Pages

Pages

Friday, August 5, 2022

ஆஷூரா தரும் படிப்பினை - அல்லாஹ் என்னோடு இருக்கிறான்

 

அல்லாஹ்வின் பேரருளால் வரலாற்று சிறப்புமிக்க முஸ்லிம் சமூகம் என்றைக்கும் மறக்காத மறக்க முடியாத மறக்கக்கூடாத ஒரு மகத்தான நாளை நாம் எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறோம். ஆம் முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளான ஆஷுரா தினம் நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.ரமலான் மாதத்தை அடுத்து மிகச்சிறந்த நோன்பு என்றால் அது, முஹர்ரம் மாதத்தில், குறிப்பாக இந்த ஆஷுரா தினத்தில் நோற்கும் நோன்பு என்று மார்க்கம் கூறுகிறது.

أن السيدة عائشة ـ رضي الله عنها ـ قالت: كانت قريش تصوم عاشوراء في الجاهلية، وكان رسول الله ـ صلى الله عليه وسلم ـ يصومه، فلما هاجر إلى المدينة صامَه وأمر بصيامه فلما فُرِض شهر رمضان قال: “مَن شاءَ صامَه ومَن شاء تركَه

அறியாமைக் காலத்தில் குரைஷிகள் ஆஷூரா நோன்பை நோற்பவர்களாக இருந்தார்கள். நபி அவர்களும் அதை நோற்று வந்தார்கள். அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து வந்த போது அவர்களும் நோற்று மற்றவர்களையும் நோற்கும் படி ஏவினார்கள்.  அல்லாஹ் ரமளானுடைய நோன்பைக் கடமையாக்கிய போது, “யார் (ஆஷூராவுடைய) நோன்பு நோற்க விரும்புகிறாரோ அவர் அதை நோற்றுக் கொள்ளட்டும்! யார் அதை விட்டு விட விரும்புகிறாரோ அவர் அதை விட்டு விடட்டும்!’’ என்று கூறி விட்டார்கள். (முஸ்லிம் ; 1125)

ரமலான் மாதத்தின் கடமையான நோன்பிற்குப் பிறகு ஏராளமான சுன்னத்தான நோன்புகள் மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ளது. அவற்றில் அல்லாஹ்வின் தூதர் அவர்களால் அதிகம் முக்கயத்துவம் கொடுக்கப்பட்ட நோன்பு ஆஷுரா நோன்பாகும்.

عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: مَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَرَّى صِيَامَ يَوْمٍ فَضَّلَهُ عَلَى غَيْرِهِ إِلّا هَذَا الْيَوْمَ يَوْمَ عَاشُورَاءَ وَهَذَا الشَّهْرَ يَعْنِي شَهْرَ رَمَضَانَ

ஆஷுரா எனும் இந்த நாளையும், (ரமளான் எனும்) இந்த மாதத்தையும் தவிர, வேறெதையும் ஏனையவற்றை விடச் சிறப்பித்துத் தேர்ந்தெடுத்து நபி அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை என இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி ; 2006)

நபி அவர்கள் காலத்தில் பெரியவர்கள், சிறியவர்கள் என்று அனைவராலும் நோற்கப்படும் நோன்பாக இந்த நோன்பு இருந்தது.

أَرْسَلَ النبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ غَدَاةَ عَاشُورَاءَ إلى قُرَى الأنْصَارِ: مَن أصْبَحَ مُفْطِرًا، فَلْيُتِمَّ بَقِيَّةَ يَومِهِ ومَن أصْبَحَ صَائِمًا، فَليَصُمْ، قالَتْ: فَكُنَّا نَصُومُهُ بَعْدُ، ونُصَوِّمُ صِبْيَانَنَا، ونَجْعَلُ لهمُ اللُّعْبَةَ مِنَ العِهْنِ، فَإِذَا بَكَى أحَدُهُمْ علَى الطَّعَامِ أعْطَيْنَاهُ ذَاكَ حتَّى يَكونَ عِنْدَ الإفْطَارِ

நபி அவர்கள் ஆஷுரா தினத்தின் காலையில் அன்ஸாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி, “யார் நோன்பு நோற்காதவராக காலைப்பொழுதை அடைந்து விட்டாரோ அவர் இன்றைய தினத்தின் எஞ்சிய நேரத்தை (நோன்பாக) நிறைவு செய்து கொள்ளட்டும்! யார் நோன்பாளியாகக் காலைப்பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பைத் தொடரட்டும்என்று அறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம். எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்க வைப்போம்.கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம். அவர்கள் (பசியால்) உணவு கேட்டு அழும் போது நோன்பு முடியும் நேரம் வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம். (புகாரி ; 1960)

அந்தளவு மிக முக்கியமான நோன்பாக ஆஷுரா நோன்பு இருக்கிறது. பனீ இஸ்ரவேல் சமுதாயத்தவர்களைக் கொத்தடிமைகளாக்கி, கொடுமைப்படுத்திக் கொண்டிருந்த கொடுங்கோலன் ஃபிர்அவ்னிடமிருந்து மூஸா (அலை) அவர்கள் அந்தச் சமுதாயத்தை மீட்ட வரலாறுப் பின்னனியில் தான் இந்த நோன்பு அமையப் பெற்றிருக்கிறது.

எகிப்து நாட்டின் சர்வாதிகாரியாக இருந்த கொடுங்கோலன் ஃபிர்அவ்ன், தனக்கு வழங்கப்பட்ட ஆட்சியதிகாரத்தால் ஆணவத்தின் உச்சத்தில் நானே உங்களுடைய பெரிய இறைவன் என்று பிரகடனப்படுத்தினான். அவனது ஆட்சியில் கொத்தடிமைகளாக்கப் பட்டு துன்புறுத்தப் பட்டவர்கள் இஸ்ரவேல் சமுதாயத்தினர். ஹள்ரத் மூஸா அலை அவர்கள் கொடுங்கோலன் ஃபிர்அவ்னிடத்தில் ஓரிறைக் கொள்கையைப் பிரச்சாரம் செய்ததோடு, ஒடுக்கப்பட்ட இஸ்ரவேல் சமுதாயத்துக்காக உரிமைக் குரல் கொடுத்து அம்மக்களை அடிமைத் தளையிலிருந்து மீட்க போராடினார்கள். அல்லாஹுத்தஆலா அந்த சமூகத்தைப் பாதுகாத்து கொடுங்கோலன் ஃபிர்அவ்னையும் அவனுடைய கூட்டத்தையும் அழித்தான்.

وَاَوْرَثْنَا الْقَوْمَ الَّذِيْنَ كَانُوْا يُسْتَضْعَفُوْنَ مَشَارِقَ الْاَرْضِ وَمَغَارِبَهَا الَّتِىْ بٰرَكْنَا فِيْهَا‌  وَتَمَّتْ كَلِمَتُ رَبِّكَ الْحُسْنٰى عَلٰى بَنِىْۤ اِسْرَاۤءِيْلَۙ بِمَا صَبَرُوْا‌  وَدَمَّرْنَا مَا كَانَ يَصْنَعُ فِرْعَوْنُ وَقَوْمُهٗ وَمَا كَانُوْا يَعْرِشُوْنَ‏

ஆகவே, எவர்களை இவர்கள் பலவீனமானவர்களென்று (கேவலமாக) எண்ணிக் கொண்டிருந்தார்களோ அந்த மக்களுக்கே மிக்க பாக்கியமுள்ள (அவர்களுடைய) பூமியின் கிழக்குப் பாகம், மேற்குப் பாகம் ஆகிய அனைத்தையும் சொந்தமாக்கிக் கொடுத்தோம். ஆகவே, இஸ்ராயீலின் சந்ததிகள் (ஃபிர்அவ்னால் ஏற்பட்ட கஷ்டங்களை) பொறுமையுடன் சகித்துக் கொண்டிருந்ததன் காரணமாக (அவர்களுக்கு) உங்கள் இறைவன் கொடுத்த வாக்கு மிக நல்லவிதமாகவே நிறைவேறிற்று. ஃபிர்அவ்னும் அவனுடைய மக்களும் கட்டியிருந்த மாட மாளிகைகளையும் (உற்பத்தி செய்திருந்த தோட்டம் துறவுகளையும்) நாம் தரைமட்டமாக்கி விட்டோம். (அல்குர்ஆன் : 7:137)

ஹள்ரத் மூஸா (அலை) அவர்கள் மூலமாக இறைவன் பனூ இஸ்ரவேலர்களுக்கு அளித்த அந்த வாக்குறுதி நிறைவேறிய அந்த நன்னாள் தான் ஆஷூரா நாள் எனப்படும் முஹர்ரம் பத்தாம் நாளாகும். ஃபிர்அவ்ன் மூலமாக பனூ இஸ்ரவேலர்களுக்கு கொடுமைகளும் அக்கிரமங்களும் எல்லை மீறிய போது ரப்புல் ஆலமீன் எகிப்திலிருந்து உங்கள் சமூகத்தை அழைத்துக் கொண்டு இரவோடு இரவாக புரப்படுங்கள் என்று ஹள்ரத் மூஸா அலை அவர்களுக்கு உத்தரவிட்டான். அவர்களும் 6 இலட்சம் பனூ இஸ்ரவேலர்களை அழைத்துக் கொண்டு எகிப்திலிருந்து புரப்பட்டார்கள். அவர்களைப் பிடிப்பதற்காக ஃபிர்அவ்ன் தன் கூட்டத்தோடு வந்தான். அந்த நேரத்தில் அவர்கள் 16 இலட்சம் பேர் இருந்ததாக குர்ஆன் விரிவுரையாளர்கள் கூறுகிறார்கள். இறுதியாக அல்லாஹ் கடல் நடுவே பாதைகளை ஏற்படுத்தி மூஸா நபி அலை அவர்களையும் அவர்களின் சமூகத்தையும் பாதுகாத்தான். அதே கடலில் ஃபிர்அவ்னையும் அவனது கூட்டத்தையும் அழித்தான்.  ஹள்ரத் மூஸா நபி அலை அவர்கள் தன் சமூகத்திற்கு அல்லாஹ் வழங்கிய மாபெரும் வெற்றிக்காக அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் முகமாகத்தான் வெற்றி கிடைத்த ஆஷுரா நாளில் நோன்பு வைப்பவர்களாக இருந்தார்கள்.

இந்த ஆஷுரா நாள் மற்றும் அந்நாளில் அல்லாஹ் நிகழ்த்திய இந்த மாபெரும் வெற்றிக்குப் பின்னால் முஸ்லிம் சமூகம் உணர்ந்து கொள்ளும் படியான எண்ணற்ற பாடங்கள் மறைந்திருக்கிறது.

1, அந்த நேரத்தில் ஹள்ரத் மூஸா அலை அவர்களின் மன உறுதியும் திடமான இறை நம்பிக்கையும் நாம் பெற வேண்டிய முதல் பாடமாகும். முன்னால் கடல்! பின்னால் ஃபிர்அவ்னின் படை! இருபுறத்தில் எந்தப் பக்கம் சென்றாலும் ஆபத்து. மூஸா நபியவர்களை நம்பிக்கை கொண்டிருந்த மக்கள், “நாம் ஃபிர்அவ்னால் பிடிக்கப்பட்டு விடுவோம்என்று கவலையுற்றார்கள். ஆனால், மூஸா நபியவர்களின் மன நிலையோ மிக உறுதியாக இருந்தது. புயல் அடித்தும் கம்பீரமாய் நிற்கும் ஆலமரமாய் இருந்தது அவர்களின் ஈமான்.

فَلَمَّا تَرَآءَ الْجَمْعٰنِ قَالَ اَصْحٰبُ مُوْسٰٓى اِنَّا لَمُدْرَكُوْنَ‌‏

இவ்விரு கூட்டத்தினரும் ஒருவரையொருவர் கண்ட பொழுது "நிச்சயமாக நாம் அகப்பட்டுக் கொண்டோம்" என்று மூஸாவுடைய மக்கள் கூறினார்கள். (அல்குர்ஆன் : 26:61)

قَالَ كَلَّا‌‌  اِنَّ مَعِىَ رَبِّىْ سَيَهْدِيْنِ‏

அதற்கு (மூஸா) "அவ்வாறன்று. நிச்சயமாக என்னுடைய இறைவன் என்னுடன் இருக்கின்றான். (நாம் தப்பிக்கும்) வழியை நிச்சயமாக அவன் நமக்கு அறிவிப்பான்" என்றார். (அல்குர்ஆன் : 26:62)

ஆபத்து சூழ்ந்திருக்க வேளையில் எந்த பக்கமும் தப்பிக்க முடியாத இக்கட்டான நேரத்தில் சந்தர்ப்பங்களும் சூழலும் தனக்கு எதிராக இருக்கும் நிர்க்கதியான நிலையில் ஒருவன் நிச்சயம் அச்சப்படுவான். அதுவும் தன்னை மட்டுமல்ல தன்னை நம்பி வந்த சமூகத்தையும் காப்பாற்ற வேண்டும் என்ற கட்டம் வரும் போது யாராக இருந்தாலும் பதற்றம் அடைவார்கள்.ஆனால் 6 இலட்சம் பேரை காப்பாற்றி கரை சேர்க்க வேண்டிய மாபெரும் பொறுப்பில் இருந்தும் கொஞ்சமும் பதறாமல் கலங்காமல் இறைவன் என்னோடு இருக்கிறான். அவன் வழிகாட்டுவான் என்று சொன்னதன் மூலம் உண்மையான இறை நம்பிக்கைக்கு முன்னுதாரணமாக மூஸா நபி அலை அவர்கள் இருந்தார்கள்.

وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين

நீங்கள் இறைவிசுவாசம் கொண்டவர்களாக இருந்தால் இறைவன் மீதே நம்பிக்கை கொள்ளுங்கள். (அல்குர்ஆன் : 5;23)

எந்தச் சூழலிலும் இறைவனை மட்டுமே நம்புதல் என்பது உண்மையான ஈமான் உள்ளவர்களுக்கு இருக்கக்கூடிய பண்பு. அல்லாஹ் யாரை மிகவும் நேசிக்கிறானோ அவர்களுக்குத்தான் அந்த பண்பை வழங்குகிறான்.

أربع لا يعطيهن الله إلا من أحب: الصمت وهو أول العبادة والتوكل على الله والتواضع والزهد في الدنيا

நான்கு விஷயங்களை தான் நேசிப்பவர்களுக்கு மட்டுமே அல்லாஹ் வழங்குகிறான். மௌனம்,இறை நம்பிக்கை,பணிவு, உலகப் பற்றற்ற தன்மை. (தப்ரானி)

நபிமார்கள் அத்தனை பேரிடத்திலும் அந்தப் பண்பு இருந்ததாக குர்ஆன் கூறுகிறது.

وَمَا لَـنَاۤ اَلَّا نَـتَوَكَّلَ عَلَى اللّٰهِ وَقَدْ هَدٰٮنَا سُبُلَنَا‌ وَلَــنَصْبِرَنَّ عَلٰى مَاۤ اٰذَيْتُمُوْنَا‌ وَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُوْنَ‏

"நாங்கள் அல்லாஹ்வை நம்பாதிருக்க எங்களுக்கென்ன (தடை நேர்ந்தது)? நிச்சயமாக அவன்தான் எங்களுக்கு நேரான வழியை அறிவித்தான். (நிராகரிப்பவர்களே!) நீங்கள் எங்களுக்கு இழைக்கும் துன்பங்களைச் சகித்துக்கொண்டு உறுதியாக இருப்போம். ஆகவே, நம்புபவர்கள் அனைவரும் அல்லாஹ்வையே நம்பவும்" என்றும் (ரஸூல்மார்கள்) கூறினார்கள். (அல்குர்ஆன் : 14:12)

உண்மையான தவக்குல் உள்ளவர்களை அல்லாஹ் நிச்சயம் கைவிடுவதில்லை.

"مَن سرَّه أن يكون أقوى الناس، فليتوكل على الله، ومَن توكل على الله واعتمد عليه وأحسن الصلة بالله، حفظه الله ورعاه

மக்களிலேயே பலம் மிக்கவராக ஆக வேண்டும் என்று யார் ஆசைப்படுகிறாரோ அவர் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை கொள்ளட்டும். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனையே யார் சார்ந்திருக்கிறாரோ அவரை அல்லாஹ் பாதுகாத்து விடுவான் என சூஃபியாக்கள் கூறுவார்கள்.

எல்லாம் சாதகமாக இருக்கும் போது உதவிகள் கண் முன்னால் தெரிகின்ற போது இறைவன் இருக்கிறான் என்று சொல்வதற்குப் பெயர் உண்மையான தவக்குல் அல்ல. எல்லாம் தனக்கு எதிராக இருக்கிற போது ஆபத்துக்களும் சோதனைகளும் நெருக்கமாய் இருக்கிற போது அந்த வார்த்தையை சொல்வது தான் உண்மையான தவக்குல். வெளிப்படையான உதவிகள் கண் முன் தெரிகின்ற போது தைரியமாக இருப்பதும் ஆபத்துக்களை நேருக்கு நேர் பார்க்கின்ற போது தைரியமிழந்து விடுவதும் தவக்குலுக்கான அடையாளம் அல்ல. தவக்குல் என்பதற்கு பொருள் என்னவென்றால் எல்லா நேரத்திலும் எல்லா சூழ்நிலையிலும் இறைவனை மட்டுமே நம்புவது.   

வரலாற்றில் இரண்டு நிகழ்வுகள் இதற்கு சான்றாக நாம் எடுத்துக் கொள்ளலாம்

ஒன்று ஹுனைன் போர்க்களம். ஹுனைன் நபி அவர்களின் நிகழ்ந்த மிக முக்கியமான போர்க்களங்களில் ஒன்று.மக்கா வெற்றிக்குப் பின்னால் நடந்த போர்க்களம் என்பதால் அந்த போர்க்களத்தில் நபி அவர்களுடன் கிட்டத்தட்ட பன்னிரெண்டாயிரம் வீரர்கள் இருந்தனர். எதிரிகள் நான்காயிரம் பேர் மட்டுமே இருந்தார்கள்.எதிரிகளை விட எண்ணிக்கை அதிகம் இருந்த காரணத்தினால் எப்படியும் வெற்றி கிடைத்து விடும் என்ற எண்ணம் சிலருடைய உள்ளத்தில் ஏற்பட்டது. நபி அவர்கள் அவர்களை அழைத்துக் கொண்டு ஹுனைன் களத்தை நோக்கி புறப்பட்டு சென்றார்கள். முஸ்லிம்களுக்கு முன்னதாகவே ஹவாஜின் படையைச் சேர்ந்த மாலிக் இப்னு அவ்ஃப் நஸ் தனது வீரர்களுடன் ஹுனைன் பள்ளத்தாக்குக்கு வந்து, தமது அம்பெறி வீரர்களை ஹுனைன் பள்ளத்தாக்கின் பதுங்குக் குழிகளில் மறைவாகப் பதுங்க வைத்தார். எதிரிகள் அந்த இடத்தில் நுழைந்தவுடன் அம்பு மழையால் அவர்களைத் தாக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருந்தார்.

அதிகாலையில் சற்று மங்கலான நேரத்தில் முஸ்லிம்கள் ஹுனைன் பள்ளத்தாக்கினுள் நுழைய ஆரம்பித்தார்கள். பதுங்கியிருந்த ஹவாஜின் படை வீரர்கள் முஸ்லிம்களை நோக்கி சராமாரியாக அம்புகளை எறியத் தொடங்கினர். அந்த இடத்தில் தாக்குதலை சிறிதும் எதிர்பார்த்திராத இஸ்லாமிய வீரர்கள் துணிந்து முன்னேறாமல், ஆயுத பலம் இல்லாதவர்களாக நிராயுதபாணிகளாக, பயத்தால் புறமுதுகு காட்டி, பிளவுப்பட்டு ஓடினார்கள். நபி அவர்கள், “வீரர்களே! நான் இருக்கும் பக்கம் வாருங்கள்என்று அழைத்தார்கள். ஆனால் அவர்களுடைய அந்த கூற்றைக் கவனிக்காமல் ஓடினார்கள். வெகு சிலர் மட்டுமே நபி அவர்கள் சொல்லுக்குச் செவி சாய்த்து, அவர்களுடன் உறுதியாக நின்றனர்.

நபி அவர்கள் தம் பைளாஎன்னும் வெண்ணிறக் கோவேறு கழுதையின் மீது அமர்ந்திருந்த நிலையில் நான் உண்மையான இறைத்தூதராவேன். இது பொய்யல்ல, நான் அப்துல் முத்தலிபின் மகனின் மகனாவேன்என்று கூறி முன்னேறினார்கள். தமது வாகனத்தை விட்டு இறங்கி அல்லாஹ்விடம் உதவி கோரிப் பிரார்த்தித்தார்கள். பிறகு, தம் தோழர்களை அணிவகுக்கச் செய்தார்கள்.

நபி அவர்களும், அவர்களுடைய தோழர்களும் தமது வீரம் வெளிப்படும் வகையில் களத்தில் நின்று போர் புரிந்தார்கள்.பின்பு வெற்றி பெற்றார்கள்.

இந்த போர்க்களத்தைப் பற்றி வரலாற்று ஆசிரியர்கள் எழுதுகின்ற போது நாம் அதிக எண்ணிக்கையில் இருக்கிறோம். எனவே வெற்றி பெற்று விடுவோம் என்று தங்கள் பலத்தின் மீது நம்பிக்கை அவர்களில் சிலருக்கு ஏற்பட்டது. எனவே தான் அல்லாஹ் ஆரம்பத்தில் அவர்களை தடுமாறச் செய்து எண்ணிக்கையைக் கொண்டு ஒன்றுமில்லை. என் உதவியைக் கொண்டு தான் உங்களுக்கு வெற்றி என்பதை உணர்த்தினான் என்று கூறுவார்கள்.

இந்த போர்க்களம் குறித்து அல்லாஹ் கூறுகிறான் ;

لَـقَدْ نَصَرَكُمُ اللّٰهُ فِىْ مَوَاطِنَ كَثِيْرَةٍ‌ ۙ وَّيَوْمَ حُنَيْنٍ‌ ۙ اِذْ اَعْجَبَـتْكُمْ كَثْرَتُكُمْ فَلَمْ تُغْنِ عَنْكُمْ شَيْـٴًـــا وَّضَاقَتْ عَلَيْكُمُ الْاَرْضُ بِمَا رَحُبَتْ ثُمَّ وَلَّـيْتُمْ مُّدْبِرِيْنَ‌‏

பல (போர்க்) களங்களில் (உங்கள் தொகைக் குறைவாயிருந்தும்) நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்திருக்கின்றான். எனினும், ஹுனைன் போர் அன்று உங்களை பெருமையில் ஆழ்த்திக் கொண்டிருந்த உங்களுடைய அதிகமான (மக்கள்) தொகை உங்களுக்கு யாதொரு பலனும் அளிக்கவில்லை. பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும் (அதுசமயம் அது) உங்களுக்கு மிக நெருக்கமாகிவிட்டது. அன்றி, நீங்கள் புறங்காட்டி ஓடவும் தலைப்பட்டீர்கள். (அல்குர்ஆன் : 9:25)

இரண்டாவது நிகழ்வு ஹிஜ்ரி 13 ம் ஆண்டு ஹள்ரத் அபூபக்கர் ரலி அவர்களின் ஆட்சி காலத்தில் நடைபெற்ற யர்மூக் போர்க்களம். காலித் பின் வலீத் ரலி அவர்களின் தலைமையின் கீழ் அப்படை போர்க்களத்திற்கு சென்றது. போர் நடை பெற்றுக் கொண்டிருக்கிற போதே ஹள்ரத் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள் மரணித்து விட்டார்கள். அடுத்த கலீஃபா பொறுப்பை ஏற்ற உமர் ரலி அவர்கள் யர்மூக் போர்க்களத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்கள். அதில் ஹள்ர்த அபூபக்கர் ரலி அவர்களின் வஃபாத் செய்தியைக் குறிப்பிட்டு விட்டு இதற்குப் பிறகு காலித் பின் வலீத் அவர்களுக்கு பகரமாக அபூஉபைதா ரலி அவர்கள் படைத் தலைபதியாக இருந்து செயல்பட வேண்டும் என்று எழுதியிருந்தார்கள்.

திடீரென்று படைத்தலைபதியை மாற்றியதற்கு முக்கியமான காரணம்,  

تَعلُّق المسلمين بخالد بن الوليد رضي الله عنه شخصياً، وافتتانهم به، فخالد بن الوليد رضي الله عنه لم يدخل معركة في الإسلام ولا في الجاهلية إلا وانتصر فيها، وذلك لقوته وخبرته العسكرية وحسن تدبيره رضي الله عنه ودهائه بتوفيق الله عز وجل، حتى أن بعض قادة الفرس صار يعتقد أن خالداً كان يحمل سيفاً أنزله له الله عز وجل من السماء، وهكذا كانت تروج الإشاعات، ومن أُسس السياسة في الإسلام أن يأخذ الناس بالأسباب ثم تكون النتائج على الله عز وجل فتتعلق القلوب بالله وليس بالبشر، لذلك فقد كتب عمر رضي الله عنه كتب إلى الأمصار: "إني لم أعزل خالداً عن سخطة ولا خيانة، ولكن الناس فتنوا به فأحببت أن يعلموا أن الله هو الصانع" 

காலித் ரலி அவர்கள் மிகச்சிறந்த ஆளுமை பெற்ற படைத் தலைபதி. மிகச்சிறந்த போர் வியூகம் கொண்டவர்கள். இஸ்லாத்திற்கு வருவதற்கு முன்பும் வந்த பிறகும் அவர்கள் தலைமையேற்று செல்லும் படை வெற்றி வாகை சூடி வரும் என்பது அனைவரும் அறிந்தது. வானத்திலிருந்து இறக்கப்பட்ட வாளைக் கொண்டு அவர் போர் புரிகிறார். எனவே தான் அவருக்கு வெற்றி கிடைக்கிறது என்று பாரசீக மக்களில் சிலர் எண்ணிக் கொண்டிருந்தார்கள். காலித் ரலி அவர்கள் சென்றால் அப்படை தோற்காது என்று மக்கள் எண்ணத் தொடங்கி விட்டார்கள். அந்த எண்ணத்தை மாற்றி வெற்றி இறைவன் புறத்திலிருந்து கிடைக்கிறது என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்குத் தான் அந்த மாற்றத்தை உமர் ரலி அவர்கள் ஏற்படுத்தினார்கள். காலித் ரலி அவர்களின் மீது வெறுப்பினாலோ கோபத்தினாலோ நான் இதை செய்ய வில்லை. இறைவன் தான் எல்லாவற்றையும் செய்கிறான் என்பதை மக்கள் விளங்கிக் கொள்வதற்குத்தான் நான் இதை செய்தேன் என்று உமர் ரலி அவர்களே குறிப்பிடுகிறார்கள். (அல்பிதாயா வன் நிஹாயா)

எனவே வெற்றியும் தோல்வியும் மனித பலத்தைக் கொண்டோ ஆயுத பலத்தைக் கொண்டோ அல்ல. வெற்றி தோல்வி இறைவனைக் கொண்டு தான். அல்லாஹ் நினைத்தால் பலம் பெற்ற ஒரு சமூகத்திற்கும் தோல்வியைத் தருவான். பலம் இல்லாத ஒரு சமூகத்திற்கும் வெற்றியைத் தருவான். இந்த புரிதலுக்குப் பெயர் தான் தவக்குல். 

இந்த உண்மையான தவக்குல் தான் ஹள்ரத் மூஸா அலை அவர்களிடம் இருந்தது.இரு பக்கமும் ஆபத்துக்கள் சூழ்ந்திருந்த போதும் இறைவன் என்னோடு இருக்கிறான். அவன் வழிகாட்டுவான் என்று நம்பினார்கள். அதனால் தான் அல்லாஹுத்தஆலா அவ்வளவு பெரிய அற்புதத்தை நிகழ்த்தி அவர்களையும் அவர்களது சமூகத்தையும் அல்லாஹ் பாதுகாத்தான்.

2, உலகில் யார் ஆணவமும் கர்வமும் கொண்டு திரிகிறார்களோ அவர்களின் முடிவு மோசமாகத்தான் இருக்கும்.பொதுவாக ஆணவம் கொண்டு அழிச்சாட்டியம் புரிபவர்களை உடனே தண்டிப்பதில்லை. அவர்கள் திருந்துவதற்கு அவகாசங்களை அல்லாஹ் வழங்குவான். அவர்களின் அழிச்சாட்டியம் எல்லை மீறுகின்ற போது அல்லாஹ் அவர்களைப் பிடிப்பான். ஆனால் அந்தப் பிடி மிகவும் கடுமையாக இருக்கும்.

وَكَاَيِّنْ مِّنْ قَرْيَةٍ اَمْلَيْتُ لَهَا وَهِىَ ظَالِمَةٌ ثُمَّ اَخَذْتُهَا‌ وَاِلَىَّ الْمَصِيْرُ‏

நாம் எத்தனையோ ஊரார்களுக்கு அவகாசமளித்தோம். (திருந்தாது) பின்னும் அவர்கள் அநியாயமே செய்யத் தலைப் பட்டார்கள். ஆதலால், நாம் அவர்களைப் பிடித்துக் கொண்டோம். அவர்கள் (இறந்த பின்னரும்) நம்மிடம் தான் வரவேண்டியது இருக்கின்றது. (அல்குர்ஆன் : 22:48)  

وَاُمْلِىْ لَهُمْ‌ اِنَّ كَيْدِىْ مَتِيْنٌ‏

(அவர்களுடைய பாவம் அதிகரிப்பதற்காக) அவர்களை விட்டுவைப்போம். நிச்சயமாக நம்முடைய சூழ்ச்சி மிக்க பலமானது. (அவர்கள் தப்பவே முடியாது.) (அல்குர்ஆன் : 68:45)

கொடுங்கோலன் ஃபிர்அவனையும் அல்லாஹ் விட்டு வைத்தான். அவன் திருந்துவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தினான். ஹள்ரத் மூஸா நபி அலை அவர்களின் நல் உபதேசங்களையும் அத்தாட்சிக்களையும் பார்த்தும் அவன் தன்னை திருத்திக் கொள்ள வில்லை. எனவே அல்லாஹ் அவனை அழித்து உலகில் அக்கிரமம் செய்பவர்களுக்கெல்லாம் படிப்பினையாக பாடமாக அவனை ஆக்கி விட்டான்.

3, அநியாயக்காரர்களை மட்டுமல்ல. அந்த அநியாயத்திற்கு துணை போனவர்களுக்கும் அல்லாஹ்வின் தண்டனை உண்டு. ஃபிர்அவ்னுடைய கூட்டத்தார்கள் அவனுக்கு துணை போன காரணத்தால் அவனோடு சேர்த்து அவர்களையும் அழித்து விட்டான்.

ஆஷூரா தினத்தன்று வெறுமனே நோன்பு வைப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அந்த நாளின் மூலம் அல்லாஹ் கூறுகின்ற பாடங்களையும் படிப்பினைகளையும் உணர்ந்து நம் செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ் அருள் புரிவானாக!.  

6 comments:

  1. மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் ஹழ்ரத்

    ReplyDelete
  2. பாரக்கல்லாஹ்

    ReplyDelete
  3. Assalamu alaikum wa Rahmatullah WA barakatuhu
    2 varangala bayan quripu illa ye hazarath enna aachu

    ReplyDelete