Pages

Pages

Monday, March 7, 2022

மஷ்வரா

 


الحمد لله والصلوة والسلام علي رسول الله سيدنا محمد واله وصحبه اجمعين اما بعد قال الله تعالي في القران العظيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وشاورهم في الامر

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் வல்லோன் அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன்.சாந்தியும் சமாதானமும் எங்கள் உயிரிலும் மேலான கண்மனி நாயகம் ரசூலுல்லாஹி ஸல் அவர்களின் மீதும் பரிசுத்தமான அவர்களின் குடும்பத்தார் மீது உன்னதமான அவர்களின் தோழர்கள் மீதும் உண்டாகட்டுமாக.


மாணவர்களின் பேச்சுத்திறனை வளர்க்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த மன்றத்தில் ஆலோசனை செய்வோம் என்ற தலைப்பில் பேசுவதற்காக நான் வந்திருக்கிறேன்.

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! உலகத்தில் மற்ற உயிரினங்களை விட மனிதனுக்கு அல்லாஹுத்தஆலா அறிவை அதிகமாகக் கொடுத்திருக்கிறான்.அவனது அறிவு நல்லதையும்,தீயதையும் தனித்தனியே பிரித்துக் காட்டினாலும் பல சமயங்களில் அவன் தன் மனோ இச்சைக்குக் கட்டுப்பட்டு தவறான வழிகளில் சென்று விடுகிறான்.

அந்த நேரத்தில் அவனுக்கு பிறரின் உபதேசங்களும்,ஆலோசனைகளும் தேவைப்படுகிறது.இதனை கவனத்தில் கொண்டு தான் இஸ்லாம் ஆலோசனை என்ற அருமையான திட்டத்தை அடையாளம் காட்டியுள்ளது.

சில சமயங்களில் நம் வாழ்க்கையில் சிக்கலான சந்தர்ப்பங்கள் ஏற்படும். அந்த சிக்கலிலிருந்து எப்படி வெளிவருவது என்று தெரியாமல் தவிக்கிற போது அல்லாஹுத்தஆலா நமக்கு நெருக்கமானவர்களின் மூலம் சில ஆலோசனைகளை கூறி நம்மை அந்த சிக்கலிலிருந்து விடுவிக்கிறான். 

அந்நேரத்தில் அறிவும், அனுபவமும் உள்ளவர்  நல்ல ஆலோசனைகளை சொன்னால் உடனே ஏற்க வேண்டும். நாம் நமது வாழ்வில் ஒரு காரியத்தை  செய்யலாமா? வேண்டாமா? என்று  தடுமாற்றம் வரும்போது  அதிலிருந்து தெளிவான முடிவு  எடுப்பதற்கு இரண்டு  வழிமுறைகளை  இஸ்லாம் கற்றுத் தருகிறது.ஒன்று: இஸ்திகாரா  மற்றொன்று  இஸ்திஷாரா. இந்த இரு காரியங்களில் எது எனக்கு இம்மைக்கும் மறுமைக்கும் நல்லதாக இருக்குமோ அதை எனக்கு சாதகமாக்கு.எது எனக்கு இம்மைக்கும் மறுமைக்கும் நல்லதாக இருக்காதோ அதை எனக்கு பாதமாகமாக்கு என்று தொழுது அல்லாஹ்விடம் பிரார்த்தை புரிந்து ஒரு காரியத்தை செய்வதற்குப் பெயர் இஸ்திகாரா.


எந்த விஷயத்தைக் செய்யலாம் என்று தடுமாற்றம் வரும் போது நம்மை விட அறிவிலும் அனுபவத்திலும் சிறந்த அதே சமயம் நம் மீது அக்கரை கொண்டவர்களிடம் ஆலோசனை கேட்டு ஒரு காரியத்தை செய்வதற்குப் பெயர் இஸ்திஷாரா. 


நபி [ஸல்] அவர்கள் தன் தோழர்களுக்கு பல சமயங்களில் ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார்கள். சில சமயங்களில் அவர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்றும் இருக்கிறார்கள். அதன் வழியே பிரச்சனைகளுக்கு தீர்வும் கண்டிருக்கிறார்கள்.

ஒரு நாள் நபி [ஸல்] அவர்கள் தன் தோழர்களை அழைத்துக் கொண்டு உம்ரா செய்வதற்காக மக்காவை நோக்கி வந்தார்கள். ஆனால் மக்கா வாசிகளோ அவர்களை மக்காவிற்குள் நுழைய அனுமதிக்க வில்லை. அந்நேரத்தில் ஹுதைபியா என்ற இடத்தில் அவர்களுக்கும் மக்கா வாசிகளுக்கும் மத்தியில் ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது.

ஆனால் அந்த உடன்படிக்கையின் நிபந்தனைகள் நபித்தோழர்களுக்கு திருப்தியளிக்க வில்லை. அவர்கள் ரொம்ப கவலையிலும் கோபத்திலும் இருந்தார்கள். நபி [ஸல்] அவர்கள், தோழர்களே உம்ரா செய்வதற்காக வந்தோம். ஆனால் முடியாமல் போனது. சரி பரவா இல்லா. எழுந்திருங்கள்.உங்களது பிராணிகளை அறுத்துப் பழியிடுங்கள், உங்கள் முடிகளை வெட்டிக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள்.ஆனால் யாரும் அதைக் கேட்க வில்லை.

நபியின் வார்த்தைக்கு மாறு செய்ய வேண்டும் என்பது நபித்தோழர்களின் நோக்க மல்ல. ஒப்பந்தத்தில் இருக்கும் நிபந்தனைகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்பது தான் அவர்களின் எதிர்பார்ப்பு. எனவே தான் யாரும் எழுந்திருக்க வில்லை.அவர்களை எப்படி சமாதானம் செய்வது என்று நபியவர்கள் யோசித்த போது அவர்களின் மனைவி உம்மு ஸலமா [ரலி] அவர்கள் தான், நபியே நீங்கள் முதலில் உங்களது பிராணியை அறுத்து, உங்கள் தலை முடியை வெட்டிக் கொள்ளுங்கள் என்று அருமையான ஆலோசனையை வழங்கினார்கள்.

அந்த ஆலோசனையை ஏற்று நபியும் அவ்வாறு செய்தார்கள்.அதைப் பார்த்த பிறகு அத்தனை தோழர்களும் அவ்வாறே செய்தார்கள்.ஹள்ரத் உம்மு ஸலமா ரலி அவர்கள் கூறிய இந்த ஆலோசனை தான் அன்றைக்கு நடக்கயிருந்த ஒரு போரை தடுத்து சமாதானம் ஏற்பட காரணமாக இருந்தது என்று இமாம்கள் கூறுகிறார்கள்.

நம் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை ஆலோசனைகள் தான் தடுக்கிறது.எனவே நாம் எந்த விஷயத்தை செய்வதாக இருந்தாலும் பிறரிடம் ஆலோசனை கேட்டு அதன்படி செயல்பட வேண்டும். அல்லாஹுத்தஆலா நம் வாழ்வில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு சிறந்த ஆலோசகர்களை நமக்கு அடையாளம் காட்டுவானாக ஆமீன்.  

    


No comments:

Post a Comment