Pages

Pages

Friday, September 18, 2020

நோய்கள் சாபமல்ல ; வரம்


 

உலகில் இன்றைக்கு அதிகம் பேசப்படும் பொருளாக உச்சரிக்கப்படும் பொருளாக விவாதிக்கப்படும் பொருளாக இருப்பது கொரோனா. கடந்த வருடம் டிசம்பரில் தொடங்கிய கொரோனாவால் உலகம் முழுக்க இதுவரை சுமார் 3 கோடி பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 9 லட்சத்திற்கும் அதிகமானோர் இறந்திருக்கிறார்கள். இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டி விட்டது. யாரும் எண்ணிப்பார்க்காத அளவுக்கு இதுவரை உலகம் சந்தித்திடாத அளவுக்கு மிகப்பெரும் பாதிப்பையும் இழப்பையும் இந்த கொரோனா ஏற்படுத்தி விட்டது.

கடந்த 10 மாதங்களாக உலகை உலுக்கிக் கொண்டிருக்கிற இந்த கொரோனாவின் தாக்கம் இன்னும் 10 வருடங்களுக்கும் நீடிக்கலாம் என உலக சுகாதாரத்துரை அமைப்பின் தலைவர் கூறும் செய்தி நமக்கு மேலும் அச்சத்தைத் தருகிறது. வல்ல ரஹ்மான் அவனது தனிப்பெரும் கிருபையினால் இந்த கொடிய நோடியை இந்த உலகிலிருந்து இல்லாமல் ஆக்குவானாக.

கண்ணுக்குத் தெரியாத கொரோனா என்ற வைரஸ் நாட்டை சிதைத்துக் கொண்டிருக்கிற இவ்வேளையில் நோய்கள் குறித்து ஒரு சில செய்திகளை நாம் அறிந்து கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம். பொதுவாக நோய்கள் என்பது வெளிப்படையாக பார்க்கிற போது சிரமத்தையும் சங்கடத்தையும் கொடுத்தாலும் கொஞ்சம் உற்று நோக்கிப் பார்த்தால்  அது நமக்கு நன்மையாத்தான் இருக்கிறது. குறிப்பாக காய்ச்சல். இன்றைக்கு உலகமே காய்ச்சலைப் பார்த்து நடுங்கிக் கொண்டிருக்கிற போது அது எப்படி நன்மையாக இருக்கும் என்று நாம் யோசிக்கலாம்.  

இயற்கையாக மருத்துவம் பார்க்கிற அத்தனை மருத்துவர்களும் சொல்லும் செய்தி என்னவென்றால் காய்ச்சலுக்கு உடனடியாக ஆண்டிபயாடிக் எடுக்கக்கூடாது. காய்ச்சல் வருகிற போது அதை கொஞ்சம் சகித்துக் கொள்ள வேண்டும். அதை குணப்படுத்த உடனே மருந்து எடுத்துக் கொள்ளக்கூடாது என்று சொல்கிறார்கள். காரணம் என்னவென்றால், உடலில் தேவையற்ற கழிவுகள் சேருகிற போது உடலில் அதிக உஷ்னம் ஏற்பட்டு அதன் மூலம் அந்தக் கழிவுகளை வெளியேற்றும் ஒரு உன்னதமான நிலைக்குப் பெயர் தான் காய்ச்சல். எனவே காய்ச்சலுக்கு உடனே மருந்து எடுத்துக் கொண்டால் அந்த  தேவையற்ற கழிவுகள் வெளியேறாமல் உடலிலேயே தங்கி மிகப்பெரிய நோய்களை உருவாக்கி விடும்.

இந்த வகையில் பார்க்கிற போது உண்மையில்  காய்ச்சல் நமக்கு மிகப்பெரும் நன்மை என்று சொல்வதில் தவறொன்றும் இல்லை.காய்ச்சல் உடலுக்கு நன்மை செய்கிறது என்பதினால் எந்த சிகிச்சையும் செய்யக்கூடாதா? என்றால், செய்ய வேண்டும். எந்த சிகிச்சையை மேற்கொண்டால், காய்ச்சல் உடலின் கழிவுகளை வெறியேற்றுகிற போது அதற்கு தடையாக இருக்காதோ அந்த மாதிரியான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். காய்ச்சல் மட்டுமல்ல இப்படி ஒவ்வொரு நோய்களும் நமக்கு ஒவ்வொரு நன்மைகளை செய்கிறது.இது உலகத்தின் பார்வை. நோய்கள் குறித்து இஸ்லாத்தின் பார்வை என்ன என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

உலகத்தின் நடுநிலையாளர்கள் நோய்களை நன்மை என்று சொல்கிறார்கள். ஆனால் இஸ்லாம் நோய்களை நிஃமத் என்று சொல்கிறது.நோய்களால் கிடைக்கும் பாக்கியங்களை நினைத்துப் பார்க்கிற போது ஒரு முஸ்லிமைப் பொறுத்த வரை நோய்களை நிஃமத் என்று தான் சொல்ல வேண்டும்.

நோய்களில் நன்மை இருக்கிறது.நோய்கள் உடலுக்கு நன்மை செய்கிறது என்பதையாவது இன்றைக்குள்ள அறிவியல் வளர்ச்சியை வைத்து ஏற்றுக் கொள்ள முடிகிறது. ஆனால் இன்றைக்கு ஒரு நோயை விரட்டுவதற்கு உலகமே படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறது. அதனால் பலர் உயிரை இழந்து விட்டார்கள். தன் பிள்ளைகளை இழந்து விட்டார்கள். பெற்றோர்களை இழந்து விட்டார்கள். தன் சொத்துக்களை இழந்து விட்டார்கள். உலகமே இன்றைக்கு நோயைப் பார்த்து அஞ்சிக் கொண்டிருக்கிறது. அதை நிஃமத் என்று எப்படி சொல்ல முடியும் என்று சிலர் யோசிக்கலாம். உண்மையில் நோயில் ஒரு நிஃமத் அல்ல பல நிஃமத்துகள் இருக்கிறது.

وقال الفضل بن سهل : إن في العلل لنعَماً لا ينبغي للعاقل أن يجهلها ، فهي تمحيص للذنوب ، وتعرّض لثواب الصبر ، وإيقاظ من الغفلة ، وتذكير بالنعمة في حال الصحة ، واستدعاء للتوبة ، وحضّ على الصدقة

ஃபள்ல் இப்னு ஸஹ்ல்  ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ; நோயில் எண்ணற்ற நிஃமத்துக்கள் இருக்கிறது. அறிவாளி நிச்சயம் அதை அறியாமல்  இருக்க முடியாது. 1,  நம் பாவங்களை அழிக்கிறது. 2, அதில் பொறுமை கொள்கிற  போது அல்லாஹ்விடம் அதற்காக கூலி வழங்கப்படுகிறது. 3, அல்லாஹ்வை மறந்த அந்த நிலையிலிருந்து நமக்கு விழிப்பைத் தருகிறது. 4,  ஆரோக்கியத்தின் மகத்துவத்தை நமக்கு புரிய வைக்கிறது. 5, தவ்பாவின் பக்கம் நம்மைத் தூண்டுகிறது. 6, ஸதகா செய்வதை நமக்குத் தூண்டுகிறது.

1, பாவங்களை அழிக்கிறது.

ما يصيب المسلم من نصب ولا وصب ولا هم ولا حزن ولا أذى ولا غم حتى الشوكة يشاكها إلا كفر الله بها من خطاياه

ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம்நோய்துக்கம்கவலைதொல்லைமனவேதனை ஆகிய எதுவாக இருந்தாலும் அதற்குப் பதிலாக அவரின் பாவங்களிலிருந்து அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை. (புகாரி ; 5641)

من حديث جابر رضي الله عنه: "أن رسول الله صلى الله عليه وسلم دخل على أم السائب - أو أم المسيب - فقال: ((ما لك يا أم السائب - أو أم المسيب - تزفزفين[1]؟!))، قالت: الحمى، لا بارك الله فيها، فقال: ((لا تسبي الحمى؛ فإنها تذهب خطايا بني آدم، كما يذهب الكير خبث الحديد)). رواه مسلم

நபிகள் நாயகம் அவர்கள்  உம்முஸ் ஸாயிப் ரலி  என்ற பெண்மணியின் வீட்டுக்கு சென்று உம்முஸ் ஸாயிபே உனக்கு என்ன ஆனது நடுங்கிக் கொண்டிருக்கிறாயே ! என்று கேட்க அதற்கு அந்த பெண்மணி எனக்கு காய்ச்சல்  அல்லாஹ் அதை பரக்கத் அற்றதாக ஆக்குவானாக என்று திட்டினாள். அதற்கு நபிகள் நாயகம் அவர்கள் நீங்கள் காய்ச்சலை திட்டாதீர்கள் அது இரும்பின் துருவை நெருப்பு நீக்குவதைப் போல உங்களுடைய பாவங்களை நீக்கி விடும் என்றார்கள்" (முஸ்லிம் : 2575)

‏"‏قال من يحب أن يصح فلا يسقم‏؟‏‏"‏ فابتدرنا‏.‏ فقلنا‏:‏ نحن يا رسول الله‏.‏ فعرفناها في وجهه فقال‏:‏ ‏"‏أتحبون أن تكونوا كالحمير الضالة‏؟‏‏"‏ قالوا‏:‏ لا يا رسول الله‏.‏ قال‏:‏ ‏"‏ألا تحبون أن تكونوا أصحاب كفارات‏؟‏ والذي نفس أبي القاسم بيده إن الله يبتلي المؤمن بالبلاء وما يبتليه به إلا لكرامته عليه، إن الله تعالى قد أنزله منزلة لم يبلغها بشيء من عمله فيبتليه من البلاء ما يبلغه تلك الدرجة

நபி அவர்கள் ஸஹாபாக்களிடம் நோயே வராமல் ஆரோக்கியமாக இருப்பதற்கு உங்களில் யாருக்கு விருப்பம் இருக்கிறது என்று கேட்டார்கள். அவர்கள் அனைவரும் முந்திக் கொண்டு எங்களுக்கு விருப்பம் இருக்கிறது என்றார்கள். அந்த பதிலைக் கேட்டவுடன் நபியின் முகத்தில் மாற்றம் ஏற்பட்டது. நீங்கள் அனைவரும் தவறிப் போன கழுதையைப் போல ஆக விரும்புகிறீர்களா? என்றார்கள். இல்லையென்றார்கள் அவர்கள். பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்களாக ஆகுவதற்கு நீங்கள் விரும்ப வில்லையா? என்று கேட்டு விட்டு, இறைவன் மீது சத்தியமாக ஒரு முஃமினை உயர்வுபடுத்துவதற்காகவே தவிர அல்லாஹ் அவனை சோதிப்பதில்லை. அல்லாஹ் ஒரு அடியானுக்கு ஒரு அந்தஸ்தை வைத்திருக்கிறான். அந்த அடியான் தன் அமலால் அதை அடைய முடிய வில்லையென்றால், அந்த அந்தஸ்தை அவன் அடைந்து கொள்ளும் அளவுக்கு அவனுக்கு சோதனையைக் கொடுக்கிறான் என்று நபி அவர்கள் கூறினார்கள். (மஜ்மவுஸ் ஸவாயிது : 2/296)

ஸஹாபாக்கள் அவ்வாறு பதில் சொன்னதில் தவறு ஒன்றும் இல்லை. நோயே இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பதற்கு யாருக்குத்தான் விருப்பம் இருக்காது. அதுமட்டுமில்லாமல் ஆரோக்கியத்தைக் கேட்க வேண்டும் என்று தான் நபியும் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு எங்களுக்கு விருப்பம் என்று சொன்னார்கள். இதே கேள்வியை நம்மிடம் கேட்டிருந்தால் எத்தனை இலட்சம் வேண்டுமானாலும் தருகிறேன். எனக்கு நோயே வரக்கூடாது என்று சொல்லியிருப்போம். ஆனால் அவர்கள் ஆரோக்கியம் மிகப்பெரிய பாக்கியம் என்ற அடிப்படையில் சொன்னார்கள்.

நபி அவர்கள் ஆரோக்கியத்தை அதிகம் கேட்க வேண்டும் என்று சொன்னதினால், ஆரோக்கியம் இறைவனுக்கு மிகவும் பிடிக்கும் என்பதினால், ஆரோக்கியம் மிகப்பெரும் பாக்கியம் என்பதினால் ஸஹாபாக்கள் ஆரோக்கியத்தை விரும்பினார்கள். ஆனால் நோய்கள் அதை விட மிகப்பெரும் பாக்கியம் என்பதை நபி அவர்கள் உணர்த்தினார்கள். காரணம் நோய்கள் பாவங்களை அழித்து நம்மை தூய்மைப்படுத்துகிறது.

ஒரு முஸ்லிமின் பார்வையும் சிந்தனையும் அப்படித்தான் இருக்க வேண்டும். ஒரு முஸ்லிம் நோயை சிரமமாக நினைக்கக்கூடாது, அதை சாபமாக கருதக்க்கூடாது. தன் பாவங்களை அழித்து தன்னை தூய்மைப்படுத்துவதற்கு இறைவன் அருளிய மாபெரும் நிஃமத் என்று புரிய வேண்டும். அவ்வாறு புரிவது தான் ஈமானின் அடையாளம்.

" إن المؤمن إذا أصابه السقم ثم أعفاه الله منه كان كفارة لما مضى من ذنوبه وموعظة له فيما يستقبل . وإن المنافق إذا مرض ثم أعفي كان كالبعير عقله أهله ثم أرسلوه فلم يدر لم عقلوه ولم يدر لم أرسلوه " . فقال رجل يا رسول الله وما الأسقام ؟ والله ما مرضت قط فقال : " قم عنا فلست منا " . رواه أبو داود

ஒரு முஃமினுக்கு நோய் ஏற்பட்டு அவனுக்கு அல்லாஹ் சுகத்தைக் கொடுத்து விட்டால் அது அவனின் கடந்த பாவங்களை மன்னிக்கக்கூடிதாகவும் வரும் காலங்களில் அவனுக்கு உபதேசம் செய்யக்கூடியதாகவும் ஆகி விடும்.ஒரு நயவஞ்சகனுக்கு நோய் ஏற்பட்டு அவனுக்கு சுகம் கிடைத்து விட்டால் அவன் ஒட்டகத்தைப் போல. அந்த ஒட்டகத்தைக் கட்டுவார்கள்.பின்பு அவிழ்த்து விடுவார்கள். ஆனால் அந்த ஒட்டகத்திற்கு எதற்கு கட்டினார்கள். எதற்கு அவிழ்த்து விட்டார்கள் என்று தெரியாது.ஒரு மனிதர் யாரசூலல்லாஹ்! நோய்கள் என்றால் என்னஎனக்கு நோய் வந்ததே இல்லை என்றார். நபி  அவர்கள்  நீ எழுந்து சென்று விடு. நீ நம்மைச் சார்ந்தவன் அல்ல என்றார்கள். (அபூதாவூது ; 3089)

அதாவது நபிமார்கள் நல்லோர்கள் அனைவரும் எண்ணற்ற சோதனைகளையும் நோய்களையும் சந்தித்தவர்கள். சோதனைகளும் நோய்களும் நபிமார்களின் ஒரு சுன்னத். அந்த வகையில் நானும் எண்ணற்ற சோதனைகளையும் நோயகளையும் சந்தித்திருக்கிறேன். நோய்கள் தான் உண்மையான முஸ்லிமின் அடையாளம். எந்த நோயும் வர வில்லையென்றால் அவரது ஈமான் பரிசோதனைக்குரியது என்ற காரணத்தினால் தான் அவரை எழுந்து போகச் சொன்னார்கள்.

2, நம் அந்தஸ்தை உயர்த்துகிறது. ஒரு மனினுக்கு உயர்ந்த இடத்தை தர வேண்டும் என்றோ உயர்ந்த அந்தஸ்தை வழங்க வேண்டும் என்றோ அல்லாஹ் நாடி விட்டால் அதற்காக அவன் தேர்வு செய்கிற விஷயம் நோய்கள். 

إن العبد إذا سبقت له من الله منزلة لم يبلغها بعمله ابتلاه الله في جسده أ في ماله أو في ولده ثم صبره على ذلك يبلغه المنزلة التي سبقت له من الله " . رواه أحمد وأبو داود

ஒரு அடியானின் விதியில் அவன் ஒரு அந்தஸ்தை அடைய வேண்டும் என்று இருந்து அவன் அமலைக் கொண்டு அதை அடைய முடியாத நிலையில் இருந்தால் அவன் உடலிலோ அவன் பொருளிலோ அவன் குழந்தைகளிலோ அல்லாஹ் சோதனையைக் கொடுப்பான். அவன் பொறுமையாக இருந்து விட்டால் அதைக் கொண்டு அந்த அந்தஸ்தை அடைத்து விடுவான். (அபூதாவூது ; 3090) 

وروي أن رجلا قال لموسى: يا موسى،سل الله لي في حاجة يقضيها لي هو أعلم بها، ففعل موسى، فلما نزل إذ هو بالرجل قد مزق السبع لحمه وقتله، فقال موسى: ما بال هذا يا رب ؟ فقال الله تبارك وتعالى له: (يا موسى إنه سألني درجة علمت أنه لم يبلغها بعمله فأصبته بما ترى لاجعلها وسيلة له في نيل تلك الدرجة     قرطبي

ஒரு மனிதர் தனக்கான ஒரு தேவையை முன்னிறுத்தி அல்லாஹ்விடம் துஆ செய்யும் படி மூஸா நபி அலை அவர்களிடம் வந்து கோரிக்கை வைத்தார். அவர்களும் துஆ செய்தார்கள்.ஆனால் ஒரு நாள் அவனை ஒரு கொடிய மிருகம் ஒன்று கடித்து அவன் சதைகளை கிழித்து அவனை கொன்றிருந்ததை மூஸா அலை அவர்கள் பார்த்தார்கள். அவரின் நிலை குறித்து அல்லாஹ்விடம் விளக்கம் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ், அவன் என்னிடம் ஒரு அந்தஸ்தைக் கேட்டான். ஆனால் அந்த அந்தஸ்தை அவன் தன்னுடைய அமலைக் கொண்டு அடைய முடியாது என்று எனக்குத் தெரியும். எனவே அந்த அந்தஸ்தை அவன் அடைந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த நிலையை அவனுக்கு ஏற்படுத்தினேன் என்று கூறினான். (தஃப்ஸீர் குர்துபீ)

எனவே நாம் வாழ்கையில் சந்திக்கிற கஷ்டங்களாகட்டும் சோதனைகளாகட்டும் கவலைகளாகட்டும் மனவேதனைகளாகட்டும் நம்மை வாட்டி வதைக்கிற நோய்நொடிகளாகட்டும் ஒரு வகையில் நமக்கு சிரமத்தைத் தந்தாலும் நமக்கு பல்வேறு மன உளைச்சலை ஏற்படுத்தினாலும் அவைகள் நம் பாவங்களை அழித்து நம்மை தூய்மைப் படுத்தி நம் அந்தஸ்தையும் உயர்த்துகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

3, அல்லாஹ்வின் நினைவில்லாமல் அவனை மறந்து, அவன் கொடுத்த நிஃமத்துக்களை மறந்து வாழ்ந்து கொண்டிருக்கிற நம்மை அவன் அளவில் மீளச் செய்வதற்காக அல்லாஹ் நமக்கு நோயைத் தருகிறான்.

فاخذناهم بالبئساء والضراء لعلهم يتضرعون

அவர்கள் பணிந்து வர வேண்டும் என்பதற்காக நோயைக் கொண்டும் வறுமையைக் கொண்டும் அவர்களை நாம் பிடித்தோம். (அல்குர்ஆன் : 6 ; 42)

பொதுவாக ஆரோக்கியமாக இருக்கிற போதோ மகிழ்ச்சியாக இருக்கிற போதே இறைவனின் ஞாபகம் நமக்கு வருவதில்லை. ஆரோக்கியம் கெட்டு நோய் வாய்ப்படுகிற போது தான் அல்லாஹ் அல்லாஹ் என்று அவனை அழைத்துக் கொண்டிருப்போம். நோய்கள் நமக்கு இறைவனை ஞாபகப்படுத்துகிறது. இறைவனை மறந்து விடாமல் நம்மைப் பாதுகாக்கிறது என்ற அடிப்படையில் நோய்கள் நிஃமத்தாக இருக்கிறது.

4, ஆரோக்கியத்தின் அருமையை நமக்கு நோய்கள் தான் புரிய வைக்கிறது. பொதுவாக ஒரு பொருள் நம்மோடு இருக்கிற போது அதன் அருமையும் மகத்துவமும் விளங்காது. அது நம்மை விட்டும் தவறிப்போகிற போது தான் அதன் அருமை நமக்கு விளங்கும்.

النعمة اذا دامت جهلت واذا فقدت عرفت

ஒரு நிஃமத் நிலைத்திருந்தால் மறக்கடிக்கப்பட்டு விடும். அதை இழந்து விட்டால் அறியப்படும் என்று சொல்வார்கள்.

கொரோனா என்ற கொடிய நோயினால் சமூகம் அதிகம் பாதிக்கப்பட்டு அன்றாடம் மரணித்தவர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நாம் மட்டுமல்ல உலகத்தில் இருக்கிற அனைவரும் ஆரோக்கியத்தின் மகத்துவத்துவத்தை விளங்கி விட்டார்கள்.  ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும் நோய் வராமல் தடுப்பதற்கும் என்னன்ன செய்ய முடியுமோ அத்தனையையும் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆரோக்கியத்தின் அருமையை நோய்கள் தான் நமக்கு புரிய வைக்கிறது. இந்த வகையில் பார்க்கிற போதும் நோய்கள் மிகப்பெரும் நிஃமத்தாகத்தான் இருக்கிறது.

وقال سفيان الثوري: (ليس بفقيهٍ مَن لم يَعُدّ البلاء نعمة، والرخاء مصيبة

சுஃப்யானுஸ் ஸவ்ரீ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ; மகிழ்ச்சியை ஆபத்தென்றும் சோதனையை நிஃமத்தென்றும் கருதாதவன் மார்க்கத்தை அறிந்தவனாக இருக்க முடியாது.

நோய்கள் நிஃமத் என்ற காரணத்தினால் அதை வரவேற்க வேண்டும் என்பது பொருளல்ல. ஆரோக்கியத்தைத்தான் விரும்ப வேண்டும்.நோய் வராமல் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஒரு வேளை நோய் வந்து விட்டால் அதை பாரமாக நினைக்காமல் அதை சாபமாக நினைக்காமல் இதிலும் நன்மை இருக்கிறது என்று பொறுத்துக் கொள்ள வேண்டும்.


7 comments:

  1. Masha Allah Arumayana pathivu. Allah thangalukku Ella vagayilum barakath seivanaga Ameen.

    ReplyDelete
  2. Barakallaho lak Hazrath... How are you doing brother... I am Abdul lathief baqavi Pudukkottai.. Cell:+919787482522

    ReplyDelete
  3. தங்களின் சேவை எங்களுக்கு தேவை. மாஷா அல்லாஹ்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஆதரவும் துஆவும் போதும்

      Delete
  4. அருமை மௌலானா

    ReplyDelete