Pages

Pages

Friday, November 20, 2020

நான்கில் நான்கை மறைத்துள்ளான்

 


எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மகத்தான அருளால் இஸ்லாமிய ஆண்டின் வசந்தமான மாதங்கள் என்று சொல்லப்படுகிற இரண்டு மாதங்களில் ரபீவுல் அவ்வல் நிறைவு பெற்று ரபீவுல் ஆகிர் தொடங்கியிருக்கிறது.உலக முஸ்லிம்களால் போற்றப்படுகிற உயர்த்திப் பேசப்படுகிற பரிசுத்தமான வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட கௌஸுல் அஃலம் என்று எல்லோராலும் அழைக்கப்படுகிற ஹள்ரத் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள் நினைவுகூறப்படுகிற மாதம் இந்த ரபீவுல் ஆகிர் மாதம். உலகத்திலுள்ள இறைநேசர்கள் வலிமார்களின் தலைவரான ஹள்ரத் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள் நினைவுகூறப்படுகிற இந்த மாதத்தில் இறைநேசர்கள் குறித்து நாம் சிந்திக்கலாம்.

எல்லாம் வல்ல இறைவன் மனிதர்களை நேர்வழிப்படுத்தவும் அவர்களை ஒழுங்கு படுத்தவும் அவர்களுக்கு சத்தியத்தை எடுத்துக்கூறவும் உலகிற்கு ஒவ்வொரு கால கட்டத்திலும் இறைத்தூதர்களை அனுப்பி வைத்தான்.இவ்வாறு அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட ஆதிபிதா ஆதம் (அலை)  அவர்கள் முதற் கொண்டு அனைத்து நபிமார்களும் தங்கள் சமூகத்தை இறைவன் பக்கம் அழைத்தார்கள். அவர்களை நல்வழிப்படுத்தினார்கள். அவர்களின் உள்ளத்தை தூய்மைப்படுத்தினார்கள். அவர்களுக்கு சத்தியத்தை எடுத்துச் சொன்னார்கள்.அந்த வரிசையில் நபிமார்கள் அத்தனை பேருக்கும் முத்திரையாக, அத்தனை நபிமார்களுக்கும் தலைவராக, அண்ணல் பெருமானார் நபிகள் நாயகம் அவர்கள் அகிலத்தில் அவதரித்தார்கள்.

அண்ணலாரின் வருகையால் அகிலத்தில் இருள் ஒழிந்து ஈமானிய ஒளிக்கீற்று பூமி முழுக்க படர ஆரம்பித்தது. அழகிய கலாச்சாரங்களின் விதைகள் மண்ணில் தூவப்பட்டது. மனிதர்களிடையே இருந்த தீய பழக்கவழக்கங்கள் மங்கத் தொடங்கியது.அவர்களிடையே நல்ல பழக்கவழக்கங்கள் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்தது. அதுவரை அநியாயக்காரர்களையும், தீயவர்களையும் மட்டுமே சுமந்து வந்த இப்பூமி நல்லோர்களையும் சுமக்க ஆரம்பித்தது. மிருகங்களை விட மோசமாக வாழ்ந்தவர்கள் மனிதர்களாகவும் மனிதப்புனிதர்களாகவும் உலகில் உலா வரத் தொடங்கினார்கள்.உயர்ந்த குலம் தாழ்ந்த குலம் என்றும் மேல்ஜாதி கீழ்ஜாதி என்றும் ஏற்றத்தாழ்வுகளோடு வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் ஜாதிகளை மறந்து குலம் கோத்திரங்களை மறந்து அனைவரும் உற்ற தோழர்களாக உயிர் கொடுக்கும் நண்பர்களாக மாறினார்கள்.

இப்படி மாநபியின் வருகையால் அகிலத்தில் ஏற்பட்ட மாற்றங்களை வரிசைப்படுத்தலாம். நபி அவர்களின் மறைவுக்குப் பின்னால் மாநபி  அவர்கள் செய்த அந்தத்தூய பணியை அவர்கள் இடத்தில் இருந்து செய்வதற்காக வந்த தியாகிகள் தான் வலிமார்கள் எனப்படும் இறைநேசர்கள். இறைவனுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு, இறைதூதர் பெருமானார் அவர்களை முழுமையாகப் பின்பற்றியவர்கள் வலிமார்கள்.

அல்லாஹ்வின் மூலம் அனுப்பப்பட்ட நபிமார்களும் நல்லடியார்கள் தான், வலிமார்களும் நல்லடியார்கள்.ஆனால் நபிமார்களுக்கும் வலிமார்களுக்கும் சில வித்தியாசங்கள் உண்டு.

1, நபிமார்கள்  معصوم من الخطأ  - பாவங்களை விட்டும் பாதுகாக்கப்பட்டவர்கள். அவர்கள் பாவம் செய்ய மாட்டார்கள். அல்லாஹ்வின் மகத்தான பாதுகாப்பு நபிமார்களுக்கு உண்டு.ஆனால் வலிமார்கள் மஃஸூம்களல்ல.

2,  நபிமார்கள் துர்முடிவு ஏற்படுவதை விட்டும் பாதுகாக்கப்பட்டவர்கள். சில வலிமார்களுக்கு கடைசி நேரத்தில் அவர்களின் ஈமான் பறிக்கப்பட்டிருக்கிறது.அவர்களின் முடிவு மோசமாகி இருக்கிறது. சில வலிமார்களுக்கு அவர்களின் விலாயத் பிடுங்கப் பட்டுள்ளது. ஆனால் நபிமார்களில் யாருக்கும் அவர்களின் ஈமான் பரிக்கப்பட்டதில்லை. அவர்களின் முடிவு மோசமானதில்லை. நபித்துவமும் பிடுங்கப்பட்டதில்லை.

வானத்திற்கு உயர்த்தப்பட்ட ஈஸா நபி அவர்கள் கடைசி காலத்தில் திரும்பி வருகிற போது நபி அவர்களின் ஷரீஅத்தைப் பின்பற்றுவார்கள் என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அவர்கள் நபியாக செயல்பட மாட்டார்களே தவிர நபியாக இருக்க மாட்டார்கள் என்பது அதன் பொருளல்ல.

3,நபிமார்கள் அல்லாஹ்வினால் தேர்வு செய்யப்பட்டவர்கள்.  அல்லாஹ்வினால் நபித்துவம் வழங்கப்பட்டவர்கள்.ஒருவர் தன் முயற்சியால் நபியாக ஆக முடியாது.ஆனால் ஒருவர் நினைத்தால் முயற்சித்தால் வலியாக ஆக முடியும்.

4 வது மிக முக்கியமான வித்தியாசம் ஒருவர் நபியாக இருந்தால் அவரின் நபித்துவத்தை அல்லாஹ் அவருக்கு அறிவித்து விடுவான்.உங்களை நபியாக தேர்வு செய்து விட்டோம். நீங்கள் மக்களை என் பக்கம் அழைக்க வேண்டும் என்று கட்டளையிட்டு விடுவான்.அவரும் தன் நபித்துவத்தை மக்களுக்கு மத்தியில் பிரகடனப்படுத்துவார். தான் நபி என்று மக்களுக்கு மத்தியில் அறிமுகப்படுத்தி மக்களை அல்லாஹ்வின் பக்கம் அழைப்பார்.ஆனால் வலியாக இருக்கிற அத்தனை பேருக்கும் அவர்களின் விலாயத்தை அவர்களுக்கு அல்லாஹ் அறிவித்து விடுவதில்லை.வலிமார்கள் தங்களை வலி என்று காட்டிக் கொள்வதுமில்லை,  நிறைய பேருக்கு தான் வலி என்றே தெரியாது.அந்தளவு விலாயத் என்பது மறைவானது.

قال علي رضي : أخفى أربعة في أربعة: أخفى رضاه في طاعته، فلا تستصغرن شيئا من طاعته، فربما وافق رضاه وأنت لا تعلم.. وأخفى سخطه في معصيته، فلا تستصغرن شيئا من معصيته، فربما وافق سخطه وأنت لا تعلم.. وأخفى إجابته في دعائه، فلا تستصغرن شيئا من دعائه، فربما وافق إجابته وأنت لا تعلم.. وأخفى وليه في عباده، فلا تستصغرن عبدا من عباده، فربما يكون وليه وأنت لا تعلم

அல்லாஹ் நான்கை நான்கில் மறைத்திருக்கிறான். தன்னுடைய பொருத்தத்தை தன்னுடைய வணக்கத்தில் மறைத்து வைத்திருக்கிறான். எனவே வணக்கத்தில் எதையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். உனக்கே தெரியாத நிலையில் இறைவனுடைய பொருத்தம் ஏற்பட்டு விடும். தன்னுடைய கோபத்தை தனக்கு மாறு செய்யும் விஷயத்தில் இறைவன் மறைத்து வைத்துள்ளான். எனவே பாவத்தில் எதையும் குறைத்து மதிப்பிட வேண்டாம் நீ அறியாத நிலையில் இறைவனுடைய கோபம் ஏற்பட்டு விடலாம். தன்னுடைய பதிலை அவனிடம் செய்யும் துஆவில் இறைவன் மறைத்து வைத்துள்ளான். எனவே துஆவில் எதையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். நீ அறியாத விதத்தில் எந்த துஆவிற்கும் இறைவன் பதில் அளித்து விடலாம். தன்னுடைய இறைநேசரை தன் அடியார்களில் இறைவன் மறைத்து வைத்திருக்கிறான். எனவே அடியார்களில் எவரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். உனக்கே தெரியாமல் ஒரு அடியார் இறைநேசராக இருக்கலாம்.

1, தன் மேலான பொருத்தத்தை தன் வணக்கங்களில் அல்லாஹ் மறைத்து வைத்துள்ளான். எந்த வணக்கத்தில் அல்லாஹ்வின் பொருத்தம் ஏற்படும் என்று தெரியாது.பார்ப்பதற்கு ரொம்ப அர்ப்பமான அமல் போன்று தெரியும்.ஆனால் அல்லாஹ்வின் பொருத்தம் ஏற்பட அந்த அமல் தான் காரணமாக இருக்கும்.

ஹள்ரத் பிலால் ரலி அவர்களைப் பார்த்து ஒரு முறை நபி அவர்கள் கேட்டார்கள்.

انَّ النبيَّ صلَّى اللهُ عليهِ وسلَّمَ قال لبلالٍ عندَ صلاةِ الفجرِ : يا بلالُ ، حدِّثْنِي بأَرْجَى عملٍ عَمِلْتَهُ في الإسلامِ ، فإنِّي سمعتُ دُفَّ نعليْكَ بينَ يديَّ في الجنةِ . قال : ما عملتُ عملًاأَرْجَى عندي : أنِّي لم أَتَطَهَّرَ طَهورًا ، في ساعةِ ليلٍ أو نهارٍ ، إلا صلَّيتُ بذلكَ الطَّهورِ ما كُتِبَ لي أن أُصلِّي (بخاري)  

ஒரு ஃபஜ்ருத் தொழுகையின் போது பிலால் (ரலி) அவர்களிடம் 'பிலாலே இஸ்லாத்தில் இணைந்த பின் நீர் செய்த சிறந்த அமல் பற்றிக் கூறும்! ஏனெனில் உம்முடைய செருப்போசையை சொர்க்கத்தில் கேட்டேன்' என்று நபி அவர்கள் கேட்டார்கள். அதற்கு பிலால் (ரலி) 'இரவிலோ, பகலிலோ நான் உளூச் செய்தால் அவ்வுளூவின் மூலம் நான் தொழ வேண்டுமென்று நாடியதைத் தொழாமல் இருப்பதில்லை. இதுதான் என்னுடைய செயல்களில் சிறந்த செயல்' என்று விடையளித்தார்கள். (புகாரி : 1149)

உலகத்தில் யாரும் சந்தித்திடாத அளவுக்கு பல்வேறு சிரமங்களையும் கஷ்டங்களை அவர்கள் பட்டிருந்தாலும் அவர்களுக்கு சுவனத்தில் அந்த அந்தஸ்து கிடைக்க காரணமாக இருந்தது அவர்கள் செய்த அந்த சிறிய அமல் தான்.

2, தன் கோபத்தை பாவங்களில் அல்லாஹ் மறைத்து வைத்திருக்கிறான். எப்போது எந்த பாவம் அல்லாஹ்வின் கோபத்தை ஏற்படுத்தும் என்று தெரியாது.சின்ன தவறு தானே சின்ன குற்றம் தானே என்று நினைப்போம்.ஆனால் அந்த சின்ன தவறு தான் அல்லாஹ்வின் கோபத்திற்கு காரணமாக இருக்கும்.

قال الفُضَيل بن عياضٍ: (بقدرِ ما يصغُرُ الذنبُ عندك يعظُمُ عند الله، وبقدر ما يعظُمُ عندك يصغُرُ عند الله)؛ (سير أعلام النبلاء

உன்னிடம் அர்ப்பமாக தெரிகின்ற ஒரு குற்றம் அல்லாஹ்விடம் மிகப்பெரியதாக இருக்கும். உன்னிடம் மிகப்பெரியதாக தெரிகின்ற ஒரு குற்றம் அல்லாஹ்விடம் சிறியதாகவும் இருக்கலாம். (ஸியரு அஃலாமின் நுபலா)

سمعت رسول الله يقول : كان رجلان في بني إسرائيل متواخيين ، فكان أحدهما يُذنب ، والآخر مجتهد في العبادة ، فكان لا يزال المجتهد يرى الآخر على الذنب ، فيقول : أقصِر ، فوجده يوما على ذنب ، فقال له : أقْصِر ، فقال : خلني وربي ، أبُعثت عليّ رقيبا ؟ فقال : والله لا يغفر الله لك ، أو لا يدخلك الله الجنة ، فَقَبَضَ أرواحهما ، فاجتمعا عند رب العالمين ، فقال لهذا المجتهد : أكنت بي عالما ؟ أو كنت على ما في يدي قادرا ؟ وقال للمذنب : اذهب فادخل الجنة برحمتي ، وقال للآخر : اذهبوا به إلى النار . قال أبو هريرة والذي نفسي بيده لتكلم بكلمة أوبَقَتْ دنياه وآخرته ، (مسند احمد

பனூ இஸ்ரவேலர்களில் இரண்டு மனிதர்கள் இருந்தார்கள். அதில் ஒருவர் பாவம் செய்யக்கூடியவர். இன்னொருவர் வணக்கத்தில் அதிகம் கவனம் செலுத்தக் கூடியவர். அந்த வணக்கசாலி தன் நண்பரை பாவத்திலே பார்க்கும்போதெல்லாம் பாவத்தை குறைத்துக் கொள் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். ஒருநாள் அவர் பாவம் செய்து கொண்டிருந்தார். அதைப் பார்த்த இவர், பாவத்தை குறைத்துக் கொள் என்று சொன்னார். அதற்கு அந்த மனிதர் பாவம் என்பது எனக்கும் இறைவனுக்கு மத்தியில் உள்ள விஷயம். அதில் நீங்கள் தலையிட வேண்டாம், என்னை விட்டு விடு. என்னை கண்கானிப்பதற்குத்தான் அல்லாஹ் உன்னை அனுப்பி இருக்கிறானா என்று கேட்டார். அதற்கு அவர், அல்லாஹ் உன்னை மன்னிக்க மாட்டான். அல்லது உன்னை சுவனத்தில் நுழைய வைக்க மாட்டான் என்று சொன்னார். இரண்டு நபர்களும் இறந்து இறைவன் சன்னிதானத்தில் ஒன்று கூட்டப்பட்டார்கள். அப்போது அல்லாஹ் அந்த வணக்கசாலியிடம் என்னைப்பற்றி நீ நன்கு அறிந்து இருக்கிறாயா என் கையிலே உள்ளதின் மீது உனக்கு ஆற்றல் இருக்கிறதா என்று கேட்டு அவரை நரகில் போடும் படி உத்தரவிடுவான். அந்த பாவம் செய்யக்கூடிய மனிதரை அழைத்து என்னுடைய அருளால் நீ சொர்க்கத்தில் நுழைந்து கொள் என்று சொல்வான். (முஸ்னத் அஹ்மத் : 16/127)

அவர் வணக்கசாலி தான்.அல்லாஹ்விற்கு பொருத்தமான காரியங்களைச் செய்தவர் தான். இருந்தாலும் அவர் சொன்ன அந்த ஒரு வார்த்தை அவரை நரகில் கொண்டு போய் சேர்த்தது.

3, தன் கபூலிய்யத்தை அல்லாஹ் துஆவில் மறைத்து வைத்திருக்கிறான்.எப்போது எந்த துஆ ஏற்றுக் கொள்ளப்படும் என்று தெரியாது.

4,வலிமார்களை அல்லாஹ் தன் அடியார்களில் மறைத்து வைத்திருக்கிறான்.மக்களில் யார் வலி என்று யார் அல்லாஹ்வின் நேசத்தைப் பெற்றவர் என்று அவ்வளவு இலகுவாக சொல்லி விட முடியாது.

வெளித்தோற்றத்தில் சாதாரண மனிதராக மக்களோடு மக்களாக இருக்கிற எத்தனையோ பேர் அல்லாஹ்விடத்தில் மிக உயர்ந்த நிலையில் இருப்பார்கள்.

من حديث سهل بن سعد الساعدي : " أنه مر رجل من فقراء المسلمين على النبي يوما فقال النبي لأصحابه: ( ما تقولون في هذا ؟ ) ، فقالوا : رجل من فقراء المسلمين ، هذا والله حرى إن خطب ألا يزوج ، وإن شفع ألا يشفع ، ثم مر رجل آخر من الأشراف ، فقال : ( ما تقولون في هذا ؟ ) ، قالوا: رجل من أشراف القوم هذا والله حرى إن خطب أن ينكح ، وإن شفع أن يشفع ، فأشار النبي على الرجل الفقير الأول فقال : ( والله هذا خير من ملء الأرض من مثل هذا  (روى البخاري)

ஒரு (பணக்கார) மனிதர் இறைத்தூதர் அவர்கள் அருகில் சென்றார். அப்போது நபி அவர்கள் (தம் தோழர்களிடம்), 'இவரைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். தோழர்கள், 'இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்கவும், இவர் பரிந்துரைத்தால் அதனை ஏற்கவும், இவர் பேசினால் செவிசாய்க்கப்படவும் தகுதியான மனிதர்'' என்று கூறினர். பிறகு நபி அவர்கள் சிறிது நேரம் மெளனமாயிருந்தார்கள். பிறகு, நபி அவர்கள் அருகில் முஸ்லிம்களில் ஓர் ஏழை மனிதர் சென்றார். அப்போது நபி அவர்கள், 'இவரைக் குறித்து நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். தோழர்கள், 'இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்காமலும், இவர் பரிந்துரைத்தால் அது ஏற்கப்படாமலும், இவர் பேசினால் செவிதாழ்த்தப்படாமலும் இருக்கத் தகுதியானவர்'' என்று கூறினர். அப்போது இறைத்தூதர் அவர்கள் , 'அவரைப் போன்ற (வசதி படைத்த)வர்கள் இந்தப் பூமி நிரம்ப இருந்தாலும் (அவர்கள் அனைவரையும் விட) இந்த ஏழையே மேலானவர்' எனக் கூறினார்கள். (புகாரி : 5091)

أنَّ رجُلًا مِن أهلِ الباديةِ يُقالُ له: زاهرُ بنُ حرامٍ كان يُهدي إلى النَّبيِّ صلَّى اللهُ عليه وسلَّم الهديَّةَ فيُجهِّزُه رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم إذا أراد أنْ يخرُجَ فقال رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم: ( إنَّ زاهرًا بَادِينَا ونحنُ حاضِروه ) قال: فأتاه النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّم وهو يبيعُ متاعَه فاحتضَنه مِن خلْفِه والرَّجُلُ لا يُبصِرُه فقال: أرسِلْني، مَن هذا ؟ فالتفَت إليه فلمَّا عرَف أنَّه النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّم جعَل يُلزِقُ ظهرَه بصدرِه فقال رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم: ( مَن يشتري هذا العبدَ ) ؟ فقال زاهرٌ: تجِدُني يا رسولَ اللهِ كاسدًا قال: ( لكنَّك عندَ اللهِ لَسْتَ بكاسدٍ ) أو قال صلَّى اللهُ عليه وسلَّم: ( بل أنتَ عندَ اللهِ غَالٍ

ஸாஹிர் இப்னு ஹராம் ரலி அவர்கள் ஒரு தேவைக்காக நபி அவர்களின் இல்லம் வருகிறார்கள்.அங்கு மாநபி அவர்கள் இல்லை.   உடனே ஸாஹிர் ரலி அவர்கள் வியாபாரத்திற்காக கடைத்தெருவுக்கு திரும்பி விடுகிறார்கள்.

ஸாஹிர் ரலி அவர்களை பற்றி அனஸ் ரலி அவர்கள் குறிப்பிடும்போதுஅவர்களிடம் அழகும் இல்லை, பொருளும் இல்லை   என கூறுகிறார்கள்.    ஸாஹிர் தன்னை தேடிவந்ததை கேள்விப்பட்ட பூமான் நபி அவர்கள் கடைத்தெருவுக்கு ஸாஹிர் ரலி அவர்களை சந்திக்க வருகிறார்கள்.

இறைதூதர் அவர்கள் கறுப்பு நிற அடிமையான ஸாஹிர் இப்னு ஹராமை சந்தையில் கட்டியணைத்து இவரை யார் வாங்குவீர்கள்? என்ற  போது,என்னை யார் வாங்குவார்கள்? நான் ஒரு செல்லாக்காசு என்று கூறினார். அதற்கு நபியவர்கள், நீ அல்லாஹ்விடத்தில் விலை கூடியவன்என்றார்கள்.  (இப்னு ஹிப்பான் : 5790)

قال ابو سعيد الخراز دخلت المسجد الحرام، فرأيت فقيرًا عليه خرقتان يسأل شيءًا، فقلت في نفسي: "مثل هذا كَلّ على الناس!". فنظر إلى قال: "واعلموا أن الله يعلم ما في أنفسكم فاحذروه"؛ قال: فاستغفرت في سري، فناداني فقال: "وهو الذي يقبل التوبة عن عباده (احياء,رسالة قشيرية,طبقات الاولياء)

அபுசஈத் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ; ஒருநாள் நான் மஸ்ஜிதுல் ஹரமில் நுழைந்தேன். அங்கே ஒரு ஏழையைப் பார்த்தேன். அவர் மக்களிடம் யாசகம் கேட்டுக் கொண்டிருந்தார். இவரைப் போன்றவர்கள் மக்களுக்கு பாரமானவர்கள் தான் என்று நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன். உடனே அவர், என்னைப் பார்த்து, நிச்சயமாக அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் உள்ளதை அறிகிறான் என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ளுங்கள் என்ற வசனத்தை ஓதினார். நான் இறைவனிடத்தில் பாவமன்னிப்பு தேடிக் கொண்டேன். அப்போது என்னை அழைத்து, இறைவன் தன் அடியார்கள் செய்யக்கூடிய தவ்பாவை ஏற்றுக் கொள்ளக் கூடியவன் என்ற வசனத்தை அவர் ஓதிக் காட்டினார். (இஹ்யா)

வெளித்தோற்றத்தை வைத்து நாம் யாரையும் சாதாரணமாக எடை போட்டு விடக்கூடாது. வெளிப்புறங்களை வைத்து யாரையும் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது.அவர் அல்லாஹ்விடம் உயர்ந்தவராக இருக்கலாம்.அல்லாஹ்விடம் கண்ணியமானவராக இருக்கலாம்,இறைநேசத்தைப் பெற்றவராக இருக்கலாம்.

ان اولياءه الا المتقون ولكن اكثرهم لا يعلمون

நிச்சயமாக இறைய்யச்சமுள்ளவர்கள் தான் இறைநேசர்கள்.என்றாலும்  அவர்களில் அதிகமானோர் அறிந்து கொள்ள மாட்டார்கள். (அல்குர்ஆன் :  8 ; 34)

இந்த வசனத்திற்கு இரண்டு விளக்கங்கள் சொல்லப்படுகிறது. 1,யார் வலி என்று மக்களுக்கு தெரியாது.2,தான் ஒரு வலி என்று தனக்கே தெரியாது.

எனவே விலாயத் என்பது இரகசியமானது.சில நபர்களை அல்லாஹ் வெளிப்படுத்துகிறான். பல நபர்களை அல்லாஹ் மறைத்து விடுகிறான்.யார் வேண்டுமானாலும் இறைநேசராக இருக்கலாம்.

இறைநேசர்களின் அந்தஸ்து குறித்து எண்ணற்ற செய்திகள் குர்ஆனிலும் ஹதீஸிலும் உண்டு.

إنَّ اللهَ قال : من عادَى لي وليًّا فقد آذنتُه بالحربِ ، وما تقرَّب إليَّ عبدي بشيءٍ أحبَّ إليَّ ممَّا افترضتُ عليه ، وما يزالُ عبدي يتقرَّبُ إليَّ بالنَّوافلِ حتَّى أُحبَّه ، فإذا أحببتُه : كنتُ سمعَه الَّذي يسمَعُ به ، وبصرَه الَّذي يُبصِرُ به ، ويدَه الَّتي يبطِشُ بها ، ورِجلَه الَّتي يمشي بها ، وإن سألني لأُعطينَّه ، ولئن استعاذني لأُعيذنَّه ، وما تردَّدتُ عن شيءٍ أنا فاعلُه ترَدُّدي عن نفسِ المؤمنِ ، يكرهُ الموتَ وأنا أكرهُ مُساءتَه (بخاري) 

எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கிற செவியாக, அவன் பார்க்கிற கண்ணாக, அவன் பற்றுகிற கையாக, அவன் நடக்கிற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எச்செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன். 91

ஒரு இறைநேசரை வார்த்தையால் செயல்பாடுகளால் இன்னபிற விஷயங்களால் நோவினை தருவது அது இறைவனின் கோபத்தைப் பெற்றுத்தரும் காரியம் என்பதை இந்த ஹதீஸ் நமக்கு தெளிவாக சுட்டிக் காட்டுகிறது.எனவே வலிமார்கள் விஷயத்தில் நாம் ரொம்ப கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்.கவனமாகவும் நடந்து கொள்ள வேண்டும்.



2 comments:

  1. அல்ஹம்துலில்லாஹ் அருமையான விளக்கம்

    ReplyDelete