Pages

Pages

Friday, April 7, 2023

பொருளாதார சமநிலையும் ஜகாத்தும்

 உலகில் வாழும் மக்களிடையே ஆளும் வர்க்கம், அதிகார வர்க்கம், அடிமை வா்க்கம் என்ற பல்வேறு ஏற்றத்தாழ்வுகள், வித்தியாசங்கள் உண்டு. அந்த ஏற்றத்தாழ்வுகளும் வித்தியாசங்களும் ஜனநாயகத்தின் மூலமாக மாற்றப்பட்டு, அம்பானிக்கும் ஒரு வாக்கு, குடிசையில் வசிக்கும் சுப்பனுக்கும் ஒரு வாக்கு என்று அனைவருக்கும் ஒரே மாதிரியான வாக்குரிமை அளித்து அரசியல் சமநிலையை பெரும்பாலான நாடுகளில் கொண்டு வரப்பட்டு விட்டது.

உலக நாடுகள் அரசியல் சமநிலையைக் கொண்டு வருவதில் ஓரளவுக்கு வெற்றி பெற்றிருந்தாலும், பொருளாதார சமநிலையைக் கொண்டு வருவதில் அனைத்து நாடுகளும் தோற்றுப்போய் விட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஏழை பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு இருப்பது இயல்பு தான். அப்போது தான் இருப்பவன் கொடுக்க முடியும், இல்லாதவன் வாங்க முடியும். ஆனால் இப்போதுல்ல உலகத்தின் நிலை என்னவென்றால், இருப்பவன் கொடுக்க வேண்டியதைக் கொடுப்பதில்லை. அதனால் அவன் வளர்ந்து கொண்டே போகிறான். இல்லாதவனுக்கு கிடைக்க வேண்டியது கிடைப்பதில்லை. எனவே அவன் தேய்ந்து கொண்டே போகிறான். செல்வமும் வசதிகளும் ஒரு பக்கம் மட்டுமே குவிந்து கொண்டே போகிறது. எனவே மக்களிடையே பொருளாதாரத்தில் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வு ஏற்பட்டிருக்கிறது.

இந்த ஏற்றத்தாழ்வு கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது.

مَاۤ اَفَآءَ اللّٰهُ عَلٰى رَسُوْلِهٖ مِنْ اَهْلِ الْقُرٰى فَلِلّٰهِ وَلِلرَّسُوْلِ وَلِذِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنِ وَابْنِ السَّبِيْلِۙ كَىْ لَا يَكُوْنَ دُوْلَةً بَيْنَ الْاَغْنِيَآءِ مِنْكُمْ‌  وَمَاۤ اٰتٰٮكُمُ الرَّسُوْلُ فَخُذُوْهُ وَ مَا نَهٰٮكُمْ عَنْهُ فَانْتَهُوْا‌  وَاتَّقُوا اللّٰهَ ‌ اِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ‌ۘ‏

அவ்வூராரிடம் இருந்தவைகளில் அல்லாஹ் தன்னுடைய தூதருக்குக் கொடுத்தவைகள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், அவருடைய உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரித்தானதாகும். செல்வம் உங்களிலுள்ள பணக்காரர்களுக்கிடையில் மட்டுமே சுற்றிக் கொண்டிருக்காமல் (மற்றவர்களுக்கும் கிடைக்கும் பொருட்டு, இவ்வாறு பொருளைப் பங்கிடும்படி கட்டளையிடுகின்றான்.) ஆகவே, நம்முடைய தூதர் உங்களுக்குக் கொடுத்ததை நீங்கள் (மனமுவந்து) எடுத்துக்கொள்ளுங்கள். அவர் எதை விட்டும்   உங்களை தடுத்தாரோ, அதைவிட்டு நீங்கள் விலகிக்கொள்ளுங்கள். (இவ்விஷயத்தில்) நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கடும் தண்டனை தருபவன். (அல்குர்ஆன் : 59:7)

இந்த வசனத்தில் அல்லாஹ் குறிப்பிட்டிருப்பது போல் பொருளாதாரம் செல்வந்தர்களிடம் மட்டுமே சுற்றிக் கொண்டிருக்காமல் ஏழைகளுக்கும் போய் சேர வேண்டிய நேரத்தில் சேர வேண்டிய விதத்தில் சேர வேண்டிய அளவு போய் சேர வேண்டும். அப்போது தான் பொருளாதார சமநிலையை ஏற்படுத்த முடியும்.

சட்ட மேதை அம்பேத்கா் தனது உரையில், ‘அரசியல் சமத்துவம் அடைந்து விட்டோம். அதன் அடையாளம் ஒவ்வொரு குடிமகனுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. ஆனால், சமூக அளவில் பொருளாதாரத்தில் சமநிலையை அடைய வெகு தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வினை களையவில்லையென்றால் வன்முறையும், புரட்சியும் வெடிக்கும்என்று எச்சரித்தார்.

உயா்நீதிமன்ற நீதிபதியான ஜி.ஆா். சுவாமிநாதன், 2017- இல் எழுதிய ஒரு கட்டுரையில் அறவரி குறித்துக் குறிப்பிடுகிறார் :

மனித வாழ்வில் பொருளாதார சமநிலை என்பது மிகவும் அவசியமானது. உலகில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் தான் போராட்டங்களும், புரட்சிகளும் நடைபெறுகிறது.இதற்கு தீர்வு காண வேண்டும் என்று இப்போது நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதற்கான தீர்வு பதினான்கு நூற்றாண்டுக்கு முன்பே நபிகள் நாயகம் அவர்கள் கூறி விட்டார்கள். சந்தேகமே வேண்டாம். அவர்கள் சட்டமாக்கிய ஜக்காத் என்ற அறவரியில் தான் அந்த பொருளாத சமநிலை ஏற்படும். நபிகள் நாயகம் அவர்கள்  கூறிய இந்த நன்னெறி எல்லா காலத்துக்கும் எல்லா சமுதாயத்துக்கும் பொருந்தும். அது ஒன்று தான் சிறந்த பொருளாதார சமநிலையை ஏற்படுத்தும் என்று நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் எழுதியுள்ளார்.

உலகில் இல்லாமையைப் போக்கும் வள்ளல் தன்மை கொண்ட இந்தத் திட்டத்தை இஸ்லாம் செயல்படுத்துகிறது. இதுவே இன்றைய உலகுக்கு பொருளாதார சமநிலையை உருவாக்கும் சிறந்த கருவியாகும்

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பது அண்மைக் கால அரசியலில் இடம் பெற்ற கோஷங்களில் புகழ்  பெற்ற ஒன்று. ஆனால் அவையெல்லாம் வெற்று கோஷத்துடன் நின்று விட்டன.  அல்லது நீர்க்குமிழிகள் போல் சில திட்டங்கள் சில வருடங்கள் மட்டுமே தோன்றி மறைந்து விட்டன. அல்லது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மறைக்கப்பட்டு விட்டன.  காலம் தோறும்  நின்று நிலைக்கும்படி ஆக்கபூர்வமாக எதுவும் செய்யப்பட வில்லை.  ஆனால் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே இப்படி ஏழையின் ஏற்றத்தை என்றுமே காணும் திட்டத்தை மனிதனின் வாழ்நாள் கடமையாக்கி மார்க்கத்தின் சட்டமாக்கி வைத்திருப்பது இஸ்லாம் மட்டும் தான். 

ஜகாத் என்பது ஒரு பெரிய ஏரியின் வரப்புகள் நீர் மிகுதியால் உடைப்பெடுத்துக் கொள்ளாமல்  வெட்டி விடப்பட்ட ஒரு சிறு வாய்க்கால். அதிலிருந்து ஏழைகளின் வயல்களை நோக்கி உற்பத்திக்கான நீர் ஓடிக்கொண்டே இருக்கும் . அதே நேரம் இறைவனின் அருள் என்கிற ரஹ்மத்தும், பரக்கத்தும் பெருமழையாய் பெய்து அந்த ஏரியை நிரப்பிக் கொண்டே இருக்கும். இஸ்லாம் காட்டித்தந்த ஜக்காத்தின் சாரம் இது தான். ஜக்காத் கொடுக்க கொடுக்க செல்வந்தர்கள் வாழ்வில் செல்வ வளம் பெருகி அவர்கள் மென்மேலும் வளர்ந்து கொண்டே இருப்பார்கள். ஏழைகளின் வாழ்வும் வளம் பெரும்.

உலக சரித்திரத்தில் பொருளாதார சித்தாந்தங்களில் இன்று வரை பேசப்படும் ஒரு வார்த்தை வர்க்க பேதம் என்பதாகும். செல்வம் ஒரே இடத்தில் குவிவதால் ஒரு புறம்  பணக்கார வர்க்கமும் , அவர்களின் செல்வத்தின் குவியலுக்குக் காரணியாகத்  திகழ்கிற - காலத்துக்கும்  பஞ்ச்சையாக, பராரியாக யாரிடமும் எதுவும் கேட்கமுடியாத ஊமையாக  பாட்டாளி வர்க்கமும் அமைந்துவிட்டதால் - செல்வத்தைப் பகிர்வதற்கு ஆன்மீக ரீதியாக அன்பு முறையில் முறைகள் சொல்லப் படாததால் - வழிகள் வகுக்கப் படாததால் செங்குழம்பு இரத்தம் சிந்தப்  பட்ட  வரலாறுகளைப் படித்து இருக்கிறோம். அத்துடன் நேற்றைக்குப் பணக்காரன் இன்றைக்குப் பிச்சைக்காரன் ஆகும்படி அவனது செல்வங்கள் வன்முறையால் பிடுங்கப் படும் வரலாறுகளை ஜகாத் தடுத்து நிறுத்துகிறது. ஒரு ஆன்மீக உடன்பாட்டில் இறையச்சத்தில்-  ஏழைகளுக்குஅவர்களுக்குரிய செல்வம் பணக்காரர்களால் பாசத்துடன் பந்திவைத்துப் பரிமாறப் படுகிறது.  அரசியல் சரித்திரத்தில் ஆன்மீக மேம்பாட்டில் அமைதியை  தழைக்கச் செய்யும் அருமருந்தே ஜகாத்.

ஜகாத் கொடுக்காதவர்களை திருக்குர்ஆனும் நபிமொழியும் கடுமையாக எச்சரிக்கின்றன*.

وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنْفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ فَبَشِّرْهُمْ بِعَذَابٍ أَلِيمٍ (34) يَوْمَ يُحْمَى عَلَيْهَا فِي نَارِ جَهَنَّمَ فَتُكْوَى بِهَا جِبَاهُهُمْ وَجُنُوبُهُمْ وَظُهُورُهُمْ هَذَا مَا كَنَزْتُمْ لِأَنْفُسِكُمْ فَذُوقُوا مَا كُنْتُمْ تَكْنِزُونَ (35)

தங்கம் வெள்ளியை சேமித்து வைத்துக் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதவர்களுக்கு கடுமையான வேதனையுண்டு. என நபியே எச்சரிப்பீராக! அவற்றை நரக நெருப்பில் பழுக்க காய்ச்சி நெற்றிகளிலும் விலாப் புறங்களிலும் முதுகுகளிலும் சூடு போடப்படும். இவை தாம் உங்களுக்காக நீங்கள் சேமித்து வைத்தவை. எனவே நீங்கள் சேமித்து வைத்ததை சுவைத்துப் பாருங்கள் என்று கூறப்படும். (9:34,35)

மேலும் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்  ஒருவருக்கு செல்வத்தை வழங்கி அவர் அதற்குரிய ஜகாத்தை செலுத்தவில்லையானால் மறுமையில் அவரது செல்வம் தலை வழுக்கையான கொடிய நஞ்சுடைய பாம்பாக அவருக்கு காட்சி தரும்.  அது அவரது கழுத்தில் மாலையாக சுற்றிக் கொள்ளும். பிறகு அந்தப் பாம்பு அவரது தாடைகளைப் பிடித்துக் கொண்டு நான்தான் உனது செல்வம்; நான்தான் உனது கருவூலம்என்று கூறும். என நபியவர்கள் கூறிவிட்டு பின்வரும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

وَلَا يَحْسَبَنَّ الَّذِينَ يَبْخَلُونَ بِمَا آتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ هُوَ خَيْرًا لَهُمْ بَلْ هُوَ شَرٌّ لَهُمْ سَيُطَوَّقُونَ مَا بَخِلُوا بِهِ يَوْمَ الْقِيَامَةِ وَلِلَّهِ مِيرَاثُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ

அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் யார் உலோபத்தனம் செய்கிறார்களோ அது தமக்கு நல்லது என்று (அவர்கள்) நிச்சயமாக எண்ண வேண்டாம் - அவ்வாறன்று அது அவர்களுக்குத் தீங்குதான்; அவர்கள் உலோபத்தனத்தால் சேர்த்து வைத்த (பொருட்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும்; வானங்கள், பூமி ஆகியவற்றில் (இருக்கும் அனைத்துக்கும்) அனந்தர பாத்தியதை அல்லாஹ்வுக்கே உரியதாகும். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் அறிகிறான்.

ஜகாத் முறையாக கொடுப்பதால் ஏழ்மை ஒழிக்கப்படும் என்பதோடு கொடுப்பவர்களுக்கு  நான்கு பலன்கள் இருப்பதாக மார்க்கம் சொல்கிறது.

1, பொருளை சுத்தப்படுத்துகிறது.

خُذْ مِنْ اَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيْهِمْ بِهَا وَصَلِّ عَلَيْهِمْ‌ اِنَّ صَلٰوتَكَ سَكَنٌ لَّهُمْ‌ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ‏

(நபியே! அவர்கள் தங்கள் குற்றத்திற்குப் பரிகாரமாகக் கொண்டு வந்திருக்கும்) அவர்களுடைய பொருள்களிலிருந்து தானத்தை நீங்கள் எடுத்துக்கொண்டு அவர்களை (உள்ளும் புறமும்) பரிசுத்தமாக்கி வைத்து (பாக்கியவான்களாகும்படி) அவர்களுக்காக (துஆ) பிரார்த்தனை செய்யுங்கள். உங்களுடைய (துஆ) பிரார்த்தனை நிச்சயமாக அவர்களுக்கு ஆறுதலளிக்கும். அல்லாஹ் செவியுறுபவனும் மிக அறிபவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 9:103)

ஒவ்வொரு பொருளுக்கும் நாம் ஜகாத் கொடுக்காமல் வைத்திருக்கும் அந்த பகுதி அழுக்கானது, அசுத்தமானது. எதிலும் அழுக்குகள் நீக்கப்பட வேண்டும். இல்லையென்றால் நல்லதையும் சேர்த்து கெடுத்து விடும். உடம்பிலிருந்து கழிவுகள் அவ்வப்போது வெளியேற்றப்பட்டால் தான், உடம்பு சுத்தமாக இருக்கும். நான் கஷ்டப்பட்டு சம்பாதித்து சாப்பிட்டது. அதனால் வெளியாக்க மாட்டேன் என்று ஒருவன் சொன்னால் உடம்பு நாறி உயிருக்கே உலை வைத்து விடும்.

2, பொருளை பாதுகாக்கிறது.

وعَن الحسن بنِ عليّ رضي الله عنه قال: قالَ رسول الله : ((حصِّنوا أموالَكم بالزّكاةِ، وداووا مرضَاكم بالصّدقة، واستقبِلوا أمواجَ البلاءِ بالدعاء والتضرُّع))

 உங்களின் பொருட்களை ஜகாத்தைக் கொண்டு பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்களின் நோய்களுக்கு ஸதகாவை கொண்டு மருந்திடுங்கள். உங்களின் சோதனைகளை துஆவின் மூலம் சரி செய்யுங்கள். (தப்ரானீ)

عن جابر رضي الله عنه قال: قال رجل: يا رسول اللهِ، أرأيتَ إن أدَّى الرجل زكاةَ ماله، فقال رسول الله : ((مَن أدَّى زكاةَ ماله فقد ذهبَ عنه شرُّه

 தன் பொருளுக்கான ஸகாத்தை நிறைவேற்றிய ஒரு மனிதர் பற்றி உங்களின் அபிப்ராயம் என்ன? என நபி அவர்களிடம் வினவப்பட்ட போது- தன் பொருளாதாரத்திற்கான ஜகாத்தை செலுத்தியவர் அந்த பொருளை விட்டும் தீங்கு போய் விட்டதுஎன்று பதில் கூறினார்கள். (இப்னு குஸைமா)

 

مَا تَلَفَ مَالٌ فِي بَرٍّ ، وَلاَ بَحْرٍ إِلاَّ بِحَبْسِ الزَّكَاةِ

கடலிலும் திடலிலும் செல்வம் அழிவுக்குள்ளாவதற்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா? ஜகாத்தை வழங்காமல் பதுக்கி வைப்பதுதான் என்கிறார்கள் நபிகள் நாயகம் (பைஹகீ, தப்ரானி)

பொருளை ஈசியாக சம்பாதித்து விடலாம். பொருளை திரட்டுவதற்கு ஏராளமாக வழிகள் இருக்கிறது.ஆனால் அதை பாதுகாப்பது தான் பெரிய விஷயம். பாதுகாப்பதற்கு நகைகள் வாங்குவது, நிலங்கள் வாங்குவது, பேங்க் சேவிங். இதுமாதிரியான விஷயங்களை செய்யலாம். ஆனால் அவைகள் அழியாமல், வீணாமல் இருக்க வேண்டுமென்றால்  அல்லாஹ்வின் பாதுகாப்பு வேண்டும். அந்த பாதுகாப்பை ஜகாத் கொடுக்கிறது.

பாதுகாப்பு என்பதற்கு இன்னொரு பொருள் ; நல்ல வழிகளில் செலவாகும். சம்பாதித்தால் மட்டும் போதாது. அது பயனுள்ள காரியங்களில் செலவாக வேண்டும். இல்லையென்றால் சம்பாதித்து  பலனில்லாமல் போய் விடும். அல்லாஹ்விற்கும் பதில் சொல்லியாக வேண்டும்.

3, பரக்கத் ஏற்படுகிறது. பரக்கத் என்றால் நாம நினைக்கிற மாதிரி அதிகத்திற்கான பெயரல்ல.

இன்றைக்கு சிலர் இஸ்லாம் கொடுக்கச் சொல்கிறது. அதுவும் வருடா வருடம் கொடுக்கச் சொல்கிறது. இதனால் செல்வம் குறைந்து விடுமே என்று நினைத்துக் கொள்கிறார்கள்.ஆனால் கொடுப்பதால் செல்வம் குறையாது என்பதை சத்தியமிட்டு சொல்ல முடியும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " مَا نَقَصَتْ صَدَقَةٌ مِنْ مَالٍ، وَلَا عَفَا رَجُلٌ عَنْ مَظْلِمَةٍ إِلَّا زَادَهُ اللَّهُ بِهَا عِزًّا، وَلَا تَوَاضَعَ عَبْدٌ لِلَّهِ إِلَّا رَفَعَهُ ". وَقَالَ ابْنُ جَعْفَرٍ : " رَجُلٌ أَوْ أَحَدٌ إِلَّا رَفَعَهُ اللَّهُ

தர்மம் நிச்சயமாக பொருளைக் குறைப்பதில்லை. (முஸ்னத் அஹ்மது ; 7206)

4، கப்ரு வேதனையைத் தடுக்கிறது

عن أبي هريرة:] إنّ الميِّتَ إذا وُضِع في قبرِه إنّه يسمَعُ خَفْقَ نعالِهم حينَ يولُّونَ عنه فإنْ كان مؤمنًا كانتِ الصَّلاةُ عندَ رأسِه وكان الصِّيامُ عن يمينِه وكانتِ الزَّكاةُ عن شِمالِه وكان فعلُ الخيراتِ مِن الصَّدقةِ والصِّلةِ والمعروفِ والإحسانِ إلى النّاسِ عندَ رِجْلَيْهِ فيؤتى مِن قِبَلِ رأسِه فتقولُ الصَّلاةُ: ما قِبَلي مدخلٌ ثمَّ يؤتى عن يمينِه فيقولُ الصِّيامُ: ما قِبَلي مدخلٌ ثمَّ يؤتى عن يسارِه فتقولُ الزَّكاةُ: ما قِبَلي مدخلٌ ثمَّ يؤتى مِن قِبَل رِجْليهِ فتقولُ فعلُ الخيراتِ مِن الصَّدقةِ والصِّلةِ والمعروفِ والإحسانِ إلى النّاسِ: ما قِبَلي مدخلٌ فيُقالُ له: اجلِسْ فيجلِسُ

ஒரு மையித்து மண்ணறையில் வைக்கப்பட்டால் அடக்கம் செய்பவர்கள் திரும்பிச் செல்கின்ற பொழுது அவர்களின் செருப்பின் ஓசையை அந்த மய்யித் கேட்கும்.அந்த மய்யித் மூஃமினாக இருந்தால் தொழுகை அவரின் தலைக்கருகிளும் நோன்பு அவருடைய வலப்புறத்திலும் ஜக்காத் அவருடைய இடப்புறத்திலும் மற்ற ஏனைய நற்கருமங்கள் அவருடைய காலுக்கருகிலும் இருக்கும்........ (இப்னு ஹிப்பான்)

மேல்மிச்சதகவல்களுக்கு இந்த லிங்கைத் தொடவும்

No comments:

Post a Comment