Pages

Pages

Thursday, September 10, 2020

இஸ்லாத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டும் அதற்கான பதிலும்

 


         (புல்வாமா தாக்குதல் நடந்த போது பேசிய ஜும்ஆ உரை)

ஒரு வாரமாகவே ஒரு விதமான பதட்டமும் பரபரப்பும் நிலவி வருகிறது. காரணம் இந்தியாவை மட்டுமல்ல உலகத்தையே உலுக்கிய காஷ்மீர் பகுதியில் நடந்த அந்த பயங்கரமான நிகழ்வு.காஷ்மீர் மாநிலம் புல்வாமா என்ற இடத்தில் நம் நாட்டைச் சேர்ந்த CRPF என்று சொல்லப்படுகிற மத்திய ரிஸர்வ் போலீஸ் படை ராணுவ வீரர்களில் தமிழகத்தைச் சார்ந்த 2 பேர் உட்பட 45 பேர் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள்.

பல உலக நாடுகள் அதற்கு கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்த பயங்கரமான தாக்குதலை பாகிஸ்தான் நாட்டின் ஆதரவோடு இயங்கி வருகிற ஜெய்ஷ் இ முஹம்மது என்ற பயங்கரவாத அமைப்பு தான் நடத்தியிருக்கிறது என்று இந்திய ராணுவம் கூறுகிறது.ஆனால் இந்த தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் கூறியிருக்கிறது. இதன் பின்னனியில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் ஏற்படும் அச்சமும் மக்களுடைய உள்ளத்தில் இடம் பிடித்திருக்கிறது.  இந்திய பாராளுமன்ற தேர்தல் நடக்கும் இந்நேரத்தில் அதுவும் பாராளுமன்ற கூட்டம் முடிந்தவுடன் இந்த தாக்குதல் நடந்திருப்பதால் இதில் அரசியல் சூழ்ச்சி எதுவும் இருக்கிறதா என்ற கேள்வியும் ஏற்பட்டிருக்கிறது. இதுவெல்லாம் நாம் அறிந்த விஷயம்.

இதற்கிடையில் மீன் எப்ப வரும் எப்ப வரும் என்று காத்துக் கொண்டிருக்கிற கொக்கு கையில் மீன் இரையாக மாட்டுவதைப் போன்று இஸ்லாத்தின் பெயரை கெடுப்பதற்கும் உலகத்தின் பார்வையில் இஸ்லாத்தை மட்டம் தட்டுவதற்கும் என்ன கிடைக்கும் என்று காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு இரையாக இந்த செய்தி கிடைத்திருக்கிறது. 

இஸ்லாமியப் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பலியான இந்திய ராணுவ வீரர்கள் என்று செய்தியை போட்டுப் போட்டு இஸ்லாம் பயங்கரவாத மார்க்கம், பயங்கரவாதத்தைத் தூண்டுகிற மார்க்கம், பயங்கரவாதத்தைப் போதிக்கிற மார்க்கம், இஸ்லாமியர்கள் தாய் நாட்டை நேசிக்காதவர்கள், தாய்நாட்டின் மீது பற்றில்லாதவர்கள்.  எனவே அவர்கள் இந்த நாட்டில் வாழத்தகுதியில்லாதவர்கள் என்றெல்லாம் செய்திகளை இஸ்லாத்தின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில் அவர்கள் வைக்கிற இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவிக்க வேண்டிய அதற்கு பதில் சொல்ல வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம்.மட்டுமல்ல இஸ்லாத்திற்கு ஒரு கலங்கம் வருகிற போது அதை துடைத்தெரிய வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கிருக்கிறது என்ற அடிப்படையில் அந்த இரண்டு குற்றச்சாட்டுகளையும் நாம் கொஞ்சம் அலசிப் பார்க்கலாம்.

முதலாவது இஸ்லாமியர்கள் தாய் நாட்டை நேசிக்காதவர்கள், தாய் நாட்டின் மீது பற்றில்லாதவர்கள்,தாய் நாட்டை மதிக்காதவர்கள் என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது. வாழ்க்கைக்குத் தேவையான எல்லா வழிமுறைகளையும் நெறிமுறைகளையும் ஒன்று விடாமல் உலகத்திற்கு சொன்ன அர்ப்புதமான மார்க்கம் இஸ்லாம். உலகத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை நடந்த நடக்கிற அத்தனை விஷயங்களையும் உள்ளடக்கியிருக்கிற உன்னதமான வேதத்தைக் கொண்ட உயரிய மார்க்கம் இஸ்லாம். எல்லா விஷயங்களையும் சொன்ன மார்க்கம் தேசப்பற்றை மட்டும் எப்படி விட்டு வைக்கும்.தேசப்பற்றையும் தெளிவாகவே சொல்லியிருக்கிறது. ஒரு முஸ்லிம் தான் பிறந்த தேசத்தை எவ்வாறு நேசிக்க வேண்டும். எவ்வாறு அதன் மீது பற்று வைக்க வேண்டும்.எவ்வாறு அதை மதிக்க வேண்டும் என்பதை நபி அவர்கள் தன் வார்த்தையாலும் தன் வாழ்க்கையாலும் சமூகத்திற்கு வழிகாட்டியிருக்கிறார்கள்.

لما خرج النبيُّ صلَّى اللهُ عليْهِ وسلَّمَ من مكةَ إلى الغارِ ، التفتَ إلى مكةَ وقال : أنتِ أحبُّ البلادِ إلى اللهِ ، وأنتِ أحبُّ البلادِ إليَّ ، ولولا المشركونَ أهلَكِ أخرجوني لمَاَ خرجتُ

நபி   அவர்கள்  மக்காவிலிருந்து  ஸவ்ர் குகையை நோக்கி சென்று கொண்டிருந்த போது,  மக்காவைத்  திரும்பிப் பார்த்து, நிச்சயமாக்க நீ அல்லாஹ்விடம் மிகப் பிரியமான பூமி.  என்னிடத்திலும் மிகப்  பிரியமான பூமி. இணை வைப்பாளர்கள் மட்டும் என்னை  வெளியாக்க  வில்லையென்றால்  நான் உன்னை  விட்டும்  வெளியேற மாட்டேன் என்று சொன்னார்கள்.       (தஃப்ஸீர் குர்துபீ)

நபி அவர்கள் இறைக்கட்டளையை ஏற்று மதீனாவிற்கு சென்றாலும் இஸ்லாத்தைப் பாதுகாப்பதற்கும் இஸ்லாத்தை வளர்ப்பதற்கும் அந்த நேரத்தில் மக்காவை விட மதீனா மிகப் பொறுத்தமாக இருந்த காரணத்தினால் மதீனாவிற்கு சென்றாலும் அவர்கள் உள்ளம் முழுக்க மக்காவின் எண்ணம் தான் மிகைத்திருந்தது.பிறந்து வளர்ந்து வாழ்ந்த பூமியான மக்காவின் நினைவு அவ்வப்போது நபியின் உள்ளத்தை காயப்படுத்திக் கொண்டே இருந்தது என்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. அருமை ஸஹாபாக்களும் இதில் கொஞ்சம் கூட சளைத்தவர்கள் அல்ல என்று சொல்லுகிற அளவுக்கு அவர்களின் தேசப்பற்று நபியின் தேசப்பற்றிற்கு நிகராகவே இருந்தது.

ஸஹாபாக்கள் அவர்கள் பிறந்து வளர்ந்து மிகவும் நேசித்த ஊரான மக்காவை விட்டும் மதீனாவிற்கு போன உடனே அவர்கள் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்கள். மதீனாவின் சீதோசன நிலை ஒரு பக்கம். மக்காவின் பிரிவு ஒரு பக்கம். இரண்டும் சேர்ந்து அவர்களுக்கு கடுமையான காய்ச்சலை தந்தது.தாயைப் பிரிந்த குழந்தை தாயின் தேட்டத்தால், அந்த ஏக்கத்தால் ஒழுக்காக சாப்பிடாமல் குடிக்காமல் கிறங்கிப் போவதைப் போன்று மக்காவைப் பிரித்த ஸஹாபாக்கள் ஆகி விட்டார்கள்.

لَمَّا قَدِمَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ المَدِينَةَ، وُعِكَ أبو بَكْرٍ، وبِلَالٌ، فَكانَ أبو بَكْرٍ إذَا أخَذَتْهُ الحُمَّى يقولُ: كُلُّ امْرِئٍ مُصَبَّحٌ في أهْلِهِ... والمَوْتُ أدْنَى مِن شِرَاكِ نَعْلِهِ ، وكانَ بلَالٌ إذَا أُقْلِعَ عنْه الحُمَّى يَرْفَعُ عَقِيرَتَهُ يقولُ: أَلَا لَيْتَ شِعْرِي هلْ أبِيتَنَّ لَيْلَةً... بوَادٍ وحَوْلِي إذْخِرٌ وجَلِيلُ، وَهلْ أرِدَنْ يَوْمًا مِيَاهَ مَجَنَّةٍ... وهلْ يَبْدُوَنْ لي شَامَةٌ وطَفِيلُ، قالَ: اللَّهُمَّ العَنْ شيبَةَ بنَ رَبِيعَةَ، وعُتْبَةَ بنَ رَبِيعَةَ، وأُمَيَّةَ بنَ خَلَفٍ كما أخْرَجُونَا مِن أرْضِنَا إلى أرْضِ الوَبَاءِ، ثُمَّ قالَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ: اللَّهُمَّ حَبِّبْ إلَيْنَا المَدِينَةَ كَحُبِّنَا مَكَّةَ أوْ أشَدَّ، اللَّهُمَّ بَارِكْ لَنَا في صَاعِنَا وفي مُدِّنَا، وصَحِّحْهَا لَنَا، وانْقُلْ حُمَّاهَا إلى الجُحْفَةِ، قالَتْ: وقَدِمْنَا المَدِينَةَ وهي أوْبَأُ أرْضِ اللَّهِ، قالَتْ: فَكانَ بُطْحَانُ يَجْرِي نَجْلًا تَعْنِي مَاءً آجِنًا

நபி அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது அபூபக்கர்  (ரலி),  பிலால் (ரலி) ஆகியோருக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. அபூபக்கர் (ரலி) தமக்குக் காய்ச்சல் ஏற்படும் போது, 'மரணம் தன்னுடைய செருப்பு வாரை விடச் சமீபத்தில் இருக்கும் நிலையில் ஒவ்வொரு மனிதனும் தன் குடும்பத்தாருடன் காலைப் பொழுதை அடைகிறான்!' என்ற கவிதையைக் கூறுவார்கள். பிலால் (ரலி) காய்ச்சல் நீங்கியதும் வேதனைக் குரலை உயர்த்தி, 'இத்கிர், ஜலீல் எனும் புற்கள் என்னைச் சூழ்ந்திருக்க, ஒரு பள்ளத்தாக்கில் ஓர் இரவுப் பொழுதையேனும் நான் கழிப்பேனா? 'மஜின்னா' எனும் (சுனையின்) நீரை நான் அருந்துவேனா? ஷாமா, தஃபீல் எனும் இரண்டு மலைகள் (அல்லது இரண்டு ஊற்றுகள்) எனக்குத் தென்படுமா?' என்ற கவிதையைக் கூறுவார்கள். மேலும், பிலால் (ரலி) 'இறைவா! ஷைபா இப்னு ரபிஆ, உத்பா இப்னு ரபீஆ, உமய்யா இப்னு கலஃப் ஆகியோர் எங்கள் நாட்டிலிருந்து எங்களை (அப்புறப்படுத்தி) இந்த நோய்ப் பிரதேசத்திற்கு விரட்டியது போல், அவர்களை நீ உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்தி (சபித்து) விடுவாயாக!' என்று கூறுவார்கள். நபி அவர்கள், 'இறைவா! நாங்கள் மக்காவை நேசித்தது போல் அல்லது அதை விட அதிகமாக மதீனாவை எங்கள் நேசத்திற்குரியதாக ஆக்கு! இறைவா! எங்களுடைய (அளவைகளான) ஸாவு, முத்து ஆகியவற்றில் (எங்கள் உணவில்) எங்களுக்கு நீ பரக்கத் செய்! இவ்வூரை எங்களுக்கு ஆரோக்கியமானதாக ஆக்கு! இங்குள்ள காய்ச்சலை 'ஜுஹ்ஃபா' எனும் பகுதிக்கு இடம் பெயரச் செய்!' என்று பிரார்த்தித்தார்கள். நாங்கள் மதீனாவிற்கு வந்தபோது, அது அல்லாஹ்வின் பூமியிலேயே நோய் நொடிகள் அதிகமான (பிரதேசமாக இருந்தது; (ஏனெனில்) 'புத்ஹான்' எனும் ஓடையில் மோசமான (கெட்டுப்போன) தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது!  (புகாரி : 1889)

இது தான் தாய் நாட்டின் நபி அவர்களும் அருமை ஸஹாபாக்களும் கொண்ட பிரியத்தின் அளவுகோல்.மட்டுமல்ல நபியவர்களின் அந்த துஆவிற்குப் பிறகு அவர்களுக்கும் ஸஹாபாக்களுக்கும் மதீனாவும் மிகவும் பிரியமான ஊராக மாறிப் போனது.

كانَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ إذَا قَدِمَ مِن سَفَرٍ، فأبْصَرَ دَرَجَاتِ المَدِينَةِ، أوْضَعَ نَاقَتَهُ، وإنْ كَانَتْ دَابَّةً حَرَّكَهَا

நபி அவர்கள் பயணத்திலிருந்து திரும்பி மதீனாவின் உயரமான பாதைகளைப் பார்க்கும் போது தம் ஒட்டகத்தை விரைந்து செலுத்துவார்கள்; மதீனாவின் பிரியத்தால் வாகனத்தை தட்டிக் கொடுப்பார்கள். (புகாரி : 1802)

எனவே தாய்நாட்டுப்பற்று என்பது இஸ்லாமியர்கள் அத்தனை பேருடைய ரத்தத்திலும் கலந்திருக்கிறது. அப்படி கலந்திருக்க வேண்டும் என்று தான் நாம் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம்.காஷ்மீரிலே அந்த பயங்கர தாக்குதலை நடத்தியது இஸ்லாமியன் என்ற போர்வையில் இருக்கிற ஒரு இயக்கம் என்று சொல்லப்பட்டாலும் கொல்லப்பட்டிருப்பது நம் நாட்டைச் சார்ந்தவர்கள்.நம் தேசத்தைச் சார்ந்தவர்கள். அதற்காக நாம் நம் கண்டனத்தையும் ஆதங்கத்தையும் தெரிவித்தாக வேண்டும்.

நாம், நம் நாட்டுப் பற்றை அவ்வப்போது சமயம் ஏற்படுகின்ற போது வெளிப்படுத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் நம் அத்தனை பேருக்கும் உண்டு என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இரண்டாவது அவர்கள் வைக்கிற குற்றச்சாட்டு இஸ்லாம் பயங்கரவாத மார்க்கம்,தீவிரவாத மார்க்கம்,பயங்கரவாதத்தையும் தீவிரவாதத்தையும் தூண்டுகிற, அதனைப் பயிற்றுவிக்கிற மார்க்கம் என்பது.இஸ்லாம் பயங்கரவாத மார்க்கம் என்று இஸ்லாத்தின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட இஸ்லாத்தின் வெறுப்புணர்ச்சி கொண்ட ஒரு சிலர் சொன்னாலும் இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்.அமைதியை போதிக்கிற மார்க்கம். தன் பெயரிலேயே அமைதியைத் தாங்கியிருக்கிற மார்க்கம் என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல சகோதர சமயத்தைச் சார்ந்தவர்களுக்கும் தெரியும்.

உலகத்தில் இனம்,நிறம்,மொழி என அத்தனை வேற்றுமைகளையும் வேறோடு வேறடி மண்ணோடு புதைத்து மனிதர்கள் அனைவரும் சமம் என்று சமத்துவத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய மார்க்கம் இஸ்லாம்.மாற்று மதத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும் அவனுக்குத் தர வேண்டிய கண்ணியத்தை மரியாதையை சரியாக செய்ய வேண்டும், அவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று உணர்த்திய மார்க்கம் இஸ்லாம்.

அண்டை வீட்டாரின் கடமைகளைச் சொன்ன பெருமானார் அவர்கள் அதில் முஸ்லிம் என்றோ காஃபிர் பிரித்துச் சொல்ல வில்லை.அண்டை வீட்டுக்காரன் யாராக இருந்தாலும் அவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய வேண்டும் அவனுக்கு கொடுக்க வேண்டிய கண்ணியத்தைக் கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

عن مُجاهِدٍ قال: كُنَّا نأتي عبدَ اللهِ بنَ عَمْرٍو وعندَهُ غَنَمٌ له، فكان يَسقينا لَبنًا سُخنًا، فسَقانا يومًا لَبنًا باردًا، فقُلْنا: ما شأنُ اللَّبنِ باردًا؟ قال: إنِّي تَنحَّيْتُ عنِ الغَنَمِ؛ لأنَّ فيها الكلبَ، وغُلامُهُ يسلُخُ شاةً، فقال: يا غُلامُ، إذا فرَغْتَ فابدَأْ بجارِنا اليهوديِّ حتَّى فعَل ذلك ثلاثًا، فقال له رجُلٌ منَ القومِ عرَفهُ مُجاهِدٌ: كمْ تذكُرُ اليهوديَّ، أصلَحكَ اللهُ؟ قال: سمِعْتُ رسولَ اللهِ صلَّى اللهُ عليه وسلَّمَ يوصِي بالجارِ حتَّى خَشِينا أو رِبْنَا أنَّه سيُورِّثُهُ

முஜாஹித் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ; நாங்கள் அப்துல்லாஹ் பின் அமர் ரலி அவர்களிடத்தில் இருந்தோம். அவர்களுக்கு ஒரு ஆடு இருந்தது. அதை அவரது அடிமை அறுத்து அதன் தோலை உறித்துக் கொண்டிருந்தார். அப்போது அப்துல்லாஹ் பின் அமர் ரலி அவர்கள், ஆட்டை அறுத்து முடித்து விட்டால் ஆரம்பமாக நம் பக்கத்தில் இருக்கிற யூதருக்குக் கொடு என்று சொன்னார்கள்.இப்படியே மூன்று முறை செய்தார்கள். எப்போதும் யூதரையோ நினைத்துக் கொண்டிருக்கிறீர்களே என்று ஒரு மனிதர் கேட்டார். அப்போது அப்துல்லாஹ் பின் அமர் ரலி அவர்கள், அவர்களை எங்களுக்கு வாரிசுகளாக்கி விடுவார்களோ என்று நாங்கள் அஞ்சும் அளவுக்கு அண்டை வீட்டார்களைப் பற்றி எங்களுக்கு நபி அவர்கள் உணர்த்திக் கொண்டே இருந்தார்கள் என்று கூறினார்கள்.  (முஷ்கிலுல் ஆஸார் : 2793)

دَخَلَ رَهْطٌ مِنَ اليَهُودِ علَى رَسولِ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ، فَقالوا: السَّامُ علَيْكُم، قَالَتْ عَائِشَةُ: فَفَهِمْتُهَا فَقُلتُ: وعَلَيْكُمُ السَّامُ واللَّعْنَةُ، قَالَتْ: فَقَالَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ: مَهْلًا يا عَائِشَةُ، إنَّ اللَّهَ يُحِبُّ الرِّفْقَ في الأمْرِ كُلِّهِ فَقُلتُ: يا رَسولَ اللَّهِ، أوَلَمْ تَسْمَعْ ما قالوا؟ قَالَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ: قدْ قُلتُ: وعلَيْكُم

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் ;

யூதர்களில் ஒரு குழுவினர் இறைத்தூதர் அவர்களிடம் வந்து, 'அஸ்ஸாமு அலைக்கும்' (-உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (சற்றே மாற்றி சலாம்) கூறினார்கள். அவர்கள் கூறியதைப் புரிந்து கொண்ட நான் அவர்களுக்கு 'வ அலைக்குமுஸ்ஸாமு வல்லஃனா (-அவ்வாறே உங்களின் மீது மரணமும் சாபமும் உண்டாகட்டும்)' என்றேன். அப்போது இறைத்தூதர் அவர்கள் , 'ஆயிஷா! நிதானம்! எல்லா விஷயங்களிலும் நளினத்தைக் கையாளுவதையே அல்லாஹ் விரும்புகிறான்' என்று கூறினார்கள். அப்போது நான், 'இறைத்தூதர் அவர்களே! அவர்கள் சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா?' என்று கேட்டேன். அதற்கு நபி அவர்கள், 'நான் தான் 'வ அலைக்கும்' (அவ்வாறே உங்களுக்கு உண்டாகட்டும்) என்று சொல்லி விட்டேனே! (அதை நீ கவனிக்கவில்லையா?)' என்று கேட்டார்கள். (புகாரி : 6024)

வார்த்தையில் கூட இத்தனை நளினங்களைப் பேணும்படி கூறுகின்ற இஸ்லாத்தில் தீவிரவாதத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் எங்கே இடம் இருக்கிறது.

أنَّ رَجُلًا اسْتَأْذَنَ علَى النبيِّ صَلَّى اللهُ عليه وسلَّمَ، فَلَمَّا رَآهُ قالَ: بئْسَ أخُو العَشِيرَةِ، وبِئْسَ ابنُ العَشِيرَةِ فَلَمَّا جَلَسَ تَطَلَّقَ النبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ في وجْهِهِ وانْبَسَطَ إلَيْهِ، فَلَمَّا انْطَلَقَ الرَّجُلُ قالَتْ له عَائِشَةُ: يا رَسولَ اللَّهِ، حِينَ رَأَيْتَ الرَّجُلَ قُلْتَ له كَذَا وكَذَا، ثُمَّ تَطَلَّقْتَ في وجْهِهِ وانْبَسَطْتَ إلَيْهِ؟ فَقالَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ: يا عَائِشَةُ، مَتَى عَهِدْتِنِي فَحَّاشًا، إنَّ شَرَّ النَّاسِ عِنْدَ اللَّهِ مَنْزِلَةً يَومَ القِيَامَةِ مَن تَرَكَهُ النَّاسُ اتِّقَاءَ شَرِّهِ

ஒருவர் நபி அவர்களிடம் (வீட்டுக்குள் வர) அனுமதி கேட்டார். அவரைக் கண்ட நபி அவர்கள், 'இவர் அந்தக் கூட்டத்தாரிலேயே மிகவும் தீயவர்' என்று (என்னிடம்) கூறினார்கள். அவர் வந்து அமர்ந்த போது அவரிடம் நபி அவர்கள் மலர்ந்த முகத்துடன் இதமாக நடந்து கொண்டார்கள். அந்த மனிதர் (எழுந்து) சென்றதும் நான் நபி அவர்களிடம் 'இறைத்தூதர் அவர்களே! அந்த மனிதரைக் கண்டதும் தாங்கள் இவ்வாறு இவ்வாறு சொன்னீர்கள். பிறகு அவரிடம் மலர்ந்த முகத்துடன் இதமாக நடந்து கொண்டீர்களே' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆயிஷா! நான் கடுமையாக நடந்து கொண்டதை நீ எப்போதாவது கண்டுள்ளாயா? எவரின் தீங்கை அஞ்சி மக்கள் (அவருடன் இயல்பாகப் பழகாமல்)விட்டு விடுகிறார்களோ அவரே மறுமை நாளில் அல்லாஹ்விடம் அந்தஸ்தில் மிகவும் மோசமானவராவார்' என்று கூறினார்கள் (புகாரி : 6032)

எத்தனை மோசமானவனாக இருந்தாலும் அவனிடத்தில் கூட கடுகடுப்பான முகத்தோடு பேசாமல் மலர்ந்த முகத்தோடு பேச வேண்டும் என்று கற்றுத்தருகின்ற இஸ்லாத்தில் தீவிரவாதத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் எங்கே இடம் இருக்கிறது.

பொதுவாக போர்க்களம் என்றாலே மனிதர்கள் மிருகங்களாக மாறி விடுவது வழக்கம்.எதையும் பார்க்காமல் யாரையும் பார்க்காமல் கண்டவர்களையும் வெட்டி வீழ்த்துகிற மோசமான களம் போர்க்களம். ஆனால் அந்தப் போர்க்களத்தில் கூட பெண்களை கொல்லக்கூடாது சிறுவர்களை கொல்லக்கூடாது.ஆலயங்களைத் தகர்க்கக்கூடாது. முகங்களை சிதைக்கக் கூடாது,இறந்த உடலை சிதைக்கக்கூடாது என்று சொல்லப்பட்ட நம் இஸ்லாத்தில் தீவிரவாதத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் எங்கே இடம் இருக்கிறது.

மனிதர்களைக் கூட மதிக்காத இந்த காலத்தில் மிருகங்களையும் மதிக்க வேண்டும் என்று சொன்ன மார்க்கம் இஸ்லாம்.

أنَّ رَسولَ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ قالَ: بَيْنا رَجُلٌ يَمْشِي، فاشْتَدَّ عليه العَطَشُ، فَنَزَلَ بئْرًا، فَشَرِبَ مِنْها، ثُمَّ خَرَجَ فإذا هو بكَلْبٍ يَلْهَثُ يَأْكُلُ الثَّرَى مِنَ العَطَشِ، فقالَ: لقَدْ بَلَغَ هذا مِثْلُ الذي بَلَغَ بي، فَمَلَأَ خُفَّهُ، ثُمَّ أمْسَكَهُ بفِيهِ، ثُمَّ رَقِيَ، فَسَقَى الكَلْبَ، فَشَكَرَ اللَّهُ له، فَغَفَرَ له، قالوا: يا رَسولَ اللَّهِ، وإنَّ لنا في البَهائِمِ أجْرًا؟ قالَ: في كُلِّ كَبِدٍ رَطْبَةٍ أجْرٌ

ஒருவர் (ஒரு பாதையில்) நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. உடனே, அவர் (அங்கிருந்த) ஒரு கிணற்றில் இறங்கி, அதிலிருந்து (தண்ணீரை அள்ளிக்) குடித்தார். பிறகு, (கிணற்றிலிருந்து) அவர் வெளியே வந்த போது, நாய் ஒன்று தாகத்தால் தவித்து, நாக்கைத் தொங்க விட்ட படி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர் (தம் மனத்திற்குள்) 'எனக்கு ஏற்பட்டதைப் போன்ற(அ)தே (கடுமையான தாகம்) இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கிறது போல என்று எண்ணிக் கொண்டார். உடனே, (மீண்டும் கிணற்றில் இறங்கித் தண்ணீரைத்) தன்னுடைய காலுறையில் நிரப்பிக் கொண்டு, அதை வாயால் கவ்விக் கொண்டு, மேலே ஏறி வந்து அந்த நாய்க்குப் புகட்டினார். அல்லாஹ் அவரின் இந்த நற்செயலை ஏற்று அவரை (அவரின் பாவங்களை) மன்னித்தான்' என்று இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள்.

இதைச் செவியுற்ற நபித்தோழர்கள், 'இறைத்தூதர் அவர்களே! கால்நடைகள் (மற்ற பிராணிகளுக்கு உதவும்) விஷயத்திலும் எங்களுக்குப் பலன் கிடைக்குமா?' என்று கேட்டார்கள். நபி அவர்கள், '(ஆம்;) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவும் பட்சத்தில் மறுமையில்) அதற்கான பிரதிபலன் கிடைக்கும்' என்று கூறினார்கள்.

قال فدخل حائطا لرجل من الأنصار فإذا جمل فلما رأى النبي صلى الله عليه وسلم حن وذرفت عيناه فأتاه النبي صلى الله عليه وسلم فمسح ذفراه فسكت فقال من رب هذا الجمل لمن هذا الجمل فجاء فتى من الأنصار فقال لي يا رسول اللهِ فقال أفلا تتقي الله في هذه البهيمة التي ملكك الله إياها فإنه شكا إلي أنك تجيعه وتدئبه

நபி அவர்கள் அன்ஸாரிகளில் ஒருவருடைய தோட்டத்திற்குள் நுழைந்தார்கள்.  திடீரென ஒரு ஒட்டகம் நபி அவர்களைப் பார்த்து விட்டு, அழுகைக் குரலில் கண்ணீருடன் தேம்பியது.  நபி அதன் அருகே வந்து அதன் நெற்றியைத் தடவினார்கள்.  அது அமைதியானது.  பிறகு, நபி அவர்கள், ‘இந்த ஒட்டகத்தின் உரிமையாளர் யார்?’ என கேட்டார்கள்.  அன்சாரிகளில் ஒரு இளைஞர் வந்து இது என்னுடையது, யா ரசூல்லுல்லாஹ்.என்று கூறினார்.

நபி அவர்கள், ‘உனக்கு இந்த விலங்கைக் கொடுத்துள்ள அல்லாஹ்விற்கு நீ அஞ்ச வில்லையா?’ என கேட்டார்கள்.  இது என்னிடம் நீ அதைப் பசியுடன் வைத்திருப்பதாகவும், அதிகமான சுமையை ஏற்றுவதாலும், களைப்பாக இருப்பதாக புகார் கூறியது.என கூறினார்கள். (அபூதாவூது : 2549)

மனிதர்களை மிருகங்களை விட மோசமாக நடத்துகிற இந்த காலத்தில் மிருகங்களுக்குக் கூட மனிதர்களைப் போன்று மரியாதையும் கண்ணியமும் தரப்பட வேண்டும் என்று சொன்ன இஸ்லாத்தில் தீவிரவாதத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் எங்கே இடம் இருக்கிறது.

எனவே இஸ்லாம் தீவிரவாதத்தைக் கற்றுத்தரும் மார்க்கமல்ல. அன்பையும் இரக்கத்தையும் கற்றுத்தரும் மார்க்கம் என்பதை புரிந்திருக்கிற நாம் அதை உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.இஸ்லாத்தை வேறறுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இஸ்லாத்தின் மீது கட்டவிழ்த்து விடுகிற குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.

    


No comments:

Post a Comment