Pages

Pages

Wednesday, August 19, 2020

ஹிஜ்ரத் தரும் பாடம்

 

ஹிஜ்ரிப் புத்தாண்டு பிறந்திருக்கிறது. ஹிஜ்ரிப் புத்தாண்டு என்றவுடன் சட்டென்று நம் அனைவரின் நினைவிலும் சிந்தனையிலும் உதிப்பது நபி அவர்களும் அவர்களின் அருமைத் தோழர்களான ஸஹாபாக்களும் தன் சொந்த நாட்டை விட்டு, தன் சொந்த ஊரை விட்டு, தான் வாழ்ந்த வீட்டை விட்டு, தன் குடும்பத்தை விட்டு, தன் சொத்துக்களை விட்டு, தன் சொந்த பந்தங்களை விட்டு அல்லாஹ்வின் கட்டளை என்ற ஒரே காரணத்திற்காக அல்லாஹ்வின் பொருத்தம் என்ற ஒரே இலக்கை முன்னிறுத்தி மதீனா நோக்கி இடம் பெயர்ந்து சென்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த ஹிஜ்ரத் பயணம் தான். அந்த ஹிஜ்ரத் பயணத்தை மையமாகக் கொண்டு தான் இஸ்லாமிய வருடக்கணக்கு தொடங்கியது,இன்று 1442 ஐத் தொட்டிருக்கிறோம்.

 

واللهِ إنَّك لَخيْر أرْض الله، وأحبُّ أرْض الله إلى الله، ولوْلا أنِّي أُخْرِجْت منْك ما خرجْتُ

நபி அவர்கள் மதீனாவை நோக்கி புறப்பட்டு சென்று கொண்டிருக்கும் வேளையில் மக்காவை திரும்பிப் பார்த்து அல்லாஹ்வின் மீது ஆணையாக நிச்சயமாக நீ அல்லாஹ்வின் சிறந்த பூமி. அல்லாஹ்வுடைய பூமியில் அல்லாஹ்விடத்தில் சிறந்த இடம்.நான் இம்மக்களால் வெளியேற்றப்பட வில்லையென்றால் நான் உன்னிலிருந்து வெளியேற மாட்டேன் என்றார்கள். (திர்மிதி ; 3925)

 

நபி அவர்கள் தான் பிறந்து வளர்ந்த நேசித்த மக்கத்து மண்ணை விட்டு மதீனாவிற்கு இடம் பெயர வேண்டும் என்ற தீர்மானத்தை ஏன் எடுத்தார்கள்? அதன் பின்னணியில் அதற்கு தூண்டுதலாக இருந்த காரணம் என்ன? என்பதை ஹிஜ்ரி புத்தாண்டு தொடங்கியிருக்கிற இந்த நேரத்தில் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

நபி அவர்கள் இந்த பூமிக்குக் கொண்டு வந்த இந்த மார்க்கம் வெறும் தனி மனிதர்களை மட்டும் உருவாக்குவதை இலக்காகக் கொண்ட மார்க்கமல்ல.மாறாக தனி மனிதர்களை உருவாக்கி அதன் மூலம் சிறந்த குடும்பத்தை உருவாக்கி அந்த குடும்பங்களின் வழியாக ஒரு மாபெரும் சமூகத்தை கட்டியெழுப்புவது தான் இந்த மார்க்கத்தின் இலக்கு. மக்கத்து மண்ணிலே தனி மனிதர்களாக இருந்து கொண்டு அல்லாஹ்வை வணங்குவதற்கும் தொழுவதற்கும் ஓரளவு வாய்ப்பு இருந்தது. இருந்தாலும் நபியவர்கள் விரும்பிய இஸ்லாமிய சமூகத்தை உருவாக்குவதற்கும் கட்டியெழுப்புவதற்கும் மக்கா நகரம் அன்றைக்கு பொருத்தமானதாக இல்லை. எனவே தான் அதற்கு பொருத்தமான ஒரு பூமியை தேர்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.அதனால் தான் ஹிஜ்ரத் சென்றார்கள்.

இந்த ஹிஜ்ரத் பயணம் முஸ்லிம்களாகிய நாம் அண்ணல் நபி அவர்களை முன்னோடியாக வழிகாட்டிய கொண்டிருக்கிற நாம் என்றைக்கும் நம் நினைவில்ஷ நம் சிந்தனையில் நிறுத்த வேண்டிய ஒரு நிகழ்வு. நபி அவர்களின் பிறப்பு, அவர்களின் இறப்பு,ஹஜ்ஜத்துல் வதாவு என்று சொல்லப்படுகிற அவர்களின் இறுதி ஹஜ், பத்ரு போர், உஹது போர்,ஹுதைபியா உடன் படிக்கை, மக்கா வெற்றி என நபி அவர்கள் வாழ்வில் நடந்த அவர்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த எத்தனையோ நிகழ்வுகள் இருக்கிற போது ஹிஜ்ரத்தை அடிப்படையாகக் கொண்டு இஸ்லாமிய ஆண்டு தொடங்கப்பட வேண்டும் என்று இஸ்லாத்தின் இரண்டாம் ஜனாதிபதி நீதத்தின் மறுஉருவம் ஹள்ரத் உமர் ரலி அவர்கள் எடுத்த தீர்மானத்தின் பின்னணியில் ஏராளமான உண்மைகள் ஒளிந்திருக்கிறது.

ஹிஜ்ரத் நபி அவர்களின் வாழ்வில் மட்டுமல்ல இஸ்லாமிய வரலாற்றிலும் மனித வரலாற்றிலும் ஒரு புதிய திருப்பத்தை தோற்றுவித்த மாபெரும் நிகழ்வு.அந்த ஹிஜ்ரத்திற்குப் பிறகு தான் முஸ்லிம்கள் ஒரு புதிய அத்தியாத்தில் கால் பதிக்கிறார்கள்.அல்குர்ஆன் அருளப்பட்ட பாணியில் அதன் கருப்பொருளில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது.எதிரிகளின் அதிகாரத்திற்கும் அடக்குமுறைக்கும் பதில் சொல்ல முடியாத அளவு பிற்படுத்தப்பட்ட சமூகமாக இருந்த முஸ்லிம்கள் பல்கிப் பெருகி உலகம் முழுக்க தன் சாம்ராஜ்ஜியத்தை நிறுவுகிற அளவுக்கு பலம் மிக்க சமூகமாக அவர்களை அடையாளப்படுத்தியது இந்த ஹிஜ்ரத் தான்.எனவே மற்ற நிகழ்வுகளைப் போன்று சாதாரண நிகழ்வு என்று நினைக்க முடியாது. ஹிஜ்ரத்தை ஒரு நிகழ்வு என்று சொல்வதை விட அது ஒரு சரித்திரம் என்று தான் சொல்ல வேண்டும்.

ஏனென்றால் இந்த ஹிஜ்ரத்தின் மூலம் ஏற்பட்ட மாற்றங்களும் திருப்பங்களும் சாதரணமான தல்ல.நபி அவர்கள் மக்காவிலிருந்து இடம் பெயர்ந்து மதீனா சென்று அங்கே இஸ்லாமிய எழுச்சிக்கான அடித்தளம் அமைக்க நாடிய போது அவர்கள் மிக முக்கியமாக இரண்டு விஷயங்களை செய்தார்கள்.அந்த இரண்டு  விஷயங்கள் தான் உலகத்தில் முஸ்லிம்களை முஸ்லிம்கள் என்று அடையாளப் படுத்தியது, இஸ்லாத்தை மேலோங்கச் செய்தது,உலகம் முழுக்க இஸ்லாமியர்கள் தடம் பதிக்க காரணமாக அமைந்தது.

அதிலே ஒன்று பரம்பரை பரம்பரையாக பகைமை பாராட்டிக் கொண்டிருந்த அவ்ஸ்-கஸ்ரஜ் கோத்திரங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தினார்கள். காலம் காலமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்களை சகோதரர்களாக மாற்றிக் காட்டினார்கள். சமூக ஒழுங்கில்லாத, கோத்திர உணர்வு மிகைத்திருந்த, எதற்கெடுத்தாலும் சண்டை போடுகிற, எதற்கெடுத்தாலும் ஒருத்தரை ஒருவர் வெட்டிக் கொள்கிற அந்த அரபிய மக்களிடம் அன்பையும் கருணையையும் பரஸ்பரம் உதவி புரியும் பண்பையும் இஸ்லாமிய சகோதரத்துவக் கொள்கை மூலம் வளர்த்தார்கள். நபி அவர்கள் ஏற்படுத்திய சகோதரத்துவம் இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது. இரத்த உறவு ரீதியான சகோதரத்துவம் கூட தோற்று விடும் அளவிற்கு நபி அவர்கள் ஏற்படுத்திய கொள்கை ரீதியான சகோதரத்துவம் மிகப்பெரிய மாற்றங்களை அந்த மக்களிடத்தில் ஏற்படுத்தியது என்பது வரலாறு கூறும் உண்மை.

மட்டுமல்ல முஹாஜிர்களுக்கும் அன்ஸாரிகளுக்கும் மத்தியில் ஒரு உன்னதமான இணக்கத்தை உருவாக்கினார்கள். மக்காவாசிகள் ஹிஜ்ரத்தின் போது தன் தொழில்,வருமானம், செல்வம் எல்லாவற்றையும் விட்டு விட்டு ஒன்றும் இல்லாதவர்களாகத்தான் மதீனா வந்தார்கள்.மக்காவில் இஸ்லாத்தை பரப்ப முடிய வில்லை, ஈமானை மெறுகூட்ட முடிய வில்லை, இறைவனை சுதந்திரமாக வணங்க முடிய வில்லை.இறை அழைப்புப் பணியை மேற்கொள்ள முடிய வல்லை. இங்கே அதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் இருக்கிறது. எனவே இறைவனை சுதந்திரமாக வணங்குங்கள், சுதந்திரமாக இறை அழைப்புப் பணியை மேற் கொள்ளுங்கள் என்று மட்டும் சொல்லி நபி அவர்கள் அவர்களைக் கண்டு கொள்ளாமல் அப்படியே விட்டிருந்தால் அன்றைக்கு மக்காவாசிகளின் வாழ்க்கையும் எதிர்காலமும் கேள்விக்குறியாகிப் போயிருக்கும். ஆனால் நபி அவர்கள் மறுமையை மட்டுமல்ல உலகத்தின் நல்வாழ்விற்கும் வழிகாட்டும் உன்னத நபி. எனவே தான் அவர்கள் வியாபாரத்திலும் இன்னபிற வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவைகளிலும் ஒருவருக்கொருவர் இணைந்து செயல்படுவதற்கு தோதுவாக மக்காவாசிகளுக்கும் மதீனாவாசிகளுக்கும் மத்தியில் இணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் ஏற்படுத்தினார்கள். நபி அவர்கள் உருவாக்கிய அந்த சகோதரத்துவத்தால் அவர்கள் உடன் பிறந்த சகோதரர்களை மிஞ்சும் அளவிற்கு இணைபிரியா சகோதரர்களாக மாறினார்கள்.     

நம் உடன் பிறந்த சகோதரனுக்காக ஒரு 100 ரூபாயைக் கூட விட்டுக்கொடுக்க மனமில்லாத சமூகமாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற போது இரத்த உறவோ சொந்தமோ பந்தமோ இல்லை.ஈமான் என்ற ஒரே அடிப்படையில் சகோதரர்களாக இருந்த அருமை ஸஹாபாக்களுக்கு மத்தியில் இருந்த அந்த ஒற்றுமையும் சகோதரத்துவமும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் தன்மையும் உண்மையில் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும்.

لَمَّا قَدِمُوا المَدِينَةَ آخَى رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ بيْنَ عبدِ الرَّحْمَنِ بنِ عَوْفٍ، وسَعْدِ بنِ الرَّبِيعِ، قالَ لِعَبْدِ الرَّحْمَنِ: إنِّي أكْثَرُ الأنْصَارِ مَالًا، فأقْسِمُ مَالِي نِصْفَيْنِ، ولِي امْرَأَتَانِ فَانْظُرْ أعْجَبَهُما إلَيْكَ فَسَمِّهَا لي أُطَلِّقْهَا، فَإِذَا انْقَضَتْ عِدَّتُهَا فَتَزَوَّجْهَا،

நபி அவர்கள் ஏற்படுத்திய அந்த சகோதரத்துவத்தின் மூலம் இணைந்தவர்கள் தான் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் ரலி அவர்களும் ஸஃது பின் ரபீவு ரலி அவர்களும். மக்கா வந்த அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் ரலி அவர்களிடம் ஸஃது ரலி அவர்கள் சொன்னார்கள் ; மதீனாவாசிகளில் நான் கொஞ்சம் செல்வம் படைத்தவன். எனது பொருளை இரண்டு பகுதியாக பிரித்து ஒரு பகுதியை நான் வைத்துக் கொள்கிறேன். ஒரு பகுதியை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு இரு மனைவிகள் உண்டு. அதில் உங்களுக்கு யார் விருப்பமோ அவளை நான் விவாகரத்து செய்து விடுகிறேன். அவளை நீங்கள் மறுமணம் செய்து கொள்ளுங்கள். (புகாரி ; 3780)

இது தான் நபி அவர்கள் ஏற்படுத்திய அற்புதமான சகோதரத்துவத்தின் வெளிப்பாடு.தன் வாழ்க்கையின் அனைத்து அவசியத்தேவைகளையும் விட்டும் கொடுக்கும் அளவு அவர்களை உயர்த்தியது. மட்டுமல்ல, தன் சகோதரனின் மகிழ்ச்சியை தன் மகிழ்ச்சியாக அவனுடைய துக்கத்தை தன் துக்கமாக நினைக்கும் மனோ நிலைக்கு அவர்களைக் கொண்டு வந்தது.

من افضل العمل ادخال السرور في قلب المؤمن

ஒரு முஃமினின் உள்ளத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவது சிறந்த அமலாகும். (அல்ஜாமிவுஸ் ஸகீர் ; 8211)

பிறரை சந்தோஷப்படுத்திப் பார்ப்பது, பிறரின் மகிழ்ச்சி நம் மகிழ்ச்சியாகவும் பிறரின் துக்கம் நம் துக்கமாகவும் தெரிவது சகோதரத்துவப் பண்புகளில் ஆக உயர்ந்தது.இந்த உயர்ந்த பண்பினை உலகத்திற்கே அறிமுகப்படுத்தியவர்கள் ஸஹாபாக்கள் என்றுச் சொன்னால் அது மிகையாகாது.

جاء أبو بكرٍ رضِيَ اللهُ عنه بأبيه أبي قُحافةَ إلى رسولِ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم يقودُه شيخٌ أعمَى يومَ فتحِ مكةَ فقال له رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم ألا تركتَ الشيخَ في بيتِه حتى نأتِيَه قال أردتُ أن يُؤجِرَه اللهُ لأنا كنتُ بإسلامِ أبي طالبٍ أشدُّ فرحًا مني بإسلامِ أبي ألتمسُ بذلكَ قرةَ عينِك يا رسولَ اللهِ فقال رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم صدقت

வயதான நேரத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்காக அபூபக்கர் ரலி அவர்கள் தன் தந்தையை நபி அவர்களிடம் அழைத்து வந்தார்கள். அப்போது அவர்கள், நபியைப் பார்த்து என் தந்தை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது எனக்கு  மகிழ்ச்சி தான். ஆனால் உங்கள் சிறிய தந்தை அபூதாலிப் இஸ்லாத்தை ஏற்றிருந்தால் நான் இதை விட பன்மடங்கு மகிழ்ச்சி அடைந்திருப்பேன் என்றார்கள். (மஜ்மவுஸ் ஸவாயித் ; 6/177)

நபி அவர்களின் கரம் பற்றி இஸ்லாத்தை ஏற்ற முதல் ஸஹாபி ஹள்ரத் அபூபக்கர் ரலி அவர்கள்.இஸ்லாத்தை ஆரம்பத்திலேயே ஏற்றுக் கொண்ட அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களுக்கு தன் தந்தை இஸ்லாத்தை ஏற்க வில்லையே என்ற கவலை வெகு நாட்களாக அவர்களின் உள்ளத்தை கசக்கி பிழிந்து கொண்டிருந்தது.தந்தையின் இறைமறுப்பைக் குறித்து இரவும் பகலும் கவலைப்பட்டுக் கொண்டிருந்த அபூபக்கர் ரலி அவர்களுக்கு இந்த நிகழ்வு எவ்வளவு பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.ஆனால் தன் தந்தை இஸ்லாத்தில் நுழைந்து விட்டார் என்ற அந்த  மட்டில்லா மகிழ்ச்சியை விட நபியின் சிறிய தந்தை இஸ்லாத்தை ஏற்க வில்லையே என்ற கவலை அவர்களுக்கு கண்ணீரை வரவழைக்கிறது என்றால் உலகத்தில் உயர்வான நட்புக்கும் அந்த நட்பின் இலக்கணத்திற்கும் இதை விட சிறந்த உதாரணத்தை சொல்ல முடியாது.

தபூக் போரில் தக்க காரணமின்றி கலந்து கொள்ளாத காரணத்தினால் மூன்று ஸஹாபாக்களோடு நபி அவர்கள் ஏறக்குறைய 50 நாட்கள் பேசாமல் இருந்தார்கள். தன் குடும்பத்தாராலும் சமூகத்தாலும் ஒதுக்கி வைக்கப்பட்ட அம்மூன்று ஸஹாபாக்களின் மன்னிப்பு விஷயமாக 50 நாட்களுக்குப் பிறகு இறை வசனம் அருளப்பட்டது. 50 நாட்கள் சமூகத்தால் தள்ளி வைக்கப்பட்டோம் என்பதை விட நபி அவர்கள்  பேசாமல் இருந்தார்கள் என்பது எவ்வளவு பெரிய வேதனை என்பது நமக்குத் தெரியும். அத்தகைய சூழ்நிலையில் அவர்களின் மன்னிப்பு குறித்து இறங்கிய வசனம் அவர்களுக்கு எவ்வளவு பெரிய ஆனந்தப் பெருவெள்ளைத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பது தெளிவான விஷயம். ஆனால் அந்த வசனத்தைக் கொண்டு அம்மூவரை விட மற்ற அனைத்து ஸஹாபாக்களும் அகமகிழ்ந்தார்கள் என்பது தான் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம். அந்த வசனம் இறங்கியவுடன் வீட்டிலிருந்த அந்த மூன்று ஸஹாபாக்களுக்கும் அந்த சுபச்செய்தியை சொல்வதற்கு அவர்கள் போட்டி போட்டதும் அவர்களைக் கட்டியணைத்து வாழ்த்து சொன்னதும் அவர்களின் மிக உயர்ந்த உன்னதமான சகோதரத்துவத்திற்கான சான்றுகளாகும்.

மதீனாவிற்கு சென்று நபி அவர்கள் செய்த இரண்டாவது பணி அங்கே பள்ளியை கட்டியெழுப்பியது.ஒரு ஊரில் வாழுகிற முஸ்லிம் சமூகத்தை ஒன்றிணைப்பதற்கும் அவர்களை ஒருங்கிணைப்பதற்கும் பள்ளிவாசல் நிச்சயம் இருக்க வேண்டும்.அதனால் தான் மதீனா சென்றதும் முதன்முதலாக மஸ்ஜிதை கட்டியெழுப்பினார்கள்.

பள்ளிவாசல் என்பது ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் உணர்ச்சியமயமாக இயங்கும் ஆலயமல்ல. சனிக்கிழமை மட்டும் பணிவோடு விழுந்து எழும் வழிபாட்டுத் தலமும் அல்ல. மாறாக இரவு பகல் என்று பாராமல் எந்நேரமும் செயல்படக்கூடிய செயல்பட வேண்டிய ஒரு கலங்கரை விளக்கு. பள்ளி என்பது வெறும் தொழுமிடமாக மட்டும் இல்லாமல் மக்களை ஒருங்கிணைக்கும் இடமாகவும் இருக்க வேண்டும். அப்படித்தான் அன்றைய பள்ளிவாசல்கள் இருந்தன.

நபி அவர்கள் உருவாக்கிய அந்த பள்ளி வெறும் வணக்கஸ்தலமாக மட்டும் இல்லாமல் பிரச்சனைகளுக்காக நீதி வழங்கும் நீதி மன்றமாக, ஸக்காத்தை செல்வந்தர்களிடமிருந்து வாங்கி ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கும் இடமாக, கல்வி போதிக்கும் இடமாக, பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆலோசனை சொல்லப்படும் இடமாக, மார்க்கத்தின் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கும் இடமாக, மார்க்க சட்டதிட்டங்களை மக்களுக்கு சொல்லும் இடமாக, வசந்தமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் இடமாக,குறைகளை சொல்லி வரும் நபர்களுக்கு குறை தீர்க்கும் இடமாக,பசி என்று வருபவர்களுக்கு பசி போக்கும் இடமாக இப்படி பல்வேறு பரினாமங்களில் மஸ்ஜிதுன் நபவி இயங்கியிருக்கிறது.மனித வாழ்வில் அத்தனை சூழ்நிலைகளோடும் பிண்ணிப்பிணைந்திருந்தது அன்றைய பள்ளிவாசல்.

அதனால் தான் ஸஹாபக்கள் தங்களுக்கு ஏற்படுகிற சுக துக்கங்கள்,லாப நஷ்டங்கள், வெற்றி தோல்விகள்,ஏற்ற இறக்கங்கள்  எதுவாக இருந்தாலும் அவர்கள் நாடும் இடம் பள்ளியாகத்தான் இருந்தது.

دخل رسول اللهِ صلى الله عليه وسلم ذات يوم المسجد فإذا هو برجل من الأنصار يقال له أبو أمامة فقال يا أبًا أمامة ما لي أراك جالسا في المسجد في غير وقت الصلاة قال هموم لزمتني وديون يا رسول اللهِ قال أفلا أعلمك كلاما إذا أنت قلته أذهب الله عز وجل همك وقضى عنك دينك قال قلت بلى يا رسول اللهِ قال قل إذا أصبحت وإذا أمسيت اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال قال ففعلت ذلك فأذهب الله عز وجل همي وقضى عني ديني

ஒரு நாள் நபி அவர்கள் மஸ்ஜிதுக்கு வருகிறார்கள். அங்கே அபூஉமாமா ரலி அவர்கள் அமர்ந்திருந்தார்கள். தொழுகையில்லாத இந்த நேரத்தில் மஸ்ஜிதில் அமர்ந்திருக்க காரணமென்ன? என்று கேட்டார்கள். எனக்கு நிறைய கடன்களும் கவலைகளும் இருக்கிறது என்றார். ஒரு துஆவை சொல்லித்தரட்டுமா? அதை நீ காலையிலும் மாலையிலும் ஓதினால் அல்லாஹ் உன் கவலையைப் போக்கி விடுவான். உன் கடனை அடைத்து விடுவான் என்று சொல்லி அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மினல் ஹம்மி வல் ஹுஸ்ன் என்ற துஆவை சொல்லிக் கொடுத்தார்கள். அந்த துஆவை நான் தினமும் ஓதினேன். அல்லாஹ் என் கவலையைப் போக்கி விட்டான். என் கடனையும் அடைத்து விட்டான் என்று அபூஉமாமா ரலி அவர்கள் கூறுகிறார்கள். (அபூதாவூது ; 1555)

جَاءَ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ بَيْتَ فَاطِمَةَ، فَلَمْ يَجِدْ عَلِيًّا في البَيْتِ، فَقالَ أَيْنَ ابنُ عَمِّكِ؟ فَقالَتْ: كانَ بَيْنِي وبيْنَهُ شيءٌ، فَغَاضَبَنِي فَخَرَجَ، فَلَمْ يَقِلْ عِندِي، فَقالَ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ لإِنْسَانٍ انْظُرْ، أَيْنَ هُوَ؟ فَجَاءَ فَقالَ: يا رَسولَ اللهِ، هو في المَسْجِدِ رَاقِدٌ، فَجَاءَهُ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ وَهو مُضْطَجِعٌ، قدْ سَقَطَ رِدَاؤُهُ عن شِقِّهِ، فأصَابَهُ تُرَابٌ، فَجَعَلَ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ يَمْسَحُهُ عنْه ويقولُ قُمْ أَبَا التُّرَابِ قُمْ أَبَا التُّرَابِ

நபி அவர்கள் அன்னை ஃபாத்திமா ரலி அவர்களின் வீட்டிற்கு வந்தார்கள். ஹள்ரத் அலி ரலி அவர்கள் வீட்டிலில்லை.எங்கே என்று கேட்டார்கள். எனக்கும் அவருக்கும் ஒரு சிறிய பிரச்சனை. கோவித்துக் கொண்டு வெளியே போய் விட்டார். எங்கே போனார் என்று தெரிய வில்லை என்று ஃபாத்திமா ரலி அவர்கள் கூறினார்கள். ஒருவரை அனுப்பி பார்த்து வரச்சொன்னார்கள். அவர்கள் பள்ளியில் படுத்திருக்கிறார்கள் என்று அவர் சொன்னார். நபி அவர்கள் பள்ளிக்கு சென்றார்கள். ஹள்ரத் அலி ரலி அவர்கள் மேலங்கி விலகிய நிலையில் மண்ணில் படுத்திருந்தார்கள்.அவர்கள் மேனி முழுக்க மண் ஒட்டியிருந்தது. நபி அவர்கள் அந்த மண்ணையெல்லாம் துடைத்து விட்டு மண்ணின் தந்தையே எழுந்திருங்கள் என்று கூறி அவரை அழைத்து வந்தார்கள். (முஸ்லிம் ; 2409)

கடன் சுமைகளினால் பாதிக்கப்பட்டு நிம்மதியை தொலைத்தவர்கள், வீட்டில் பிரச்சனையினால் மனம் நொந்து போனவர்கள், தொலைத்த நிம்மதியை பெறுவதற்கும் அந்த பிரச்சனையிலிருந்து தங்களை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கும் அவர்கள் தேர்ந்தெடுத்த இடம் அல்லாஹ்வின் இல்லங்கள் தான்.

காரணம் பள்ளியின் அருமையை அவர்கள் விளங்கியிருந்தார்கள்,பள்ளியின் தொடர்பினால் கிடைக்கும் அளப்பெரும் நன்மைகளை அவர்கள் புரிந்திருந்தார்கள்.

عن أبي هريرةَ أنَّه مرَّ بسوقِ المدينةِ فوقَف عليها فقال : يا أهلَ السُّوقِ ما أعجَزَكم قالوا : وما ذاك يا أبا هريرةَ قال : ذاك ميراثُ رسولِ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم يُقسَمُ وأنتم ههُنا ألا تذهَبونَ فتأخُذونَ نصيبَكم منه قالوا وأينَ هو قال : في المسجدِ فخرَجوا سِراعًا ووقَف أبو هريرةَ لهم حتَّى رجَعوا فقال لهم : ما لكم ؟ قالوا : يا أبا هريرةَ فقد أتَيْنا المسجدَ فدخَلْنا فلم نرَ فيه شيئًا يُقسَمُ فقال لهم أبو هريرةَ : وما رأَيْتُم في المسجدِ أحدًا قالوا : بلى رأَيْنا قومًا يُصلُّونَ وقومًا يقرَؤونَ القرآنَ وقومًا يتذاكَرونَ الحلالَ والحرامَ فقال لهم أبو هريرةَ : وَيْحَكم فذاك ميراثُ محمَّدٍ صلَّى اللهُ عليه وسلَّم

ஹள்ரத் அபூஹுரைரா ரலி அவர்கள் கடைவீதியை கடந்து சென்றார்கள். அங்கே நின்று அம்மக்களைப் பார்த்து உங்களுக்கு ஏன் இந்த இயலாமை என்று கேட்டார்கள். ஏன் என்ன விஷயம் என்று கேட்டார்கள். அங்கே நபியின் சொத்துக்கள் பங்கு வைக்கப்படுகிறது. நீங்கள் இங்கே நிற்கிறீர்கள் என்றார்கள். எங்கே என்று கேட்ட போது பள்ளியை சுட்டிக் காட்டினார்கள். அனைவரும் அங்கே சென்று திரும்பினார்கள். அங்கு எதுவும் பங்கு வைக்கப்பட வில்லையே என்றார்கள். அங்கே யாரையும் பார்த்தீர்களா என அபூஹுரைரா ரலி அவர்கள் கேட்டார்கள். ஆம், சிலர் தொழுது கொண்டிருந்தார்கள். சிலர் குர்ஆன் ஓதிக் கொண்டிருந்தார்கள். சிலர் ஹலால் ஹராமைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள் என்று கூறினார்கள். அது தானே நபியின் சொத்து என்று அபூஹுரைரா ரலி அவர்கள் சொன்னார்கள். (மஜ்மவுஸ் ஸவாயித் ; 1/128) 

நபியின் சொத்துக்கள் பங்கு வைக்கப்படுகிற அந்த பள்ளிகளோடு நாம் நம் தொடர்பை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.நமக்கு மத்தியில் சண்டை சச்சரவுகளை விலக்கிக் கொண்டு சகோதரர்களாக இணைந்து வாழுவோம். இந்த ஹிஜ்ரத் நமக்கு தரும் பாடம் இது தான்.

நோய்த்தொற்றின் காரணமாக பள்ளியை விட்டும் விலகி இருக்கிற நம்மை விரைவில் அல்லாஹுத்தஆலா அவனுடைய இல்லங்களோடு இணைத்து வைப்பானாக.

 


1 comment:

  1. ماشاء الله مولانا بآرك الله في علمك

    ReplyDelete