Pages

Pages

Friday, August 25, 2023

சந்திரயான் 3 - விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி

வாழ்க்கை என்பது வெற்றி தோல்விகள் நிறைந்தது. வாழ்க்கை முழுக்க வெற்றி மட்டுமே பெற்றவர்களும் இல்லை. வெற்றியே பெறாமல் தோற்றுக் கொண்டே இருப்பவர்களும் இல்லை. வெற்றி மட்டுமே கிடைத்துக் கொண்டிருந்தால் மனிதனுக்கு தலைக்கனம் வந்து விடும். எப்போதுமே தோற்றுக் கொண்டே இருந்தால் வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டு மனம் தளர்ந்து விடுவான். எனவே அல்லாஹ் மனிதனுக்கு வெற்றியையும் தோல்வியையும் மாறி மாறி வழங்குகிறான். வெற்றி கிடைக்கும் போது அல்லாஹ்விற்கு நன்றி செலுத்த வேண்டும். தோல்வியை சந்திக்கின்ற போது பொறுமையை மேற்கொண்டு அதிலிருந்து பாடங்களைப் பெற்று தவறுகளை திருத்திக் கொண்டு வெற்றிக்காக போராட வேண்டும்.

வெற்றிக்கான படிக்கட்டுகளில் முதல் படிக்கட்டே தோல்வி தான். தோல்வி என்ற படிக்கட்டைத் தாண்டித்தான் வெற்றியை சுவைக்க முடியும். வெற்றி பெற்ற அனைவரின் வாழ்வும் தோல்வி என்ற புள்ளியிலிருந்து தான் தொடங்குகிறது. பல முறை கீழே விழுந்து தான் ஒரு சிறுவன் சைக்கில் ஓட்டக் கற்றுக் கொள்கிறான். பல முறை கணவரிடத்திலும் குடும்பத்தாரிடத்திலும் திட்டு வாங்கித்தான் ஒரு பெண் சமையற்கலையைக் கற்றுக் கொள்கிறாள்.எனவே தோல்வி என்பது மனித வாழ்வில் தவிர்க்க முடியாதது. ஆனால் தோல்வியைக் கண்டு அஞ்சக்கூடாது. மனம் தளர்ந்து விடவும் கூடாது. அஞ்சி விட்டாலோ மனம் சோர்ந்து விட்டாலோ வெற்றியை சுவைக்க முடியாது.

குழந்தை நடைப்பழகக் கற்றுக்கொள்ளும் போது, ஆரம்பத்தில் விழுந்து கொண்டே இருக்கும். ஆனால் எத்தனை முறை விழுந்தாலும் மீண்டும் எழுந்து கொள்ளும். விழுந்து விட்டோமே என்று குழந்தை மட்டும் மனச்சோர்வு அடைந்து முயற்சியைக் கை விட்டு விட்டால் அதனால் ஒரு போதும் நடக்க இயலாது.

நாம் நம் வாழ்க்கையில் பல நேரங்களில் தோற்றுக் கொண்டு தான் இருக்கிறோம். படிக்கின்ற மாணவர்கள் தேர்வில் தோற்று விடுகிறார்கள். படித்து முடித்தவர்கள் வேலை தேடுவதில் தோற்றுக் கொண்டிருக் கிறார்கள். திருமணத்திறகாக பெண் அல்லது மாப்பிள்ளை தேடுபவர்கள் பல தோற்றுக் கொண்டிருக்கிறார்கள். குழந்தை இல்லாதவர்கள் அவர்களின் ஒவ்வொரு முயற்சியில் அவர்கள் தோற்றுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.  ஒரு குடும்பத் தலைவன் தன் மனைவியையும் பெற்ற பிள்ளைகளையும் எதிர் கொள்வதில் தினம் தினம் தோற்றுக் கொண்டு தான் இருக்கிறான். மீண்டும் மீண்டும் முயற்சித்தால் நிச்சயம் ஒரு நாள் இறைவன் வெற்றியைத் தருவான்.

وَالَّذِيْنَ جَاهَدُوْا فِيْنَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا ‌ وَاِنَّ اللّٰهَ لَمَعَ الْمُحْسِنِيْنَ

எவர்கள் நம்முடைய வழியில் (செல்ல) முயற்சிக் கின்றார்களோ அவர்களை நிச்சயமாக நாம் நம்முடைய (நல்) வழிகளில் செலுத்துகின்றோம். நன்மை செய்பவர்களுடன் நிச்சயமாக அல்லாஹ் இருக்கிறான். (அல்குர்ஆன் : 29:69)

தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இருந்தால் எத்தனை முறை தோற்றாலும் ஒருவரால் மீண்டும் எழுந்து வெற்றிப் பாதையில் பயணிக்க முடியும்.

வெற்றி என்பது வாழ்வில் நாம் எவ்வளவு உயர்ந்திருக்கிறோம் என்பதைக் கொண்டு அளக்கப்படுவதில்லை. நாம் விழும் போது எத்தனை முறை மீண்டும் உடனே எழுந்து நின்றிருக்கிறோம் என்பதைக் கொண்டே அளக்கப்படுகிறது.மீண்டும் மீண்டும் எழும் இந்தத் திறமையே வெற்றியைத் தீர்மானிக்கின்றது. மனிதன் கீழே விழுகிற ஒவ்வொரு முறையும் வேகமாய் முன்னேறுகிறான்என்று சொல்கிறார் ரால்ஃப் வால்டோ எமர்சன் என்கிற ஓர் அறிஞர்.எனவே தோல்வியைக் கண்டு துவண்டு விடாமல் விடா முயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் எதிலும் வெற்றி பெறலாம்.

தாமஸ் ஆல்வா எடிசன், மின் விளக்கை கண்டுபிடிப்பதில் 900 முறைகளுக்கும் மேல் தோல்வியை தழுவினார். நெப்போலியன் மூன்றில் இரண்டு பங்கு போரில் தோற்றவர் தான். பதினாறு முறை வாழ்க்கையில் தோல்வி கண்டவர் தான் ஆபிரகாம் லிங்கன். பதினேழு முறை தோற்று வெற்றி கண்டவர் தான் கஜினி முகமது. பலமுறை முயன்று தோல்வியுற்றுத் தான் சிலந்தியே வலை பின்னுகிறது. அயர்லாந்து மன்னராக இருந்த ராபர்ட்புரூஸ் இங்கிலாந்தின் மீது படையெடுத்து 6 முறை தோற்றார். கவலையோடு ஒரு குன்றில் அமர்ந்து சிந்தித்து கொண்டு இருந்தார். அப்போது ஒரு சிலந்தி பூச்சி ஒரு குன்றிலிருந்து மற்றொரு குன்றிற்கு தாவித்தாவி வலை பின்னியது. 6 முறை அதனால் முடியவில்லை. ஏழாவது முறை வென்றது. இதை பார்த்த ராபர்ட் புரூஸ் சிலந்தியின் தன்னம்பிக்கையை கண்டு வியந்தார். தானும் ஏழாவது தடவை இங்கிலாந்தின் மீது படையெடுத்தார். வெற்றி பெற்றார்.

மாநபி அவர்களுக்கு நபித்துவத்தின் ஆரம்ப நாட்கள் கசப்பானதாகவே இருந்தது. இருந்தாலும் தன்னம்பிக்கையை விட வில்லை. நபி அவர்களிடம் இருந்த தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் அசாதாரண மான பல வெற்றிகளை குவிக்க காரணமாய் அமைந்தது.

நபி அவர்களை ஏற்றுக் கொண்ட ஸஹாபா பெருமக்கள் கடுமையான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்ட நேரத்தில் அவர்களுக்கு சொன்ன வார்த்தைகள் ;

عَنْ أَبِي عَبْدِاللهِ خَبَّابِ بْنِ الْأَرَتِّ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ: شَكَوْنَا إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ متَوَسِّدٌ بُرْدَةً لَهُ في ظلِّ الْكَعْبَةِ، فَقُلْنَا: أَلَا تَسْتَنْصِرُ لَنَا أَلَا تَدْعُو لَنَا؟ فَقَالَ: «قَدْ كَانَ مَنْ قَبْلَكُمْ يُؤْخَذُ الرَّجُلُ فَيُحْفَرُ لَهُ فِي الْأَرْضِ، فَيُجْعَلُ فِيهَا، ثُمَّ يُؤْتَى بِالْمِنْشَارِ فَيُوضَعُ عَلَى رَأْسِهِ فَيُجْعَلُ نِصْفَينِ، وَيُمْشَطُ بِأَمْشَاطِ الْحَدِيدِ مَا دُونَ لَحْمِهِ وَعَظْمِهِ، مَا يَصُدُّهُ ذَلِكَ عَنْ دِينِهِ، وَاللهِ لَيُتِمَّنَّ اللهُ هَذَا الْأَمْرَ حَتَّى يَسِيرَ الرَّاكِبُ مِنْ صَنْعَاءَ إِلَى حَضْرَمَوْتَ لَا يَخَافُ إِلَّا اللهَ وَالذِّئْبَ عَلَى غَنَمِهِ، وَلَكِنَّكُمْ تَسْتَعْجِلُونَ

 

அல்லாஹ்வின் மேல் ஆணையாக இந்த மார்க்கத்தை அல்லாஹ் முழுமைப்படுத்துவான். யமனில் உள்ள ஒருவர் ஹள்ரமவ்த்எனும் ஊரிலிருந்து ஸன்ஆ எனும் ஊர் வரை அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாமல் பயணம் செய்வார். தனது ஆடுகள் விஷயத்தில் ஓநாய்கள் பற்றி அஞ்சுவதைத் தவிர (கொலை கொள்ளை போன்ற) அச்சம் எதுவும் அவருக்கு இருக்காது என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள். (புகாரி ; 3612)

உயிர் வாழ்வதே கேள்விக் குறியாக இருந்த நெருக்கடியான காலகட்டத்தில் வெற்றிக்கான எந்த அறிகுறியும் தென்படாத காலத்தில் யமன் நாடு முஸ்லிம்களால் வெற்றி கொள்ளப்படும் என்று நபிகள் நாயகம் அவர்கள் பிரகடனம் செய்தார்கள். அவர்கள் பிரகடனம் செய்தது போலவே உமர் ரலி அவர்களின் ஆட்சிக் காலத்தில் யமன் நாடு முஸ்லிம்களின் கீழ் வந்தது. இஸ்லாத்தின் கடுமையான குற்றவியல் சட்டம் காரணமாக ஹள்ரமவ்த்திலிருந்து ஸன்ஆ வரை அச்சமின்றி பயணம் மேற்கொள்ளும் பொற்காலமும் பிறந்தது.

لما كان حين أمرنا رسولُ اللهِ صلَّى اللهُ عليهِ وسلَّم بحَفْرِ الخَنْدَقِ عَرَضَتْ لنا في بعضِ الخَنْدَقِ صخرةٌ لا نأخذُ فيها المَعَاوِلَ، فاشتَكَيْنا ذلك إلى النبيِّ صلَّى اللهُ عليهِ وسلَّم، فجاء فأخذ المِعْوَلَ فقال : بسمِ اللهِ، فضرب ضربةً فكسر ثُلُثَها، وقال : اللهُ أكبرُ أُعْطِيتُ مَفاتيحَ الشامِ، واللهِ إني لَأُبْصِرُ قصورَها الحُمْرَ الساعةَ، ثم ضرب الثانيةَ فقطع الثلُثَ الآخَرَ فقال : اللهُ أكبرُ، أُعْطِيتُ مفاتيحَ فارسٍ، واللهِ إني لَأُبْصِرُ قصرَ المدائنِ أبيضَ، ثم ضرب الثالثةَ وقال : بسمِ اللهِ، فقطع بَقِيَّةَ الحَجَرِ فقال : اللهُ أكبرُ أُعْطِيتُ مَفاتيحَ اليَمَنِ، واللهِ إني لَأُبْصِرُ أبوابَ صنعاءَ من مكاني هذا الساعةَ

பரா இப்னு ஆஜிப் ரலி அவர்கள் கூறுகிறார்கள்: அகழ் தோண்டும் போது ஒரு பகுதியில் எந்த கடப்பாறையாலும் உடைக்க முடியாத ஒரு பாறை குறுக்கிட்டது. அதைப் பற்றி நபி அவர்களிடம் நாங்கள் முறையிட்டோம். நபியவர்கள் கடப்பாறையால் பிஸ்மில்லாஹ் என்று கூறி ஓர் அடி அடித்துவிட்டு அல்லாஹ் மிகப்பெரியவன்! ஷாம் தேசப் பொக்கிஷங்கள் எனக்கு அருளப்பட்டன. நான் இப்போது அங்குள்ள செந்நிறக் கோட்டைகளைப் பார்க்கிறேன் என்றார்கள். பின்பு இரண்டாவது முறையாக அப்பாறையை அடித்தார்கள். அல்லாஹ் மிகப் பெரியவன்! பாரசீகத்தின் பொக்கிஷங்கள் எனக்குக் கொடுக்கப்பட்டன. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அங்குள்ள மதாயின் நகரத்தின் வெள்ளை மாளிகையை இப்போது பார்க்கின்றேன் என்றார்கள். பின்பு மூன்றாவது முறையாக பிஸ்மில்லாஹ் என்று கூறி அடித்தார்கள். மீதமுண்டான கல்லும் உடைக்கப்பட்டது. அப்போது நபியவர்கள் அல்லாஹ் மிகப் பெரியவன்! எனக்கு யமன் தேசத்து பொக்கிஷங்கள் கொடுக்கப்பட்டன. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! எனது இந்த இடத்திலிருந்து ஸன்ஆ நகரத்தின் தலைவாயில்களைப் பார்க்கின்றேன் என்றார்கள். (தலாயிலுன் நுபுவ்வா ; 3/421)

மக்காவாசிகள் யூதர்கள் என அனைவரும் ஓரணியில் இணைந்து முஸ்லிம்களை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மதீனாவை நோக்கி வந்தார்கள். அவர்கள் 10,000 பேர் இருந்தனர். இந்த எண்ணிக்கை மதீனாவிலுள்ள பெண்கள், சிறுவர்கள், வாலிபர்கள், வயோதிகர்கள் என அனைவரின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தது. அப்போது தான் மதீனாவைச் சுற்றி அகழ் தோண்ட உத்தரவிட்டார்கள். அந்த நெருக்கடியான நேரத்தில் பெருமானார் அவர்கள் கூறி தன்னம்பிக்கை மிகுந்த வார்த்தைகள் தான் இவை.

அவர்கள் சொன்னதைப் போன்றே பிற்காலத்தில் அவை அனைத்தும் இஸ்லாமியர்களின் கைகளில் வந்து சேர்ந்தது. எனவே விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இன்றில்லா விட்டாலும் ஒரு நாள் நிச்சயம் வெற்றியைத் தேடித்தரும்.இதற்கு நிகழ்கால உதாரணம் தான் சந்திராயன் 3 வெற்றி.சந்திராயன் 3 வின்கலத்தை இந்தியாவின் இஸ்ரோ நிலவிற்கு அனுப்பி உலகில் யாரும் தொடாத தூரத்தைத் தொட்டு அதில் வெற்றி கண்டு இந்தியாவிற்கே பெருமையைத் தேடித்தந்திருக்கிறது.அதற்கு அவர்களின் தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் தான் காரணம்.

இந்த பிரபஞ்சத்தில் எத்தனையோ கோள்கள் வலம் வந்து கொண்டிருந்தாலும், நிலவு என்று நாம் அழைக்கும் சந்திரன் மீதான ஆராய்ச்சிகள் 1950-ம் ஆண்டுகளிலேயே தொடங்கப்பட்டு விட்டன. ஆரம்பத்தில் அமெரிக்கா, ரஷியா இடையே தான் கடும் போட்டி நிலவியது. இரு நாடுகளும், சந்திரனின் வடதுருவத்தை ஆராய விண்கலங்களை அனுப்பியது. இதில், முதலில் வெற்றி பெற்றது ரஷியா தான் என்றாலும், 1969-ம் ஆண்டு நிலவுக்கு மனிதர்களை அனுப்பிய அமெரிக்கா, உலகத்தின் பார்வையை தன் பக்கம் திருப்பியது.

 

நிலவு குறித்த ஆய்வில், அமெரிக்கா, ரஷியா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா தான் முன்னிலையில் இருந்து வருகிறது.

 

ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் நிலாவுக்கு செயற்கைக்கோள் அனுப்பியுள்ள நிலையில் இந்த வரிசையில் 4 வது நாடாக இடம்பிடிக்க கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்தியா போராடி வந்தது. இதற்காக இஸ்ரோ 2008 ஆம் ஆண்டு சந்திராயன் 1 விண்கலத்தை நிலவை நோக்கி அனுப்பியது. ஆனால், அது தோல்வி அடைந்தது.

 

அதை தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு நிலவை நோக்கி சந்திரயான் 2 விண்கலம் ஏவப்பட்டது. அதன் ரோவர் கருவி தரையிறங்கும் போது நிலவின் மேற்பரப்பில் வேகமாக மோதியதால் வெடித்து சிதறியது. அதை தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான் 3 விண்கலத்தை உருவாக்கினர். கடந்த ஜூலை 14 ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.

 

நிலவின் இருண்ட பகுதியை ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பப்பட்ட இதை, அதன் தெற்கு பகுதியில் இந்த தரையிறக்கும் வகையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்தார்கள். சந்திராயன் 3 விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டதை தொடர்ந்து, விண்கலம் பூமியை நீள் வட்டப் பாதையில் 5 முறை சுற்றி வந்தது. அதன் பிறகு நிலவின் ஆர்ப்பிட்டுக்கு சென்று அதையும் நீள் வட்டப்பாதையில் சுற்றத் தொடங்கியது.

 

இப்படி பூமியையும் நிலவையும் சுற்றி 23 ம் தேதி மாலை நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி சாதித்து இருக்கிறது சந்திரயான் 3 இன் விக்ரம் லேண்டர். இதன் மூலம் நிலவில் வெற்றிகரமாக விண்கலத்தை அனுப்பிய 4 வது நாடு என்ற பெருமையையும், நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை நிலை நிறுத்திய முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியாவுக்கு பெற்றுக் கொடுத்து உள்ளார்கள் இஸ்ரோ விஞ்ஞானிகள்.

 

இப்படி இந்தியாவை உலக அரங்கில் தலைநிமிர செய்து இருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகள், இந்த வெற்றிக்கு பட்ட பாடு கொஞ்சம் நஞ்சம் அல்ல. சந்திரயான் 1, சந்திரயான் 2 திட்டங்கள் வெற்றி பெறாததன் காரணமாக எழுந்த விமர்சனங்கள், சந்திரயான் 3 திட்டத்தை செயல்படுத்தும் போதும் எழுந்தன. ஆனால், அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் ஏற்கனவே ஏற்பட்ட தோல்வியினால் துவண்டு விடாமல் விடா முயற்சியை மேற்கொண்டு சாதனை படைத்திருக்கிறார்கள் இஸ்ரோ விஞ்ஞானிகள்.

 

அவர்கள் யாருமே 48 மணி நேரமாக வீட்டுக்கே செல்ல வில்லை. 48 மணி நேரத்துக்கு முன்பாகவே அவர்கள் அனைவரையும் அந்த அறைக்குள் அழைத்து வரப்பட்டு விட்டார்கள். அந்த அறைக்கு உள்ளேயே சிறிது சிறிதாக படுக்கைகள் உள்ளன. அதில் தான் அவர்கள் படுத்திருக்கிறார்கள்.சாப்பாட்டுக்கு கூட வெளியில் செல்ல வில்லை. இப்படி இரவு பகல் பாராமல் உழைத்து தியாகம் செய்த காரணத்தால் தான் சந்திரயான் 3 திட்டத்தில் வென்று இந்தியா சாதனை படைத்திருக்கிறது.

 

எனவே விடா முயற்சி விஸ்வரூப வெற்றி.

 

 

 

 

No comments:

Post a Comment