Pages

Pages

Wednesday, August 19, 2020

ஹிஜ்ரத் ஏன்

 

அல்லாஹ்வின் பேரருளால் ஹிஜ்ரிப் புத்தாண்டை சந்திக்க இருக்கிறோம்.நபி அவர்கள் காலத்தில் இஸ்லாமிய தேதிக்குறிப்பும் இஸ்லாமிய காலண்டரும் உருவாக்கப்பட வில்லை. அதற்கான தேவையும் ஏற்பட வில்லை. ஹள்ரத் உமர் ரலி அவர்கள் காலத்தில் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் ரொம்ப தூரம் விரிவடைந்து உலகத்தின் பல நாடுகளிலும் இஸ்லாமியக்காற்று வீச ஆரம்பித்த போது தான் இஸ்லாமிய காலண்டருக்கான தேவையும் அவசியமும் ஏற்படுகிறது.அன்றைக்கு பக்கத்து மாகானங்களில், பக்கத்து நாடுகளில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஸஹாபாக்களும் அதை வலியுறுத்தினார்கள். அதன் அவசியத்தை உணர்ந்து கொண்ட ஹழ்ர்த உமர் ரலி அவர்கள் அதை ஆமோதித்தார்கள்.எதிலிருந்து வருடக்கணக்கை தொடங்கலாம் என்ற பிரச்சனை வந்த போது பல கருத்துக்கள் முன் வைக்கப்பட்டது.அந்த நேரத்தில் ஹள்ரத் உமர் ரலி அவர்கள் ஹிஜ்ரத்தை மையமாக வைத்து வருடக்கணக்கை தொடங்கலாம் என்று சொன்னதோடு அதற்கு ஒரு காரணத்தையும் குறிப்பிட்டார்கள்.

نؤرخ بمهاجرته فانه فرق بين الحق والباطل

நபி அவர்கள் மக்காவிலிருந்து மதீனா சென்ற ஹிஜ்ரத்திலிருந்து நாட்குறிப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம். நிச்சயம் ஹிஜ்ரத் தான் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டியது.

அவர்கள் சொன்னது 100 சதவீதம் உண்மை. இஸ்லாம் தோன்றியது மக்காவில் என்றால் அது தோன்றியதற்கான முழு அர்த்தம் கிடைத்தது மதீனாவில் தான்.இஸ்லாம் வேறூன்றியது மக்காவில் என்றால் அந்த இஸ்லாம் என்ற மரம் வளர்ந்து இலைகளையும் கிளைகளையும் காய்களையும் கனிகளையும் கொடுத்தது மதீனாவில் தான்.இஸ்லாம் மலர்ந்தது மக்காவில் என்றால் அது மனம் வீச ஆரம்பித்தது மதீனாவில் தான்.

நபி அவர்கள் மதீனா வந்த பிறகு தான் இஸ்லாம் இமாலய வளர்ச்சியைக் கண்டது. மதீனா வந்து ஐந்து வருடத்தில் மதீனாவின்  கீழ்  திசையில்  மக்காவிற்கு பக்கத்திலிருக்கிற  வாதி  முரைஸிஃ வரையும் இஸ்லாம் சென்றடைந்தது.  ம்  ஆண்டில் மதீனாவிற்கு  மேல்  திசையில்  100  மைல் தூரம் இருக்கிற   கைபரை  வெற்றி  கொண்டது, ஹிஜிர்  8 ம் ஆண்டில்   மக்காவையும் அதை சுற்றியிருக்க  பகுதிகளையும் வெற்றி கொண்டது.  அதனைத் தொடர்ந்து   பஹ்ரைனையும்   யமனையும் வெற்றி  கொண்டது.  ஹிஜ்ரி  9 ல் தபூக்  யுத்ததில்  வெற்றி  கொண்ட  போது மதீனாவிலிருந்து   700 கிலோ  மீட்டர் வரை  இஸ்லாம் விரிவடைந்தது. பத்து வருடங்களில் சுமார் ஆயிரம்  கிலோ மீட்டருக்கு  அதிகமாக தன் அதிகாரத்தை செலுத்தியது.

விரல் விட்டு எண்ணுமளவு இருந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது நபி  அவர்களின் மதீனா வருகைக்குப் பிறகு தான். ஹிஜ்ரத்துக்கு முன்பு 100 ஐக் கூட தாண்டாமல் இருந்த முஸ்லிம்கள், ஹிஜ்ரத்துக்குப் பிறகு பல்கிப்பெருகினார்கள். ஹிஜ்ரி 6-ல் நபி அவர்களோடு உம்ராவுக்கு வந்தவர்கள் 1400 பேர், ஹிஜ்ரி 8 - ல் மக்கா வெற்றிக்கு வந்தவர்கள் 12,000 பேராகவும்,ஹிஜ்ரி 10-ல் நபியோடு இறுதி ஹஜ் செய்த முஸ்லிம்கள் 1,24,000 மாகவும் உயர்ந்தார்கள்.அந்த இமாலய வளர்ச்சி இன்று வரை தொடர்கிறது.அன்றைக்கு நபி அவர்கள் 124000 முஸ்லிம்களை உலகத்திற்கு தந்து விட்டுச் சென்றார்கள்.இன்றைக்கு உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை 200 கோடியை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

இன்னும் இதன் வளர்ச்சி தொடரும் என்பது உலகம் அறிந்த உண்மை. சமீபத்தில் BBC ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அதில் உலகில் கிருத்துவ மதத்தை அடுத்து மிகப்பெரிய மதம் இஸ்லாம்.ஆனால் இப்போது சென்று கொண்டிருக்கிற இதே வளர்ச்சியோடு பயணித்தால் அது முதல் இடத்திற்கு வந்து விடும்.மட்டுமல்ல உலகில் அதிக முஸ்லிம்கள் வாழும் நாடாக இந்தோனேஷியா இருக்கிறது.இன்னும் 20 , 30 ஆண்டுகளில் இந்தியா அந்த இடத்தைப் பிடித்து விடும் என்று அமெரிக்காவின் ஆய்வறிக்கையை BBC ஒளிபரப்பியது.அந்தளவு இஸ்லாத்தின் அசுர வளர்ச்சி போய்க் கொண்டிருக்கிறது என்பதை இதுபோன்ற ஆய்வின் மூலம் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த அபரிவிதமான வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் அடிப்படை காரணமாக இருந்தது நபி அவர்களின் அந்த ஹிஜ்ரத் பயணம் தான்.அந்த வரலாற்று சிறப்புமிக்க ஹிஜ்ரத்தை மனதில் நிறுத்திக் கொள்வது அதை எண்ணிப் பார்ப்பது ஒவ்வொரு முஸ்லிம்களுக்கும் கடமை என்ற அடிப்படையில் ஹிஜ்ரத்தின் வரலாறை நாம் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். மார்க்கத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு குடிபெயர்ந்து செல்வதற்கு ஹிஜ்ரத் என்று சொல்லப்படும்.

உலகத்தில் தீர்க்க தரிசிகளாக அனுப்பப்பட்ட எந்த நபிமார்களையும் அவர்களின் சமூகம் முழுமையைக ஏற்றுக் கொண்டதாக வரலாறு கிடையாது. அத்தனை சமூகமும் அந்தந்த நபிமார்களை மறுத்து அவர்களை துன்புறுத்தி காயப்படுத்தி நோகடித்ததாகத்தான் வரலாறு. அப்படி எதிரிகளின் அக்கிரமங்கள் ஆதிக்கங்கள் எல்லை கடந்து செல்கிற போது அல்லாஹ் இரண்டு விதமான வழிமுறைகளை கையாளுவான். 1, எதிரிகளை அழிப்பது. 2 நபியை ஹிஜ்ரத் செய்ய வைப்பது. ஹுது (அலை) சாலிஹ் (அலை) லூத் (அலை) ஆகிய நபிமார்கள் காலத்தில் எதிரிகளின் எதிர்ப்பு வலுத்த போது அந்த சமூகத்தை அல்லாஹ் அழித்தான். நபி இபுறாஹீம் நபி மூஸா (அலை) போன்ற நபிமார்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட போது அவர்களை அல்லாஹ் அவர்களது சொந்த ஊரிலிருந்து ஹிஜ்ரத் செய்ய வைத்தான்.

அந்த வரிசையில் அண்ணல் நபி அவர்களுக்கும் அதிகமான எதிர்ப்பும் துன்புறுத்தலும் உயிருக்கு அச்சுறுத்தலும் ஏற்பட்டது.எல்லா நபிமார்களை விட அதிகம் துன்புறுத்தலுக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளானவர்கள் அண்ணலம் பெருமானார் நபி அவர்கள் தான்.

لقد أُخفتُ في الله عزَّ وجلَّ وما يُخاف أحَد، ولقد أُوذيتُ في الله وما يؤذى أحد

அல்லாஹ்வின் விஷயத்தில் வேறு யாரும் அச்சமுறுத்தப்படாத அளவு நான் அச்சமுறுத்தப்பட்டேன். வேறு யாரும் நோவினை செய்யப்படாத அளவு நான் நோவினை செய்யப்பட்டேன். (திர்மிதி ; 2472)

மட்டுமல்ல இந்த துன்புறுத்தலும் அச்சுறுத்தலும் ஒரு நேரத்தில் கொலை முயற்சியாக மாறியது.

وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين

நபியே உம்மை சிறை பிடிக்கவோ அல்லது உங்களை கொலை செய்யவோ அல்லது உங்களை ஊரை விட்டு வெளியேற்றவோ இறை நிராகரிப்பாளர்கள் சூழ்ச்சி செய்ததை நீங்கள் நினைவு கூறுங்கள். (அல்குர்ஆன் : 8 ; 30)

தாருன் நத்வாவில் குரைஷிகள் ஒன்று கூடி நபி அவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டிய நிகழ்வை இங்கே நினைவு கூர்வது பொறுத்தமாக இருக்கும்

நபி அவர்களின் வாழ்வில் எத்தனையோ கசப்பான நிகழ்வுகள் ஏற்பட்டிருக்கிறது.தாயிஃபிலே அந்த மக்கள் கல்லால் அடித்தார்கள். உஹத் போரிலே அவர்களின் கன்னத்தை கிழித்தார்கள்,அவர்களை கவிஞர் என்றும் பைத்தியக்காரர் என்றும் சொல்லி அவர்களது மனதை காயப்படுத்தினார்கள்.அவர்களது மனைவியின் மீது அவதூறை ஏற்படுத்தி அவர்களை நோகடித்தார்கள்.தொழும் போது ஒட்டகக்குடலை அவர்களின் உடல் மீது போட்டு மூச்சடைக்கச் செய்தார்கள்.இன்னும் எத்தனையோ துன்பங்களை கொடுத்தார்கள். அந்த நேரத்திலெல்லாம் நபி அவர்களும் பொறுமையாக இருந்தார்கள்.அல்லாஹ்வும் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் இப்போது நபியைக் கொல்லவே திட்டம் தீட்டி விட்டார்கள்.

நபி அவர்கள் போய் விட்டால் அந்த மார்க்கமே இல்லாமல் ஆகி விடும்

وقال ابوبكر رض: إن أقتل فأنا رجل واحد وإن قُتِلْتَ هلكت الأمة.

நான் கொல்லப்பட்டால் ஒரு மனிதன் தான். ஆனால் நீங்கள் கொல்லப்பட்டால் இந்த சமூகமே அழிந்து விடும் என்று அபூபக்கர் ரலி அவர்கள் கூறினார்கள்.

சமுதாயம் பாதுகாக்கப்பட வேண்டும்.மார்க்கம் பாதுகாக்கப்பட வேண்டும்.அதற்கு நபி அவர்கள் உயிரோடு இருக்க வேண்டும். இதற்கு இரண்டு வழிகள் தான் இருக்கிறது.ஒன்று அந்த சமூகத்தை அழிப்பது.ஆனால் நபி அவர்களின் சமூகத்தை நான் அழிக்க மாட்டேன் என்பது அல்லாஹ்வின் வாக்குறுதி.

سألت ربي ثلاثًا، فأعطاني ثنتين ومنعني واحدة سالت ربي ان لا يهلكنا بما اهلك به الامم قبلنا فاعطانيها

என் இறைவனிடத்தில் மூன்றைக் கேட்டேன். அதில் இரண்டைக் கொடுத்தான். ஒன்றை மறுத்து விட்டான்.எங்களுக்கு முன்னால் வாழ்ந்த சமூகங்கள் அழிக்கப்பட்டதைப் போன்று என் சமூகத்தை அழித்து விடக்கூடாது என்று கேட்டேன். அல்லாஹ் அந்த விஷயத்தை ஏற்றுக் கொண்டான். (நஸஈ ; 1637)  

ஆத் கூட்டத்தைப் போன்று சமூத் கூட்டத்தைப் போன்று லூத் (அலை) வுடைய கூட்டத்தைப் போன்று அல்லாஹ் நபியின் சமூகத்தை அழிக்க மாட்டான். காரணம் நபியின் துஆவும் இருக்கிறது.அல்லாஹ்வின் வாக்குறுதியும் இருக்கிறது.எனவே ஈமான் கொண்ட சமூகத்தைப் பாதுகாப்பதற்கும் மார்க்கத்தை பாதுகாப்பதற்கும் ஒரே வழி ஹிஜ்ரத் தான். அதனால் அவர்களை அல்லாஹ் மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்ய வைத்தான்.

ஹிஜ்ரத்திற்கான காரணம் என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.ஹிஜ்ரத் என்ற ஒரு காரணத்தைத் தவிர மக்கா என்ற அழகான பூமியை விட்டும் வேறு இடத்திற்கு போக வேண்டிய அவசியமோ தேவையோ நபிக்கும் இல்லை ஸஹாபாக்களுக்கும் இல்லை.ஏனென்றால் மக்கா எல்லா உணவு வகைகளும் எல்லா கனி வர்க்கங்களும் கிடைக்கும் செழிப்பான பூமி, எல்லா வளங்களும் நிறைந்த வளமான பூமி. மட்டுமல்ல மக்கா  அரபகத்தின்  மிகப்பெரிய வியாபாரக் கேந்திரம், தொழில் நகரம். எல்லாவற்றிற்கும் மேலாக மக்கா البلد الامين பாதுகாக்கப்பட்ட பூமி என்றும்  நிம்மதியான பூமி என்றும் அல்லாஹ்வினால் வாக்களிக்கப்பட்ட நகரம். இத்தகைய சிறப்புமிக்க பூமியை விட்டு போவது சாதாரண விசயமல்ல.அப்படிச் செல்ல யாரும் விருமபவும் மாட்டார்கள்.

அப்படியிருந்தும் ஸஹாபாக்கள் அந்த புனித பூமியை விட்டு கிளம்பினார்கள் என்றால் நபியையும் மார்க்கத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற காரணத்தைத் தவிர வேறு எதுவும் இருக்க முடியாது. மார்க்கத்திற்கான இத்தனை பெரிய தியாகங்களை செய்தார்கள் ஸஹாபாக்கள். இன்று சாதாரணமாக எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் எத்தனை இழப்புக்கள் வந்தாலும் எத்தனை கேவலங்களை சந்தித்தாலும் சொந்த மண்ணை விட்டுக் கொடுக்க நம்மில் யாரும் முன் வர மாட்டோம்.சொந்த மண்ணை அல்ல சொந்த வீட்டில் அந்த வீட்டிலும் ஒரு பகுதியைக் கூட விட்டுத் தர மாட்டோம். ஒரு ஜான் நிலத்திற்காக இன்றைக்கு நமக்கும் நம் பக்கத்து வீட்டுக்காரணுக்கும் எத்தனை பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் அன்றாடம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.ஆனால் அவர்கள் மார்க்கத்திற்காக அல்லாஹ்வின் உத்தரவிற்காக நபியைப் பாதுகாப்பதற்காக சொந்த மண்ணையே விட்டுக் கொடுத்தார்கள் என்றால் அது சாதாரணமான தியாகம் அல்ல.அதனால் தான் ஹிஜ்ரத் செய்த அத்தனை ஸஹாபாக்களும் மிக உயர்ந்த அந்தஸ்தை அல்லாஹ் கொடுத்தான்.

وَٱلَّذِينَ آمَنُواْ وَهَاجَرُواْ وَجَـاهَدُواْ فِي سَبِيلِ ٱللَّهِ وَٱلَّذِينَ آوَواْ وَّنَصَرُواْ أُولَـئِكَ هُمُ ٱلْمُؤْمِنُونَ حَقّاً لَّهُم مَّغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ

எவர்கள் ஈமான் கொண்டு தங்கள ஊரைத் துறந்து அல்லாஹ்வின் பாதையில் போர் புரிகின்றார்களோ அவர்களும், எவர்கள் அவர்களுக்கு புகலிடம் கொடுத்து உதவி செய்கின்றார்களோ அவர்களும் தான் உண்மையான முஃமின்கள். அவர்களுக்கு மன்னிப்பும் கண்ணியமான ரிஸ்கும் உண்டு. (அல்குர்ஆன் : 8 ; 74(

இந்த மகத்தான ஹிஜ்ரத்தையும் ஹிஜ்ரத் செய்த அந்த முஹாஜிர்களையும் நாம் நினைவு கூறுவோம். அவர்களின் தியாகங்களைப் போற்றுவோம். அவர்களைப் போன்று வாழ முயற்சிப்போம். அல்லாஹ் அருள் புரிவானாக.

 



1 comment: