Pages

Pages

Thursday, July 30, 2020

ஹஜ் இறுதிக் கடமையல்ல



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் புனிதமான துல்கஅதா மாதத்தில் அமர்ந்திருக்கிறோம்.

உலகத்தின் எல்லா நாடுகளிலிருந்தும் எல்லா பகுதிகளிலிருந்தும் எல்லா மூலை முடுக்குகளிலிருந்தும் அருள் நிறைந்த மக்காவை நோக்கி இறுதிக்கடமையை பூர்த்தி செய்வதற்காக மக்கள் கிளம்பிக் கொண்டிருக்கிற, செல்வதற்கு தங்களை தயார் படுத்திக் கொண்டிருக்கிற நேரம் இது.

وَاَذِّنْ فِى النَّاسِ بِالْحَجِّ يَاْتُوْكَ رِجَالًا وَّعَلٰى كُلِّ ضَامِرٍ يَّاْتِيْنَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيْقٍ ۙ‏
(அவரை நோக்கி) "ஹஜ்ஜுக்கு வருமாறு நீங்கள் மனிதர்களுக்கு அறிக்கையிடுங்கள். (அவர்கள்) கால்நடையாகவும் உங்களிடம் வருவார்கள்; இளைத்த ஒட்டகங்களின் மீது வெகு தொலை தூரத்திலிருந்தும் (உங்களிடம்) வருவார்கள்.
(அல்குர்ஆன் : 22:27)

يا إبراهيم ناد في الناس داعيأً إياهم إلى حج البيت الذي أمرتك ببنائه
قال : يا رب كيف أبلغ الناس وصوتي لا ينفذهم !!
فقال : ناد وعلينا البلاغ , فقام على مقام إبراهيم وقيل على الحجر , وقيل على الصفا , وقيل على جبل أبي قُبَيس , وقال يا أيها الناسُ إن ربكم قد اتخذ بيتاً فحجوه ..
فيقال إن الجبال تواضعت حتى بلغ الصوت أرجاء الأرض , وأسمع مَنْ في الأرحام والأصلاب, وأجابهُ كُلُ شئٍ من حجرٍ ومدرٍ وشجرٍ, ومَنْ كتب الله أن يحج إلى يوم القيامة

ஹழ்ரத் இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கஃபதுல்லாவை கட்டி முடித்தவுடன் ஹஜ்ஜிக்காக மக்களை நீங்கள் அழையுங்கள் என்று இறைவன் கூறினான். அப்போது அவர்கள் நான் அழைத்தால் என்னுடைய குரல் எல்லோருக்கும் எப்படி கேட்கும் என்று கேட்டார்கள். அழைப்பது உங்கள் வேலை. அதை அனைவருடைய காதிலும் கொண்டு போய் சேர்ப்பது என்னுடைய வேலை என்று இறைவன் கூறினான். அவர்கள் ஹஜ்ஜுக்காக அழைப்பை விடுத்தார்கள். யாரெல்லாம் ஹஜ் செய்வார்கள் என்று அல்லாஹ் எழுதியிருக்கிறானோ அவர்கள் அத்தனை பேரும் அதை கேட்டார்கள். அதற்கு பதில் கொடுத்தார்கள். அவ்வாறு இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய அந்த அழைப்பிற்கு பதில் கொடுத்தவர்களுக்குத் தான் ஹஜ்ஜுடைய பாக்கியம் கிடைக்கும். (இப்னுகஸீர்)


உலகம் முழுவதிலும் இருந்து 25 முதல் 35 லட்சம் பேர்  ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள சவுதி அரேபியா அரசு அனுமதி வழங்குகிறது.  உலகில் ஹஜ் புனிதப் பயணத்திற்கு அதிக யாத்திரிகர்களை அனுப்பும் 3-வது பெரிய நாடாக இந்தியா உள்ளது.

இந்த  ஆண்டு இந்தியாவிலிருந்து  1,75,025 பேருக்கு  ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நிகழாண்டில் 4,074 போ் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளவுள்ளனா் என்று சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தெரிவித்துள்ளார்.

இஸ்லாம் கூறும் அடிப்படைக் கடமைகள் நிறைய இருந்தாலும் தனி கவனம் பதிக்கப்பட வேண்டிய கடமை இந்த ஹஜ் கடமை.அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டிய, அதிக முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டிய, மார்க்கம் அதிகம் வலியுறுத்தும் கடமை இந்த ஹஜ் கடமை தான்.

இஸ்லாமியக் கடமைகளில் உலகம் தோன்றிய காலத்திலிருந்து உலக அழிவு நாள் வரை செய்யப்படும் கடமை ஹஜ் என்று சொல்லலாம்.

ولا يزال الناس يحجون منذ عرف الناس البيت وإلى أن يشاء الله تعالى ، قال صلى الله عليه وسلم "ليحجن هذا البيت، وليعتمرن بعد خروج يأجوج ومأجوج". {صحيح الجامع 5361}

மனித இனம் கஃபதுல்லாஹ் அறிந்து கொண்ட நாள் முதல் மக்கள் ஹஜ் செய்து கொண்டே இருக்கிறார்கள். இனி இறைவன் நாடும் வரை மக்கள் ஹஜ் செய்து கொண்டே இருப்பார்கள்.யஃஜூஜ் மஃஜூஜ் வெளியான பிறகும் கூட மக்கள் ஹஜ்ஜும் உம்ராவும் செய்வார்கள். (ஸஹீஹுல் ஜாமிவு ; 5361)

فعن عائشة رضي الله عنها أنها قالت: يا رسول الله، نرى الجهاد أفضل العمل، أفلا نجاهد؟ قال: "لا، لكن أفضل الجهاد حج مبرور". {البخاري كتاب الحج حديث رقم 1423}. )

அல்லாஹ்வின் தூதர் அவர்களே மிகவும் சிறந்த அமல் ஜிஹாத் என்று நாங்கள் கருதுகிறோம். எனவே நாங்கள் ஜிஹாத் செய்யலாமா என்று ஸஹாபாக்கள் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் இல்லை, மிகச்சிறந்த ஜிஹாத் ஏற்றுக் கொள்ளப்படுகிற ஹஜ் என்று சொன்னார்கள். (புகாரி ; 1423)

فعَنْ ابْنِ شِمَاسَة -رحمه الله- قال: حضرنا عمرو بن العاص –رضي الله عنه- وهو في سياقة الموت فبكى طويلا وقال: فَلَمَّا جَعَلَ اللَّهُ الْإِسْلَامَ فِي قَلْبِي أَتَيْتُ النَّبِيَّ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- فَقُلْتُ ابْسُطْ يَمِينَكَ فَلْأُبَايِعْكَ! فَبَسَطَ يَمِينَهُ، قَالَ: فَقَبَضْتُ يَدِي، قَالَ: "مَا لَكَ يَا عَمْرُو؟!" قَالَ: قُلْتُ: أَرَدْتُ أَنْ أَشْتَرِطَ. قَالَ: "تَشْتَرِطُ بِمَاذَ؟ا" قُلْتُ: أَنْ يُغْفَرَ لِي. قَالَ: "أَمَا عَلِمْتَ أَنَّ الْإِسْلَامَ يَهْدِمُ مَا كَانَ قَبْلَهُ، وَأَنَّ الْهِجْرَةَ تَهْدِمُ مَا كَانَ قَبْلِهَا وَأَنَّ الْحَجَّ يَهْدِمُ مَا كَانَ قَبْلَهُ؟!"

ஹள்ரத் அமர் பின் ஆஸ் ரலி அவர்கள் மரணப்படுக்கையில் இருந்த போது ஸஹாபாக்கள் அவர்களை சந்திக்கச் சென்றார்கள். அவர்கள் அழுது கொண்டிருந்தார்கள். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்த போது நான் நபியிடம் வந்தேன்.நான் இஸ்லாத்தை ஏற்க வேண்டும் உங்கள் கரத்தைத் தாருங்கள் என்றேன். அவர்கள் தன் கரத்தை விரித்தார்கள். அதை நான் பிடித்துக் கொண்டேன். உனக்கு என்ன வேண்டும் என்று நபி அவர்கள் கேட்டார்கள். எனக்கு ஒறு நிபந்தனை இருக்கிறது என்றேன். என்னவென்று கேட்டார்கள். இதுவரை நான் செய்த பாவங்களெல்லாம் மன்னிக்கப்பட வேண்டும் என்றேன். அப்போது நபி அவர்கள் இஸ்லாம் அதற்கு முந்தைய பாவங்களை மன்னித்து விடும்,ஹிஜ்ரத் அதற்கு முந்தைய பாவங்களை மன்னித்து விடும், ஹஜ் அதற்கு முந்தைய பாவங்களை மன்னித்து விடும் என்று உனக்குத் தெரியாதா ? என்றார்கள். (முஸ்லிம் ; 121)

இப்படி ஹஜ்ஜினால் எண்ணற்ற சிறப்புக்களும் அந்தஸ்துக்களும் கிடைக்கிறது என்பதை ஹதீஸ்கள் வழியாக அறிந்து கொள்கிறோம்.

ஆனால் அதிகமான மக்களால் கவனமில்லாமல் விடப்படுகின்ற கடமையாக இந்த ஹஜ் தான் இருக்கிறது.

கடமையான தொழுகைகளை ஏதோ ஒரு நாள் இல்லா விட்டாலும் இன்னொரு நாள் தொழுது விடுகிறோம்.ஜமாஅத்தா இல்லா விட்டாலும் தனியாவாவது தொழுது விடுகிறோம்.நோன்பு வைத்து விடுகிறோம்.ஜகாத்தும் கொடுத்து விடுகிறோம். இஸ்லாம் அறிமுகப்படுகின்ற மற்ற இதர காரியங்களையும் நாம் முழுமையாக இல்லா விட்டாலும் ஓரளவுக்காவது நிறைவேற்றி விடுகிறோம். ஆனால் மிக முக்கியமான கடமையாக,மார்க்கம் அதிகம் அழுத்தமாக சொல்கின்ற கடமையாக இருக்கிற இந்த ஹஜ் கடமையை எத்தனை பேர் சரியாக முறையாக சரியான நேரத்தில் சரியான தருணத்தில் செய்கிறோம் என்பது யோசிக்க வேண்டிய விஷயம்.

இறுதிக்கடமை இறுதிக்கடமை என்று சொல்லி சொல்லி அது இறுதியாக காலம் போன பிறகு வயசான பிறகு தான் செய்ய வேண்டும் என்ற தவறான சிந்தனையும் தவறான புரிதலும் நம் உள்ளத்தில் ஆழமாக பதிந்து விட்டது. ஹஜ் என்பது அது கடமையாக்கப்பட்ட நேரத்தையும் காலத்தையும் பொறுத்துத் தான் இறுதிக்கடமையே தவிர இறுதியாக செய்ய வேண்டிய கடமையல்ல.

இஸ்லாமிய ஐம்பெரும் முக்கியமான கடமைகளில் முதலில் ஈமான் – இறை நம்பிக்கை கடமையானது.அதன் பிறகு தொழுகை. தொடர்ந்து ஜகாத். இம்மூன்றும் ஹிஜ்ரத்திற்கு முன்பு மக்காவில் வைத்தே கடமையாகி விட்டது.ஜகாத்தின் சட்ட திட்டங்கள் அதன் அளவு,யாருக்கு கொடுக்க வேண்டும் எவ்வளவு கொடுக்க வேண்டும் போன்ற விபரங்கள் மதீனாவில் இறங்கினாலும் அது மக்காவிலேயே கடமையாகி விட்டது. நோன்பு மதீனா சென்ற பிறகு ஹிஜ்ரி 2 ல் கடமையானது. ஹஜ் ஹிஜ்ரி  9 ல் கடமையானது.எனவே கடமையாக்கப்பட்ட காலத்தில் தான் இறுதியானதே தவிர செய்ய வேண்டிய கடமைகளில் இறுதியானது அல்ல.

இன்னும் சில பேர் உம்ராவிற்கு போனால் போதும், நம் கடமை முடிந்து விடும் என்று எண்ணிக் கொண்டு வருடா வருடம் உம்ராவுக்கு போகிறார்கள். ஆனால் கடமையான ஹஜ்ஜை செய்வதில்லை. ஒரு முஸ்லிமைப் பொறுத்த வரை உடல் வலிமையும், பொருளாதார வசதியும், பயணம் செய்யும் பாதையில் அமைதியும், பாதுகாப்பும் இருந்தால் ஹஜ் செய்வது கடமையாகி விடும்.

இந்த வசதியும் இந்த சூழ்நிலையும் ஒருவருக்கு 50 வயதில் வந்தால் 50 வயதில் செய்ய வேண்டும். 40 வயதில் வந்தால் 40 வயதில் செய்ய வேண்டும். 20 வயதில் வந்தால் 20 வயதிலேயே அதை செய்து விட வேண்டும்.இது தான் ஹஜ் கடமை குறித்து மார்க்கத்தின் வழிகாட்டுதல். தொழுகையை அதற்குரிய நேரம் கழிந்த பின் நிறைவேற்றினால் அது களாவாகி  விடும். நோன்பை ரமலானுக்குப் பிறகு நிறைவேற்றினால் அது களாவாகி விடும்.ஆனால் ஹஜ்ஜைப் பொறுத்த வரை அதற்கான வசதி வாய்ப்பு ஏற்பட்டு அது கடமையான பிறகு பல வருடம் கழித்து நிறைவேற்றினாலும் கூட அது களாவாகாது. இருந்தாலும் கடமையான பிறகு அதை செய்யாமல் காலம் தாழ்த்தி விட்டு பிறகு செய்ய முடியாமல் போய் விட்டால் நாம் குற்றவாளியாகி விடுவோம்.மட்டுமல்ல பின்னால் செய்து கொள்ளலாம், வயதான பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அதை தள்ளிப் போடுகிறோம்.ஆனால் 50 அல்லது 60 வயது வரை நாம் இருப்போம் என்பதற்கு என்ன கேரன்டி ?

எந்த வயதிலும் மரணம் வரலாம். அதுவும் உணவுப் பழக்கங்கள் மாறிப் போய் இருக்கிற, விதவிதமான நோய்களும் விபத்துக்களும் துர்மரணங்களும் கொலைகளும் அதிகரித்திருக்கிற தற்கால சூழ்நிலையில் மரணம் பல மனிதர்களை அவர்களது சிறு வயதிலேயே வந்தடைந்து விடுகிறது. அதனால கேரன்டி இல்லாத உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற நாம் ஹஜ் கடமையாகி விட்டால் எந்தளவு சீக்கிரம் நிறைவேற்ற முடியுமோ அந்தளவு சீக்கிரம் நிறைவேற்றி விட வேண்டும்.

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَرَادَ الْحَجَّ فَلْيَتَعَجَّلْ

ஹஜ்ஜை ஒருவர் நாடி விட்டால் அவர் அதை விரைவாக செய்து கொள்ளட்டும். (அபூதாவூது ; 1732)

تعجلوا الي الحج فان احدكم لا يدري ما يعرض له

ஹஜ்ஜை விரைவாக செய்து விடுங்கள்.ஏனெனில் உங்களில் ஒருவர் தனக்கு என்ன ஏற்படும் என்பதை அறிய மாட்டார். (முஸ்னத் அஹ்மது : 4/312)

உடலாலும் பொருளாலும் சூழ்நிலைகளாலும் ஹஜ்ஜுக்கு சென்று வர வாய்ப்புகள் அனைத்தும் இருந்தும் ஹஜ்ஜுக்கு செல்லாமல் அந்த கடமையை நிறைவு செய்யாமல் காலம் தாழ்த்துபவர்களை மார்க்கம் வன்மையாக கண்டிக்கிறது.

عن ربه عز وجل قوله:إن عبداً صححت له جسمه ووسعت عليه المعيشة يمضي خمسة أعوام لا يفد الي إنه لمحروم

யாருக்கு உடல் ஆரோக்கியத்தையும் வசதியான வாழ்க்கையையும் நான் கொடுத்து என் அளவில் பயணம் மேற்கொள்ளாமல் ஐந்து வருடம் கழிந்து விட்டதோ அவர் என் அருளை விட்டும் தடுக்கப்பட்டவர் என அல்லாஹ் கூறியதாக நபி அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹு இப்னு ஹிப்பான் ; 3703)

من ملك زاداً وراحلة تبلغه إلى بيت الله، ولم يحج، فلا عليه أن يموت يهودياً أو نصرانيا

எவர் அல்லாஹ்வின் இல்லத்திற்கு சென்று வர பயணத் தயாரிப்பையும் வாகனத்தையும் பெற்றுக் கொண்டு  ஹஜ் செய்ய வில்லையோ அவர் யூதரான மரணித்தாலும் கிருத்துவனாக மரணித்தாலும் எந்த வித்தியாசமும் இல்லை. (திர்மிதி ; 812)

وقال عمر بن الخطاب رضي الله عنه (لقد هممت أن أبعث رجالاً إلى هذه الأمصار  فينظروا كل من كان له جدةٌ ولم يحج  فيضربوا عليهم الجزية  ما هم بمسلمين  ما هم بمسلمين

அனைத்து ஊர்களுக்கும் ஆட்களை அனுப்பி யார் யார் வசதியிருந்தும் ஹஜ் செய்யாமல் இருக்கிறாரோ அவர் மீது ஜிஸ்யா விதிக்க வேண்டும் என்று நான் எண்ணுகிறேன். அத்தகையவர்கள் முஸ்லிம்களல்ல. ஜிஸ்யா என்பது இஸ்லாமிய நாட்டில் வாழக்கூடிய முஸ்லிமல்லாதவர்கள் அந்நாட்டிற்கு செலுத்தக்கூடிய வரிக்கு சொல்லப்படும். (அஸ்ஸுனனு வல்அஹ்காம் ; 4/15)

எனவே ஹஜ் செய்வதற்கு அத்தனை வாய்ப்புகள் அமையப்பெற்றும் ஹஜ் செய்யாமல் இருப்பவர்கள் அல்லாஹ்வின் அருளை விட்டும் தூரமாக்கப்படுவார், அவர் உண்மையான முஸ்லிமல்ல,அவர் யூதராகவோ கிருத்தவனாகவோ மரணிக்கட்டும் என்றெல்லாம் சொல்லப்படுகின்றது என்றால் ஹஜ் என்பது எந்தளவு முக்கியத்துவம் கொடுத்து செய்ய வேண்டிய கடமை என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

எனவே ஹஜ் செய்ய வசதியும் வாய்ப்புகளும் பெற்றும் ஹஜ் செய்யாமல் இருப்பவர்கள் இன்னும் காலம் தாழ்த்தாமல் எந்தளவு விரைவாக செய்ய முடியுமோ அந்தளவு விரைவாக செய்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

முதலில அந்த ஆசை நம் உள்ளத்தில் வர வேண்டும். மக்காவுக்கு போக வேண்டும்,புனிதம் நிறைந்த கஃபாவைக் கண் குளிர பார்க்க வேண்டும்,அதை சுற்றி சுற்றி வலம் வர வேண்டும் என்ற ஆசையும் தேட்டமும் அந்த வேட்கையும் நம் உள்ளத்தில் வர வேண்டும். அந்த ஆசையும் தேட்டமும் ஸஹாபாக்களிடத்திலும் நல்லோர்களிடத்திலும் நிறையவாக இருந்தது. அதனால் தான் இன்றைக்கு இருப்பதைப் போன்று வாகன வசதிகள் இல்லாத அந்த காலத்தில் கூட பல நாட்கள் பல மாதங்கள் ஏன் பல வருடங்கள் கூட பயணம் செய்து ஹஜ்ஜிக்காக சென்றார்கள்.

عن عبد العزيز بن أبي روّاد قال : دخل مكة قومٌ حجاج ومعهم امرأة وهي تقول : أين بيت ربي ؟ فيقولون: الساعة ترينه . فلما رأوه قالوا : هذا بيت ربك, أما ترينه ؟ فخرجت تشتد وتقول: بيت ربي, بيت ربي, حتى وضعت جبهتها على البيت . فوالله ما رفعت إلا ميتة

அப்துல் அஜீஸ் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ; ஒரு கூட்டம் ஹஜ்ஜிக்காக ஆசையோடும் ஆர்வத்தோடும் மக்காவிற்குள் நுழைந்தது.அதில் ஒரு பெண் என் இறைவனின் இல்லம் எங்கே என்று மிகவும் ஆசையுடன் கேட்டவாறே நுழைந்தாள்.அவர்கள் கஃபதுல்லாஹ்வைக் காட்டி இது தான் உன் இறைவனின் இல்லம் என்று கூறினார்கள். இது தான் என் இறைவனின் இல்லமா என்று ஆச்சர்யத்துடன் சொல்லிக் கொண்டே கஃபத்துல்லாஹ்வின் அருகில் நெருங்கி தன் முகத்தை அதன் மீது வைத்தாள். ஆனால் அதிலிருந்து தன் முகத்தை எடுத்ததும் மரணித்து விட்டார்கள். (ஸிஃபதுஸ் ஸஃப்வா)

உண்மையான இறையன்பும் இறைக்காதலும் உள்ளவர்களின் நிலை இப்படித்தான் இருந்தது. அவர்களின் உள்ளத்தில் தன்னைப்பற்றிய சிந்தனையோ தன் குடும்பத்தைப்பற்றிய சிந்தனையோ தன் இல்லத்தைப்பற்றிய சிந்தனையோ இல்லாமல் அவர்கள் உள்ளம் முழுக்க அல்லாஹ்வும் அவனது இல்லமும் தான் நிறைந்திருந்தது.அதனால் அதற்காக எத்தனை சிரமங்கள் வந்தாலும் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் அதை தாங்கிக் கொள்வதற்கும் பொறுத்துக் கொள்வதற்கும் தயாராக இருந்தார்கள்.

ذكر بعض أهل السير أن شقيق البلخي أبصر في طريق الحج مقعداً يتكأ على إليته يمشي حيناً

و يضعن حيناً يرتاح حيناً و يمشي أخرى كأنه من أصحاب القبور مما أصابه من وعثاء السفر و كآبة المنظر قال له شقيق يا هذا أين تريد قال أريد بيت الله العتيق قال من أين أتيت ؟ قال من وراء النهر

قال كم لك في الطريق ؟ فذكر أعواماً تربوا على عشر سنين قال فنظرت إليه متعجباً قال يا هذا مما تتعجب

قال أتعجب من بعد سفرك و ضعف مهجتك قال أما بعد سفري فالشوق يقربه و أما ضعف مهجتي

فالله يحملها

ஷகீகுல் பல்ஹீ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ; ஹஜ்ஜிக்கு செல்லும் வழியில் கால் ஊனமான ஒரு மனிதரைக் கண்டேன். மிகவும் சிரமப்பட்டு சென்று கொண்டிருந்தார். நீண்ட தூர பயணத்தினால் அவர் மிகவும் பலவீனமாக இருந்தார். எங்கே போகிறீர் என்று கேட்டேன். ஹஜ்ஜிக்கு செல்கிறேன் என்றார். எங்கிருந்து வருகிறீர் என்ற போது வராவுன் நஹ்ரிலிருந்து வருகிறேன் என்றார். வராவுன் நஹ்ர் என்பது மத்திய ஆசிய கண்டத்தில் இருக்கிற ஒரு நாடு.எவ்வளவு நாட்களாக இவ்வாறு வருகிறீர் என்று கேட்டேன்.சுமார் 10 வருடங்களாக வருகிறேன் என்றார். அதைக் கேட்டு நான் மிகவும் ஆச்சர்யமடைந்தேன்.ஏன் ஆச்சர்யப்படுகிறீர்கள் என்று கேட்டார். உங்கள் பயண தூரத்தையும் உங்கள் உடல் பலவீனத்தையும் கண்டு நான் ஆச்சர்யப்படுகிறேன் என்றேன். அதற்கவர், பயணம் தூரமாக இருந்தாலும் இறை இல்லத்தின் மீது எனக்கிருக்கிற ஆர்வமும் ஆசையும் அந்த தூரத்தை எனக்கு  நெருக்கமாக்கி விட்டது. என் உடல் பலவீனத்தை இறைவன் பார்த்துக் கொள்வான் என்றார்.   

எனவே ஹஜ் இறுதியாக கடமையாக்கப்பட்ட வணக்கம் தானே தவிர இறுதியாக செய்ய வேண்டிய வணக்கமல்ல என்பதை புரிந்து கொண்டு அங்கே செல்ல வேண்டும் என்ற ஆசையை உள்ளத்தில் வளர்த்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ் அந்த பாக்கியத்தை நம் அனைவருக்கும் தருவானாக

 

 

 

 

 


5 comments:

  1. ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்

    ReplyDelete
  2. ஹஜ்ஜை அல்லாஹ் மூமினான முஸ்லீமான அனைவருக்கும் நஸீபாக்குவானாக

    ReplyDelete
  3. அல்லாஹ் நம் அனைவருக்கும் குடும்பத்தோடு நஸீபாக்குவானாக


    இந்த தொகுப்பை சிறந்த முறையில் வழங்கிய ஹழ்ரத் அவர்களுக்கு அல்லாஹ் ஈருலக நலன்களையும் நிரப்பமாக வழங்கி கண்ணியப் படுத்துவானாக

    ReplyDelete