Pages

Pages

Sunday, June 28, 2020

அரஃபா & பெருநாள்



அல்லாஹ்வின் அருள் நிறைந்த மிகச்சிறந்த மாதத்தில், மிகச்சிறந்த நாட்களில்,  அதிலும் குறிப்பாக அரஃபாவுடைய தினத்தில் நாம் அமர்ந்திருக்கிறோம். நமக்கு இன்ஷா அல்லாஹ் நாளை தியாகத்திருநாளாக, நாம் கொண்டாடும் பெருநாளாக இருந்தாலும் உண்மையில் நாம் ஈமானிய உணர்வோடு ஒருவொருக்கொருவர் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் குதூகலத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டிய,
பரிமார வேண்டிய ஒரு மகத்தான நாள் இந்த அரஃபாவுடைய நாள் தான். காரணம் நமக்கு மிகப்பெரும் எதிரியாக இருக்கிற நம்மை வழிகெடுப்பதையே இலட்சியமாகக் கொண்டிருக்கிற எந்நேரமும் எப்போதும் நம்மை ஈமானை விட்டும் இஸ்லாத்தை விட்டும் அல்லாஹ்வின் நினைவை விட்டும் தூரமாக்க வேண்டும் என்ற சிந்தனையிலேயே இருக்கிற, மனிதர்கள் அனைவரையும் நான் வழிகெடுத்து விடுவேன் என்று அல்லாஹ் விடத்தில் சவால் விட்டு வந்திருக்கிற இப்லீஸுக்கு மிகவும் மோசமான, இழிவான நாள் இந்த அரஃபாவுடைய நாள்.

உலகம் தோன்றிய நாள் முதற்கொண்டு முஸ்லிம்களின் பரம எதிரியான இப்லீஸ், என்றைக்கும் இல்லாத அளவுக்கு கதறிக் கதறி தேம்பித் தேம்பி அழுத நாட்களையும் சந்தர்ப்பங்களையும் இமாம்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

عن مجاهد. قال: رن إبليس أربع رنات، حين لعن، وحين أهبط، وحين بعث النبي صلى الله عليه وسلم وحين أنزلت الحمد لله رب العالمين
இப்லீஸ் தன் வாழ்வில் நான்கு தடவை கதறி அழுதான். 1, அவன் அல்லாஹ்வினால் சபிக்கப்பட்ட போது. 2, இந்த உலகத்தில் தூக்கி எறியப்பட்ட போது. 3, நபி அவர்கள் இந்த உலகிற்கு நபியாக அருளப்பட்ட போது. 4, ஃபாத்திஹா சூரா இறக்கப்பட்ட போது. (அல்பிதாயா வன் நிஹாயா)

إذا قرأ ابنُ آدمَ السَّجدةَ فسجدَ اعتزلَ الشَّيطانُ يبكي يقولُ يا ويلَه أُمرَ ابنُ آدمَ بالسُّجودِ فسجدَ فلَه الجنَّةُ وأمرتُ بالسُّجودِ فأبيتُ فليَ النَّارُ .
மனிதன் குர்ஆனில் ஸஜ்தாவுடைய வசனத்தை ஓதி ஸஜ்தா செய்தால், எனக்கு ஏற்பட்ட கைசேதமே! ஸஜ்தா செய்ய வேண்டும் என்று மனிதன் ஏவப்பட்டான். அவன் செய்து விட்டேன்.அதனால் அவனுக்கு சுவனம் கிடைத்து விடும்.நானும் ஏவப்பட்டேன்.ஆனால் மறுத்து விட்டேன்.அதனால் எனக்கு நான் நரகம் செல்வேனே! என்று ஷைத்தான் அழுது கொண்டே அங்கிருந்து தூரமாகி விடுகிறான். (முஸ்லிம் ; 81)

இப்படி இப்லீஸ் அவன் வாழ்க்கையில் அதிகம் கவலைப்பட்டு அழுத நாட்கள் நிறைய உண்டு. அதில் இந்த அரபா நாளும் ஒன்று.

مَا رُئِيَ الشَّيْطَانُ يَوْمًا، هُوَ فِيهِ أَصْغَرُ وَلَا أَدْحَرُ وَلَا أَحْقَرُ وَلَا أَغْيَظُ مِنْهُ فِي يَوْمِ عَرَفَةَ. وَمَا ذَاكَ إِلَّا لِمَا رَأَى مِنْ تَنَزُّلِ الرَّحْمَةِ، وَتَجَاوُزِ اللَّهِ عَنِ الذُّنُوبِ الْعِظَامِ، إِلَّا مَا أُرِيَ يَوْمَ بَدْرٍ
அல்லாஹ் தன் அருளை இறக்கி மனிதர்களின் பாவங்களை மன்னிப்பதைப் பார்த்ததின் காரணமாக அரஃபா நாளை விட வேறு எந்த நாளிலும்  ஷைத்தான் மிகவும் சிறுமைப்பட்டவனாக தோற்றுப் போனவனாக இழிவடைந்தவனாக கோவமடைந்தவனாக பார்க்கப்படுவதில்லை (பைஹகி ; 81)

உலகத்தில் நாம் யாரையும் நமக்கு எதிரியாக நினைக்கக் கூடாது. ஈமானை உள்ளத்தில் தாங்கியிருக்கிற நம்மைப் பொறுத்த வரை, நமக்கு யாரும் எதிரியல்ல. ஆனால் நம் வாழ்வில் நமக்கு எதிரியாக பார்க்க வேண்டிய ஒரே படைப்பு ஷைத்தான் மட்டும் தான்.

ان الشيكان لكم عدو فاتخذوه عدوا
நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு எதிரி.அவனை நீங்கள் எதிரியாக ஆக்கிக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் : 35 ; 6)

எதிரிக்கு ஒரு சந்தோஷம் என்றால், நாம் கவலப்பட வேண்டும்.அவனுக்கு ஒரு கவலை என்றால் நாம சந்தோஷப்பட வேண்டும். இதான் விரோதம் கொள்வதற் கான அர்த்தம். அரஃபா நாள் நம்முடைய விரோதியான ஷைத்தான் கவலைப் படுகின்ற நாளாகவும் அவன் கதறி அழுகின்ற நாளாகவும் அமைந்த விட்ட போது, நிச்சயம் அது நமக்கு மகிழ்ச்சிக்குரிய நாளாகத்தான் இருக்க வேண்டும். அது தான், அவனை நாம் நமக்கு விரோதியாக எடுத்துக் கொண்டதற்காக அர்த்தம்.

எனவே,முஸ்லிம்களாகிய நாம் மகிழ்ச்சியாக ஆனத்தப் பெருவெள்ளத்தில் மூழ்க வேண்டிய ஒரு மகத்தான நாள் இந்த அரஃபா நாள்.

மட்டுமல்ல இஸ்லாத்திற்கு ஒரு நிறைவும் ஒரு பூரணத்துவமும் கிடைத்த நாள் இந்த அரஃபா நாள்.

جَاءَ رَجُلٌ مِنَ اليَهُودِ إلى عُمَرَ، فَقالَ: يا أَمِيرَ المُؤْمِنِينَ آيَةٌ في كِتَابِكُمْ تَقْرَؤُونَهَا، لو عَلَيْنَا نَزَلَتْ، مَعْشَرَ اليَهُودِ، لَاتَّخَذْنَا ذلكَ اليومَ عِيدًا، قالَ: وَأَيُّ آيَةٍ؟ قالَ: {الْيَومَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ، وَأَتْمَمْتُ علَيْكُم نِعْمَتِي، وَرَضِيتُ لَكُمُ الإسْلَامَ دِينًا}، فَقالَ عُمَرُ: إنِّي لأَعْلَمُ اليومَ الذي نَزَلَتْ فِيهِ، وَالْمَكانَ الذي نَزَلَتْ فِيهِ، نَزَلَتْ علَى رَسولِ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ بعَرَفَاتٍ في يَومِ جُمُعَةٍ. .
ஒரு யூதர் ஹள்ரத் உமர் (ரலி)  அவர்களிடத்தில் வந்து, உங்கள் வேதத்தில் நீங்கள் ஓதக்கூடிய வசனம் ஒன்று இருக்கிறது. யூதர்களாகிய எங்கள் மீது மட்டும் அது இறக்கப்பட்டிருந்தால், இறங்கிய அந்த நாளை நாங்கள் பெருநாளாக ஆக்கி இருப்போம் என்று கூறினார். அது எந்த வசனம் என்று கேட்டார்கள். அதற்கு அந்த யூதர், உங்களுக்கு உங்கள் மார்க்கத்தை நான் முழுமைப் படுத்தி விட்டேன் என்ற (5;3) வசனத்தை சுட்டிக் காட்டினார். அப்போது உமர் (ரலி) அவர்கள், அந்த வசனம் எந்த நாளில் இறங்கியது. எந்த இடத்தில் இறங்கியது என்று எனக்குத் தெரியும். ஜும்ஆவுடைய நாளில் அஃரபாவுடைய தினத்தில் நபி அவர்கள் மீது அருளப்பட்ட வசனம் தான் அது என்று கூறினார்கள். (முஸ்லிம் ; 3017)

இப்படி பல வகையிலும் உயர்வான ஒரு நாளில் நாம் அமர்ந்திருக்கிறோம். நாளை இன்ஷா அல்லாஹ்! தியாகத் திருநாள். தியாகத்திருநாள் என்றாலே நம் எல்லோரின் சிந்தனையில் வருவது இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பமும் அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய சோதனைகளும் அல்லாஹ்வுக்காக அவர்கள் செய்த தியாகங்களும் தான்.

பொதுவாக நாம் வாழுகின்ற இந்த உலகம் நமக்கு ஒரு சோதனைக் களம்.இந்த உலக வாழ்க்கையில் கஷ்டங்களும்,பிரச்சனைகளும், சோதனைகளும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும்.சிலருக்கு அல்லாஹ் பொருளாதாரத்தை நிறைய கொடுத்து சோதிக்கிறான்.சிலருக்கு அறவே பொருளாதாரத்தைக் கொடுக்காமல் சோதிக்கிறான். சிலருக்கு நிறைய குழந்தைகளைக் கொடுத்து சோதிக்கிறான். சிலருக்கு அறவே குழந்தைகளைக் கொடுக்காமல் சோதிக் கிறான்.சிலருக்கு நோய்களைக் கொடுத்து சோதிக்கிறான். சிலருக்கு உடலில் குறைபாடுகளைக் கொடுத்து சோதிக்கிறான். குழந்தை பிறந்து மகிழ்ச்சியிலும் சந்தோஷத்திலும் இருக்கும் பெற்றோரிடமிருந்து அந்தக் குழந்தையை எடுத்து சோதிக்கிறான். சில குழந்தைகளை விட்டு விட்டு அவர்களின் தாயுக்கு மட்டும் மரணத்தைக் கொடுத்து சோதிக்கிறான்.இப்படி மனித வாழ்வில் ஏற்படுகின்ற சோதனைகளும் கஷ்டங்களும் நிறைய உண்டு. 

சோதனைகளை விட்டும் யாரும் தப்ப முடியாது.சோதனைகள் இல்லாமல் யாரும் வாழ முடியாது.அதிலும் ஈமான் கொண்டவர்களுக்கு, அந்த ஈமானில் உறுதியாக, வலுவாக இருப்பவர்களுக்கு  அவர்கள் வாழ்க்கை முழுக்க சோதனைகளாகத்தான் இருக்கும்.ஆனால் நாம் இன்றைக்கு ஈமான் கொண்டவங்களுக்கு சோதனை வராது. தொழக்கூடியவர்களுக்கும், அல்லாஹ் வின் கடமைகளை சரியாக நிறைவேற்றுபவர்களுக்கும் சோதனை வராது என்று மாற்றி விளங்கி வைத்திருக்கிறோம்.

يَبتَلى الرَّجلُ علَى حَسبِ دينِهِ ، فإن كانَ دينُهُ صلبًا اشتدَّ بلاؤُهُ ، وإن كانَ في دينِهِ رقَّةٌ ابتُلِيَ على حَسبِ دينِهِ ، .
ஒரு மனிதன் அவனுடைய தீனுக்கேற்ப சோதிக்கப்படுகிறான். அவனுடைய தீன் உறுதியாக இருந்தால் சோதனைகள் கடினமாக இருக்கும். தீன் இலேசாக இருந்தால் சோதனைகளும் அதற்குத் தகுந்தவாறு இருக்கும். (முஸ்னத் அஹமத் ; 3/97)

ஈமான் கொண்டவர்களின் வாழ்வில் சோதனைகள் நிறைந்திருக்கும்.அவர்களின் ஈமானின் அளவைப் பொறுத்து அவர்களின் ஈமானின் தரத்தைப் பொறுத்து சோதனைகள் கூடுமே தவிர குறையாது.

قال رَجلٌ لِلنَّبيِّ صلَّى اللهُ عليه وسلَّمَ يا رسولَ اللهِ واللهِ إنِّي لَأُحِبُّك فقال انْظُرْ ماذا تقولُ قال واللهِ إنِّي لَأُحِبُّك فقال انْظُرْ ماذا تَقولُ قال واللهِ إِنِّي لَأُحِبُّك ثلاثَ مَرَّاتٍ فقال إن كُنتَ تُحِبُّنِي فأَعِدَّ لِلْفَقرِ تِجْفافًا فإنَّ الفقرَ أسرعُ إلى مَن يُحِبُّنِي من السَّيلِ إلى مُنْتهَاهُ
ஒரு மனிதர் நபி அவர்களிடம் வந்து நான் உங்களை நேசிக்கிறேன் என்றார். அபோது நபியவர்கள், நீ சொல்வதை யோசித்துச் சொல் என்றார்கள். அவர் மறுபடியும் அல்லாஹ்வின் ஆணையாக நான் உங்களை நேசிக்கிறேன் என்றார்.இவ்வாறு மூன்று முறை கூறினார்.அதற்கு நபி அவர்கள், நீ என்னை நேசிப்பது உண்மையானால் நீ ஏழ்மைக்கு தயாராகிக் கொள் வெள்ளம் பள்ளத்தை நோக்கி விரைந்து வருவதைப் போல் என்னை நேசிப்பவருக்கு ஏழ்மை விரைந்து வரும் என்றார்கள்.   (திர்மிதி ; 2350)

நான் ஈமான் கொண்டிருக்கிறேன். அல்லாஹ்வை வணங்குகிறேன். எனக்குத்தான் சோதனைகள் வந்து கொண்டே இருக்கிறது என்று சொல்லி புலம்புவது, உண்மையான ஈமானுக்கான இலக்கணம் அல்ல.உண்மையான முஃமினுக்கான அடையாளமும் அல்ல.

أن رجلاً قال يا رسول اللَّه : ذهب مالي وسقم جسمي،فقال النبي صلى اللَّه عليه وسلم “لا خير في عبد لا يذهب ماله ولا يسقم جسمه إن اللَّه إذا أحب عبداً ابتلاه وإذا ابتلاه صبره
ஒரு மனிதர் நபியிடம் வந்து அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என் பொருளாதாரம் சேதமடைந்து விட்டது. என் உடலில் நோய் ஏற்பட்டு விட்டது என்று சொன்னார். அப்போது நபி அவர்கள், பொருளாதாரத்தில் சேதாரம் ஏற்படாத உடலில் நோயில்லாத ஒருவரிடத்தில் எந்த நலவும் இல்லை. நிச்சயமாக அல்லாஹ் ஒரு மனிதனை விரும்பினால் அவனை சோதிக்கிறான். அவ்வாறு அவனை சோதித்தால் அவனும் பொறுமை கொள்வான் என்று கூறினார்கள். (இஹ்யா)

சோதனைகள் வருவது தான் நலவுக்கான அடையாளம். அவரைத் தான் இறைவனும் பிரியப்படுகிறான்.மட்டுமல்ல, சோதனைகள் வந்தால் வெற்றியும் வரும்.

ذات مرَّة سُئل الإمام الشافعي: يا إمام، " أندعو الله بالتمكين أم بالابتلاء ؟ فتبسَّم، وقال: لن تمكن حتي تبتلي
இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களிடம் ஒருவர், நாங்கள் இறைவனிடம் வெற்றியைக் கேட்க வேண்டுமா? இல்லை, சோதனையைக் கேட்க வேண்டுமா? என்று கேட்டார். அதற்கவர்கள், சிரித்துக் கொண்டே சோதிக்கப்பட்டால் தானே வெற்றியே கிடைக்கும் என்றார்கள்.

சோதனைகளைத் தடுக்க முடியாது. சோதனைகளே வரக்கூடாது என்றும் நினைப்பதும் கூடாது.அந்த சோதனைகள் வருகின்ற போது பொறுமை கொள்ள வேண்டும்.சகித்துக் கொள்ள வேண்டும்.அதை விட மிக முக்கியமாக அந்த சோதனைகளை ஏற்றுக் கொண்டு அந்த நேரத்திலும் அல்லாஹ்வை பொறுந்திக் கொள்ள வேண்டும்.அது தான் உண்மையான ஈமான்.

أحد الحُجَّاج يطوف بالبيت ويقول: " يا رب، هل أنت راضٍ عني ؟ "، كان وراءه الإمام الشافعي، فقال له: " يا هذا، هل أنت راضٍ عن الله حتَّى يرضى عنك ؟ " فقال: " يرحمك الله من أنت ؟، قال: " أنا محمدٌ بن إدريس الشافعي "، قال: " كيف أرضى عنه، وأنا أتمنَّى رضاه، ما هذا الكلام ؟ "، قال: " يا هذا، إذا كان سرورك بالنِقمة كسرورك بالنعمة فقد رضيت عن الله “.
ஹஜ்ஜில் தவாஃப் செய்து கொண்டிருக்கிற பொழுது ஒருவர் அல்லாஹ் விடத்தில் இறைவா! நீ என்னைப் பொருந்திக் கொண்டாயா? இறைவா நீ என்னைப் பொருந்திக் கொண்டாயா? என்று சொல்லிக் கொண்டிருந்தார். அதைக் கண்ணுற்ற இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள், நீ முதலில் இறைவனை பொருந்திக் கொண்டாயா? என்று கேட்டார்கள் அதற்கு அவர், நான் தானே அவனிடத்தில் பொருத்தத்தைத் தேடவேண்டும். நான் எப்படி அவனைப் பொருந்திக் கொள்வது என்று விளக்கம் கேட்டார். அப்போது இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள், அல்லாஹ்வின் நிஃமத்துக்கள் உனக்கு மகிழ்ச்சியைத் தருவது போன்று அவனின் சோதனைகளும் உனக்கு மகிழ்ச்சியைத் தந்தால் அப்போது நீ இறைவனைப் பொருந்திக் கொண்டாய் என்று அர்த்தம் என்றார்கள்.

இந்த தியாகத்திருநாளும் அதன் பின்னனியாக இருக்கிற இப்ராஹீம் நபியின் குடுமப்மும் நமக்கு உணர்த்துகின்ற பாடம் இது தான். வாழ்க்கையென்றால் சோதனைகள் இருக்கத்தான் செய்யும்.இருக்க வேண்டும்.அந்த சோதனைகளில் துவண்டு விடாமல் அல்லாஹ்வை மறந்து விடாமல் அதில் வெற்றி பெற வேண்டும்.அது தான் அல்லாஹ்வின் அன்பையும் பிரியத்தையும் பெற்றுத்தரும்.

ما يزال البلاء بالمؤمن والمؤمنة في نفسه وولده وماله حتى يلقى الله تعالى وما عليه خطأ 
குற்றமில்லாமல் இறைவனைச் சந்திக்கும் வரை ஒரு முஃமினான ஆணுக்கும் முஃமினான பெண்ணுக்கும் உடலிலும் பொருளிலும் குழந்தைகளிலும் சோதனைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். (திர்மிதி ; 2399)

அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு இந்த மூன்று சோதனைகளையும் கொடுத்தான்.அல்லாஹ் கொடுத்த அந்த மூன்று சோதனைகளிலும் வெற்றி பெற்றார்கள். அதனால் தான் அவர்களுக்கு கலீல் என்ற பட்டத்தைக் கொடுத்து தன் உற்ற நேசராக அவரை ஆக்கிக் கொண்டான்.

உலக வரலாற்றில் தன்னுடைய உயர்வான உறுதியான இறை நம்பிக்கையால் சுடும் தன்மை கொண்ட, பிற பொருட்களை கறித்து பொசுக்கும் ஆற்றல் கொண்ட நெருப்பின் இயற்கையையே மாற்றிக் காட்டிய ஒரே மனிதர் ஹள்ரத் இப்ராஹீம் (அலை) அவர்கள் தான்.இது அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்த முதல் சோதனை.இப்படியே அவர்களின் பொருளாதாரத்திலும் அவர்களின் குழந்தைகளிலும் சோதிக்கப்பட்டார்கள் என்று வரலாறு கூறுகிறது.

வாழ்வில் நம்மை சூழுகின்ற சோதனைகள் பொறுமை கொண்டு அதில் இறைவனைப் பொருந்திக் கொண்டு இறை நெருக்கத்தைப் பெற அல்லாஹ் உதவி புரிவானாக

No comments:

Post a Comment