Pages

Pages

Friday, October 20, 2023

ஃபலஸ்தீன் மக்களுக்காக பிரார்த்திப்போம்

அல்லாஹுத்தஆலா மனிதர்களாகிய நம்மை உலகத்திலே படைத்து நமக்குத் தேவையான அத்தனை விஷயங்களையும் வழங்கியிருக்கிறான். உண்ண உணவு, உடுத்த உடை இருக்க இருப்பிடம் நாம் நினைக்கும் காரியங்களை நமக்கு சொந்தமாக்கிக் கொள்ள பொருளாதாரம், வசதி வாய்ப்புகள் என நாம் பிறந்தது முதல் மரணிக்கிற வரை நம் வாழ்க்கைக்குத் தேவையான நம் வாழ்க்கைக்கு அவசியமான அத்தனை காரியங்களையும் அல்லாஹ் நமக்குத் தருகிறான். இதல்லாமல் நாம் உயிர் வாழ்வதற்குத் தேவையான நீர்,நிலம்,நெருப்பு,காற்று,ஆகாயம் என பஞ்ச பூதங்களையும் நமக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்.

وَسَخَّرَ لَـكُمْ مَّا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ جَمِيْعًا مِّنْهُ‌  اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ‏

அன்றி, (அவ்வாறே) வானங்களிலும் பூமியிலுமுள்ள அனைத்தையுமே அவன் தன்னுடைய அருளால் உங்களு(டைய நன்மை)க்கு (உழைக்கும்படி) கட்டுப்படுத்தி வைத்திருக்கிறான். கவனித்து ஆராயும் மக்களுக்கு நிச்சயமாக இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன. (அல்குர்ஆன் : 45:13)

உலகிலே சூரியன் சந்திரன் நட்சத்திரங்கள், கால்நடைகள், மரங்கள், செடிகொடிகள்,கனிகள்,காய்கறிகள்,தானியங்கள், பூமியிலுள்ள கனிம வளங்கள், நீர், நிலம், நெருப்பு, காற்று,ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்கள்  என அத்தனை படைப்புகளும் நமக்காகவே படைக்கப்பட்டிருக்கின்றன. நாம் உயிர் வாழ்வதற்காகவே படைக்கப்பட்டிருக்கின்றன. இப்படி அல்லாஹுத்தஆலா உலகத்தில் உள்ள அத்தனை பொருட்களையும் நமக்காக படைத்திருக்கிறான். படைத்ததோடு மட்டுமின்றி அந்த பொருட்களை உருவாக்கிக் கொள்வதற்கும் அவைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் அவைகளை நமக்கு நாம் சொந்தமாக்கிக் கொள்வதற்கும் தேவையான அறிவையும் ஆற்றலையும் மதிநுட்பத்தையும் வசதிகளையும் சேர்த்தே நமக்கு தந்திருக்கிறான். நமக்கிருக்கும் அறிவால் ஆற்றலால் மதிநுட்பத்தால் வசதிவாய்ப்புக்களால் உலகத்தில் இருக்கும் எதையும் வாங்கவும் முடியும்.பிறருக்கு கொடுக்கவும் முடியும்.ஆனால் எவ்வளவு அறிவு இருந்தாலும் எத்தனை பெரிய ஆற்றலும் மதிநுட்பமும் இருந்தாலும் எத்தனை கோடிகளைக் கொடுத்தாலும் ஏன் இந்த உலகத்தையே கொடுத்தாலும் யாரிடமிருந்தும் வாங்க முடியாத, யாருக்கும் கொடுக்க முடியாத ஒரு பொருள் உலகத்திலே உண்டு.அது தான் நமக்கு அல்லாஹ் கொடுத்திருக்கிற உயிர்.நம் உடலில் அல்லாஹ் ஊதியிருக்கிற ரூஹ்.

பிறப்பின் போது ரூஹை கொடுப்பதும் இறப்பின் போது ரூஹை எடுப்பதும் அல்லாஹ் ஒருவன் மட்டுமே.இன்றைக்கு உலகத்திலே எத்தனையோ அறிவியல் முன்னேற்றங்களும் விஞ்ஞான வளர்ச்சிக்களும் வந்து விட்டது. உலகம் எத்தனையோ அறிய கண்டுபிடிப்புகளை தந்து கொண்டிருக்கிறது. கடந்த காலங்களில் நம் அறிவுக்கும் நம் சிந்தனைக்கும் எட்டாத எத்தனையோ அசாதாரண விஷயங்கள் இன்றைய அறிவியல் வளர்ச்சியால் இன்றைய விஞ்ஞான புரட்சியால் சாதாரணமாகிப் போனது.கடந்த காலங்களில் மலையாகத் தெரிந்த விஷயங்கள் இன்றைக்கு மடுவாகிப் போனது.கடந்த காலங்களில் எதுவெல்லாம் அசாத்தியமாக இருந்ததோ அதுவெல்லாம் இன்றைக்கு சாத்தியமாகி விட்டது. சாத்தியமாகிக் கொண்டிருக்கிறது.

மனித உடலிலே மிக முக்கியமான உறுப்பு இதயம் மற்றும் நுரையீரல். இதயமும் நுரையீரலும் சரியாக இயங்கினால் மட்டும் தான் மூச்சு விட முடியும்.இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு அனைத்து உறுப்புக்களுக்கும் பாய்ந்து உறுப்புக்கள் இயங்கும். நாம் உயிர் வாழ முடியும். இன்றைக்குள்ள நவீன உலகம் அவ்விரண்டு உறுப்புகளுக்கும் மாற்று ஏற்பாட்டை கண்டுபிடித்து விட்டது.மருத்துவத்தில் எக்மோ என்ற ஒரு சிகிச்சை இருக்கிறது.

மூச்சுக் காற்றிலிருந்து கார்பன் டை ஆக்ஸைடைப் பிரித்து, ஆக்ஸிஜனை இரத்தத்தில் கலக்கும் சுத்திகரிப்பு வேலை நுரையீரலுடையது. அதேபோல கிடைத்த சுத்தமான இரத்தத்தை உடல் முழுக்க நரம்பு மண்டலங்கள் வழியாக பாய்ச்சும் வேலை இதயத்தினுடையது.தீவிர  மூச்சுத் தினறல் மற்றும் மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களின் நுரையீரல் மற்றும் இதயம் முழுமையாக செயல்படாத போது, நுரையீரலின் வேலையான சுத்திகரிப்பை எக்மோ கருவி செய்யும். அதன் பின்னர் சுத்தமான பிராணவாயு நுரையீரலுக்கு அனுப்பப்படும். இப்போது நுரையீரல் வேலை செய்யாத போதும் மனித உடல் இயங்கத் தேவையான ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு விடும். இதன் விளைவாக, மூச்சு விடுதல் மற்றும் இரத்த ஓட்டம் தடைபடாமல் இயங்கும். இதன் மூலம், நோயாளி விரைவில் காப்பாற்றப்படுவார்.

அந்த அளவு இன்றைக்கு அறிவியல் வளர்ச்சி உச்சத்தைத் தொட்டு விட்டது.ஆனால் இன்றைக்குள்ள அறிவியலுக்கும் விஞ்ஞானத்திற்கும் சவாலாக இருக்கும் ஒரே விஷயம் மனித உயிர் மட்டும் தான்.உயிரின் இரகசியம் என்ன மனித உடலுக்குள் உயிர் எப்படி செல்கிறது எப்படி வெளியாகிறது என்று உயிர் குறித்த அத்தனை விஷயங்களும் புரியாத புதிராக விளங்க முடியாத மர்மமாக இருக்கிறது.

உலகத்திலே யாராலும் வாங்க முடியாத, பிறருக்கு கொடுக்க முடியாத, மனிதனின் அறிவுக்கும் ஆற்றலுக்கும் அப்பாற்பட்ட,  முழுக்க முழுக்க இறைவனைச் சார்ந்திருக்கிற ஒரே விஷயம் உயிர். முழுக்க முழுக்க இறைவனுடைய கன்ட்ரோலில் அவனது கட்டுப்பாட்டில் இருக்கிற காரணத்தினால் தான் அந்த உயிரை எடுப்பதற்குரிய உரிமை யாருக்கும் வழங்கப்பட வில்லை.தன் உயிராக இருந்தாலும் மற்றவரின் உயிராக இருந்தாலும் அதை மாய்த்துக் கொள்கிற உரிமையையும் அதிகாரத்தையும் அல்லாஹ் யாருக்கும் வழங்க வில்லை.அவ்வாறு தன் உயிரை மாய்த்துக் கொள்வதை அல்லது பிறர் உயிரை பறிப்பதை மிக வன்மையாக இஸ்லாம் கண்டிக்கிறது.

مِنْ اَجْلِ ذٰ لِكَ ‌ۛ ؔ  كَتَبْنَا عَلٰى بَنِىْۤ اِسْرَآءِيْلَ اَنَّهٗ مَنْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ اَوْ فَسَادٍ فِى الْاَرْضِ فَكَاَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيْعًا  وَمَنْ اَحْيَاهَا فَكَاَنَّمَاۤ اَحْيَا النَّاسَ جَمِيْعًا

இதன் காரணமாகவே "எவனொருவன் மற்றொரு ஆத்மாவைக் கொலைக்குப் பதிலாக அல்லது பூமியில் குழப்பத்தைத் தடை செய்வதற்காகவோ அன்றி (அநியாயமாகக்) கொலை செய்கின்றானோ அவன் மனிதர்கள் அனைவரையுமே கொலை செய்தவன் போலாவான். அன்றி, எவன் ஒரு ஆத்மாவை வாழ வைக்கின்றானோ அவன் மனிதர்கள் அனைவரையும் வாழ வைத்தவன் போலாவான்" என்று இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு (அளித்த கற்பலகையில்) நாம் வரைந்து விட்டோம்.   (அல்குர்ஆன் : 5:32)

ولو أنَّ أهلَ سماواتِه وأهلَ أرضِه اشتركوا في دمِ مؤمنٍ؛ لأَدخلَهم اللهُ النّارَ

ஒரு முஃமினைக் கொல்வதற்கு வானத்திலுள்ளவர்களும் பூமியிலுள்ளவர் களும் ஒன்று சேர்ந்தால் அவர்கள் அனைவரையும் அல்லாஹ் நரகில் தள்ளுவான். (இப்னுமாஜா : 2619)

உலகில் உயிரின் மதிப்பும் மரியாதையும் மிக மிக உயர்ந்தது.தேவையில்லாமல் அவசியமில்லாமல் நியாயமில்லாமல் ஒரு உயிர் பறிபோவதை அல்லது பறிக்கப்படுவதை என்றைக்கும் அல்லாஹ்வும் ரசூலும் அனுமதித்ததே இல்லை.

من حديث جَابِرٍ قَالَ: خَرَجْنَا فِي سَفَرٍ، فَأَصَابَ رَجُلًا مِنَّا حَجَرٌ، فَشَجَّهُ فِي رَأْسِهِ، ثُمَّ احْتَلَمَ، فَسَأَلَ أَصْحَابَهُ، فَقَالَ: هَلْ تَجِدُونَ لِي رُخْصَةً فِي التَّيَمُّمِ؟ فَقَالُوا: مَا نَجِدُ لَكَ رُخْصَةً وَأَنْتَ تَقْدِرُ عَلَى الْمَاءِ، فَاغْتَسَلَ، فَمَاتَ. فَلَمَّا قَدِمْنَا عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُخْبِرَ بِذَلِكَ فَقَالَ: قَتَلُوهُ قَتَلَهُمْ اللَّهُ، أَلَا سَأَلُوا إِذْ لَمْ يَعْلَمُوا؛ فَإِنَّمَا شِفَاءُ الْعِيِّ السُّؤَالُ، إِنَّمَا كَانَ يَكْفِيهِ أَنْ يَتَيَمَّمَ، وَيَعْصِبَ عَلَى جُرْحِهِ خِرْقَةً، ثُمَّ يَمْسَحَ عَلَيْهَا، وَيَغْسِلَ سَائِرَ جَسَدِهِ

நாங்கள் ஒரு பயணத்தில் இருந்தோம். அப்போது எங்களில் ஒருவர் மீது கல் ஒன்று விழுந்து அவரது தலையில் பெரும் காயத்தை ஏற்படுத்தி விட்டது. பிறகு அவர் குளிப்பு கடமையானார். அப்போது தன்னுடைய தோழர்களிடத்திலே தயம்மம் செய்வதற்கு எனக்கு அனுமதியை பெற்றுக் கொள்வீர்களா என்று கேட்டார். அப்போது அவர்கள் தண்ணீருக்கு சக்தி இருக்கின்ற நிலையில் தயம்மம் செய்வதற்கு அனுமதி இல்லை என்று கூறி விட்டார்கள். அவர் தண்ணீரைக் கொண்டு குளித்தார். அதன் பாதிப்பால் அவர் மரணமடைந்து விட்டார். நாங்கள் நபியிடத்தில் வந்த பொழுது அந்த செய்தி அவர்களுக்குச் சொல்லப்பட்டது. அப்போது நபி ஸல் அவர்கள், அவரை அவர்கள் கொன்று விட்டார்கள். அல்லாஹ் அவர்களை கொல்வானாக. அவர்களுக்குத் தெரியவில்லை என்றால் கேட்டிருக்கக் கூடாதா. அறியாமையின் நிவாரணம் கேட்பது தான். அவருக்கு தயம்மம் செய்வதே போதுமானதாக இருக்கும். அவருடைய அந்த காயத்தின் மீது ஒரு துணியை சுற்றிக் கொண்டு அதன் மீது தடவி கொள்வதே போதுமானதாக இருக்கும் என்று கூறினார்கள். (ஷரஹுஸ் ஸுன்னா  ; 313)

இந்தளவு இஸ்லாம் உயிருக்கு மதிப்பளித்திருக்கிறது,அதை உயர்வுபடுத்தியிருக்கிறது.ஆனால் இன்றைய காலத்தில் அந்த உயிருக்கு எந்த மதிப்பும் இல்லாமல் போனது.சின்னச்சின்ன பிரச்சனைகளுக் கெல்லாம் உயிர்களை மாய்த்துக் கொள்கிற, இரத்தங்களை ஓட்டுகிற ஒரு மோசமான காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். குறிப்பாக இன்றைக்கு உலகத்தின் அனைத்து மக்களின் பார்வையையும் திரும்பிப் பார்க்க இஸ்ரேல் ஃபலஸ்தீன் போர்.

எண்ணிப்பார்க்க முடியாத கொடுமைகளையும் சிந்தனைக்கு எட்டாத அவலங்களையும் ஃபலஸ்தீன மக்கள் சந்தித்து வருகிறார்கள். ஃபலஸ்னில் எங்கு பார்த்தாலும் இரத்த வாடை, சிதறிய மனித உடல் பாகங்கள், ஒன்றும் அறியாத பச்சிலம் குழந்தைகளின் கோர முகங்கள்,இருக்கவும் முடியாமல் எங்கும் செல்லவும் முடியாமல் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடுகின்ற நம் சகோதர சகோதரிகளின் மரண ஓலங்கள், இப்படி நம் மனதை பதர வைக்கிற நம் உள்ளத்தை ரணமாக்குகிற கல் நெஞ்சையும் கரைய வைக்கிற கொடூர காட்சிகளை ஊடகங்கள் வழியாக நாம் பார்த்து வருகிறோம். சுமார் 3000 க்கும் அதிகமான ஃபலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.அந்த அநீயாயக்காரர்கள் போடும் குண்டு மழைக்கு இரையாகி இருக்கிறார்கள்.குறிப்பாக பச்சிளம் குழந்தைகள் செத்து மடிந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த மோசமான சூழ்நிலையில் இந்த கொடூரமான காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிற நாம் அவர்களுக்காக துஆ செய்ய வேண்டும். பிரார்த்தனையை விட ஒரு முஸ்லிமுக்கு சிறந்த ஆயுதம் வேறு ஒன்றும் இல்லை. இஸ்லாமிய வரலாற்றில் பல்வேறு வெற்றிகள் கிடைப்பதற்கு காரணமாக இருந்தது துஆ தான்.

வரலாற்றிலே இரண்டு நிகழ்வு உண்டு. ஒன்று இஸ்லாமிய வரலாற்றில் நடந்த முதல் போர்க்களம், இஸ்லாத்திற்கு மகத்தான வெற்றியை பெற்றுத் தந்ததோடு இஸ்லாமிய சமூகம் உணர்ந்து கொள்ளும் படியான பல்வேறு பாடங்களையும் படிப்பினைகளையும் பெற்றுத்தந்த பத்ர் போர்க்களம். இன்னொன்று தாவூத் அலை அவர்கள் ஜாலூத் மன்னனை வீழ்த்திய வரலாறு. இந்த இரண்டு வெற்றிக்கும் மிக முக்கியமான காரணமாக இருந்தது துஆ தான்.

பத்ர் போர்க்களம் நடப்பதற்கு முந்திய இரவில் நபி அவர்கள் உருக்கமாக இறைவனிடத்தில் துஆ செய்தார்கள். அந்த துஆ தான் அவர்களின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

"اللهم أنجز لي ما وعدتني، اللهم آت ما وعدتني، اللهم إن تهلك هذه العصابة من أهل الإسلام لا تعبد في الأرض

இறைவா! எனக்கு வாக்களித்ததை எனக்குக் கொடு.இந்த சிறிய படையை நீ அழித்து விட்டால் பூமியில் நீ வணங்கப்பட மாட்டாய் என்று நபி அவர்கள் பிரார்த்தித்தார்கள். (முஸ்னது அஹ்மது ; 1/112)

இதோ இந்த போரில் என்னோடு வந்திருப்பவர்கள் தான் இஸ்லாத்தின் ஆதாரம். இஸ்லாத்தின் அஸ்திவாரம். இவர்களைக் கொண்டு தான் இஸ்லாத்தை கட்டியெழுப்ப வேண்டும். இவர்கள் இல்லையென்றால் உன்னை நினைப்பதற்கும் துதிப்பதற்கும் அழைப்பதற்கும் தொழுவதற்கும் உன்னைப்பற்றி பேசுவதற்கும் உலகில் யாரும் இருக்க மாட்டார்கள் என்று அல்லாஹ்விடம் அழுது மன்றாடி பிரார்த்தித் தார்கள். அல்லாஹ் வெற்றியைக் கொடுத்தான். வரலாற்றுப் பெருமை மிக்க இஸ்லாமிய வளர்ச்சிக்கும் உலகம் முழுக்க இஸ்லாம் தழைந்தோங்குவதற்கும் காரணமாக இருந்த இந்த பத்ரு போரின் வெற்றிக்கு காரணமாக இருந்தது அண்ணல் நபி ஸல் அவர்களின் இந்த உருக்கமாக துஆ தான்.

அதே போன்று இந்த நிகழ்விலும் தாலூத்தின் மக்கள் துஆ  செய்தார்கள். அதை அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனில் பதிவு செய்திருக்கிறான்.

ولما برزوا لجالوت وجنوده قالوا ربنا أفرغ علينا صبرًا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين

ஜாலூத்தையும் அவன் படைகளையும் களத்தில் சந்திக்க அவர்கள் முன்னேறிச் சென்ற போது எங்கள் இறைவா! எங்களுக்கு பொறுமையைத் தருவாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்களுக்கு எதிராக எங்களுக்கு உதவி புரிவாயாக! என்று கூறினார்கள். (அல்குர்ஆன் : 2 ; 250)

பல நிற்கதியான கட்டங்களிலும் அச்சுறுத்தலான சூழ்நிலைகளிலும் அமைதியையும் வெற்றியையும் இஸ்லாமிய சமூகத்திற்கு பெற்றுத்தந்தது துஆக்கள் தான் என்பது வரலாறு கூறும் உண்மை.

பல்வேறு வகையான ஆற்றல்களையும் சாதனைகளையும் கொண்டது துஆ.உலகத்தில் தங்கள் அறிவால் தங்கள் ஆற்றலால் தங்கள் திறமைகளால் சாதிக்க முடியாத செய்ய முடியாத விஷயங்களை எத்தனையோ பேர் தங்கள் பிரார்த்தனையின் மூலம் சாதித்திருக்கிறார்கள். செய்திருக்கிறார்கள்.

وأشار الذهبي، في كتابه «سير أعلام النبلاء» إلى أنه «وكان قدر الله أن يموت والد البخاري وهو مازال طفلاً صغيرًا، لينشأ يتيمًا في حجر أمه، لم تكن بداية البخاري الطفل ككل الأبناء، إذ ابتلاه الله عز وجل في صباه بفقدان بصره، ولكنَّ أمه الصالحة لم تنقطع صلتُها بربها، وكانت تتودد إليه ليل نهار، وهي تدعوه سبحانه راجية أن يرد على صبيها بصره، ويشاء الله أن يسمع دعاءها، فيأتيها إبراهيم عليه السلام يبشرها في المنام يقول لها: (يا هذه، قد ردَّ الله على ابنك بصره لكثرة دعائك)».

 உலகத்திருமறையான அல்குர்ஆனுக்கு அடுத்து உலகத்தார் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு நூல் புகாரி என்று நாம் சொல்கின்ற ஹதீஸ் நூல் தான்.எத்தனையோ தியாகங்களை செய்து நேரங்களை செலவழித்து தன் வாழ்க்கை முழுக்க இதற்காகவே அர்பணித்து சமூகத்திற்கு அந்த ஹதீஸ் கிதாபைத் தந்தவர்கள் ஹள்ரத் புகாரி ரஹ் அவர்கள். தீனின் ஒரு பெகும் பகுதி அழியாமல் கலங்கம் ஏற்படாமல் பாதுகாத்தவர்கள் அவர்கள் தான். அத்தகைய நற்பேறைப் பெற்ற புகாரி ரஹ் அவர்களுக்கு சின்ன வயதில கண் தெரியாது. ஆனால் அவர்களின் தாய் விடாமல் அல்லாஹ்விடம் முறையிட்டு துஆ செய்ததின் விளைவு தான் ஒரு நாள் அல்லாஹ் அவர்களின் கனவில் ஹள்ரத் இப்ராஹீம் அலை அவர்களை காட்டினான். அவர்கள் அந்த தாயின் கனவில் வந்து நீங்கள் செய்த துஆவின் காரணமாக அல்லாஹ் உங்கள் மகனுக்கு பார்வையை மீட்டித் தந்து விட்டான் என்று சுபச்செய்தி சொன்னார்கள்.அவர்கள் சொன்னதைப் போன்றே புகாரி ரஹ் அவர்களுக்கு பார்வை கிடைத்தது. (ஸியரு அஃலாமின் நுபலா)  

இப்படி நபி அவர்களின் காலத்திலிருந்து இன்று வரை துஆவின் மூலம் ஏற்பட்ட பலன்கள் நிறைய உண்டு.

وقال رسولُ اللهِ صلى الله عليه وسلم إن الدعاءَ ينفعُ ممّا نزَلَ ومما لم يَنْزِلْ فعليكم عبادَ اللهِ بالدعاء

நிச்சயமாக துஆ ஏற்கனவே இறங்கி விட்ட சோதனைகளுக்கும் இனி இறங்க இருக்கிற சோதனைகளுக்கும் பலன் தரும். எனவே அல்லாஹ்வின் அடியார்களே துஆவைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். (திர்மிதி ; 3548)

எனவே அந்த துஆவை நாமும் கையில் எடுப்போம்,நம் சகோதர சகோதரிகள் அங்கே பாதிக்கப்படுகிறார்கள், நம் இரத்த உறவுகள் அங்கே நசுக்கப்படுகிறார்கள், பால்வடியும் பிஞ்சுக் குழந்தைகள் தன் இன்னுயிரை  கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நம் இஸ்லாமிய சொந்தங்கள் அங்கே கருவருக்கப்படுகிறார்கள். அதைப் பார்த்துக் கொண்டு உலக நாடுகளைப் போன்று நாமும் கண்டும் காணாமல் இருப்பது உண்மையான முஃமினுக்கு அழகல்ல.நாம் பிரார்த்தனை செய்வோம்.வல்ல ரஹ்மான் தன் ரஹ்மத்தான கண் கொண்டு ஃபலஸ்தீன் மக்களை பார்ப்பானாக!நடந்து கொண்டிருக்கிற போர்க்களத்தில் இஸ்லாமிய மக்களுக்கு மகத்தான வெற்றியைத் தருவானாக! அம்மக்களின் உயிர்களையும் உடமைகளையும் இடங்களையும் நிலங்களையும் அல்லாஹ் பாதுகாப்பானாக! அவர்களுக்கு அச்சமில்லாத நிம்மதியான வாழ்வைத் தருவானாக!

 

No comments:

Post a Comment