Pages

Pages

Thursday, April 14, 2022

ஜகாத்தும் அதன் சட்டமும்

 

புனிதம் நிறைந்த ரமலான் மாதத்தின் இரண்டாவது ஜும்ஆவில் நாம் அமர்ந்திருக்கிறோம். அல்லாஹுத் தஆலா இதுவரை நாம் செய்த எல்லா அமல்களையும் ஏற்று நன்மைகளை வாரி வழங்குவானாக. எஞ்சியிருக்கிற நாட்களில் எண்ணற்ற அமல்களை செய்வதற்கு தவ்ஃபீக் செய்வானாக.

ரமலான்  நன்மைகளின். மாதம் நன்மைகளை கொல்லையடிக்கிற மாதம். ஒன்றிற்கு பத்தாக நூறாக ஆயிரமாக இலட்சமாக கோடியாக இன்னும் கணக்கில்லாமல் ரப்புல் ஆலமீன் அடியார்களுக்கு  நன்மைகளை அள்ளித் தருகிற உன்னமான மாதம்.அந்த பன்மடங்கு நன்மைகளை அடைந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நிறைய அமல்களை செய்கிறோம். அதில்  ஒன்று தான் நம் பொருளாதாரக் கடமையாக இருக்கிற ஜகாத்.

அல்லாஹ் கடமையாக்கியிருக்கிற ஒவ்வொரு கடமைகளுக்கும் ஒவ்வொரு நேரம் உண்டு. ஒவ்வொரு காலம் உண்டு.அதை அந்த காலத்தில் தான் செய்ய முடியும், செய்ய வேண்டும். தொழுகையை எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு தொழுகைக்கும் ஒரு நேரம் தரப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் முறையாக தொழ வேண்டும். தொழக்கூடாத நேரம் என்று ஒரு சில நேரங்களை மார்க்கம் அடையாளப்படுத்தியுள்ளது. அந்த நேரத்தில் தொழக்கூடாது. ஹஜ்ஜுடைய காலம் துல்ஹஜ் மாதம். அதை அதில் தான் நிறைவேற்ற முடியும். கடமையான நோன்பின் காலம் இந்த ரமலான். அதை இந்த மாதத்தில் தான் நோற்க வேண்டும். அந்த அடிப்படையில் ஜகாத்தினுடைய காலம் அந்த பொருளுக்குரிய ஜகாத் நமக்கு எப்போது கடமையாகிறதோ அது தான் அதற்குரிய காலம். அது வருடத்தின் எந்த மாதத்தில் வேண்டுமானாலும் கடமையாகலாம். முஹர்ரமில் கடமையானால் அப்போது கொடுக்க வேண்டும், ரஜபில் கடமையானால் அப்போது கொடுக்க வேண்டும். எனவே ரமலான் மாதத்திற்கும் நாம் கொடுக்கும் ஜகாத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.  இருந்தாலும் ரமலான் நமக்கு நன்மைகளை பன்மடங்காக்கித் தருகிறது என்ற அடிப்படையில் ரமலானை ஜகாத்திற்குரிய மாதமாக நாம் அமைத்து வைத்திருக்கிறோம். அது ஒன்றும் தவறில்லை. இருந்தாலும் ஜகாத் கடமையாகி பல மாதங்கள் தாமதமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற விஷயத்தை ஆரம்பமாக உங்கள் கவனத்திற்கு தருகிறேன்.

உலகத்தில் எல்லா மதங்களும் எல்லா சமயங்களும் தர்மத்தை ஆர்வப்படுத்துகிறது, ஊக்கப்படுத்துகிறது. தர்மம் ஒரு புன்னியம் என்று சொல்கிறது. ஆனால் அது புன்னியம் மட்டுமல்ல கடமை என்று சொன்ன ஒரே மார்க்கம் இஸ்லாம்.

ஜகாத் என்பது உலகத்தில் நபி (ஸல்) அவர்களால் புதிதாக அறிமுகப்படுத்தப் பட்ட ஒரு கடமை அல்ல. நபி ஸல் அவர்களின் வருகைக்கு முன்பிருந்த  எல்லா நபிமார்களிடத்திலும் இந்த ஜகாத் இருந்ததாக குர்ஆன் கூறுகிறது.

இப்ராஹீம் அலை அவர்கள் மற்றும் அவர்களின் சந்ததிகளான இஸ்ஹாக், யஃகூப் அலை அவர்களைப் பற்றி இறைவன் கூறுகிறான் ;

وَجَعَلْنٰهُمْ اَٮِٕمَّةً يَّهْدُوْنَ بِاَمْرِنَا وَاَوْحَيْنَاۤ اِلَيْهِمْ فِعْلَ الْخَيْرٰتِ وَاِقَامَ الصَّلٰوةِ وَاِيْتَآءَ الزَّكٰوةِ‌ وَكَانُوْا لَـنَا عٰبِدِيْنَ ‌‏

அன்றி, நம் கட்டளைகளை (மக்களுக்கு) ஏவி நேரான வழியை அறிவிக்கக்கூடிய தலைவர்களாகவும் அவர்களை ஆக்கினோம். அன்றி, நன்மையான காரியங்களைச் செய்யும்படியும், தொழுகையைக் கடைப்பிடித் தொழுகும்படியும், "ஜகாத்" கொடுத்து வரும்படியாகவும் அவர்களுக்கு வஹீ மூலம் அறிவித்தோம். அவர்கள் அனைவரும் நம்மையே வணங்கிக் கொண்டிருந்தார்கள். (அல்குர்ஆன் : 21:73)

ஈஸா அலை அவர்களின் கூற்றை அல்லாஹ் குர்ஆனில் பதிவு செய்திருக்கிறான் ;

وَّجَعَلَنِىْ مُبٰـرَكًا اَيْنَ مَا كُنْتُ وَاَوْصٰنِىْ بِالصَّلٰوةِ وَالزَّكٰوةِ مَا دُمْتُ حَيًّا ‌

நான் எங்கிருந்தபோதிலும் அவன் என்னை மிக்க பாக்கியவானாகவே ஆக்குவான். நான் வாழும் வரையில் தொழுகையைக் கடைப்பிடித்தொழுகும் படியும், ஜகாத்து கொடுத்து வரும்படியும் அவன் எனக்கு உபதேசித்திருக்கிறான். (அல்குர்ஆன் : 19:31)

ஈஸா நபி அலை அவர்களைக் குறித்து அல்லாஹ் சொல்கிறான் ;

وَ كَانَ يَاْمُرُ اَهْلَهٗ بِالصَّلٰوةِ وَالزَّكٰوةِ وَكَانَ عِنْدَ رَبِّهٖ مَرْضِيًّا

அவர் தொழுகையைக் கடைப்பிடித்தொழுகும்படியும், ஜகாத்தும் கொடுத்து வரும்படியும் தன் குடும்பத்தினரை ஏவிக் கொண்டிருந்தார். அவர் தன் இறைவனால் மிகவும் விரும்பப் பட்டவராகவும் இருந்தார். (அல்குர்ஆன் : 19:55)

அல்பகரா சூராவின் ஒரு வசனத்தில்  அல்லாஹ் கூறுகிறான் ;

وَاِذْ اَخَذْنَا مِيْثَاقَ بَنِىْٓ اِسْرَآءِيْلَ لَا تَعْبُدُوْنَ اِلَّا اللّٰهَ وَبِالْوَالِدَيْنِ اِحْسَانًا وَّذِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰکِيْنِ وَقُوْلُوْا لِلنَّاسِ حُسْنًا وَّاَقِيْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّکٰوةَ  ثُمَّ تَوَلَّيْتُمْ اِلَّا قَلِيْلًا مِّنْکُمْ وَاَنْـتُمْ مُّعْرِضُوْنَ

மேலும், (நினைத்துப் பாருங்கள்:) இஸ்ராயீலின் சந்ததிகளிடம் "நீங்கள் அல்லாஹ்வைத் தவிர (வேறொன்றையும்) வணங்காதீர்கள். தாய், தந்தைக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நன்மை செய்யுங்கள். அனைத்து மனிதர்களிடமும் அழகாகப் பேசுங்கள் (அழகிய வார்த்தை சொல்லுங்கள்). தொழுகையை நிலைநிறுத்துங்கள். ஜகாத்து (மார்க்க வரி) கொடுத்து வாருங்கள்" என்று நாம் வாக்குறுதி வாங்கியபொழுது உங்களில் சிலரைத் தவிர மற்ற அனைவரும் புறக்கணித்து (மாறி) விட்டீர்கள். (எப்பொழுதும், இவ்வாறே) நீங்கள் புறக்கணித்தே வந்திருக்கின்றீர்கள். (அல்குர்ஆன் : 2:83)

ஜகாத் கொடுக்க வேண்டும் என்று யூதர்களிடம் வாக்குறுதி பெறப்பட்டதாக இறைவன் கூறுகிறான்.எனவே எல்லா நபிமார்களும் ஜகாத்தைக் கொண்டு ஏவப்பட்டிருக்கிறார்கள். ஜகாத்தை கொடுத் திருக்கிறார்கள், அதை வலியுறுத்தியும் இருக்கிறார்கள். நமக்கு முன்பிருந்த எல்லா சமூகத்தில் ஜகாத் இருந்தது. அப்படியானால் ஜகாத் விசயத்தில் இஸ்லாம் செயத புதுமை என்ன ?

ஜகாத்தில்  நபி  அவர்கள் நிகழ்த்திய சாதனை என்ன என்ற கேள்வி எழுகிறதுஇந்தக் கேள்விக்கான விடையில் தான் நபி உருவாக்கிய இஸ்லாமிய சமூகத்தின்  உன்னதமும் நபி ஸல் அவர்கள் செய்த ஈடுஇணையற்ற சாதனையும் அடங்கியிருக்கிறது.

இன்றையை யூத கிருத்துவ சமயத்தின் இறை வழிபாட்டு முறைகள் வணக்கங்கள் எதுவும் அவர்களுக்கு இறைத்தூதர்களால் சொல்லித் தரப்பட்டதல்ல. இறைத்தூதர்களால் அவர்களுக்கு கட்டளையிடப்பட்ட அத்தனை விஷயங்களையும் அவர்கள் காற்றில் பறக்க விட்டு விட்டார்கள்.அவைகளை தங்கள் மனம் போன போக்கில் வளைத்தும் திரித்தும் மாற்றி விட்டார்கள். எனவே அந்த  உத்தரவுகளெல்லாம் காலப்போக்கில் விரும்பினால் செய்யலாம் என்ற வகையில் நற்குணங்களாக மாறி விட்டன. ஜகாத் விசயத்திலும் இந்த விபரீதம் தான் நிகழ்ந்தது. கடமை விருப்பமாகவும் கருணையாகவும் தடம் மாறியது. எனவே   மற்ற சமயங்களில் ஜகாத் கடமையாக்கப் பட்டிருந்தாலும் அச்சமூக மக்கள் தமது வழிபாட்டுக் கடமைகள் அனைத்தையும் கை விட்ட்து போல ஜகாத் எனும் கடமையையும் தவற விட்டு விட்டார்கள்.

உலக வரலாற்றில் முஹம்மது நபி  அவர்கள் செய்த  மகத்தான சாதனை என்னவென்றால் அவர்கள் அன்று சொன்ன உத்தரவுகள் அனைத்தும் இன்றளவும் பின்பற்றப்படுகிறது. அந்த அடிப்படையில் ஜகாத்தும் நபி ஸல் அவர்கள் கற்றுத்தந்த முறைப்படி இன்றும் செய்யப்படுகிறது. ஒரு சிலர் அதில் கவனக்குறைவாக இருக்கலாம். குறை வைக்கலாம். ஆனால் இன்றும் அது பாதுகாக்கப்படுகிறது என்பது உண்மை.

சமுதாயத்தின் வறுமை ஒழிப்புக்கு இஸ்லாம் அறிமுகப்படுத்திய அற்புதமான திட்டம் இந்த ஜகாத்.  வறுமை என்பது மிக ஆபத்தானது. உலகில் நடக்கும் பெரும்பாலான குற்றங்கள் வறுமையை காரணமாக கொண்டு தான் நடக்கிறது. வறுமையின் உச்சம் சில நேரங்களில் இறை மறுப்பில் கொண்டு போய் சேர்த்து விடும் என்பது நபிமொழியாகும்.

இஸ்லாம் அறிமுகப்படுத்தியிருக்கிற இந்த ஜகாத் முறையாக வசூலிக்கப்பட்டு அதை முறையாக விநியோகம் செய்யப்பட்டால் நிச்சயமாக வறுமை நீங்கி விடும்.

அவ்வாறு நடத்தியும் காட்டினார்கள் நபித்தோழர்கள்.

لَا تَقُومُ السَّاعَةُ حتَّى يَكْثُرَ فِيكُمُ المَالُ، فَيَفِيضَ حتَّى يُهِمَّ رَبَّ المَالِ مَن يَقْبَلُ صَدَقَتَهُ،

பொருளுக்குரியவர் (ஜகாத் கொடுக்க ஆள் கிடைக்காமல்) தனது ஜகாத்தை யார் வாங்குவார் என்று கவலைப்படும் அளவு உங்களிடம் பொருளாதாரம் மிகைத்து நிரம்பி வழியும் ஒரு நிலை வரும் வரை கியாமத் ஏற்படாது. (புகாரி ; 1412)

இப்படி ஒரு நிலையை ஸஹாபாக்கள் காலத்திலேயே இந்த உலகம் பார்த்தது.

أن النبي -صلى الله عليه وسلم- أرسله إلى اليمن وأمره أن يأخذ الزكاة من أغنيائهم ويردها على فقرائهم.وكذلك نفَّذ معاذ وصية النبي -صلى الله عليه وسلم-، ففرّق زكاة أهل اليمن في المستحقين من أهل اليمن، بل فرّق زكاة كل إقليم في المحتاجين منه خاصة

நபி ஸல் அவர்கள் முஆத் இப்னு ஜபல் ரலி அவர்களை யமன் தேசத்துக்கு ஆளுனராக அனுப்பி வைக்கும் போது செய்த உபதேசங்களில் ஒன்று: அந்நகரத்தின் செல்வந்தர்களிடமிருந்து ஜகாத்தை வசூல் செய்து அந்நகரத்தின் ஏழைகளுக்கு கொடுத்து அவர்களின் வறுமையை ஒழிக்க வேண்டும் என்றார்கள். ஹழ்ரத் முஆத் ரலி அவர்களின் அண்ணலாரின் உபதேசத்தை அவர்களின் காலத்துக்கு பின்னும் அமல்படுத்தி வந்தார்கள்.யமன் தேசத்தின் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள தேவையுள்ளவர்களுக்கு ஜகாத் பங்கு வைக்கப்படும். (ஃபத்ஹுல் பாரீ)

 فبعث إليه معاذ بثلث صدقة الناس، فأنكر ذلك عمر، وقال: لم أبعثك جابيًا ولا آخذ جزية، ولكن بعثتك لتأخذ من أغنياء الناس فترد على فقرائهم، فقال معاذ: ما بعثت إليك بشيء وأنا أجد أحدًا يأخذه مني - فلما كان العام الثاني بعث إليه شطر الصدقة، فتراجعا بمثل ذلك، فلما كان العام الثالث بعث إليه بها كلها، فراجعه عمر بمثل ما راجعه قبل ذلك، فقال معاذ: ما وجدتُ أحدًا يأخذ مني شيئًا

நபி {ஸல்} அவர்களின் கட்டளைப்படி முஆத் (ரலி) அவர்கள், செல்வந்தர்களிடமிருந்து முறையாக வசூலித்து, அத்தொகையை அங்கு வாழ்ந்த ஏழைகளுக்கும், வறியவர்களுக்கும் முறையாக பகிர்ந்தளித்தார்கள். இதன் காரணமாக, ஒவ்வோர் ஆண்டும் அங்கு ஏழைகளின் எண்ணிக்கை குறைந்து ஜகாத் கொடுக்கும் செல்வந்தர்களின் எண்ணிக்கை கூடியது. உமர் ரலி அவர்களின் ஆட்சியில் முஆத் ரலி அவர்கள் யமன் தேசத்தில் வசூல் செய்யப்பட்ட ஜகாத்தில் மூன்றில் ஒரு பகுதியை மதீனாவுக்கு அனுப்பி வைத்தார்கள். இது ஹழ்ரத் உமர் ரலி அவர்களுக்கு பிடிக்க வில்லை.அதனால் முஆத் ரலி அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், உம்மை ஜகாத் வசூல் செய்து மதீனாவுக்கு அனுப்பவோ,அல்லது ஜிஸ்யா வரியை வசூல் செய்து அனுப்பவோ உம்மை நான் ஆளுனராக தேர்வு செய்ய வில்லை.அங்கு வசூல் செய்த ஜகாத் நிதியை அங்குள்ள ஏழைகளுக்கு பங்கு வைப்பதே மிகவும் பொருத்தமாகும் என்றார்கள். நான் இங்குள்ள ஏழைகளுக்கு கொடுக்காமல் மத்திய அரசான மதீனாவுக்கு அனுப்பி விட்டேன் என்று தாங்கள் தவறாக எண்ணிக் கொண்டீர்.ஆனால் உண்மை நிலை இங்கு ஜகாத் பெரும் ஆள் இல்லை என்றார்கள். மறு வருடம் ஜகாத் நிதியில் பாதியை அனுப்பினார்கள்.மூன்றாம் ஆண்டு முழு தொகையையும் மதீனாவுக்கு அனுப்பி வைத்து எமனில் ஏழைகள் இல்லை என்று கூறினார்கள்.

இஸ்லாம் கொண்டு வந்த ஜகாத் திட்டத்தை சரியாக விளங்காததினாலும் அதை சரியாக அமல்படுத்தாததினாலும் தான் இன்னும் இஸ்லாமிய சமூகத்தில் ஏழ்மை ஒழிக்கப்பட வில்லை. அல்லாஹ் சரியாக புரிந்து கொள்ள தவ்ஃபீக் செய்வானாக!

 

 

ஜகாத்தின் சட்டங்கள்

(மண்ணடி லஜ்னதுல் முஹ்ஸினீன் மஸ்ஜிதின் தலைமை இமாம் ஃபக்ருத்தீன் ஃபாஜில் பாகவி ஹழ்ரத் அவர்கள் பேசிய ஜகாத்தும் தெளிவும் என்ற பயானிலிருந்து தொகுக்கப்பட்டுள்ளது)

ஜகாத் கடமையாவதற்கு ஏழு நிபந்தனைகள்

1, முஸ்லிம். 2, பருவ வயதை அடைந்திருப்பது. இது அபூஹனீஃபா ரஹ் அவர்களின் கருத்து. ஷாஃபி ரஹ் அவர்களிடம் சிறு பிள்ளைகளின் பொருளாதாரத்தை யார் பராமரிக்கிறார்களோ அவர்கள் அதிலிருந்து ஜகாத் கொடுக்க வேண்டும். 3, புத்தியுள்ளவனாக இருப்பது. புத்தியில்லாதவரிடம் பொருள் இருந்தால் அதை பராமரிப்பவர் அதன் ஜகாத்தை நிறை வேற்ற வேண்டும் என்பது ஷாஃபி ரஹ் அவர்களின் கருத்து. 4, சுதந்திரமானவராக இருப்பது. 5, ஜகாத் கொடுக்கும் நேரத்தில் அந்த பொருளாதாரத்தில் முழு அதிகாரமுள்ளவராக அவர் இருப்பது. 6, ஜகாத் கடமையாகும் அளவை அடைந்திருப்பது. 7, அது ஒரு வருடம் பூர்த்தியாகி இருப்பது.

ஜகாத் கடமையாகும் பொருட்கள்.

1 தங்கம். 2,வெள்ளி. 3, வியாபாரப் பொருட்கள். 4, கால்நடைகள். (ஆடு,மாடு,ஒட்டகம் மட்டும்) 5, விவசாயப் பொருட்கள்.

Ø  தங்கத்தைப் பொருத்த வரை 87 ½ கிராம் – சுமார் 11 பவுன் இருந்தால் ஜகாத் கடமையாகும்.அதில் 2 ½ சதவீதம் கொடுக்க வேண்டும். அதாவது அன்றைய தேதியில் ஒரு கிராம் தங்கம் என்ன விலை என்பதைப் பார்த்து அதை நம்மிடம் எத்தனை கிராம் இருக்கிறதோ அத்தனை கிராமில் பெருக்கி வரும் தொகையை 40 ஆல் வகுத்து வரும் தொகை தான் நாம் கொடுக்க வேண்டிய ஜகாத்தின் அளவு. உ.மாக ஏப்ரல் 13 ம் தேதியில் 22 கேரட் தங்கம் ஒரு கிராமின் விலை 4947 ஆகும். நம்மிடம் 15 பவுன் இருந்தால் 120 கிராமாகும். எனவே நம்மிடம் இருக்கும் மொத்த தங்கத்தின் மதிப்பு 5,93,640 ஆகும். இதில் நாம் கொடுக்க வேண்டிய ஜகாத்தின் அளவு 14,841 ஆகும்.

 

Ø  நம்மிடம் எந்த தங்கம் இருக்கிறதோ அதைத் தான் கணக்கு பார்க்க வேண்டும். 24 கேரட் இருக்கிற போது 22 கேரட் தங்கத்தின் விலையை கணக்கு பார்க்க கூடாது.

 

Ø  வெள்ளியைப் பொருத்த வரை 612 ½ கிராம் வெள்ளி இருந்தால் ஜகாத் கடமையாகும்.அதில் 2 ½ சதவீதம் கொடுக்க வேண்டும். அதில் ஏப்ரல் 13 ல் ஒரு கிராம் வெள்ளியின் விலை 72.9 ஆகும். நம்மிடம் 800 கிராம் வெள்ளி இருந்தால் 1458 ஜகாத் கொடுக்க வேண்டும்.

 

Ø  பணத்தைப் பொருத்த வரை வெள்ளியின் அளவு இருந்தால் நமக்கு அதில் ஜகாத் கடமையாகும். அதாவது 612 கிராம் வெள்ளியின் விலை 44614 ரூபாய் இருந்தால் பணத்தில் நமக்கு ஜகாத் கடமையாகி விடும். அதில் 2 ½ சதவீதம் கொடுக்க வேண்டும்.

 

Ø  வியாபாரப் பொருட்களையும் வெள்ளியின் அளவை வைத்துத்தான் பார்க்க வேண்டும். அதாவது 44614 ரூபாய் மதிப்புள்ள வியாபாரப் பொருட்கள் நம்மிடம் இருந்தால் அதில் ஜகாத் கடமையாகி விடும். அதில் 2 ½ சதவீதம் கொடுக்க வேண்டும்.

 

Ø  விளைச்சல் பொருளைப் பொருத்த வரை தொலியுடன் உள்ளவற்றில் 1306 கிலோ இருந்தால் கடமையாகும். தொலி நீக்கப்பட்டதாக இருந்தால் 653 கிலோ இருந்தால் கடமையாகும். வானம் பார்த்த பூமியாக இருந்தால் 10 சதவீதம் கொடுக்க வேண்டும். நாமாக நீர் பாய்ச்சி வளர்க்கப்பட்டதாக இருந்தால் 5 சதவீதம் கொடுக்க வேண்டும்.

 

 

Ø  ஷாஃபி மத்ஹபில் எப்போதும் வழமையாக அணியும் நகைகளில் ஜகாத் இல்லை. ஹனஃபி மத்ஹபில் அனைத்து நகைகளிலும் ஜகாத் இருக்கிறது.

 

Ø  ஜகாத்திற்கென்று ஒரு தேதியை வைத்துக் கொள்ள வேண்டும். அதுவும் ஹிஜ்ரி தேதியைத் தான் கணக்கிட வேண்டும். ஜகாத் கடமையாகுவதற்குத் தான் ஒரு வருடம் பூர்த்தியாகி இருக்க வேண்டும். ஜகாத் கடமையாகும் அந்த நாளில் அவரிடம் என்ன இருக்கிறதோ அவை அனைத்திற்கும் ஜகாத் கொடுத்தாக வேண்டும். உ.மாக ஒருவரிடம் ஒரு கோடி ரூபாய் இருந்தது. ஆனால் அதை வைத்து ஒரு சொந்த வீடு வாங்கி விட்டார். கடமையாகும் அந்த நாளில் அவர் கையில் ஒரு இலட்சம் இருந்தால் அதற்கு மட்டும் கொடுத்தால் போதுமாகும். அதேபோன்று ஒருவரிடம் ஜகாத் கடமையாகும் நாளுக்கு முந்தைய நாள் வரைக்கும் ஒரு இலட்சம் தான் இருந்தது. ஆனால் கடமையாகும் அந்த நாளில் ஒரு கோடி ரூபாய் வந்து விட்டால் அந்த ஒரு கோடிக்கும் சேர்த்து ஜகாத் கொடுக்க வேண்டும்.எனவே ஜகாத் கடமைவதற்குத் தான் ஒரு வருடம் பூர்த்தியாக வேண்டும். வருகின்ற ஒவ்வொரு தொகைக்கும் ஒரு வருடம் பூர்த்தியாக வேண்டும் என்பது அவசியமில்லை.   

 

Ø  கடனைப் பொருத்த வரை ஷாஃபி இமாமிடத்தில் கொடுக்க வேண்டிய கடனை ஜகாத்தில் கழிக்க கூடாது. ஒருவரிடம் 10 இலட்சம் இருக்கிறது. 5 இலட்சம் கடன் கொடுக்க வேண்டும் என்றால் அதை கழிக்காமல் 10 இலட்சத்திற்கும் ஜகாத் கொடுக்க வேண்டும். ஹனஃபி மத்ஹபைப் பொருத்த வரை கடனை இரண்டு வகையாக பிரிக்கிறார்கள். 1, தவனைக் கடன். கடனை கொஞ்சம் கொஞ்சமாக அடைப்பது. இந்த கடனாக இருந்தால் ஒரு வருடத்தின் தொகையை ஜகாத்திலிருந்து கழித்துக் கொள்ளலாம். உ.மாக மாதமாதம் 10,000 ரூபாய் கொடுக்கிறார் என்றால் 120,000 ரூபாயை அவரின் பணத்திலிருந்து கழித்து விட்டு மீதி பணத்திற்கு ஜகாத் கொடுக்க வேண்டும்.  2, ரொக்க கடன். ஒரே நாளில் மொத்தமாக அடைத்து விடுவது. இதை ஜகாத்தில் கழிக்க கூடாது. இருக்கிற மொத்த பணத்திற்கும் ஜகாத் கொடுக்க வேண்டும்.

 

Ø  எந்த பொருளை நாம் நினைத்த நேரத்தில் பயன்படுத்துவதற்கு நமக்கு அதிகாரம் இருக்கிறதோ அதில் தான் ஜகாத் கடமையாகும். எனவே நமக்கு கடன் வர வேண்டியது இருந்தால் அது நம் கைக்கு வந்து ஒரு வருடம் பூர்த்தியான பிறகு கொடுத்தால் போதுமானது. வீட்டிற்கு கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் தொகையும் இதே போல் தான். அது நம் காசாகவே இருந்தாலும் அதை நினைத்த நேரத்தில் பயன்படுத்த முடியாது. அவர் தரும் போது தான் வாங்க முடியும். எனவே அட்வான்ஸ் பணத்தில் ஜகாத் இல்லை. ஆனால் அட்வான்ஸ் வாங்கியவருக்கு அதற்கு ஜகாத் கொடுக்க வேண்டும்.

 

Ø  நாம் உபயோகப்படுத்தும் வீடு,கார்,பைக் மற்ற உபயோகப் பொருட்கள் எதிலும் ஜகாத் இல்லை.

 

Ø  வீட்டைப் பொருத்த  வரை சொந்த வீடு எத்தனை வீடு இருந்தாலும் அதன் தொகைக்கு ஜகாத் கடமை இல்லை. வீட்டை வாடகைக்கு விட்டிருந்தால் அந்த வீட்டின் மதிப்பிற்கு ஜகாத் இல்லை. அதிலிருந்து வரும் வாடகைப் பணத்திற்கு மட்டும் ஜகாத் கொடுத்தால் போதுமானது. ஒரு வருடத்திற்கு எவ்வளவு வரும் என்பதை கணக்கு போடத் தேவையில்லை. ஜகாத் கடமையாகும் நாளில் வாடகைப் பணத்திலிருந்து எவ்வளவு கையில் இருக்கிறதோ அதற்கு மட்டும் ஜகாத் கொடுத்தால் போதுமானது.

 

Ø  மனைவியின் நகையையும் கணவரின் பணத்தையும் ஒன்றாக சேர்த்து கணக்கு பார்க்க வேண்டிய அவசியமில்லை. உ.மாக நகையில்  11 பவுன் இருந்தால் தான் ஜகாத் கடமையாகும். மனைவியிடம் 8 பவுன் தான் இருக்கிறது. கணவனிடம் ஒரு இலட்சம் இருக்கிறது. இந்த இரண்டையும் சேர்க்க தேவையில்லை. 8 இருப்பதினால் மனைவியின் நகைக்கு ஜகாத் கடமையில்லை. அந்த ஒரு இலட்சத்திற்கு மட்டும் ஜகாத் இருக்கிறது. ஆனால் ஒரே ஆளிடத்தில் தங்கமும் பணமும் இருந்தால் இரண்டையும் சேர்த்து கணக்கு பார்க்க வேண்டும்.

 

Ø  கடைகளில் இருக்கிற வியாபாரப் பொருட்களுக்கு மட்டும் ஜகாத் கடமையாகும். கடைகளில் இருக்கிற நாம் உபயோகப்படுத்தும் பொருள் அது எவ்வளவு மதிப்புள்ளதாக இருந்தாலும் அதற்கு ஜகாத் இல்லை.

 

Øநிலமோ  வீடோ அது சொந்த பயன்பாட்டிற்காக வைத்திருந்தால் அதற்கு ஜகாத் இல்லை. வியாபார நோக்கத்தில் வாங்கி வைத்திருந்தால் ஜகாத் கொடுக்கும் தேதியில்  அதன் மதிப்பை கணக்கிட்டு அதற்கு ஜகாத் கொடுக்க வேண்டும்.

 

Ø  வியாபாரப் பொருளைப் பொருத்த வரை விற்பனை செய்யும் ரேட்டை கணக்குப் போடத் தேவையில்லை, வாங்கிய ரேட்டை கணக்கிட்டால் போதுமானது. அதிலும் கூட அந்தப் பொருள் ஜகாத் கொடுக்கும் நாளில் எந்த ரேட் இருக்கிறதோ அதை வைத்துத் தான் கணக்கு பார்க்க வேண்டும். உ.மாக ஒரு பொருளை 100 ரூபாயிக்கு வாங்கினோம். ஜகாத் கொடுக்கும் நாளில் அதன் ரேட் உயர்ந்து 120 ஆகி விட்டது என்றால் 120 ஆகத்தான் கணக்கிட வேண்டும்.

 

Ø  வங்கியில் சேமித்து வைத்திருக்கிற பணத்தைப் பொருத்த வரை அங்கிருந்து நமக்கு வருகின்ற வட்டியைக் கழித்து விட்டு மீதி உள்ள பணத்தில் 2 2/1 சதவீதம் கொடுக்க வேண்டும். ஏனெனில் வட்டியாக வரும் தொகை நமக்கானது இல்லை. நிலையான வைப்பு நிதியாக இருந்தாலும் (fixed deposit) அது அப்போது கையில் இல்லா விட்டாலும் அதை நாமாக விரும்பித்தான் போட்டிருக் கிறோம். எனவே அதற்கும் ஜகாத் கொடுக்க வேண்டும்.

 

Ø  ஜகாத் கொடுக்கும் போது நிய்யத் மிக அவசியம். ஜகாத்தின் நிய்யத் இல்லாமல் கொடுக்கப்பட்ட பணம் ஜகாத்தாக ஆகாது. உ.மாக ஒருவருக்கு நாம் 50000 கடனாக கொடுத்திருக்கிறோம். அவர் அதை திருப்பித் தர வில்லை. நமக்கும் 50,000 ஜகாத் கொடுக்க வேண்டியது இருக்கிறது. கடன் உள்ளவருக்கு ஜகாத் கொடுப்பது கூடும் என்ற அடிப்படையில் அவர் தர வேண்டிய பணத்தை ஜகாத்தாக ஆக்க முடியாது. ஏனெனில் கொடுக்கும் போது ஜகாத்தின் நிய்யத்தில் கொடுக்க வில்லை. வேண்டுமானால் இப்படி செய்யலாம் ; 50,000 ஐ ஜகாத்தின் நிய்யத்தில் அவரிடமே கொடுத்து, அவர் தர வேண்டிய கடனுக்காக அதை திருப்பி வாங்கிக் கொள்ளலாம். இப்போது ஜகாத் கடமையும் நிரைவேறி விடும். வர வேண்டிய கடனும் வந்து விடும்.

 

Ø  முடிந்த வரை ஜகாத் பொருளை பிரித்து பிரித்து பலருக்கு கொடுப்பதை விட பலன் கிடைக்கிற மாதிரி ஒருவரை மட்டும் தேர்வு செய்வது தான் சிறந்தது.

 

Ø  நாம் யாருக்கு செலவு செய்வது நமக்கு கடமையோ அவருக்கு ஜகாத் பொருளை கொடுக்கக் கூடாது. நம் தாய், தந்தை, பிள்ளைகள்,மனைவி,நம் பராமரிப்பில் வளருபவர்கள். இவர்கள் அல்லாத மற்ற சொந்தங்களுக்கு கொடுக்கலாம். கணவன் மனைவியைப் பொருத்த வரை கணவன் மனைவிக்கு கொடுக்க கூடாது. ஆனால் மனைவி தன் ஜகாத் பொருளை கணவன் ஏழையாக இருந்தால் அவருக்கு கொடுக்கலாம்.

 

Ø  ஜகாத் என்பது அந்த பணத்தை ஒருவருக்கு உரிமையாக்கு வதாகும். அதாவது அவர் விரும்பிய வழியில் அதை பயன்படுத்துவதற்கு அவருக்கு உரிமை உண்டு. எனவே எனது ஜகாத் பணத்தை நீ இதற்குத்தான் செலவு செய்ய வேண்டும் என்று நிபந்தனை போடக்கூடாது. அதேபோன்று ஸஹர், இஃப்தார் போன்ற விஷயங்களுக்காக ஜகாத்தைக் கொடுக்கக்கூடாது.

 

Ø  ஜகாத் பொருளாக கொடுத்தாலும் கூடும். என்றாலும் பணமாக கொடுப்பது தான் சிறந்தது.  

 

 

 

1 comment: