Pages

Pages

Thursday, February 23, 2023

இளம் வயது மரணங்கள்

 

பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் மரணம் என்பது நிச்சயமானது. உறுதியானது. பிறப்பவர் என்றாவது ஒரு நாள் மரணித்தே ஆக வேண்டும். உலகிலுள்ள அனைத்துத் தரப்பினரும் கருத்து வேற்றுமைக்கு இடமின்றி உறுதியாக ஏற்றுக்கொண்டிருக்கிற, நம்பியிருக்கிற ஒரு விஷயம் மரணம் மட்டும் தான். ஒவ்வொரு நாளும் பல நூறு மரணங்களை நாம் பார்க்கிறோம். கேள்விப் படுகிறோம்.

நம்முடன் இருந்தவர்கள் நம்முடன் பழகியவர்கள் நம்முடன் நட்பு கொண்டவர்கள் நம்மோடு கொடுக்கல் வாங்கல் வைத்துக் கொண்டவர்கள் இப்படி நம்மைச் சுற்றியிருப்பவர்களின் மரணங்களை நாம் அன்றாடம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மரணம் என்பது நம்மைப் பொருத்த வரை ஆச்சரியாமானதோ வினோத மானதோ அல்ல. மரணங்களைப் பார்த்துப் பழக்கப்பட்டவர்கள் தான் நாம். அதிலும் உலகை அச்சுறுத்திய கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டதற்குப் பிறகு மரணங்களும் அதனால் ஏற்படும் இழப்புக்களும் நமக்கு சர்வ சாதாரணமாகிப் போனது. இருந்தாலும் இளம் வயது மரணங்கள் உண்மையில் நம்மை நிலைகுலையச் செய்து விடுகிறது. வாழ வேண்டிய வயதில் துடிப்பான வயதில் ஒருவர் மரணித்து நம்மை விட்டும் பிரிந்து செல்வது நம்மை பெரும் துயரத்திற்கு ஆளாக்கி விடுகின்றது.

இளம் வயது மரணம் பெருமானார் அவர்களை கலங்க வைத்திருக்கிறது

حَدَّثَنِي أُسَامَةُ بْنُ زَيْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ : أَرْسَلَتِ ابْنَةُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْهِ : إِنَّ ابْنًا لِي قُبِضَ، فَأْتِنَا فَأَرْسَلَ يُقْرِئُ السَّلَامَ، وَيَقُولُ : " إِنَّ لِلَّهِ مَا أَخَذَ، وَلَهُ مَا أَعْطَى، وَكُلٌّ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى، فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ ". فَأَرْسَلَتْ إِلَيْهِ تُقْسِمُ عَلَيْهِ لَيَأْتِيَنَّهَا فَقَامَ وَمَعَهُ سَعْدُ بْنُ عُبَادَةَ، وَمَعَاذُ بْنُ جَبَلٍ، وَأُبَيُّ بْنُ كَعْبٍ، وَزَيْدُ بْنُ ثَابِتٍ وَرِجَالٌ، فَرُفِعَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّبِيُّ وَنَفْسُهُ تَتَقَعْقَعُ، قَالَ : حَسِبْتُهُ أَنَّهُ قَالَ : كَأَنَّهَا شَنٌّ ، فَفَاضَتْ عَيْنَاهُ، فَقَالَ سَعْدٌ : يَا رَسُولَ اللَّهِ، مَا هَذَا ؟ فَقَالَ : " هَذِهِ رَحْمَةٌ جَعَلَهَا اللَّهُ فِي قُلُوبِ عِبَادِهِ، وَإِنَّمَا يَرْحَمُ اللَّهُ مِنْ عِبَادِهِ الرُّحَمَاءَ

தன் மகன் மரணத்தை நெருங்கி விட்டான் என்ற செய்தியை நபிகள் நாயகம் அவர்களின் மகள் (ஸைனப்) நபிகள் நாயகம் அவர்களுக்குச் சொல்லி அனுப்பி உடனே வர வேண்டும்என்றார்கள். நபிகள் நாயகம் அவர்கள் மகளுக்கு ஸலாம் கூறச் சொல்லி விட்டு அல்லாஹ் எடுத்துக் கொண்டது அவனுக்குரியது. அவன் கொடுத்ததும் அவனுக்குரியது. அவனிடத்தில் ஒவ்வொன்றும் நேரம் நிர்ணயிக்கப் பட்டதாக உள்ளது. எனவே அவர் பொறுமையைக் கடைப்பிடித்து நன்மையை எதிர்பார்க்கட்டும்என்று செய்தி சொல்லி அனுப்பினார்கள். அதற்கு நபிகள் நாயகம் அவர்களின் மகள் சத்தியம் செய்து கட்டாயம் வந்தே ஆக வேண்டும் என்று மறு செய்தி அனுப்பினார்கள். உடனே நபிகள் நாயகம் அவர்கள் எழுந்தார்கள். அவர்களுடன் ஸஅது பின் உபாதா (ரலி), முஆத் பின் ஜபல் (ரலி), உபை பின் கஅப் (ரலி), ஸைத் பின் ஸாபித் (ரலி) மற்றும் பலர் புறப்பட்டனர். சிறுவர் (பேரன்) நபிகள் நாயகம் அவர்களிடம் கொடுக்கப்பட்டார். அவருக்கு மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது. நபிகள் நாயகம் அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது. அல்லாஹ்வின் தூதரே! இது என்ன?’ என்று ஸஅது பின் உபாதா (ரலி) கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் அவர்கள் இந்த இரக்க உணர்வை அல்லாஹ் மனித உள்ளங்களில் அமைத்திருக்கிறான். தனது அடியார்களிடம் இரக்கம் காட்டுபவருக்கே அல்லாஹ்வும் இரக்கம் காட்டுவான்என்று விடையளித்தார்கள். (புகாரி ; 1284)

 

عن عائشة أم المؤمنين:] لَمّا رجَع سَعدُ بنُ مُعاذٍ وجَدَّ به الموتُ، فبَكى عليه رسولُ اللهِ وأبو بكرٍ وعمرُ ، حتّى إنِّي لَأعرِفُ بُكاءَ أبي بكرٍ مِن بُكاءِ عمرَ، وأنا أبْكي. قالت: وكان رسولُ اللهِ تَذرِفُ عَيناهُ ويَمسَحُ وجْهَه، ولا يُسْمَعُ صَوتُه. قالت عائشةُ: وايمُ اللهِ، ما أُصِيبَتْ هذه الأُمَّةُ بعدَ رسولِ اللهِ وصاحبَيْه أشدَّ مِن مُصيبتِهم بسَعدِ بنِ مُعاذٍ. قالت عائشةُ: فانْقلَبَ به قَومُه إلى دارِهم

அன்னை ஆயிஷா ரலி அவர்கள் கூறுகிறார்கள் ; ஸஅத் பின் முஆத் ரலி அவர்களின் மரணத்தின் போது நபி அவர்களும் அபூபக்கர் ரலி அவர்களும் உமர் ரலி அவர்களும் அழுதார்கள். நானும் அழுதேன். நபியவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது. அதைத் துடைத்துக் கொண்டிருந்தார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி அவர்கள் மற்றும் அவர்களுடைய இரு பெரும் தோழர்கள் அபூபக்கர் சித்தீக் ரலி உமர் ரலி ஆகிய மூவரின் மரணத்தை தவிர இந்த மதினா அதிகமாக ஒருவருக்கு கவலைப்பட்டதென்றால் அது அவர்களுக்காகத்தான். (இத்திஹாஃபுல் கியரா)

ஸஅத் பின் முஆத் 37 வயதில் மரணத்தை தழுவினார்கள். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஏழு வருடத்தில் அவர்களின் மரணம் நிகழ்ந்தது. அது அனைவரையும் உலுக்கி எடுத்தது. ஏன் அர்ஷும் இவர்களின் மரணத்தின் போது தான் அசைந்தது.

எனவே இளம் வயது மரணங்கள் உண்மையில் நம் உள்ளங்களை ஆட்டி விடுகின்றது. 

ஆனால் சமீப காலமாக இளம் வயது மரணம் அதிகரித்து வருகிறது. இளம் வயது மரணத்திற்கு மிக முக்கியமான காரணம் மாரடைப்பு, இதய நோய். இதய நோய்கள் பொதுவாக வயதானவர்களைத் தான் தாக்கும். ஆனால் இன்றைய தலைமுறையில் இளைஞர்களையே அதிகம் தாக்குகிறது. இதய நோய் காரணமாக ஆண்டுதோறும் 1.7 கோடி பேர் உயிரிழக்கிறார்கள். அதாவது உலகின் மொத்த இறப்புகளில் 29 சதவீதம் பேர் மாரடைப்பு காரணமாகவே உயிர் இழப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. மாரடைப்பு காரணமாக ஏற்படும் உயிர் இழப்புகளின் எண்ணிக்கை 2030 ஆண்டுக்குள் 2.3 கோடியாக உயரும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குழந்தைகளையும் இந்த நோய் விட்டு வைக்க வில்லை. ஆண்டுதோறும் உலக அளவில் பிறக்கும் குழந்தைகளில் 10 லட்சம் குழந்தைகளுக்கு பிறவி இதயக் கோளாறு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

 

உலக சுகாதார அமைப்பின் தகவலின் படி, ஒவ்வொரு ஆண்டும் இதய நோய்களால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக பெண்களை விட ஆண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம் என்று ஒரு ஆய்வு காட்டுகிறது.

ஆரோக்கியமற்ற உணவு முறை, கன்ட்ரோல் இல்லாத உணவு முறை, தூக்கமின்மை, புகைப் பிடித்தல் மது அருந்துதல் என்று பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் மிக முக்கியமான காரணம் கவலையும் மன அழுத்தமும் தான். இதய நோய் பாதிப்புகள் குறித்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஆய்வொன்றை நடத்தியது. அதில் மனஅழுத்தம், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இதயச் செயல்பாடு பாதிக்கப் படுவதுடன் இளம் வயதிலேயே மரணம் நிகழ்வது கண்டறியப்பட்டது.

கவலையும் மன அழுத்தமும் இன்றைக்கு யாரையும் விட்டு வைக்க வில்லை.ரப்புல் ஆலமீன் மனித வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகளை அமைத்திருக்கிறான். வித்தியாசங்களை ஏற்படுத்தியிருக்கிறான். மனிதர்களில் ஏழைகளாகவும் இருக்கிறார்கள். செல்வந்தர்களும் இருக்கிறார்கள். படித்தவர்களும் இருக்கிறார்கள். படிப்பறிவில்லாத பாமரர்களும் இருக்கிறார்கள். பார்ப்பதற்கு அழகானவர்களும் இருக் கிறார்கள். அழகு குறைந்தவர்களும் இருக்கிறார்கள்.மக்கள் பிரிதி நிதிகளும் இருக்கிறார்கள். பிரஜைகளும் இருக்கிறார்கள். எல்லோரை யும் ஒரே நிலையில் ஒரே தரத்தில் இறைவன் வைக்க வில்லை. ஒரே நிலையில் வைத்தாலும் உலகம் இயங்காது. எனவே மனித வாழ்க்கையில் வித்தியாசங்கள் இருப்பது இயற்கையானது.

ஆனால் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் அனைவரும் ஒரே மாதிரியே இருக்கிறார்கள், அந்த ஒரு விஷயத்தில் மட்டும் மனிதர்களில் வித்தியாசம் கிடையாது.அது தான் கவலை. எல்லோர் வாழ்க்கையில் ஏதோ வகையில் கவலை இடம்பிடித்திருக்கிறது.

கவலை இல்லாத மனிதர்கள் என்று உலகில் யாரையும் காட்ட இயலாது. ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒருவகையில், ஏதோவொன்று கவலையாக இருக்கும். பணம் இல்லை,வசதியில்லை என்பது ஏழைகளின் கவலையென்றால் இருக்கிற பணத்தைப் பாதுகாக்க வேண்டும் அதை பன்மடங்காகப் பெருக்க வேண்டும் என்பது செல்வந்தர்களின் கவலை. பரிட்சையில் பாஸாக வேண்டும் என்பது மாணவனின் கவலை.வாங்கிய கடனை அடைக்க வேண்டும் என்பது குடும்பத் தலைவனின் கவலை. பெண் பிள்ளைகளை கறை சேர்க்க வேண்டும் என்பது தகப்பனின் கவலை. கவலை யாரையும் விட்டு வைக்காது. இதெல்லாம் ஒரு விஷயமா... இதுக்குப் போய் கவலைப்படுறீங்களேஎன்று நாம் இன்னொருவருக்குச் சமாதானம் சொல்வோம். பிறகு அதே விஷயத்திற்காக நாமே கவலைப்படுவோம்.

இறுதி வரை வாழ்க்கை இப்படியே இருக்க வேண்டும் என்ற கவலை சிலருக்கு.இறுதி வரை வாழ்க்கை இப்படியே இருந்து விடுமோ என்ற கவலை சிலருக்கு.கவலையின் விதங்களும் அதன் ரூபங்களும் மாறுபடலாமே தவிர கவலையை விட்டும் உலகில் யாரும் தப்ப முடியாது. கவலைக்கான காரணங்கள் மனிதருக்கு மனிதர் வித்தியாசப் படலாமே தவிர கவலை இல்லா மனிதனைப் பார்க்க முடியாது.

ஆனால் கவலை மிகைத்து மன உளைச்சலாக மாறும் போது மனிதன் நிலை தடுமாறி தவறான முடிவுகளை கையில் எடுக்கிறான். உலகில் ஒரு வருடத்திற்கு சுமார் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார மையம் தெரிவிக்கிறது. இந்த அத்தனை தற்கொலைகளுக்கும் அடிப்படைக் காரணம் கவலைகள் தான்.

கவலை மனிதனை சிந்திக்க விடாது.வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர விடாது. இது மனிதனுக்கு மட்டுமல்ல அனைத்து படைப்பினங்களுக்கும் பொருந்தும்.

வீடுகளில் எலித் தொல்லை அதிகமாகி விட்டால் எலிப் பொறி வைத்து அதைப் பிடிப்போம் மரக்கட்டையால் செய்யப்பட்ட அந்தப் பொறியில் மாட்டிக்கொண்ட எலி வெளி வர முடியாமல் தவிக்கும். ஆனால் உளவியல் ஆய்வின் படி எலி தன் கூர்மையான பற்களை வைத்து சிமெண்ட் மூலம் கட்டப்பட்ட சுவரைக் கூட குடைந்து விடும். அந்த ஆற்றல் எலிக்கு உண்டு. எனவே சாதாரணமான மரக்கட்டையை கொரித்து அதிலிருந்து தப்பிப்பது எலிக்கு சாதாரண விஷயம் தான். ஆனால் பொறியில் மாட்டிக் கொண்டோமே என்ற கவலை எலியை மேற்கொண்டு சிந்திக்க விடாமல் தடுக்கிறது. முயற்சி செய்ய விடாமல் அந்தக் கவலை தடைக்கல்லாக வந்து நிற்கிறது. இறுதியில் உயிரை விடுகிறது. எனவே எலி மாட்டிக்கொண்டது பொறியில் அல்ல. கவலையில் தான்.

பெரும் பெரும் சாணக்கியர்களையும் இந்த கவலை விட்டு வைக்க வில்லை. மாவீரன் நெப்போலியன் உலகமே கண்டு அஞ்சிய வியந்த ஒரு பேரரசன். இறுதி காலத்தில் சிறைபிடிக்கப்பட்டு தனித்தீவில் சிறையில் அடைக்கப்பட்டான். அங்கே வேலை செய்த பணியாளன் ஒருவன் அரசனுக்கு தனிமை நீங்க வேண்டும் என்பதற்காக சதுரங்க விளையாட்டுப் பெட்டியை நெப்போலியனுக்குக் கொடுத்தார். அதனை வாங்கிய நெப்போலியன் சிறைப்பட்ட கவலையில் மூலையில் தூக்கி எறிந்து விட்டான். கவலையின் உச்சகட்டத்திற்கு சென்று விட்ட நெப்போலியன் அந்த சிறையிலேயே உயிரை விட்டான். சதுரங்கப் பெட்டியைக் கொடுத்த அந்த பணியாளர் மிகுந்த கவலையோடு அதனை நெப்போலியன் அறையிலிருந்து எடுத்தார். அந்த சதுரங்க விளையாட்டுப் பெட்டியின் பின்புறம் சிறையிலிருந்து தப்பிப்பதற்கான வழியை வைத்து நெப்போலியனுக்கு கொடுத்திருந்தார். ஆனால் ஒரு முறை கூட இதனை முழுவதுமாக நெப்போலியன் உற்றுப் பார்க்க வில்லையே என்று வேதனைப்பட்டார்.

கவலையும் மன உளைச்சலும் அதிகமாகும் போது சரியான முடிவு எடுக்க முடியாமல் திணறி சரியான வழி அருகில் இருந்தும் அதனை பெற்றுக் கொள்ள முடியாத நிலைக்கு ஒரு மனிதன் தள்ளப்படுகிறான்.

அதேபோன்று இன்றைக்கு அதிக இளம் வயது மரணங்கள் ஏற்படக் காரணம் உடல் நலத்தின் மீது கவனம் இல்லாமல் இருப்பது. அதிகம் பேர் உடல் நலத்தை பேணுவதில்லை. பாதுகாப்பதில்லை. அதில் கவனம் செலுத்துவதில்லை. இதற்கும் கவலைகள் தான் என்றே சொல்லலாம். வீட்டைக் கட்ட வேண்டுமே என்ற கவலை. பிள்ளைகளை கட்டிக் கொடுக்க வேண்டுமே என்ற கவலை. வாங்கிய கடனை அடைக்க வேண்டுமே என்ற கவலை. இப்படியே பல்வேறு கவலைகள் சூழ்ந்து கொள்வதால் உடல் நலத்தின் மீது அக்கரையும் கவனமும் இன்றைய இளம் தலைமுறையினருக்கு இல்லாமல் போய் விட்டது.  

மனம் கவலையாக சஞ்சலமாக இருக்கும் போது அதற்கான ஒரு தீர்வைத் தேடி மனிதர்கள் அலைகிறார்கள். பல இடங்களுக்கு செல்கிறார்கள். பல செயல்களை செய்கிறார்கள். பல மனிதர்களிடத்தில் சென்று தனது மனவேதனைக்கு மருந்து கிடைக்குமா என்று முயற்சிக் கிறார்கள்.கவலைக்கான சிறந்த மருந்து இஸ்லாத்தில் இருக்கிறது. வாழ்வில் நாம் சந்திக்கின்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வைச் சொல்லித் தருகின்ற இஸ்லாத்தில் கவலைக்கும் தீர்வு இருக்கிறது.

தீர்வு 1 ;

உலக வாழ்க்கையின் யதார்தத்தை புரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையில் மரணம் வரை, ஏன் சுவனம் வரை கவலைகள் தொடர்ந்து இருந்து கொண்டே தான் இருக்கும்.

وَقَالُوا الْحَمْدُ لِلّٰهِ الَّذِىْۤ اَذْهَبَ عَـنَّا الْحَزَنَ  اِنَّ رَبَّنَا لَـغَفُوْرٌ شَكُوْرُ ‏

அன்றி (அவர்கள்) "தங்களை விட்டும் எல்லா கவலைகளையும் நீக்கிவிட்ட அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் உரியன. நிச்சயமாக எங்கள் இறைவன் மிக்க மன்னிப்பவனும் நன்றி செலுத்துவதை அறிபவனுமாக இருக்கிறான்" என்று புகழ்ந்து (துதி செய்து) கொண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் : 35:34)

عَنْ أَبِي قَتَادَةَ بْنِ رِبْعِيٍّ الْأَنْصَارِيِّ ، أَنَّهُ كَانَ يُحَدِّثُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُرَّ عَلَيْهِ بِجِنَازَةٍ، فَقَالَ : " مُسْتَرِيحٌ، وَمُسْتَرَاحٌ مِنْهُ ". قَالُوا : يَا رَسُولَ اللَّهِ، مَا الْمُسْتَرِيحُ وَالْمُسْتَرَاحُ مِنْهُ ؟ قَالَ : " الْعَبْدُ الْمُؤْمِنُ يَسْتَرِيحُ مِنْ نَصَبِ الدُّنْيَا وَأَذَاهَا إِلَى رَحْمَةِ اللَّهِ، وَالْعَبْدُ الْفَاجِرُ يَسْتَرِيحُ مِنْهُ الْعِبَادُ وَالْبِلَادُ وَالشَّجَرُ وَالدَّوَابُّ  

நபி அவர்களைக் கடந்து ஒரு ஜனாஸா (பிரேதம்) கொண்டு செல்லப்பட்டது. அப்போது அவர்கள் ‘(இவர்) ஓய்வு பெற்றவராவார்; அல்லது (பிறருக்கு) ஓய்வு அளித்தவராவார்என்றார்கள். மக்கள் இறைத்தூதர் அவர்களே! ஓய்வு பெற்றவர்; அல்லது ஓய்வு அளித்தவர் என்றால் என்ன?’ என்று கேட்டார்கள். நபி அவர்கள் இறை நம்பிக்கை கொண்ட அடியார் (இறக்கும் போது) இவ்வுலகத்தின் துன்பத்திலிருந்தும் தொல்லையிலிருந்தும் ஓய்வு பெற்று இறையருளை நோக்கிச் செல்கிறார். பாவியான அடியான் (இறக்கும் போது) அவனி(ன் தொல்லைகளி)டமிருந்து மற்ற அடியார்கள், (நாடு) நகரங்கள், மரங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியன ஓய்வு (பெற்று நிம்மதி) பெறுகின்றனஎன்றார்கள். (புகாரி ; 6512) 

கவலைகளை நீக்கியதற்காக சுவனவாசிகள் அல்லாஹ்வை புகழுவார்கள் என இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். மரணித்த பிறகு ஒருவர் துன்பங்களிலிருந்து ஓய்வு பெருகிறார் என்று நபி   அவர்கள் கூறுகிறார்கள். எனவே சுவனம் வரை கவலைகள் மனிதனை விடாது துரத்திக் கொண்டு தான் இருக்கும் என்பதை புரிய முடிகிறது. இன்றைக்கு அதிகம் பேர் என் வாழ்வில் எப்போதுமே சோதனைகளும் கவலைகளும் இருந்து கொண்டே இருக்கிறது. வாழ்க்கையில் நிம்மதியே இல்லை என்று சலித்துக் கொள்கிறார்கள். விரக்தியாகி விடுகிறார்கள். அதுவே மிகப்பெரும் நோயாக மாறி விடுகிறது. வாழ்வில் கவலைகள் இருந்து கொண்டு தான் இருக்கும். அதை தவிர்க்க முடியாது என்ற உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் அதை இயல்பாக எடுத்துக் கொண்டு வாழ முடியும்.

தீர்வு 2 ;

அல்லாஹ் விதித்தது தான் நடக்கும். அவனுடைய விதியைத் தாண்டி எதுவும் நடக்காது என்று களா கத்ரின் மீது அபாரமான நம்பிக்கை கொள்ள வேண்டும். இந்த நம்பிக்கை நம்முடைய கவலைகள் தவிடு பொடியாக்கி விடும்.

அவன் செய்கிற அத்தனை காரியங்களிலும் ஏதாவது நன்மை இருக்கும் என்ற உணர்வோடு எல்லாவற்றையும் பொருந்திக் கொள்கிற மனப்பான் மையையும் மனப்பக்குவத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.அந்த பக்குவம் வந்து விட்டால் நம் வாழ்க்கை கவலைகள் இல்லாத, மகிழ்ச்சிகள் நிறைந்த வாழ்க்கையாக மாறி விடும். இன்றைக்கு நம்மிடம் அந்த தன்மை இல்லாததினால் தான் நிம்மதி இல்லாமல் போனது.அல்லாஹ் எல்லோருக்கும் செல்வத்தைக் கொடுத்திருக்கிறான், எனக்கு மட்டும் வறுமையைக் கொடுத்து விட்டான். எல்லோருக்கும் ஆரோக்கியத்தைக் கொடுத்திருக்கிறான். எனக்கு மட்டும் நோயைக் கொடுத்து விட்டான். எல்லோருக்கும் நல்ல மனைவி மக்களைக் கொடுத்திருக்கிறான்.எனக்கு மட்டும் மோசமான மனைவி மக்களைக் கொடுத்து விட்டான் என்று அல்லாஹ் கொடுத்த விஷயங்களை ஏற்றுக் கொள்ளாமல் குறை காண ஆரம்பிக்கின்ற போது தான் கவலைகள் நம்மை தொற்றிக் கொள்கிறது.

مر إبراهيم بن أدهم على رجل مهموم فقال له: "إني سائلك عن ثلاثة فأجبني، قال: أيجري في هذا الكون شيء لا يريده الله؟ أو ينقص من رزقك شيء قدره الله؟ أو ينقص من أجلك لحظة كتبها الله؟ فقال الرجل: لا، قال إبراهيم: فعلام الهم إذن"؟

இப்ராஹீம் பின் அத்ஹம் ரஹ் அவர்கள் கவலையான ஒரு மனிதரைக் கண்டார்கள். நான் உன்னிடம் மூன்று கேள்விகளைக் கேட்கிறேன். நீ பதில் சொல் என்றார்கள். இந்த உலகில் அல்லாஹ்வின் நாட்டம் இல்லாமல் எதுவும் நடக்குமா ? அவர் இல்லையென்றார். அல்லாஹ் உன் விதியில் எழுதிய ரிஸ்கில் எதுவும் குறையுமா ? இல்லையென்றார். அல்லாஹ் உனக்கெழுதிய ஆயுளில் ஒரு நொடிப்பொழுதேனும் குறையுமா ? இல்லையென்றார் அவர். பிறகு எதற்கு கவலை என்று இப்ராஹீம் பின் அத்ஹம் ரஹ் அவர்கள் கேட்டார். (அல்விகாயது மின் குல்லி தாயின்)


عن أبي علي الرازي ، قال : صحبت فضيل بن عياض ثلاثين سنة ما رأيته ضاحكا ولا مبتسما إلا يوم مات علي ابنه فقلت له في ذلك فقال : « إن

الله عز وجل أحب أمرا فأحببت ما أحب الله »

அபூ அலி ராஸி [ரஹ்] அவர்கள் கூறுகிறார்கள் ;  ஃபுளைல் பின் இயாழ் ரலி அவர்களை எனக்கு 30 வருடமாகத் தெரியும். அந்த 30 வருடத்தில் ஒரு நாள் கூட அவர்கள் சிரித்தோ, புன்னகைத்தோ நான் கண்டதில்லை.அத்தகையவர்கள், அவர்களின் மகன் இறந்த அன்று சிரித்தார்கள். என்றைக்கும் சிரிக்காத நீங்கள் அழ வேண்டிய ஒரு தினத்தில் சிரிக்கிறீர்களே என்று வியப்புடன் வினவினேன்.அப்போது அவர்கள் என் மகனின் மரணத்தை இறைவன் விரும்பியிருக்கிறான். அவன் விரும்பியதை நானும் விரும்பி விட்டேன். அதனால் எனக்கு மகிழ்ச்சி தான் என்றார்கள்.

 

தீர்வு 3 ;

அல்லாஹ் நம்முடன் இருக்கிறான். அவன் உதவி செய்வான். அவன் கை விட மாட்டான் என்று என்று உணர வேண்டும். எவ்வளவு பெரிய கவலைகள் இருந்தாலும் இந்த உணர்வு அவையனைத்தையும் ஒன்றுமில்லாமல் ஆக்கி விடும்.

عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: " كَانَ آخِرَ قَوْلِ إِبْرَاهِيمَ حِينَ أُلْقِيَ فِي النَّارِ: حَسْبِيَ اللَّهُ وَنِعْمَ الوَكِيلُ

நெருப்பில் போடப்படும் நேரத்தில் இப்ராஹீம் அலை அவர்கள் கூறிய கடைசி வார்த்தை அல்லாஹ் எனக்குப் போதுமானவன். பொறுப்பேற்பவர்களில் அவனே சிறந்தவன்என்பதாகும். (புகாரி ; 4564)

தீர்வு 4 ;  துஆ

وَإِنَّ فِي الْجَسَدِ مُضْغَةً إِذَا صَلَحَتْ صَلَحَ الْجَسَدُ كُلُّهُ، وَإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُلُّهُ، أَلَا وَهِيَ الْقَلْبُ

நிச்சயமாக உடலில் ஒரு சதைத்துண்டு இருக்கிறது. அது சீர் பெற்று விட்டால் உடல் முழுவதும் சீர் பெற்று விடும். அது சீர் கெட்டுப் போய் விட்டால் முழு உடலும் சீர் கெட்டு விடும். அறிந்து கொள்ளுங்கள். அது இதயமாகும். (புகாரி ; 52)

எல்லா நோய்களுக்கும் உள்ளம் தான் முதற்காரணம். உள்ளத்தில் இடம்பிடித்திருக்கிற கவலைகளால் தான் அனைத்து நோய்களும் வருகிறது. அந்தக் கவலைகளை உள்ளத்திலிருந்து துடைத் தெறிய வேண்டும். அதற்கு ஒரே வழி துஆ தான்.

நம் வாழ்வில் நாம் விரும்பாத விஷயங்கள் தான் நமக்கு கவலை தருகின்றது. அந்த விரும்பாத விஷயங்களுக்கு எதற்கு உள்ளத்தில் இடமளிக்க வேண்டும். எனவே நம் கவலைகளை உள்ளத்திற்குள் அடக்கி வைத்து தனிமையில் இருந்து சோகத்தை அசை போடுவதை விட நம் கவலைகளையும் துன்பங்களையும் நம்மை படைத்த ரட்சகனிடம் முறையிட்டு விட்டால் கவலை பறந்து விடும். பொதுவாக உள்ளத்தில் இருக்கும் கவலைகளை வார்த்தை வடிவில் நம் நண்பர்களிடமோ அல்லது மனைவியிடமோ பெற்றோர்களிடமோ கூறி விட்டால் சற்று பாரம் குறையும். எல்லாரையும் விட நமக்கு உற்ற தோழனாக நண்பனாக இறைவன் இருக்கிறான். அவனிடத்தில் முறையிடும் பொழுது அந்த கவலைகள் பறந்து போய் விடும்.

 

5 comments:

  1. தீர்வுகள் நான்கும் தித்திப்பு!

    ReplyDelete
  2. Masha Allah
    Barakallahu feekum

    ReplyDelete
  3. அருமையான பதிவு

    ReplyDelete