Pages

Pages

Thursday, August 13, 2020

படைத்தவனிடம் ஆரோக்கியத்தைக் கேட்போம்

 

இன்று உலகத்தில் நமக்கு நிறைய செல்வங்கள் உண்டு.நமக்கு அறிவைப் புகட்டுகின்ற கல்விச்செலவம், நம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகின்ற பொருட்செல்வம், சோதனைகளையும் சாதனைகளாக மாற்றி அமைக்கின்ற இளமைச் செல்வம், நமக்கு ஈருலகிலும் பெருமை சேர்க்கிற குழந்தைச் செல்வம், இப்படி நம் வாழ்வில் நிறைய செல்வங்கள் உண்டு.ஆனால் இந்த அனைத்து செல்வங்களிலும் ஆக உயர்ந்த, மிகவும் மேலான, ஈடுஇணையற்ற செல்வம் உடல் ஆரோக்கியம்.நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சொல்வார்கள். நோய்நொடியில்லாத சுகமான வாழ்க்கை தான் நாம் பெற்ற செல்வங்களிலெல்லாம் மிக உயர்ந்த செல்வம்.

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பார்கள்.ஆரோக்கியம் இருந்தால் தான் மற்ற எல்லா விஷயங்களையும் நாம் அனுபவிக்க முடியும்.ஆரோக்கியம் என்ற செல்வம் மட்டும் இல்லாமல் போனால் மற்ற எந்த செல்வத்தையும் நாம் அனுபவிக்க முடியாது. நிறைய கல்வியும் அறிவும் இருந்து ஆரோக்கியம் இல்லையென்றால் அந்த கல்வியும் அறிவும் பயனற்றது.நிறைய வசதியும் பொருளாதாரமும் இருந்து ஆரோக்கியம் இல்லையென்றால் அந்த வசதியும் பொருளாதாரமும் பயனற்றது.இளமையும் துடிப்பும் இருந்து ஆரோக்கியம் இல்லையென்றால் அந்த இளமையும் துடிப்பும் பயனற்றது.நிறைய குழந்தைகள் இருந்தும் ஆரோக்கியம் இல்லையென்றால் நம் வாழ்க்கை பயனற்று போனதோடு மட்டுமின்றி நம்மை உடனிருந்து கவனிக்கிற, நம்மை பராமரிக்கிற அவர்களது வாழ்க்கையும் வீணாகி விடும்.ஆக ஆரோக்கியம் என்ற ஒரு செல்வம் மட்டும் இல்லையென்றால் மற்ற எத்தனை செல்வங்கள் இருந்தாலும் இல்லாததைப் போலத்தான்.எனவே செல்வங்களிலெல்லாம் மிக உயர்ந்த செல்வம் ஆரோக்கியம் என்பதை நாம் விளங்க முடிகிறது.

نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ

இரு நிஃமத்துக்கள் இருக்கிறது.அதிகமான மக்கள் அவ்விரண்டிலும் நஷ்மடைந்த வர்கள். ஒன்று ஆரோக்கியம், இன்னொன்று ஓய்வு. (புகாரி ; 6412)

அதாவது இவ்விரண்டும் மிகப்பெரும் நிஃமத்துக்கள். ஆரோக்கியத்தை பயன்படுத்துவதில்லை. ஆரோக்கியமாக இருக்கிற போது நற்காரியங்களை செய்வதில்லை.இறைவனுக்கு ஷுக்ர் செய்வதில்லை. பலர் ஆரோக்கியத்தை நிஃமத்தாகவே கருவதில்லை. அதேபோன்று ஓய்வும் மிகப்பெரிய நிஃமத். அத்தகைய ஓய்வு கிடைக்கிற போது அதை வீணடித்து விடுகின்றனர். நற்காரியங்களுக்காக அந்த ஓய்வை பயன்படுத்துவதில்லை. இதன் மூலம் அதிகமான மக்கள் நஷ்மடைந்து விடுகிறார்கள். 

النعمة اذا دامت جهلت واذا فقدت عرفت

நோய் வராமல் ஆரோக்கியமான நிலை நீடித்துக் கொண்டிருந்தால் ஆரோக்கி யத்தை நாம் மறந்து விடுவோம். ஆரோக்கியம் இல்லாமல் போகிற போது தான் ஆரோக்கியத்தின் சிந்தனை வரும் என்று சொல்வார்கள். இன்று நிறைய பேருக்கு ஆரோக்கியத்தின் அகமியம் புரிவதில்லை.ஆனால் அதை மார்க்கம் அளப்பெரும் நிஃமத் என்று சொல்கிறது.  

وما بكم من نعمة فمن الله

எந்த நிஃமத் உங்களிடம் இருந்தாலும் அது அல்லாஹ்விடமிருந்து உள்ளதாகும். (அல்குர்ஆன் : 16 ; 53)

உங்களுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கிற நிஃமத்துகள் என்று வருகின்ற இந்த வசனத்திற்கு பெரும்பாலான குர்ஆன் விரிவுரையாளர்கள் உடல் ஆரோக்கியம் என்று தான் எழுதுகிறார்கள். இப்படி குர்ஆனும் சரி ஹதீஸ்களும் சரி மிகப்பெரும் செல்வம் என்றும் மிகப்பெரும் நிஃமத் என்றும் உடல் ஆரோக்கியத்தைத் தான் அடையாளம் காட்டுகிறது.

ஆனால் அந்த மாபெரும் செல்வமாக இருக்கிற மாபெரும் நிஃமத்தாக இருக்கிற உடல் ஆரோக்கியம் உடல் சுகம் பகல் கனவு என்று சொல்லும் அளவு இன்றைக்கு கேள்விக்குறியாக இருக்கிறது. நம் முன்னோர்கள் நினைத்துக்கூட பார்க்காத நாம் சிந்தித்துக்கூட பார்க்காத எண்ணற்ற புதிய புதிய நோய்கள் தோன்றி மனித சமூகத்தை உருக்குளைத்துக் கொண்டிருக்கிறது.ஊரெங்கும் பெரும் மருத்துவமனை களும் அங்கே நிரம்பி வழியும் மக்கள் கூட்டமும் நாம் எந்தளவு மோசமான ஆபத்தான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நமக்கு படம்பிடித்துக் காட்டிக் கொண்டிருக்கிறது.குறிப்பாக ஏடி எஸ் என்ற ஒரு வகை கொசுவின் மூலம் பரவக்கூடிய டெங்கு காய்ச்சல் நம்மை ரொம்பவே கதிகலங்க  வைத்திருக்கிறது.பீதியடையச் செய்திருக்கிறது.பாம்பு கடித்தால் கூட நல்ல வேளை கொசு கடிக்க வில்லையே என்று நிம்மதி அடைகின்ற அளவுக்கு பாம்பை பார்த்து பயந்த காலம் போய் கொசுவைப் பார்த்து பயப்படுகிற காலத்தில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம்.

கடந்த அக்டோபர் 15 ம் தேதி வரை எடுக்கப்பட்ட கணக்கின் படி தமிழகத்தில் ஏறக்குறைய 13000 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.40 பேர் வரை உயிரிழந்திருக் கிறார்கள்.டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் தான் முதலிடத்தில் இருக்கிறது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டிருக்கிறது.

இந்தளவு மோசமான ஆபத்தான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற நமக்கு நோய்கள் குறித்த புரிந்துணர்வும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வும் அவசியம் தேவை.

என்ன தான் நோய்கள் நமது மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும்  பறித்து நிம்மதியை இல்லாமல் ஆக்கினாலும் அந்த நோய்கள் மூலம் நாம் பெறுகின்ற பாக்கியங்களும் அந்தஸ்துகளும் நிறைய உண்டு.நோய்நொடிகள் ஒரு மனிதனுக்கு நிறைய பாக்கியங்களையும் அந்தஸ்துகளையும் உயர்வுகளையும் பெற்றுத் தருகின்றது என்று மார்க்கம் சொல்கிறது.

ما يصيب المسلم من نصب ولا وصب ولا هم ولا حزن ولا أذى ولا غم حتى الشوكة يشاكها إلا كفر الله بها من خطاياه

ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாக இருந்தாலும் அதற்குப் பதிலாக அவரின் பாவங்களிலிருந்து அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை. (புகாரி ; 5641)

எனவே நாம் வாழ்கையில் சந்திக்கிற கஷ்டங்களாகட்டும் சோதனைகளாகட்டும் கவலைகளாகட்டும் மனவேதனைகளாகட்டும் நம்மை வாட்டி வதைக்கிற நோய்நொடிகளாகட்டும் ஒரு வகையில் நமக்கு சிரமத்தைத் தந்தாலும் நமக்கு பல்வேறு மன உளைச்சலை ஏற்படுத்தினாலும் அவைகள் நம் பாவங்களை அழித்து நம்மை தூய்மைப் படுத்துகின்றது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மட்டுமல்ல நோய்களும் சோதனைகளும் வருவது தான் ஈமானின் அடையாளம் உண்மையான முஃமினுக்கான அடையாளம்.ஒருவனுக்கு நோய்களே இல்லையென்றால் சோதனைகளையே சந்திக்க வில்லையென்றால் அவன் ஈமான் பதிசோதனைக்குரியது என்று மார்க்கம் தெளிவுபடுத்துகிறது.

" إن المؤمن إذا أصابه السقم ثم أعفاه الله منه كان كفارة لما مضى من ذنوبه وموعظة له فيما يستقبل . وإن المنافق إذا مرض ثم أعفي كان كالبعير عقله أهله ثم أرسلوه فلم يدر لم عقلوه ولم يدر لم أرسلوه " . فقال رجل يا رسول الله وما الأسقام ؟ والله ما مرضت قط فقال : " قم عنا فلست منا " . رواه أبو داود

ஒரு முஃமினுக்கு நோய் ஏற்பட்டு அவனுக்கு அல்லாஹ் சுகத்தைக் கொடுத்து விட்டால் அது அவனின் கடந்த பாவங்களை மன்னிக்கக்கூடிதாகவும் வரும் காலங்களில் அவனுக்கு உபதேசம் செய்யக்கூடியதாகவும் ஆகி விடும்.ஒரு நயவஞ்சகனுக்கு நோய் ஏற்பட்டு அவனுக்கு சுகம் கிடைத்து விட்டால் அவன் ஒட்டகத்தைப் போல. அந்த ஒட்டகத்தைக் கட்டுவார்கள்.பின்பு அவிழ்த்து விடுவார்கள். ஆனால் அந்த ஒட்டகத்திற்கு எதற்கு கட்டினார்கள். எதற்கு அவிழ்த்து விட்டார்கள் என்று தெரியாது.ஒரு மனிதர் யாரசூலல்லாஹ்! நோய்கள் என்றால் என்ன? எனக்கு நோய் வந்ததே இல்லை என்றார். நபி அவர்கள்  நீ எழுந்து சென்று விடு. நீ நம்மைச் சார்ந்தவன் அல்ல என்றார்கள். (அபூதாவூது ; 3089)

அதாவது நபிமார்கள் நல்லோர்கள் அனைவரும் எண்ணற்ற சோதனைகளையும் நோய்களையும் சந்தித்தவர்கள். சோதனைகளும் நோய்களும் நபிமார்களின் ஒரு சுன்னத். அந்த வகையில் நானும் எண்ணற்ற சோதனைகளையும் நோயகளையும் சந்தித்திருக்கிறேன். எந்த நோயும் வர வில்லை என்ற காரணத்தினால் நீ நம்மைப் போன்றவன் அல்ல என்றார்கள்.

ஒரு மனினுக்கு உயர்ந்த இடத்தை தர வேண்டும் என்றோ உயர்ந்த அந்தஸ்தை வழங்க வேண்டும் என்றோ அல்லாஹ் நாடி விட்டால் அதற்காக அவன் தேர்வு செய்கிற விஷயமும் சோதனைகளும் நோய்களும் தான். 

إن العبد إذا سبقت له من الله منزلة لم يبلغها بعمله ابتلاه الله في جسده أ في ماله أو في ولده ثم صبره على ذلك يبلغه المنزلة التي سبقت له من الله " . رواه أحمد وأبو داود

ஒரு அடியானின் விதியில் அவன் ஒரு அந்தஸ்தை அடைய வேண்டும் என்று இருந்து அவன் அமலைக் கொண்டு அதை அடைய முடியாத நிலையில் இருந்தால் அவன் உடலிலோ அவன் பொருளிலோ அவன் குழந்தைகளிலோ அல்லாஹ் சோதனையைக் கொடுப்பான். அவன் பொறுமையாக இருந்து விட்டால் அதைக் கொண்டு அந்த அந்தஸ்தை அடைத்து விடுவான். (அபூதாவூது ; 3090)

وروي أن رجلا قال لموسى: يا موسى،سل الله لي في حاجة يقضيها لي هو أعلم بها، ففعل موسى، فلما نزل إذ هو بالرجل قد مزق السبع لحمه وقتله، فقال موسى: ما بال هذا يا رب ؟ فقال الله تبارك وتعالى له: (يا موسى إنه سألني درجة علمت أنه لم يبلغها بعمله فأصبته بما ترى لاجعلها وسيلة له في نيل تلك الدرجة     قرطبي

ஒரு மனிதர் தனக்கான ஒரு தேவையை முன்னிறுத்தி அல்லாஹ்விடம் துஆ செய்யும படி மூஸா நபி அலை அவர்களிடம் வந்து கோரிக்கை வைத்தார். அவர்களும் துஆ செய்தார்கள்.ஆனால் ஒரு நாள் அவனை ஒரு கொடிய மிருகம் ஒன்று கடித்து அவன் சதைகளை கிழித்து அவனை கொன்றிருந்ததை மூஸா அலை அவர்கள் பார்த்தார்கள். அவரின் நிலை குறித்து அல்லாஹ்விடம் விளக்கம் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ், அவன் என்னிடம் ஒரு அந்தஸ்தைக் கேட்டான். ஆனால் அந்த அந்தஸ்தை அவன் தன்னுடைய அமலைக் கொண்டு அடைய முடியாது என்று எனக்குத் தெரியும். எனவே அந்த அந்தஸ்தை அவன் அடைந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த நிலையை அவனுக்கு ஏற்படுத்தினேன் என்று கூறினான். (தஃப்ஸீர் குர்துபீ)

இப்படி நோய்களும் சோதனைகளும் ஒரு வகையில் நம்மை சிரமத்திற்குள்ளாக்கினாலும் இன்னொரு வகையில் நம் பாவங்களை அழித்து நம்மை தூய்மைப்படுத்தி அல்லாஹ்விடத்தில் நமக்கு உயர்ந்த அந்தஸ்துகளையும் ஸ்தானங்களையும் பெற்றுத்தருகின்றது.

நாம் இங்கே இன்னொரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.நோய்களும் சோதனைகளும் நம் பாவங்களை அழித்து நம்மை தூய்மைப்படுத்துகிறது.நம்மை உயர்வு படுத்துகிறது,நம்மை உண்மையான முஸ்லிம்களாக உண்மையான முஃமின்களாக அடையாளப்படுத்துகிறது என்ற காரணத்தினால் அந்த நோய்களையும் சோதனைகளையும் கேட்க வேண்டும் என்றோ அவைகள் வர வேண்டும் என்று ஆசைப்பட வேண்டும் என்றோ மார்க்கம் சொல்ல வில்லை. இங்கே தான் நாம் இஸ்லாமிய மார்க்கத்தின் அழகையும் ஷரீஅத்தின் ஆழமான சிந்தனைகளையும் தொலைநோக்கு பார்வையையும் புரிந்து கொள்ள வேண்டும்.

நோய்நொடிகளில் நிறைந்த பாக்கியங்களும் உயர்ந்த அந்தஸ்துகளும் இருந்தாலும் அவைகளைக் கேட்பதற்கோ ஆசைப்படுவதற்கோ இஸ்லாம் அனுமதிக்க வில்லை. ஆரோக்கியத்தை இழந்தால் பாக்கியங்கள் கிடைக்கும் என்பது உண்மை.ஆனால் நாம் கேட்க வேண்டியது ஆரோக்கியத்தைத் தான்.உடல் சுகத்தைத் தான் கேட்க வேண்டும்.

أنَّ النَّبيَّ صلَّى اللَّهُ علَيهِ وسلَّمَ عادَ رجلًا قد جُهِدَ حتَّى صارَ مثلَ فَرخٍ فقالَ لهُ أما كُنتَ تدعو أما كُنتَ تسألُ ربَّكَ العافيةَ قال كُنتُ أقولُ اللَّهمَّ ما كُنتَ مُعاقبي بهِ في الآخرةِ فعجِّلهُ لي في الدُّنيا فقالَ النَّبيُّ صلَّى اللَّهُ علَيهِ وسلَّمَ سُبحانَ اللَّهِ إنَّكَ لا تطيقُهُ أو لا تستَطيعُهُ أفلا كنتَ تقول اللَّهمَّ آتِنا في الدُّنيا حَسنةً وفي الآخرةِ حَسنةً وقِنا عَذابَ النَّارِ .

குஞ்சைப் போன்று மாறும் அளவுக்கு மிகவும் நோய் வாய்ப்பட்ட ஒரு நபித்தோழரை நபி அவர்கள் சந்திக்க சென்றார்கள்.நீ இறைவனிடத்தில் எதுவும் துஆ செய்தாயா என்று கேட்டார்கள். ஆம், என்னை மறுமையில் தண்டிப்பதாக இருந்தால் அந்த தண்டனையை உலகத்திலேயே கொடுத்து விடு என்று கேட்டேன் என்றார். அதைக் கேட்டு ஆச்சரியமடைந்த நபி அவர்கள் அப்படி தந்து விட்டால் உன்னால் அதை தாங்க முடியாது. அப்படி கேட்க வேண்டாம். உலகத்திலும் மறுமையிலும் நல்வாழ்க்கையை கொடு என்று கேட்டிருக்கலாமே என்று சொன்னார்கள். (திர்மிதி : 3487) 

ஆக எந்தக் காரணத்தைக் கொண்டும் ஆரோக்கியமின்மையைக் கேட்கக்கூடாது. ஆரோக்கியத்தைத்தான் அல்லாஹ்விடம் கேட்க வேண்டும்.

அல்லாஹ்விடம் நாம் எத்தனையோ விஷயங்களைக் கேட்கிறோம். கல்வியைக் கேட்கிறோம்.அறிவைக் கேட்கிறோம்,சொத்தைக் கேட்கிறோம்,சுகத்தைக் கேட்கிறோம்.வசதியைக் கேட்கிறோம்,ஆடம்பரத்தைக் கேட்கிறோம், நிம்மதியைக் கேட்கிறோம்.மனிநிறைவைக் கேட்கிறோம்.குழந்தைகளைக் கேட்கிறோம்.அந்தக் குழந்தைகளுக்குத் தேவையான அனைத்தையும் கேட்கிறோம்.இப்படி நாம் அல்லாஹ்விடம் கேட்கிற விஷயங்களுக்கு அளவே கிடையாது.ஆனால் நாம் கேட்கிற விஷயங்களிலெல்லாம் ஆக உயர்ந்த விஷயம் அல்லாஹ்விற்கு மிக விருப்பமான விஷயம் ஆரோக்கியம் தான்.

أن رجلاً جاء إلى النبيِّ صلى الله عليه وسلم فقال : يا رسولَ اللهِ أيُّ الدعاءِ أفضلُ ؟ قال : سَل ربَّك العافيةَ والمعافاةَ في الدنيا والآخرةِ , ثم أتاهُ في اليومِ الثاني ، فقال : يا رسولَ اللهِ أيُّ الدعاءِ أفضلُ ؟ فقال له مثلَ ذلكَ ، ثم أتاهُ في اليومِ الثالثِ ، فقال له مثلَ ذلكَ ، قال : فإذا أُعْطِيتَ العافيةَ في الدنيا ، وأُعْطِيتَها في الآخرةِ فقد أفلَحتَ

ஒரு மனிதர் நபியிடம் வந்து அல்லாஹ்வின் தூதர் அவர்களே! துஆவில் மிகச் சிறந்தது எதுவென்று கேட்டார்.உலகத்திலும் மறுமையில் ஆரோக்கியத்தை உன் இறைவனிடம் கேள் என்றார்கள். அடுத்த நாளும் வந்து அதே கேள்வியைக் கேட்டார். நபி அவர்களும் முதல் நாள் சொன்ன அதே பதிலைச் சொன்னார்கள். மூன்றாம் நாளும் வந்து கேட்ட போது நபி அவர்கள் அதே பதிலைக் கூறி விட்டு உலகத்திலும் மறுமையிலும் உனக்கு ஆரோக்கியம் கிடைத்து விட்டால் நீ வெற்றி பெற்று விடுவாய் என்றார்கள். (திர்மிதி ; 3512)

எனவே அதிகம் நாம் ஆரோக்கியத்தைக் கேட்க வேண்டும்.நம் ஒவ்வொரு துஆவிலும் ஆரோக்கியத்தை இணைத்துக் கொள்ள வேண்டும்.

அதுவும் இன்றைய காலம் மருத்துவமும் மருத்துவர்களும் போலியாகி விட்ட காலம்.பொருளுக்கு இருக்கிற மதிப்பும் மரியாதையும் உயிருக்கு இல்லை. சேவைக்காக உருவாக்கப்பட்ட மருத்துவ உலகம் இன்றைக்கு பணத்தை மட்டுமே குறிக்கோலாகக் கொண்டு செயல்படுகிறது.ஒரு காலம் இருந்தது. அரசனுக்கு வைத்தியம் செய்யும் அதே வைத்தியர் தான் வசதியில்லாத ஏழைக்கும் வைத்தியம் செய்வார்,  இப்படிப்பட்ட வைத்தியர்களுக்கு காசு , பணம் என்பது ஒரு பொருட்டாக இருந்ததில்லை. எந்த நேரமும் நோய்களை நீக்குவதிலே கருத்தாக இருந்து செயல்படுவார்கள். மருந்து சாப்பிட்டு குணம் கிடைத்தவர் கொடுக்கும் பொருளை வாங்கிக்கொள்வார்கள்.ஆனால் இன்றைக்கு ஒரே நோய் தான்.ஆனால் தலைவனுக்கு ஒரு விதமான மருத்துவம்.சாதாரண மனிதனுக்கு வேறு விதமான மருத்துவம். ஒரே நோய் தான்.ஆனால் ஒரு மருத்துவரிடம் ஒரு விதமான சிகிச்சை.இன்னொரு மருத்துவரிடம் வேறு விதமான சிகிச்சை.ஒரே நோய் தான்.ஆனால் சாதாரண மருத்துவமனையில் ஒரு கட்டனம்.பெரிய மருத்துவ மனையில் ஒரு கட்டனம்.

அதுமட்டுமில்லாமல், கொஞ்சம் இரக்கமே இல்லாமல் நோயாளிகளின் நிலைகளை சற்றும் புரிந்து கொள்ளாமல் அதிக கட்டனங்களை வசூலிக்கும் மருத்துவமனைகள் தான் இன்றைக்கு அதிகம். நோய் வந்து இறந்தவர்களை விட அவர்கள் வசூலிக்கும் கட்டனங்களைப் பார்த்த அதிர்ச்சியில இறந்தவர்கள் தான் அதிகம். அந்த அளவு இன்றைய மருத்துவ உலகம் மனிதநேயமற்ற நிலையில் சென்று கொண்டிருக்கிறது.

எனவே மருத்துவமும் மருத்துவர்களும் பொய்த்துப் போய் விட்ட, நோய்கள் அதிகரித்து விட்ட இந்த நேரத்தில் நமக்கு இருக்கிற ஒரே ஆயுதம் பிரார்த்தனை தான்.நாம் அல்லாஹ்விடம் அதிகம் ஆரோக்கியத்தைக் கேட்போம்.வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் ஆரோக்கியமாக நல்வாழ்வைத் தருவானாக.  

   

 


No comments:

Post a Comment