Pages

Pages

Monday, March 7, 2022

மது ஏன் ஹராம்

 


الحمد لله والصلوة والسلام علي رسول الله سيدنا محمد واله وصحبه اجمعين اما بعد قال الله تعالي في القران العظيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمة للعالمين

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் வல்லோன் அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன்.சாந்தியும் சமாதானமும் எங்கள் உயிரிலும் மேலான கண்மனி நாயகம் ரசூலுல்லாஹி ஸல் அவர்களின் மீதும் பரிசுத்தமான அவர்களின் குடும்பத்தார் மீது உன்னதமான அவர்களின் தோழர்கள் மீதும் உண்டாகட்டுமாக.


மாணவர்களின் பேச்சுத்திறனை வளர்க்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த மன்றத்தில் இஸ்லாத்தில் மது ஏன் ஹராம் என்ற தலைப்பில் பேசுவதற்காக நான் வந்திருக்கிறேன்.

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! இஸ்லாமிய மார்க்கம் மனிதர்களுக்கு ஏற்ற இயற்கையான மார்க்கம். மனிதர்களின் நலவுகளில் அக்கரை செலுத்துகிற ஓர் உன்னத மார்க்கம். படைத்தோனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் சொல்வதோடு நின்று விடாமல் படைப்பினங்களின் வாழ்வியல் விஷயங்களிலும் கவனம் செலுத்தும் ஓர் உயரிய மார்க்கம்.இஸ்லாத்தினுடைய தனித்தன்மை என்னவென்றால் 

தனி மனிதனுக்கோ ஒரு சமூகத்திற்கோ எதுவெல்லாம் நலவுகளாக அமைந்திருக்குமோ அவைகளையெல்லாம் செய்ய வேண்டும் என்று ஏவும். தனி மனிதனுக்கோ ஒரு சமூகத்திற்கோ எதுவெல்லாம் தீமை களாக, அழிவைத்தரும் விஷயங்களாக இருக்குமோ அவைகளை யெல்லாம் செய்யக்கூடாது என்று தடுக்கும்.

அதன் அடிப்படையில் எந்த உணவுகளை அல்லாஹ் ஆகுமாக்கி யிருக்கிறானோ அவைகளில் மனிதனுக்கு நலவும் பயனும் நிச்சயம் இருக்கும். அல்லாஹ் எந்த உணவுகளை ஹராமாக்கியிருக்கிறானோ அவைகளில் தீமையும் ஆபத்தும் நிச்சயம் இருக்கும் என்று இமாம்கள் கூறுகிறார்கள். 

இதனை நன்கு உணர்ந்து கொண்டால் இஸ்லாம் மதுவை ஏன் தடை செய்திருக்கிறது என்பது நமக்கு தெளிவாகப் புரியும். 

அன்பிற்குரியவர்களே! மனித சமூகத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் தீமைகளில் மது முதலிடம் பிடித்திருக்கிறது.மனிதனின் உடலுக்கும் உயிருக்கும் பொருளுக்கும் மானத்திற்கும் பங்கம் விளைவிப்பதில் மதுவுக்கு நிகர் மதுவே என்று சொல்லும் அளவிற்கு அதன் தீமைகள் கடினமானது. அதன் மூலம் தனி மனிதன், குடும்பம், சமூகம் என அனைத்துத் தரப்பினரும் எண்ணற்ற துயரங்களை சந்தித்து வருவதை அன்றாடம் பார்த்தும் படித்தும் வருகிறோம். 

மனிதனுக்கு நினைவு தெரிந்த நாள் முதல் சமுதாயத்தின் கொள்ளை நோயாக இருந்து வருவது போதை தரும் இந்த மது. உலகம் முழுவதும் உள்ள மனித சமுதாயத்தின் அழிவுக்கு காரணமாக அமைந்திருப்பது இந்த மது. இன்று மனித சமுதாயம் சந்தித்துக் கொண்டிருக்கும் ஒட்டு மொத்த பிரச்னைகளுக்கும் ஆணிவேராக அமைந்திருப்பது இந்த மது.உலகில் பல்கிப் பெருகி வரும் குற்றங்களுக்கு காரணமாக இருப்பது இந்த மது. அதிகமான மக்களை நடுத்தெருவுக்கு கொண்டு வருவது இந்த மது. மக்களின் உளச்சோர்வுக்குக் காரணமாக இருப்பது இந்த மது. இன்றைக்கு நிகழும் அதிகமான மரணங்களுக்குக் காரணமாக இருப்பதும் இந்த மது தான்.

மட்டுமல்ல, இஸ்லாம் பாவங்களை தடை செய்வதோடு அந்த பாவத்திற்கு எது தூண்டுதலாக, உருதுணையாக அமைந்திருக்குமோ அதையும் தடை செய்கிறது. விபச்சாரத்தை தடை செய்வது போல் அதற்குத் தூண்டுதலாக இருக்கும் பார்வையையும் தடை செய்திருப்பதை நாம் பார்க்கலாம். இந்த அடிப்படையிலும் இஸ்லாம் மதுவை தடை செய்கிறது. காரணம் அது எல்லா பாவங்களுக்கும் அடிப்படையாக, அதற்குத் தூண்டுதாக இருக்கிறது.

அண்ணலம் பெருமானார் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ;

اِجْتَنِبُوا الْخَمْرَ فَإِنَّهَا أُمُّ الْخَبَائِثْ

“மதுவை தவிர்ந்து கொள்ளுங்கள்.நிச்சயமாக அது பாவங்கள் அனைத்திற்கும் தாயானதாகும்” 

அன்பானவர்களே! மனிதன், தான் உண்மையில் அந்தஸ்துள்ளவனாக இல்லா விட்டாலும் தனக்கும் ஒரு சபையில் கண்ணியம் கிடைக்க வேண்டும் என்று விடும்புகிறான்.ஒருவன் உண்மையில் சாதாரண மனிதனாக இருந்தாலும் ஒரு சபையில் அவனின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுவதை விரும்புவதில்லை. இது மனித இயல்பு. ஆனால் மது மனிதனின் அறிவைப் போக்கி விடுகிற காரணத்தினால் அந்த கண்ணியத்தை இழக்கச் செய்கிறது.

நீங்கள் மது குடித்திருக்கிறீர்களா ? என்று ஹள்ரத் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது இஸ்லாத்திற்கு முன்பும் சரி இஸ்லாத்திற்கு வந்த பிறகும் சரி நான் மது அருந்தியதில்லை என்றுரைத்தார்கள்.இஸ்லாத்திற்கு முன்பு தான் அது ஆகுமாக்கப் பட்டிருந்ததே என்று வினவப்பட்ட போது, அது மனிதனுக்கு இழிவைத் தரும், மனிதனின் அறிவைப்போக்கி விடும் என்று பதிலளித்தார்கள்.

மது அதனை குடிப்பவரின் ஆறிவைப் போக்கி விடுகிறது என்பதை இன்றைய ஆய்வும் நிரூபணம் செய்திருக்கிறது.

மதுவினால் விளையும் தீமைகளுக்கும் ஆபத்துகளுக்கும் அளவே இல்லை.அதன் மூலம் ஏற்படும் மிக முக்கியமான ஆபத்து,மனித மூளையின் Inhibitory Centre அதாவது தடை செய்யும் மையத்தை  – இயங்க விடாமல் செய்து விடுகிறது.

மனித மூளையில் தடை செய்யும் மையம் என்ற ஒரு பகுதி இருக்கிறது.மனிதனின் உடம்பில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு பணி உண்டு. எந்தக் காரியங்களை செய்வது தவறோ அந்த காரியங்களை தவறு என்று உணர்த்தி அக்காரியங்களை செய்ய விடாமல் தடுப்பது தான் இந்த  தடை செய்யும் மையத்தின் பணி. உதாரணத்திற்கு தனது பெற்றோரையோ அல்லது தனக்கு மூத்தவர்களையோ கெட்ட வார்த்தைகளால் ஏசக்கூடாது என்று ஒரு மனிதனைத் தடுப்பது தடை செய்யும் மையத்தின் வேலை. ஒரு மனிதன் தன் இயற்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள விரும்பினால் – அதனை பொது இடத்தில் செய்யக்கூடாது என்று தடுப்பது இந்த தடை செய்யும் மையத்தின் வேலை. மனித மூளையில் அமைந்திருக்கும் இந்த தடை செய்யும் மையத்தின் பணி மது பானங்களால் பாதிக்கப்படுகிறது.அதனால் தான் குடிபோதையில் இருக்கும் மனிதன் தான் என்ன செய்கிறோம் என்று அறியாமல் தன் மனம் போன போக்கில் செயல் படுகிறான்.

இப்படி மதுவினால் ஏற்படுகின்ற விளைவுகளையும் ஆபத்துக்களையும் அடுக்கிக் கொண்டே போகலாம்.அந்த விளைவுகளிலிருந்தும் ஆபத்துக்களிலிருந்தும் மனித சமூகத்தைக் காக்க வேண்டும் என்பதற்காகத்தான் மார்க்கம் மதுவை தடை செய்திருக்கிறது. வல்லோனாம் அல்லாஹ் அந்த மதுவிலிருந்தும் அதனால் விளையும் தீங்குகளிலிருந்தும் நம்மையும் நம் சமூகத்தையும் காத்தருள்வானாக ஆமீன்.


No comments:

Post a Comment