூறினான்.

அதை செவியுற்ற நபி மூஸா அலை அவர்கள்,பாவியே!நீ இந்த கூட்டத்தை விட்டு வெளியேறு என்று கூறியதும் பாவம் செய்தவன் தன் இருபுறத்திலும் பார்த்தான் யாரும் வெளியேற வில்லை. எனவே தன்னைத்தான் கூறுகிறார்கள் என்று அவன் விளங்கிக்கொண்டான்.   இந்த கூட்டத்தில் இருந்தால் மழை தடுக்கப்படும்.இப்போது வெளியேறி விட்டால் கேவலமாகிவிடும்.என்ன செய்வது?என்று யோசித்தவன் அல்லாஹ்விடம் தவ்பா செய்ய முடிவெடுத்தான்.தன் தலையை தன் ஆடையில் நுழைத்து யாருக்கும் தெரியாமல் யா அல்லாஹ்!நான் நாற்பது வருடம் உனக்கு மாறு செய்தேன்.என்னை தண்டிக்காமல் தாமிதப்படுத்தினாய்.இப்போது தவ்பா செய்ய உன் படி ஏறியிருக்கிறேன் என்னை மன்னித்து ஏற்றுக்கொள்ள மாட்டாயா?என்று அழுது கண்ணீர் வடிக்கிறார்.

அவரின் கண்ணீர் பூமியை தொடும் முன்னர் வானத்திலிருந்து அருள்மழை பூமியை நனைக்க ஆரம்பித்து விட்டது.யாரும் வெளியாகாமல் எப்படி மழை பொழிந்தது? என ஆச்சரியப்பட்டு, நபி மூஸா அலை அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டபோதுமழை தடுக்கப்பட்டவரே மழை பொழிய காரணம் என்று சொன்னான்.அவர் திருந்தி என் பிரியமான அடியாராக மாறிவிட்டார் என்றும் கூறினான்.

அப்போது நபி மூஸா அலை அவர்கள் யா அல்லாஹ்! இப்போதாவது அந்த அடியாரை எனக்கு அடையாளம் காட்டு என்று வேண்டுகிறார்கள்.அதற்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் , அவர் எனக்கு மாறுசெய்த அடியாராக இருக்கும்போதே நான் கேவலப்படுத்தவில்லை. இப்போது அவர் என் பிரியமான அடியாராக மாறிவிட்டார் இப்போது கேவலப்படுத்துவேனா? என்றானாம். (இப்னு கஸீர்)

இது தான் இஸ்லாத்திற்கும் மற்ற மதங்களுக்கும் உள்ள வேறுபாடு.பாவம் செய்தவரை ஒரு மாதிரியாக பார்ப்பதும் அவரை ஒதுக்குவதும் அவரை தள்ளி வைப்பதும் மாற்றார்களின் கலாச்சாரம்.ஆனால் பாவிகளைக் கூட கண்ணியப்படுத்துவதும் அவர்களின் கண்ணியத்தைப் பாதுகாப்பதும் இஸ்லாத்தின் கலாச்சாரம்.
பாவமன்னிப்பு விஷயத்தில் இஸ்லாத்திற்கும் மற்ற மதங்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை புரிந்து கொண்ட அதே நேரத்தில் இஸ்லாத்தின் பார்வையில் பாவமன்னிப்பைப் பெறுவதற்கான வழிமுறைகளை பாவம் செய்தவன் அந்த பாவத்திற்கான தவ்பாவை தேடுவதற்கு இஸ்லாம் கற்றுத்தரும் அனுகுமுறைகளை விளங்குவதும் அவசியம்.

தவ்பா செய்கின்ற போது மிக முக்கியமாக 7 விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. அதில் முதல் விஷயம் பாவத்தை பாவம் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்றைக்குள்ள நவீன காலத்தில் நிறைய  பாவங்கள் பாவங்களாகவே தெரிவதில்லை. பொய் சொல்வதும், வட்டி வாங்குவதும், பிறர் பொருளை அபகரிப்பதும், அந்நிய பெண்களோடு சகஜமாக பழகுவதும், மது குடிப்பதும்  சாதாரணமாகி விட்ட ஒரு காலம். பல குற்றங்களை குற்றங்களாகவே ஏற்றுக் கொள்ளாத ஒரு காலம். ஆனால் தவ்பாவில் கவனிக்கப்பட வேண்டிய முதல் விஷயம் பாவத்தை பாவமாக ஏற்றுக் கொள்வது.

2 வது விஷயம் நம்பிக்கை. பாவத்தின் அளவைப் பார்க்காமல் அல்லாஹ்வுடைய அருளின் விசாலத்தைப் பார்க்க வேண்டும். எத்தனை பெரிய பாவமாக இருந்தாலும் உரிய முறையில் நம் தவ்பா அமைந்து விட்டால் அல்லாஹ்வின் மன்னிப்பு கிடைக்கும் என்ற உணர்வு என்ற நம்பிக்கை நமக்கு வர வேண்டும்.

நம் சிந்தனைக்கே எட்டாத அளவு  இப்படியும் பாவம் செய்ய முடியும் என்று நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவு பெறும் பெறும் குற்றங்களைச் செய்தவர்களையும் அல்லாஹ் மன்னித்த வரலாறுகள் வரலாற்று நூற்களிலும் ஹதீஸ் நூட்களிலும் பதிவாகியிருக்கிறது.

3 வது விஷயம் அந்த தவ்பா அல்லாஹ்வுக்காக இருக்க வேண்டும். பாவத்தை விடுவதிலும் தவ்பா செய்வதிலும் அல்லாஹ்வின் அச்ச உணர்வு இருக்க வேண்டும்.உண்மையிலேயே அல்லாஹ்வுக்கு பயந்து தவ்பா செய்ய வேண்டும்.

4 வது விஷயம் பாவத்திலிருந்து விலகிக் கொள்வது.பாவத்தை நிறுத்தி விட்டு அதற்குப் பிறகு தான் தவ்பா செய்ய வேண்டும். அந்த பாவத்தில் இருந்து கொண்டே தவ்பா செய்யக்கூடாது. அப்படிச் செய்வதில் எந்தப் பலனும் இல்லை.

5 வது விஷயம் இனிமேல் அந்த பாவத்தை செய்ய மாட்டேன்.அதன் பக்கம் மீள மாட்டேன் என்ற உறுதி இருக்க வேண்டும்.தவ்பாவுக்கு பிறகு சந்தர்ப்ப வசமாக மறுபடியும் அந்த பாவத்தை செய்வது வேறு விஷயம். ஆனால் தவ்பா செய்யும் போது அந்த உறுதி இருக்க வேண்டும்.

6 வது விஷயம் செய்த பாவத்தை நினைத்து கைசேதப்பட வேண்டும்,மனம் வருந்த வேண்டும், உள்ளத்தால் அழ வேண்டும். தவ்பா செய்கிற போது கண்களில் தண்ணீர் கசிகிறதோ இல்லையோ உள்ளத்தில் தண்ணீர் கசிய வேண்டும். الندم التوبة  மன வருத்தம் தான் தவ்பா என்றார்கள் நபி ஸல் அவர்கள். எனவே உள்ளத்தில் அதைப்பற்றிய வருத்தம் எதுவும் இல்லாமல் வெறும் உதட்டளவில் மட்டும் அஸ்தக்ஃபிருல்லாஹ் என்று சொல்வதில் அர்த்தம் எதுவுமில்லை.

7 ஏற்கனவே சொன்னதைப் போன்று தவ்பா செய்ய அனுமதிக்கப்பட்ட தவனைக்குள் தவ்பா செய்ய வேண்டும்.

இப்படி தவ்பா செய்வதற்கென்று சில வழிமுறைகளை சில நிபந்தனைகளை சில கட்டுப்பாடுகளை இஸ்லாம் விதித்திருக்கிறது. அதை கவனத்தில் கொண்டு நாம் நம் தவ்பாக்களை அமைத்துக் கொள்ள வேண்டும். 

வல்லோன் அல்லாஹ் நம் மரணத்தின் முன் நாம் செய்த அனைத்துப் பாவங்களுக்கும் தவ்பா செய்யும் பெரும் பாக்கியத்தை தருவதோடு நம் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து நம்மை தூய்மைப் படுத்துவானாக!


4 comments:

  1. மாஷா அல்லஹ்

    ReplyDelete
    Replies
    1. الحمد لله على كل حال🤝🏻👑🤝🏻

      Delete
  2. ماشاءالله تقبل الله الله يجازيك الخير

    ReplyDelete
  3. Mashallah Alhamdulillah

    ReplyDelete