Pages

Pages

Wednesday, March 27, 2024

பத்ர் வரலாறு

மக்காவிலிருந்து அபூ ஸுஃப்யானின் தலைமையில் ஷாமிற்கு சென்று அங்கிருந்து மக்காவிற்கு திரும்பும் நாள் நெருங்கிய போது இதன் செய்தியை அறிந்து வருவதற்காக தல்ஹா இப்னு உபைதுல்லாஹ், ஸஈது இப்னு ஜைது (ரழி) ஆகிய இருவரை நபி (ஸல்) மதீனாவின் வடக்குத் திசையின் பக்கம் அனுப்பினார்கள். இவ்விருவரும் ‘ஹவ்ரா’ என்ற இடத்தை அடைந்து அங்கு தங்கியிருந்தனர். அபூ ஸுஃப்யான் வியாபாரக் கூட்டத்துடன் அவ்விடத்தை அடைந்த போது அவ்விருவரும் மதீனாவிற்குத் திரும்பி, செய்தியை நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள்.

இந்த வியாபாரக் கூட்டம் மிகப்பெரிய அளவில் குறைஷித் தலைவர்களுக்குரிய செல்வங்களுடன் சென்று கொண்டிருந்தது. இவர்களிடம் 50,000 தங்க நாணயங்களுக்குக் குறையாத அளவு வியாபாரப் பொருட்கள் 1,000 ஒட்டகங்களில் வந்து கொண்டிருந்தன. ஆனால், இவ்வளவு பெரிய வியாபாரக் கூட்டத்தைப் பாதுகாப்பதற்கு 40 வீரர்கள் மட்டுமே இருந்தனர்.
மக்காவாசிகளுக்கு பொருளாதார ரீதியாக மிகப்பெரிய சேதத்தை உண்டு பண்ணுவதற்கு இது முஸ்லிம்களுக்கு கிடைத்த பெரும் வாய்ப்பாகும். இந்த சேதத்தை ஏற்படுத்திவிட்டால் காலங்காலமாக காஃபிர்களின் உள்ளங்கள் துடிதுடித்துக் கொண்டேயிருக்கும். இப்போது நபி (ஸல்) முஸ்லிம்களுக்கு அறிவிப்புச் செய்தார்கள். “இதோ... குறைஷிகளின் வியாபாரக் கூட்டம் அவர்களது பொருட்களுடன் வருகிறது. அக்கூட்டத்தை நோக்கி நீங்கள் புறப்படுங்கள். அல்லாஹ் அந்தப் பொருட்களை உங்களுக்கு அளிக்கக் கூடும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

இப்போரில் கலந்துகொள்ள வேண்டுமென நபி (ஸல்) எவரையும் வலியுறுத்தவில்லை. காரணம் வியாபாரக் கூட்டத்திற்குப் பதிலாக மக்காவின் படையினருடன் பத்ர் மைதானத்தில் பெரிய அளவில் மூர்க்கமான சண்டையும் மோதலும் நிகழுமென்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. இதற்கு முன்பு தாங்கள் கண்ட சிறிய பெரிய ராணுவப் பயணங்களில் நிகழ்ந்ததைப் போன்றுதான் இந்தப் பயணத்திலும் நிகழும் என்றெண்ணி அதிகமான நபித்தோழர்கள் இப்பயணத்தில் கலந்துகொள்ளாமல் மதீனாவிலேயே தங்கிவிட்டனர். அதை நபி (ஸல்) அவர்களும் குற்றமாகக் கருதவில்லை.
நபி (ஸல்) மதீனாவிலிருந்து வெளியேற ஆயத்தமானார்கள். அவர்களுடன் 310ற்கும் மேற்பட்டவர்கள் (313 அல்லது 314 அல்லது 317) வீரர்கள் வெளியேறினார்கள். அதாவது 82 அல்லது 83 அல்லது 84 முஹாஜிர்களும், அவ்ஸ் கிளையைச் சேர்ந்த 61 அன்ஸாரிகளும், கஸ்ரஜ் கிளையைச் சேர்ந்த 170 அன்ஸாரிகளும் இருந்தனர். மதீனாவிலிருந்து வெளியேறும் போது எவ்வித ஆரவாரமும் இல்லாமல் குறைவான தயாரிப்புடன்தான் முஸ்லிம்கள் சென்றார்கள். முஸ்லிம்களிடம் ஒன்று அல்லது இரண்டு குதிரைகளே இருந்தன. ஜுபைர் இப்னு அவ்வாம் (ரழி) அவர்களிடம் ஒரு குதிரையும் மிக்தாது இப்னு அஸ்வத் (ரழி) அவர்களிடம் ஒரு குதிரையும் இருந்தது. மேலும், 70 ஒட்டகங்கள் மட்டும் இருந்தன. அதில் ஓர் ஒட்டகத்திற்கு இருவர் அல்லது மூவராக மாறிமாறி பயணம் செய்தனர்.
இம்முறை மதீனாவிற்கும் அங்கு தொழுகை நடத்துவதற்கும் பிரதிநிதியாக அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம் (ரழி) அவர்களை நபி (ஸல்) நியமித்தார்கள். நபி (ஸல்) மதீனாவிலிருந்து வெளியேறி ‘ரவ்ஹா’ என்ற இடத்தை அடைந்த போது அபூலுபாபா இப்னு அப்துல் முன்திர் (ரழி) அவர்களைப் பிரதிநிதியாக நியமித்து மதீனா அனுப்பி வைத்தார்கள்.
இப்போருக்கான பொதுவான தலைமைத்துவத்தின் வெள்ளைக் கொடியை ‘முஸ்அப் இப்னு உமைர் அல்குறைஷி அல்அப்த’ (ரழி) அவர்களிடம் வழங்கினார்கள்.
படையை இரண்டு பிரிவாக ஆக்கினார்கள்.

1) முஹாஜிர்களின் படை: இதற்குரிய கொடியை அலீ இப்னு அபூ தாலிப் (ரழி) அவர்களிடம் கொடுத்தார்கள். இக்கொடிக்கு ‘உகாப்’ என்று சொல்லப்பட்டது.
2) அன்ஸாரிகளின் படை: இதற்குரிய கொடியை ஸஅது இப்னு முஆத் (ரழி) அவர்களிடம் கொடுத்தார்கள். இந்த இரு படைகளின் கொடி கருப்பு நிறமுடையதாக இருந்தது.
படையின் வலப் பக்கப் பிரிவிற்கு ஸுபைர் இப்னு அவ்வாம் (ரழி) அவர்களைத் தலைவராக்கினார்கள். இடப் பக்கப் பிரிவிற்கு மிக்தாது இப்னு அம்ர் (ரழி) அவர்களைத் தலைவராக்கினார்கள். நாம் முன்பு கூறியது போன்று இவ்விருவர்தான் குதிரை வீரர்களாக இருந்தார்கள். போரின் கடைசி பிரிவிற்கு கைஸ் இப்னு அபூ ஸஃஸஆ (ரழி) அவர்களைத் தலைவராக்கினார்கள். மற்றபடி பொது தளபதியாகவும், படையை வழி நடத்துபவராவும் நபி (ஸல்) அவர்களே விளங்கினார்கள்.
இஸ்லாமியப் படை பத்ரை நோக்கி

நபி (ஸல்) அவர்கள் சரியான தயாரிப்பு இல்லாத இப்படையுடன் மதீனாவின் வலப் பக்கத்திலிருந்து வெளியேறி மக்காவை நோக்கிச் செல்லும் பிரதான பாதையில் சென்றார்கள். ‘ரவ்ஹா’ என்ற கிணற்றை அடைந்து, அங்கு தங்கிவிட்டு மக்காவின் பிரதான பாதையை தனது இடப்பக்கத்தில் விட்டுவிட்டு வலப்பக்கமாக ‘நாஸியா’ என்ற இடம் வழியாக வெளியேறி பத்ரை நோக்கி சென்றார்கள். ‘நாஸியா’ என்ற இடத்தின் ஓரமாக பயணித்து அங்குள்ள பள்ளத்தாக்கைக் கடந்தார்கள். அந்தப் பள்ளத்தாக்கிற்கு பெயர் ‘ருஹ்கான்’ எனப்படும். அது நாஸியா மற்றும் ‘ஸஃப்ரா’ என்ற இடத்திற்கு மத்தியிலுள்ள பள்ளத்தாக்காகும்.

பின்பு ஸஃப்ராவின் குறுகலான வழியாகச் சென்று ஸஃப்ராவை அடைந்தார்கள். ஸஃப்ரா என்ற இடத்தில் தங்கி, பஸ்பஸ் இப்னு அம்ர் அல் ஜுஹனி, அதி இப்னு அபூஸக்பா அல் ஜுஹ்னி (ரழி) ஆகிய இருவரையும் பத்ர் பள்ளத்தாக்கிற்கு அனுப்பி குறைஷிகளுடைய வியாபாரக் கூட்டத்தின் செய்தியைத் துப்பறிந்து வருமாறு அனுப்பினார்கள்.
மக்காவில் எச்சரிப்பவர்

வியாபாரக் கூட்டத்திற்குப் பொறுப்பாக இருந்த அபூஸுஃப்யான் மிகுந்த எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் இருந்தார். மக்காவின் பாதை இப்போது ஆபத்துகள் நிறைந்தது என்பதையும் அறிந்திருந்தார். எனவே, செய்திகளைச் சேகரித்தவராகத் தனக்கு எதிர்வரும் வாகனிகளிடம் நிலைமைகளை விசாரித்துக் கொண்டே பயணித்தார். அப்போது முஹம்மது (ஸல்) தங்களது தோழர்களை அழைத்துக் கொண்டு இந்த வியாபாரக் கூட்டத்தை கைப்பற்ற புறப்பட்டு விட்டார்கள் என்ற செய்தி அபூஸுஃப்யானுக்குக் கிடைத்தது. அபூஸுஃப்யான் உடனடியாக ழம்ழம் இப்னு அம்ர் அல்கிஃபா என்பவருக்கு கூலி கொடுத்து, மக்காவிற்குச் சென்று தங்களின் வியாபாரக் கூட்டத்தை காப்பாற்றிக் கொள்ள விரைந்து வருமாறு குறைஷிகளுக்கு அறிவிப்புச் செய்ய அனுப்பி வைத்தார். ழம்ழம் மக்காவிற்கு விரைந்து ‘பத்னுல் வாதி’ என்ற இடத்தில் ஒட்டகத்தின் மீது நின்றவராக கூக்குரலிட்டார். மேலும், ஒட்டகத்தின் மூக்கை அறுத்து அதன் மேலுள்ள கஜாவா பெட்டியையும் மாற்றி அமைத்து தனது சட்டையையும் கிழித்துக் கொண்டார். பின்பு “குறைஷிகளே! வியாபாரக் கூட்டம்! வியாபாரக் கூட்டம்! அபூ ஸுஃப்யானுடன் வந்து கொண்டிருக்கும் செல்வங்களை முஹம்மது தன் தோழர்களுடன் வழிமறிக்கக் கிளம்பிவிட்டார். அது உங்களுக்குக் கிடைக்குமென்று நான் கருதவில்லை. உதவி! உதவி! காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!” என்று உரக்கக் கத்தினார்.
மக்காவாசிகள் போருக்குத் தயார்

இதைக் கேட்ட மக்காவாசிகள் அங்குமிங்கும் ஓடலானார்கள். “என்ன! முஹம்மதும் அவரது தோழர்களும் எங்களது வியாபாரக் கூட்டம், இப்னுல் ஹழ்ரமியின் வியாபாரக் கூட்டத்தைப் போன்று ஆகிவிடுமென்று எண்ணுகிறார்களா? ஒருக்காலும் அவ்வாறு ஆகாது. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர் எதிர்பார்க்காதது நடக்கப் போகிறது. அதை அவர் நன்கு அறிந்து கொள்வார்” என்று பேசிக் கொண்டனர். மக்காவில் உள்ள அனைவரும் வெளியேறத் தயாரானார்கள். அப்படி தன்னால் முடியவில்லையானாலும் தனக்குப் பதிலாக மற்றொருவரை அனுப்பி வைத்தார்கள். மக்காவிலுள்ள பிரசித்திபெற்ற பிரமுகர்கள் அனைவரும் இப்போரில் கலந்து கொண்டனர். ஆனால், அதில் கலந்து கொள்ள முடியாத அபூலஹப் மட்டும் தனக்குக் கடன் தரவேண்டிய ஒருவரை தனக்குப் பகரமாக அனுப்பினான். மேலும், குறைஷிகள் தங்களைச் சுற்றியுள்ள அரபியர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்தனர். ‘அதீ’ கிளையினரைத் தவிர அனைத்துக் கூட்டத்தினரும் அதில் கலந்து கொண்டனர். ‘அதீ’ கிளையினரிலிருந்து ஒருவர்கூட கலந்து கொள்ளவில்லை.
மக்கா நகர படையின் அளவு

மக்கா படை புறப்படும் போது அதில் 1300 வீரர்கள் இருந்தனர். இவர்களிடம் 100 குதிரைகளும் 600 கவச ஆடைகளும் இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத அளவிற்கு அதிகமான ஒட்டகங்களும் இருந்தன. இந்தப் படையின் பொதுத் தலைவனாக அபூ ஜஹ்ல் இப்னு ஹிஷாம் இருந்தான். இப்படைக்கு செலவு செய்வதற்குரிய பொறுப்பைக் குறைஷிகளின் ஒன்பது முக்கியஸ்தர்கள் ஏற்றுக் கொண்டனர். ஒரு நாள் ஒன்பது ஒட்டகம் மற்றொரு நாள் பத்து ஒட்டகம் என அறுத்து உணவளித்தனர்.
மக்காவின் படை புறப்படுகிறது

இப்படை தங்களது இல்லங்களிலிருந்து புறப்பட்ட நிலையை அல்லாஹ் இவ்வாறு விவரிக்கின்றான்:

பெருமைக்காகவும் மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவும் தங்கள் வீடுகளிலிருந்து (முஸ்லிம்களை எதிர்க்க ‘பத்ர்’ போருக்குப்) புறப்பட்டனர். மேலும் மக்களை அல்லாஹ்வுடைய பாதையில் செல்வதைத் தடை செய்கின்றனர்...” (அல்குர்ஆன் 8:47)
அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போர் செய்வதற்காக, தங்களது முழு தயாரிப்புடனும் ஆயுதங்களுடனும் புறப்பட்டனர். மேலும், முஸ்லிம்கள் தங்களது வியாபாரக் கூட்டத்தைத் தாக்குவதற்குத் துணிவு கொண்டதைப் பார்த்து மிகுந்த கோபத்துடனும் வெறியுடனும் புறப்பட்டனர்.
மிக விரைவாக பத்ரை நோக்கி மக்காவின் வடப்புற வழியாக பயணித்தனர். ‘உஸ்வான்’ பள்ளத்தாக்கு, பிறகு குதைத், பிறகு ஜுஹ்பாவை அடைந்தனர். அது சமயம் அபூ ஸுஃப்யானிடமிருந்து புதிய தகவல் ஒன்று வந்தது. அதாவது, “நீங்கள் உங்களது வியாபாரக் கூட்டத்தையும், உங்களது செல்வங்களையும், ஆட்களையும் பாதுகாப்பதற்காகத்தான் மக்காவிலிருந்து புறப்பட்டீர்கள். அல்லாஹ் அவை அனைத்தையும் பாதுகாத்து விட்டான். ஆகவே, நீங்கள் திரும்பி விடுங்கள்” என்று அபூஸுஃப்யான் எழுதியிருந்தார்.
வியாபாரக் கூட்டம் தப்பித்தது

அபூ ஸுஃப்யானின் நிலைமைப் பற்றி சிறிது பார்ப்போம்:
அபூ ஸுஃப்யான் மக்காவை நோக்கிய பிரதான பாதையில் சென்று கொண்டிருந்தாலும் மிகவும் சுதாரிப்புடன் நிலைமைகளை நன்கு அலசி ஆராய்ந்து கொண்டு தன்னுடைய வியாபாரக் கூட்டத்தை வழிநடத்திச் சென்றார். பத்ருக்கு அருகில் மஜ்தீ இப்னு அம்ரை சந்தித்தார். அவரிடம் “மதீனாவின் படைகளை நீங்கள் பார்த்தீர்களா?” என்று விசாரித்தார். அதற்கவர் “நான் இங்கு புதிதாக யாரையும் பார்க்கவில்லை. எனினும், இரு வாகனிகள் இந்த நீர் தடாகத்திற்கு அருகில் தங்களது ஒட்டகங்களைப் படுக்க வைத்தனர். பின்பு, தங்களது தோல் பையில் தண்ணீரை நிரப்பிக் கொண்டனர். சிறிது நேரம் கழித்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்” என்று கூறினார்.
இதைக் கேட்டவுடன், அபூ ஸுஃப்யான் அவர்கள் ஒட்டகங்களைப் படுக்க வைத்திருந்த இடத்திற்கு விரைந்தார். அந்த ஒட்டகங்களின் சாணங்களைக் கிளறி அதில் பேரீத்தங்கொட்டைகள் இருப்பதைப் பார்த்தவுடன் அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது யஸ்ரிப் (மதீனா) வாசிகளின் ஒட்டக உணவாகும் என்று கூறி தனது வியாபாரக் கூட்டத்திடம் விரைந்து வந்து அதன் பயண திசையை மேற்கே, கடற்கரை பகுதியை நோக்கி மாற்றினார். பத்ர் வழியாக மக்கா நோக்கி செல்லும் பிரதான பாதையை இடது பக்கத்தில் விட்டுவிட்டார். தனது இந்த தந்திரத்தின் மூலம் மதீனாவின் படையிடம் சிக்காமல் தப்பித்துக் கொண்டார். இதற்குப் பின்பே நாம் முன்பு கூறிய கடிதத்தை மக்காவின் படையினருக்கு எழுதியனுப்பினார்.
திரும்பிட நினைத்த மக்கா படையில் பிளவு

அபூஸுஃப்யான் எழுதிய கடிதம் குறைஷிகளுக்கு கிடைத்த போது அவர்கள் அனைவரும் திரும்பிவிடலாம் என்றே எண்ணினர். ஆனால், குறைஷிகளின் அட்டூழியக்காரன் அபூஜஹ்ல் கர்வத்துடன் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாங்கள் திரும்பமாட்டோம் நாங்கள் பத்ருக்குச் செல்வோம் அங்கு மூன்று நாட்கள் தங்குவோம் ஒட்டகங்களை அறுத்து சமைத்து சாப்பிடுவோம் மது அருந்துவோம் அடிமைப் பெண்கள் இசைப்பாடுவர் எங்களைப் பற்றியும் எங்களது பயணத்தைப் பற்றியும், எங்கள் கூட்டத்தைப் பற்றியும் அரபிகள் கேள்விப்படுவார்கள். அதனால் எங்களை எப்பொழுதும் பயந்தே வாழ்வார்கள்” என்று கூறினான்.

அபூஜஹ்லுக்கு எதிராக அக்னஸ் இப்னு ஷரீக் திரும்பியே ஆக வேண்டுமென்று ஆலோசனைக் கூறினார். ஆனால், அவரது பேச்சைப் பலர் செவிமடுக்கவில்லை. ஆனால், இவருக்கு நண்பர்களாக இருந்த ஜுஹ்ரா கிளையினர் மட்டும் இவரது பேச்சுக்குக் கட்டுப்பட்டனர். இந்தப் போரில் ஜுஹ்ராவினருக்கு அக்னஸ்தான் தலைவராக இருந்தார். எனவே, ஜுஹ்ரா கிளையினரில் எவரும் போரில் கலந்து கொள்ளாமல் அக்னஸுடன் திரும்பி விட்டனர். இவர்கள் ஏறக்குறைய 300 நபர்கள் இருந்தனர். பத்ர் போர் நடந்து முடிந்தபின் குறைஷிகளுக்கு ஏற்பட்ட தோல்வியையும் நஷ்டத்தையும் பார்த்த ஜுஹ்ரா கிளையினர் அக்னஸின் ஆலோசனையை பெரிதும் மெச்சினர். அதற்குப் பின் அக்னஸ் ஜுஹ்ராவனரிடம் மிகுந்த மதிப்பிற்குரியவராகவும் கண்ணியத்திற்குரியவராகவும் என்றென்றும் இருந்தார்.
ஹாஷிம் கிளையினரும் திரும்பிட நாடவே நாங்கள் திரும்பும் வரை நீங்கள் திரும்பக் கூடாதென அபூஜஹ்ல் அவர்களைப் பலவந்தமாக அழைத்துச் சென்றான்.
இவ்வாறு ஜுஹ்ரா கிளையினர் 300 பேர் போரிடாமல் திரும்பிவிடவே, மீதமுள்ள 1000 பேர் கொண்ட படை பத்ரை நோக்கிக் கிளம்பியது. இவர்கள் தொடர்ந்து சென்று பத்ர் பள்ளத்தாக்கில் ‘அல் உத்வதுல் குஸ்வா’ என்ற மேட்டுப் பகுதிக்குப் பின்னால் தங்கினார்கள்.
இக்கட்டான நிலையில் இஸ்லாமிய ராணுவம்

மதீனா படையின் ஒற்றர்கள், நபி (ஸல்) ‘தஃபிரான்’ பள்ளத்தாக்கில் இருக்கும் போது அபூஸுஃப்யானின் வியாபாரக் கூட்டம் மற்றும் மக்கா படை ஆகியவற்றின் நிலைமைகளைப் பற்றிய செய்திகளைக் கொண்டு வந்தனர். ஒற்றர்கள் கூறிய செய்திகளை நன்கு ஆராய்ந்த பின் கண்டிப்பாக அபாயகரமான போரைச் சந்திக்காமல் இருக்க வாய்ப்பில்லை. மேலும், முழுமையான வீரத்துடனும் துணிவுடனும் நிராகரிப்பாளர்களை எதிர்த்தே ஆகவேண்டும் என்ற முடிவுக்கு நபி (ஸல்) வந்தார்கள். மக்கா படைகளை எதிர்க்காமல் விட்டுவிட்டால் அந்தப் பகுதியில் அவர்கள் தங்களின் ராணுவ மற்றும் அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்தி விடுவார்கள். இதனால் முஸ்லிம்களுக்கு அந்தப் பகுதி மக்களிடம் கேவலமும் அவமானமும் ஏற்படலாம். இஸ்லாமிய அழைப்புப் பணி தனது வலிமையை இழந்து விடலாம். இஸ்லாமின் மீது வெறுப்பும் பகைமையும் கொண்ட ஒவ்வொருவரும் முஸ்லிம்களுக்குத் தீங்கு செய்ய துணிவு கொள்ளலாம். இவற்றை கருத்தில் கொண்டு நபி (ஸல்) மக்கா படையினரை எதிர்த்தே ஆகவேண்டுமென்ற உறுதியான முடிவுக்கு வந்தார்கள்.
முஸ்லிம்கள் சண்டையிடாமல் தங்களின் ஊருக்குத் திரும்பி விடுவதால் மக்கா எதிரிகள் மதீனாவரை படையெடுத்து வரமாட்டார்கள் என்பதற்கு எவ்விதமான உத்திரவாதமுமில்லை. ஆகவே, ஒருவேளை முஸ்லிம்கள் மதீனா திரும்பியிருந்தால் அவர்களுக்கு மிகப்பெரிய அவப்பெயரும் மற்றவர்களிடம் அவர்களைப் பற்றிய அச்சமற்றத் தன்மையும், துணிவும் பிறந்திருக்கும்.
ஆலோசனை சபை

திடீரென ஏற்பட்ட அபாயகரமான சூழ்நிலையைக் கருதி நபி (ஸல்) ராணுவத்தின் உயர்மட்ட ஆலோசனை சபையைக் கூட்டினார்கள். அதில், தற்போதுள்ள நிலைமையைச் சுட்டிக்காட்டி தங்களது படையினருடனும் அதன் தளபதிகளுடனும் கருத்துகளைப் பறிமாறிக் கொண்டார்கள். அப்போது சிலருடைய உள்ளங்கள் அச்சத்தால் நடுங்கின. இரத்தம் சிந்தும்படியானப் போரை பயந்தனர். இவர்களைப் பற்றிதான் அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்:

(நபியே!) உங்களது இறைவன் உங்கள் இல்லத்திலிருந்து சத்தியத்தைக் கொண்டு உங்களை வெளியேற்றிய சமயத்தில் நம்பிக்கையாளர்களில் ஒரு கூட்டத்தினர் (உங்களுடன் வர) விரும்பாதவாறே, (போர் செய்வது அவசியம் என) அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்த பின்னரும் இந்த உண்மையான விஷயத்தில் அவர்கள் உங்களுடன் தர்க்கிக்கின்றனர். தங்கள் கண்ணால் காணும் மரணத்தின் பக்கமே அவர்கள் ஓட்டிச் செல்லப்படுகின்றனர் போலும்! (அல்குர்ஆன் 8:5, 6)

ஆனால், படையின் தளபதிகளோ மிகத்துணிவுடன் இருந்தார்கள். அபூபக்ர் (ரழி) எழுந்து பேசினார்கள் அழகாகப் பேசி முடித்தார்கள். பின்பு உமர் (ரழி) எழுந்து அவர்களும் அழகாகப் பேசினார்கள். பின்பு மிக்தாத் இப்னு அம்ர் (ரழி) எழுந்து பேசினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களுக்குக் காட்டிய வழியில் செல்லுங்கள். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! சங்கைமிகு குர்ஆனில்,


மூஸாவே! அவர்கள் அதில் இருக்கும் வரையில் ஒருக்காலும் நாங்கள் அதில் செல்லவே மாட்டோம். நீங்களும், உங்களுடைய இறைவனும் (அங்கு) சென்று (அவர்களுடன்) போர் புரியுங்கள். நிச்சயமாக நாங்கள் இங்கேயே உட்கார்ந்து (கவனித்துக்) கொண்டிருப்போம்.” (அல்குர்ஆன் 5:24)


என்று இஸ்ரவேலர் நபி மூஸா (அலை) அவர்களிடம் கூறியதைப் போல் நாங்கள் உங்களிடம் கூறமாட்டோம். மாறாக, நீங்களும் உங்களது இறைவனும் போர் புரியுங்கள். நாங்களும் உங்கள் இருவருடன் சேர்ந்து போர் புரிவோம். சத்தியத்தைக் கொண்டு உங்களை அனுப்பியவன் மீதாணையாக! நீங்கள் எங்களை அழைத்துக் கொண்டு ‘பர்குல் ஃகிமாது“” என்ற இடம் வரை சென்றாலும் நாங்களும் உங்களுடன் மிகத்துணிவுடன் வருவோம்.” இவ்வாறு மிக்தாத் (ரழி) கூறிமுடித்தார்.

அவரின் வீர உரையைக் கேட்டு நபி (ஸல்) அவர்கள் அவரைப் பாராட்டி புகழ்ந்து அவருக்காகப் பிரார்த்தனை புரிந்தார்கள்.
 
இந்த மூன்று தளபதிகளும் முஹாஜிர்களில் உள்ளவர்கள். முஹாஜிர்கள் படையில் மிகக் குறைவானவர்களாக இருந்ததால், நபி (ஸல்) அன்சாரி தளபதிகளின் கருத்துகளை அறிய விரும்பினார்கள். ஏனெனில், இவர்கள்தான் அதிகமாக இருந்தனர். மேலும், போரினால் ஏற்படக்கூடிய விளைவுகளும் அன்சாரிகளையே அதிகம் பாதிக்கக் கூடியதாக இருக்கும். நபி (ஸல்) அகபாவில் செய்து கொண்ட உடன்படிக்கையில் அன்சாரிகள் மதீனாவிற்கு வெளியில் சென்று போர் புரிய வேண்டுமென்ற நிபந்தனை இல்லாமலிருந்தது. ஆகவே தான் நபி (ஸல்) அன்சாரிகளின் கருத்துகளைக் கேட்க விரும்பினார்கள். மூன்று தளபதிகளின் பேச்சைக் கேட்டதற்குப் பின்பு அன்சாரிகளை மனதில் கொண்டு “மக்களே! எனக்கு ஆலோசனை கூறுங்கள்” என்று பொதுவாகக் கூறினார்கள். நபி (ஸல்) அவர்களின் நோக்கத்தை விளங்கிக் கொண்ட அன்சாரிகளின் தளபதியாக இருந்த ஸஅது இப்னு முஆது (ரழி), நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதரே! எங்களிடம் கேட்பது போல் தெரிகிறதே” என்றார். அதற்கு நபி (ஸல்) “ஆம்!” என்றார்கள். ஸஅது இப்னு முஆது (ரழி) அவர்கள் எழுந்து பின்வருமாறு பதிலளித்தார்:

நாங்கள் உங்களை விசுவாசித்தோம் உங்களை உண்மையானவர்கள் என நம்பினோம் நீங்கள் கொண்டு வந்ததுதான் சத்தியமென்று சாட்சி கூறினோம் இதை ஏற்று உங்களின் கட்டளைகளைச் செவிமடுத்தோம், அதற்குக் கட்டுப்படுவோம் என்று உடன்படிக்கையும் ஒப்பந்தமும் செய்து கொடுத்தோம் எனவே, நீங்கள் விரும்பிய வழியில் செல்லுங்கள் உங்களை சத்தியத்தைக் கொண்டு அனுப்பிய இறைவன் மீதாணையாக! நீங்கள் எங்களை அழைத்துக் கொண்டு கடலுக்குள் மூழ்கினால் நாங்களும் மூழ்குவோம் எங்களிலிருந்து ஒருவரும் பின் தங்கிவிட மாட்டார் நாளை எங்களுடன் எதிரிகளை நீங்கள் சந்திப்பதை நாங்கள் வெறுக்கவில்லை நிச்சயமாக போரில் நாங்கள் உறுதியுடன் இருப்போம் எதிரிகளைச் சந்திப்பதில் உண்மை யாளர்களாக இருப்போம் உங்களுக்குக் கண் குளிர்ச்சி தருபவற்றை அல்லாஹ் எங்களால் வழங்கலாம் அல்லாஹ்வுடைய அருளுடன் எங்களை அழைத்துச் செல்லுங்கள்.”

மற்றுமொரு அறிவிப்பில் வந்துள்ளது: “அல்லாஹ்வின் தூதரே! தங்களின் இல்லங்களில் இருந்து கொண்டு உங்களுக்கு உதவி செய்வது மட்டுமே கடமை என அன்சாரிகள் நினைப்பார்கள் என்று நீங்கள் அஞ்சுகிறீர்களா? அன்சாரிகளின் சார்பாக நான் பேசுகிறேன் அவர்களின் சார்பாக நான் பதிலளிக்கிறேன் நீங்கள் விரும்பிய இடத்திற்குப் பயணித்துச் செல்லுங்கள் நீங்கள் விரும்பியவருடன் உறவு வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் விரும்பியவன் உறவை வெட்டிவிடுங்கள் நீங்கள் விரும்பியதை எங்களிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள் நீங்கள் விரும்பியதை எங்களுக்குக் கொடுங்கள் நீங்கள் எங்களிடமிருந்து எடுத்துக் கொண்டது நீங்கள் எங்களுக்காக விட்டுவிட்டதை விட மேலானதாகும் நீங்கள் எங்களுக்கு எவ்விஷயத்திலும் எதைக் கட்டளையிடுகிறீர்களோ அது விஷயத்தில் எங்களின் செயல்கள் உங்களின் கட்டளைக் கிணங்கத்தான் இருக்கும் அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் எங்களை ‘கிம்தான்’ பகுதியில் உள்ள ‘பர்க்’ என்ற இடம் வரை அழைத்துச் சென்றாலும் நாங்கள் உங்களுடன் வருவோம் அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் எங்களைக் கடலுக்குள் அழைத்துச் சென்று மூழ்கினால் நாங்களும் மூழ்குவோம்” என்று ஸஅது இப்னு முஆது, நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள்.
ஸஅதின் பேச்சையும் அவன் உற்சாகத்தையும் கண்ட நபி (ஸல்) அவர்கள் மிகுந்த ஆனந்தமடைந்தார்கள். பின்பு “நற்செய்தி அடைந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் இரண்டு கூட்டங்களில் ஒன்றை எனக்கு வாக்களித்துள்ளான். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அக்கூட்டத்தினர் வெட்டுண்டு விழும் இடங்களை நான் இப்போது பார்ப்பதைப் போன்று இருக்கின்றது” என்று கூறினார்கள்.
 
மக்கா படையின் முக்கிய விஷயங்களை அறிதல்

அன்றைய மாலை எதிரிகளைப் பற்றி மேலும் பல புதிய தகவல்களை அறிந்து வருவதற்காக முஹாஜிர்களில் உள்ள மூன்று முக்கிய தளபதிகளை நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். அவர்கள் அலீ இப்னு அபூ தாலிப், ஸுபைர் இப்னு அவ்வாம், ஸஅது இப்னு அபீவக்காஸ் (ரழி) ஆவார்கள். இவர்கள் பத்ரின் தண்ணீர் உள்ள இடத்திற்குச் சென்றபோது அங்கு இருவர் மக்கா படைகளுக்காக தண்ணீர் எடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களைக் கைது செய்து நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தார்கள். அப்போது நபி (ஸல்) தொழுது கொண்டிருந்தார்கள். அவ்விருவரிடமும் இஸ்லாமிய படையினர் விசாரிக்கவே அவர்கள், “நாங்கள் குறைஷிகளுக்கு தண்ணீர் எடுத்துச் செல்ல வந்திருக்கிறோம்” என்றனர். இவர்கள் அபூஸுஃப்யானின் கூட்டத்தினராக இருக்கலாம் என்றெண்ணி இவர்களின் பதிலை ஏற்றுக் கொள்ளாமல் கடுமையாக அடித்தனர். அடிக்குப் பயந்த அவ்விருவரும் “ஆம்! நாங்கள் அபூஸுஃப்யானின் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான்” என்றனர். உடனே அவ்விருவரையும் அடிக்காமல் விட்டுவிட்டனர்.
நபி (ஸல்) தொழுது முடித்தவுடன் தங்களது படையினரை கண்டிக்கும் விதமாக “அவ்விருவரும் உங்களிடம் உண்மை கூறியபோது அடித்தீர்கள். ஆனால் பொய் கூறியபோது அவர்களை விட்டு விட்டீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவ்விருவரும் உண்மையைத்தான் கூறினார்கள். அவர்கள் குறைஷிகளுக்காக வந்தவர்களே!” என்று கூறினார்கள்.
 
பின்பு அவ்விருவரையும் அழைத்து “குறைஷிகளைப் பற்றி நீங்கள் எனக்கு சொல்லுங்கள்” என்று நபி (ஸல்) கேட்கவே, “நீங்கள் பார்க்கும் அந்தப் பெரிய மேட்டிற்குப் பின் குறைஷிகள் இருக்கிறார்கள்” என்றனர். “அவர்கள் எத்தனை நபர்?” என்று நபி (ஸல்) கேட்டார்கள். “மிக அதிகமாக இருக்கின்றனர்” என்று அவர்கள் கூறினார்கள். “அவர்களிடம் எப்படிப்பட்ட தயாரிப்புகள் உள்ளன” என்று நபி (ஸல்) கேட்கவே, அவர்கள் “தெரியாது” என்று கூறினர். நபி (ஸல்) “அவர்கள் ஒவ்வொரு நாளும் எத்தனை ஒட்டகங்கள் அறுக்கிறார்கள்?” என்று கேட்க, அதற்கு அவர்கள் “ஒரு நாள் ஒன்பது. மறுநாள் பத்து ஒட்டகங்கள் அறுக்கிறார்கள்” என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) “அவர்கள் தொள்ளாயிரத்திலிருந்து ஆயிரம் நபர்கள் வரை இருக்கலாம்” என்றார்கள். பின்பு அவர்களிடம் “குறைஷி பிரமுகர்களில் யார் யார் வந்திருக்கிறார்கள்?” என்று நபி (ஸல்) கேட்க “உத்பா இப்னு ரபீஆ, ஷைபா இப்னு ரபீஆ, அபுல் பக்த இப்னு ஹிஷாம், ஹக்கீம் இப்னு ஜாம், நவ்ஃபல் இப்னு குவைலித், ஹாரிஸ் இப்னு ஆமிர், துஅய்மா இப்னு அதி, நழ்ர் இப்னு ஹாரிஸ், ஜம்ஆ இப்னு அஸ்வத், அபூ ஜஹ்ல் இப்னு ஹிஷாம், உமய்யா இப்னு கலஃப் ஆகியோரும் மற்றும் பலரும் வந்திருக்கிறார்கள்” என அவ்விருவரும் கூறினர்.
 
மழை பொழிதல்

அல்லாஹ் அன்றிரவு மழையை இறக்கினான். அந்த மழை இணைவைப்பவர்களுக்கு அடைமழையாக இருந்தது. அது அவர்களை முன்னேறவிடாமல் தடுத்தது. ஆனால், முஸ்லிம்களுக்கோ அது மென்மையான தூறலாக இருந்தது. அம்மழையினால் அல்லாஹ் முஸ்லிம்களைச் சுத்தப்படுத்தினான். ஷைத்தானின் அசுத்தத்தை அவர்களை விட்டும் அகற்றினான். அங்கிருந்த மணற்பாங்கான பூமியை முஸ்லிம்கள் தங்குவதற்கு வசதியாக இறுக்க மாக்கிக் கொடுத்தான். மேலும், அவர்களது உள்ளங்களையும் பாதங்களையும் உறுதியாக்கினான்.
முக்கிய ராணுவத் தளத்தை நோக்கி இஸ்லாமியப் படை

இணைவைப்பவர்கள் வருவதற்குள் பத்ர் மைதானத்திற்கருகில் உள்ள நீர்நிலைகளுக்கு நாம் சென்றுவிட வேண்டும் என்பதற்காக நபி (ஸல்) தனது படையை அழைத்துக் கொண்டு விரைந்தார்கள். ஏனெனில், அப்போதுதான் அந்த நீர்நிலைகளை எதிரிகள் கைப்பற்ற விடாமல் தடுக்க முடியும். அல்லாஹ்வின் அருளால் இஷா நேரத்தில் பத்ரின் நீர்நிலைகளில் ஒரு நீர்நிலைக்கு அருகில் நபி (ஸல்) வந்திறங்கினார்கள். அப்போது போர் தந்திரங்களை நன்கறிந்த (ராணுவ நிபுணர்) அல் ஹுபாப் இப்னு முன்திர் (ரழி) எழுந்து “அல்லாஹ்வின் தூதரே! இந்த இடத்தில் நீங்கள் தங்கியதைப் பற்றி எனக்குக் கூறுங்கள். நாம் இவ்விடத்தை விட்டு முந்தவோ அல்லது பிந்தவோ கூடாது என அல்லாஹ் முடிவு செய்த இடமா இது? அல்லது இது உங்கள் சார்பான யோசனையும், போர் தந்திரமுமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) “இல்லை. இது ஒரு யோசனையும் போர் தந்திரமும்தான்” என்றார்கள்.
அதற்கவர் “அல்லாஹ்வின் தூதரே! இது தங்குவதற்குரிய இடமல்ல. நீங்கள் மக்களை அழைத்துக் கொண்டு புறப்படுங்கள். நாம் குறைஷிகளுக்கு மிக அருகில் உள்ள நீர்நிலைக்கு சென்று தங்குவோம். பின்பு மற்ற அனைத்து நீர்நிலைகளையும் நாம் அழித்து விடுவோம். மேலும், ஒரு நீர் தடாகத்தை ஏற்படுத்தி அதை தண்ணீரால் நிரப்பி விடுவோம். நாளை போர் நடக்கும் போது நாம் குடிப்பதற்குத் தண்ணீர் இருக்கும். அவர்கள் குடிப்பதற்குத் தண்ணீர் இருக்காது” என்றார். நபி (ஸல்) அந்த யோசனையை ஏற்றுக்கொண்டு, “நிச்சயம் நீர் நல்ல யோசனை கூறினீர்” என்றார்கள்.
 
உடனே நபி (ஸல்) தங்களது படையை அழைத்துக் கொண்டு எதிரிகளுக்கு சமீபமாக உள்ள நீர்நிலைகளுக்கு அருகில் வந்திறங்கினார்கள். அந்நேரம் இரவின் பெரும் பகுதி கழிந்திருந்தது. பின்பு, தங்களுக்குச் சிறிய சிறிய நீர்த் தடாகங்கள் சிலவற்றை அங்குக் கட்டிக் கொண்டு மற்ற அனைத்து கிணறுகளையும் அழித்துவிட்டார்கள்.
 
படையை ஒழுங்குபடுத்துதல் - இரவைக் கழித்தல்

பின்பு நபி (ஸல்) தனது படையை ஒழுங்குபடுத்தினார்கள். போர் நடக்கக்கூடிய மைதானத்தில் நடந்து சென்று “இன்ஷா அல்லாஹ்! நாளை இன்னார் கொல்லப்படும் இடம் இது... இன்ஷா அல்லாஹ்! நாளை இன்னார் கொல்லப்படும் இடம் இது... என்று தங்களது விரலால் சுட்டிக் காட்டினார்கள். பின்பு நபி (ஸல்) அங்குள்ள ஒரு மரத்தருகில் தொழுதவர்களாக இரவைக் கழித்தார்கள். முஸ்லிம்களும் மிகுந்த நம்பிக்கையுடனும் மன அமைதியுடனும் காலையில் தங்கள் இறைவனின் நற்செய்திகளைக் கண்கூடாகப் பார்த்துக் கொள்ளலாம் என்ற ஆதரவுடன் இரவைக் கழித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம், ஸுனனுத் திர்மிதி)
(நம்பிக்கையாளர்களே! உங்கள் மனம்) சாந்தியடைந்தவர்களாக, சிறியதொரு நித்திரை உங்களைப் சூழ்ந்து கொள்ளும்படி (இறைவன்) செய்ததை நினைத்துப் பாருங்கள்! அன்றி (அதுசமயம்) உங்கள் தேகத்தை நீங்கள் சுத்தப்படுத்திக் கொள்வதற்காகவும், உங்களை விட்டு ஷைத்தானுடைய அசுத்தத்தைப் போக்கி விடுவதற்காகவும், உங்கள் உள்ளங்களைப் பலப்படுத்தி, உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும் (அவனே) வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்தான். (அல்குர்ஆன் 8:11)

அது ஹிஜ்ரி 2, ரமழான் மாதம் பிறை 17 வெள்ளிக்கிழமை இரவாக இருந்தது. இதே மாதம் பிறை 8 அல்லது 12ல் இந்தப் படை மதீனாவிலிருந்து பத்ரை நோக்கி புறப்பட்டது.
 
 
 
 

No comments:

Post a Comment