Pages

Pages

Thursday, February 18, 2021

ஆயுத முனையை நீக்கக்கூடிய மாதம்

 


அல்லாஹ்வின் பேரருளால் புனிதமான ரஜப் மாதம் நம்மை வந்தடைந்திருக்கிறது. இஸ்லாமிய மாதங்களில் புனிதம் நிறைந்த கண்ணியம் நிறைந்த மாதங்கள் என்று சொல்லப்படுகிற நான்கு மாதங்களில் ரஜபும் ஒன்று.

الزَّمانُ قَدِ اسْتَدارَ كَهَيْئَتِهِ يَومَ خَلَقَ اللَّهُ السَّمَواتِ والأرْضَ، السَّنَةُ اثْنا عَشَرَ شَهْرًا، مِنْها أرْبَعَةٌ حُرُمٌ، ثَلاثَةٌ مُتَوالِياتٌ: ذُو القَعْدَةِ وذُو الحِجَّةِ والمُحَرَّمُ، ورَجَبُ مُضَرَ، الذي بيْنَ جُمادَى وشَعْبانَ

இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள்:  வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பி விட்டது. ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை - துல்கஅதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜுமாதஸ் ஸானிக்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ரஜப் மாதமாகும். (புகாரி ; 3197)

وعن قتادة رحمه الله قال: "إنّ الظلمَ في الشهرِ الحرامِ أعظمُ خطيئةً ووزراً من الظلمِ فيما سواهُ، وإنْ كان الظلمُ على كلِّ حالٍ عظيماً، ولكنَّ اللهَ يُعظِّمُ من أمرِه ما شاء. وقال: إنَّ اللهَ اصطفى صَفايا من خلقِه؛ اصطفى من الملائكةِ رسلاً، ومن النّاسِ رسلاً، واصطفى من الكلامِ ذكرَه، واصطفى من الأرضِ المساجدَ، واصطفى من الشهورِ رمضانَ والأشهرَ الحُرمَ، واصطفى من الأيّامِ يومَ الجمعةِ، واصطفى من اللَّيالي ليلةَ القدرِ؛ فعظِّموا ما عظَّم اللهُ؛ فإنّما تعظَّم الأمورُ بما عظَّمها اللهُ عند أهلِ الفهمِ والعقلِ".

தன் படைப்பிலிருந்து தன் நேசர்களையும் மலக்குமார்களிலிருந்து தன் தூதர் களையும் மனிதர்களிலிருந்து தன் தூதர்களையும் பேச்சிலிருந்து திருமறைக் குர்ஆனையும் பூமியிலிருந்து பள்ளிவாசல்களையும் மாதங்களிலிருந்து ரமலான் மற்றும் மீதமுள்ள கண்ணியத்திற்குரிய மூன்று மதங்களையும் நாட்களிலிருந்து ஜும்ஆ நாளையும் இரவுகளிலிருந்து லைலத்துல் கத்ர் இரவையும் அல்லாஹுத்     தஆலா தேர்வு செய்திருக்கிறான். எனவே அதை நீங்களும் கண்ணியப்படுத்துங்கள். விளக்கமுடையவர்களும் அறிவுடையவர்களும் தான் அல்லாஹ்வினால் கண்ணியப்படுத்தப்பட்ட விஷயங்களை கண்ணியப்படுத்து வார்கள் என கதாதா ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

وقد فسر بعض العلماء بعض هذه الأسماء بمايلي

ரஜப் மாதத்திற்கு எண்ணற்ற பெயர்கள் இருப்பதாக மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள்.

رجب: لأنه كان يُرجَّب في الجاهلية أي يُعظ

1, அறியாமைக் காலத்தில் கண்ணியம் செய்யப்படும் மாதமாக இருந்த காரணத்தினால் இதற்கு ரஜப் - கண்ணியம் என்று பெயர்.

الأصم: لأنهم كانوا يتركون القتال فيه، فلا يسمع فيه قعقعة السلاح، ولا يسمع فيه صوت استغاثة

2, இந்த மாதத்தில் அரபிகள் போரை விட்டு விடுவார்கள். எனவே இந்த மாதத்தில் ஆயுதங்களின் சப்தத்தை கேட்க முடியாது. யாருக்கும் எந்த அநீதம் செய்யப்படாத காரணத்தினால் எவரின் உதவி தேடும் குரலையும் இந்த மாதத்தில் கேட்க முடியாது. எனவே இந்த மாதத்திற்கு அஸம்மு - செவிடு என்று பெயர்.

الأصب: لأن كفار مكة كانت تقول: إن الرحمة تصب فيه صبًا

3, இந்த மாதத்தில் அல்லாஹ்வினுடைய அருள் அதிகமாக கொட்டப்படும் என்று மக்காவாசிகள் சொல்வார்கள். எனவே இந்த மாதத்திற்கு அஸப் – கொட்டக்கூடியது என்று பெயர்.

رجم: بالميم لأن الشياطين ترجم فيه: أي تطرد

4, ஷைத்தான் இந்த மாதத்தில் விரட்டி அடிக்கப்படுவான். எனவே இந்த மாதத்திற்கு ரஜ்ம் - விரட்டுதல் என்று பெயர்.

الهرم: لأن حرمته قديمة من زمن مضر بن نزار بن معد بن عدنان

5, பழமையான காலம் முதற் கொண்டு இந்த மாதம் கண்ணியமாக பார்க்கப்படுகிறது. எனவே இந்த மாதத்திற்கு ஹரம் - வயோதிகம் என்று பெயர்

المقيم: لأن حرمته ثابتة لم تنسخ، فهو أحد الأشهر الأربعة الحرم

6, இந்த மாதத்தின் கண்ணியம் நீக்கப்படாமல் நிலையாக தொடர்ந்து இருக்கிறது. எனவே இந்த மாதத்திற்கு முகீம் – நிலையானது என்று பெயர்.

المُعلى: لأنه رفيع عندهم فيما بين الشهور

7, மற்ற மாதங்களுக்கு இடையில் இந்த மாதம் அரபிகளிடத்தில் மிக உயர்வானதாக இருந்தது. எனவே இந்த மாதத்திற்கு முஃலா - உயர்வானது என்று பெயர்.

أن سبب نسبته إلى مضر أنها كانت تزيد في تعظيمه واحترامه فنسب إليهم لذلك

8, முளர் என்ற கோத்திரம் இந்த மாதத்தை மிகவும் அதிகமாக கண்ணியப் படுத்துபவர்களாக இருந்ததினால் இந்த மாதத்திற்கு முளர் என்று பெயர்

وقد كان أهل الجاهلية يسمون شهر رجب مُنصّل الأسنّة

9, இந்த மாதத்தில் போர் நிறுத்தம் செய்யப்படுவதால் முனஸ்ஸிலுல் அஸின்னா - ஆயுத முனையை நீக்கக்கூடியது என்று பெயர்.

كنا نعبد الحجر فإذا وجدنا حجرا هو أخيرُ منه ألقيناه وأخذنا الآخر ، فإذا لم نجد حجرا جمعنا جثوة ( كوم من تراب ) ثم جئنا بالشاة فحلبناه عليه ثم طفنا به فإذا دخل شهر رجب قلنا مُنصّل الأسنة فلا ندع رمحا فيه حديدة ولا سهما فيه حديدة إلا نزعناه وألقيناه في شهر رجب

அறியாமைக் காலத்தில் நாங்கள் கல்லை வணங்கிக் கொண்டிருந்தோம். ஒரு கல்லை விட சிறந்த இன்னொரு கல்லை நாங்கள் பெற்றுக் கொண்டால் அந்த கல்லை நாங்கள் தூக்கி எறிந்து விட்டு வேறொரு கல்லை எடுத்துக் கொள்வோம். எந்த கலையும் நாங்கள் பெற்றுக் கொள்ள வில்லையென்றால் மண் கட்டியை சேகரித்து வைத்துக் கொள்வோம். பின்பு ஆட்டைக் கொண்டு வந்து குவிந்து இருக்கிற அந்த மண் கட்டியின் குவியலில் அதனுடைய பாலைக் கரப்போம். பின்பு அதை நாங்கள் சுற்றி வருவோம். ரஜப் மாதம் வந்து விட்டால் போர் நிறுத்தம் செய்வதை குறிக்கும் வகையில் ஆயுத முனையை நீக்கக் கூடியது என்று அதனை நாங்கள் அழைப்போம். ரஜப் மாதத்தில் எந்த ஈட்டி முனையையும் அம்பு முனையையும் கழற்றி எறியாமல் நாங்கள் விட மாட்டோம். (புகாரி ; 4376)

இப்படி எண்ணற்ற பெயர்கள் உண்டு என்பதை மார்க்க அறிஞர்களின் வாயிலாக தெரிந்து கொள்ள முடிகிறது.

يَسْأَلُونَكَ عَنِ الشَّهْرِ الحَرَامِ قِتَالٍ فِيهِ قُلْ قِتَالٌ فِيهِ كَبِيرٌ

சங்கையான மாதம் குறித்து உங்களிடம் அவர்கள் கேட்கிறார்கள். அதில் போரிடுவது மிகப்பெரிய (குற்றம்) து என்று (நபியே!) நீங்கள் கூறுங்கள். (அல்குர்ஆன் : 2 ; 217)

போரிடுவது, சண்டையிடுவது, அநீதம் செய்வது போன்ற காரியங்களை பொதுவாக மார்க்கம் தடுத்திருந்தாலும் குறிப்பாக இந்த சங்கையான மாதங்களில் தடுக்கப் பட்டுள்ளது. எனவே இதுமாதரியான காரியங்களில் இந்த மாதங்களில் அறவே ஈடுபடக்கூடாது. ஏனென்றால் மற்ற மாதங்களில் பாவங்களில் ஈடுபடுவதை விட இம்மாதங்களில் ஈடுபடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.

وعن هذا قال حبرُ الأمّةِ عبدُ اللهِ بنُ عبّاسٍ -عليهما الرِّضوان- في تفسير قوله تعالى: ﴿فَلا تَظْلِمُوا فِيهِنَّ أَنْفُسَكُمْ﴾-كما روى الطّبريّ في (تفسيره)-: في كلِّهنّ، ثمّ اختصَّ من ذلك أربعةَ أشهرٍ فجعلهنَّ حراماً، وعَظّم حُرُماتِهنَّ، وجعل الذنبَ فيهنَّ أعظمَ، والعملَ الصالحَ والأجرَ أعظمَ

இந்த மாதத்தை இறைவன் கண்ணியமான மாதமாக ஆக்கியிருக்கிறான். இம்மாதத்தில் அநீதம் செய்யாதீர்கள் என்று தடுத்திருக்கிறான். எனவே மற்ற மாதங்களை விட இந்த மாதத்தில் செய்யப்படும் பாவம் மிக மோசமானதாக பார்க்கப்படும். அதே போன்று மற்ற மாதங்களை விட இந்த மாதத்தில் செய்யப்படும் நற்காரியங்கள் மிக உயர்ந்ததாகக் கருதப்படும் என இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

எனவே தான் நபி அவர்கள் சங்கையான மாதங்களில் நோன்பு வைப்பதை ஆர்வப்படுத்தினார்கள்.

أتى رَسُولَ الله صلى الله عليه وسلم، ثُمّ انْطَلَقَ فَأتَاهُ بَعْدَ سَنَةٍ وَقَدْ تَغَيّرَتْ حَالُهُ وَهَيْئَتُهُ، فقال: يَارَسُولَ الله أمَا تَعْرِفُنِي؟ قال: وَمَنْ أنْتَ؟ قال: أنَا الْبَاهِليّ الّذي جِئْتُكَ عَامَ الأوّلِ، قال: فَمَا غَيّرَكَ وَقَدُ كُنْتَ حَسَنَ الْهَيْئَةِ؟ قُلْتُ مَا أكَلْتُ طَعَاماً مُنْذُ فَارَقْتُكَ إلاّ بِلَيْلٍ، فقال رَسُولُ الله صلى الله عليه وسلم لِمَ عَذّبْتَ نَفْسَكَ، ثُمّ قال: صُمْ شَهْرَ الصّبْرِ وَيَوْماً مِنْ كُلّ شَهْرٍ، قال: زِدْني فإنّ بِي قُوّةً، قال: صُمْ يَوْمَيْنِ، قال: زِدْنِي، قال: صُمْ ثَلاَثَةَ أيّامٍ، قال: زِدْنِي، قال: صُمْ مِنَ الْحُرُمِ وَاتْرُكْ، صُمْ مِنَ الْحُرُمِ وَاتْرُكْ، صُمْ مِنَ الْحُرْمِ وَاتْرُكْ، وَقال بِأصَابِعِهِ الثّلاَثَةِ فَضَمّهَا ثُمّ أرْسَلَهَا".

ஒரு நபித்தோழர் நபியை சந்தித்து விட்டு சென்றார். அதற்குப் பிறகு அவருடைய தோற்றமும் அவருடைய உடல் அமைப்பும் மாற்றமடைந்த நிலையில் ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் நபியை சந்திக்க வந்தார். அல்லாஹ்வின் தூதர் அவர்களே நான் யார் என்று உங்களுக்கு தெரியுமா? என்று கேட்டார். நீ யார் என்று நபியவர்கள் கேட்ட பொழுது ஒரு வருடத்திற்கு முன்பு உங்களிடத்தில் வந்த மனிதர் தான் என்று சொன்னார். முன்பு நீ வரும் பொழுது அழகான தோற்றத்தோடு இருந்தாயே. ஆனால் இப்பொழுது உன்னை இப்படி மாற்றியது எது? என்று நபியவர்கள் கேட்டார்கள். அதற்கவர், உங்களை சந்தித்து விட்டுச் சென்றதிலிருந்து நான் இரவில் மட்டும் தான் உணவை உட்கொள்கிறேன். அதாவது தொடர்ந்து நோன்பு வைத்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னார். அதைக் கேட்ட நபியவர்கள் உனக்கு நீயே வேதனை கொடுத்துக் கொண்டாயே என்று சொன்னார்கள். பின்பு, வேண்டுமென்றால் பொறுமையின் மாதமான ரமலான் மாதத்தில் நோன்பு வைத்துக் கொள். மாதம் ஒரு நாள் நோன்பு வைத்துக் கொள் என்று சொன்னார்கள். எனக்கு ஆற்றல் இருக்கிறது. இதை விட அதிகமாக என்னால் நோன்பு வைக்க முடியும் என்று அவர் சொன்னார். அப்படி என்றால் ஒரு மாதத்தில் இரண்டு நாட்கள் நோன்பு வைத்துக் கொள் என்று சொன்னார்கள். இன்னும் அதிகமாக என்னால் முடியும் என்று அவர் சொன்னார். அப்படியானால் ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நாட்கள் நோன்பு வைத்துக் கொள் என்று சொன்னார்கள். இதை விட அதிகப்படுத்துங்கள் என்று அவர் சொன்ன பொழுது, நபி அவர்கள் தன்னுடைய மூன்று விரல்களை சேர்த்து பின்பு பிரித்துக் காட்டி சங்கையான மாதங்களில் நோன்பு வை. பின்பு விட்டு விடு. சங்கையான மாதங்களில் நோன்பு வை. பின்பு விட்டு விடு. சங்கையான மாதங்களில் நோன்பு வை. பின்பு விட்டு விடு என்று மூன்று முறை கூறினார்கள். (அபூதாவூது ; 2428)  

كان رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم إذا دخَل رجَبٌ قال اللَّهمَّ بارِكْ لنا في رجَبٍ وشَعْبانَ وبلِّغْنا رمَضانَ

ரஜப் மாதம் தொடங்கி விட்டால் இறைவா எங்களுக்கு ரஜபிலும் ஷஃபானிலும் பரக்கத் செய்வாயாக அருள் நிறைந்த ரமலான் மாதத்தை எங்களுக்கு கிடைக்க செய்வாயாக (அல்முஃஜமுல் அவ்ஸத் ; 4/189) என்று துஆ செய்யும் படி நபிகள் நாயகம் அவர்கள் நமக்கு கற்றுத் தந்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில் நாம் ரஜப் மாதத்தின் தொடக்கத்தில் இருந்து ஒவ்வொரு தொழுகைகளிலும் இந்த துவாவை ஓதி வருகிறோம்.

ரஜபிலும் ஷஃபானிலும் பரக்கத் செய்வாயாக என்று கேட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் பரக்கத் என்றால் என்ன பரக்கத்தைக் குறித்த நம் பார்வை என்ன நம் புரிதல் என்ன பக்கத்தை குறித்த இஸ்லாத்தின் கண்ணோட்டம் என்ன என்றெல்லாம் ஒரு சில செய்திகளை அறிந்து கொள்வது காலத்தின் கட்டாயம்.

அரபி மொழியில் அமைந்துள்ள இந்த பரக்கத் என்ற வார்த்தைக்கு  இதனுடைய முழுமையான பொருளை உள்ளடக்கிய இன்னொரு வார்த்தை வேறு எந்த மொழியிலும் இல்லை. அந்த அளவிற்கு விசாலமான பொருளை உள்ளடக்கிய வார்த்தை பரக்கத். இன்றைக்கு ஒரு திருமணம் என்றால் மணமக்களை வாழ்த்துகிற போது 16 ம் பெற்று பெறுவாழ்வு வாழ்க என்று வாழ்த்துவார்கள். 16 என்பது 16 பேறுகளை குறிக்கிறது. ஆனால் நபி அவர்கள் بارك الله لك என்ற ஒரு அற்புதமான துஆவை கற்றுத் தந்தார்கள். பாரகல்லாஹ் என்ற வார்த்தையில் 16 அல்ல 16 ஆயிரம் அல்ல 16 இலட்சம் அல்ல கணக்கில்லாத பேறுகள் உனக்கு கிடைக்கட்டும் என்ற பொருள் அதற்கு உண்டு. அந்தளவு அற்புதமான வார்த்தை பரக்கத்.

இன்றைக்கு முஸ்லிம்களுக்கு மத்தியில் எந்த வார்த்தை பரிட்சையமாக இருக்கிறதோ இல்லையோ பரக்கத் என்ற வார்த்தை ரொம்ப ரொம்ப பரிட்சையமானது. மார்க்கத்தில் அதிகம் ஈடுபாடு உள்ளவர்களும் சரி அந்தளவு ஈடுபாடு இல்லாமல் பெயர் தாங்கி முஸ்லிம்களாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் சரி அதிகம் பயன்படுத்துகின்ற வார்த்தைகளில் ஒன்று இந்த பரக்கத். பயன்படுத்துகிற வார்த்தை மட்டுமல்ல இன்றைக்கு அனைவரின் எதிர் பார்ப்பும் இந்த பரக்கத் தான்.ஒரு வீடு ஓபனிங் என்றாலோ ஒரு வியாபாரம் தொடங்குவதாக இருந்தாலோ திருமணம் என்றாலோ பரக்கத்துக்காக துஆ செய்யுங்கள் என்று தான் அனைவரும் சொல்கிறோம். இப்படி வாழ்வின் எல்லா நிகழ்விலும் எல்லா கட்டங்களிலும் பரக்கத்தை நாம் எதிர் பார்க்கிறோம்.

அப்படி எதிர் பார்ப்பது தவறு ஒன்றும் அல்ல. நம் முன்னோர்களான நபிமார்கள் ஸஹாபாக்கள் இமாம்கள் அத்தனை பேரும் பரக்கத்தை எதிர் பார்த்திருக்கிறார்கள். பரக்கத் வேண்டும் என்று தனக்காகவும் மற்றவர்களுக்காகவும் துஆவும் செய்திருக்கிறார்கள்.

நபி அவர்களும் அருமை ஸஹாபாக்களும் ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு வந்த நேரம்.ஸஹாபாக்களில் நிறைய பேருக்கு காய்ச்சல் ஒன்று தொற்றிக் கொண்டது. ஏனென்றால் ஸஹாபாக்கள் வந்த அந்த நேரம் சுகாதாரக் கேட்டினால் மதீனாவில் ஒரு வகையான நோய் பரவிக் கொண்டிருந்தது. இதனால் நிறைய ஸஹாபாக்கள் பாதிக்கப்பட்டிருந்தார்கள். குறிப்பாக அபூபக்கர் ரலி பிலால் ரலி போன்ற ஸஹாபாக்கள் கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டார்கள்.அன்னை ஆயிஷா ரலி அவர்கள் அவர்களை சந்திக்கச் சென்றிருந்தார்கள்.அப்போது கடுமையான காய்ச்சலின் தாக்கத்தினால் சொந்த மண்ணை விட்டு வந்த சோகத்தினால்

قَالَ اللَّهُمَّ الْعَنْ شَيْبَةَ بْنَ رَبِيعَةَ وَعُتْبَةَ بْنَ رَبِيعَةَ وَأُمَيَّةَ بْنَ خَلَفٍ كَمَا أَخْرَجُونَا مِنْ أَرْضِنَا إِلَى أَرْضِ الْوَبَاءِ  

இறைவா ஷைபாவையும் உத்பாவையும் உமைய்யாவையும் நீ சபிப்பாயாக! எங்களை எங்கள் சொந்த மண்ணிலிருந்து இந்த நோய் பூமிக்கு அவர்கள் கொண்டு வந்து விட்டார்கள் என்று கூறினார்கள்.

இந்த சூழ்நிலைகளையெல்லாம் பார்த்த பெருமானார் அவர்கள் மதீனாவின் பரக்கத்திற்காக துஆ செய்தார்கள்.

اللَّهُمَّ اجْعَلْ بالمَدِينَةِ ضِعْفَيْ ما جَعَلْتَ بمَكَّةَ مِنَ البَرَكَةِ

இறைவா மக்காவில் நீ ஏற்படுத்திய பரக்கத்தில் இரு மடங்கை மதீனாவில் நீ ஏற்படுத்துவாயாக! புகாரி ; 1885)

நபியின் இந்த துஆ எந்தளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்றால் நோய் பிடித்த ஊர், முஸீபத் பெற்ற ஊர் என்றெல்லாம் சொல்லப்பட்ட மதீனாவின் மண் கூட தூய்மையானதாக நோயுக்கு நிவாரணம் தரக்கூடியதாக மாறிப்போனது.

لمَّا رجع رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم من تَبُوكَ تلقَّاه رجلٌ من المتخلِّفين من المؤمنين فأثاروا غُبارًا فخمَر بعضُ من كان مع رسولِ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم أنفَه فأزال رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم اللِّثامَ عن وجهِه وقال والَّذي نفسي بيدِه إنَّ في غبارِها شفاءً من كلِّ داءٍ

நபியவர்கள் தபூக் போர்க்களத்திலிருந்து திரும்பி வந்த அந்த நேரம் கடுமையான காற்றடித்து புழுதி பறந்து கொண்டிருந்தது. நபியவர்களுக்கு அருகில் இருந்த ஒரு நபித்தோழர் அப்புழுதியின் காரணமாக தன் முகத்தை துணியை வைத்து மறைத்தார். அப்போது நபியவர்கள் அவர் முகத்தை விட்டும் அந்த துணியை விலக்கி விட்டு அல்லாஹ்வின் மீது சத்தியமாக இந்த புழுதியில் எல்லா நோய்க்கும் மருந்து இருக்கிறது என்று கூறினார்கள். (அத்தர்கீப் வத்தர்ஹீப்  ; 2 / 215)

النَّبِيِّ صلى الله عليه وسلم كَانَ يَقُولُ لِلمَرِيضِ: (بِسْمِ اللهِ تربَةُ أَرْضِنَا، بِرِيقةِ بَعْضِنَا، يُشْفَى سَقِيمُنَا، بإِذْنِ رَبِّنَا

நோயாளியைப் பார்த்தால் நபி அவர்கள், அல்லாஹ்வின் பெயரால் எங்களில் சிலரின் உமிழ் நீரோடு எமது இந்தப் பூமியின் மண் இணைந்தால் அது நம் இறைவனின் அனுமதியின் படி எங்களில் நோயிற்றவரைக் குணப்படுத்தும் என்று கூறுவார்கள். (புகாரி ; 5745)

மதீனாவில் பரக்கத் செய் என்ற நபியின் அந்த துஆவினால் பரக்கத்தான பூமியாக உலகின் மிகச்சிறந்த பூமியாக அந்த மண்ணை ஒரு தடவையாவது தொட்டு விட வேண்டும் என்று உலக மக்களெல்லாம் ஆசைப்படும் பூமியாக எங்கு வாழ்ந்தாலும் மரணித்த பிறகு அங்கு தான் அடங்கப் பெற வேண்டும் என்று நல்லோர்கள் கனவு காணும் பூமியாக மதீனா மாறியது.

நபி அவர்கள் தன் வாழ்நாளில் பரக்கத்திற்காக நிறைய துஆ செய்திருக்கிறார்கள். நபியவர்கள் மட்டுமல்ல எல்லா நபிமார்களும் பரக்கத்தை இறைவனிடத்தில் கேட்டிருக்கிறார்கள். குறிப்பாக மற்றவர்களுக்காக அவர்கள் கேட்கும் துஆவில் மிகப்பிரதானமானதாக பரக்கத் தான் இருந்திருக்கிறது. 

فقال: ما طعامكم؟ قالت: اللحم. قال: فما شرابكم؟ قالت: الماء. قال: اللهم بارك في اللحم والماء

ஹள்ரத் இப்ராஹீம் அலை அவர்கள் நீண்ட நாள் பிரிவுக்குப் பிறகு தன் மகனை சந்திப்பதற்காக வந்தார்கள். அப்போது அவர்களின் மனைவியிடத்தில் உங்களின் உணவு என்ன? உங்களின் குடிபானம் என்ன? என்று கேட்டார்கள். எங்கள் உணவு இறைச்சி, எங்கள் குடிபானம் தண்ணீர் என்று அந்த பெண் சொன்ன பொழுது, இறைவா! இவர்களுக்கு அவர்களின் இறைச்சியிலும் தண்ணீரிலும் பரக்கத் செய்வாயாக என்று துஆ செய்தார்கள். (அல்பிதாயா வன் நிஹாயா)

இன்றைக்கு நாமும் அதிகம் பரக்கத்தைத் தான் எதிர் பார்க்கிறோம். இறைவனிடம் பரக்கத்தைத் தான் அதிகம் கேட்கிறோம். இன்று 21 ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கடந்த காலங்களை விட இந்த காலம் பொருளாதாரத்திலும் தொழில் நுட்பங்களிலும் அறிவியலிலும் விஞ்ஞானத்திலும் புதிய கண்டுபிடிப்புகளிலும் இன்ன பிற மனித வாழ்வின் அனைத்து வசதி வாய்ப்புகளிலும் கடந்த காலத்து மனிதனின் சிந்தனையில் கூட உதிக்காத பல்வேறு முன்னேற்றங்களும் வளர்ச்சிகளும் ஏற்பட்டு விட்ட காலம்.

ஆனால் இத்தனை முன்னேற்றங்களும் இத்தனை வளர்ச்சிகளும் இத்தனை வளங்களும் வசதி வாய்ப்புகளும் கடந்த காலத்தவர்களை விட இக்காலத்தவர்களுக்கு மனநிறைவைத் தந்திருக்கிறதா? என்றால் இல்லை என்று அடித்துச் சொல்லி விட முடியும். அந்தளவு மனநிறைவில்லாத வாழ்க்கை. எந்த வசதி வாய்ப்புகளும் அமையப்பெறாத அந்த காலத்து மக்களுக்கு இருந்த மன நிறைவில் பாதியளவு கூட எல்லா வளங்களும் பெற்று அனுபவித்துக் கொண்டிருக்கிற இன்றைக்கு நமக்கு இல்லை என்பது தான் நிதர்சன மான உண்மை.  

கை நிறைய வருமானம் பார்க்கிற ஒருவரை அழைத்து உங்கள் வாழ்க்கை எப்படி போகிறது ? என்று கேட்டால் ஏதோ போகுது என்று சொல்வார்.தொழில் செய்கிற ஒரு தொழிலதிபரை அழைத்து உங்க வாழ்க்கை எப்படி இருக்கிறது ? என்று கேட்டால் சொல்ற மாதிரி ஒன்னும் இல்லை என்று கூறுவார்.இப்படி வளமாக,செழிப்பாக வாழுபவர்களும் சரி,நடுத்தரமான நிலையில் இருப்பவரும் சரி தங்கள் வாழ்க்கை குறித்து கேட்கப்பட்டால் இப்படி சலிப்போடும், இருக்கத் தோடும் பதில் சொல்வதை நாம் பார்க்கலாம். இந்த சலிப்பான வார்த்தைகளுக்கும் மனநிறைவில்லாத வாழ்க்கைக்கும் இறை நம்பிக்கையில் ஏற்பட்ட பலவீனம், இருப்பதைக் கொண்டு போதுமாக்கிக் கொள்ளாத தன்மை என்றெல்லாம் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் இதற்கு மிக முக்கியமான காரணம் நபி அவர்களும் ஸஹாபாக்களும் அனைத்து நபிமார்களும் எந்த பரக்கத்தை கேட்டார்களோ ஆசைப்பட்டார்களோ அந்த பரக்கத்தை நாம் நம் வாழ்வில் பெற்றுக் கொள்ள வில்லை.பரக்கத் இல்லாத காரணத்தினால் தான் நம் வாழ்க்கை மனநிறைவைத் தர வில்லை என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

பரக்கத் குறித்த கட்டுரைகள்

இது தான் பரக்கத் 

பரக்கத்தைப் பெற்றுத்தரும் காரியங்கள்

No comments:

Post a Comment