Pages

Pages

Thursday, April 21, 2022

ரமலான் இறுதிப்பத்து

 

அல்லாஹ்வின் மகத்தான அருளால் புனிதம் நிறைந்த ரமலான் மாதத்தின் 20 வது நோன்பில் இருக்கிறோம். ரமலான் மாதத்தின் மிக மிக முக்கிய பகுதியாக இருக்கிற இறுதிப் பத்தை இன்ஷா அல்லாஹ் இன்று இரவு அடைய இருக்கிறோம்.

உலகத்தில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு முக்கியமான தருணம் இருப்பதைப் போன்று  முக்கியமான கட்டம் இருப்பதைப் போன்று ரமலான் மாதத்தின் மிக முக்கியமான தருணம் மிக முக்கியமான கட்டம் அந்த மாதத்தின் மூன்றாம் பகுதியான அதன் இறுதிப் பத்து நாட்கள். ரமலான் சிறந்த மாதம் என்றால் அந்த ரமலானுக்கு அந்த சிறப்பைத் தந்தது. இந்த பத்து நாட்கள் தான்.ரமலான் உயர்வான மாதம் என்றால் அந்த ரமலானுக்கு அந்த உயர்வைத் தந்தது இந்த பத்து நாட்கள் தான். ரமலான் அருள் நிறைந்த மாதம் என்றால் அந்த ரமலானுக்கு அந்த அருள் கிடைக்க காரணமாக அமைந்தது இந்த பத்து நாட்கள் தான். இந்த பத்து நாட்களில் ஒரு நாளில் தான் ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவு என்று சொல்லப்படுகிற லைலத்துல் கத்ர் இரவு இருக்கிறது.அந்த இரவில் தான் உலகத் திருமறையான அல்குர்ஆன் ஷரீஃப் இறங்கியது.அந்த அல்குர்ஆன் இறங்கியதினால் தான் இந்த மாதம் உயர்வானது.இந்த மாதத்திற்கே பெருமை சேர்த்தது இந்த முத்தான பத்து நாட்கள் தான்.

மிகச்சிறந்த நாட்களை நம் வாழ்க்கையில் மிக பொன்னான நாட்களை கிடைப்பதற்கரிய மிக பொக்கிஷமான நாட்களை நாம் அடைய இருக்கிறோம். ரமலான் மாதத்தின் இந்த இறுதிப்பகுதி அமல்கள் செய்து அல்லாஹ்வின் அருளைப் பெருகிற மிகப்பொன்னான நேரங்கள். மிக மதிப்பிற்குரிய காலங்கள்.

அருமை நாயகம் ஸல் அவர்களின் அன்பு மனைவி ஹள்ரத் ஆயிஷா ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

 كان النبي إِذَا دَخَلَ الْعَشْرُ شَدَّ مِئْزَرَهُ وَأَحْيَا لَيْلَهُ وَأَيْقَظَ أَهْلَهُ 

ரமலான் மாதத்தின் இறுதிப்பத்து வந்து விட்டால் தன் கீழாடையை கட்டிக் கொள்வார்கள். அதன் இரவுகளை உ.யிர் பெறச் செய்வார்கள். தன் குடும்பத்தாரை எழுப்பி விடுவார்கள். (புகாரி ; 2024)

எதாவது களப்பணியில் எதாவது சமூகப்பணியில் அல்லது எதாவது சொந்தப்பணியில் மற்ற நாட்களில் இல்லாத அளவுக்கு மற்றவர்கள் இறங்காத அளவுக்கு ஒருவர் இறங்கி செயல்பட்டால் வேட்டியை கட்டிக் கொண்டு இறங்கி விட்டார், வரிந்து கட்டிக் கொண்டு இறங்கி விட்டார் என்று சொல்வோம்.அந்த மாதிரி அவர்கள் ரமலான் மாதத்தின் இந்த கடைசி பத்து நாட்களில் வரிந்தி கட்டிக் கொண்டு இறங்கி விடுவார்கள்.

ரமலான் மாதம் முழுக்க சிறப்பான நாட்கள் தான்.இந்த மாதத்தில் இருக்கிற ஒவ்வொரு நாட்களும் மகத்தான நாட்கள் தான். இருந்தாலும் இந்த மாதத்தில் மற்ற நாட்களில் இல்லாத அளவுக்கு இந்த கடைசி பத்தில் அதிக ஆர்வத்தையும் அதிக ஈடுபாட்டையும் வெளிப்படுத்தி இந்த நாட்களுக்கு பெருமானார் அவர்கள் முக்கியத்துவம் தந்த காரணம் உலகத்திருமறையாம் அல்குர்ஆன் அருளப்பெற்ற ஆயிரம் மாதங்களை விட சிறந்த மகத்துவம் பொருந்திய மலக்குமார்கள் உலகிற்கு வருகை தருகிற அல்லாஹ்விடமிருந்த விஷேசமான ஸலாம் இறங்குகிற புனிதமான லைலத்துல் கத்ர் இரவு இந்த நாட்களில் தான் இருக்கிறது.

تَحَرَّوْا لَيْلَةَ الْقَدْرِ فِي الْوِتْرِ مِنَ الْعَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ

 ரமலான் மாதத்தின் கடைசிப் பத்தில் ஒற்றைப் படை இரவுகளில் லைலத்துல் கத்ரை நீங்கள் தேடிக் கொள்ளுங்கள். (புகாரி ; 2017)

அந்த புனிதமான இரவை அடைந்து கொள்வதற்காகத்தான் நபி அவர்கள் இந்த இறுதிப்பத்தில் அதிக கவனம் செலுத்தினார்கள். நம்மையும் அதிக கவனம் செலுத்தும் படி வலியுறுத்தினார்கள்.

எனவே முந்திய இரு பகுதிகளை விட வரயிருக்கிற இந்த கடைசி பகுதியில்  இரவுத் தொழுகையில், குர்ஆன் ஓதுவதில், இஸ்திக்ஃபார் செய்வதில், துஆ செய்வதில், தஸ்பீஹாத்கள் செய்வதில் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதுவரை நாம் நஃபிலான தொழுகைகள் தொழுதிருப்போம். இந்தப்பகுதில் அதை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். இதுவரை நாம் குர்ஆன் ஓதியிருப்போம். இந்தப்பகுதியில் அதில் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதுவரை நிறைய துஆக்கள் செய்திருப்போம். இந்தப்பகுதியில் அதில் இன்னும் அதிக ஈடுபாட்டை காட்ட வேண்டும்.

துணி எடுப்பது பெருநாளுக்காக மற்ற தயாரிப்புகளை செய்வது என்று இந்த பொன்னான நாட்களை வீணடித்து விடாமல்  பாழ்படுத்தி விடாமல் இந்த நாட்களை பயன்படுத்திக கொள்ள வேண்டும்.அதிக நன்மைகளால் இந்த நாட்களை நிரப்ப வேண்டும்.

 (( كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَجْتَهِدُ فِي الْعَشْرِ الأَوَاخِرِ مَا لاَ يَجْتَهِدُ فِي غَيْرِهِ

நபி அவர்கள் மற்ற நாட்களில் இல்லாத அளவிற்கு ரமலான் மாதத்தின் இறுதிப் பத்து நாட்களில் அதிகம் முயற்சிப்பவர்களாக இருந்தார்கள். (முஸ்லிம்  ; 1175)

குறிப்பாக இரவுத்தொழுகையில் அதிக கவனமும் ஈடுபாடும் செலுத்த வேண்டிய காலங்கள். இரவுத்தொழுகையில் ஏராளமான எண்ணிலடங் காத நன்மைகள் இருப்பதாக ஹதீஸ்களில் பார்க்க முடிகிறது.

عليكم بقيام الليل فإنه دأب الصالحين قبلكم، وقربة إلى الله تعالى، ومكفرة للسيئات، ومنهاة عن الإثم،ومطردة للداء عن الجسد

இரவு நின்று வணங்குவதை நீங்கள் அவசியமாக்கிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அது உங்களுக்கு வாழ்ந்த நல்லோர்களின் பழக்கமாகும். அல்லாஹ்வின் அளவில் நெருக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகும். பாவங்களை அளிக்கக்கூடியதாகும். குற்றங்களிலிருந்து தடுக்கக்கூடியதாகும்.உடலிலிருந்து நோயை விரட்டக்கூடியதாகும். (பைஹகி)

ரமலான் மாதத்தின் முழு நன்மையையும் இந்த மாதத்தின் முழு பலனையும் நமக்குப் பெற்றுத் தருவது இந்த மாதத்தில் நாம் தொழுகிற இரவுத் தொழுகை தான்.

(قال العلماء واعلم أن المؤمن يجتمع له في شهر رمضان جهادان لنفسه: جهاد بالنهار على الصيام، وجهاد بالليل على القيام، فمن جمع بين هذين الجهادين وُفِّي أجره بغير حساب

ஒரு முஃமின் ரமலான் காலங்களில் இரு விஷயங்களில் கவனம் செலுத்துவான்.1 பகலில் நோன்பு வைப்பது. இரவில் நின்று வணங்குவது. இந்த இரண்டையும் யார் ஒன்றிணைத்துக் கொள்கிறாரோ அவர் கணக்கில்லாத நற்கூலியைப் பெற்றுக் கொள்வார் என்று மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள்.

وقال النبي : { في الجنة غرفة يرى ظاهرها من باطنها، وباطنها من ظاهرها } فقيل: لمن يا رسول الله؟ قال: { لمن أطاب الكلام، وأطعم الطعام، وبات قائماً والناس نيام } [رواه الطبراني والحاكم وصححه الألباني].

சுவனத்திலே ஒரு அறை இருக்கிறது.அதன் உள்ளிருந்து வெளிப் பகுதியையும் வெளியே இருந்து உள் பகுதியையும் பார்க்க முடியும்.அது யாருக்கு கிடைக்கும் என்று நபியிடம் கேட்கப்பட்டது.அதற்கு நபியவர்கள், நல்ல பேச்சிக்களை பேசி பிறருக்கு உணவளித்து மக்கள் தூங்கும் வேளையில் நின்று வணங்குபவருக்கு கிடைக்கும் என்றார்கள். {தப்ரானி}

وقال : { أتاني جبريل فقال: يا محمد، عش ما شئت فإنك ميت، وأحبب من شئت فإنك مفارقه، واعمل ما شئت فإنك مجزي به، واعلم أن شرف المؤمن قيامه بالليل، وعزه استغناؤه عن الناس

ஒரு முஃமினின் உயர்வு இரவு வணக்கமாகும்.அவனது கண்ணியம் மக்களை விட்டும் தேவையற்றிருப்பது. {ஹாகிம்}

அதனால் நபி அவர்கள்  ரமலானில் மட்டுமல்ல. எல்லா நாட்களில் இரவுத் தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருந்தார்கள்.

وعن عائشة رضي الله عنها قالت: { كان النبي يقوم من الليل حتى تتفطر قدماه. فقلت له: لِمَ تصنع هذا يا رسول الله، وقد غُفر لك ما تقدم من ذنبك وما تأخر؟ قال: أفلا أكون عبداً شكوراً؟ } [متفق عليه

தன் கால்கள் நீங்குகிற அளவிற்கு நபி அவர்கள் இரவு வணக்கத்தில் ஈடுபவர்களாக இருந்தார்கள்.உங்களது முன் பின் பாவங்கள் மன்னிக்கப் பட்டிருக்கும் நிலையில் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்ட போது நான் அல்லாஹ்விற்கு நன்றியுள்ள அடியானாக ஆக வேண்டாமா என்றார்கள். {புகாரி,முஸ்லிம்}

وعن حذيفة قال: { صليت مع النبي ذات ليلة، فافتتح البقرة، فقلت: يركع بها، ثم افتتح النساء فقرأها، ثم افتتح آل عمران فقرأها، يقرأ مُتَرَسلاً، إذا مرّ بآية فيها تسبيح سبّح، وإذا مرّ بسؤال سأل، وإذا مر بتعوّذ تعوذ... الحديث } [رواه مسلم

ஒரு சமயம் நான் நபி அவர்களோடு தொழுதேன்.பகரா சூராவை ஓத ஆரம்பித்த நபியவர்கள் நிஸா சூரா வரைக்கும் மெதுவாக ஓத வேண்டிய விதத்தில் ஓதினார்கள்.தஸ்பீஹின் வசனம் வந்தால் தஸ்பீஹ் செய்வார்கள்.துஆவின் இடம் வந்தால் துஆ  கேட்பார்கள். பாதுகாப்பு தேட வேண்டிய இடம் வந்தால் பாதுகாப்பு தேடுவார்கள் என ஹுதைஃபா ரலி அவர்கள் கூறுகிறார்கள். {முஸ்லிம்}

وعن ابن مسعود قال: { صليت مع النبي ليلة، فلم يزل قائماً حتى هممت بأمر سوء. قيل: ما هممت؟ قال: هممت أن أجلس وأَدَعَهُ ! } [متفق عليه

இப்னு மஸ்வூது ரலி அவர்கள் கூறுகிறார்கள் ; ஒரு முறை நபி ஸல் அவர்களுடன் தொழுதேன்.நான் தீய விஷயத்தை எண்ணும் அளவிற்கு நின்று கொண்டே இருந்தார்கள்.என்ன தீய எண்ணம் என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், தொழுகையை முறித்து அமர்ந்து விடலாமா என்று எண்ணினேன் என்றார்கள். {புகாரி}

அதனால் இந்த இறுதிப்பகுதியில் இரவு நேரத் தொழகைக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும்.இது இந்த நாட்களில் செய்ய வேண்டிய முக்கியமான அமல்களில் ஒன்று.

அருள் நிறைந்த லைலத்துல் கத்ர் இடம் பெற்றிருக்க இந்த பாக்கியமான நாட்களில் அந்த இரவை அடைந்து கொள்வதற்காக செய்யப்படுகின்ற மிக முக்கியமான அமல்களில் இரண்டாவது அமல் இஃதிகாஃப்.

ان النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله عز وجل ثم اعتكف أزواجه من بعده . )

நபி அவர்கள் மரணிக்கும் வரை ரமளான் மாதத்தின் கடைசிப் பத்தில் இஃதிகாஃப் இருக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் மரணித்த பிறகு அவர்களின் மனைவிமார்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். (புகாரி,முஸ்லிம்)

وفي العام الذي قبض فيه صلى الله عليه وسلم اعتكف عشرين يوماً البخاري

நபி அவர்கள் ஒவ்வொரு ரமளான் மாதமும் பத்து நாட்கள் இஃதிகாஃப் இருப்பார்கள். மரணித்த வருடத்திலே இருபது நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி)

من اعتكف يوما ابتغاء وجه الله جعل الله بينه وبين النار ثلاث خنادق أبعد مما بين الخافقين ) (5345). والخافقان المشرق والمغرب .

அல்லாஹ்வின் திருப்தியை நாடி ஒருவர் ஒரு நாள் இஃதிகாஃப் இருந்தால் அவருக்கும் நரகிற்குமிடையில் அல்லாஹ் மூன்று ஹன்தக் தூரத்தை ஆக்கி விடுகிறான்.ஒரு ஹன்தக் என்பது கிழக்கு மேற்கிடையே உள்ள தூரமாகும். {தப்ரானி}

எந்நேரமும் குடும்பம் சமூகம் நன்பர்கள் சொந்த பந்தங்கள் என்று பல தொடர்புகளோடு இருக்கிற ஒரு மனிதர் அந்த அத்தனை தொடர்புகளையும் துண்டித்து குறிப்பாக இணையதள தொடர்புகளைத் துண்டித்து இறைவன் இல்லத்தில் அந்த இறைவனோடு மட்டும் தொடர்பு கொள்கிற இந்த இஃதிகாஃபில் இருக்கிற நன்மைகளையும் பாக்கியங்களையும் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

எதுவும் இல்லா விட்டாலும் இந்த ஆன்லைன் தொடர்பு இல்லாமல் இருப்பதே மிகப்பெரிய கைரு தான்.இன்றைக்கு நவீன ஊடகங்களின் மோகம் அதிகமாகி விட்டது.இணையதளத்தின் மோகம் அதிகமாகி விட்டது. இன்றைக்குள்ள தலைமுறைகள் அன்ட்ராயர் இல்லாம கூட இருந்து விடுவார்கள். ஆனால் ஆன்ட்ராயிடு போன் இல்லாமல் இருக்க மாட்டார்கள். wife இல்லாம கூட இருந்து விடுவார்கள். ஆனால் wifi இல்லாமல் இருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு இன்றைக்குள்ள நவீன ஊடகங்கள் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது.இந்த அடிமைத்தனத்திலிருந்து சற்று ஓய்வெடுப்பதற்கும் மோசமான இந்த நவீன மோகத்திலிருந்து சற்று தள்ளி இருப்பதற்கும் இந்த இஃதிகாஃப் துணை புரிகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக ஊரிலேயே சிறந்த இடம் என்று மாநபி அவர்கள் குறிப்பிட்டுக் காட்டிய இறை இல்லத்தோடு நம்மை இணைத்து வைக்கும் பணியை இந்த இஃதிகாப் செய்கிறது.

இறை இல்லங்களோடு என்றைக்கும் நெருங்கி இருப்பது, இறை இல்லங்களோடு என்றைக்கும் அன்மித்து இருப்பது அந்த இறை இல்லங்களின் அதிபதியான இறைவனோடு நாம் நெருங்குவதற்கு காரணமாக அமையும்.

பள்ளிவாசலோடு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டவர்கள் அல்லாஹ்வின் விருந்தாளிகள் மட்டுமல்ல அல்லாஹ்வின் பிரியத்திற்குரியவர்கள். அதனால் தான் அவர்கள் வராத போது அவர்களை அல்லாஹ் தேடுகிறான்.அவர்கள் வந்தால் மகிழ்கிறான்.

ما توطَّنَ رجلٌ مسلمٌ المساجدَ للصَّلاةِ والذِّكرِ إلَّا تبشبشَ اللَّهُ لَهُ كما يتبشبشُ أَهلُ الغائبِ بغائبِهم إذا قدمَ عليهم

வீட்டை விட்டு வெளியே சென்றவர் திரும்பி வரும் போது வீட்டிலுள்ளவர்கள் மகிழ்ச்சியடைவதைப் போன்று தொழுவதற்காகவும் அல்லாஹ்வை நினைவு கூறுவதற்காகவும் அல்லாஹ்வின் இறை இல்லங்களுக்கு வருவதை யார் வழமையாக்கிக் கொள்கிறாரோ அவரைப் பார்த்து அல்லாஹ் மகிழ்ச்சியடைகிறான். (இப்னுமாஜா ; 800)

இப்படி இஃதிகாப் நமக்கு எண்ணற்ற நன்மைகளைப் பெற்றுத்தருகிறது. பத்து நாள் இருப்பது முடியாத காரியமாக இருந்தால் குறைந்த பட்சம் ஒரு நாளாவது இருக்க வேண்டும்.

ஏனெனில் நபி அவர்கள் தன் வாழ்நாளில் விடாமல் தொடர்ந்து செய்த அமல்களில் ஒன்று இஃதிகாஃப்.

وقال الزهري رحمه الله : ( عجباً للمسلمين ! تركوا الاعتكاف ، مع أن النبي صلى الله عليه وسلم ، ما تركه منذ قدم المدينة حتى قبضه الله عز وجل )

இமாம் ஜுஹ்ரீ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் : நபி அவர்கள் மதினா வந்ததிலிருந்து விடாமல் செய்த ஒரு அமல் இஃதிகாஃப். அப்படியிருக்க அதில் கவனம் செலுத்தாமல் விட்டு விடுகிற முஸ்லிம்களைப் பார்த்து நான் ஆச்சரியப்படுகிறேன்.

இறைவனின் நெருக்கத்தைப் பெற்றுத்தருகின்ற ஒரு வாய்ப்பும் சந்தர்ப்பமும் இஃதிகாபில் கிடைக்கிறது.இந்த அரிய வாய்ப்பையும் சந்தர்ப்பத்தையும் நாம்  இழந்து விடக்கூடாது,நழுவ விட்டு விடக்கூடாது.வாழ்க்கையில் வாய்ப்புக்களும் சந்தர்ப்பங்களும் எல்லா நேரத்திலும் எல்லோருக்கும் கிடைப்பதில்லை.அல்லாஹ் அவ்வாறு கொடுப்பதும் இல்லை.வாய்ப்புகள் கிடைக்கிற போது அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.சந்தர்ப்பங்கள் அமைகிற போது அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இல்லையென்றால் ஒரு நேரத்தில் எண்ணம் இருக்கும் ஆசை இருக்கும்.ஆனால் அப்போது அதை செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்காமல் போய் விடும். அப்போது வருந்திப் பயன் இல்லை.

எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் லைலத்துல் கத்ரை அடைந்து கொள்ள தவ்ஃபீக் செய்வானாக

5 comments: