Pages

Pages

Friday, April 11, 2014

உழைப்பு





இஸ்லாம், மறு உலகத்தின் தயாரிப்பான வணக்க வழிபாடுகளை ஆர்வ மூட்டவதைப் போலவே உலக வாழ்க்கைக்குத் தேவையான, வாழ்வாதாரத்தின் அடிப்படை ஆதாரமாக விளங்குகின்ற ஆகுமான உழைப்பின் மீதும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.
அல்லாஹுத் தஆலா தனது அருள் மறையின் ஓர் இடத்தில் (ஜுமுஆ) தொழுகை முடிந்தவுடன் பூமியில் பரவிச் சென்று இறையருளைத் தேடுங்கள் என்று குறிப்பிடுகிறான்.

தன் கரத்தால் உழைத்துச் சாப்பிடுகின்றவனை விட சிறந்த உணவை வேறு யாரும் சாப்பிட முடியாது. இறைத்தூதராகிய தாவூத் (அலை) அவர்கள் தமது கரத்தால் உழைத்து அதிலிருந்து சாப்பிட்டார்கள் என நபிகள் நாயகம் {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! பரிசுத்தமான தொழில் எது? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, ஒரு மனிதன் தனது கையால் உழைப்பதும், மோசடியில்லாத ஒவ்வொரு வியாபாரமும் தான் பரிசுத்தமான தொழில் என்றார்கள் நபியவர்கள்.

பகலெல்லாம் உழைத்துக்களைத்தவர் மாலைக்குள் பாவங்கள் மன்னிக்கப்பட்டவராக மாறுகிறார் என்ற நபியின் வாக்கும் இங்கே கவனிக்கத்தக்கதாகும்.

நபிகளாரின் சமூகத்தில் நபித்தோழர் ஒருவர் தன் தேவையைக் கூறி உதவி தேடினார். தங்களிடம் ஒன்றுமே இல்லையா? என நபியவர்கள் வினவ, கம்பளி போர்வை ஒன்றும், ஒரு கோப்பையும் என் வீட்டில் இருக்கிறது. போர்வையில் பாதியை விரித்தும், பாதியைப் போர்த்தியும் உறங்குவேன். கோப்பையில் தண்ணீர் பருகுவேன் என்றார். அதை எடுத்து வருமாறு நபியவர்கள் கூற, அதை அவர் எடுத்து வந்தார்.
அவ்விரு பொருட்களையும் நபியவர்கள் ஏலம் விட, ஒரு திர்ஹத்திற்கு அதை வாங்கிக்கொள்ள ஒரு ஸஹாபி முன்வந்தார். அதைவிட அதிகமாக வாங்குபவர் உண்டா? என நபியவர்கள் மூன்று முறை கூற, இரண்டு திர்ஹங்களுக்கு வாங்கிக் கொள்கிறேன் எனக் கூறி மற்றொரு ஸஹாபி அதை வாங்கிக் கொண்டார்.

பின்பு அந்த அன்ஸாரி தோழரை அழைத்து இதில் ஒரு திர்ஹத்தை வைத்து வீட்டிற்கு தேவையான உணவுப் பொருளையும், மற்றொரு திர்ஹத்தை வைத்து ஒரு கோடாரியையும் வாங்கி என்னிடம் கொண்டு வாருங்கள் எனக் கூறி, அவ்விரு திர்ஹங்களையும் அந்த ஸஹாபியிடம் நபியவர்கள் ஒப்படைத்தார்கள். அவர் அவ்வாறே செய்தார். நபியவர்களே தங்களின் புனிதக் கரத்தால் அந்தக் கோடாரிக்கு கணை போட்டு அவரிடம் அதைக் கொடுத்து, இதை எடுத்துச் சென்று விறகு வெட்டி சம்பாதியுங்கள்; பதினைந்து நாட்களுக்குப்பின் இங்கு வாருங்கள். அதற்கு முன்பு வர வேண்டாம் எனக் கூறியனுப்பினார்கள். அவரும் அவ்வாறே செய்தார்.

சில நாட்களில் அவர் பத்து திர்ஹங்களை சம்பாதித்தார். அதில் அவருக்குத் தேவைப்படும் துணிகளையும், வீட்டிற்குத் தேவையான தானியங்கள் மற்ற பொருட்களையும் வாங்கியிருந்தார். இந்நிலையில் அவரைக் கண்ட நபியவர்கள், நீர் பிறரிடம் தேவையாகி அருவறுப்பான அடையாளங்களோடு மறுமையில் வருவதை விட தற்போது நீர் இருக்கும் நிலை எவ்வளவு அழகானது எனப்பாராட்டினார்கள்.


அந்த சிறந்த உழைப்பின் வழியே நாம் பல்வேறு உயரங்களைத் தொட அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்.

No comments:

Post a Comment