Pages

Pages

Tuesday, July 28, 2020

மாட்டிறைச்சியின் பயன்கள்




(கடந்த வருட ஜும்ஆவில் பேசியது)

அல்லாஹ்வின் மகத்தான அருளால் இஸ்லாமிய மாதங்களில் புனித மாதங்கள் என்றும் கண்ணியம் பொருந்திய மாதங்கள் என்றும் கூறப்படுகிற நான்கு மாதங்களில் ஒன்றான துல்கஅதா நிறைவு பெற்று துல்ஹஜ் பிறந்திருக்கிற தருணம் இது.


உலகம் முழுக்க இருக்கிற ஹாஜிகள் மிகுந்த ஆர்வத்தோடும் மிகுந்த எதிர் பாரப்போடும் புனிதக் கடமையை நிறைவேற்றுவதற்காக அல்லாஹ்வின் இறைஇல்லம் நோக்கி போய்க் கொண்டிருக்கிறார்கள்.நாம் இங்கே நம் குர்பானிகளை அல்லாஹ் விற்காக கொடுப்பதற்கு நம்மை நாம் தயார்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

குர்பானி கொடுப்பதற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிற இவ்வேளையில் மாடு குறித்தும் மாட்டிறைச்சி குறித்தும் மாட்டின் பெயரால் இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிற அவலங்கள் குறித்தும் இந்த நேரத்தில் பேசுவது மிகப் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

இன்றைக்கு இறைச்சி விற்பது கூடாது.அறுப்பதற்காக மாடு ஒட்டகம் போன்றவைகளை விற்பது கூடாது, பசுமாடு எங்கள் குலதெய்வம் அதனால் அதை அறுக்கக்கூடாது.அதை நீங்கள் உண்ணவும் கூடாது  என்று கூறி இஸ்லாமிய பாரம்பரிய உணவாக இருக்கிற இறைச்சியை தடை செய்யும் ஒரு முயற்சியில் இறங்கியதோடு மாட்டின் பெயரால் நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் இந்த நாட்டில். 2012 முதல் 2018 வரை மாட்டின் பெயரால் 88 வன்முறைச் சம்பவங்கள் நடந்திருக்கிறது. குறிப்பாக கடந்த ஜூலை 9 ம் தேதி மாட்டுக்கறி சூப் சாப்பிட்டு அதை பேஸ்புக்கில் பதிவிட்டதின் காரணமாக நாகை மாவட்டத்தில் முஹம்மது ஃபைஸான் என்பவர் 15 பேர் கொண்ட ஒரு கும்பலால் கடுமையான முறையில் தாக்கப்பட்டார்.இப்படி மாட்டின் பெயரால் நாம் சந்தித்திருக்கிற, சந்தித்துக் கொண்டிருக்கிற பிரச்சனைகள் ஒன்றல்ல இரண்டல்ல. ஏராளம். இந்த பிரச்சனைகளுக்கு மத்தியில் தான் நாம் இப்போது மாட்டை அறுத்து குர்பானி கொடுக்க இருக்கிறோம்.

குர்பானி என்பது அது நம் ஷரீஅத்திலிருந்து தோன்றிய ஒரு வணக்கமல்ல, நபி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வணக்கமல்ல. ஆதிபிதா ஆதம் அலை அவர்கள் காலகத்திலிருந்தே இந்த குர்பானி நம் மார்க்கத்தின் ஒரு அங்கமாக ஒரு அடையாளமாக இருந்து வருகிறது.

وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقّ إِذْ قَرّبَا قُرْبَاناً فَتُقُبّلَ مِن أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبّلْ مِنَ الاَخَرِ.
நபியே ஆதமுடைய இரு மகன்மகளின் உண்மை வரலாற்றை அவர்களுக்கு நீங்கள் ஓதிக் காட்டுங்கள்.அவ்விருவரும் குர்பானி கொடுத்த போது, ஒருவரிடமிருந்து அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. இன்னொருவரிடமிருந்து அது ஏற்றுக் கொள்ளப்பட வில்லை. (அல்குர்ஆன் : 5 ; 27)

எனவே குர்பானி என்பது நம்முடைய பாரம்பரியமான ஒரு வணக்க முறை என்பதை நாம் ஆரம்பமாக புரிந்து கொள்ள வேண்டும்.

மாடு குறித்தும் மாட்டின் பயன்பாடு குறித்தும் குர்ஆனில் 20 க்கும் நெருக்கமான வசனங்கள் இடம் பெற்றிருக்கின்றன. மூஸா அலை அவர்கள் காலத்தில் நடந்த கொலைக்கான குற்றவாளியை கண்டு பிடித்துத் தர வேண்டும் என்று அந்த மக்கள் கோரிக்கை வைத்த போது அல்லாஹ் மாட்டை அறுக்கும்படி தான் உத்தர விட்டான் என்று குர்ஆன் பேசுகிறது. ஜிப்ரயீல் அலை அவர்கள் உட்பட நிறைய மலக்குமார்கள் மனித கோலத்தில் ஹள்ரத் இப்ராஹீம் அலை அவர்களை சந்திக்க வந்த போது விருந்தாளிகளை உபசரிப்பதில் தன்னிகரில்லாதவர்களாக விளங்கிய இப்ராஹீம் அலை அவர்கள் கொழுத்த மாடொன்றை அறுத்து சமைத்து அவர்களுக்கு விருந்தளித்தார்கள் என்று குர்ஆன் கூறுகிறது.சுவனத்தில் சுவனவாதிகளுக்கு கிடைக்கும் இன்பங்கள் குறித்து பேசும் போது

و أمددناهم بفاكهة ولحم مما يشتهون
அவர்கள் விரும்பும் கனிகளையும் இறைச்சியையும் நாம் அவர்களுக்கு கொடுத்துக் கொண்டிருப்போம். (அல்குர்ஆன் : 52 ; 22)

أنه قال «سيد طعام أهل الدنيا وأهل الآخرة اللحم ابن ماجة
உலகம் மற்றும் மறுமையிலுள்ளவர்களின் உணவில் முதன்மையானது இறைச்சியாகும். (இஹ்யாவு : 2/456, இப்னுமாஜா ;3305)

قال الزهري: أكل اللحم يزيد سبعين قوة. و قال محمد بن واسع: اللحم يزيد في البصر، و يروى عن علي بن أبي طالب رضي اللّه عنه: «كلوا اللّحم» فإنّه يصفّي اللّون و يخمص البطن، و يحسن الخلق» و قال نافع: كان ابن عمر إذا كان رمضان لم يفته اللحم، و إذا سافر لم يفته اللحم. و يذكر عن علي من تركه أربعين ليلة ساء خلقه
ஜுஹ்ரீ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ; இறைச்சியைச் சாப்பிடுவது 70 வகையான ஆற்றலை அதிகப்படுத்துகிறது.

முஹம்மது பின் வாஸிவு ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ; இறைச்சி பார்வையை அதிகப்படுத்தும்.

ஹள்ரத் அலி அவர்கள் கூறுகிறார்கள் ; இறைச்சியை சாப்பிடுங்கள். அது நிறத்தை தெளிவாக்கும்.வயிற்றைக் குறைக்கும். குணத்தை அழகாக்கும்.

நாஃபிவு ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ; ரமலான் வந்து விட்டால் ஹழ்ரத் இப்னு உமர் ரலி அவர்கள் கட்டாயமாக இறைச்சியை எடுத்துக் கொள்வார்கள். பயணத்திற்கு புறப்பட்டால் இறைச்சியை எடுத்துக் கொள்வார்கள்.

ஹழ்ரத் அலி அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படுகிறது ; 40 நாட்கள் எவர் இறைச்சியை விட்டு விட்டாரோ அவரது குணம் கெட்டு விடும்.

உலகத்திலும் சரி நாளை மறுமையில் சுவனத்திலும் சரி நாம் உண்ணுகிற உணவில் மிகச்சிறந்த உணவு இறைச்சி என்பதைத்தான் இதுபோன்ற ஆயத்துகளும் ஹதீஸ்களும், நம் முன்னோர்களும் கூற்றுக்களும் நமக்கு குறிப்பிடுகின்றன. நபி ஸல் அவர்களின் நடைமுறையும் நமக்கு இதைத்தான் உணர்த்துகிறது.குர்ஆனும் ஹதீஸும் ஒன்றை செய்ய வேண்டும் என்று சொல்கிறதென்றால் அது நமக்கு நலவாகத்தான் இருக்கும். குர்ஆனும் ஹதீஸும் ஒன்றை தடுக்கிறதென்றால் அது நிச்சயம் நமக்கு கெடுதியாகத்தான் இருக்கும். இந்த அடிப்படையை வைத்து நாம் சிந்தித்தால் இறைச்சியின் நன்மைகளை நாம் நன்றாக புரிந்து கொள்ள முடியும்.

இன்று சமயத்தைக் கடந்து நடுநிலையோடு சிந்திக்கின்ற மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் மாட்டிறைச்சி நல்ல உணவு என்பதை ஏற்றுக் கொள்கிறார்கள்.மாட்டிறைச்சியில் அனைத்து விதமான சத்துக்களும் நிறைந்துள்ளது. குறிப்பாக இதயக்கோளாறுகள் நீங்கி இதயம் வலுப்பெறும்.உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் கட்டாயம் மாட்டிறைச்சியை எடுத்துக் கொள்ள வேண்டும்.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். மனித இனம் மாட்டிறைச்சியை சாப்பிடாமல் இருந்திருந்தால் இன்றைக்குள்ள மனித மூளையில் கால் பகுதி தான் இருந்திருக்கும் என்று கூறுகிறார்கள்.உலகில் நீண்ட ஆயுள் வாழும் மக்களை ஆய்வு செய்தால் அவர்கள் அதிகம் மாட்டிறைச்சியை உண்பவர்களாகத்தான் இருக்கிறார்கள்.அதில் இருக்கிற புரதச் சத்து நம் சதைகள் வலுப்பெறுவதற்கும் ஹார்மோன்கள் அதிகம் சுரப்பதற்கும் காரணமாக இருக்கிறது.நரம்புகளை பலப்படுத்துவதற்கும் இரத்த சுத்திகரிப்புக்கும் மாட்டிறைச்சி அவசியம் என்று கூறுகிறார்கள். 85 கிராம் மாட்டுக் கறியில் உடலுக்கு தேவையான பத்து சதவிகிதத்திற்கு மேலான உயிர்சத்துகள் நிரம்பியுள்ளன.

உலகில் நோபல் பரிசு பெற்றவர்களில் 99.9 சதவீதம் பேர் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் தான் என்று பிரபல மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.

பிரிட்டிஷ்  விஞ்ஞானிகளில் ஒருவரான பிக்கார்ட்   கூறுகிறார் ; மாமிசம் காய்கறிகள் இரண்டையும் உண்ணும் வகையைச் சேர்ந்தவன் தான் மனிதன். அந்த உணவு பழக்கத்தை தவிர்த்து சைவ உணவை மட்டுமே சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடு. ஏனெனில் மாமிச உணவை செரிமானம் செய்வதற்காகவே மனிதனின் குடல் பகுதியில் ஏராளமான பாக்டீரியாக்கள் இறைவனால் படைக்கப்பட்டிருக்கின்றது. நாம் இறைச்சி உண்ணாமல் இருந்தால் அவற்றிற்கு வேலை இல்லாமல் போகும். அதனால் நோய் தொற்று ஏற்படும் என்று பிக்கார்ட் குறிப்பிடுகிறார்.

மனிதப்படைப்பின் இயல்பும் அதைத்தான் நிரூபித்திருக்கிறது. ஆடு, மாடு போன்ற தாவர உண்ணிகளின்  பல் வரிசையை உற்று நோக்கினால் தாவரம் உண்ணுகிற அமைப்பில் இருக்கும். சிங்கம், புலி போன்ற வேட்டைப் பிராணிகளை எடுத்துக் கொண்டால் அவற்றின் பல் வரிசையில் வேட்டை பல் வெளிப்படையாகத் தெரியும். அதன் மூலம் அவை வேட்டைப் பிராணிகள் என்பதை விளங்கிக் கொள்ளலாம். ஆனால் மனிதன் இந்த இரண்டு இயல்புகளுக்கும் உற்பட்டவன். அவன் மாமிசத்தையும், தாவரத்தையும் உண்ணுபவனாக இருக்கின்றான். படைப்பாளன் அல்லாஹ் அதனை தெளிவுபடுத்தும் வகையில் அவனது பல் வரிசையை வேட்டைப் பல் கொண்டதாகவும், அறைக்கும் பல் கொண்டதாகவுமே படைத்துள்ளான்.

இப்படி இறைச்சிக்கும் மனிதனுக்குமான தொடர்பை நாம் சொல்லிக் கொண்டே போகலாம்.  

ஆனால் இன்றைக்கு பசுமாட்டை தெய்மாக வணங்கிக் கொண்டு அதை அறுக்கக்கூடாது என்று கூறுகிற அவர்கள், அதற்காக சொல்லுகிற ஒரே காரணம் அது மிருக வதை. மிருக வதையை இஸ்லாம் தூண்டுகிறது என்று கூறி விமர்சனம் செய்கிறார்கள். கொத்துக் கொத்தாக மனிதர்கள் கொல்லப்படுகிறார்கள். சமீபத்தில் ஜெய்ஸ்ரீராம் கூறச்சொல்லி சொல்ல மறுத்த காரணத்தில் ஒரு சிறுவன் எறித்தே கொல்லப்பட்டிருக்கிறான்.மனிதர்கள் கொல்லப்படுகிறார்கள். அது அவர்களின் கண்களுக்கு தெரிய வில்லை. இவர்கள் மிருக வதையைப் பற்றி பேசுகிறார்கள்.

ஆனால் குர்பானிக்கும் மிருக வதைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை குர்பானி குறித்து இஸ்லாம் கூறுகிற வழிகாட்டுதலைப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.

قال : ( إن الله كتب الإحسان على كل شيء ، فإذا قتلتم فأحسنوا القتلة ، وإذا ذبحتم فأحسنوا الذبح ، وليحد أحدكم شفرته ، وليرح ذبيحته
ஒவ்வொரு வஸ்துவிடத்திலும் அழகான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்று இறைவன் விதித்திருக்கிறான். எனவே நீங்கள் ஒரு வஸ்துவைக் கொன்றால் அழகான முறையில் கொள்ளுங்கள். ஒரு வஸ்துவை அறுப்பதாக இருந்தால் அழகான முறையில் அறுங்கள். அறுப்பதற்கு முன்பு கத்தியை நன்கு கூர்மையாக்கிக் கொள்ளட்டும். (அபூதாவூது ; 2815)

فقد مر رسول الله صلى الله عليه وسلم على رجل واضع رجله على صفحة شاة ، وهو يحد شفرته ، وهي تلحظ إليه ببصرها فقال : ( أتريد أن تميتها موتات ؟ هلا حددت شفرتك قبل أن تضجعها ؟
ஒரு மனிதர் ஆட்டை கீழே தள்ளி அதன் மீது தன் காலை வைத்துக் கொண்டு கத்தியை தீட்டிக் கொண்டிருந்தார். அந்த ஆடும் அதை உற்று நோக்கிக் கொண்டிருந்தது. இதைப் பார்த்த நபி அவர்கள் அதை பல முறை கொல்ல நினைக்கிறாயா ? அதை கீழே தள்ளுவதற்கு முன்பு கத்தியை தீட்டியிருக்கக்கூடாதா! என்றார்கள். (ஸஹீஹுல் முஸ்னது ; 667)

கூர்மை இல்லாத கத்தியைக் கொண்டு அதை அறுக்கக்கூடாது. குர்பானி பிராணிக்கு முன்பு கத்தியை தீட்டக்கூடாது.ஒரு பிராணிக்கு முன்னால் இன்னொரு பிராணியை அறுகக்கூடாது.அதன் துடிப்பு அடங்குவதற்கு முன்பு அதன் தோலை உறிக்கக்கூடாது என்று கூறுகிறது.இஸ்லாம் எந்தப் பிராணியாக இருந்தாலும் அதை கழுத்தில் அறுத்து கொல்லச் சொல்கிறது.பிராணிகளின் கழுத்தில் வலியை உணரக்கூடிய முக்கியமான நரம்பு இருக்கிறது.அதை சரியான முறையில் அறுக்கிற போது அது வலியை உணருவதில்லை, குரல் வளைகள் சரியாக துண்டிக்கப்படுகிற போது அதன் இரத்தங்கள் முழுமையாக வெளியேறி விடுகிறது என்று கூறுகிறார்கள்.கழுத்தை அழுக்காமல் வேறு எங்கு அறுத்தாலும் அது சித்தரவதைக் குள்ளாக்கப்பட்டு தான் இறந்து போகும். மட்டுமல்ல அதன் உடலில் உள்ள இரத்தமும் முழுமையாக வெளியேறாது. தானாக செத்த பிராணியை சாப்பிடக்கூடாது என்று இஸ்லாம் தடை விதித்திருப்பதற்கு காரணம் இது தான். எனவே குர்பானி குறித்து இஸ்லாம் கூறுகிற வழிகாட்டுதலைப் பார்த்தால் இஸ்லாத்திற்கும் மிருக வதைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

குர்பானி கொடுப்பதற்கு தயாராக இருக்கும் இந்த நேரத்தில் மாட்டிறைச்சியின் பயன்களை விளங்கிக் கொண்டு அதை தேவைக்கேற்ப உட்கொண்டு ஆரோக்கியமாக வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக.

No comments:

Post a Comment