Pages

Pages

Monday, March 7, 2022

நேரம்

 


الحمد لله والصلوة والسلام علي رسول الله سيدنا محمد واله وصحبه اجمعين اما بعد قال الله تعالي في القران العظيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் வல்லோன் அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன்.சாந்தியும் சமாதானமும் எங்கள் உயிரிலும் மேலான கண்மனி நாயகம் ரசூலுல்லாஹி ஸல் அவர்களின் மீதும் பரிசுத்தமான அவர்களின் குடும்பத்தார் மீது உன்னதமான அவர்களின் தோழர்கள் மீதும் உண்டாகட்டுமாக.



மாணவர்களின் பேச்சுத்திறனை வளர்க்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த மன்றத்தில் நேரங்களைப் பாதுகாப்போம் என்ற தலைப்பில் பேசுவதற்காக நான் வந்திருக்கிறேன்.

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹ் நமக்கு வாழ்க்கையைக் கொடுத்து அதை அனுபவிப்பதற்கு காலங்களையும் நேரங்களையும் தந்திருக்கிறான்.ஆனால் அல்லாஹ் தந்த அந்த காலங்களையும் நேரங்களையும் வீணடித்துக் கொண்டிருக்கிறோம். மறுமைக்கு பயன் தரும் காரியங்களிலும் ஈடுபடாமல் உலகிற்கு பயன்படும் காரியங்களிலும் ஈடுபடாமல் நேரங்களை வீணாக கழித்துக் கொண்டிருக்கிறோம். நாம் செய்யும் காரியம் ஒன்று மறுமைக்கு பயன் தர வேண்டும் அல்லது உலகிற்கு பயன் தர வேண்டும்.இரண்டுக்கும் பயன் தராத காரியமாக அமைந்து விடக்கூடாது. ஆனால் இன்றைக்கு நாம் செய்யக்கூடிய காரியங்களைப் பார்த்தால் அது மறுமைக்கும் பயன் தராது.உலகத்திற்கும் பயன் தராது.இப்படி நேரங்களையும் காலங்களையும் வீணாக கழிக்கின்ற ஒரு பழக்கம் இன்றைக்கு நம்மிடம் இருப்பதைப் பார்க்கலாம்.

பொதுவாக உலகத்தில் அல்லாஹ்வின் படைப்புக்களில் தீயதை நல்லதாகவும் நல்லதைத் தீயதாகவும் ஆக்கிக் கொள்ளும் விசேஷத் தன்மை மனிதனுக்கு மட்டுமே உண்டு. எத்தனையோ பிரச்சினைக்குரிய சூழ்நிலைகளையும்,தன்னிடம் இருக்கின்ற குறைபாடுகளையும் தனக்கு சாதகமாக்கி சாதிக்கவும் முடியும். அதேபோல் எத்தனையோ சாதகமான சூழ்நிலைகளையும், தன்னிடம் இருக்கும் சிறப்பம்சங்களையும் அலட்சியப்படுத்தி வீணடிக்கவும் முடியும். ஆனால் இன்றைக்கு நம்மைப் பொறுத்த வரை தீயதை நல்லதாக்கி சாதிப்பதை விட நல்லதையும் தீயதாக்கி வீணடிப்பது தான் அதிகமாக இருக்கிறது.

அந்த வகையில் மனிதனின் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட செல்போன் இன்டர்நெட் இவைகளெல்லாம் இன்றைக்கு வீணான காரியங்களிலும் தேவையில்லாத காரியங்களிலும் பயன்படுத்தப்பட்டு அதன் மூலம் பொன்னான நேரங்களும் காலங்களும் வீணாகிக் கொண்டிருக்கிறது.குறிப்பாக இன்றைய இளைஞர்கள் இந்த செல்போனுக்கும் இன்டர் நெட்டுக்கும் அடிமையாகிக் கொண்டிருக் கிறார்கள். அதன் மூலம் அவர்களுக்கே தெரியாமல் அவர்களின் நேரங்கள் வீணாகிக் கொண்டிருக்கிறது. 

நேரம் என்பது அல்லாஹ் நமக்களித்திருக்கிற விலைமதிக்க முடியாத மாபெரும் பொக்கிஷங்களில் ஒன்று.குர்ஆனில் அல்லாஹ் எத்தனையோ விஷயங்களை சத்தியமிட்டுக் கூறி அதன் முக்கியத்துவத்தை சொல்வதைப் போன்றே காலம் என்று ஒரு அத்தியாத்தை இறக்கி அதில் அந்த காலத்தின் மீது சத்தியமிட்டு கூறி காலத்தின் அருமையை காலத்தின் மகத்துவத்தை உலகிற்கு புரிய வைக்கிறான்.

والعصر ان الانسان لفي خسر

காலத்தின் மீது சத்தியமாக நிச்சமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான் என்று அல்லாஹ் தன் திருமறையில் குறிப்பிடுகிறான்.

பணத்தை செலவழித்தால் தான் குறையும்.கனத்தை இறக்கினால் தான் குறையும். சோப்பை உபயோகித்தால் தான் குறையும். தப்பை உணர்ந்தால் தான் குறையும்.ஆனால் நாம் எதுவுமே செய்யாமல் சும்மா இருந்தாலும் நேரம் குறைந்து விடும்.இன்றைக்கு பொழுதை கழிப்பதற்காக பொழுதை போக்குவதற்காக எதைஎதையோ செய்கிறோம்.சுற்றுலா செல்கிறோம்.கடை வீதிக்கு செல்கிறோம்.நண்பர்களோடு அரட்டையடிக் கிறோம்.இப்படி எத்தனையோ விஷயங்களை செய்கிற நம்மிடம் அதற்கான காரணத்தைக் கேட்டால் பொழுதைக் கழிப்பதற்காக என்று சொல்வோம். ஆனால் பொழுதுகள் என்பது கழிக்க வேண்டிய விஷயமல்ல. அதை கழிக்க வேண்டிய தேவையும் இல்லை.நாம் எதுவும் செய்யா விட்டாலும் அது தானாக கழிந்து விடும். கரைந்து விடும்.

ஒரு நிமிடம் என்று நாம் சாதாரணமாக நினைக்கின்ற அந்த 60 நொடிகளில் தான் எண்ணிப்பார்க்க முடியாத எத்தனையோ விஷயங்கள் உலகத்தில் நடக்கிறது.ஒரு நிமிடத்தில் நாம் வாழும் பூமி 950 மைல்கள் தன்னைத்தானே சுற்றி விடுகின்றன. ஒரு நிமிடத்தில்  14,000 கன அடி மழை ஒரு மாநிலத்தில பொழிந்து விடுகின்றது. ஒரு நிமிடத்தில் 35,000 டன் தண்ணீர் கடலில் கலந்து விடுகின்றது. ஒரு நிமிடத்தில் 114 குழந்தைகள் பிறக்கிறது. ஒரு நிமிடத்தில் 100 பேர் இறக்கிறார்கள். பல்லாண்டுகளுக்கு முன்னால் ஜெர்மானிய அறிஞர் ஒருவர் வெளியிட்ட புள்ளி விபரம் தான் இது. மிக வேகமாக வளர்ந்து வரும் இன்றைய நவீன காலகட்டத்தில் இதன் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும்.எனவே நம் வாழ்வில் எந்த நமிடத்தையும் எந்த நொடிப்பொழுதையும் சாதாரணமாக எடை போட்டு விடக்கூடாது.

உலகத்தில் எதை வேண்டுமானால் இழந்து விட்டால் அதை திரும்பப் பெற்று விட முடியும். கல்வி, ஆற்றல், செல்வம், பதவி இப்படி எதையும் திரும்ப பெற முடியும்.ஆனால் இழந்த ஒரு நிமிடத்தை அல்லது ஒரு விநாடியை மீண்டும் பெறுவது நடக்காத காரியம்.

Time is gold  என்று சொல்வார்கள்.ஆனால் இது அர்த்தமற்ற வார்த்தை நேரத்தின் அருமையை புரிய வைப்பதற்கு பொருந்தாத வார்த்தை.காரணம் தங்கத்தை தேவைப்பட்டால் வாங்கிக் கொள்ளலாம் தேவையில்லை யென்றால் அதை விற்று விடலாம்.ஆனால் நேரம் போய் விட்டால் உலகத்தையே கொட்டிக் கொடுத்தாலும் அதை வாங்க முடியாது.விற்கவும் முடியாது. தங்கத்தை சேமித்து வைக்கலாம்.ஆனால் நேரத்தை சேமித்து வைக்க முடியாது. தங்கத்தை தேவையில்லை என்று அதை பயன்படுத்தாமல் பாதுகாத்து வைக்கலாம்.ஆனால் நேரம் நாம் பயன்படுத்தினாலும் பயன்படுத்தா விட்டாலும் அதை பாதுகாத்து வைக்க முடியாது.

எனவே தங்கத்தை விட மேலான நேரத்தை நாம் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.நமக்கோ நம் குடுபத்திற்கா அல்லது நம் சமூகத்திற்கோ பயன் தரும் வகையில் அதை அமைத்துக் கொள்ள வேண்டும்.அல்லாஹ் அருள் புரிவானாக


No comments:

Post a Comment