Pages

Pages

Thursday, February 2, 2023

இளவல்களோடு இணைந்து பயணிப்போம்

 

நம் சமூகத்து வாலிபர்களை நெறிப்படுத்துவதற்குத் தேவையான ஆக்கப்பூர்வமான நடிவடிக்கைகள், முன்னெடுப்புக்கள் என்ன என்பதைப் பற்றி பேசி வருகிறோம். மக்தப் மதரஸாக்களை மேப்படுத்துவது நல்ல நட்பை உருவாக்கித் தருவது என இரு விஷயங்களை கடந்த வாரங்களில் பார்த்து விட்டோம். வாலிபர்களை ஒழுங்குபடுத்து வதற்கும் சீர்படுத்துவற்கும் அவர்களை நேரிய பாதையிலிருந்து விலகாமல் பாதுகாப்பதற்கும் நாம் அவசியம் மேற்கொள்ள வேண்டிய மிக முக்கியமான நடவடிக்கை அவர்களை எப்போதும் நம்மோடு வைத்துக் கொள்வது. நம்முடைய ஒவ்வொரு காரியங்களிலும் அவர்களை நம்மோடு இணைத்துக் கொள்வது.

இன்றைக்குள்ள வாலிபர்கள் அனைவரும் தங்களுக்கென்று ஒரு தனி பாதையை அமைத்து அதில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வாழும் உலகமே வேறு. நாம் வாழும் உலகத்திற்குள் அவர்கள் வருவதில்லை. ஐவேளைத் தொழுகைகளில் வாலிபர்கள் இல்லை. ஜும்ஆ நாட்களில் செய்யப்படுகின்ற பயான்களைக் கேட்பதற்கு வாலிபர்கள் இல்லை. சமூகத்திற்குப் பயன் தரும் எந்த சபைகளாக இருந்தாலும் அந்த சபைகளை பெரியோர்கள் தான் அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்களே தவிர  வாலிபர்களைப் பார்க்க முடிவதில்லை.   

இன்றைக்குள்ள வாலிபர்கள் பெரியோர்களோடு சேருவதே இல்லை. பெரியோர்களை அவர்கள் விரோதிகள் போன்று பார்க்கிறார்கள். இந்த நிலையை உருவாக்கியது நாம் தான்.காரணம் எந்தக் காரியங்களிலும் நாம் அவர்களை நம்மோடு இணைத்துக் கொள்வதில்லை. வாலிபர்களை நம்மோடு இணைத்துக் கொள்ளாமல் அவர்களை தனியாக விட்டதினால் தான் இன்றைக்கு அவர்கள் தவறான வழியில் சென்று கொண்டிருக்கிறார்கள். எனவே அவர்களை வழிதவறாமல் பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய முக்கியமான முதன்மையான பணிகளில் ஒன்று எல்லா காரியங்களிலும் நம்மோடு அவர்களை இணைத்துக் கொள்ள வேண்டும். அவர்களோடு நாம் கரம் கோர்க்க வேண்டும். அவ்வாறு கரம் கோர்த்துக் கொள்வதால் கரடுமுரடான பாதைகளில் நாம் கரை சேருவதற்கு அவர்கள் உதவியாக இருப்பார்கள். சில நேரங்களில் அவர்கள் தவறி விழுகின்ற போது அவர்களை நாம் இழுத்துப் பிடிப்பதற்கும் ஏதுவாக இருக்கும்.

நபித்துவத்தின் தொடக்கம் முதற்கொண்டே நபி அவர்களோடு இணைந்துப் பணியாற்றியவர்கள் வாலிபர்கள் தான். நபி அவர்கள் மேற்கொண்ட சமூகப் பிரச்சனைகளில் வாலிபர்கள் இருந்தார்கள். பொதுப் பிரச்சினைகளில் வாலிபர்கள் கலந்து கொண்டார்கள். முக்கிய ஆலோசனைகளில் வாலிபர்கள் கலந்து கொண்டார்கள். போர்க் களங்களில் வாலிபர்கள் கலந்து கொண்டார்கள். நபி அவர்கள் செய்த இஸ்லாமிய அழைப்புப் பிரச்சாரங்களில் அவர்களோடு சேர்ந்து மிக வீரியமாக வாலிபர்கள் களம் கண்டார்கள். இப்படி அனைத்து விஷயங்களிலும்  நபிகள் நாயகம் அவர்களோடு அன்றைக்கு இருந்த வாலிபர்கள் இணைந்தே இருந்தார்கள். பெருமானார் அவர்கள் கொண்டு வந்த அந்த தூய மார்க்கத்தை ஆரம்பமாக ஏற்றவர்கள் வாலிபர்கள் தான். மக்காவிலும் சரி மதீனத்து மண்ணிலும் சரி தீனை ஏற்பதிலும் பெருமானார் அவர்களுக்கு உதவி செய்வதிலும் முன் வரிசையில் நின்றவர்கள் வாலிபர்கள் தான்.

عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " اقْتُلُوا شُيُوخَ الْمُشْرِكِينَ، وَاسْتَحْيُوا شَرْخَهُمْ ". قَالَ عَبْدُ اللَّهِ : سَأَلْتُ أَبِي عَنْ تَفْسِيرِ هَذَا الْحَدِيثِ : " اقْتُلُوا شُيُوخَ الْمُشْرِكِينَ ". قَالَ : يَقُولُ : الشَّيْخُ لَا يَكَادُ أَنْ يُسْلِمَ، وَالشَّابُّ، أَيْ يُسْلِمُ، كَأَنَّهُ أَقْرَبُ إِلَى الْإِسْلَامِ مِنَ الشَّيْخِ. قَالَ : الشَّرْخُ : الشَّبَابُ   

(போரில்) இணை வைக்கும் பெரியவர்களைக் கொல்லுங்கள். வாலிபர்களை விட்டு விடுங்கள் என நபி அவர்கள் கூறினார்கள். அப்துல்லாஹ் ரலி அவர்கள் கூறுகிறார்கள் ; இணை வைக்கும் பெரியவர்களைக் கொல்லுங்கள் என்ற இந்த ஹதீஸிற்கு (அதாவது ஏன் அவர்களை மட்டும் கொல்ல வேண்டும்) எனது தந்தையிடம் விளக்கம் கேட்டேன். அதற்கவர்கள் ; மூத்தவர்கள்  இஸ்லாத்தை அவ்வளவு எளிதில் ஏற்க மாட்டார்கள். இளைஞர்களின் இயல்பு இஸ்லாத்திற்கு நெருக்கமாக இருக்கிறது. எனவே அவர்கள் இஸ்லாத்தை ஏற்க கூடும் என்று பதிலளித்தார்கள். (அஹ்மது ; 20145)

(போர்க்களங்களில் முதியோர்களைக் கொல்லாதீர்கள் என்று வரும் இன்னொரு ஹதீஸின் கருத்துக்கு இது முரண்படாது. ஏனெனில் போர்க்களங்களில் கலந்து கொள்ள முடியாத அளவு தள்ளாத வயதை அடைந்து விட்டவர்களைத்தான் கொல்ல வேண்டாம் என்று சொன்னார்கள். இந்த ஹதீஸில் குறிப்பிட்டிருப்பது போர்க்களங்களில் கலந்து கொண்டிருக்கிற பெரியவர்களைத்தான்.)

பொதுவாகவே பெரியவர்கள் பழமையில் ஊறித்திளைப்பவர்கள். மாற்றத்தை விரும்பாதவர்கள். அவ்வளவு எளிதாக பழமையை விட்டுத் தர மாட்டார்கள்.ஆனால் வாலிபர்கள் புதுமையை விரும்பக்கூடியவர் கள், மாற்றத்தை ஏற்றுக் கொள்பவர்கள். மாற்றத்தை அடைந்து கொள்வதற்கு எந்த விலையையும் கொடுக்கத் தயாராக இருப்பார்கள். அதனால் தான் பாரம்பரியமாக பின்பற்றி வந்த முன்னோர்களின் வழிமுறைகளுக்கு மாற்றமாக புதிய தவறான கொள்கைகளை சமூகத்தில் புகுத்த நினைப்பவர்கள் முதலில் கை வைப்பது இளைஞர்களைத்தான். இயல்பிலேயே புதுமை விரும்பிகளாக இருப்பதினால் புதிதாக ஒரு விஷயத்தைக் கூறுகின்ற போது உடனே அவர்களின் அளவில் சாய்ந்து விடுவார்கள்.அவர்களின் மூலமாகத்தான் தங்களின் தவறான சிந்தனைகளை சமூக மக்களிடம் ஊடுறுவச் செய்கிறார்கள். இது அன்று முதல் இன்று வரை பொருந்தும். தவறான கொள்கையுடையவர்கள் வாலிபர்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் நாம் அவர்களைப் பயன்படுத்துவதில்லை.

எனவே நபி அவர்களைக் கொண்டு ஆரம்பமாக இஸ்லாத்தை ஏற்றவர்கள். தீனுக்காக அவர்களுக்கு உதவி புரிந்தவர்கள். அவர்கள் மேற்கொண்ட அத்தனை சமுதாயப் பணிகளிலும் அவர்களுக்கு தோள் கொடுத்தவர்கள். எதிரிகளிடமிருந்து அவர்களைப் பாதுகாத்தவர்கள். இவ்வாறு அத்தனை விஷயங்களிலும் பெருமார் அவர்களோடு உடன் இருந்தவர்கள் வாலிபர்கள் தான். அவர்களோடு வாலிபர்கள் இருந்தார்கள் என்று கூறுவதை விட அனைத்துக் காரியங்களிலும் அந்த வாலிபர்களை நபியவர்கள் தன்னுடன் இணைத்துக் கொண்டார்கள் என்று தான் கூற வேண்டும்.மிகவும் முக்கியமான பணிகளில் வாலிபர்களைத்தான் முன்னிறுத்தினார்கள்.

நபி அவர்களின் காலத்தில் தன்னை நபியென்று பொய்யாக வாதிட்டு மக்களை வழிகெடுத்துக் கொண்டிருந்த முஸைலமதுல் கத்தாபிற்கு கடிதம் ஒன்றை எழுதி அதை அவனிடம் கொடுப்பதற்கு நபி அவர்கள் நாடினார்கள். முஸைலமா மிகவும் மோசமானவன். கடிதம் கொண்டு செல்லும் நபரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.  எனவே அந்தக் கடிதத்தைக் கொடுத்தனுப்புவதற்குத் தகுதியான நபரைத் தேடிக் கொண்டிருந்தார்கள்.அப்போது பெருமானார் அவர்களால் தேர்வு செய்யப்பட்டவர் இருபத்திரண்டு வயது நிரம்பிய ஹபீப் பின் ஜைத் ரலி என்ற வாலிபர்.   

فرأى النبي صلى الله عليه وسلم أن يرسل إليه رسالة أخرى لعله يعود إلى الحق ثم تلفت النبي حوله ينظر في وجوه أصحابه يلتمس منهم رجلاً فطناً جريئاً يحمل هذه الرسالة إلى مسيلمة الكذاب ووقع اختياره على حبيب بن زيد رضي الله عنه

أخذ حبيب بن زيد الرسالة من يد النبي صلى الله عليه وسلم وانطلق أكثر من ألف ميل إلى اليمامة في نجد حتى وصل إلى مسيلمة فلما دخل على مسيلمة الكذاب ناوله الكتاب فنظر مسيلمة في الكتاب وغضب ثم جمع قومه حوله وأوقف حبيب بن زيد بين يديه وسأله ممن هذا الكتاب؟ فقال حبيب: هو من رسول الله صلى الله عليه وسلم. فقال مسيلمة: أتشهد أن محمداً رسول الله ؟.. قال حبيب: نعم.. أشهد أن محمداً رسول الله.. قال: وتشهد أني رسول الله ؟ فقال له حبيب مستهزئاً: إن في أذني صمماً عما تقول. فأعاد عليه مسيلمة نفس الأسئلة ولم يتغير رد حبيب عليه. فغضب مسيلمة ودعا السياف وأمره أن يطعن بالسيف في جسد هذا الفتى حبيب وهو يكرر عليه السؤال.. ولا يسمع إلا جواباً واحداً.. لا يزيده إلا غيظاً وحقداً.. فأمر مسيلمة السياف أن يفتح فم حبيب ويقطع لسانه.. فأمسك به الجنود وفتحوا فمه حتى قطع السياف لسانه الذاكر ثم أوقفوه بين يدي مسيلمة الكذاب والدماء تسيل من فمه الطاهر.. فصاح به مسيلمة: أتشهد أن محمداً رسول الله ؟.. فأشار حبيب برأسه: نعم.. قال: وتشهد أني رسول الله ؟ فأشار برأسه: لا.. فأمر مسيلمة سيافه.. فقطع يده.. ثم قطع رجله.. وجدع أنفه.. واحتز أذنه.. وأصبح مسيلمة الكذاب يسأل حبيب نفس السؤال وتأتيه نفس الإجابة وبعد كل إجابة يقطع مسيلمة جزء من جسد حبيب هو ثابت صابر على الحق حتى فاضت روحه الطاهرة إلى بارئها

ஹபீப் பின் ஜைது ரலி அவர்கள் முஸைலமாவைச் சந்தித்து தாம் கொண்டு வந்த கடிதத்தை ஒப்படைத்தார்கள். அதைப் படித்துப் பார்த்ததும் முஸைலமா கோபமுற்றான். ஹபீப் ரலி அவர்களைத் துன்புறுத்தத் தொடங்கினான்.
பின்பு ஹபீப் ரலி  அவர்கள் பொது மக்கள் முன்னிலையில் தன்னை நபியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக முஸைலமா ஒரு சூழ்ச்சி செய்தான். ஏதாவது ஒரு நாளைக் குறிப்பிட்டு அந்நாளில் தன் வம்சத்தினரையெல்லாம் ஒன்று திரட்ட வேண்டும்: தன்னை நபியாக ஏற்றவர்கள் சூழ்ந்து நிற்க ஹபீபை மக்கள் சந்திக்கு இழுத்து வர வேண்டும். அவர் முஸைலமாவை நபியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை பொது மக்கள் முன்னிலையில் பிரகடனம் செய்ய வேண்டும்: இல்லாவிட்டால் அவரை அந்த இடத்திலேயே தீர்த்துக் கட்டி விட வேண்டும். இது தான் முஸைலமாவின் திட்டம்! தீர்மானிக்கப்பட்ட  நாள் வந்தது. ஹபீப் விலங்குகள் மாட்டப்பட்டு இழுத்து வரப்பட்டார். மக்கள் திரளாகக் கூடியிருந்தனர். ஹபீப் ரலி அவர்களின் மேனியெங்கும் காயங்கள். இனி உயிருக்கு பயந்தாவது என்னை நபியாக ஏற்கக் கூடும்என்று எண்ணிய முஸைலமா அவரிடம் இப்படி வினவினான்: நீர் முஹம்மதை இறைத்தூதராக ஏற்கிறீரா...?” ஆம்என்று அழுத்தமாக ஹபீப் ரலி அவர்கள் கூறினார்கள்.  பிறகு என்னையும் இறைத்தூதராக ஏற்பீரா...?” என்று கேட்ட போது நீ சொல்வது எனக்கு கேட்க வில்லை என்று நகைப்புடன் கூறினார்கள்.
இதைக் கேட்டதும் முஸைலமாவின் முகம் ஆத்திரத்தால் சிவந்தது. மீண்டும் அதே கேள்வியைக் கேட்ட போது அப்போதும் முதல் கேள்விக்கு பதில் கூறியவர்கள் இரண்டாவது கேள்விக்கு அது என் காதில் விழ வில்லை என்று கூறினார்கள். அதனால் அவனுடைய கோபம் இன்னும் கடுமையானது.
அவருடைய நாவை வெட்டுங்கள் என்று உத்தரவிட்டான். அவருடைய நாவு வெட்டப்பட்டது. பின்பு நபி அவர்கள் இறைத்தூதரா என்று கேட்ட போது ஆம் என்று தன் தலையை அசைத்தார்கள். தான் ஒரு நபியா என்று போது இல்லை என தலையசைத்தார்கள். பின்பு அவர்களின் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக துண்டிக்க ஆரம்பித்தான். இறுதியில் அவர்களைக் கொலை செய்தான். தன் உயிர் போகும் கடைசி நொடிப்பொழுது வரை வீரத்தோடும் துணிச்சலோடும் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இறுதியாக அவர்கள் ஷஹீதானார்கள். (ஸீரத்துன் நபவிய்யா)

لما كان يوم الإثنين لأربع ليال بقين من صفر سنة 11 هـ، أمر النبي محمد الناس بالتهيؤ لغزو الروم، فلما كان من الغد دعا أسامة بن زيد فقال «سر إلى موضع مقتل أبيك، فأوطئهم الخيل فقد وليتك هذا الجيش  فتكلم قوم وقالوا «يستعمل هذا الغلام على المهاجرين الأولين»،

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ : بَعَثَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْثًا، وَأَمَّرَ عَلَيْهِمْ أُسَامَةَ بْنَ زَيْدٍ فَطَعَنَ بَعْضُ النَّاسِ فِي إِمَارَتِهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " أَنْ تَطْعُنُوا فِي إِمَارَتِهِ فَقَدْ كُنْتُمْ تَطْعُنُونَ فِي إِمَارَةِ أَبِيهِ مِنْ قَبْلُ، وَايْمُ اللَّهِ، إِنْ كَانَ لَخَلِيقًا لِلْإِمَارَةِ، وَإِنْ كَانَ لَمِنْ أَحَبِّ النَّاسِ إِلَيَّ، وَإِنَّ هَذَا لَمِنْ أَحَبِّ النَّاسِ إِلَيَّ بَعْدَهُ ".

நபி அவர்கள் தங்களின் மரணத்திற்கு முன்பு முஸ்லிம்களுக்கு தொடர் தொந்தரவுகளைக் கொடுத்துக் கொண்டிருந்த ரோமர்களை எதிர்த்து போரிடுவதற்காக ஒரு படையைத் தயார் செய்தார்கள். அப்படைக்கு சுமார் பதினாறு வயதே நிரம்பிய உஸாமா பின் ஸைத் ரலி அவர்களை தளபதியாக நியமித்தார்கள். அப்படையில் அபூபக்கர் ரலி உமர் ரலி போன்ற பெரும் அனுபவமிக்க நபித்தோழர்கள் இருந்தார்கள். இதனால் மக்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. மூத்த தோழர்கள் இருக்கின்ற போது அனுபவமில்லாத, இப்பொழுது தான் வாலிபத்தைத் தொட்டிருக்கின்ற ஒருவர் தளபதியாக நியமிக்கப் பட்டிருக்கின்றாரே என்று அவர்கள் நினைத்தார்கள்.

அப்துல்லாஹ் பின் உமர் ரலி அவர்கள் கூறுகிறார்கள் ; மக்களில் சிலர் உஸாமா அவர்களின் தலைமையைக் குறை கூறினார்கள். அப்போது நபி அவர்கள், ‘(இப்போது) இவரின் தலைமையை நீங்கள் குறை கூறுகிறீர்கள் என்றால்… (இது ஒன்றும் புதிதல்ல). இதற்கு முன் (மூத்தா போரின் போது) இவரின் தந்தையின் (ஸைத் அவர்களின்) தலைமையையும் நீங்கள் குறை கூறிக் கொண்டிருந்தீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் (ஸைத்) தலைமைப் பொறுப்புக்குத் தகுதியுடையவராகவே இருந்தார். மேலும், அவர் மக்களிலேயே எனக்கு மிகவும் விருப்பமானவராக இருந்தார். (அவரின் மகனான) இவர் (உஸாமா) தான் அவருக்குப் பின் எனக்கு மிகவும் பிரியமானவராவார்என்று கூறினார்கள். (புகாரி ; 3730)

உஸாமா ரலி அவர்களது தலைமையில் படை புறப்படுவதற்கு முன்பாகவே நபி  அவர்கள் மரணத்தைத் தழுவி விட்டார்கள், ஆனால் அவர்கள் இறப்பதற்கு முன்னால்.., எந்த நிலையிலும் உஸாமா ரலி அவர்களின் தலைமையில் நான் நியமித்த படையை நிறுத்தக் கூடாது, அந்தப் படை எந்தப் பணிக்காக நியமிக்கப்பட்டதோ, அந்தப் பணிக்கு திட்டமிட்டபடி அதன் பயணம் தொடர வேண்டும், அது அடைய வேண்டிய இடத்தை அடைந்தே ஆக வேண்டும் என்று கூறி விட்டார்கள்.

இறைத்தூதர் அவர்கள் இறப்பதற்கு முன் கூறிச் சென்றபடி, உஸாமா ரலி அவர்களின் தலைமையில் முதல் கலீஃபாவான அபூபக்கர் ரலி அவர்கள் படையை அனுப்பி வைத்தார்கள். உஸாமா ரலி அவர்களது தலைமையில் சென்ற படை இறைவனது மாபெரும் கருணையினால் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது. ரோமப் படைகள் கடுமையான இழப்பைச் சந்தித்தன. (அத்தபகாதுல் குப்ரா)

أمرني رسول اللهِ فتعلمت له كتاب اليهود وقال إني والله ما آمن يهود على كتابي. فتعلمته، فلم يمر بي إلا نصف شهر حتى حذقته، فكنت أكتب له إذا كتب، وأقرأ له إذا كتب إليه

ஜைத் பின் ஸாபித் ரலி அவர்கள் கூறுகிறார்கள் ;  யூதர்களின் மொழியையும் அவர்களின் எழுத்து வடிவத்தையும் கற்றுக் கொள்ளும்படி எனக்கு நபி அவர்கள் உத்தரவிட்டார்கள். 15 நாட்களில் அதை நான் கற்றுக் கொண்டேன். அதற்குப் பிறகு நபி அவர்கள் யூதர்களுக்கு கடிதம் எழுதுவதாக இருந்தால் அவர்களுக்கு நான் எழுதிக் கொடுப்பேன். அவர்களிடமிருந்து கடிதம் வந்தால் அதை நானே படித்துக் காட்டுவேன். (அபூதாவூது ; 3645)

நபி   அவர்களின் மொழிபெயர்ப்பாளராக இருந்த போது அவருக்கு பதினாறு வயது மட்டுமே. பின்பு அவர்களிடம் வஹியை எழுதும் மகத்தான பணியை ஒப்படைத்தார்கள். நபி அவர்களின் காலத்திற்குப் பிறகு குர்ஆனை ஒன்று சேர்க்க வேண்டிய தேவை ஏற்பட்ட போது அந்த மாபெரும் பொறுப்பும் இவர்களிடமே ஒப்படைக்கப்பட்டது.  

இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல, பல்வேறு சந்தர்ப்பங்களில் பெருமானார் நபி அவர்கள் பல முக்கியப் பொறுப்புக்களை பெரும் ஸஹாபாக்கள் இருக்கவே இளம் நபித்தோழர்களுக்கு வழங்கினார்கள். அந்தப் பொறுப்புக்களை அவர்கள் மிகவும் சிறப்பாகவே செய்து முடித்தார்கள்.

மட்டுமல்ல, பல நெருக்கடியாக சூழ்நிலைகளில் சின்ன வயது வாலிபர்களிடம் ஆலோசனைகளைக் கேட்டுப் பெற்று அதன்படி தன் செயல்பாடுகளை அமைத்திருக்கிறார்கள்.  

 قال سلمان للنبي صلى الله عليه وسلم‏:‏ إنا كنا بفارس إذا حوصرنا خندقنا علينا، فأمر النبي صلى الله عليه وسلم بحفر الخندق حول المدينة، وعمل فيه بنفسه ترغيبا للمسلمين، فسارعوا إلى عمله حتى فرغوا منه، وجاء المشركون فحاصروهم ‏

ஹிஜ்ரி 5 ம் ஆண்டு யூதர்கள் முஸ்லிம்களுக்கு எதிராகப் புதிய திட்டம் ஒன்றை தீட்டி முஸ்லிம்களை முற்றிலும் அழிக்கும் ஒரு போரைத் தூண்டி விட ஏற்பாடு செய்தனர். தங்களால் முஸ்லிம்களை நேரடியாக தாக்க ஆற்றல் இல்லை என்பதை உணர்ந்த அவர்கள் இதற்காக ஒரு சூழ்ச்சி செய்தனர்.அதாவது, நழீர் கோத்திரத்தின் தலைவர்கள் மற்றும் சிறப்புமிக்கவர்களில் 20 யூதர்கள் மக்கா குறைஷிகளிடம் வந்தனர். அவர்களை நபியவர்களுக்கு எதிராக போர் புரிய தூண்டி, அதற்கு உதவியும் செய்வதாக வாக்களித்தனர்.

பின்பு இக்குழுவினர் அங்கிருந்து கத்ஃபான் கிளையினரிடம் சென்றனர். அவர்களிடமும் குறைஷிகளிடம் கூறியது போல் கூறியதும், உடனே அவர்களும் போருக்கு ஆயத்தமாயினர். மேலும், இக்குழு பல அரபு கோத்திரத்தினரை நபி அவர்களுக்கு எதிராக போர் புரியத் தூண்டி விட்டனர். பல சமுதாயத்தவர் இதை ஏற்று போருக்கு ஆயத்தமானார்கள். இப்படியே யூத அரசியல் தலைவர்கள், நபியவர்களுக்கு எதிராக அனைத்து அரபுகளையும் ஒன்று திரட்டினார்கள் .

இந்த முயற்சிக்குப் பின், மேற்கிலிருந்து குறைஷிகளும், திஹாமாவைச் சேர்ந்த கினானா மற்றும் அவர்களின் நட்புக் கிளையினர் என மொத்தம் 4000 நபர்கள் அபூஸுஃப்யானின் தலைமையில் புறப்பட்டனர். மர்ருள் ளஹ்ரான்என்ற இடத்திற்கு இப்படை வந்தடைந்த போது அங்குள்ள ஸுலைம் கோத்திரத்தினர் இவர்களுடன் சேர்ந்து கொண்டனர். பின்பு மதீனாவிற்குக் கிழக்கில் கத்ஃபான், ஃபஜாரா கிளையினர், முர்ரா கிளையினர் அஷ்ஜஃ கிளையினர், இதைத் தவிர பனூஅஸத் மற்றும் பல கோத்திரத்தினரும் அவர்களோடு சேர்ந்து கொண்டார்கள்.

இவர்கள் மொத்தம் 10,000 பேர் இருந்தார்கள். இந்த எண்ணிக்கை மதீனாவிலுள்ள பெண்கள், சிறுவர்கள், வாலிபர்கள், வயோதிகர்கள் என அனைவரின் எண்ணிக்கையை விடவும் அதிகமாக இருந்தது. இச்செய்தி கிடைத்தவுடன் நபி அவர்கள் உடனடியாக ஓர் உயர்மட்ட ஆலோசனைக் குழுவைக் கூட்டினார்கள். மதீனாவையும் முஸ்லிம் களையும் எப்படி தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி ஆலோசனை நடத்தினார்கள். ஆலோசனைக் குழு உறுப்பினர்களுக்கு மத்தியிலும் தளபதிகளுக்கு மத்தியிலும் ஏற்பட்ட பல கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின் சங்கைக்குரிய நபித்தோழராகிய ஸல்மான் ஃபாரிஸி ரலி அவர்கள் முன் வைத்த கருத்து முடிவாக ஏற்கப்பட்டது.

அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் பாரசீக நாட்டில் இருந்த போது எங்களை எதிரிகள் தாக்க வருவதாக இருந்தால் எங்களைச் சுற்றி அகழ் தோண்டிக் கொள்வோம். அவ்வாறே இங்கும் செய்யலாம்என ஸல்மான் ஃபார்ஸி (ரழி) கூறினார்கள். இதற்கு முன் இது அரபியர்களுக்குத் தெரியாத ஒரு புதிய திட்டமாக இருந்தது.
இத்திட்டத்தை கேட்டவுடன் அங்கீகரித்து, அதை நிறைவேற்ற நபி அவர்கள் ஆர்வம் காட்டினார்கள். ஒவ்வொரு 10 நபர்கள் கொண்ட குழு 40 முழம் அகழ் தோண்ட வேண்டும்என்று நபியவர்கள் பணித்தார்கள். முஸ்லிம்கள் மிகுந்த உற்சாகத்துடன் அகழ் தோண்டுவதில் ஈடுபட்டார்கள். இறுதியில் அதில் இஸ்லாமியர்களுக்கு மகத்தான வெற்றி கிடைத்தது. (அல்ஃபத்ஹுல் பாரீ)

இப்படி நபி அவர்கள் வாழ்வின் அனைத்துக் காரியங்களிலும் வாலிபர்களுடனேயே பயணித்தார்கள். அனைத்திலும் அவர்களை இணைத்துக் கொண்டார்கள். அவர்களை முன்னிறுத்தினார்கள். அவர்களுக்கு முக்கியப் பொறுப்புக்களை வழங்கினார்கள்.  

عن أبي سعيدٍ الخُدريِّ ، أنَّه كان إذا رأَى الشَّبابَ قال : مرحبًا بوصيَّةِ رسولِ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم ، أمرنا أن نحفظَكم الحديثَ ونُوسِعَ لكم في المجالسِ

அபூஸயீதில் குத்ரீ ரலி அவர்கள் வாலிபர்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் யாரைக் குறித்து எங்களுக்கு உபதேசித்தார்களோ அத்தகைய இளவல்களே வாருங்கள் என்று வரவேற்பார்கள். சபைகளில் உங்களுக்கு தனி இடம் ஒதுக்கித் தர வேண்டுமென்றும் ஹதீஸ்களை உங்களுக்குப் புரிய வைத்துத் தர வேண்டுமென்றும் நாங்கள் ஏவப்பட்டிருக்கிறோம் என்று கூறுவார்கள். (பைஹகி ; 1741)

இன்றைக்கு நாம் பெரும்பாலும் வாலிபர்களிடத்தில் அனுபவம் இருக்காது என்று சொல்லி அவர்களை ஒதுக்கி விடுகிறோம். நம்மை விட்டும் அவர்களைத் தள்ளி வைத்து விடுகிறோம். ஆனால் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு காரியத்தை செய்து முடிப்பதற்கு அனுபவம் மட்டுமே போதாது. ஆற்றலும் தேவை. அனுபவம் ஆற்றலும் இணையும் போது தான் காரியம் வெற்றி பெறும். எனவே அனுபவத்தை உடைய பெரியோர்களும் ஆற்றலை உடைய வாலிபர்களும் இணைந்து செயல்பட வேண்டும். அதுதான் வெற்றிக்கு வழிவகுக்கும். நபி அவர்களின் வாழ்க்கை நமக்கு உணர்த்துவது அது தான்.மட்டுமல்ல இன்றைய வாலிபர்கள் தான் நாளையத் தலைவர்கள். அவர்களை இப்போதே முதன்மைப்படுத்தினால் மட்டுமே நாளை சிறந்த தலைவர்கள் கிடைப்பார்கள்.

رأى عمرو بن العاص رضي الله عنه قوما نَحَّوْ فتيانهم عن مجلسهم فوقف عليهم وقال: ما لي أراكم قد نحيتم هؤلاء الفتيان عن مجلسكم؟! لا تفعلوا، أوسعوا لهم وأدنوهم وحدثوهم وأفهموهم الحديث؛ فإنهم اليوم صغار قوم ويوشكون أن يكونوا كبار قوم، وإنا قد كنا صغار قوم ثم أصبحنا اليوم كبار قوم

வாலிபர்களை தங்கள் சபைகளிலிருந்து ஒதுக்கி வைக்கக்கூடிய ஒரு கூட்டத்தை அம்ர் பின் ஆஸ் ரலி அவர்கள் கண்டார்கள். உடனே அவர்களை முன்நோக்கி உங்கள் சபைகளிலிருந்து இந்த வாலிபர்களை நீங்கள் ஒதுக்கி விடாதீர்கள். அவர்களுக்கும் இடம் தாருங்கள். உங்களோடு அவர்களை நெருக்கிக் கொள்ளுங்கள். அவர்களுக்கு நபி அவர்களின் ஹதீஸ்களை சொல்லி புரிய வையுங்கள். இன்றைக்கு அவர்கள் சிறார்களாக இருந்தாலும் நாளை அவர்கள் பெரும் தலைவர்களாக வர இருக்கிறார்கள் என்று கூறினார்கள்.

எனவே வாலிபச் சமூகத்தை அரவணைத்துக் கொள்ள வேண்டும். அவர்களிடம் இருக்கும் திறமைகளையும், ஆளுமைகளையும் கண்டறிந்து அவர்களை அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்த வேண்டும். இது நாளை சிறந்த ஆளுமைகளைகளை உருவாக்கித் தருவதோடு அவர்களை வழிதவறிச் செல்லாமல் பாதுகாக்கும். தவறான வழிகாட்டுதலுக்குப் பின்னால் அவர்கள் சென்று விடாமல் தடுக்கும். எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக!

 

2 comments:

  1. மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் ஹழ்ரத் வழமைபோல் அற்புதம்

    ReplyDelete
  2. மிக அருமையான தகவல்கள் ஜஸாக்கல்லாஹ் ஹஜ்ரத்

    ReplyDelete