Pages

Pages

Thursday, December 19, 2013

நாவின் தீங்கு

      


அஸ்ஸலாமு அலைக்கும் {வரஹ்} அன்பு நேயர்களே! அல்லாஹுத்தஆலா தன் அருள்மறை வேதமான அல்குர்ஆன் ஷரீஃபில், ரஹ்மான் என்ற அத்தியாயத்தின் 3 மற்றும் 4 வது வசனத்தில் நானே மனிதனைப் படைத்தேன்.நானே மனிதனுக்கு விளக்கமாக பேசவும் கற்றுக் கொடுத்தேன் எனக் குறிப்பிடுகிறான்.

அன்பானவர்களே! நாவு என்பது நமக்கு வழங்கப்பட்டுள்ள மிகப் பெரும் பாக்கியங்களில் ஒன்று.அதிலும் தெளிவோடும் விளக்கத் தோடும் பேசுகின்ற ஆற்றல் மிக்க நாவு என்பது, அளவில்லா ஈடு இணையற்ற பாக்கியம்.அனைத்து ஜீவராசிகளையும் இறைவன் நாவோடு தான் படைத்துள்ளான். என்றாலும் அவைகளால் நாம் விளங்கும் அமைப்பில் பேச முடியாது. ஆனால் நமக்கு நாவையும் கொடுத்து தெளிவாக பேசும் ஆற்றலையும் வழங்கியுள்ளான்.

நாவு அரை அங்குலம் தான்.ஆனால் அது ஆறடி மனிதனையும் வீழ்த்தும் வல்லமை படைத்தது. நாவு அகிலத்தையும் ஆள வைக்கும் ஆற்றல் மிக்கதாக இருக்கும் அதே நேரத்தில், நம்மை அழிவின் வாசலிலும் கொண்டு போய் நிறுத்துவதும் அதே நாவு தான்.

ஆட்டை அறுத்து அதில் சுவையான பகுதியை எடுத்துக் கொண்டு வா! என்று எஜமானன் தனது அடியாளிடம் கூறினான்.அந்த அடியாள் ஆட்டை அறுத்து அதன் நாவை எடுத்து வந்தான்.பின்பு ஆட்டை அறுத்து அதில் வெறுப்பான,கசப்பான பகுதியை எடுத்து வா என்று சொன்ன போது அப்போதும் அந்த அடியாள் ஆட்டை அறுத்து நாவையே கொண்டு வந்தான்.காரணம் கேட்ட போது, எஜமானரே! நாவு தான் நல்லதையும் பேசுகிறது.பொய் பித்தலாட்டங்களையும் சொல்கிறது.சுவையைத்தரும் நாவே கசப்பையும் தருகிறது என்றான் அந்த அடியாள்.

நாவின் மூலம் சாதித்தவர்களை விட வீழ்ந்தவர்கள் தான் உலகில் அதிகம்.சில சமயங்களில் நாவு ஏற்படுத்தும் காயம் ஆறாத வடுவாக அமைந்து விடும். தீயினால் சுட்ட புண் உள்ளாறும்.ஆறாதே நாவினால் சுட்ட வடு என்ற திருவள்ளுவரின் கூற்று இங்கு நினைவில் கொள்ளத் தகுந்தது.

கேட்பதற்குக் காதுகளை இரண்டாகவும்,பார்ப்பதற்குக் கண்களை இரண்டாகவும்,பிடிப்பதற்குக் கரங்களை இரண்டாகவும்,நடப்பதற்குக் கால்களை இரண்டாகவும் கொடுத்த இறைவன், பேசுவதற்கு நாவை மட்டும் ஒற்றையாக வழங்கியதின் தாத்பரியம் இதுதான்.

எனவே தேவை ஏற்பட்டால் மட்டும் தான் நாவை பயன் படுத்த வேண்டும். இல்லையேல் மௌனம் சாதிக்க வேண்டும்.பேசாமல் இருக்கும் வரை சொல்லுக்கு நாம் அரசன்.பேசி விட்டால் பேச்சுக்கு நாம் அடிமை. எனவே தான் நாவைச் சுற்றி பற்களால் இறுக்கமான அரண் அமைத்து, மேலும் கீழும் உறுதியான தாடை கொண்டு அமுக்கி, அதற்கு வெளியே வாயைக் கொண்டு பூட்டப் பட்டிருக்கிறது. அப்படியிருந்தும் இத்தனை பாதுகாப்பு வளையங்களையும் தாண்டி நாவு வெளியே வந்து வம்பை விலைக்கு வாங்கிக் கொள்கிறது.
   
நபிகள் நாயகம் {ஸல்} அவர்கள் தன் தோழரான முஆத் அவர்களிடம் தன் நாவை பிடித்துக் காட்டி இதனை உன் கட்டுப்பாட்டில் வை என்றார்கள்.நாம் அடையும் தண்டனைக்கு நாவும் காரணமாகுமா? என்று அந்தத் தோழர் கேட்டார்.அப்போது நபியவர்கள்,மறுமையில் மனிதர்களை நரகில் முகங்குப்புற தள்ளுவதில் நாவு அறுவடை செய்ததும் உண்டு என்றார்கள்.


எனவே நரம்பில்லா நாக்கு நரகத்திற்கு அழைத்துச் செல்வதிலும் வல்லது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.வல்ல இறைவன் நம் அனைவரையும் நாவின் தீங்குகளிலிருந்து காப்பானாக!ஆமீன்.

No comments:

Post a Comment