அல்லாஹ்வின் மகத்தான அருளால் அருள் நிறைந்த ரமலான் மாதத்தை அடைந்து அதில் எண்ணற்ற அமல்களை செய்து அந்த மாதத்தை நிறைவு செய்யும் தருணத்தில் நாம் இருக்கிறோம்.இந்த மாதத்தில் நாம் வைத்த நோன்புகள், நாம் தொழுத தராவீஹ் தொழுகைகள், நாம் செய்த தானதர்மங்கள், கடமையான ஜகாத்துகள் உட்பட நாம் செய்த அத்தனை நற்கருமங்களையும் வல்லோன் அல்லாஹ் கபூல் செய்வதோடு அதற்கு ஈருலகத்திலும் சிறந்த பகரத்தை தருவானாக.
புனிதமான ரமலானை அடைந்து ஏராளமான நல்லமல்களால்
நல்லறங்களால் அந்த மாதத்தை கண்ணியப்படுத்திய காரணத்தினால் ஒரு வகையில்
மகிழ்ச்சியிலும் ஆனந்தத்திலும் நாம் இருந்தாலும் இன்னொரு வகையில் இது நாம் கவலை
கொள்வதற்கான நேரம், அச்சப் படுவதற்கான தருணம். பெருநாள் வரப்போகிறது,பல நாள் கடை
கடையா அலைந்து எடுத்த புதுத்துணிகளையெல்லாம் உடுத்தி ஆடு அறுத்து பிரியாணி சமைத்து
இப்படி அதை ரொம்ப ஜாலியாக கொண்டாட வேண்டுமென்று காத்துக் கொண்டிருக்கும் இந்த
நேரத்தில் கவலை துக்கமென்று சொன்னால் என்ன அர்த்தம் என்று நீங்கள கேட்கலாம்.
உண்மையில் பெருநாள் என்பது மகிழ்ச்சியாக
சந்தோஷமாக இஸ்லாம் அனுமதித்த விதத்தில் ஷரீஅத் காட்டித்தந்த வழிமுறையில் கொண்டாட
வேண்டிய அதை செலப்ரேட் பண்ண வேண்டிய மகத்தான நாள் தான். உலகப்பிரசித்தி பெற்ற
ஹதீஸ் கிதாபான புகாரி கிதாபின் விரிவுரையாளரான ஹள்ரத் அல்லாமா ஹாஃபிழ் இப்னு ஹஜர்
ரஹ் அவர்கள் கூறுவார்கள்.
اظهار السرور في الاعياد من شعار الدين
பெருநாட்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது
மார்க்கத்தின் அடையாளச் சின்னங்களில் உள்ளது என்று சொல்கிறார்கள்.
எனவே இஸ்லாமிய பெருநாட்கள் என்பது மகிழ்ச்சியான
நாட்கள் என்பதில் ஐயமேதுமில்லை, இருந்தாலும் நோன்பு நிறைவு பெறுகிற இந்த நேரம்
கவலைப்படுவதற்கான நேரம், அச்சப்படுவதற்கான தருணம் என்று சொன்னதற்கு மூன்று
காரணங்கள் உண்டு. ரமலானின் இறுதி நேரத்தில் பெருநாளை தொட்டு விடும் தூரத்தில்
இருக்கிற இந்த நேரத்தில் நாம் மிக முக்கியமாக மூன்று விஷயங்களுக்காக கவலைப்பட
வேண்டும். 1, புனிதமான மாதம், அருள் நிறைந்த மாதம், நோன்பின் மாதம், தராவீஹின்
மாதம், குர்ஆனின் மாதம், தானதர்மங்களின் மாதம், இரவு வணக்கத்தின் மாதம், நாம்
செய்த பாவங்களுக்கெல்லாம் அல்லாஹ்விடத்தில் மக்ஃபிரத்தைப் பெற்றுத்தந்த மாதம், நன்மைகளை கணக்கில்லாமல் வாரிவழங்கிய மாதம்,
நம்மையெல்லாம் நன்மையான காரியங்களில் உற்சாகப்படுத்திய மாதம், இத்தனை பாக்கியங்களை
உள்ளடக்கிய மகத்தான மாதம் நம்மை விட்டும் விடைபெறப்போகிறதே என்ற கவலை.
பொதுவாக நம் வாழ்க்கையில் நாம் அதிகம்
நேசிக்கிற அதிகம் பிரியப்படுகிற ஒரு மனிதர் அல்லது ஒரு பொருள் நம்மை விட்டும்
விடைபெறுகிற ஒரு நேரம் நிச்சயம் நாம் நீங்க முடியா கவலையில் உரைந்து போகிற
நேரமாகத்தான் இருக்கும்,இருக்க வேண்டும்.
قال أبو بكرٍ رضي اللهُ عنه ، بعد وفاةِ
رسولِ اللهِ صلَّى اللهُ عليه وسلَّمَ ، لعمرَ : انطلِقْ بنا إلى أمِّ أيمنَ نزورها
. كما كان رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّمَ يزورُها . فلما انتهينا إليها بكَتْ
. فقالا لها : ما يُبكيكِ ؟ ما عندَ اللهِ خيرٌ لرسولِه صلَّى اللهُ عليه وسلَّمَ
. فقالت : ما أبكي أن لا أكون أعلمُ أنَّ ما عند اللهِ خيرٌ لرسولِه صلَّى اللهُ عليه
وسلَّمَ . ولكن أبكي أنَّ الوحيَ قد انقطع من السماءِ . فهيَّجَتْهما على البكاءِ
. فجعلا يبكيانِ معها
நபி ﷺ அவர்களின் வாழ்ந்த
பெண்களில் உம்மு அய்மன் ரலி என்ற பெண்மனியும் உண்டு.என் தாயுக்குப் பிறகு இன்னொரு
தாய் என்று நபி ﷺ அவர்களால்
சொல்லப் பட்டவர்கள்.நபியின் மறைவுக்குப் பிறகு ஹள்ரத் அபூபக்கர் ரலி அவர்களும்
ஹள்ரத் உமர் ரலி அவர்களும் அந்த அன்னையைப் பார்ப்பதற்காக சென்றார்கள்.அப்போது அந்த
அன்னை அழுது கொண்டிருந்தார்கள். அல்லாஹ் விடம் உள்ளவை நபி ﷺ
அவர்களுக்கு சிறந்ததாகத்தானே இருக்கும்.அப்படியிருக்க ஏன் நீங்கள் அழுகிறீர்கள்? என்று அவ்விருவரும் கேட்டார்கள்.அதற்கு அந்த
அன்னை அதை நானும் அறியாமல் இல்லை. இருந்தாலும் நான் இப்போது அழுவது
வானத்திலிருந்து வஹி நின்று விட்டதே என்பதற்காகத்தான் என்றார்கள்.அதைக் கேட்ட
பிறகு அவ்விருவரும் கூட அழ ஆரம்பித்து விட்டார்கள். (முஸ்லிம் ; 2454)
வஹி என்பது அடியார்களுக்கும் அல்லாஹ்வுக்கும்
மத்தியில் இருந்த மாபெரும் ஒரு இணைப்பு, ஒரு தொடர்பு. இந்த தொடர்பு அடியார்களுக்கு
கிடைத்த மிகப்பெரிய பாக்கியம், எனவே தான் அது போய் விட்டதே என்று உம்மு அய்மன் ரலி
அவர்கள் அழுதார்கள்.
لما بعثه رسول الله ﷺ إلى اليمن خرج معه يوصيه، ومعاذ راكب ورسول
الله ﷺ يمشي تحت راحلته، فلما فرغ قال: «يا معاذ
إنك عسى أن لا تلقاني بعد عامي هذا، ولعلك أن تمر مسجدي هذا وقبري فبكى معاذ خشعا لفراق
رسول الله ﷺ،
ஹள்ரத் முஆத் பின் ஜபல் ரலி அவர்களை யமனுக்கு
ஆளுனராக அனுப்பும் நேரத்தில் நபி ﷺ அவர்கள் சில
உபதேசங்களைச் செய்தார்கள்.பிறகு முஆதே! இந்க வருடத்திற்கு பின்னால் என்னை நீ
சந்திக்காமல் கூட போகலாம்.என்னுடைய இந்த மஸ்ஜிதையும் என் கப்ரையும் நீ கடந்து
செல்லலாம் என்றார்கள்.அடுத்து நீ வரும் போது நான் உலகை விட்டும் பிரிந்து விடுவேன்
என்பதை உணர்த்தும் முகமாக அவ்வாறு சொன்னவுடன் நபி ﷺ அவர்களின் பிரிவை
நினைத்து முஆத் ரலி அவர்கள் கண்ணீர் வடித்தார்கள். (ஸஹீஹ் இப்னு ஹிப்பான் ; 647)
எனவே ஒரு பாக்கியமான மனிதரோ ஒரு பொருளோ நம்மை
விட்டும் விடைபெறுகிற போது அந்த கவலை நம் உள்ளத்தை கசக்கிப் பிழிகிறது.அந்த
வகையில் இந்த ரமலான் நமக்கு கிடைத்த ஈடுசெய்ய முடியாத மாபெரும் பாக்கியம் என்பதில்
யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.அந்த பாக்கியமான ரமலான் நம்மை
விட்டும் விடைபெறப் போகிறது. உண்மையான ஈமானுள்ள அத்தனை பேருடைய கண்களும் நிச்சயம்
கண்ணீர் வடிக்கும், உண்மையான பற்றுள்ள அத்தனை பேருடைய உள்ளமும் கலங்கும்.
இந்த நேரத்தில் நமக்கிருக்க வேண்டிய 2 வது கவலை, ஒரு மாதம் முழுக்க நாம் பகல்
காலங்களில் நோன்பு வைத்திருக்கிறோம்,இரவு காலங்களில் நின்று தொழுதிருக்கிறோம். இன்னும்
எத்தனையோ அமல்களைச் செய்திருக்கிறோம். அதுவெல்லாம் என்ன ஆனது? அதன் நிலை என்ன? கபூல் ஆனதா? இல்லையா? என்ற கவலை, அல்லாஹ் அதை
அங்கீகரித்தானா? இல்லையா? என்ற கவலை. இந்த கவலை நன்மை செய்தவர்களுக்குத் தான்
இருக்கும்,ரமலானிலும் நன்மைகளில் கவனம் செலுக்காத நல்லவர்களுக்கு இந்த கவலை
இருக்காது.
பரிட்சை முடிந்து ரிஸல்ட் வருகின்ற நேரம் ரொம்ப
பரபரப்பான நேரம். ரொம்ப பதட்டமான நேரம். ஆனால் அந்த நேரத்திலும் 2 பேருக்கு எந்த
கவலையும் இருக்காது. 1, நல்ல எழுதி நாம் எப்படியும் பாஸ் ஆயிவோம் என்று உறுதியாக
நம்பிக்கை இருப்பவனுக்கு. 2, எதுவுமே எழுதாமல் வெறும் பேப்பரை மட்டும் வைத்து
விட்டு வந்தவனுக்கு. இந்த இரண்டு பேருக்கும் எந்தக் கவலையும் இருக்காது. அதேபோல்
எந்த அமலையும் செய்யாதவங்களுக்கும் கவலை இருக்காது.நிறைய அமல்களை செய்து அந்த
அமல்கள் எல்லாம் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது என்று உறுதியாக தெரிந்தவர்களுக்கும்
கவலை இருக்காது. ஆனால் அவ்வாறு தெரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு நமக்கு இல்லையே
அதனால் நாம் இரண்டுக்கும் மத்தியில் இருக்கிறோம், எனவே நமக்கு நிச்சயம் கபூலிய்யத்
குறித்த கவலை இருக்கும், இருக்க வேண்டும்.
علي رضي الله عنه يقول: (ليت شعري، من المقبول
فنهنيه، ومن المحروم فنعزيه
ஏற்றுக் கொள்ளப்படவர் யார் என்று தெரிந்தால்
அவருக்கு வாழ்த்து சொல்லலாம். நிராகரிக்கப்பட்டவர் யாரென்று தெரிந்தால் அவரை
துக்கம் விசாரிக்கலாம்.ஆனால் யார் ஏற்றுக் கொள்ளப்பட்டவர், யார்
நிராகரிக்கப்பட்டவர் என்று தெரியாதே என்று ஹள்ரத் அலி அவர்கள் கூறுகிறார்கள்.
وكان بعض السلف يظهر عليه الحزن يوم عيد
الفطر، فيقال له: إنه يوم فرح وسرور. فيقول: صدقتم، ولكني عبد أمرني مولاي أن أعمل
له عملاً، فلا أدري أيقبله مني أم لا؟
நம் முன்னோர்களில் சிலர், பெருநாளன்று கவலையோடு
இருப்பார்கள்.இது மகிழ்ச்சியான நாளல்லவா! ஏன் கவலை? என்று கேட்டால், நான் ஒரு அடியான். என்
எஜமானன் ஒரு அமலை செய்யும் படி எனக்கு ஏவினான். நானும் செய்து முடித்து
விட்டேன்.ஆனால் நான் செய்த அந்த அமல் அவன் ஏற்றுக் கொண்டானா? இல்லையா? என்று எனக்கு தெரியாதே! அதனால் தான்
அழுகிறேன் என்று சொல்வார்கள்.
முகஸ்துதியோடு அல்லது இறையச்சமில்லாமல்
செய்யப்படுகின்ற அமல்கள் அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்படாமல் போய் விடலாம்.எனவே
நம் அமல்கள் எந்த நிலையில் இருக்கிறது என்ற கவலை ஒவ்வொருவரின் உள்ளத்திலும்
நிச்சயம் இருக்க வேண்டும்.
3 வது கவலை மிக மிக முக்கியமானது.மிக மிக
பிரதானமானது.ரமலானுடைய இந்த 30 நாளும் பள்ளி நிரம்பி வழிந்தது.தொழுகையாளிகளால்
ஒவ்வொரு நாளும் இறை இல்லம் நிரம்புகிற காட்சி கண்கொள்ளா காட்சியாக இருந்தது.ஆனால்
அந்த கண்கொள்ளா காட்சியை நாம் இழக்கப் போகிறோமே! அந்த மக்களை இந்த பள்ளி இழக்கப் போகிறதே! என்ற கவலை. ரமலான் முழுக்க சுன்னத் தொழுவதற்கு
கூட இடமில்லாத அளவுக்கு மக்களால் நிரம்பிய இந்த பள்ளி மறுபடியும் காலி இடமாக
வெற்றிடமாக ஆகப்போகிறதே என்ற கவலை. இந்த 3 வது கவலை நமக்கு இருக்கக்கூடாத கவலை
தான்,இருந்தாலும் அந்த மாதிரி கவலைப்படுகிற ஒரு நிற்பந்த நிலைக்கு நாம்
தள்ளப்பட்டிருக்கிறோம்,
நம் சமுதாயத்தை பிடித்திருக்கிற மிகப்பெரிய
பினி, மிகப்பெரிய சனி,
மிகப்பெரிய முஸீபத் என்னவென்றால், ரமலானில் மட்டும் அமல் செய்வது, ரமலானில்
மட்டும் தொழுவது. ரமலானில் மட்டும் பள்ளிக்கு வருவது. இது யார் காட்டித்தந்த
வழிமுறை? அல்லாஹ்
சொன்னானா? ரசூல்
சொன்னார்களா? இல்லை
ஸஹாபாக்கள் காட்டித்தந்தார்களா? இல்லை ரமலானில் மட்டும் தொழுதால் போதும், ரமலானில் மட்டும் தான் தொழுகை கடமை மற்ற
காலங்களில் இல்லை என்று அல்லாஹ்வே நமக்கு நேரடியாக வஹி அறிவித்தானா?
ரமலான் என்பது பாவங்களைக் கழுகிற மாதம் தான்.
நான் இல்லையென்று சொல்ல வில்லை. மற்ற காலங்களில் நாம் செய்த குற்றங்களை, பாவங்களை நினைத்து அழுது பாவமன்னிப்பு தேடுகிற
போது அந்த பாவங்கள் வேண்டுமானால் மன்னிக்கப்படலாமே தவிர, நாம் மற்ற காலங்களில் விட்டத் தொழுகைகளை களா
செய்தாலே தவிர ஒரு போதும் ரமலானை வைத்து சரிகட்டி விட முடியாது.நாம் விட்ட
தொழுகைகளுக்கு நாம் அல்லாஹ்விடத்தில் பதில் சொல்லியே ஆக வேண்டும்.அதில் எந்த
சந்தேகமும் இல்லை.
فقال: سَمِعتُ رسولَ اللهِ صلَّى اللهُ
علَيه وسلَّم يقولُ: إنَّ أولَ ما يُحاسَبُ به العبدُ يومَ القيامةِ
من عملِه صلاتُه ، فإن صَلُحَتْ فقد أَفْلَحَ وأَنْجَح ، وإن فَسَدَتْ فقد خاب وخَسِرَ
، فإن انْتَقَص من فريضتِه شيئًا ، قال الربُّ تبارك وتعالى : انْظُروا هل لعَبْدِي
من تَطَوُّعٍ فيُكَمِّلُ بها ما انتَقَص من الفريضةِ ، ثم يكونُ سائرُ عملِه
على ذلك
மறுமையில் ஒரு அடியான் முதன்முதலாக தொழுகையை
குறித்துத் தான் விசாரிக்கப்படுவான்.அந்த தொழுகை சரியாக இருந்தால் அவன் வெற்றி
பெற்று விடுவான்.அது சரியாக இல்லையென்றால் அவன் நஷ்டமடைந்து விடுவான்,
கைசேதப்படுவான் என்று நாயகம் ஸல் அவர்கள்
கூறினார்கள். (திர்மிதி ; 413)
எனவே மறுமையில் நாம் வெற்றி பெறுவதும்
தோல்வியடைவதும் தொழுகையைக் கொண்டு தான்.அந்த தொழுகையில் கவனம்
செலுத்துவோம்.ரமலானில் மட்டும் தான் என்ற மோசமான நிலையைக் கைவிடுவோம்.எல்லாக்
காலங்களிலும் படைத்தவனை மறவாமல் நின்று வழிபட்டு வாழும் நஸீபை அல்லாஹ் தருவானாக
Jazakallah hajarath nalla thagavalgal
ReplyDeleteUngal pathiyu anaithu sirapaga ullathu .Allah ungal intha seyalai yetrukolvanaga .ilmu nanathai athiga paduthuvanaga.
மாஷா அல்லாஹ் அல்லாஹ் தங்களின் இந்த செயலால் உங்களை சிறப்பாக்குவானாக ஆமீன்
Deleteஅல்ஹம்துலில்லாஹ்... சிறந்த குறிப்புகள்.பயன் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
ReplyDeleteவாழ்த்துக்கள். ஜஸாகல்லாஹு கைரன்.
ஆமீன்
ReplyDeleteماشاء الله تبارك الله عالم الكرام
ReplyDelete