Pages

Pages

Thursday, May 5, 2022

ரமலான் கபூலாக வேண்டுமா ?

அல்லாஹ்வின் பேருதவியால் மாதங்களில் சிறந்த மாதமான ரமலான் மாதத்தை அடைந்து அதில் எண்ணற்ற அமல்களைச் செய்த மகிழ்ச்சி யிலும் திருப்தியிலும் நாம் இருக்கிறோம்.ரமலான் முடிந்திருக்கிற இந்த வேளையில் நம் சிந்தனையும் மனோநிலையும் எப்படி இருக்க வேண்டும் என்று யோசிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

பொதுவாக எந்த காரியத்தை செய்தாலும் அதற்குரிய பிரதிபலனை எதிர்பார்ப்பது நம் வழக்கம். பிரதிபலன் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ஒரு காரியத்தை ஆரம்பிப்போம். அந்த காரியம் முடிந்த பிறகு அதற்குரிய பிரதிபலனை எதிர் பார்ப்போம். தற்போது 10 th  +12 பரீட்சை தொடங்கி விட்டது. Exam எழுதி முடித்தவன் நல்ல ரிஸல்டை எதிர்பார்ப்பான். இன்டர்வீவிற்கு சென்று வந்தவன் நல்ல வேலை வாய்ப்பை எதிர் பார்ப்பான். எதாவது தொழில் தொடங்கியவர் நல்ல வியாபாரமும் அதன் மூலம் நல்ல லாபமும் கிடைக்க வேண்டும் என்று எதிர் பார்ப்பார். இப்படி ஒவ்வொரு காரியத்தை செய்பவரும் அதற்குரிய பிரதிபலனை எதிர் பார்ப்பது போல் ரமலான் மாதத்தை நிறைவு செய்திருக்கிற நாம் அதற்குரிய பிரதிபலனை எதிர் பார்க்க வேண்டும். ரமலானுக்குரிய பிரதி பலன் என்பது அந்த அமல்கள் ஏற்றுக் கொள்ளப்படுவது.

ஆனால் செய்த அமல்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதா இல்லையா என்பதை ஒருவரால் அறிந்து கொள்ள இயலாது. அமல்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டவர் யார் என்று எனக்கு தெரிந்தால் அவருக்கு வாழ்த்து கூறுவேனே! அமல்கள் நிராகரிக்கப்பட்டவர் யாரென்று தெரிந்தால் அவரிடம் துக்கம் விசேரிப்பேனே என்று ஹழ்ரத் அலி ரலி அவர்கள் கூறிய வார்த்தையை கடந்த வாரம் குறிப்பிட்டது நமக்கு நினைவிருக்கும்.செய்த அமல்கள் எந்த நிலையில் இருக்கிறது என்பதை ஒருவரால் அறிந்த கொள்ள முடியாது. என் அமல்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் என்று ஒருவர் ஆதரவு வைக்கலாம். தவறில்லை. ஆனால் உறுதியிட்டு சொல்ல முடியாது.

أنَّهُ اقْتُسِمَ المُهَاجِرُونَ قُرْعَةً فَطَارَ لَنَا عُثْمَانُ بنُ مَظْعُونٍ، فأنْزَلْنَاهُ في أَبْيَاتِنَا، فَوَجِعَ وجَعَهُ الذي تُوُفِّيَ فِيهِ، فَلَمَّا تُوُفِّيَ وغُسِّلَ وكُفِّنَ في أَثْوَابِهِ، دَخَلَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ، فَقُلتُ: رَحْمَةُ اللَّهِ عَلَيْكَ أَبَا السَّائِبِ، فَشَهَادَتي عَلَيْكَ: لقَدْ أَكْرَمَكَ اللَّهُ، فَقالَ النبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ: وما يُدْرِيكِ أنَّ اللَّهَ قدْ أَكْرَمَهُ؟ فَقُلتُ: بأَبِي أَنْتَ يا رَسولَ اللَّهِ، فمَن يُكْرِمُهُ اللَّهُ؟ فَقالَ: أَمَّا هو فقَدْ جَاءَهُ اليَقِينُ، واللَّهِ إنِّي لَأَرْجُو له الخَيْرَ، واللَّهِ ما أَدْرِي، وأَنَا رَسولُ اللَّهِ، ما يُفْعَلُ بي قالَتْ: فَوَاللَّهِ لا أُزَكِّي أَحَدًا بَعْدَهُ أَبَدًا.

நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழிப் பிரமாணம் (பைஅத்) செய்திருந்த அன்சாரிப் பெண்மணியான உம்முல் அலா (ரலி) அவர்கள் கூறினார்கள் :

மதீனாவுக்கு வந்த) முஹாஜிர்களில் யார் எவர் வீட்டில் தங்குவது என்பதையறிய சீட்டுக் குலுக்கிப் போட்டுக்கொண்டிருந்த போது உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) அவர்கள் எங்கள் வீட்டில் தங்குவது என முடிவானது. அதன்படி அவரை எங்கள் வீட்டில் தங்க வைத்தோம். பிறகு அவர் நோயுற்று மரணமடைந்தார். அவரது உடல் நீராட்டப்பட்டு அவரது ஆடையிலேயே கஃபனிப்பட்டதும் நபி அவர்கள் அங்கு வந்தார்கள். நான் (உஸ்மானை நோக்கி), ”’ஸாயிபின் தந்தையே! உம் மீது இறையருள் உண்டாகட்டும்! அல்லாஹ் உம்மைக் கண்ணியப் படுத்தியுள்ளான் என்பதற்கு நான் சாட்சியம் கூறுகிறேன்எனக் கூறினேன். உடனே நபி அவர்கள் அவரை அல்லாஹ் கண்ணியப் படுத்தியுள்ளான் என்பது, உனக்கெப்படித் தெரியும்?” என்று கேட்டார்கள். ”’ அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். பின் யாரைத்தான் அல்லாஹ் கண்ணியப்படுத்துவான்? ” என நான் கேட்டேன். அதற்கு, நபி அவர்கள், ”’இவர் இறந்து விட்டார். எனவே அல்லாஹ்வின் மீதாணையாக! இவர் விஷயத்தில் நன்மையையே நான் விரும்புகின்றேன். ஆயினும் நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் எனது நிலைமை (நாளை) என்னவாகும் என்பது எனக்குத் தெரியாதுஎன்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அதற்குப் பிறகு நான் யார் விஷயத்திலும் (அவ்வாறு) பாராட்டிக் கூறுவதேயில்லை.’ (புகாரி ; 1243) 

உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) அவர்கள் நபித்தோழர். அவர்களை அல்லாஹ் உயர்ந்த இடத்தில் தான் வைத்திருப்பான் என்பதில் ஐயமேதுமில்லை. இருந்தாலும் வெளிப்படையில் ஒருவர் செய்யும் காரியங்களை வைத்து அவர் அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்பட்டவர் என்றோ அவரின் அமல்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்றோ ஒருவரால் சொல்ல முடியாது என்பதை இந்த ஹதீஸ் நமக்கு உணர்த்துகிறது. எனவே அமல்கள் கபூலாகி விட்டதா என்பதை உறுதியிட்டு நம்மால் சொல்ல முடியாது. சில அடையாளங்களை வைத்து ஒருவர் செய்த அமல்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.

அல்லாஹ் கடமையாக்கிய ஒவ்வொரு கடமைகளிலும் ஒவ்வொரு நோக்கம் இருக்கும். அந்தக் கடமைகளின் மூலம் அந்த நோக்கம் ஒருவருக்கு பூர்த்தியாகி விட்டால் அந்த அமல்களை அவர் சரியாக செய்திருக்கிறார். அதை அல்லாஹ் ஏற்றுக் கொண்டு விட்டான் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

தொழுகையைப் பொருத்த வரை மானக்கேடான விஷயங்களையும் பாவங்களையும் தடுக்கும் என்று இறைவன் கூறுகிறான்.

اُتْلُ مَاۤ اُوْحِىَ اِلَيْكَ مِنَ الْكِتٰبِ وَاَقِمِ الصَّلٰوةَ ‌ اِنَّ الصَّلٰوةَ تَنْهٰى عَنِ الْفَحْشَآءِ وَالْمُنْكَرِ‌ وَلَذِكْرُ اللّٰهِ اَكْبَرُ ‌ وَاللّٰهُ يَعْلَمُ مَا تَصْنَعُوْنَ‏

(நபியே!) வஹீ மூலம் உங்களுக்கு அறிவிக்கப்பட்ட இவ்வேதத்தை (மக்களுக்கு) நீங்கள் ஓதிக் காண்பித்து தொழுகையைக் கடைப்பிடித்து வாருங்கள். ஏனென்றால், நிச்சயமாகத் தொழுகை மானக்கேடான காரியங்களிலிருந்தும். பாவங்களிலிருந்தும் (மனிதனை) விலக்கிவிடும். அல்லாஹ்வை (மறக்காது நினைவில் வைத்து, அவனை) திக்ரு செய்து வருவது மிகமிகப் பெரிய காரியம். நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் நன்கறிவான். (ஆதலால், இவைகளுக்குரிய கூலியை நீங்கள் அடைந்தே தீருவீர்கள்). (அல்குர்ஆன் : 29:45)

இறைவன் வார்த்தை உண்மையானது, சத்தியமானது. குர்ஆன் உண்மையை மட்டும் தான் பேசும்.

عَنْ أَنَسٍ قَالَ: كَانَ فَتًى مِنَ الْأَنْصَارِ يُصَلِّي الصَّلَوَاتِ الْخَمْسَ مَعَ رَسُولِ اللَّهِ ثُمَّ لَا يَدَعُ شَيْئًا مِنَ الْفَوَاحِشِ إِلَّا رَكِبَهُ، فَوُصِفَ لِرَسُولِ اللَّهِ حَالُهُ فَقَالَ: "إِنَّ صَلَاتَهُ تَنْهَاهُ يَوْمًا" فَلَمْ يَلْبَثْ أَنْ تَابَ وَحَسُنَ حَالُهُ

நபி அவர்களோடு ஐவேளையும் தொழுது கொண்டிருந்த  மதீனாவாசிகளில் ஒரு வாலிபர்  பாவங்களை விட வில்லை. அதை நபியவர்களிடம் கூறப்பட்ட போது நிச்சயமாக ஒரு நாள் அவரது தொழுகை அவரை தடுக்கும் என்றார்கள். சில நாட்களிலேயே அவர் தவ்பா செய்து தன் நிலையை அழகாக்கிக் கொண்டார். (தஃப்ஸீர் பகவீ)

ஆனால் இன்றைக்கு தொழுபவர்கள் தான் பாவம் செய்கிறார்கள். தொழுபவர்கள் தான் வட்டி வாங்குகிறார்கள். தொழுபவர்கள் தான் வியாபாரத்தில் பொய் சொல்கிறார்கள். தொழுபவர்கள் தான் அநீதமாக நடக்கிறார்கள். தொழுபவர்கள் தான் பெற்றோர்களுக்கு நோவினை தருகிறார்கள். தொழுபவர்கள் தான் பொய் சத்தியம் செய்கிறார்கள். அப்படியென்றால்  தொழுகை தடுக்க வில்லை என்று கூற முடியுமா ? அவ்வாறு கூறினால் இறைவனின் வார்த்தை பொய்யாகி விடும். எனவே அவர் தொழுகை சரியில்லை, அவர் சரியாக தொழ வில்லை என்று தான் கூற வேண்டும். ஒருவர் செய்யும் குற்றங்களை வைத்து அவருடைய தொழுகை எந்த நிலையில் இருக்கிறது என்பதை கனித்து விட முடியும். எந்தளவு மார்க்க அறிஞர்கள் சொல்கிறார்கள் என்றால், ஒருவர் பாவமே செய்ய வில்லையென்றால் அவர் தொழுகை 100 % ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது. ஒருவர் 50 % பாவம் செய்கிறார் என்றால் அவருடைய தொழுகை 50 %  தான் ஏற்கப்பட்டிருக்கிறது. ஒருவர் 75 % பாவத்தில் ஈடுபடுகிறார் என்றால் அவருடைய தொழுகை 25 % தான் ஏற்கப்பட்டிருக்கிறது. ஒருவர் முழுக்க முழுக்க பாவம் செய்கிறார் என்றால் அவருடைய தொழுகை முழுமையாக ஏற்கப்பட வில்லை என்று கூறுகிறார்கள்.

தொழுகை சரியாக வேண்டும் என்றால் அதில் மனத்தூய்மை, உள்ளச்சம், நபியின் சுன்னத்தைப் பின்பற்றுதல் போன்ற விஷயங்கள் இருக்க வேண்டும். இல்லையென்றால் அது உண்மையான தொழுகையாக இருக்காது.

أنَّ رسولَ اللهِ صلى الله عليه وسلم دخل المسجد فدخل رجل فصلى ثم جاء فسلم على رسول اللهِ صلى الله عليه وسلم فرد رسول اللهِ صلى الله عليه وسلم عليه السلام وقال ارجع فصل فإنك لم تصل فرجع الرجل فصلى كما كان صلى ثم جاء إلى النبي صلى الله عليه وسلم فسلم عليه فقال له رسول اللهِ صلى الله عليه وسلم وعليك السلام ثم قال ارجع فصل فإنك لم تصل حتى فعل ذلك ثلاث مرار فقال الرجل والذي بعثك بًالحق ما أحسن غير هذا فعلمني قال إذا قمت إلى الصلاة فكبر ثم اقرأ ما تيسر معك من القرآن ثم اركع حتى تطمئن راكعا ثم ارفع حتى تعتدل قائما ثم اسجد حتى تطمئن ساجدا ثم اجلس حتى تطمئن جالسا ثم افعل ذلك في صلاتك كلها فإذا فعلت هذا فقد تمت صلاتك وما انتقصت من هذا شيئا فإنما انتقصته من صلاتك وقال فيه إذا قمت إلى الصلاة فأسبغ الوضوء

வேகமாக தொழுத ஒருவரைப் பார்த்து நபி அவர்கள் நீ தொழ வில்லை. திருப்பித் தொழு என்று சொல்லி பிறகு எவ்வாறு தொழ வேண்டும் என்று கற்றுத்தருகிறார்கள். (அபூதாவூத் ; 856)

عن عمران بن حصين قال : سئل النبي - صلى الله عليه وسلم - عن قول الله : ( إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ) قال : " من لم تنهه صلاته عن الفحشاء والمنكر ، فلا صلاة له " ابن كثير

யாரை அவருடைய தொழுகை மானக்கேடான காரியங்கள் மற்றும் பாவங்களிலிருந்து தடுக்க வில்லையோ அவருக்கு தொழுகை இல்லை. (இப்னுகஸீர்)

عن ابن مسعود ، عن النبي – صلى الله عليه وسلم – أنه قال : " لا صلاة لمن لم يطع الصلاة ، وطاعة الصلاة أن تنهى عن الفحشاء والمنكر "

தொழுகைக்கு யார் வழிப்பட வில்லையோ அவருக்கு தொழுகை இல்லை. மானக்கேடான காரியங்கள் மற்றும் பாவங்களிலிருந்து தடுப்பது தான் அத்தொழுகைக்கு வழிப்படுவதாகும். (இப்னுகஸீர்)

எனவே ஒருவரின் தொழுகை சரியாக இருந்தால் அவர் பாவங் களிலிருந்து பாதுகாக்கப்பட்டவராக ஆகிவிடுவார். தொழுபவர் பாவம் செய்வது அவரின் தொழுகை கபூலாக வில்லை என்பதற்கான அடையாளமாகும்.  

அதேபோன்று திக்ர் என்பது உள்ளத்திற்கு அமைதி தரும் என்று அல்லாஹ் கூறுகிறான்.

اَلَّذِيْنَ اٰمَنُوْا وَتَطْمَٮِٕنُّ قُلُوْبُهُمْ بِذِكْرِ اللّٰهِ‌  اَلَا بِذِكْرِ اللّٰهِ تَطْمَٮِٕنُّ الْقُلُوْبُ ‏

மெய்யாகவே நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் அவர்கள்தாம்; (அவர்கள் முன்) அல்லாஹ்வின் திருப்பெயர் துதி செய்யப்பட்டால், அவர்களுடைய உள்ளங்கள் நிம்மதியடைந்து விடுகின்றன. (ஏனென்றால்,) அல்லாஹ்வின் திருப்பெயரை துதி செய்வதனால் (உண்மை நம்பிக்கையாளர்களின்) உள்ளங்கள் நிச்சயமாகத் நிம்மதி அடையும் என்பதை (நபியே! நீங்கள்) அறிந்துகொள்ளுங்கள். (அல்குர்ஆன் : 13:28)

திக்ரின் நோக்கம் அல்லது பிரதிபலன் உள்ளத்தை அமைதி படுத்துவதாகும்.திக்ர் செய்பவருக்கு நிச்சயம் உள்ள அமைதி கிடைக்கும்.நம் முன்னோர்கள் அதை உணர்ந்தார்கள்.

إنَّ في الدنيا جَنَّة مَن لم يَدْخُلْها لم يَدْخُل جَنَّة الآخِرَة، قالوا: وما هي يا إمام؟ قال: مَحَبَّةُ الله تعالى وذِكْرُهُ

உலகில் ஒரு சொர்க்கம் இருக்கிறது. அதில் நுழைந்தவர் தான் மறுமையின் சொர்க்கத்தில் நுழைய முடியும். அது அல்லாஹ்வை நேசிப்பதும் அவனை திக்ர் செய்வதுமாகும் என்று ஞானிகள் கூறுகிறார்கள்.

திக்ர் செய்வதில் இன்பம் கண்டார்கள். அதில் நிம்மதி கிடைப்பதாக உணர்ந்தார்கள். எனவே தான் அதை சொர்க்கமாக நினைத்தார்கள்.

ஒருவர் திக்ர் செய்கிறார். ஆனால் உள்ளம் அமைதி பெற வில்லை, அவருக்கு நிம்மதி கிடைக்க வில்லையெனில் அவர் ஒழுங்காக திக்ர் செய்ய வில்லை என்று தான் பொருள்.

ஜகாத் என்பது பொருளைத் தூய்மைப்படுத்தும் மேலும் அந்தப் பொருளால் ஏற்படும் தீங்குகளைத் தடுக்கும்.

عن ـجابر بن عبد الله رضي الله عنه قال: (قال رجل: يا رسول الله! أرأيت إن أدى الرجل زكاة ماله؟ فقال صلى الله عليه وسلم: من أدى زكاة ماله فقد ذهب عنه شره

ஒரு மனிதர் ஜகாத்தை நிறைவேற்றி விட்டால் அவரின் நிலை என்ன என்று ஒருவர் கேட்டார். அப்போது நபி அவர்கள்  ஒருவர் தன் பொருளுக்குரிய ஜகாத்தை நிறைவேற்றி விட்டால் அந்தப் பொருளின் தீங்குகள் அவரை விட்டும் நீங்கி விடும். (அத்தர்கீப் வத்தர்ஹீப்)

ஜகாத்தை சரியாக முறையாக நிறைவேற்றியவர் பொருளாதாரத்தால் சோதிக்கப்பட மாட்டார் என்பது ஜகாத்தினால் நமக்கு கிடைக்கும் பிரதிபலனாகும். ஜகாத் கொடுக்கின்ற ஒருவர் சோதிக்கப்படுகிறார் என்றால் அவர் ஜகாத் சரியாக நிறைவேற்ற வில்லை. அது கபூலாக வில்லை என்பது பொருளாகும்.

ஹஜ்ஜைப் பொருத்த வரை ஹஜ் கபூலானதற்கான அடையாளம் அவரின் முந்தைய நிலையை விட ஹஜ்ஜிற்கு பின்னாலுள்ள நிலை மாற வேண்டும்.

ما ذكره الإمام النووى رحمه الله: "أن يكون الحاج بعد رجوعه خيرًا مما كان، فهذا من علامات قبول الحج، وأن يكون خيره مستمرًا فى ازدياد".

ஹஜ்ஜிக்கு போவதற்கு முந்தியிருந்த நிலையை விட சென்று வந்த பிறகுள்ள அவரின் நிலை சிறந்ததாக ஆக வேண்டும். அதுவே அவரின் ஹஜ் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதற்கான அடையாளமாகும் என இமாம் நவவீ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

قال الحسن البصري الحج المبرور ان برجع زاهدا في الدنيا راغبا في الاخرة

ஹஜ்ஜிலிருந்து திரும்பிய ஒருவருக்கு உலக மோகம் குறைந்து மறுமையின் தேட்டம் அதிகமாக வேண்டும். அதுவே ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜாகும் என ஹஸனுல் பஸரீ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

அதாவது ஹஜ்ஜிக்குப் பிறகு அவரின் நிலை சீராகி விட வேண்டும். அவர் தன் வாழ்க்கையை திருத்திக் கொள்ள வேண்டும்.உலக ஆசையை விட வேண்டும். நன்மையில் தேட்டமுள்ளவராக மாறி விட வேண்டும். அப்படி ஒருவருக்கு ஹஜ்ஜுக்கு பிறகுள்ள வாழ்க்கை சரியாக வில்லை யென்றால் சீராக வில்லையென்றால் சென்று வந்த பிறகும் அவர் தொழுவதில்லை, அல்லது பாவங்களை விட வில்லை, அல்லது உலக ஆசை அவரை விட்டும் விலக வில்லையென்றால் அவர் ஹஜ் சந்தேகத்திற்குரியது என்று விளங்கிக் கொள்ளலாம்.

இப்படி ஒவ்வொரு அமலுக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கிறது. அதை வைத்து அது கபூல் ஆகி இருக்கிறதா என்பதை ஓரளவுக்கு விளங்கிக் கொள்ளலாம்.காரணம் அப்படி அந்த நோக்கங்களை சொன்னது அல்லாஹ்வும் அவனது தூதரும். அவர்களது வார்த்தைகள் என்றைக்கும் பொய்யானதில்லை. ஒருவர் தொழுகிறார் ஆனால் அவரிடம் அருவருப்பான காரியங்கள் இருக்கிறது என்றால் அல்லாஹ்வின் வார்த்தை பொய்யாகி விட்டது என்று அர்த்தமல்ல. அவர் தொழுகை சரியாக வில்லை என்று அர்த்தம்.ஒருவர் ஜகாத் கொடுக்கிறார்.ஆனால் அவர் பொருளால் சோதனைக்குள்ளாக்கப் படுகிறார் என்றால் நபி அவர்களின் வார்த்தை பொய்யாகி விட்டது என்று அர்த்தமல்ல. அப்படி விளங்குவது ஈமான் உள்ளவர்களுக்கு அழகல்ல. அவர் முறையாக ஜகாத் கொடுக்க வில்லை என்று அர்த்தம்.இப்படியே ஒவ்வொரு அமலையும் நாம் எடுத்துக் கொளல்லாம். அந்த அடிப்படையில் நோன்பின் நோக்கம் இறையச்சம் என்று அல்லாஹ் கூறுகிறான்.

يٰٓـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَيْکُمُ الصِّيَامُ کَمَا كُتِبَ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِکُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَۙ‏

நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. (அதனால்) நீங்கள் இறை அச்சமுடைய வர்களாக ஆகலாம். (அல்குர்ஆன் : 2:183)

இறையச்சம் தான் நோன்புக்கான நோக்கம். நோன்பு கபூல் ஆனதற்கான அடையாளம். நோன்புக்கு முன்னால் இருந்ததை விட நோன்புக்கு பிறகு ஒருவருக்கு இறையச்சம் கூடியிருக்கிறது. தவறுகள் குறைந்திருக்கிறது.நன்மைகள் அதிகரிக்கிறது என்றால் அவர் வைத்த நோன்பும் அதில் அவர் செய்த அமல்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது என்று அர்த்தம்.இல்லையென்றால் அவர் நோன்பு ஏற்றுக் கொள்ளப்பட வில்லை என்று அர்த்தம்.

ரமலான் மாதத்தை நிறைவு செய்திருக்க இந்நேரத்தில் நம் இறையச்சம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை நம்மில் ஒவ்வொருவரும் அளந்து பார்க்க வேண்டும். ரமலானுக்கு முன்னால் இருந்த தக்வாவை ஒரு தட்டிலும் ரமலானுக்குப் பிறகு இப்போதிருக்கிற தக்வாவை மறு தட்டிலும் வைத்து அளக்க வேண்டும்.அளந்து பார்த்தால் நம் அமல்களின் நிலை என்ன என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். எனவே ரமலானுக்குப் பிறகும் அமல்களில் ஈடுபடுவது தான் ரமலான் கபூலானதற்கான அடையாளம்.

இன்னொரு அடையாளம் அந்த அமலை மறுபடியும் செய்வதற்குரிய தவ்ஃபீக் வழங்கப்படுவது.ஒரு அமலை ஒருவர் செய்தார்.அந்த அமலை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான் என்பதற்கு அடையாளம் அந்த அமலை மறுபடியும் செய்வதற்குரிய சந்தர்ப்பம் அவருக்கு வழங்கப்படுவது.துஆ ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு மார்க்கம் நிறைய நிபந்தனைகளை விதிக்கிறது.ஆனால் துஆ கபூல் ஆகிவிட்டது என்பதற்கு அடையாளம் அதற்கு பிறகு மறுபடியும் அவர் துஆ செய்வது.ஒருவர் ஒரு தடவை துஆ செய்தார்.அதற்கு பிறகு அப்படியே விட்டுட்டார் என்றால் அவர் செய்த அந்த துஆ ஒப்புக் கொள்ளப்பட வில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம்.அந்த அடிப்படையில் ரமலானுக்குப் பிறகும் நம் அமல்கள் தொடர்ந்தால் நம்மிடமிருந்து ரமலானை இறைவன் ஏற்றுக் கொண்டான் என்று அர்த்தம். இல்லையென்றால் நம் ரமலான் கேள்விக் குறியானது. அல்லாஹ் பாதுகாப்பானாக.

இன்றைக்கு நாம் ரமலான் பிறை பார்த்தவுடன் பள்ளிக்கு வருகிறோம்.அடுத்து ஷவ்வால் பிறை பார்த்த கையோடு பள்ளியை விட்டு கிளம்பி விடுகிறோம்.மறுபடியும் அடுத்த ரமலான் பிறைக்குத் தான் வருகிறோம். வருடத்தில் ஒரு மாதம் மட்டும் அமல் செய்தால் போதும், அதில் மட்டும் தொழுதால் போதும் நன்மைகளை சம்பாதித்து விடலாம் என்று நாம் நினைத்துக் கொண்டோம். ஆனால் நம் ரமலான் அமல்களே கேள்விக்குறியாக இருக்கிறது. எனவே செய்த காரியத்திற்கான பிரதிபலனை பெற்றுக் கொள்பவர்கள் தான் அறிவாளிகள். ரமலானுக்கான பிரதிபலன் இதற்குப் பிறகுள்ள நம் நிலையைப் பொறுத்துத்தான் இருக்கிறது. அல்லாஹ் நமக்கு தவ்ஃபீக் செய்வானாக!

  

7 comments:

  1. மாஷா அல்லாஹ். நேர காலத்திற்கு ஏற்ற அருமையான பதிவு

    ReplyDelete
  2. அருமையான கோர்வை

    ReplyDelete
  3. ماشاء الله بارك الله حضرت

    ReplyDelete
  4. ماشاء الله

    ReplyDelete
  5. Sikkandhar Coonoori Jazakallahu Khairan

    ReplyDelete
  6. நல்ல தகவல்

    ReplyDelete
  7. மாஷா அல்லாஹ் அருமையான தகவல்கள்

    ReplyDelete