Pages

Pages

Friday, July 18, 2025

வகுப்பறையில் வகுப்புவாதம்

 


ஷரீஅத்திலும் உலகத்திலும் வரலாறு என்பது ஒரு முக்கிய பகுதியாக இருக்கிறது. வரலாறு ஒரு தேசத்தின் அல்லது ஒரு சமூகத்தின் கடந்த கால நிகழ்வுகளைப் பற்றிய தகவல்களை வழங்குகிறது. இது அவர்களின் கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் மற்றும் போராட்டங்களைப் புரிந்து கொள்ள உதவுகிறது.நிகழ்காலத்தை சரியாக வடிவமைப்பதற்கும் முறையக கட்டமைப்பதற்கும் வரலாறுகள் மிகவும் அவசியம்.

 

வரலாறு விஷயத்தில் நமக்கான மூன்று கடமைகள்.

கடமை 1

வரலாற்றை படிக்க வேண்டும். தெரிந்து கொள்ள வேண்டும். அது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

கடந்த கால வரலாறுகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்று அல்குர்ஆன் நமக்கு அழைப்பு விடுக்கின்றது.

قَدْ خَلَتْ مِنْ قَبْلِكُمْ سُنَنٌ ۙ فَسِيْرُوْا فِى الْاَرْضِ فَانْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِيْنَ‏

உங்களுக்கு முன்னரும் (இப்படி) பல நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கின்றன. (ஆகவே,) நீங்கள் பூமியில் சுற்றித் திரிந்து (இறைவனுடைய வசனங்களைப்) பொய்யாக்கியவர்களின் முடிவு எப்படி ஆனது என்பதைப் பாருங்கள். (அல்குர்ஆன் : 3:137)

عن الشافعي (كان عالماً بأيام الناس

கடந்த கால மக்கள் சந்தித்த நாட்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள் என்று இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

வரலாறுகளை தெரிந்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்

1-      ஈமானைப் பலப்படுத்துகிறது.

قال الجنيد رحمه الله: " الحكايات جند من جند الله عز وجل يقوي بها إيمان المريدين".

கடந்த கால நிகழ்வுகள் அல்லாஹ்வின் பக்கம் செல்ல நாடுபவர்களின் ஈமானை பலப்படுத்தக்கூடியதாக இருக்கிறது என்று ஜுனைதுல் பக்தாதி ரஹ் அவர்கள் கூறுவார்கள்.

2-      சோதனைகளை இலேசாக்குகிறது.நெருக்கடியான தருணங்களில் ஆறுதலைத் தருகின்றது.

وَكُلًّا نَّقُصُّ عَلَيْكَ مِنْ اَنْبَآءِ الرُّسُلِ مَا نُثَبِّتُ بِهٖ فُؤَادَكَ‌  وَجَآءَكَ فِىْ هٰذِهِ الْحَـقُّ وَمَوْعِظَةٌ وَّذِكْرٰى لِلْمُؤْمِنِيْنَ‏

உமது உள்ளத்தைத் திடப்படுத்துவதற்காகவே, நம் தூதர்களின் சரித்திரங்களிலிருந்து இவை அனைத்தையும் நாம் உமக்குக் கூறினோம். இவற்றில் உங்களுக்கு உண்மையும், நல்லுபதேசமும் நம்பிக்கை யாளர்களுக்கு அறிவுரையும் இருக்கின்றன. (அல்குர்ஆன் : 11:120)


عَنِ الْأَعْمَشِ ، قَالَ : سَمِعْتُ أَبَا وَائِلٍ قَالَ : سَمِعْتُ عَبْدَ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : قَسَمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَسْمًا، فَقَالَ رَجُلٌ : إِنَّ هَذِهِ لَقِسْمَةٌ مَا أُرِيدَ بِهَا وَجْهُ اللَّهِ. فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرْتُهُ، فَغَضِبَ حَتَّى رَأَيْتُ الْغَضَبَ فِي وَجْهِهِ، ثُمَّ قَالَ : " يَرْحَمُ اللَّهُ مُوسَى قَدْ أُوذِيَ بِأَكْثَرَ مِنْ هَذَا فَصَبَرَ
 ".

நபி ﷺ அவர்கள் ஒருமுறை போரில் கிடைத்த பொருட்களைப் பங்கிட்டார்கள். அப்போது ஒருவர் நிச்சயம் இதில் அல்லாஹ்வின் பொருத்தம் நாடப்பட வில்லை என்று அதிருப்தியுடன் கூறினார். நான் நபி ﷺ அவர்களிடம் சென்று அதை தெரிவித்தேன். அதைக் கேட்டு அவர்கள் கோபமடைந்தார்கள். எந்த அளவிற்கென்றால் கோபத்தின் அடையாளத்தை நான் அவர்களின் முகத்தில் கண்டேன். பிறகு மூஸா அலை அவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக. இதை விட மிக அதிகமாக அவர்கள் புண்படுத்தப்பட்டார்கள். இருந்தாலும் அவர்கள் சகித்துக் கொண்டார் என்று கூறினார்கள். (புகாரி 3405)

தன் சமூகத்தில் ஒருவரால் தனக்கு நோவினை ஏற்பட்ட போது மூஸா நபி அலை அவர்களை நினைத்துப் பார்த்து ஆறுதல் அடைகிறார்கள்.

3-      நல்லோர்களை பின்பற்றுவதற்கும் அவர்களின் வழியில் செல்வதற்கும் உதவுகிறது.

قال أبو حنيفة رحمه الله: "الحكايات عن العلماء ومحاسنهم أحب إلي من كثير من الفقه لأنها آداب القوم”.

மார்க்க அறிஞர்களைப் பற்றிய செய்திகள் மார்க்க சட்டங்களை விட எனக்கு மிகவும் விருப்பமானது. ஏனெனில் அவைகள் தான் ஒரு சமூகத்திற்கு நல்லொழுக்கங்களையும் சிறந்த நாகரீகங்களையும் கற்றுத் தருகின்றன என்று இமாம் அபூஹனீஃபா ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ هَدَى اللّٰهُ‌ فَبِهُدٰٮهُمُ اقْتَدِهْ ‌ قُلْ لَّاۤ اَسْـٴَــلُكُمْ عَلَيْهِ اَجْرًا‌  اِنْ هُوَ اِلَّا ذِكْرٰى لِلْعٰلَمِيْنَ‏

(நபியே!) இவர்கள் அனைவரையும் அல்லாஹ் நேரான வழியில் செலுத்தினான். ஆகவே, அவர்களுடைய நேரான வழியை நீரும் பின்பற்றுவீராக. மேலும், ‘‘இ(ந்தக் குர்ஆனை உங்களுக்கு அறிவிப்ப)தற்காக நான் உங்களிடம் ஒரு கூலியையும் கேட்கவில்லை. உலகத்தார் அனைவருக்கும் இது ஒரு நல்லுபதேசமாகும்'' என்று கூறுவீராக. (அல்குர்ஆன் : 6:90)

4-      படிப்பனைகளைத் தருகின்றன.

اقرءوا التاريخ إذ فيه العبر * ضل قومٌ ليس يدرون الخبر

ஷவ்கீ என்ற அறிஞர் கூறுகிறார் ; வரலாறுகளைப் படியுங்கள். அதில் உங்களுக்கு எண்ணற்ற படிப்பினைகள் இருக்கின்றன. கடந்த காலத்து செய்திகளை தெரியாதவர்கள் வழிதவறிச் சென்று விடுவார்கள்.

"والتاريخ مما يحتاج إليه الملك والوزير، والقائد والأمير، والكاتب والمشير والغنى والفقير؛ والبادي والحاضر، والمقيم والمسافر، فالملك يعتبر بما مضى من الدول ومن سلف من الأمم، والوزير يقتدى بأفعال من تقدمه ممن حاز فضيلتي السيف والقلم؛ وقائد الجيش يطلع منه على مكايد الحرب، ومواقف الطعن والضرب؛ والمشير يتدبر الرأي فلا يصدره إلا عن روية ويتأمل الأمر فكأنه أعطى درجة المعية وحاز فضيلة الألمعية؛ والكاتب يستشهد به في رسائله وكتبه، ويتوسع به إذا ضاق عليه المجال في سربه، والغنى يحمد الله تعالى على ما أولاه من نعمه ورزقه من نواله، وينفق مما آتاه الله إذا علم أنه لابد من زواله وانتقاله؛ والفقير يرغب في الزهد لعلمه أن الدنيا لا تدوم، ولتيقنه أن سعتها بضيقها لا تقوم، ومن عدا هؤلاء يسمعه على سبيل المسامرة، ووجه المحاضرة والمذاكرة؛ والرغبة في الاطلاع على أخبار الأمم، ومعرفة أيام العرب وحروب العجم".

வரலாறு என்பது அரசர்கள், அமைச்சர்கள், படை தளபதிகள், எழுத்தாளர்கள், ஆலோசனை வழங்குபவர்கள், செல்வந்தர்கள், ஏழைகள், கிராமவாசிகள், நகரவாசிகள், உள்ளூரில் தங்கி இருப்பவர்கள், வெளியூருக்கு பயணப்படுபவர்கள் என அனைவருக்கும் அவசியமானது. ஒரு அரசன் கடந்த கால நிகழ்வுகளைப் பார்த்து படிப்பினை பெற்றுக் கொள்வான். ஒரு அமைச்சர் முன்னாள் வாழ்ந்தவர்களின் செயல்பாடுகளைப் பின்பற்றி வெற்றி பெறுவார். படைத்தளபதி போர் தந்திரங்களை அதைக் கொண்டு அறிந்து கொள்வார். ஆலோசனை வழங்கக் கூடியவர் அதைக் கொண்டு நல்ல முடிவுகளை சிந்திப்பார். ஒரு எழுத்தாளர் தன்னுடைய கட்டுரைகளுக்கும் புத்தகங்களுக்கும் ஆதாரங்களை பெற்றுக் கொள்வார். ஒரு செல்வந்தர் அல்லாஹ்வின் அருளை புரிந்து கொண்டு அல்லாஹ்விற்கு ஷுக்ர் செய்வார். அவன் கொடுத்த பொருளாதாரத்தை நல்ல வழிகளில் செலவழிக்க முற்படுவார். ஒரு ஏழை பற்றற்ற வாழ்க்கைக்கு தன்னை தயார் படுத்திக் கொள்வார்.

கடமை 2

வரலாறுகளைப் பாதுகாக்க வேண்டும்.

நம் முன்னோர்களான இமாம்கள், நபிமார்கள் மற்றும் ஸாலிஹீன்களின் வரலாறுகளை திரட்டி சேமித்து பாதுகாக்கும் மகத்தான பணிகளை செய்தார்கள். ஹழ்ரத் உஸ்மான் பின் அஃப்பான் ரலி அவர்களின் மகனார் அபான் பின் உஸ்மான் ரஹ் அவர்கள் தான் முதன்முதலாக நபி ஸல் அவர்களின் வரலாற்றை ஆய்வு செய்து ஹதீஸ்கள் வழியாக உலகிற்கு தந்தவர். இஸ்லாத்தின் முதல் வரலாற்று ஆசிரியர் என்று அவரை அறிஞர்கள் அடையாளம் காட்டுகின்றார்கள்.

அதற்குப் பின்பு அல்லாமா இப்னு கல்தூன், அல்லாமா இப்னு அஸீர், அல்லாமா தப்ரீ, அல்லாமா இப்னு கஸீர், அல்லாமா இப்னு இஸ்ஹாக், அல்லாமா இப்னு ஸஅத் ரஹ் போன்றவர்கள் வரலாற்று துறையில் தடம் பதித்தவர்களாக அறியப்படுகிறார்கள். அந்த மாமனிதர்களின் மாபெரும் முயற்சியாலும் உழைப்பாலும் தான் வரலாறுகள் இன்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறது.

 

கடமை 3

உண்மை வரலாறுகளை மக்களுக்கு எடுத்துரைப்பது

அல்குர்ஆனில் அல்லாஹ் எண்ணற்ற இடங்களில் வரலாற்று செய்திகளை தெளித்திருக்கின்றான்.அல்லாஹுத்தஆலா தன் அடியார்களுக்கு தன் செய்திகளைச் சொல்வதற்கு பல்வேறு வழிகளைப் பயன்படுத்துகிறான். வாக்குறுதி, எச்சரிக்கை,வெளிப்படையாகச் சொல்லுதல்,மறைமுகமாகச் சொல்லுதல், உதாரணங்கள். இப்படி எண்ணற்ற விஷயங்கள் குர்ஆனில் உண்டு. அதில் ஒன்று தான் வரலாறு.

أنه ثلث القرآن، فالقرآن الكريم ينقسم إلى ثلاثة أقسام: قسم متعلق بالتوحيد، وآخر متعلق بالتشريع، وثالث متعلق بالقَصص

அல்குர்ஆன் முக்கியமான மூன்று பகுதிகளைக் கொண்டது.

1.       ஒரிரைக் கொள்கை

2.       மார்க்க சட்டதிட்டம்

3.       வரலாறுகள்

இந்த வகையில் வரலாறு என்பது அல்குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதி என்று மார்க்க அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.


ஹதீஸ்களிலும் எண்ணற்ற படிப்பினை தரும் வரலாறுகள் இடம் பெற்றிருக்கின்றன.



உதாரணத்திற்கு ஒரு ஹதீஸ்

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

كَانَ رَجُلٌ فِي بَنِي إِسْرَائِيلَ يُقَالُ لَهُ جُرَيْجٌ يُصَلِّي، فَجَاءَتْهُ أُمُّهُ، فَدَعَتْهُ، فَأَبَى أَنْ يُجِيبَهَا، فَقَالَ: أُجِيبُهَا أَوْ أُصَلِّي، ثُمَّ أَتَتْهُ فَقَالَتْ: اللَّهُمَّ لاَ تُمِتْهُ حَتَّى تُرِيَهُ وُجُوهَ المُومِسَاتِ، وَكَانَ جُرَيْجٌ فِي صَوْمَعَتِهِ، فَقَالَتِ امْرَأَةٌ: لَأَفْتِنَنَّ جُرَيْجًا، فَتَعَرَّضَتْ لَهُ، فَكَلَّمَتْهُ فَأَبَى، فَأَتَتْ رَاعِيًا، فَأَمْكَنَتْهُ مِنْ نَفْسِهَا، فَوَلَدَتْ غُلاَمًا فَقَالَتْ: هُوَ مِنْ جُرَيْجٍ، فَأَتَوْهُ، وَكَسَرُوا صَوْمَعَتَهُ، فَأَنْزَلُوهُ وَسَبُّوهُ، فَتَوَضَّأَ وَصَلَّى ثُمَّ أَتَى الغُلاَمَ، فَقَالَ: مَنْ أَبُوكَ يَا غُلاَمُ؟ قَالَ: الرَّاعِي، قَالُوا: نَبْنِي صَوْمَعَتَكَ مِنْ ذَهَبٍ، قَالَ: لاَ، إِلَّا مِنْ طِين

பனூ இஸ்ராயீல் சமுதாயத்தைச் சேர்ந்த ‘ஜுரைஜ்’ என்று அழைக்கப்பட்டு வந்த ஒருவர் தொழுது கொண்டிருந்தார். அப்போது அவரின் தாயார் வந்து அவரை அழைத்தார். அவருக்கு பதில் கூற ஜுரைஜ் மறுத்துவிட்டார். ‘நான் அவருக்கு பதிலளிப்பதா, அல்லது தொழுவதா?’ என்று (மனத்திற்குள்) கூறினார். பிறகு (மீண்டும்), அவரின் தாயார் அவரிடம் வந்து, (தான் அழைத்தும் தன் மகன் பதிலளிக்கவில்லையே என்ற கோபத்தில்), ‘இறைவா! விபசாரிகளின் முகத்தில் விழிக்கச் செய்யாத வரை அவனுக்கு (ஜுரைஜுக்கு) மரணத்தைத் தராதே’ என்று கூறினார்.

(ஒரு நாள்) ஜுரைஜ் தன் ஆசிரமத்தில் இருந்தார். அப்போது ஒரு பெண், ‘நான் ஜுரைஜை நிச்சயம் சோதனைக்குள்ளாக்குவேன்’ என்று கூறினாள். அதற்காக, ஜுரைஜின் முன்பு வந்து அவருடன் (தகாத உறவு கொள்ள அழைத்துப்) பேச முனைந்தாள். அவர் (இணங்க) மறுத்துவிட்டார். எனவே, அவள் ஒர் இடையனிடம் சென்று, தன்னை அவனுடைய ஆளுகைக்குள் ஒப்படைத்துவிட்டாள். அதன் காரணமாக ஒரு (ஆண்) குழந்தையைப் பெற்றெடுத்தாள்.

பிறகு, ‘இவன் ஜுரைஜுக்குப் பிறந்தவன்’ என்று கூறினாள். (இதைக் கேட்ட) மக்கள் (வெகுண்டெழுந்து) ஜுரைஜிடம் வந்தனர்; (கோபாவேசத்தில்) அவரின் ஆசிரமத்தைத் தகர்த்து உடைத்துவிட்டனர்; அவரை (அவரின் அறையிலிருந்து) இறக்கி அவரை ஏசினர். ஜுரைஜ் உளூச் செய்து தொழுதார்.

பிறகு அக்குழந்தையிடம் வந்து, ‘குழந்தையே! உன் தந்தை யார்?’ என்று கேட்டார். அந்தக் குழந்தை (வாய் திறந்து), ‘(இன்ன) இடையன்’ என்று கூறியது. இதைச் செவியுற்ற மக்கள், ‘உங்கள் ஆசிரமத்தைத் தங்கத்தால் நாங்கள் கட்டித் தருகிறோம்’ என்று (ஜுரைஜிடம் அனுமதி) கேட்டார்கள். அதற்கு ஜுரைஜ், ‘இல்லை; களிமண்ணால் கட்டித் தந்தாலே போதும்’ என்று கூறிவிட்டார்.(புகாரி:  2482)


கல்வியின் ஒரு பகுதியாக வரலாறு

எந்தவொரு குழந்தையின் கல்வியிலும் வரலாறு மிக முக்கியமான கல்விப் பாடங்களில் ஒன்றாகும்.

அன்று முதல் இன்று வரை சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான பாடத்திட்டத்தில் வரலாறு என்பது முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றன. பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் மாணவ மாணவிகளுக்கு வரலாறுகள் போதிக்கப்படுகின்றன.

ஏனென்றால், ஒரு மனிதனின் வாழ்வு என்பது அவனைச் சுற்றியுள்ள சுற்றம் அதாவது சமூகத்தை உள்ளடக்கியது. அந்தச் சமூகத்தின் இன்றைய வளர்ச்சி, நேற்றைய வரலாற்று முடிவின் தொடர்ச்சியாகும். பண்பட்ட அல்லது பக்குவப்பட்ட வாழ்க்கை முறைக்கு, நாம் நம் சுற்றத்தைப் பற்றித் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது.

இவ்வாறு சிறுவயதில் தன்னைச் சுற்றியுள்ளச் சமூகத்தைப் பற்றி தெரிந்து கொள்ளும் குழந்தைகள், பின்னாளில் தனக்கு வேண்டிய துறையை அவர்களாகவே தேர்வு செய்ய அவர்களுக்கு உதவுகிறது. அறிவியல் அல்லாத வரலாறும், வரலாறில்லாத அறிவியலும் சாத்தியமில்லை. வரலாறு என்ற தாய் இருந்தால் தான் வளர்ச்சி என்ற ஒரு குழந்தைப் பிறக்கும். முன்னர் என்ன நிகழ்ந்தது என்று தெரிந்தால் தான், இனி என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணம் பிரசவிக்கும்.

உதாரணத்திற்கு, வட்டமான கற்பாறைகள் உருண்டோடியதால் தான் சக்கரம் என்ற ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. கற்களை உரசியாதால் தான் நெருப்பு உருவானது, இது தெரிந்திருக்கா விட்டால் தீப்பெட்டி, கேஸ் போன்ற சாதனங்கள் இன்று கண்டுபிடிக்கப்படாமல் போயிருக்கும். கடந்த கால வரலாற்று நிகழ்வுகளே அடுத்த சந்ததியினரை சிந்திக்கத் தூண்டும் பொரியை ஏற்படுத்தும்.மட்டுமல்ல வளரும் தலைமுறையினர் தங்கள் வாழ்க்கையை செதுக்கவும் தவறுகளை திருத்திக் கொள்ளவும் படிப்பினைகள் பெறவும் கடந்த கால வரலாற்றுக் குறிப்புகள் தேவைப்படுகின்றன.

எனவே தான் ஆரம்ப பள்ளி செல்லும் காலத்திலிருந்தே குழந்தைகளிடத்தில் வரலாற்றுப் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 

வகுப்பறையில் வகுப்புவாதம்

ஆதிக்கவாதிகள் தங்களுடைய ஆதிக்கத்தை ஒரு சமூகத்தில் நிலைநிறுத்திக் கொள்ள, ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக மக்கள் நெஞ்சில் வெறுப்பை விதைத்து அதை வெறியாகக் கிளப்பிவிடுகிற முயற்சி தான் வகுப்புவாதமாகும். இந்தச் செயல் இன்றைக்கு நேற்றைக்கல்ல, தொடர்ந்து இந்த மண்ணில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

பள்ளிக் குழந்தைகளுக்கு வரலாறுகளைச் சொல்லித் தருகிறோம் என்ற பெயரில் வரலாறுகளை திரித்தும் மாற்றியும் இஸ்லாத்தின் மீதும் இஸ்லாமியர்கள் மீது வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் தவறான செய்திகளை கல்வியின் வழியாக இன்றைக்கு குழந்தைகளின் உள்ளங்களில் புகுத்த முயற்சிக்கின்றார்கள்.

நாட்டின் வரலாற்றைப் பார்ப்பனிய வரலாறாக, பார்ப்பனீயத்திற்குச் சார்பாக மாற்றிப் பிழையாகத் திருத்தி எழுதத் துடிக்கும் இந்துத்துவாவாதிகள் சூழ்ச்சிகளை தொடர்ந்து இந்த நாட்டில் நாம் பார்த்து வருகிறோம்.

இளைஞர்களுக்குப் பிழையாய் கடந்த காலங்களைக் கற்பிப்பதன் மூலம், தாங்கள் விரும்பும் மோசமான எதிர்காலத்தைக் கட்டமைக்க எண்ணுகின்றார்கள் அவர்கள்.

வாஜ்பாய் பிரதமராக இருந்த போது கல்வி அமைச்சராக இருந்தவர் முரளிமனோகர் ஜோஷி. இவரின் மேற்பார்வையில் பாடப்புத்தகங்களை மாற்றும் முயற்சியை பாஜக அரசு அன்றைக்கு முன்னெடுத்தது. அப்போது சிபிஎஸ்சி பாடதிட்டத்தின் வரலாற்று நூல்களை மாற்றி அமைத்தார்கள். ரொமிலா தாப்பர், இர்ஃபான் ஹபீப் எழுதிய புத்தகங்களை மாற்று வதில் வாஜ்பாய் அரசு தீவிரம் காட்டிய போது வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பலை எழுந்தது. இந்திய வரலாற்றுப் பேரவை (Indan History Congress) திருத்தப்பட்ட வரலாற்றை ஆய்வு செய்து அதிலுள்ள புரட்டுகளையும், தவறுகளையும் சுட்டிக்காட்டி 179 பக்கங்களைக் கொண்ட புத்தகத்தை வெளியிட்டது.

ஒன்பதாம் வகுப்பு வரலாற்று நூலை மீனாட்சி தெய்ன் என்பவர் எழுதினார். 'ஆங்கிலேயர் வருகின்ற வரையில் இந்தியாவிலுள்ள முஸ்லிம்களிடம் சமத்துவம் இருக்க வில்லை' என்ற தவறான கருத்தை வரலாறாக எழுதினார்.. இதுபொய்யான தகவல் என்பதை அறிய நாம் வரலாற்றின் அன்றைய கால கட்டத்திற்குச் செல்ல வேண்டும். கஜினி முஹம்மது காலத்தில் இங்கு வந்திருந்த அல்புரூனி 'கிதாபுல் ஹிந்த்' என்ற நூலை எழுதினார். அந்த நூலில் இந்தியாவிலுள்ள முஸ்லிம்களின் சமத்துவத்தை விரிவாக ஆதாரங்களுடன் எழுதியிருந்தார். பாஜக தலைமையிலான அரசு பள்ளிப் பாடத்திட்டத்தை வேண்டுமென்றே திரித்து எழுதுவதை வழமையாக கொண்டிருக்கின்றது.

அதன் தொடர்ச்சியாக இப்போது நேற்றைய தினம் (17-07-2025) வெளி வந்த தினத்தந்தி செய்தித்தாளில் வந்த செய்தி ;

 மத்திய பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளுக்கு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) பாடப்புத்தகங்களை தயாரித்து அளிக்கிறது. 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்துக்கு என்.சி.இ.ஆர்.டி. இந்த வாரம் புதிய புத்தகத்தை வெளியிட்டுள்ளது. 'ஆராயும் சமூகம்-இந்தியா மற்றும் அதற்கு அப்பால்' என்ற பெயரில் அந்த புத்தகம் வந்துள்ளது. அதில், டெல்லி சுல்தான்கள், முகலாயர்கள், மராட்டியர்கள் மற்றும் காலனி ஆட்சிக்காலம் குறித்து முதல்முறையாக மாணவர்களுக்கு விளக்கப்பட்டுள்ளது.

 

 

புத்தகத்தின் தொடக்கத்தில், 'வரலாற்றின் இருண்ட காலகட்டம் பற்றிய குறிப்பு' என்ற தலைப்பில், போர் மற்றும் ரத்தக்களறி குறித்த வன்முறை நிகழ்வுகள் கூறப்பட்டுள்ளன. கொடூர வன்முறை, மோசமான ஆட்சி, அதிகார வெறி ஆகியவை எப்படி தொடங்கியது என்று மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், கடந்த கால தவறுகளுக்காக இப்போது யாரையும் பொறுப்பாக்கக் கூடாது என்றும் அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

13-ம் நூற்றாண்டு முதல் 17-ம் நூற்றாண்டு வரையிலான இந்திய வரலாறு அதில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

அதில் இடம்பெற்றுள்ள கருத்துகள் என்னென்ன..?

பாபர், கொடூரமான, இரக்கமற்ற ஆட்சியாளராக இருந்தார். நகரங்களின் ஒட்டுமொத்த மக்களையும் படுகொலை செய்தார். அவுரங்கசீப், ராணுவ ஆட்சியாளராக இருந்தார். கோவில்கள் மற்றும் குருத்வாராக்களை அழித்தார்.

அக்பர் ஆட்சிக்காலம், கொடூரமும், சகிப்புத்தன்மையும் கலந்ததாக இருந்தது. சித்தூர்கர் முற்றுகையின்போது, 30 ஆயிரம் அப்பாவிகளை படுகொலை செய்ய அக்பர் உத்தரவிட்டார். அவரது நிர்வாகத்தின் உயர் பொறுப்புகளில் முஸ்லிம் அல்லாதவர்கள் குறைந்த அளவிலேயே இருந்தனர்.

அக்கால கட்டத்தில் மத சகிப்புத்தன்மை இல்லாமல் இருந்தது. முஸ்லிம் அல்லாதவர்களுக்கு 'ஜிசியா' வரி விதிக்கப்பட்டது. இஸ்லாம் மதத்துக்கு மதமாற்றம் செய்யும் முயற்சி நடந்தது.

அதே சமயத்தில், மராட்டியர்கள், அஹோம்கள், ராஜபுத்திரர்கள், சீக்கியர்கள் ஆகியோரை பாடப்புத்தகம் உயர்வாக சித்தரித்துள்ளது. சத்ரபதி சிவாஜி, தாராபாய், அஹில்யாபாய் ஹோல்கர் ஆகியோர் தொலைநோக்கு சிந்தனை கொண்ட தலைவர்களாக வர்ணிக்கப்பட்டுள்ளனர்.

சிவாஜி, போர் வியூகம் வகுப்பதில் வல்லவர் என்றும், அவர் மற்ற மதங்களை மதித்ததுடன் இந்து தர்மத்தை உயர்த்திப் பிடித்தார், கோவில்களை மறுசீரமைத்தார் என்றும் பாடப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

 தினத்திந்தி செய்தித் தாள் லிங்கு


இதில் இரண்டு தவறான கருத்துக்களை பதிவு செய்கிறார்கள்.

1.       முஸ்லிம் மன்னர்கள் படுமோசமானவர்கள், கொடூரமானவர்கள்.

2.       மக்களை மதமாற்றம் செய்தார்கள்.

உண்மை வரலாறு

முதன்முதலில் இந்தியாவின் மீது படையெடுத்து வந்த முகலாய மன்னர் பாபர். அவர் இங்குள்ள இந்துக்களைத் தோற்கடிக்க வரவில்லை. டெல்லியை ஆண்டு கொண்டிருந்த இப்ராஹீம் லோடி என்ற முஸ்லிம் மன்னரைத் தோற்கடிக்கத் தான் பாபர் படையெடுத்து வந்தார். தௌலத்கான், ராணா சங்கா என்ற இராஜபுத்திர அரசனும் கேட்டுக் கொண்டதற் கிணங்க இந்தப் படையெடுப்பை அவர் மேற்கொண்டார்.

இப்ராஹீம் லோடியை பாபர் தோற்கடித்தபின் ராணா சங்கா, பாபரை எதிர்க்க அந்த ராணா சங்காவையும் தோற்கடித்தார். சந்தேறிப் போரில் மேதினிராயைத் தோற்கடித்து அவரது இரண்டு பிள்ளைகளைத் தன் பிள்ளைகளான ஹூமாயூனுக்கும், காம்ரானுக்கும் திருமணம் செய்து வைத்தார். பாபர் இந்துக்களை அழிக்க வந்தவராக இருந்தால் இப்ராஹீம் லோடி என்ற முஸ்லிமை ஏன் தோற்கடிக்க வேண்டும்? இந்துப் பெண்களைத் தம் மக்களுக்கு ஏன் திருமணம் செய்துவைக்க வேண்டும்?

பாபர் மரணப்படுக்கையில் இருக்கும் போது தன்னுடைய மகன் ஹூமாயூனை அழைத்து 'மகனே! நீ எல்லாருக்கும் பொதுவான அரசன். எனவே இந்து முஸ்லிம் என்று நீ பாகுபாடு காட்டக்கூடாது. எல்லாரையும் சமமாக நடத்த வேண்டும்' என்று கூறிய வரலாற்றுக் குறிப்பை நாம் இன்றும் காணலாம். பாபர் மட்டுமல்ல அவருக்குப்பின் வந்த ஹூமாயூன் ஆட்சியில் இந்துக்களுக்கு எதிரான எந்தப் போக்கையும் காணமுடியாது.

 

அதன்பிறகு வந்த அக்பரின் ஆட்சி இந்துக்களுக்கு ஆதரவான ஆட்சியாக இருந்தது எனலாம். 'முஸ்லிம்களைக் கிறித்தவர்களாக மாற்றிக் கொள்ளலாம்' என்று ஆணை பிறப்பித்தவர் அக்பர். அவரது ஆட்சி இந்துக்கள் நலன் சார்ந்தே இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடு கிறார்கள்.

 

அடுத்து வந்த நான்காவது முகலாய மன்னரான ஜஹாங்கீர், அக்பரால் தோற்கடிக்கப்பட்ட மஹாராணா பிரதாப் சிங்கிற்கும் அவனுடைய மகன் அமர்சிங்கிற்கும் ஆக்ராவில் சிலையை நிர்மாணித்தவர். ஆக்ரா நதிக்கரையிலிருந்து யமுனா நதிக்கரை வரையில் மணியைக் கட்டி எப்போது வேண்டுமானாலும் குடிமக்கள் இந்த மணிஓசையை எழுப்பி மன்னரிடம் உதவி கோரலாம் என்று ஏற்பாடு செய்த நீதிக்குப் பெயர் போன மன்னர் தான் ஜஹாங்கீர். இந்துக்களின் சிலையை நிறுவியவர். மக்களுடைய நலனுக்கான ஏற்பாடு செய்தவர் ஜஹாங்கீர். கட்டாய மதமாற்றத்தில் இவர் ஈடுபட்டதாக ஒரு ஆதாரக் குறிப்பையும் எவராலும் தரமுடியாது.

 

அடுத்துவந்த முகலாய மன்னர் ஷாஜகான். அந்தக் கால கட்டத்தில் இந்தியா வந்திருந்த ஒரு ஆங்கிலப் பேராசிரியர் இவருடைய ஆட்சியை 'ஷாஜகான் ஒரு அரசனைப்போல ஆட்சி செய்ய வில்லை. ஒரு தந்தை குடும்பத்தைப் பாதுகாப்பதைப் போன்று மக்களைப் பாதுகாத்தார்' என்று குறிப்பிட்டார்.

 

தாரா சுக்கூரும், ஒளரங்கசீபும் இவரின் பிள்ளைகள். தாராசுக்கூர் சமஸ்கிருத மொழியில் வல்லமை பெற்றவர். இராமாயணம், மஹாபாரதம், உபநிடத்தங்கள் ஆகியவற்றை சமஸ்கிருதத்திலிருந்து பாரசீகத்திற்கு மொழிபெயர்த்தவர். இந்துமதத்தையும், இஸ்லாத்தையும் மையப்படுத்தி 'இரண்டு மகா சமுத்திரங்களின் சங்கமம்' எனும் நூலையும் தாராசுக்கூர் எழுதியுள்ளார். தம் பிள்ளையை சமஸ்கிருதம் படிக்க அனுமதித்த ஒருவர் எப்படிக் கட்டாயமதமாற்றத்தில் ஈடுபட்டிருப்பார்? ஷாஜகான் தனக்குப்பிறகுதாராசுக்கூர்தான் அரியணைக்கு வரவேண்டும் என்று விரும்பினார். மத நல்லிணக்கத்தை விரும்பிய ஷாஜகான் கட்டாய மத மாற்றத்தில் ஈடுபட்டிருப்பாரா என்ன?

 

அடுத்த முகலாய மன்னர் ஒளரங்கசீப். மிகத் தவறாக எழுதப்பட்ட வரலாறு ஒளரங்கசீப்பைப் பற்றிய வரலாறு தான். ஒளரங்கசீப் வாளால் இஸ்லாத்தைப் பரப்பினார் என்பது மிகவும் பிழையான செய்தி. ஒளரங்கசீப் வருவதற்கு சற்றேறக் குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாமிய ஆட்சியாளர்கள் வந்து விட்டார்கள். கி.பி.712ஆம் ஆண்டில் முஹம்மது பின் காசிம் இங்கே வந்து விட்டார்.

ஒளரங்கசீப் ஆட்சி செய்த ஐம்பது ஆண்டுகளில் நாற்பது ஆண்டுகள் பாமினி சுல்தான்களாகிய முஸ்லிம் மன்னர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்தார். ஜெய்சிங், ஜஸ்வந்த்சிங் என்ற இரு இந்துக்களைத்தான் ஒளரங்கசீப் தமக்கு முக்கியமான படைத்தளபதிகளாக வைத்திருந்தார். தனக்குக் கீழுள்ள படைத்தளபதிகளைக்கூட முஸ்லிமாக மாற்றாத ஒளரங்கசீப் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டிருப்பாரா? தன் உத்தரவின் மூலம் இஸ்லாத்தைத் தழுவும்படி சொல்லாத இந்த மன்னர் எப்படி வாளால் இஸ்லாத்தைப் பரப்பி யிருப்பார்?

 

ஒளரங்கசீபை எதிர்த்தவர்களில் மிக முக்கியமானவர் மராட்டிய சிவாஜி. இவரைத் தோற்கடிக்க ஒளரங்கசீப் இராஜா ஜெய்சிங்கைத்தான் அனுப்பினார். ஜெய்சிங் சிவாஜியைத் தோற்கடித்தார். பின்னாளில் சிவாஜியின் பேரன் சாஹூவை ஒளரங்கசீப் அவரது 7ஆம் வயதிலிருந்து 28ஆம் வயதுவரை வளர்த்தார்.21 ஆண்டுகள் தன் மாளிகையில் வளர்த்த சாஹுவை ஒளரங்கசீப் ஒருமுறை கூட முஸ்லிமாக மாறச் சொல்லவில்லை. அதற்காக அவர் முயற்சிக்கவுமில்லை. கட்டுப்பாட்டில் இருந்த சிறுவரைக் கூட மதம் மாற்ற முயற்சிக்காத ஒளரங்கசீப் தீராத வெறி கொண்டு வாளால் இஸ்லாத்தைப் பரப்பினார் என்று கூறுவது கட்டுக்கதையன்றி வேறில்லை.

 

டெல்லியைத் தலைநகராகக் கொண்டு முகலாயர்கள் ஆட்சி செய்தார்கள். சுல்தான்கள் ஆட்சியைத் தவிர்த்து முகலாயர்கள் ஆட்சிக்காலம் மட்டுமே 350 ஆண்டுகள். ஆனால், டெல்லியில் முஸ்லிம்கள் அன்றும், இன்றும் சிறுபான்மையினராகத்தான் இருக்கின்றார்கள். முகலாயர்கள் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டிருந்தால் தலைநகரில் வாழ்ந்த அத்தனை இந்துக்களையும் முஸ்லிம்களாக மாற்றி யிருக்க வேண்டும் அல்லவா? முகலாயர்கள் கட்டாய மத மாற்றத்தில் ஈடுபடவில்லை என்பதற்கு இந்த ஒன்றே போதும் / மக்களே கண்கண்ட சாட்சியமாகத் திகழ்கின்றார்கள்.

 

உண்மை வரலாறுகள் இவ்வாறிருக்க இதை மாற்றி திரித்து இஸ்லாமிய வெறுப்பை பள்ளிப் பாடப்புத்தகத்தின் வழியாக பிஞ்சிக் குழந்தைகளின் இதயங்களில் புகுத்த நினைக்கிறார்கள்.

 

நாம் செய்ய வேண்டியவை

1.       வரலாறுகளை அதிகம் படிக்க வேண்டும்

2.       வரலாறுகளை பாதுகாக்க வேண்டும்.

3.       உண்மை வரலாறுகளை மக்கள் சமூகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

1 comment:

  1. மாஷா அல்லாஹ் 👍 ஹஜ்ரத் 💐 சிறந்த ஆய்வுகள் பாரகல்லாஹ்!

    ReplyDelete