Pages

Pages

Thursday, August 27, 2020

பணிவின் மூலம் ஒற்றுமையை வளர்ப்போம்

 

சமூகத்தில் ஒற்றுமை மேம்படுவதற்கு இஸ்லாம் காட்டித்தருகின்ற வழிகாட்டுதல்களை ஒன்றன் பின் ஒன்றாக நாம் பார்த்து வருகிறோம். ஒற்றுமை சிதைந்து போனதற்கும் ஒற்றுமை இல்லாமல் போனதற்கும் என்ன காரணம் என்பதையும் நாம் அலசி வருகிறோம்.அந்த வகையில் ஒற்றுமையை சிதைக்கக்கூடிய ஆபத்தான விஷயங்களில் ஒன்று தன்னை உயர்வாக கருதிக் கொள்கிற குணம்.

உலகத்தில் அநேக மனிதர்களிடம் இந்த குணம் இருப்பதை நாம் பார்க்கலாம். நான் தான் பெரிய ஆள், என்னை மிஞ்சிய ஆள் இல்லை. நான் தான் பெரிய அறிஞர்.என்னை மிஞ்சிய அறிஞர் இல்லை. நான் பெரிய வணக்கசாலி. என்னை மிஞ்சிய வணக்கசாலி இல்லை. இப்படி அறிவை வைத்தும் அழகை வைத்தும் ஆன்மீகத்தை வைத்தும் பொருளாதாரத்தை வைத்தும் குடும்ப பாரம்பரியத்தை வைத்தும் சமூகத்தில் தனக்கு இருக்கிற செல்வாக்கை வைத்தும் ஒருவருக்கொருவர் பெருமைப்பட்டுக் கொள்கிற சூழ்நிலையை நாம் பார்க்கிறோம்.இது ரொம்ப ஆபத்தான குணம். எப்போது ஒருவன் தான் உயர்ந்தவன் என்று கருத முற்படுகிறானோ அப்போதே மற்ற அனைவரையும் மட்டம் தட்ட ஆரம்பித்து விடுவான்.நான் பெரிய ஆளு என்று நினைக்கிற அடுத்த கனமே மற்றவர்களெல்லாம் ஒன்றுமே இல்லை என்ற உணர்வை அது விதைத்து விடுகிறது.இதனால் ஏற்பட்ட விளைவு என்னவென்றால், நான் அவனோடு சேர வேண்டுமா? நான் அந்த கூட்டத்தோட இணைய வேண்டுமா? என்று சிந்திக்க ஆரம்பித்து விடுகிறான். இந்த சிந்தனை தான் ஒற்றுமை சிதைந்து போக வழிவகுக்கிறது.

இன்றைக்கு நடக்கக்கூடிய பல்வேறு பிரச்சனைகளுக்கும் சமூக அவலங்களுக்கும் குறிப்பாக ஒற்றுமை இல்லாமல் போனதற்கும் அடிப்படைக் காரணம் தன்னை உயர்வாக நினைப்பதும் பிறரை மட்டம் தட்டுவதும் தான்.அதனால் தான் இஸ்லாம் பெருமை வேண்டாம் என்று சொல்கிறது.அது அறியாமைக் காலத்து மோசமான குணம் என்று இஸ்லாம் எச்சரிக்கிறது.

ما ذكره ابن بطال في "شرح صحيح البخاري" (1/87) بقوله: "روى الوليد بن مسلم، عن أبي بكر، عن ضمرة بن حبيب، قال: كان بين أبى ذر وبين بلال محاورة، فعيره أبو ذر بسواد أمه، فانطلق بلال إلى رسول الله - صلى الله عليه وسلم -، فشكي إليه تعييره بذلك، فأمره رسول الله - صلى الله عليه وسلم - أن يدعوه، فلما جاءه أبو ذر، قال له رسول الله - صلى الله عليه وسلم - : شتمت بلالاً وعيَّرته بسواد أمه؟ قال: نعم، قال رسول الله - صلى الله عليه وسلم -: تمت ما كنت أحسب أنه بقى في صدرك من كبر الجاهلية شيء، فألقى أبو ذر نفسه بالأرض، ثم وضع خده على التراب، وقال: والله لا أرفع خدي من التراب حتى يطأ بلال خدي بقدمه، فوطأ خده بقدمه

ஒருமுறை அபூதர் ரலி அவர்களுக்கும் பிலால் ரலி அவர்களுக்கும் சிறு பிரச்சனை ஏற்பட்டு, அபூதர் ரலி அவர்கள் பிலால் ரலி அவர்களைப் பார்த்து தீண்டாமையின் ஒரு அங்கமாகக் கருதப்படும் நிற அடிப்படையிலான விஷயத்தைச் சொல்லி கருப்பியின் மகனே! என்று கூறி விட்டார்கள்.இதனால் வருத்தமுற்ற பிலால் ரலி அவர்கள் அதை நபியிடம் சொல்ல, நபி அவர்கள் அபூதர் ரலி அவர்களை அழைத்து வரச்சொன்னார்கள். அவர்கள் வந்ததும், இவரைப் பார்த்து அப்படி ஒரு வார்த்தை சொன்னாயா? என்று கேட்டார்கள். ஆம் என்று அவர் சொன்னதும். அறியாமைக் காலத்தில் இருந்த அந்த பெருமை இன்னும் உன் உள்ளத்தில் மிச்சம் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன் என்றார்கள்.

தவறு என்பது  மனித இயல்பு.சின்ன சின்ன தவறுகள் ஸஹாபாக்கள் வாழ்க்கையில் நடந்திருக்கிறது.அவர்கள் செய்திருக்கிறார்கள். ஆனால் அந்த தவறுகளுக்குப் பிறகு அவர்கள் நடந்து கொண்ட விதம் ஆச்சரியமானது,வியப்பானது. இதற்குப் பிறகு என்ன நடந்தது தெரியுமா

தான் செய்த குற்றத்தை உணர்ந்த அபூதர் ரலி அவர்கள், பிலால் ரலி அவர்கள் தன்னை மன்னிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கீழே படுத்துக் கொண்டு தன் கன்னத்தின் மீது பிலால் ரலி அவர்கள் தன் காலை வைக்கும் வரை நான் எழுந்திருக்க மாட்டேன் என்றார்கள். ஹள்ரத் பிலால் ரலி அவர்கள் எவ்வளவோ மறுத்தும் மன்னித்து விட்டதாக சொல்லியும் அதை ஏற்றுக் கொள்ளாத அபூதர் ரலி அவர்கள் பிலால் ரலி அவர்களின் பாதம் தன் மீது பட்ட பிறகு எழுந்திருத்தார்கள். (புகாரி விரிவுரை)

ஜாஹிலிய்யா காலத்தில் குலங்களை வைத்தும் கோத்திரங்களை வைத்தும் நிறங்களை வைத்தும் மொழிகளை வைத்தும் தங்களுக்குள் பாகுபாடுகளை பார்த்துக் கொண்டிருந் தார்கள். இஸ்லாம் வந்து அந்த பாகுபாடுபடுகளை அகற்றியது. ان ربكم واحد وان اباكم واحد  என்று சொல்லி உலகத்தில் பிறந்த அத்தனை பேரும் சமம்.யாரும் யாரை விட உயர்ந்தவரும் அல்ல தாழ்ந்தவரும் என்ற சமத்துவத்துவத்தை அறிமுகப்படுத்தியது. தொழுகை நோன்பு ஹஜ் போன்ற வணக்கங்கள் வழியாகவும் இஸ்லாம் பாகுபாடுகளைக் கடந்த மார்க்கம் என்பதை உலகிற்கு உணர்த்திக் கொண்டே இருந்தது. அதனால் இங்கே அந்த ஸஹாபி தன் சக தோழரை அவரது நிறத்தை வைத்து பரிகாசம் செய்ததை ஏற்றுக் கொள்ளாத நபி அவர்கள் அதை கண்டித்தார்கள்.

எனவே இஸ்லாம் சமத்துவத்தைப் போதிக்கிற மார்க்கம். பாகுபாடுகளை முளையிலேயே கிள்ளி எறிகிற மார்க்கம்.ஒரு முஸ்லிம் எதை வைத்தும் தான் உயர்ந்தன் என்று காட்டிக் கொள்ள விரும்பாத மார்க்கம்.

கஹ்ஃப் சூராவில் கூறப்பட்டுள்ள மூஸா அலை ஹிள்ர் அலை அவர்களின் வரலாறு மிகவும் பிரபல்யமானது.மூஸா அலை ஹிள்ர் அலை அவர்களை சந்தித்து உங்களிடம் மார்க்க ஞானங்களைக் கற்றுக் கொள்வதற்கு நான் உங்களோடு வரட்டுமா என்று கேட்டார்கள்.

மூஸா அலை அவர்கள் ஒரு நபி, ஹள்ரத் ஹிளர் அலை அவர்கள் யார் என்பதில் இமாம்களுக்கு மத்தியில் கருத்து வேற்றுமை இருக்கிறது.சில இமாம்கள் அவர்கள் நபி என்று கூறுகிறார்கள். சில இமாம்கள் அவர்கள் இறைநேசர் என்று கூறுகிறார்கள். இறைநேசர் அல்லாஹ்விடம் மிக உயர்ந்தவராக இருந்தாலும் ஒரு நபியை விட கல்வியிலோ அந்தஸ்திலோ அவரால் உயரத்திற்கு சென்று விட முடியாது.சில இமாம்கள் சொல்வதைப் போன்று அவர்கள் ஒரு வேலை நபியாக இருந்தாலும் மூஸா நபியை விட சிறந்தவர்கள் அல்ல. மூஸா நபிக்கென்று ஒரு சமூகம் இருக்கிறது.ஒரு வேதம் இருக்கிறது. ஒரு ஷரீஅத் இருக்கிறது.கலீமுல்லாஹ் என்று இறைவனால் புகழ்ந்து கூறப்பட்டவர்கள்.எல்லாவற்றுக்கும் மேலாக உலுல் அஜ்ம் என்ற சிறப்புப் பெயரைப் பெற்ற நபிமார்களில் ஒருவர். அத்தகைய மூஸா நபி ஹிளர் அலை அவர்களிடம் நீங்கள் எனக்கு கற்றுத்தர வேண்டும் என்று சொன்னதற்கு காரணம் அது அல்லாஹ்வுடைய உத்தரவு. அதைக் கேட்டதும் ஹிள்ர் அலை அவர்கள் என்னுடன் உங்களால் பொறுமையாக இருக்க முடியாது என்று சொன்னார்கள்.  அவர்கள் சொன்னதைப் போன்றே அவர்களால் பொறுமையாக இருக்க முடியாமல் போனது. அவர்கள் செய்கிற ஒவ்வொரு காரியத்திற்கும் விளக்கம் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். அதனால் இனிமேல் உங்களால் என்னோடு பயணிக்க முடியாது என்று சொல்லி விட்டு பிரிந்தார்கள்.

இந்த வரலாற்று பிண்ணனியில் ஒரு செய்தி உண்டு. ஒரு நபியை அவரை விட அந்தஸ்தில் குறைந்த இறைநேசரிடம் அல்லது ஒரு நபியிடம் பாடம் படிக்க வேண்டும் என்று இறைவன் ஏன் அனுப்ப வேண்டும்? கல்விக்கு வயதோ அந்தஸ்தோ முக்கியமல்ல என்றிருந்தாலும் இப்படி ஒரு நிகழ்வை ஏற்படுத்தி அதை குர்ஆனில் ஒரு முழு சூராவின் மூலம் விரிவாக இறைவன் சொன்னதில் பல பாடங்கள் உண்டு. அதில் ஒன்று மூஸா நபியை ஹிள்ர் அலை அவர்களிடம் அல்லாஹ் அனுப்பியதற்காகன காரணம்.

 

سَمِعْتُ أُبَيَّ بنَ كَعْبٍ يقولُ: سَمِعْتُ رَسولَ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ يقولُ: قَامَ مُوسَى عليه السَّلَامُ خَطِيبًا في بَنِي إسْرَائِيلَ فَسُئِلَ: أَيُّ النَّاسِ أَعْلَمُ؟ فَقالَ: أَنَا أَعْلَمُ، قالَ فَعَتَبَ اللَّهُ عليه إذْ لَمْ يَرُدَّ العِلْمَ إلَيْهِ، فأوْحَى اللَّهُ إلَيْهِ: أنَّ عَبْدًا مِن عِبَادِي بمَجْمَعِ البَحْرَيْنِ هو أَعْلَمُ مِنْكَ

ஒரு நாள் மூஸா அலை அவர்கள் மக்களுக்கு உரை நிகழ்த்திக் கொண்டிருக்கிற போது மக்களில் மிகப்பெரிய அறிஞர் யார் என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர்கள் நான் என்று கூறி விட்டார்கள். அவர்கள் சொன்னது உண்மையாக இருந்தாலும் தனக்கு கிடைத்த அந்தஸ்தை இறைவன் அளவில் சேர்க்காமல் தன் பக்கம் இணைத்துக் கூறியதால் உங்களை விட சிறந்த ஒரு அறிஞர் கடலுக்கு மத்தியில் இருக்கிறார். அவரை சென்று பாருங்கள் என்று கூறி இறைவன் அனுப்பி வைத்தான். (முஸ்லிம் ; 2380)

பொதுவாக கல்வியிலும் சரி அந்தஸ்திலும் சரி மனிதர்களில் நபிமார்களுக்குத்தான் முதல் இடம். அந்த அடிப்படையில் மூஸா அலை அவர்கள் சொன்னது பிழையில்லை என்றிருந்தாலும் அவர்கள் சொன்ன அந்த வார்த்தை இறைவனுக்கு பிடிக்க வில்லை. அதனால் உங்களை விட கல்வியில் சிறந்த உங்களுக்கு பாடம் கற்றுத்தரும் அளவுக்கு கல்வியில் சிறந்த ஒருவர் உலகத்தில் இருக்கிறார் என்பதை மூஸா நபிக்கு உணர்த்த வேண்டும் என்பதற்குத்தான் இறைவன் இப்படியொரு நிகழ்வை ஏற்படுத்தினான்.

இதன் மூலம் ஒரு நபியை குறைப்படுத்து நம் நோக்கமல்ல, அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.அவர்கள் இருக்கும் அந்தஸ்துக்கு அந்த வார்த்தை உகந்ததல்ல.

 حسنات الابرار سيات المقربين    

நல்லோர்கள் செய்யும் சில அனுமதிக்கப்பட்ட காரியங்கள் இறை நெருக்கத்தைப் பெற்ற இறைநேசர்களைப் பொறுத்த வரை அது குற்றங்களாக ஆகி விடும் என்று சொல்வார்கள்.

இதன் பொருளை விளங்குவதற்கு ஒரு உதாரணம் ; மகிழ்ச்சிக்காக உள்ளத்திற்கு ஒரு அமைதி கிடைக்க வேண்டும் என்பதற்காக இருக்கிற பிரச்சனைகளை மறந்து கொஞ்சம் ஓய்வு எடுப்பதற்காக இன்றைக்கு சுற்றுலா செல்கிறோம். மார்க்கம் அனுமதித்த விதத்தில் பாவங்கள் இல்லாத வகையில் செல்கின்ற சுற்றுலா இஸ்லாத்தின் பார்வையில் தவறல்ல. அது அனுமதிக்கப்பட்டது தான். ஆனால் அதை இறை நெருக்கத்தைப் பெற்ற ஒருவரோ அல்லது ஒரு நபியோ (எந்த நபியும் செய்ததில்லை) அவ்வாறு சுற்றுலா சென்றால் அது குற்றமாகி விடும். எனவே ஒரே காரியம், அதை செய்யும் நபர்களைப் பொறுத்து அதன் நிலை மாறுகிறது.

நான் தான் அறிஞன் என்று சொல்வது சாதாரண மனிதர்களைப் பொறுத்த வரை அது பெரிய விஷமல்ல. ஆனால் மாபெரும் அந்தஸ்தில் இருக்கிற மூஸா நபியைப் பொறுத்த வரை அது பெரிய விஷயம்.எனவே தான் இறைவன் அதை அவர்களுக்கு உணர்த்தும் விதத்திலும் சமூகத்திற்கு பாடம் கற்பிக்கும் விதத்திலும் இந்நிகழ்வை ஏற்பாடு செய்தான்.

நான் தான் கல்வியில் உயர்ந்தவர். அறிவில் என்னை விட உயர்ந்தவர் யாருமில்லை என்று சொல்வது நபிமார்களுக்கே அழகல்ல என்றால் நமக்கு எம்மாத்திரம்.ஆனால் இன்றைக்கு நம்மில் சிலர் எங்களுக்குத்தான் எல்லாம் தெரியும்.மற்றவர்களுக்கெல்லாம் எதுவும் தெரியாது. நாங்க மட்டும் தான் சத்தியத்தில் இருக்கிறோம்.மற்றவர்களெல்லாம் அசத்தியத்தில் இருக்கிறார்கள். நாங்க மட்டும் தான் சரியான கொள்கையில இருக்கிறோம். மற்றவர்களெல்லாம் கொள்கை தவறி இருக்கிறார்கள். நாங்க தான் உண்மையான முஸ்லிம்கள். மற்றவர்களெல்லாம் காஃபிர்கள். அவர்களுக்கு நாங்க ஸலாம் சொல்ல மாட்டோம். அவங்க பின்னால நின்று நாங்க தொழ மாட்டோம் என்று சொல்லி தங்களை உயர்படுத்திக் கொண்டு மற்றவர்களை மட்டம் தட்டிக் கொண்டிருக்கிறார்கள். நாம் இங்கே சொல்லிக் கொள்ளலாம். உண்மையில் அல்லாஹ்விடம் உயர்ந்தவர் யாரென்று இறைவனுக்குத்தான் தெரியும்

لا يسخر قوم من قوم عسي ان يكونوا خيرا منهم

ஒரு கூட்டம் இன்னொரு கூட்டத்தை கேலி செய்ய வேண்டாம். அவர்கள் இவர்களை விட சிறந்தவர்களாக இருக்கலாம். (அல்குர்ஆன் : 49 ; 11)

பெரும் பெரும் மேதைகள் கூட தங்களை உயர்ந்தவர்களாக காட்டிக் கொண்டது இல்லை என்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது.

 

أن عليا - كرم الله وجهه - سئل عن شيء وهو على المنبر ؟ فقال : لا أدري : فقيل : كيف تقول لا أدري وأنت طلعت فوق المنبر ؟ فقال - رضي الله عنه - : إنما طلعت بقدر علمي ، ولو طلعت بمقدار جهلي لبلغت السماء

ஹள்ரத் அலி அவர்கள் மிம்பரில் நின்று கொண்டிருக்க போது ஒருவர் ஒரு கேள்வி கேட்டார். எனக்குத் தெரியாது என்று கூறி விட்டார்கள். எங்கள் எல்லோருக்கும் மேலாக மிம்பரில் காட்சி தரும் நீங்கள் தெரியாது என்று சொல்லலாமா என்று கேட்கப்பட்டது. அப்போது அவர்கள், எனக்கிருக்கும் அறிவின் அளவைக் கொண்டு தான் நான் உங்களை விட இந்தளவு உயர்ந்து நிற்கிறேன். எனக்கிருக்கும் அறியாமையை கணக்கிட்டு அதன் அளவு உயர்ந்து செல்ல வேண்டுமென்றால் நான் வானத்தைத் தொட வேண்டும். அந்தளவு எனக்கு அறியாமை இருக்கிறது என்றார்கள்.

ஹள்ரத் அலி அவர்களின் கல்வி அறிவு நமக்கெல்லாம் தெரியும்.கல்வியின் தலைவாயில் என்று பெருமானாரால் புகழாரம் சூட்டப்பட்டவர்கள். எந்த சிக்கலான கேள்விக்கும் சற்றும் யோசிக்காமல் பதில் சொல்லும் அளவு மிகப்பெரிய கல்விக்கடல் என்பதற்கு எண்ணற்ற வரலாற்றுச் சான்றுகள் உண்டு.ஆனால் அவர்கள், எனக்குத் தெரிந்ததை விட தெரியாதது அதிகம் என்று சொல்கிறார்கள்.அத்தனை பெரிய கல்விக்கடலாக இருந்தாலும் கொஞ்சம் கூட பெருமையை அவர்களிடத்தில் பார்க்க முடியாது.

وقال عبد الرحمن بن أبي ليلى وهو من كبار التابعين ومن أئمة الدين: "أدركتُ عشرين ومائة من الأنصار من أصحاب رسول الله صلى الله عليه وسلم، يُسأل أحدهم المسألة فيردها إلى هذا، وهذا إلى هذا، حتى ترجع إلى الأول منهم، ما منهم من أحد إلا ود أن أخاه كفاه الفتيا

 

 

அப்துர்ரஹ்மான் என்ற தாபிஇ சொல்கிறார்கள். நான் என் காலத்தில் 120 ஸஹாபாக்களைப் பார்த்திருக்கிறேன். ஒரு கேள்வி கேட்கப்பட்டால் அவர்களில் யாரும் உடனே பதில் சொன்னதில்லை. ஒருவர் இன்னொருவரை கை காட்ட்டுவார். அவர் இன்னொரு ஸஹாபியை அடையாளம் காட்டுவார். இப்படியே மாறி மாறி கடைசியாக ஆரம்பமாக கேள்வி கேட்கப்பட்ட அந்த ஸஹாபியே அடையாளம் காட்டப்படுவார். அவர்களில் அனைவரும் மார்க்கத் தீர்ப்பு வழங்குவதில் தன்னை விட மற்றவர்கள் தான் பொறுத்தமானவர்கள் என்றே கருதக்கூடியவர்களாக இருந்தார்கள்.

இமாம்களுடைய வாழ்க்கையிலும் இந்த பணிவை நாம் பார்க்கலாம். இமாம் அபூஹனீஃபா ரஹ், இமாம் மாலிக் ரஹ், இமாம் ஷாஃபிஈ ரஹ், இமாம் அஹ்மத் ரஹ் என்ற நாற்பெரும் இமாம்கள் பணிவின் உச்சமாக திகழ்ந்தார்கள். இதில் ஹள்ரத் அபூஹனீஃபா ரஹ் அவர்களும் இமாம் மாலிக் ரஹ் அவர்களும் சம காலத்தில் வாழ்ந்தவர்கள். ஹள்ரத் இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்களும் இமாம் அஹ்மத் ரஹ் அவர்களும் சம காலத்தில் வாழ்ந்தவர்கள். நான்கு இமாம்களுக்குள்ளும் மார்க்க விஷயத்தில் எத்தனையோ கருத்துவேறுபாடுகள் உண்டு. பெண்ணைத் தொட்டால் ஒழு முறிந்து விடும் என்று ஒரு இமாம் சொல்வார்கள். ஒழு முறியாது என்று இன்னொரு இமாம் சொல்வார்கள்.நண்டு சாப்பிடுவது கூடும் என்று ஒரு இமாம் சொல்வார்கள்.அது மக்ரூஹ் என்று இன்னொரு இமாம் சொல்வார்கள். தொழுகையில் பிஸ்மில்லாஹ்வை சத்தமிட்டு ஓத வேண்டுமென்று ஒரு இமாம் சொல்வார்கள். இன்னொரு இமாம் மௌனமாக ஓத வேண்டுமென்று சொல்வார்கள். ஒரு இமாம் சுன்னத் என்று சொன்னதை இன்னொரு இமாம் வாஜிப் என்று சொல்வார்கள். ஒரு இமாம் மக்ரூஹ் என்று சொன்னதை இன்னொரு இமாம் ஹராம் என்று சொல்வார்கள். இப்படி எத்தனையோ கருத்து மோதல்கள் உண்டு. குர்ஆனையும் ஹதீஸையும் அவர்கள் பார்த்த விதம்.ஆய்வு செய்த விதம், குர்ஆனையும் ஹதீஸையும் புரிவதற்கு அவர்கள் எடுத்துக் கொண்ட அனுகுமுறை. அது தான் அவர்களுக்கு மத்தியில் கருத்துவேறுபாடுகளை ஏற்படுத்தியது.

அவர்களுக்குள் அத்தனை பெரிய கருத்துவேறுபாடுகள் இருந்த போதும் ஒருவர் இன்னொருவரை குறை சொன்னதில்லை. அவர்களுக்கு பின்னால் நின்று தொழுவது கூடாது என்று சொன்னதில்லை.நான் தான் ஹக்கில் இருக்கிறேன். மற்றவர்கள் பாதிலில் இருக்கிறார் என்று முழங்கியதில்லை.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அவர்களில் ஒருவர் இன்னொருவரை புகழ்ந்ததாகத்தான் வரலாறு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

நான்கு இமாம்களில் ஹள்ரத் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களும் இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்களும் சம காலத்தில் வாழ்ந்தவர்கள். (இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி 150 – 204, இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி 164 – 241)

இரண்டு பேருக்கும் இடையில் இருந்த கருத்துவேறுபாடுகள் நமக்கு நன்றாகவே தெரியும்.ஆனால் அந்த கருத்துவேறுபாடுகளைக் கடந்து அவர்களுக்கிடையே இருந்த மதிப்பும் மரியாதையும் நட்பும் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இன்று நம்மில் குறிப்பிட்டும் சொல்லும்படியான ஒரு சிலரிடத்தில் ஷாஃபி ஹனஃபி என்று சொல்லி பிரிவினை வாதம் பேசிக் கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். ஆனால் அந்த மத்ஹபுகள் உருவாகக் காரணமாக இருந்த அந்த இமாம்கள் எந்தளவு ஒற்றுமையாக இருந்திருக்கிறார்கள் என்பதை அவர்களின் பரிசுத்த வரலாறு நமக்கு படம் பிடித்துக் காண்பிக்கிறது.

 

 قال الشافعي عن الإمام أحمد ما في بغداد أفقه ولا أورع ولا أعلم من أحمد،

இமாம் அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்) அவர்களைப் பற்றி இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் ; பக்தாத் மாநகரில் இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்களை விட நன்கு கல்விஞானம் பெற்ற மிகப் பேனுதலுள்ள சட்ட நுனுக்கங்களை நன்கு தெரிந்த வேறு எவரும் இல்லைஎன்று கூறுகிறார்கள்.

وقال أحمد عن الشافعي: لقد كان الشافعي مثل الشمس للدنيا، ومثل العافية للبدن

இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களைப் பற்றி இமாம் அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்) அவர்கள் ; இந்த பூமிக்கு சூரியனைப் போன்றும் உடலுக்கு ஆரோக்கியத்தைப் போன்றும் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் இருக்கிறார்கள் என்று குறிப்பிடுகிறார்கள்.

قال عنه الإمام أحمد بن حنبل: " ولولا الشافعي ما عرفنا فقه الحديث، وكان الفقه مقفلًا على أهله حتى  فتحه الله بالشافعي

இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள்  மட்டும் இல்லையென்றால் ஹதீஸிலிருந்து ஆய்வு செய்யக்கூடிய மார்க்கச் சட்ட அறிவை நாங்கள் அறிந்திருக்க மாட்டோம்.ஃபிக்ஹின் வாசல் மூடப்பட்டிருந்தது. அதன் கதவை அல்லாஹ் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் மூலம் தான் திறந்தான்என்று அஹ்மத் (ரஹ்) அவர்கள் கூறுவார்கள்.

فجاء شاب اسمه إسحاق بن راهوية ـ وكان من الطلبة المتحمسين الذين يطلبون العلم ـ والتقى بأحمد بن حنبل، وهم أصدقاء، فقال له أحمد بن حنبل: تعال حتى أُرِيك رجلًا لم تر عينك مثله قط، ليس هناك مثله في الدنيا، وأخذ بيده حتى أجلسه في حلقة الشافعي

ஒரு நாள் இஸ்ஹாக் பின் ராஹவைஹி (ரஹ்) அவர்கள் அஹ்மத் பின் ஹம்பில் (ரஹ்) அவர்களை சந்திப்பதற்கு வந்தார்கள்.அப்போது அவர்கள் ; இது வரை உன் கண்கள் கண்டிராத உலகில் அவரைப் போன்று வேறு எவரும் இல்லை என்று சொல்லத்தக்க ஒரு மாமனிதரை உனக்கு காட்டுகிறேன் என்று சொல்லி இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களை அடையாளம் காட்டினார்கள்.

அதே போன்று இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களும் இமாம் மாலிக் (ரஹ்) அவர்களும் சம காலத்தில் வாழ்ந்தவர்கள். (இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி 93 – 179, இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி 150 – 204) இவர்களுக்கு மத்தியில் இருந்த உறவும் இப்படித்தான் வியப்பைத் தந்தது.

 

جاء تلميذ الامام الشافعي يتهادى بين طريقين يقول لإمام دار الهجرة الامام “مالك” أن الشافعي يقرئك السلام  فرد عليه السلام وقال الامام مالك: “اذا أردت العلم النفيس فعليك بالشافعي محمد ابن ادريس”، ولما وصل التلميذ الى الامام الشافعي قص عليه القصة فرد عليه الامام: “عد الى الامام مالك وقل له: كيف ذلك وفي المدينة الامام ابن مالك

இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களின் மாணவர் ஒருவர் இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடத்தில் சென்று ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் உங்களுக்கு ஸலாம் சொன்னார்கள்.மார்க்க அறிவைப் பெற்றுக் கொள்ள என்னை உங்களிடம் அனுப்பி வைத்தார்கள் என்று கூறினார். அதற்கு மாலிக் (ரஹ்) அவர்கள் ; தரமான கல்வி உனக்கு வேண்டுமென்றால் நீ இமாம் ஷாஃபியிடம் செல் என்றார்கள்.இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களிடம் அந்த மாணவர் வந்து இதைச் சொன்ன போது, இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடமே நீ திரும்பிச் செல்! மதீனாவில் இமாம் மாலிக் இருக்கும் போது நீ என்னிடம் எப்படி வரலாம் என்று இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

والإمام الشافعي تتلمذ على الإمام مالك بالمدينة المنورة، وحفظ كتاب الموطأ حفظًا وهو صغير، وكان الشافعي يقول: إنني لا أعلم بعد القرآن كتابًا أعظم ولا أصح من الموطأ، وهذا قبل أن يوجد البخاري ومسلم، ومع ذلك يظل الموطأ كتابًا عظيمًا

இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் மாலிக் (ரஹ்) அவர்களின் மாணவராக இருந்தார்கள்.மாலிக் (ரஹ்) அவர்கள் எழுதிய முஅத்தா என்ற கிரந்தத்தை முழுமையாக மனனம் செய்தவர்களில் ஒருவராகவும் இருந்தார்கள். புகாரி கிதாபு வருவதற்கு முன்பு எழுதப்பட்ட முஅத்தாவைக் குறித்து இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் ; குர்ஆனுக்கு அடுத்து முஅத்தாவை விட மிகச் சரியான மிக உயர்ந்த கிதாபை நான் அறிய வில்லை என்று கூறுகிறார்கள்.

قال الإمام محمد بن إدريس الشافعي: «من أراد أن يتبحر في الفقه فهو عيال على أبي حنيفة، كان أبو حنيفة ممن وُفق له الفقه». ».

ஒருவர் ஃபிக்ஹின் ஆழத்தை அடைய வேண்டுமென்றால் அவர் இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்களிடத்தில் தேவையாக வேண்டும். இறைவனால் ஃபிக்ஹ் ஞானத்தை முழுமையாக வழங்கப்பட்டவர் இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்களாகும் என்று இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

இப்படி வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நம் முன்னோர்களான இமாம்களை நாம் பின்பற்ற வேண்டும்.மார்க்க சட்டங்களில் அவர்களை முன்னோடிகளாக எடுத்துக் கொண்டதைப் போல அவர்களின் இந்த ஒற்றுமையிலும் நாம் அவர்களை முன்னோடிகளாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இன்றைக்கு உலகில் இறைவனின் மேலான ஷரீஅத்தைப் பின்பற்றி சத்தியத்தின் இருப்பிடமாக நாம் இருந்தாலும் நம்மிடையே ஏற்பட்டிருக்கும் பிழவுகளாலும் பிரிவுகளாலும் தான் நாம் பலவீனம் கண்டிருக்கிறோம். நம் உரிமைகளைக் கூட ஒழுங்காக பெற முடியாத துற்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். இந்நிலை மாற வேண்டும் என்றால் முஸ்லிம்களாகிய நாம் நம் கொள்கைகளிலும் மார்க்க சட்டங்களிலும் உள்ள கருத்து வேறுபாடுகளை மறந்து ஓரணியில் நிற்க வேண்டும்,பிரிவினைகளைக் கடந்து நாம் ஒன்றாக கரம் கோர்க்க வேண்டும்.பிறரை தாழ்வாக கருதாமல் எல்லோரையும் மதித்துப் பழக வேண்டும். கடந்த காலம் கசப்பாக இருந்தாலும் இனி வரும் காலம் இனிப்பாக இன்ஷா அல்லாஹ் மாறும். மாற வேண்டும். அல்லாஹ் தவ்ஃபீக் செய்வானாக     

 

 


No comments:

Post a Comment