Pages

Pages

Thursday, December 19, 2013

இஸ்லாத்தில் பெண்ணியம்.

  

அஸ்ஸலாமு அலைக்கும் {வரஹ்} அன்பு நிறைந்த நேயர்களே! இன்றைய கால கட்டத்தில் பெண்ணியம் என்பது பலராலும் பரவலாக பேசப்படும் தலைப்புகளில் ஒன்று. பெண் என்பவள்,அடக்க ஒடுக்கமாக, கற்பொழுக்க முள்ளவளாக,கீழ்படிபவளாக,குழந்தைகளையும், வீட்டையும் நன்கு பராமரிப்பவளாக,சமைப்பவளாக,துணிகளை துவைப்பவளாக, வீட்டை சுத்தம் செய்பவளாக,எதிலும் கால் வைக்காமல் வீட்டில் அடங்கிக் கிடப்பவளாக,கணவனுக்காக தன்னை அழித்துக் கொள்பவளாகத்தான் இருக்க வேண்டும் என்று ஆணாதிக்க நோக்கில், பெண்ணியத்தைப் பேசும் காலம் இது.
   

ஆனால் மனிதனை மனிதனாக வாழ்விக்கும் இஸ்லாம், மண்ணென மதிக்கப்பட்ட பெண்ணினத்திற்கு பல துறைகளிலும் சம அந்தஸ்தை வழங்கி அவர்களை உயர்வு படுத்தியிருக்கிறது.தந்தை மகளிடம், சகோதரன் சகோதரியிடம்,தனயன் தாயிடம்,கணவன் மனைவியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற வரம்பையும் இஸ்லாம் ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் ஆண்களுக்கு ஆடை.ஆண்கள் பெண்களுக்கு ஆடை என்று கூறி,பெண்கள், ஆண்களின் இன்ப வாழ்விற்கும் ஆண்கள், பெண்களின் இன்ப வாழ்விற்கும் காரணமாக இருக்க வேண்டும் என்ற சமத்துவ போதனையை குர்ஆன் முன் வைக்கிறது.

பண்டைய கால மரபுக்கு எதிராக உலகில் முதன்முறையாக பெண்ணினத்திற்கு சொத்துரிமை வழங்கியது திருக்குர்ஆனாகும். பெற்றோரோ,நெருங்கிய உறவினர்களோ விட்டுச்சென்ற சொத்தில் ஆண்களுக்கு பாகமுண்டு.அவ்வாறே பெற்றோரோ,உறவினர்களோ விட்டுச்சென்ற சொத்தில் பெண்களுக்கும் பாகமுண்டுஎன்று அல்குர்ஆன், அத்தியாயம்-4.வசனம்-7-ல் இறைவன் குறிப்பிடுகிறான்.வியாபாரத்தில் ஈடுபடவும்,ஒப்பந்தத்தில் பங்கு பெறவும்,சொத்துக்களை பராமரிக்கவும் இஸ்லாம் பெண்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

நானிலத்தின் நற்சுடராகப் பிறந்த நபிகள் நாயகம் {ஸல்} அவர்கள், ஆண்,பெண் இணைந்து சுபிட்சமாக வாழ, புரட்சிகரமான சிந்தனைகளை முன்மொழிந்தார்கள். பெண்களை போகப் பொருளாக மட்டுமே கணித்து,பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்து மகிழ்ந்து, பெண்களின் உணர்வுகளை நசுக்கி,அட்டூழியங்களுக் கெல்லாம் ஆணிவேராகத் திகழ்ந்த அந்த அரபு மக்களின் உள்ளத்தில் பெண்ணுரிமையைப் பேண வேண்டிய அவசியத்தையும்,அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டிய அவசியத்தையும் நடுநிலைச் சிந்தனையோடு எடுத்துரைத்து ஆண்,பெண் சமநீதியை நிலைநிறுத்தினார்கள்.
                 
       உங்கள் மனைவியிடம் ஏதாவதொரு துற்குணத்தைக் கண்டால், அதற்காக அவளை வெறுத்து விடாதீர்கள்.சற்று உற்று நோக்கினால் நற்குணங்களை நீங்கள் காணலாம் என்பது அண்ணல் நபியின் உன்னதமான உபதேசம்.
      أَلَا وَاسْتَوْصُوا بِالنِّسَاءِ خَيْرًا فَإِنَّمَا هُنَّ عَوَانٌ عِنْدَكُمْ لَيْسَ تَمْلِكُونَ مِنْهُنَّ شَيْئًا غَيْرَ ذَلِكَ {திர்மிதி}

பெண்களை நல்ல முறையில் நடத்துங்கள். அவர்கள் உங்களிடம் அடைக்கலமாக உள்ளவர்கள் என்பது, நபி {ஸல்} அவர்கள் தனது இறுதி ஹஜ்ஜின் போது மொழிந்த அமுத மொழிகளில் ஒன்று.

ஒருவரிடம் ஓர் பொருளை அடைக்கலமாக ஒப்படைக்கும்போது அந்தப் பொருளை பாதுகாப்பது அவரின் மீது கடமை. அப்படிச் செய்யாதவன் மோசடியாளன் என முத்திரை குத்தப்படுவான். அதேபோல பெண்களை ஆண்கள், நன்முறையில் பேணி நடத்த வேண்டும் என்பது இந்த நபிமொழி கூறுகிற உண்மை.


எனவே இஸ்லாம் கூறுகிற அமைப்பில் இன்றைக்கு பெண்கள் மதிக்கப்படுவார்களென்றால் நிச்சயம் பெண்ணியம் வாழும் என்பதில் அய்யமேதும் இல்லை.வல்ல இறைவன் அருள்புரிவானாக ஆமீன். 
இந்த தலைப்பில் இன்னும் விரிவாக அலசுவதற்கு இங்கே அழுத்தவும்

1 comment:

  1. masha allah good. nadappu nihalchihalaayum thohuthu koduthal meruhootum. sevai thodarattum

    ReplyDelete