Pages

Pages

Monday, September 27, 2021

ஹதீஸ் எண் 27 عجبا لامر المومن

 

عن ابي يحيي صهيب بن سنان قال قال رسولُ اللهِ صلى الله عليه وسلم:"عَجَبًا لأمرِ المؤمنِ إِنَّ أمْرَه كُلَّهُ لهُ خَيرٌ وليسَ ذلكَ لأحَدٍ إلا للمُؤْمنِ إِنْ أصَابتهُ سَرَّاءُ شَكَرَ فكانتْ خَيرًا لهُ وإنْ أصَابتهُ ضَرَّاءُ صَبرَ فكانتْ خَيرًا لهُ "

ஒரு முஃமினுடைய காரியம் ஆச்சரியமானது.அவனுடைய காரியம் அனைத்தும் அவனுக்கு நன்மையாகவே அமைகிறது.ஒரு முஃமினைத்தவிர வேறு எவருக்கும் இது நிகழ்வதில்லை. அவனுக்கு மகிழ்ச்சியான நிலை ஏற்பட்டால் நன்றி செலுத்துகிறான். அது அவனுக்கு நல்லதாகி விடுகிறது. அவனுக்கு தீயவை ஏற்பட்டால் பொறுமையை மேற்கொள்கிறான். அதுவும் அவனுக்கு நல்லதாகி விடுகிறது. (முஸ்லிம் ; 2999)

நாம் வாழுகிற வாழ்க்கை வெற்றி தோல்வி, லாப நஷ்டம், இன்பம் துன்பம் என அத்தனை அம்சங்களும் கலந்த வாழ்க்கை.மனித வாழ்வில் மகிழ்ச்சியும் கவலையும் மாறி மாறி வரும். எந்த மகிழ்ச்சியையும் பார்க்காமல் கவலைகளில் மட்டுமே மூழ்கிப்போனவனும் கிடையாது. எந்த கவலைகளும் இல்லாமல் மகிழ்ச்சியில் மட்டுமே திளைப்பவனும் கிடையாது.இரண்டும் கலந்த கலவை தான் மனித வாழ்க்கை.இதில் மகிழ்ச்சி வருகிற போது மனிதன் துள்ளிக் குதிக்கிறான்,கவலைகள் அவனை சூழ்ந்து கொள்கிற போது துவண்டு விடுகிறான்.இரண்டும் தவறானது. மகிழ்ச்சியில் நிதானத்தை கடைபிடித்து அல்லாஹ்விற்கு நன்றி செலுத்த வேண்டும். கவலையில் பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும்.

நாம் அல்லாஹ்விடமிருந்து பெறுகின்ற ஒவ்வொரு நிஃமத்துக்கும் ஷுக்ர் செய்யக் கடமைப்பட்டிருக்கிறோம்.

سفيان الثوري -رحمه الله- لما ذهب إلى عبد الرزاق الصنعاني في اليمن، فأطعمه قِدراً من سكباج، وأعطاه من زبيب الطائف، فأكل تلك الليلة، فقال: إن الحمار إذا زيد في علفه زيد في عمله، فجعل يصلي حتى أصبح، في مقابل هذا الشبع الذي حصل له من هذا السكباج، وهو: لحم يطبخ بطريقة معينة، مع زبيب الطائف.

சுஃப்யானுஸ் ஸவ்ரீ ரஹ் அவர்கள் யமனில் இருக்கக்கூடிய தன்னுடைய நண்பரை சந்திப்பதற்கு சென்றார்கள். அங்கே அவரது நண்பர் இரவிலே சுஃப்யானுஸ் ஸவ்ரீ ரஹ் அவர்களுக்காக உயர் தரமான உணவு ஒன்றை சமைத்து பரிமாறினார்கள். இரவு உட்கொண்டு விட்டு ஒளு செய்து விட்டு இரவில் தொழுகைக்காக நின்றவர்கள் ஃபஜ்ர் வரைக்கும் தொழுது கொண்டிருந்தார்கள். நீங்கள் ஓய்வெடுக்க வில்லையா என்று இரவு வணக்கத்தை குறித்து நண்பர் கேட்ட பொழுது, சுஃப்யானுஸ் ஸவ்ரீ ரஹ் அவர்கள், சாதாரணமாக ஒரு கழுதைக்கு தீவனம் குறைவாக கொடுத்தால் குறைவாக பொதி சுமக்கும். தீவனம் அதிகமாக கொடுத்தால் அதிகமாக பொதி சுமக்கும். நான் என்றைக்கும் இல்லாத அளவுக்கு இன்றைக்கு கொஞ்சம் அதிகமான உயர் தரமான உணவை உட்கொண்டிருக்கிறேன். எனவே மற்ற நாட்களை விட இன்றைக்கு அதிகம் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறேன். எனவே தான் இரவு முழுக்க நின்று தொழுதேன் என்றார்கள்.

நாம் சாதாரணமாக இன்றைக்கு உணவு அதிகமாகி விடுகிற அன்றைக்குத்தான் தூக்கமும் அசதியும் மிகைத்து விடும். சில நேரங்களில் உணவு அதிகமாகி விட்டால் பஜர் தொழுகை கூட தவறி விடும். ஆனால் நம் முன்னோர்கள் உணவு கொஞ்சம் அதிகமாகி விட்டால் அதற்குத் தனியாக ஷுக்ர் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்திருப்பதை இந்த நிகழ்வு நமக்கு சுட்டிக் காட்டுகிறது.

கால் வீங்குகின்ற அளவுக்கு இரவில் நின்று தொழுவதைப் பார்த்த அன்னை ஆயிஷா ரலி அவர்கள் நபியவர்களிடத்திலே அல்லாஹ்வின் தூதர் அவர்களே முன் பின் பாவங்களை விட்டும் தூய்மையாக்கப்பட்ட நீங்கள் ஏன் இவ்வளவு சிரமத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று விளக்கம் கேட்ட போது, நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா என்று கேட்டார்கள்.

 

அதேபோன்று நம் குடும்பத்திலோ நம் வியாபாரங்களிலோ குழந்தைகளிலோ ஏதாவது சோதனைகளை சந்திக்கின்ற பொழுது நாம் பொறுமையை மேற்கொள்ள வேண்டும். மகிழ்ச்சியான நேரங்களில் நன்றி செலுத்துவதும் சோதனையான தருணங்களில் பொறுமையை மேற்கொள்வதும் தான் ஒரு முஃமினுடைய அடையாளமாக இருக்கிறது என்பதை ஹதீஸ் நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

இந்த இரண்டு தன்மைகளும் வரவேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் இஸ்லாம் நமக்கு சொல்லித் தருகிறது. அல்லாஹ் குர்ஆனில் ஒரு வசனத்தில்

ما اصابك من حسنة فمن الله وما اصابك من سيئة فمن نفسك

உனக்கு ஏதாவது நன்மை ஏற்பட்டால் அது அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஏற்பட்டது. உனக்கு ஏதாவது தீமை ஏற்பட்டால் அது உன் புறத்திலிருந்து ஏற்பட்டது என்று கூறுகிறான்.

இந்த சூட்சுமத்தை நாம் புரிய வேண்டும். இன்றைக்கு நம்மில் அதிகமானவர்களுக்கு இந்த எண்ணம் இருப்பதில்லை. இதற்கு எதிராகத்தான் நாம் புரிந்து வைத்திருக்கிறோம். நன்மையான காரியங்கள் நடக்கின்ற பொழுது அதை நம் பக்கம் சேர்த்துக் கொள்கிறோம். எனவே அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்ற உணர்வு வருவதில்லை. தீமையான காரியங்கள் நடக்கின்ற பொழுது இறைவன் பக்கம் சேர்த்துக் கொள்கிறோம். அதனால் பொறுமையும் நம்மிடம் ஏற்படுவதில்லை. நன்மையான காரியங்கள் இறைவனைச் சார்ந்தது என்று புரியும் பொழுது தான் இறைவனுடைய ஞாபகம் வந்து அவனுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்ற உணர்வு நமக்கு ஏற்படும். தீமையான காரியங்களில் என்னிடருந்து நடந்தது, அதற்கு நான் தான் காரணம் என்று ஒவ்வொரும் சிந்திக்க ஆரம்பித்தால் தான் பொறுமையும் ஏற்படும் அதைத் தான் இந்த வசனத்தில் அல்லாஹ் தெளிவாக சுட்டிக் காட்டுகிறான்.

No comments:

Post a Comment