Pages

Pages

Tuesday, August 18, 2020

சுத்தம் சுகாதாரம்

 


நம் மார்க்கம் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை அதன் அவசியத்தை கூறியதோடு மட்டுமின்றி அதை பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகளையும் அதை தக்க வைத்துக் கொள்வதற்கான சாத்தியக் கூறுகளையும் தெளிவுபடுத்தியிருக்கிறது.

நாம் உடல் ஆரோக்கியத்தைப் பெற்றுக் கொள்வதற்கும் இருக்கிற ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்வதற்கும் நம்மிடம் இருக்க வேண்டிய முதல் விஷயம் துஆ. ஆரோக்கியம் குறித்து அல்லாஹ்விடம் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். பல்வேறு கட்டங்களில் பல நபித்தோழர்கள் நபி அவர்களிடம் வந்து அல்லாஹ்விடம் கேட்பதற்கு எனக்கு சிறந்த பிரார்த்தனையை கற்றுத்தாருங்கள் என்று கேட்ட பொழுதெல்லாம் நபி அவர்கள் ஆரோக்கியத்தைக் கேட்கும்படி தான் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

இரண்டாவது விஷயம் சுத்தம். ஆரோக்கியத்திற்கான உடல் சுகம் பெறுவதற்கான மிக அடிப்படையான விஷயங்களில் ஒன்று சுத்தம், சுகாதாரம்.சுத்தம் சோறு போடும் என்று சொல்வார்கள்.சுத்தம் சோறு போடுகிறதோ இல்லையோ நமக்கு சுகத்தை தருகிறது. நமக்கு வருகின்ற அதிகமான நோய்களுக்கும் கெடுதிகளுக்கும் முக்கியமான காரணம் சுத்தமின்மை தான் என்று இன்றைய ஆய்வு சொல்கிறது.

அதனால் தான் இஸ்லாம் சுத்தத்திற்கு அதிகளவு முக்கியத்துவம் வழங்குகிறது.குர்ஆனையும் ஹதீஸையும் வரலாறுகளையும் நாம் புரட்டிப் பார்த்தால் இஸ்லாம் சுத்தத்திற்கு எந்தளவு முக்கியத்துவம் தருகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். தொழுகையிலும் சரி தொழுகையல்லாத நிலைகளிலும் சரி உடல்,உடை, இடம் இம்மூன்றும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் உள்ளத்தைக் கூட தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

இன்று பெரும்பாலான நோய்கள் சரியான முறையில் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளாத காரணத்தினாலும் கழுவ வேண்டிய நேரத்தில் கைகளை சரியாக கழுவாத காரணத்தினாலும் தான் ஏற்படுகிறது.

நோய்க்கிருமிகள் தாக்காமல், ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால் அதற்கு, கைகளைக் கழுவுவது மிக மிக முக்கியம்என்று நோய்க் கட்டுப்பாடு மற்றும் நோய்த் தடுப்புக்கான அமெரிக்க மையங்கள் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

வாந்தி பேதி, காலரா, சீதபேதி இவைகளுக்குப் பலியாகும் குழந்தைகளின் எண்ணிக்கை நமது நாட்டில் வருடந்தோறும் அதிகரித்து வருகிறது. 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு வரும் நோய்கள் பெரும்பாலானவை கை கழுவாத காரணத்தினால் தான் ஏற்படுகிறது என்று உலக சுகாதார நிறுவமனமான டபிள்யூ எச் ஓ தெரிவிக்கிறது.

இன்று கொரோனா என்ற நோய் பரவ ஆரம்பித்து மிகப் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய பிறகு தான் கை கழுவுவதின் முக்கியத்துவம் மக்களுக்கு புரிந்திருக்கிறது.ஆனால் இஸ்லாம் அன்றைக்கே கை கழுவதின் முக்கியத்துவத்தை சமூகத்திற்கு உணர்த்தி விட்டது.

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ نَوْمِهِ فَلَا يَغْمِسْ يَدَهُ فِي الْإِنَاءِ حَتَّى يَغْسِلَهَا ثَلَاثًا فَإِنَّهُ لَا يَدْرِي أَيْنَ بَاتَتْ يَدُهُ

உங்களில் ஒருவர் தூக்கத்திலிருந்து விழித்தால் தன் கையை கழுவும் வரை பாத்திரத்தில் நுழைக்க வேண்டாம். ஏனென்றால் தூக்கத்தில் அவரது கை எங்கே இருந்தது என்பதை அவர் அறிந்திருக்க மாட்டார். (அபூதாவூது ; 105)

இந்திய நாட்டின் 4041 நகரங்களில் உள்ள சாலைகள், கட்டமைப்புகளை தூய்மைப்படுத்துவதற்காக 6200 கோடி நிதியில், 2014 அக்டோபர் 2 அன்று டெல்லியில் நம் நாட்டின் பிரதமரால் துவக்கிவைக்கப்பட்ட இயக்கம் தான் தூய்மை இந்தியா இயக்கம். காந்தியடிகள் கண்ட தூய்மை இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று அவரின் இல்லத்திற்கு வெளியே உள்ள சாலையை சுத்தம் செய்து துவக்கி வைக்கப்பட்ட இத்திட்டத்தில் 3 மில்லியன் அரசு பணியாளர்களும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் பங்கேற்க அழைப்புவிடுக்கப்பட்டது. தூய்மை இந்தியா என்ற ஒற்றை சொல் மூலம் உலக நாடுகள் முழுக்க புகழ் தேடிகொண்ட பிரதமர், இந்த திட்டத்திற்காக இதுவரை செலவழித்த விளம்பரச் செலவு மட்டும் 100 கோடி ரூபாய். இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்தும் எந்த மாற்றங்களும் ஏற்பட வில்லை என்பதை நாம் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக் கிறோம். யுவான் சுவாங் போன்ற வெளிநாட்டுப் பயணிகள் இந்தியாவை சுற்றிப் பார்த்து விட்டு அதைப்பற்றி பயணக்குறிப்பு எழுதும் போது இந்தியாவின் தலைநகராக இருக்கிற சென்னையை  நாற்றமிகு சென்னை என்று குறிப்பிட்டார்கள்.

நம் தேசம் சுதந்திரம் அடைந்து   68 ஆண்டுகளுக்குப் பிறகு தான் தூய்மை இந்தியா திட்டத்தை முன் வைத்திருக்கின்றது. ஆனால் இஸ்லாத்தை பொறுத்த வரை 1400 ஆண்டுகளுக்கு முன்பே தூய்மையை திட்டமாக மட்டுமின்றி அதை  சட்டமாகவும் ஆக்கி விட்டது.

தூய்மை விஷயத்தில் இஸ்லாம் எடுத்துக் கொள்கிற அக்கரையையும் முக்கியத்துவத்தையும் பார்த்து உலகம் பாராட்டுகிறது.கல்லூரி மாணவர்களுக்கான ஒரு கலந்துறையாடல் நடந்தது.அங்கே ஆசிரியர் மாணவர்களிடம் உன்னுடைய சமயம் அல்லாத பிற சமயத்தில் உனக்கு பிடித்த அம்சம் எது என்று கேட்டார்.பலரும் இஸ்லாத்தை சொன்னார்கள்.அதில் ஒரு இளம் பெண் : பாலை வனத்தில் உருவான ஒரு சமயம் சுத்தத்திற்கு இந்தளவு முக்கியத்துவம் கொடுத்திருப்பது என்னை மிகவும் ஆச்சரியப்படுத்துகிறது என்று சொன்னாள்.

இஸ்லாம் எல்லா விஷயங்களிலும் எல்லா நேரத்திலும் எல்லா நிலைகளிலும் தூய்மையாக இருக்கும்படி கட்டளையிடுகிறது. தூய்மையாக இருப்பவர்களைப் பாராட்டுகிறது.

பெருமானாருக்கு முதல் வஹிக்குப்பின் ஏறக்குறைய  3  ஆண்டுகள்  எந்த வஹியும்  வரவில்லை. அதற்குப் பின்  அருளப் பட்ட  முதல் வசனத்தில் சுத்தம் பற்றி உத்தர விடப்பட்ட்து. அதுவும்  இறை  வணக்கத்திற்கு அடுத்த படியாக அல்லாஹ் தூய்மையைத் தான் முன்னிறுத்தி சொல்கிறான்.

يا أَيُّهَا الْمُدَّثِّرُ (1) قُمْ فَأَنْذِرْ (2) وَرَبَّكَ فَكَبِّرْ (3) وَثِيَابَكَ فَطَهِّر (4) وَالرُّجْزَ فَاهْجُرْ (5)

போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே! நீங்கள் எழுந்து மக்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள். மேலும் உங்கள் இறைவனை பெருமைப்படுத்துங்கள். உங்கள் ஆடைகளை தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் : 74 ; 1,2,3,4)

திருமறைக்குர்ஆனில் சிலரை, தான் நேசிப்பதாக அல்லாஹ் கூறுகிறான். யாரைக் குறித்து அல்லாஹ் இவ்வாறு கூறுகிறானோ அவர்கள் உண்மையில் மற்றவர்களை விட விஷேசமானவர்களாகத்தான் இருப்பார்கள்.அந்த வகையில் அல்லாஹ் சுத்தத்தைக் கடைபிடிப்பவர்களைப் பார்த்து அவ்வாறு கூறுகிறான்.

إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ

நிச்சயமாக அல்லாஹ் தவ்பா செய்பவர்களையும் தூய்மையாக இருப்பவர்களையும் நேசிக்கிறான். (அல்குர்ஆன் : 2 ; 222)

மனிதனுடைய குணங்கள் மற்றும் தன்மைகளில் சிலவற்றை  நாயகம் அவர்கள் ஈமானுடன் இணைத்துச் சொல்லி இருகின்றார்கள். அப்படி எந்தெந்த குணங்களை எந்தெந்த தன்மைகளை ஈமானுடன் இணைத்துப் பேசப்படுகிறதோ அந்த குணங்களை நமது வாழ்க்கையில் நாம் கொண்டு வருவது நமது ஈமானை பலப்படுத்தக் கூடியதாகவும் அந்த குணங்களை இழப்பது ஈமானை பலவீனப்படுத்தக் கூடியதாகவும் அமையும். இந்த வகையில் அமைந்த ஒன்று தான் நாம் பேண வேண்டிய சுத்தம்.

والطهور نصف الإيمان "

தூய்மை ஈமானின் பாதியாகும். (அல்ஜாமிவுஸ் ஸகீர் ; 4619)

 

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا تَوَضَّأَ الْعَبْدُ الْمُسْلِمُ أَوْ الْمُؤْمِنُ فَغَسَلَ وَجْهَهُ خَرَجَتْ مِنْ وَجْهِهِ كُلُّ خَطِيئَةٍ نَظَرَ إِلَيْهَا بِعَيْنَيْهِ مَعَ الْمَاءِ أَوْ مَعَ آخِرِ قَطْرِ الْمَاءِ فَإِذَا غَسَلَ يَدَيْهِ خَرَجَتْ مِنْ يَدَيْهِ كُلُّ خَطِيئَةٍ بَطَشَتْهَا يَدَاهُ مَعَ الْمَاءِ أَوْ مَعَ آخِرِ قَطْرِ الْمَاءِ فَإِذَا غَسَلَ رِجْلَيْهِ خَرَجَتْ كُلُّ خَطِيئَةٍ مَشَتْهَا رِجْلَاهُ مَعَ الْمَاءِ أَوْ مَعَ آخِرِ قَطْرِ الْمَاءِ حَتَّى يَخْرُجَ نَقِيًّا مِنْ الذُّنُوبِ

முஸ்லிமான ஒரு அடியான் ஒழு செய்து அவன் முகத்தைக் கழுவினால் அவன் கண்ணால் செய்த எல்லா குற்றங்களும் அந்த நீரோடு வெளியேறி விடுகிறது. தன் கரங்களைக் கழுவினால் அவன் கரங்களால் செய்த எல்லா குற்றங்களும் அந்த நீரோடு வெளியேறி விடுகிறது. தன் கால்களைக் கழுவினால் அவன் கால்களால் செய்த அனைத்துக் குற்றங்களும் அந்த நீரோடு வெளியேறி விடுகிறது. இறுதியாக பாவங்களை விட்டும் தூய்மையாகி விடுகிறான். (முஸ்லிம் ; 244)

எனவே சுத்தமாக இருப்பது தூய்மையைக் கடைபிடிப்பது அல்லாஹ்வின் மேலான பிரியத்தைப் பெற்றுத்தருகின்றது.நம் ஈமானுக்கு உறம் ஏற்றுகின்றது, நம் பாவங்கள் அழிக்கப்படுவதற்கும் காரணமாக அமைகின்றது.

أَتَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَأَى رَجُلًا شَعِثًا قَدْ تَفَرَّقَ شَعْرُهُ فَقَالَ أَمَا كَانَ يَجِدُ هَذَا مَا يُسَكِّنُ بِهِ شَعْرَهُ وَرَأَى رَجُلًا آخَرَ وَعَلْيِهِ ثِيَابٌ وَسِخَةٌ فَقَالَ أَمَا كَانَ هَذَا يَجِدُ مَاءً يَغْسِلُ بِهِ ثَوْبَهُ

ஒரு நாள் எங்களிடத்தில் நபி அவர்கள் வந்தார்கள். சீவாமல் முடி கலைந்து தலைவிரி கோலமான நிலையில் ஒருவரைக் கண்டார்கள். முடியை சரி செய்வதற்கு ஒறு பொருளை இவர் பெற்றுக் கொள்ள வில்லையா என்றார்கள். இன்னொரு மனிதர் அழுக்கான ஆடையை உடுத்தியிருந்தார். அவரைக் கண்டதும் துணியை கழுவுவதற்கு இவரிடம் தண்ணீர் இல்லையா என்று கேட்டார்கள். (அபூதாவூது ; 4061)

மட்டுமில்லாமல், தூய்மையில்லாமல் இருப்பவரை அது அவரது விருப்பம் என்றும் அது அவரது சுதந்திரம் என்றும் விடாமல் அது மிகப்பெரும் குற்றம் என்று எச்சரிக்கிறது.

روى البخاري في صحيحه من حديث ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما قَالَ: مَرَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِحَائِطٍ مِنْ حِيطَانِ الْمَدِينَةِ أَوْ مَكَّةَ، فَسَمِعَ صَوْتَ إِنْسَانَيْنِ يُعَذَّبَانِ فِي قُبُورِهِمَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " يُعَذَّبَانِ، وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ، ثُمَّ قَالَ: بَلَى، كَانَ أَحَدُهُمَا لا يَسْتَتِرُ مِنْ بَوْلِهِ، وَكَانَ الآخَرُ يَمْشِي بِالنَّمِيمَةِ…".

நபி அவர்கள் மதீனாவில் இருக்கிற ஒரு சுவற்றை கடந்து போனார்கள்.அங்கே இரண்டு மனிதர்களின் அலறல் சப்தத்தைக் கேட்டார்கள். இவர்கள் தங்கள் மண்ணரையில் வேதனை செய்யப்படுகிறார்கள். ஆனால் பெரும் குற்றத்திற்காக வேதனை செய்யப்பட வில்லை. ஒருவர் சிறுநீரை சரியாக சுத்தம் செய்யாமல் இருந்தார். இன்னொருவர் கோள் சொல்லிக் கொண்டிருந்தார் என்றார்கள். (புகாரி ; 6055)

دَخَلَتْ عليَّ امرأةٌ من اليهودِ، فقالت: إنَّ عذابَ القَبرِ من البَولِ، فقُلتُ: كَذَبتِ، فقالت: بَلى، إنَّا لَنَقرِضُ منه الثَّوبَ والجِلْدَ، فخَرَجَ رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم إلى الصَّلاةِ، وقد ارتَفَعَتْ أصواتُنا، فقال: ما هذه؟ فأخْبَرتُه بما قالت، فقال: صَدَقَتْ، قالت: فما صلَّى رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم من يَومئذٍ إلَّا قال في دُبُرِ الصَّلاةِ: اللَّهُمَّ ربَّ جِبريلَ، وميكائيلَ، وإسرافيلَ، أعِذْني مِن حَرِّ النَّارِ، وعَذابِ القَبرِ

ஆயிஷா ரலி அவர்கள் கூறுகிறார்கள் ; ஒரு யூதப் பெண்மனி என்னிடத்தில் வந்தாள். சிறுநீரின் காரணமாக மண்ணரை வேதனை ஏற்படுகிறது என்றாள். நீ பொய் சொல்கிறாய் என்றேன். இல்லை, உண்மை தான். நாங்கள் சிறுநீர் பட்டால் எங்கள் ஆடைகளையும் தோள்களையும் கத்தரித்து விடுவோம் என்றாள். நபி அவர்கள் தொழுகைக்காக கிளம்பிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் சப்தமிட்டுப் பேசிக் கொண்டிருந்தோம். என்ன விஷயம் என்று கேட்டார்கள். நான் அவள் கூறியதைச் சொன்னேன். ஆம் அது உண்மை தான் என்றார்கள். அன்றிலிருந்து ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் மண்ணரை வேதனையை விட்டும் பாதுகாப்புத் தேடாமல் இருந்ததில்லை. (நஸஈ ; 1345)  

சுத்தத்தில் குறைபாடு நிகழ்ந்தால் அது நமக்கு முன்னால் நிற்கும் இமாம் வரை பாதிப்பை ஏற்படுத்தும்.

عن رجل من أصحاب رسول الله صلى الله عليه وسلم : أن رسول الله صلى الله عليه وسلم صلى صلاة الصبح فقرأ الروم فالتبس عليه فلما صلى قال : " ما بال أقوام يصلون معنا لا يحسنون الطهور فإنما يلبس علينا القرآن أولئك " . رواه النسائي

ஒரு நாள் நபி அவர்கள் ஃபஜ்ர் தொழுகையில் ரூம் அத்தியாயத்தை ஓதினார்கள். அதிலே அவர்களுக்கு சிறு தடுமாற்றம் ஏற்பட்டது. தொழுகை முடிந்த பிறகு சிலருக்கு என்ன ஆனது ? அவர்கள் ஒழுங்காக சுத்தம் செய்யாமல் நம்மோடு தொழுகிறார்கள். நம் தொழுகையில் குர்ஆனில் தடுமாற்றத்தை ஏற்படுத்தியது அவர்கள் தான் என்றார்கள். (நஸஈ ; 946)

இப்படி சுகாராத்தை பேணுவதில் பன்னெடுங்காலமாக சிறந்த முன் மாதிரியாக நம் மார்க்கம் திகழ்ந்து கொண்டிருக்கிறது.அந்த சுத்தத்தை நாம் பேணுவோம். தூய்மையைப் பாதுகாப்போம்.தூய்மையடைந்த உள்ளம் பெற்றவர்களாக மாறுவோம்.

 


No comments:

Post a Comment