Pages

Pages

Monday, March 7, 2022

ஹிஜ்ரத்

 الحمد لله والصلوة والسلام علي رسول الله سيدنا محمد واله وصحبه اجمعين اما بعد قال الله تعالي في القران العظيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

அனவற்ற அருளாளன் நிதரற்ற அன்புடையோன் வல்லோன் அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன்.சாந்தியும் சமாதானமும் எங்கள் உயிரிலும் மேலான கண்மனி நாயகம் ரசூலுல்லாஹி ஸல் அவர்களின் மீதும் பரிசுத்தமான அவர்களின் குடும்பத்தார் மீது உன்னதமான அவர்களின் தோழர்கள் மீதும் உண்டாகட்டுமாக.


சிறப்பிற்குரிய இந்த மன்றத்தில் எனக்கு வழங்கப்பட்டிருக்கும் தலைப்பு ஹிஜ்ரத்தின் படிப்பினை. 

அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் ஹிஜ்ரி 1439 ம் ஆண்டை நிறைவு செய்து விட்டு ஹிஜ்ரி 1440 ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். அல்லாஹுத்தஆலா கடந்த வருடங்களை விட இவ்வருடத்தை எல்லா வகையிலும் வளமாகவும் செழிப்பாகவும் பரக்கத்தாகவும் பாதுகாப்பாகவும் ஆக்குவதோடு கடந்த வருடங்களை விட நன்மைகளை அதிகப்படுத்தவும் பாவங்களை குறைத்துக் கொள்ளவும் வல்லோன் அல்லாஹ் அருள் புரிவானாக! 

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே ஹிஜ்ரி என்று சொன்னவுடன் உடனே நம் அனைவரின் சிந்தனையிலும் உதிப்பது நபி ஸல் அவர்களும் அவர்களின் அருமைத் தோழர்களான ஸஹாபாக்களும் தன் சொந்த நாட்டை விட்டு தன் சொந்த ஊரை விட்டு தான் வாழ்ந்த வீட்டை விட்டு தன் குடும்பத்தை விட்டு தன் சொத்துக்களை விட்டு தன் சொந்த பந்தங்களை விட்டு அல்லாஹ் ரசூலின் கட்டளைக்காக மதீனா நோக்கி சென்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த ஹிஜ்ரத் பயணம் தான். அந்த ஹிஜ்ரத் பயணத்தை மையமாகக் கொண்டு தான் இஸ்லாமிய வருடக்கணக்கு தொடங்கியது, இன்று 1440 ஐத் தொட்டிருக்கிறோம்.


இந்த ஹிஜ்ரத் பயணம் முஸ்லிம்களாகிய நாம் உள்ளத்தில் ஈமானைச் சுமந்திருக்கிற நாம் அண்ணல் நபி ஸல் அவர்களை முன்னோடியாக ஏற்றுக் கொண்டிருக்கிற நாம் என்றைக்கும் நம் நினைவிலும் நம் சிந்தனையிலும் நிறுத்த வேண்டிய ஒரு அற்புதமான நிகழ்வு. நபி ஸல் அவர்களின் பிறப்பு, அவர்களின் இறப்பு, அவர்களின் இறுதி ஹஜ், பத்ரு போர், உஹது போர்,ஹுதைபியா உடன் படிக்கை, மக்கா வெற்றி என நபி ஸல் அவர்கள் வாழ்வில் நடந்த எத்தனையோ நிகழ்வுகள் இருக்கிற போது ஹிஜ்ரத்தை அடிப்படையாகக் கொண்டு இஸ்லாமிய ஆண்டு தொடங்கப்பட வேண்டும் என்று இஸ்லாத்தின் இரண்டாம் ஜனாதிபதி ஹள்ரத் உமர் ரலி அவர்கள் ஏன் முடிவெடுத்தார்கள் என்றால் அதில் ஏராளமான உண்மைகள் ஒழிந்திருக்கிறது, எண்ணற்ற படிப்பினைகள் மறைந்திருக்கிறது. 


ஹிஜ்ரத் நபி ஸல் அவர்களின் வாழ்வில் மட்டுமல்ல இஸ்லாமிய வரலாற்றிலும் மனித வரலாற்றிலும் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய நிகழ்வு.எதிரிகளின் அதிகாரத்திற்கும் அடக்குமுறைக்கும் பதில் சொல்ல முடியாத அளவு மைனாரிடி சமூகமாக, பிற்படுத்தப்பட்ட சமூகமாக இருந்த முஸ்லிம்கள் பல்கிப் பெருகி உலகம் முழுக்க தன் சாம்ராஜ்ஜியத்தை நிறுவுகிற அளவுக்கு மெஜாரிடி சமூகமாக பலம் மிக்க சமூகமாக அவர்களை அடையாளப்படுத்தியது இந்த ஹிஜ்ரத் தான். எனவே மற்ற நிகழ்வுகளைப் போன்று சாதாரண நிகழ்வு என்று நினைக்க முடியாது, சொல்ல முடியாது.ஹிஜ்ரத்தை ஒரு நிகழ்வு என்று சொல்வதை விட அதை ஒரு சரித்திரம் என்று தான் சொல்ல வேண்டும். 


நபி ஸல் அவர்கள் மக்காவை விட்டு கிழம்புவதற்கு முன்பு அல்லாஹ்விடத்தில் மிகச்சிறந்த பூமி நீ தான். அல்லாஹ்விடத்தில் மிகப்பிரியமான பூமியும் நீ தான். எனவே என்னுடைய கூட்டத்தார்கள் மட்டும் என்னை வெளியாக்க வில்லையென்றால் நான் உன்னை விட்டு போகவே மாட்டேன் என்று சொல்லி கண்ணீர் வடித்தார்கள். ஒருவர் தன் சொந்த நாட்டை விட்டு தான் வாழ்ந்த ஊரை விட்டு தன் வீட்டை விட்டு போவது என்பது சாதாரணமான விஷயமல்ல.ஆனால் நபி ஸல் அவர்களும் அருமை ஸஹாபாக்களும் அந்த உயர்ந்த தியாகத்தை செய்தார்கள்.


மட்டுமல்ல இந்த ஹிஜ்ரத்தின் மூலம் ஏற்பட்ட மாற்றங்களும் திருப்பங்களும் சாதரணமானதல்ல.நபி ஸல் அவர்கள் மக்காவிலிருந்து மதீனா சென்று அங்கே அவர்கள் செய்த மிக மிக முக்கியமான விஷயம் பரம்பரை பரம்பரையாக, சந்ததி சந்ததியாக பகைமை பாராட்டிக் கொண்டிருந்த அவ்ஸ் - கஸ்ரஜ் கோத்திரங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தினார்கள். காலம் காலமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்களை சகோதரர்களாக மாற்றிக் காட்டினார்கள். எதற்கெடுத்தாலும் சண்டை போடுகிற எதற்கெடுத்தாலும் ஒருத்தரை ஒருவர் வெட்டிக் கொள்கிற  அந்த அரபிய மக்களிடம் அன்பையும் கருணையையும் ஒருவருக்கொருவர் உதவி புரியும் எண்ணத்தையும் உருவாக்கினார்கள். நபி (ஸல்) அவர்கள் அன்றைக்கு ஏற்படுத்திய சகோதரத்துவம் இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமானது.இஸ்லாமிய சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது. இரத்த உறவுகள் கூட தோற்றுப்போய் விடும் அளவுக்கு அன்றைக்கு  நபி ஸல் அவர்கள் ஏற்படுத்திய கொள்கை உறவுகள் மிகப்பெரிய மாற்றங்களை தாக்கங்களையும் ஏற்படுத்தியது. 

நம் உடன் பிறந்த சகோதரனுக்காக ஒரு 100 ரூபாயைக் கூட விட்டுக்கொடுக்க மனமில்லாத சமூகமாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற போது இரத்த உறவும் இல்லை,சொந்தமும் இல்லை,பந்தமும் இல்லை.ஈமான் என்ற ஒரே அடிப்படையில் சகோதரர்களாக இருந்த அருமை ஸஹாபாக்களுக்கு மத்தியில் இருந்த அந்த ஒற்றுமையும் சகோதரத்துவமும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் தன்மையும் உண்மையில் ஆச்சரியமானது.வியப்பானது.

நபி ஸல் அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு சென்ற பிறகு மக்காவிலிருந்து வந்த முஹாஜிர்களையும் மதீனாவிலிருந்த அன்ஸாரிகளையும் சகோதரர்களாக ஆக்கினார்கள்.அப்படி நபி ஸல் அவர்கள் ஏற்படுத்திய சகோதரத்துவத்தால் இணைந்தவர்கள் தான் ஹள்ரத் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் ரலி அவர்களும் ஹள்ரத் ஸஃது ரலி அவர்களும். ஹள்ரத் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் ரலி அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து வந்த முஹாஜிர். ஹள்ரத் ஸஃது ரலி அவர்கள் மதீனாவிலிருந்த அன்ஸாரி.இரண்டு பேரும் சகோதரர்களாக இணைந்த பிறகு ஹள்ரத் ஸஃது ரலி அவர்கள் சொன்னார்கள் ; என் சொத்துக்களை சரிபாதியாக பிரித்து அதில் ஒரு பாதியை உனக்கு தந்து விடுகிறேன்.என் வீட்டை சரிபாதியாக பிரித்து அதில் ஒரு பாதியை உனக்கு தந்து விடுகிறேன். என் இரண்டு மனைவிமார்களில் உனக்கு யார் பிடிக்குமோ அவளை நான் தலாக் விட்டு விடுகிறேன்.நீ அவளை திருமணம் முடித்துக் கொள் என்று சொன்னார்கள். இதைக் கேட்ட அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் அவர்கள் ஆச்சரியத்தில் உறைந்து போய் விட்டார்கள்.உலகத்தில் இதுமாதிரியான தியாகத்தை எங்காவது பார்க்க முடியுமா இதுமாதிரியான விட்டுக் கொடுக்கும் தன்மையை எங்காவது காண முடியுமா 

اِدْخَالُ السُّرُوْرِ فِي قَلْبِ الْمُؤْمِنِ 

பிறரை சந்தோஷப்படுத்திப் பார்ப்பது பிறரின் மகிழ்ச்சியை நம் மகிழ்ச்சியாக பிறரின் துக்கத்தை நம் துக்கமாக ஆக்கிக் கொள்வது தான் சகோதரத்துவப் பண்புகளில் ஆக உயர்ந்தது என்று சொல்வார்கள். இந்த உயர்ந்த பண்பை உலகத்திற்கே அறிமுகப்படுத்தியவர்கள் ஸஹாபாக்கள் தான்.உலகமே வியந்து பார்க்கிற அந்த பண்பு அவர்களிடம் உருவானதற்கு காரணம் இந்த ஹிஜ்ரத் பயணம் தான்.ஹிஜ்ரத் பயணம் மட்டும் இல்லையென்றால் இன்றைக்கு இஸ்லாம் இந்தளவு வளர்ந்திருக்கவும் முடியாது, இதுமாதிரியான தியாகத்தை நாம் பார்த்திருக்கவும் முடியாது.அல்லாஹுத்தஆலா இதுமாதிரியான உயர்ந்த தியாகத்தை நம் எல்லோருக்கும் தருவானாக என்ற துஆவோடு என் வார்த்தைகளை நிறைவு செய்கிறேன். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். 


No comments:

Post a Comment