(ஐந்து மாதங்களுக்கு முன்பு பேசிய ஜும்ஆ உரை)
உலகத்தில் அல்லாஹ் எண்ணற்ற படைப்புக்களை படைத்திருக்கிறான். அந்த படைப்புக்கள் தான் அல்லாஹ்வின் வல்லமையையும் அல்லாஹ்வின் கண்ணியத்தையும் நமக்கு உணர்த்துகிறது. அல்லாஹ் இருக்கிறான் என்ற உணர்வை நமக்குத் தருவது அல்லாஹ்வின் அற்புதமான படைப்புக்கள் தான்.
அல்லாஹ்வின் படைப்புக்களில் வித்தியாசமான வினோதமான விசித்திரமான எத்தனையோ விஷயங்கள் உண்டு. பார்ப்பதற்கு மிகவும் சிறிய பொருளாக தெரியும். மிகவும் அற்பமான விஷயமாக தெரியும். ஆனால் அதன் மூலம் ஏற்படக்கூடிய விளைவுகளும் மாற்றங்களும் ஆச்சரியத்தைத் தரும். இதுவும் அல்லாஹ்வின் வல்லமையில் கட்டுப்பட்டது.ஒரு சிறிய கொசு தான் அன்றைக்கு மிகப்பெரும் பேரரசனாக
இருந்த, தன்னை இறைவன் என்று சொல்லிக் கொண்டிருந்த ஹள்ரத் இப்ராஹீம் நபி அலை
அவர்களை நெருப்புக் குண்ட்டத்தில் போட்ட நம்ரூதின் உயிர் போக காரணமாக இருந்தது. ஒரு
சிறிய கைத்தடி தான் ஃபிர்அவ்னையும் அவனது அரசவையில் இருந்த அத்தனை பேரையும்
கதிகலங்கச் செய்தது. சிறு பொடிக்கற்கள் தான் அன்றைக்கு பெரும் யானைப்படையை ஒன்றும்
இல்லாமல் தவிடு
பொடியாக்கியது. முஆத், முஅவ்வித் என்ற இரு சிறுவர்கள் தான் அபுஜஹ்ல்
என்ற மிகப்பெரிய எதிரியை வெட்டி வீழ்த்தினார்கள். நம் பார்வைக்கு மிகவும் சிறியதாக
மிகவும் அற்பமாக தெரிகின்ற பொருள்கள் சில நேரங்களில் மிகப்பெரிய தாக்கத்தை
ஏற்படுத்தி விடும்.அதே போன்று தான் சீனாவிலிருந்து உருவான கொரோனோ என்ற கண்ணுக்குத்
தெரியாத வைரஸ் இன்றைக்கு உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக் கிறது. உலகையே உலுக்கிக்
கொண்டிருக்கிறது. பார்வைக்கு சிறியதல்ல பார்வைக்கே தெரியாத ஒரு பொருள் உலகத்தின் பார்வையையே
தன் பக்கம் திருப்பி விட்டது.
சீனா என்பது கிழக்காசிய நாடு. ஆசியக் கண்டத்தில்
ரஷ்யா, கனடா ஆகிய நாடுகளுக்கு
அடுத்த படியாக பரப்பளவில் மூன்றாவது பெரிய நாடு சீனா. உலகின் மிக முக்கியமான நாடாக,
வளர்ந்து வரும் வல்லரசு நாடாக,
உலகப் பொருளாதாரத்தில் மிகப்
பெரும் பங்கு வகிக்கிற நாடாக, வர்த்தக உலகில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நாடாக, இராணுவம், பாதுகாப்பு கட்டமைப்பு ஆகியவற்றில் மிகச் சிறந்து
விளங்குகிற நாடாக திகழ்கிற சீனா இன்று இந்த கொரோனோ வைரஸால் ஆட்டம் கண்டு போய்
நிற்கிறது. சீனாவில் இதுவரை 80,000 கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 3000 கும் அதிகமானோர்
இறந்திருக்கிறார்கள்.சீனாவில் மட்டுமல்ல உலகத்தின் 110 நாடுகளில் அதன் தாக்கம்
இருக்கிறது. உலகம் முழுக்க 1 ¼ லட்சித்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு 5000 வரைக்கும் பழியாகி
இருப்பதாக சொல்லப்படுகிறது.
இன்றைக்கு உலகத்தில் இருக்கிற அத்தனை பேருடைய
பேச்சும் சிந்தனையும் கொரோனோவாகத்தான் இருக்கிறது. கொரோனோவின் அச்சத்தால் நிறைய
ஸ்கூல்களுக்கும் காலேஜ்களுக்கும் கால வரையரையற்ற விடுமுறை
அறிவிக்கப்பட்டிருக்கிறது. கோழியில் கொரோனோ வைரஸ் இருக்கிறது என்ற செய்தியால் வரலாறு
காணாத அளவு வீழ்ச்சி ஏற்பட்டு கோழிக்கறி விற்பனையாளர்கள், கோழிகறி
உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படி கொரோனோ வைரஸால்
உலகமே பீதியடைந்திருக்கிறது. உலகத்தின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகி இருக்கிறது.
ஆஃபியத்தை உடல் ஆரோக்கியத்தை மார்க்கம்
மிகப்பெரிய நிஃமத் என்றும் மிகப்பெரிய பாக்கியம் என்றும் சொல்கிறது.
وما بكم من نعمة فمن الله يقول الإمام القرطبي (من نعمة )أي: صحة جسم، وسعة
رزق، وولد فمن الله
எந்த நிஃமத் உங்களிடம் இருந்தாலும் அது
அல்லாஹ்விடமிருந்து உள்ளதாகும். (அல்குர்ஆன் : 16 ; 53)
உங்களுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கிற
நிஃமத்துகள் என்று வருகின்ற இந்த வசனத்திற்கு பெரும்பாலான குர்ஆன்
விரிவுரையாளர்கள் உடல் ஆரோக்கியம் என்று தான் எழுதுகிறார்கள்.
நாம் இன்றைக்கு அல்லாஹ்விடம் ரிஜ்கைத்தான்
முன்னிருத்தி அதிகமாக கேட்போம்.ஆனால் ரிஜ்கை விட மிக மேலானது உடல் ஆரோக்கியம்
என்று கூறுகிறார்கள். ஏனென்றால் ஆரோக்கியம் என்ற வார்த்தைக்குள் எல்லாம்
இருக்கிறது. ஆரோக்கியம் கிடைத்து விட்டால் எல்லாம் கிடைத்து விடும். ஆரோக்கியம்
இல்லையென்றால் எதுவும் இல்லை என்று பொருள்.
عن العباس بن عبد المطلب قال : قلت يا رسول الله
علمني شيئا أسأله الله , قال : ( سل الله العافية) فمكثت أياما ثم جئت فقلت : يا رسول
الله علمني شيئا أسأله الله , فقال لي : ( يا عباس , يا عم رسول الله , سل الله العافية
في الدنيا والآخرة
அல்லாஹ்விடம் நான் கேட்பதற்கு எனக்கு ஒரு
விஷயத்தை கற்றுத் தாருங்கள் என்று அப்பாஸ் ரலி அவர்கள் நபி ﷺ
அவர்களிடம் கேட்ட போது
அல்லாஹ்விடம் ஆரோக்கியத்தைக் கேளுங்கள் என்றார்கள். திரும்பவும் வந்து கேட்ட
போதும் நபி ﷺ
அவர்கள் என் சிறிய தந்தையே நீங்கள் அல்லாஹ்விடம்
உலகிலும் மறுமையிலும் ஆரோக்கியத்தைக் கேளுங்கள் என்று சொன்னார்கள். (திர்மிதி ; 3514)
அப்பாஸ் ரலி அவர்கள் நபி ﷺ
அவர்களுடைய சிறிய தந்தை. அந்த நேரத்தில் அப்பாஸ் ரலி அவர்கள் தனக்கு இருக்கிற ஒரு
பிரச்சனையையோ அல்லது ஒரு நோயையோ முன்னிருத்தி கேட்க வில்லை. அல்லாஹ் கொடுப்பவன்,
நாம் கேட்பவர்கள், கொடுக்கக்கூடிய அல்லாஹ்விடம் கேட்கக்கூடிய நாம் எதை கேட்க
வேண்டும் என்று பொதுவாகத்தான் கேட்கிறார்கள். அல்லாஹ்வும் எதைக் கேட்டாலும்
கொடுப்பதற்கு தகதியானவன். அதற்கு ஆற்றல் உள்ளவன்.கேட்பதற்கு எண்ணற்ற பாக்கியங்கள்
இருக்கிற போது நபியவர்கள் ஆரோக்கியத்தைச் சொன்னது அதன் மகத்துவத்தை நமக்கு
உணர்த்துகிறது.
لو أن أولكم وآخركم وإنسكم وجنكم قاموا في صعيد
واحد فسألوني فأعطيت كل واحد مسألته ما نقص ذلك مما عندي إلا كما ينقص المخيط إذا غمس
في البحر
உங்களில் ஆரம்பமானவரும் இறுதியானவரும் மனித
வர்க்கமும் ஜின் வர்க்கமும் ஒரு இடத்தில் ஒன்று கூடி அவரவர் தேவைகளை என்னிடத்தில்
கேட்டு நான் அனைவருக்கும் அவரவர் தேவைகளைக் கொடுத்தாலும் கடலில் ஊசியை நுழைக்கிற
போது குறைவதைப் போன்றே தவிர என் புறத்திலிருந்து எதுவும் குறைந்து விடாது என்று
அல்லாஹ் கூறுகிறான். (முஸ்லிம் ; 2577)
எவ்வளவு கொடுத்தாலும் குறையாத விசாலமான கஜானாவை
உடைய அல்லாஹ்விடம் எதை வேண்டுமானாலும் கேட்கலாம். ஆனால் நபி ﷺ
அவர்கள் கேட்பதற்கு
எத்தனையோ விஷயங்கள் இருக்க ஆரோக்கியத்தை கேளுங்கள் என்று சொல்கிறார்கள். அப்பாஸ்
ரலி அவர்களும் பல முறை கேட்கிறார்கள். பல முறை கேட்பதற்கு காரணம் வேறு ஏதாவது
வித்தியாசமான துஆவை சொல்லித் தருவார்கள் என்ற எதிர் பார்ப்பில் தான். இருந்தாலும்
ஆரோக்கியத்தை மட்டுமே முக்கியமாக கேட்கும்படி வலியுறுத்தி னார்கள் என்றால் அல்லாஹ்விடம் கேட்கக்கூடய துஆக்களிலேயே
மிகச்சிறந்த துஆ ஆரோக்கியத்தைக் கேட்கிற துஆ தான் என்பதை புரிந்து கொள்ள
முடிகிறது.
قال المبارك في شرح الترمذي : في أمره صلى الله
عليه وسلم للعباس بالدعاء بالعافية بعد تكرير العباس سؤاله بأن يعلمه شيئا يسأل الله
به دليل جلي بأن الدعاء بالعافية لا يساويه شيء من الأدعية ولا يقوم مقامه شيء
அல்லாமா முபாரக் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ; ஹள்ரத் அப்பாஸ் ரலி அவர்கள் பல முறை திரும்பத்
திரும்பக் கேட்டும் நபி ﷺ
அவர்கள் ஆரோக்கித்தைக்
கேட்கச் சொன்னதிலிருந்து துஆக்களில் அதற்கு நிகரான அதன் இடத்தில் நிற்கக் கூடிய
இன்னொரு துஆ இல்லை என்பதை உணர்த்துகிறது
ஆக உலகில் எல்லா விஷயங்களை விட அல்லாஹ்விடம்
கேட்டுப் பெற வேண்டிய அற்புதமான பாக்கியம் ஆரோக்கியம் என்பதை நாம் புரிந்து கொள்ள
முடிகிறது. இந்த ஆரோக்கியத்தின் அருமையையும் மகத்துவத்தையும் இப்போது தான் நாம்
உண்மையில் விளங்க ஆரம்பித்திருக்கிறோம். காரணம் அதன் எதிர் பதத்தை பார்த்து
விட்டோம். ஆரோக்கியம் கெட்டுப் போனால் என்ன விளைவு ஏற்படும் என்பதை நாம் உணர்ந்து
விட்டோம்.
قال إبراهيم بن أدهم: "إذا أردت أن تعرف الشيء
بفضله فاقلبه بضده، فإذا أنت عرفت فضل ما أوتيت، فاقلب العافية بالبلاء تعرف فضل العافية"
ஒரு வஸ்துவின் மகத்துவத்தை நீ உணர வேண்டும்
என்றால் அதற்கு எதிரான விஷயத்தின் மூலம் நீ முன்னோக்கு. அப்படி முன்னோக்கினால்
தான் உன்னிடம் இருக்கும் அந்த வஸ்துவின் மகத்துவம் உனக்குப் புரியும்.எனவே
ஆரோக்கியத்தை முஸீபத்துக்களைக் கொண்டு முன்னோக்கு என்று இப்ராஹீம் பின் அத்ஹம் ரஹ்
அவர்கள் கூறினார்கள்.
இந்த கொரோனோ போன்ற வைரஸை இறைவன் கொடுத்து உலகை
அச்சுறுத்துவதற்கு காரணமே ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை உலகம் பெற வேண்டும்.
ஆரோகியத்தின் முக்கியத்துவத்தை உலகம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான்.
இப்போது உலகம் நன்கு புரிந்து கொண்டது. உலகம் மொத்தமும் இன்றைக்கு ஆரோக்கியதைத்
தான் தேடிக் கொண்டிருக்கிறது.
புதிதாக உருவாகியிருக்கிற இந்த கொரோனோ வைரஸை
கட்டுப்படுத்துவதற்கும் அதிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்கும் தேவையான மருந்தை
கண்டுபிடிப்பதற்கு இன்றைக்கு ஒட்டுமொத்த மருத்துவ உலகமும் முயற்சித்துக்
கொண்டிருக்கிறது. ஒரு நோய் வந்த பிறகு அதற்கான மருத்துவத்தை தேடி உலகம் அலைந்து
கொண்டிருக்கிறது. ஆனால் கொரோனோ மட்டுமல்ல இதுபோன்று இனி எத்தனை வைரஸ்கள் வந்தாலும்
நம் பக்கம் நெருங்காமல் இருக்க ஒரு அற்புதமான முன் எச்சரிக்கை பாதுகாப்பு மருந்தை
இஸ்லாம் நமக்கு சொல்லியிருக்கிறது. அது தான் ஸதகா, தான தர்மம்.
الصدقَةُ تمنعُ سبعينَ نوعًا مِنْ أنواعِ البلاءِ ، أهونُها الجذامُ والبرَصُ
ஸதகா என்பது எழுபது வகையான நோய்களைத்
தடுக்கிறது. அதில் மிக இலேசானது குஷ்ட நோயாகும். )கன்ஜுல் உம்மால்(
الصدقة
تمنع ميتت السوء
ஸதகா கெட்ட மரணத்தைத் தடுக்கிறது. (அல்ஜாமிவுஸ் ஸகீர் 512)
قال ابن القيم لو علم المتصدق حقّ العلم وتصور أن
صدقته تقع في يد الله قبل يد الفقير، لكانت لذّة المعطي أكبر من لذة الآخذ.
ஒருவன் ஸதகா செய்கிற போது அந்தப் பொருள்
ஏழையின் கரத்தில் விழுவதற்கு முன்பு அது அல்லாஹ்வின் கரத்தில் விழுந்து
விடுகிறது.அதாவது அவ்வாறு நிய்யத் வைத்து அதை செய்வதற்கு முன்பே அல்லாஹ் ஏற்றுக்
கொள்கிறான். இந்த உண்மையை புரிந்து கொண்டால் எடுப்பதின் இன்பத்தை விட
கொட்டுப்பதின் இன்பம் அதிகமாகி விடும் என இப்னுல் கய்யூம் ரஹ் அவர்கள்
கூறுகிறார்கள்.
ஸதகாவில் எண்ணிலங்காத நன்மைகள் இருக்கிறது. குறிப்பாக நமக்கு வந்திருக்கிற சோதனைதகளை நீக்குவதற்கும் இனி வரயிருக்கிற சோதனைகளை வர விடாமல் தடுப்பதற்கும் ஸதகாவைத் தவிர மிக உயர்ந்த விஷயம் வேறு எதுவும் இருக்க முடியாது. நாம் எவ்வளவு ஸதகாக்கள் செய்கிறோமோ அவ்வளவு நோய்களிலிருந்தும் முஸீபத்துக்களிலிருந்தும் பாதுகாக்கப்படுகிறோம்.
இறைவன் ஏற்படுத்திய இந்த கொரோனா என்பது ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வையும் அதிகமதிகம் ஸதகாக்கள் செய்ய வேண்டும் என்ற உணர்வையும் நமக்குத் தருகிறது.
எனவே நம் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கு முயற்சிக்க வேண்டும். அல்லாஹ் விடமும் ஆரோக்கியத்தை அதிகமதிகம் கேட்க வேண்டும். அந்த ஆரோக்கியத்தைத் தருகின்ற தானதர்மங்களையும் அதிகப்படுத்த வேண்டும்.
அதிகமதிகம் ஸதகாக்கள் செய்து அதன் மூலம்
எல்லா வகையான முஸீபத்துகளை விட்டும் பாதுகாப்பைப் பெறுவதற்கு அல்லாஹ் அருள்
புரிவானாக.
No comments:
Post a Comment