Pages

Pages

Thursday, December 19, 2013

துன்பத்திற்குப் பின் இன்பம்

  

அஸ்ஸலாமு அலைக்கும் {வரஹ்} அன்பு நேயர்களே! நாம் வாழ்கின்ற இந்த உலக வாழ்க்கை, இன்பமும்,துன்பமும் கலந்த கலவை.துன்பத்தை அனுபவிக்காமல் இன்பத்திலேயே மூழ்கியவனும் கிடையாது.இன்பத்தை சுவைக்காமல் துன்பத்திலேயே சிக்கியவனும் கிடையாது. நம்மைப் படைத்த இறைவன் இரண்டையும் ஒன்றன் பின் ஒன்றாகத் தருகிறான்.

ஒரு நொடியில் ஏற்படும் துன்பம், அடுத்த நொடியில் ஏற்படும் இன்பத்தால் மறைந்து போய்விடும். ஓர் உயிரிழப்பு ஏற்பட்டு துன்பத்தில் துவண்டு கொண்டிருக்கும் ஒரு வீட்டில், புது வரவாக ஒரு குழந்தை பிறப்பது, அந்த வீட்டில் குதூகலத்தை ஏற்படுத்துகிறது. பொருளாதாரத்தில் மிகுந்த நஷ்டத்தை சந்தித்து மனம் நொந்து போன ஒருவனுக்கு சிறந்த ஊதியத்தில் பணி கிடைக்கிற போது, நஷ்டத்தைக் குறித்த கவலை காணாமல் போகிறது. இது மனித வாழ்கையின் தாத்பரியம்.இந்த தாத்பரியத்தை ஒருவன் புரிந்து கொண்டால் கஷ்டங்களை சுலபமாக எதிர்கொள்ளும் பக்குவத்தைப் பெற்று விடுவான்.

நிச்சயமாக துன்பத்துடன் இன்பமும் இருக்கிறது என்ற அல்குர்ஆன் 94 வது அத்தியாயத்தின் 5 வது வசனம், நமக்கு இந்த தாத்பரியத்தை நன்கு புரிய வைக்கும்.  கஷ்டத்திலும்,கவலையிலும் சிக்கித் தவிப்பவர்களுக்கு இந்த வசனம்,கவலை போக்கும் சிறந்த மருந்தாக அமைகிறது. எத்தனையோ நோய்களுக்கு நிவாரணத்தைக் கண்டுபிடித்த இந்த உலகம், கவலையில் வீழ்ந்தவனுக்கு எந்த நிவாரணத்தையும் தரமுடியாமல் திணறி நிற்கிற போது, கஷ்டம் வந்தால் நிச்சயம் மகிழ்ச்சியும் நம் வீட்டுக் கதவைத் தட்டும் என்று கூறும்  இந்த ஒற்றை வரி திருமறை வசனத்தின் வழியாக அந்த நிவாரணத்தை இஸ்லாம் தந்து விட்டது.

அறிஞர் லுக்மான் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் தன் மகனை அழைத்துக் கொண்டு அவசரமாக ஒரு ஊருக்குப் புறப்படுகிறார்கள். வழியில் ஒரு காட்டுப் பகுதியில் மகனின் காலில் முள் ஒன்று தைத்து இரத்தம் வழிகிறது. கடுமையான வலி. நடக்க முடியவில்லை. சரி இன்றிரவு இங்கேயே பொழுதைக் கழித்து விட்டு வலி குறைந்ததும் பயணிக்கலாம் என்று அங்கு தங்குகிறார்கள். மறுநாள் காலையில் புறப்பட்டு அந்த ஊருக்கு சென்று பார்த்தபோது ஒரே மயானமாக காட்சி தந்தது . அன்று அதிகாலையில் நடந்த பூகம்பத்தில் அந்த ஊரே காணாமல் போயிருந்தது.

மகனே! ஒருவேளை உன் காலில் முள் குத்தாமல் இருந்திருந் தால் நாமும் பூமிக்குள் புதையுண்டிருப்போம் என்று அறிஞர் லுக்மான் {அலை} அவர்கள் தன் மகனிடம் கூறிய வரலாறு, இந்த வசனத்தின் உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.  

நம் வாழ்க்கையில் துன்பங்களையும்,கவலைகளையும் அள்ளித் தெளிப்பது இறைவனின் விருப்பமல்ல.மாறாக இன்பங்களை நாம் முழுமையாக விளங்குவதற்காகத் தான் துன்பங்களைத் தருகிறான். நிழலின் அருமையை விளங்குவதற்கு வெயில் தேவைப்படு வதைப் போல, இன்பங்களின் யதார்தத்தைப் புரிய வைப்பதற்கு துன்பங்களும் தேவைப் படுகிறது என்ற உண்மையை நாம் புரிய வேண்டும்.

கஷ்டம் என்பது நமது வாழ்வில் இல்லாது விட்டால் வாழ்க்கை யில் உருவாகும் மகிழ்ச்சி சுவையாக இருக்காது. வீழாமல் இருப்பது பலம் அல்ல. மீண்டும் மீண்டும் வீழ்ந்து தைரியமாக எழுந்து நடப்பதில் தான் உண்மையான பலம் அடங்கியுள்ளது. கஷ்டங்கள், துன்பங்கள் நேர்ந்த போது மனம் தளர்ந்து விடாமல் அவற்றைத் திராணியோடு எதிர்த்து நின்று போராடிப் பெறும் இன்பம் தான் வாழ்வில் நிலையான இன்பம்.

ஆக துயரங்கள் நம்மை சூழ்கொள்கிற போது, துவண்டு விடாமல் நிச்சயம் இதற்குப் பின்பு மகிழ்ச்சி பிறக்கும் என்ற உண்மையை உணர வைக்கிற இந்த வசனத்தைப் படித்துப் பார்த்தால் நிச்சயம் மலை போன்ற அந்த துயரங்கள் கடுகைப் போன்று சிறுத்து விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இறைவன் அல்லாஹுத்தஆலா துயரங்களை சகித்துப் பொருமை கொள்கிற பக்குவத்தை நமக்கு வழங்குவானாக! ஆமீன்.


1 comment:

  1. anniya pennudaiya photo vai remove saithal mihaum nanraha irukum

    ReplyDelete