Pages

Pages

Wednesday, December 4, 2013

அல்லாஹ்வின் கருணை


        அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்].அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருநாமம் கூறி தொடங்குகிறேன்.
        உலகத்தில்- ஒரு மிருகம்- தன் குட்டியின் மீது அன்பு கொள்கிறது. ஒரு பறவை தன் குஞ்சின் மீது பாசம் கொள்கிறது . ஒரு தாய் தன் பிள்ளையின் மீது பரிவு கொள்கிறாள்.ஒரு உயிரினம் தன்னை விட தாழ்ந்த, பலகீனமான இன்னொரு உயிரினத்தின் மீது இரக்கம் கொள்கிறது. ஆனால்
இந்த எல்லா அன்பை விட,இந்த எல்லா பாசத்தை விட, இந்த எல்லா பரிவை விட, இந்த எல்லா இரக்கத்தை விட பன் மடங்கு,பன் மடங்குஅன்பையும்,பாசத்தையும், பரிவையும், இரக்கத்தையும் உடையவன் அகிலத்தின் இரட்சகனான அல்லாஹ்.

        அல்லாஹ் தன் அருளில் 100-ல் ஒரு பகுதியைத்தான் இந்த பூமியில் இறக்கி வைத்துள்ளான்.ஒரு மிருகம் தன் குட்டியின் மீது அன்பு கொள்வது, ஒரு பறவை தன் குஞ்சின் மீது பாசம் கொள்வது, ஒரு தாய் தன் பிள்ளையின் மீது பரிவு கொள்வது, ஒரு உயிரினம் தன்னை விட தாழ்ந்த இன்னொரு உயிரினத்தின் மீது இரக்கம் கொள்வது இவை அனைத்தும் அந்த ஒரு பகுதிக்குள் தான் அடங்கும் என்று பார்க்கிற பொழுது மீதி 99 பகுதி அருளைப் பற்றி நாம் என்ன சொல்வது?.
      
         அல்லாஹ்விற்கு மொத்தம் 99 பெயர்கள் உண்டு. தன்னுடைய ஒவ்வொரு குணத்தையும் குறிக்க ஒவ்வொரு பெயரைத் தேர்வு செய்த இறைவன் தன்னுடைய அருளைக்குறிப்பதற்கு மட்டும் அர்ரஹ்மான்”  ”அர்ரஹீம் என்று இரு பெயர்களைத் தேர்வு செய்து அவன் நம்மீது பொழிகின்ற அருளின் விசாலத்தை நமக்கு புரிய வைக்கிறான்.

         சிலை வணக்கம் புரியும் ஒருவன் ஒரு சமயம் கடுமையான சோதனையில் சிக்கினான்.அந்த சிலையிடம் தன் தேவையை இரவு பகலாக முறையிடுகிறான்.அந்த சிலைதான் தன்னை அந்த சோதனையிலிருந்து விடுவிக்கும் என்று நினைத்து விழிப்பிலும், தூக்கத்திலும் யா ஸனம் யா ஸனம் என்று சிலையின் பெயர் கூறி அழைக்கிறான்.அப்படி ஒரு தடவை யா ஸனம் என்று அழைப்பதற்குப் பதிலாக நாவு தடுமாறி யா ஸமது என்று சொன்னான். [ஸமது என்பது அல்லாஹ்வின் திருநாமம்] இதைக்கேட்டதும் அல்லாஹ் உடனே பதில் அளித்தான்.அதைப்பார்த்த வானவர்கள்: யா அல்லாஹ் ஒரு இறை மறுப்பாளன் அவனுக்கே தெரியாமல் நாவு தடுமாறி சொன்ன ஒரு வார்த்தைக்காகவா அவனுக்கு பதில் அளிக்கிறாய் என்று வியப்போடும்,ஆச்சர்யத்தோடும் வினா தொடுத்தார்கள்.அப்போது அல்லாஹ் என்ன சொன்னான் தெரியுமா? பல தடவை அழைத்தும் அந்த சிலை அவனுக்கு பதில் தர வில்லை. இப்போது என்னை அழைத்திருக்கிறான்.நானும் அவனுக்கு பதிலளிக்க வில்லையென்றால் எனக்கும் அந்த சிலைக்கும் என்ன வித்தியாசம் என்று அல்லாஹ் கேட்டான்.

        எனவே அல்லாஹ் நம்மீது கொண்டுள்ள அன்பை அளக்க இப்புவியில் அளவு கோள் கிடையாது. அல்லாஹ் நம்மீது வைத்துள்ள பாசத்தின் எதார்த்தத்தை புரிய வைக்க வார்த்தைகள் கிடையாது. அல்லாஹ் நம்மீது காட்டுகின்ற பரிவைக் குறித்து எழுத எழுதுகோள் கிடையாது. அல்லாஹ் நம்மீது வெளிப்படுத்துகிற இரக்கம், ஒரு எல்லைக்குள் மட்டிட முடியாத அளவுக்கு மிக விசாலமானது, மிகப்பிரமாண்டமானது.

      யா அல்லாஹ் உன்னுடைய இந்த விசாலமான அருள் மழையில் என்றும் நனையும் பாக்கியத்தை எங்களுக்கு வழங்குவாயாக.உன் அருளை விட்டும் தூரமானவர்களின் கூட்டத்தில் என்றைக்கும் நாங்கள் சேராமல் எங்களை காப்பாயாக ஆமீன். 

1 comment: