Pages

Pages

Thursday, September 7, 2023

தீண்டாமையை ஒழித்த இஸ்லாம்

 


உலகத்தில் தோன்றிய சமயங்களில் தனித்துவம் பெற்ற சமயமாக இஸ்லாம் இருக்கிறது. தன்னிகரில்லாத ஈடுஇணையற்ற மார்க்கமாக இஸ்லாம் திகழ்கிறது. எண்ணற்ற விஷயங்களில் இஸ்லாம் மற்ற சமயங்களை விட்டும் மற்ற மதங்களை விட்டும் தனித்து விளங்குகிறது. இஸ்லாம் போதிக்கும் சமத்துவம் அதன் சிறப்பம்சங்களில் ஒன்று. நபி அவர்களை சமுதாத்தின் மிகச்சிறந்த தலைவர் என்றும் வாழ்க்கையின் மிக உயர்ந்த முன்னோடி என்றும் சமூகத்தின் ஈடுஇணையற்ற வழிகாட்டி என்றும் உலகில் அனைவரும் தங்களின் முன்மாதிரியான எடுத்துக் கொள்ள வேண்டிய மகத்தான மாமனிதர் என்றெல்லாம் புகழ்ந்துரைக்கும் பலர், அதற்குக் காரணமாக அவர்கள் குறிப்பிடும் முதன்மையான விஷயம் நபி அவர்கள் ஏற்படுத்திய சமத்துவம் தான். முஹம்மது நபியின்  இந்த மகத்தான வெற்றிக்கு முதல் காரணம் அவர்கள் கொண்டிருந்த கொள்கை உறுதியும் யாருக்காகவும் எதற்காகவும் கொள்கையில் பின்வாங்காத அந்த கொள்கைப் பிடிமானமும். இரண்டாவது காரணம் அவர்கள் போதித்த சமத்துவம் என்று எஸ். எச். லீடர் என்ற மாற்றுமத அறிஞர் குறிப்பிடுகிறார்.

இன்று பலராலும் கொண்டாடப்படும் தலைவர்களில் ஒருவரும் உலகிற்கு பல அறிய சிந்தனைகளை தந்தவருமான தந்தை பெரியார்,  உலகத்திலேயே மிகப்பெரிய கொடுமை என்பது பிறப்பால், நிறத்தால், இனத்தால், மொழியால் ஒருவனை தாழ்த்தப்பட்டவனாக, தீண்டத்தகாதவனாக பார்க்கிற தீண்டாமை தான். இது மிகப்பெரிய புற்று நோய் என்று சொன்னதோடு  இந்த நோய்க்கு ஒரே மருந்து இஸ்லாம் தான் என்று அழுத்தமாக கூறியிருக்கிறார். இஸ்லாம் சமத்துவம் போதித்த மார்க்கம். தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்த மார்க்கம் என்பதை உலகத்தில் அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

يٰۤاَيُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ ذَكَرٍ وَّاُنْثٰى وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَآٮِٕلَ لِتَعَارَفُوْا‌  اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَ تْقٰٮكُمْ‌  اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ‏

மனிதர்களே! உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரே ஆண், ஒரே பெண்ணிலிருந்துதான் படைத்தோம். பின்னர், ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளை களாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆதலால், உங்களில் ஒருவர் மற்றவரைவிட மேலென்று பெருமை பாராட்டிக் கொள்வதற் கில்லை.) எனினும், உங்களில் எவர் இறையச்சம் உடையவராக இருக்கின்றாரோ, அவர்தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் நன்கு தெரிந்தவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 49:13)

இந்த வசனத்தில் இறைவன் உலகிற்கு மூன்று அடிப்படைச் செய்திகளைக் கூறுகிறான். 1, நீங்கள் அனைவரும் ஆதம்,ஹவ்வா என்ற ஒரே ஆண் பெண்ணிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறீர்கள். உங்கள் அனைவரின் மூலக்கூறும் ஒன்று. எனவே பிறப்பால் உயர்வு தாழ்வு என்பது கிடையாது. 2, பிறப்பால் அனைவரும் ஒரே இனமாக இருந்தாலும், நீங்கள் பல சமுதாயங்களாகவும் கோத்திரங்களாகவும் பிரிந்திருப்பது ஓர் இயற்கையான விஷயம். மனித இனம் பெருகப்பெருக எண்ணற்ற குடும்பங்கள் தோன்றுவதும், பல கோத்திரங்கள் உருவாகுவதும், அதேபோன்று உடல் அமைப்பு, நிறம், மொழி, நடை உடை பாவனைகள், வாழ்க்கை முறைகள் மனிதனுக்கு மனிதன் ஒன்றுக்கொன்று மாறுபட்டதாக இருப்பதும் இயற்கையானது. இந்த இயற்கை உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று ஒருவருக்கொருவர் பாகுபடுத்திக் கொள்வதற்கு அல்ல. ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்கும் அடையாளம் கண்டு கொள்வதற்கும் தான் என்று குறிப்பிடுகிறான். 3, ஒரு மனிதனுக்கு உயர்வையும் தாழ்வையும் முடிவு செய்வது, அதை அளப்பது அவனிடம் இருக்கும் இறையச்சம் தான்.

عن حبيب بن خراش العصري المسلِمونَ أخوةٌ لا فضلَ لأحدٍ على أحدٍ إلّا بالتَّقوى

முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். இறையச்சத்தைக் கொண்டே தவிர அவர்களில் ஒருவர் இன்னொருவரை விட மேலானவர் இல்லை. (தப்ரானி ; 4/25)

இஸ்லாம் சமத்துவ மார்க்கம். தீண்டாமைக்கு எதிரான மார்க்கம். இஸ்லாத்தில் பிறப்பு வேற்றுமை இல்லை. நிற வேற்றுமை இல்லை, இன வேற்றுமை இல்லை, மொழி வேற்றுமை இல்லை. உலகில் பிறந்த அனைவரும் சமம். பிறப்பாலோ நிறத்தாலோ இனத்தாலோ மொழியாலோ ஒருவர் இன்னொருவரை விட உயரவும் முடியாது,தாழவும் முடியாது என்ற இஸ்லாத்தின் மிக உயர்ந்த கோட்பாட்டைத்தான் இந்த வசனமும் நபிமொழியும் எடுத்தியம்புகிறது.

இன்றைக்கு சனாதன தர்மம் என்று சொல்லி பிறப்பால் மனிதர்களை கூறு போட்டு பிறப்பை வைத்தே மனிதனை எடை போட்டு அவன் உயர்ந்தவன் இவன் தாழ்ந்தவன். அவன் இந்த வேலையைத் தான் செய்ய வேண்டும். இந்த இடத்திற்கு வரக்கூடாது. இங்கே நுழையக்கூடாது என்று சக மனிதர்களை தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி அவர்களை சமூகத்தை விட்டும் ஓரம் கட்டுகிற வேலையை ஒரு பிரிவினர் செய்து கொண்டிருக் கிறார்கள்.இன்று சனாதனம்  என்பது பேசுபொருளாக, பெரிய விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. கொசுவையும் டெங்குவையும் ஒழிப்பதைப் போன்று சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று ஒரு அமைச்சர் பேசினார். உடனே எங்கள் சனாதன தர்மத்தை இழிவுபடுத்தி விட்டார் என்று அவரை விடக்கூடாது. அவரின் தலையை சீவ வேண்டும் என்று கொந்தளிக்கிறார்கள்.அயோத்தியைச் சார்ந்த சாமியார் என்ற போர்வையில் இருக்கிற ஒரு ரவுடி அவரின் தலைக்கு 10 கோடியை அறிவித்தான்.சனாதனம் தொடர்பான அவதூறுகளுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று நாட்டின் பிரதமர் வேண்டுகோள் விடுத்த செய்தியை ஊடகங்களில் பார்க்க முடிந்தது.

சனாதன தர்மம் இன்றைக்கு எத்தனை வன்முறைகளையும் அநியாயங்களையும் காட்டுமிராண்டித்தனத்தையும் கட்டவிழ்த்திருக்கிறது என்பதை நாட்டில் நடக்கின்ற அவலங்களை வைத்து புரிந்து கொள்ளலாம். உபி தலைநகர் லக்னோவில் நிறைமாத கர்ப்பிணிப் பெண் வயிற்று வலியுடன் அரசு மருத்துவமனைக்கு செல்கிறார்.வலி தாங்க முடியாமல் அருகில் இருந்த ஒரு படுக்கையில் படுத்திருக்கிறார்.அது உயர் சாதி இந்துக்களுக்கான படுக்கை என்று கூறி அங்கிருந்த பெண்மனியும் மருத்துவரும் அந்தப் பெண்ணை எட்டி உதைத்ததில் அங்கேயே குழந்தை இறந்து பிறந்தது.இந்த காட்டுமிராண்டித்தனத்தைத் தான் இன்று சனாதன தர்மம் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

சனாதனத்தின் மூலமாக வேற்றுமைகளும் ஏற்றத்தாழ்வுகளும் தீண்டாமை உணர்வும் ஸ்கூல் படிக்கின்ற சிறுவர்கள் உள்ளங்களிலும் விதைக்கப்பட்டு விட்டது. நாங்குநேரியில் கடந்த மாதம் மாணவர் ஒருவரை சக மாணவர்கள் சாதிவெறியில் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதே நாங்குநேரியில் ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியின் வகுப்பறை சுவற்றில் சாதிய வன்முறையைத் தூண்டும் வாசகங்களை எழுதியற்காக 10 மற்றும் 12 படிக்கும் நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இப்படி சனாதனம் என்ற பெயரில் சாதிய வன்மம், வன்முறை, தீண்டாமை உணர்வுகள் வளர்ந்து வருகின்ற இளம் சிறார்களின் உள்ளங்களிலும் விதைக்கப்பட்டு விட்டதைப் பார்க்கின்ற போது தான் அதன் ஆபத்தையும் விபரீதத்தையும் உணர முடிகின்றது.

தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை மனித நேயமற்ற செயல் என பாடப்புத்தகத்தில் இருக்கிறது. ஆனால் அந்தப் பாடப்புத்தகங்களை படித்துக் கொடுக்கிற அதே பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கைக்கு முதன்முதலாக கேட்பது சாதிச் சான்றிதல். என்ன சாதி என்று அடையாளம் கண்ட பிறகு தான் ஒரு குழந்தை ஸ்கூலிலேயே சேர்க்கப்படுகிறது.

எல்லா மதங்களிலும் தீண்டாமை இருக்கிறது. இந்துக்கள் ஒருவன் பிறக்கின்ற போதே அவனை வகைப்படுத்தி விடுகின்றார்கள். பிரம்மா தம் முகத்திலிருந்து பிரம்மர்களையும், தோளிலிருந்து சத்திரியர்களையும், தொடையில் இருந்து வைசியர்களையும், காலிலிருந்து சூத்திரர்களையும் பிறப்பித்தார்என்று இந்துக்களின் புனித நூலாக கருதப்படுகிற மனு தர்மம் கூறுகிறது. ஒருவன் பிறக்கிற போதே இவன் உயர்ந்த பிறப்பு, இவன் நடுத்தரமான பிறப்பு, இவன் தாழ்த்தப்பட்ட பிறப்பு என்று பிரிவினையை ஏற்படுத்தி இவனுக்கு இப்டித்தான் பெயர் வைக்க வேண்டும். இவன் இன்ன தொழில் தான் செய்ய வேண்டும் என்று ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கி விடுகிறார்கள். இன்றைக்கும் தாழ்த்தப் பட்டவர்கள் என்று கருதப்படுகின்ற தலித்துகளுக்கு கோவில்களில் இடம் கிடையாது. அவர்கள் என்ன தான் அந்த மதத்தை நன்கு தெரிந்திருந்தாலும் கோவில் பூசாரியாக முடியாது.கோவில் கருவரைக்குள் செல்ல முடியாது. ரிக்,யசுர்,சாமம்,அதர்வணம் இவைகள் இந்துக்களின் நான்கு புனித வேதங்களாக கருதப்படுகிறது. ஆனால் வேத நூட்களாக கருதப்படுகின்ற இந்த நான்கையும் இந்துக்களில் அநேகம் பேர் பார்த்தது கூட கிடையாது. ஏனென்றால் அவற்றை பார்ப்பதற்கும் படிப்பதற்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. இந்துக்களில் குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே படிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. என்னால் பார்க்க முடியாதது, படிக்க முடியாதது என் வேதமாக எப்படி இருக்க முடியும் என்று இந்துக்களே வேதனைப்படும் அளவுக்கு அந்த நூட்களைப் படிப்பதில் கூட தீண்டாமை உணர்வு அவர்களிடம் இருக்கிறது. 

இதே நிலை தான் கிருத்துவ மதத்திலும் இருக்கிறது. உடையார்கள் அதிகமாக இருக்கிற கிராமத்தில் ஒரு தலித் பாதிரியாராக இருக்க முடியாது. அதையும் மீறி ஒரு தலித் பாதிரியாராக இருந்து விட்டால், உடையார் சாதியை சேர்ந்த பாதிரியாரை அழைத்து வந்து தான் திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளை நடத்துவார்கள்.

வேளாங்கண்ணி போன்ற புகழ்பெற்ற சர்ச்சுகளில் ஒரு தலித்தை பாதிரியாராக எக்காலத்திலும் நியமிக்க முடியாது. இதுவரை அப்படி இருந்ததும் இல்லை. இதைவிடக் கொடுமை என்னவென்றால், வேளாங்கண்ணி சர்ச் விழாவின் போது தலித்துகளுக்கு என்று தனியாக ஒருநாள் ஒதுக்கப்ட்டு அந்த நாள் விழாவில் தான் அவர்கள் கலந்து கொண்டாட முடியும்.

இந்த தீண்டாமை இன்று நேற்று ஏற்பட்டதல்ல. உலகில் மனிதன் தோன்றியது முதல் கொண்டு இந்த தீண்டாமை உணர்வு இருந்து கொண்டு தான் இருக்கிறது. நூஹ் நபி அலை அவர்கள் தன் சமூகத்து மக்களை தீனின் பக்கம் அழைத்த போது அம்மக்கள் சொன்ன விஷயத்தை அல்லாஹ் குர்ஆனில் பதிவு செய்திருக்கிறான்.

فَقَالَ الْمَلَاُ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ قَوْمِهٖ مَا نَرٰٮكَ اِلَّا بَشَرًا مِّثْلَنَا وَمَا نَرٰٮكَ اتَّبَعَكَ اِلَّا الَّذِيْنَ هُمْ اَرَاذِلُــنَا بَادِىَ الرَّاْىِ‌ وَمَا نَرٰى لَـكُمْ عَلَيْنَا مِنْ فَضْلٍ بَلْ نَظُنُّكُمْ كٰذِبِيْنَ‏

அதற்கு, அவரை நிராகரித்த அவருடைய மக்களின் தலைவர்கள் (அவரை நோக்கி) "நாம் உங்களை நம்மைப் போன்ற ஒரு மனிதனாகவே காண்கிறோம். அன்றி, வெளித்தோற்றத்தில் நம்மில் மிக்க இழிவானவர்களே அன்றி (கண்ணியமானவர்கள்) உங்களைப் பின்பற்றவில்லை என்பதையும் நாங்கள் அறிவோம். எங்களைவிட உங்களிடம் யாதொரு மேன்மை இருப்பதாகவும் நாங்கள் காணவில்லை. அன்றி, நீங்கள் (அனைவரும்) பொய்ய ரெனவே நாங்கள் எண்ணுகிறோம்" என்று கூறினார்கள்.(அல்குர்ஆன் : 11:27)

நாங்கள் உங்களை நெருங்காததற்குக் காரணம் உங்களைச் சுற்றிலும் இருப்பது தாழ்த்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள். மட்டுமல்ல நாங்கள் இந்த உலகத்தில் எல்லா சுகங்களையும் இன்பங்களையும் பெற்றிருக்கிறோம். எல்லா வற்றிலும் முதன்மையாக இருக்கிறோம். ஆனால் எங்களை விட்டு விட்டு தரம் தாழ்ந்த அந்த மக்களிடம் உங்கள் கொள்கை போய் இருக்கிறது என்றால் அது உண்மையான கொள்கையாக இருக்க முடியாது என்று சொன்னார்கள்.

இதே நிலை தான் நபி அவர்களின் காலத்திலும் இருந்தது. அந்த தீண்டாமை உணர்வை முற்றிலுமாக இஸ்லாம் முறியடித்தது.

قال : جاء الأقرع بن حابس التميمي وعيينة بن حصن الفزاري ، فوجدوا رسول الله - صلى الله عليه وسلم - مع صهيب وبلال وعمار وخباب قاعدا في ناس من الضعفاء من المؤمنين فلما رأوهم حول النبي - صلى الله عليه وسلم - حقروهم ، فأتوه فخلوا به ، وقالوا : إنا نريد أن تجعل لنا منك مجلسا تعرف لنا به العرب فضلنا ، فإن وفود العرب تأتيك فنستحيي أن ترانا العرب مع هذه الأعبد ، فإذا نحن جئناك فأقمهم عنا ، فإذا نحن فرغنا فاقعد معهم إن شئت . قال : " نعم " . قالوا : فاكتب لنا عليك كتابا ، قال : فدعا بالصحيفة ودعا عليا ليكتب ، ونحن قعود في ناحية ، فنزل جبريل فقال : ( ولا تطرد الذين يدعون ربهم [ بالغداة والعشي يريدون وجهه ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم من شيء فتطردهم فتكون من الظالمين ] ) فرمى رسول الله - صلى الله عليه وسلم - بالصحيفة ، ثم دعانا فأتيناه

அக்ரஃ பின் ஹாபிஸ், உயைனா பின் ஹிஸ்ன் போன்ற மக்காவின் முக்கிய தலைவர்கள் நபி அவர்களித்தில் வரும் பொழுது ஸுஹைப் ரலி, பிலால் ரலி, அம்மார் ரலி, கப்பாப் ரலி  போன்ற ஏழை ஸஹாபாக்கள் நபி அவர்களைச் சுற்றி அமர்ந்திருந்தார்கள். நபி அவர்களைச் சுற்றி மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று அன்றைக்கு கருதப்பட்ட ஏழைகள் அமர்ந்திருந்ததைப் பார்த்து அவர்கள் அதை இழிவாகக் கருதினார்கள். எனவே நபியை தனியாக அழைத்து ஊரில் எங்களுக்கென்று தனி மரியாதை இருக்கிறது. உங்களோடு மிகவும் பிற்படுத்தப்பட்ட மனிதர்கள் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு சரிக்கு சமமாக நாங்களும் அமர்ந்திருப்பதை மற்றவர்கள் பார்த்தால் அதனால் எங்கள் மரியாதை போய் விடும். எனவே அவர்களோடு அமர்வதற்கு நாங்கள் வெட்கப்படுகிறோம். எனவே நாங்கள் வரும் போது அவர்கள் உங்களோடு இருக்கக்கூடாது. நாங்கள் சென்று விட்டால் உங்களோடு அவர்களை அமர்த்திக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். நபி அவர்கள் சரி என்ற போது அதை எங்களுக்கு எழுதித் தாருங்கள் என்று அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். நபி அவர்கள் எழுதுவதற்காக அலி ரலி அவர்களை அழைத்த போது அன்ஆம் அத்தியாயத்தின் 52 வது வசனம் அருளப்பட்டது. உடனே நபி அவர்கள் எழுதுவதற்காக கொண்டு வரப்பட்ட அந்த காகிதத்தை தூக்கி எறிந்து விட்டு எங்களை அழைத்து தன்னோடு அமர வைத்தார்கள் என்று அந்த நபித்தோழர்கள் கூறுகிறார்கள். (குர்துபீ)

ஏழை ஸஹாபாக்களை புறக்கணிப்பது நபி அவர்களின் நோக்கமல்ல என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம். எப்படியாவது மக்கத்து தலைவர்களும் தீனுல் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற பேராசையில் தான் அவ்வாறு நபி அவர்கள் நடந்து கொண்டார்கள். அவ்வாறு நினைத்தார்கள். இருந்தாலும் அல்லாஹ் உடனே உணர்த்தி விட்டான். உங்களோடு இருக்கிற அந்த பலவீனமானர்களை ஒதுக்கி விட்டுத்தான் அவர்கள் ஈமான் கொள்ள வேண்டும் என்றால் அது அவசியமில்லை என்று அல்லாஹ் இந்த வசனங்கள் வழியாக உணர்த்துகிறான்.

மக்கள் அனைவரையும் எப்படியாவது ஹிதாயத்தைப் பெற்று விட வேண்டும் என்று பேராவல் கொண்டவர்கள் நபி அவர்கள்.அவர்கள் எப்படியாவது ஈமானியக் காற்றை சுவாசித்து விட வேண்டும் என்று ஆசைப்பட்டவர்கள் நபி அவர்கள். அந்த ஒரே எண்ணத்திற்காகத்தான் பல கட்டங்களில் மக்காவாசிகளுக்கு இணங்கிப் போனார்கள்.இதுவும் அதே போன்று ஒரு நிலை தான். தாழ்த்தப்பட்டவர்களுக்கு இணையாக எங்களால் உட்கார முடியாது என்ற அந்த கூற்றையும் ஏற்றுக் கொள்ள முன் வந்தார்கள். ஆனால் அல்லாஹ் வசனத்தை இறக்கி விட்டான். அவர்களை விரட்டி விட்டுத்தான் இவர்கள் இஸ்லாத்திற்கு வர வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பது தான் இந்த வசனத்தின் மறைமுகமான் பொருள்.

ஆக இஸ்லாம் எக்காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் தீண்டாமையை அனுமதித்ததில்லை.பிறப்பை வைத்து நிறத்தை வைத்து மொழியை வைத்து இனத்தை வைத்து யாரும் யாரையும் தாழ்வாக நினைப்பதையோ பேசுவதையோ என்றைக்கும் அனுமதித்ததில்லை. சொல்லப் போனால் யாரை பிற்படுத்தப்பட்டவர்கள் என்று சமூகம் கருதியதோ அவர்கள் தான் அல்லாஹ்விடத்தில் மிக உயர்ந்த ஸ்தானத்தில் இருந்தார்கள்.

زاهر بن حرام الأشجعي لما أقبل إلى بيت النبي صل الله عليه وسلم يريده في حاجه فلم يجده فمضى إلى السوق ليبيع بعض بضاعة أحضرها من الباديه يقول أنس وكان زاهر رجلا فقيرا ذميما (يعني لا مال ولا جمال) فأقبل النبي صل الله عليه وسلم إليه وهو في السوق ثم قبضه من كتفه من خلفه وجعل ينادي من يشتري العبد من يشتري العبد والناس يتلفتون وزاهر يقول من هذا الذي يبيعني ويلتفت حتى راى النبي صل الله عليه وسلم فسكن روعه وجعل يحاول ان يلصق كتفيه بالنبي صل الله عليه وسلم ثم قال: يا رسول الله تبيعوني اذن تجدني كاسدا فقال عليه الصلاة والسلام: لكنك عند الله لست بكاسد انت عند الله غالي

ஸாஹிர் இப்னு ஹராம் ரலி அவர்கள் ஒரு தேவைக்காக நபி அவர்களின் இல்லம் வருகிறார்கள். அங்கு மாநபி அவர்கள் இல்லை.   உடனே ஸாஹிர் ரலி அவர்கள் வியாபாரத்திற்காக கடைத்தெருவுக்கு திரும்பி விடுகிறார்கள். ஸாஹிர் ரலி அவர்களைப் பற்றி அனஸ் ரலி அவர்கள் குறிப்பிடும் போது,  அவர்களிடம் அழகும் இல்லை, பொருளும் இல்லை என்று கூறுகிறார்கள்.    ஸாஹிர் ரலி தன்னை தேடி வந்ததை கேள்விப்பட்ட நபி அவர்கள் கடைத் தெருவுக்கு ஸாஹிர் ரலி அவர்களை சந்திக்க வருகிறார்கள். இறைதூதர் அவர்கள் கறுப்பு நிற அடிமையான ஸாஹிர் இப்னு ஹராமை சந்தையில் கட்டியணைத்து இவரை யார் வாங்குவீர்கள்? என்ற போது, அவர் என்னை யார் வாங்குவார்கள்? நான் ஒரு செல்லாக்காசு என்று கூறினார். அப்போது நபி அவர்கள் நீ அல்லாஹ்விடத்தில் விலை கூடியவன் என்றார்கள். (அஸ்ஸுனனுல் குப்ரா ; 10/248)

حَدِّثْنِي بِأَرْجَى عَمَلٍ عَمِلْتَهُ فِي الإِسْلاَمِ، فَإِنِّي قَدْ سَمِعْتُ اللَّيْلَةَ خشفَةَ نَعْلَيْكَ بَيْنَ يَدَيَّ فِي الجَنَّةِ

நபி அவர்களுக்கு சுவனம் எடுத்துக் காட்டப்பட்ட போது ஹழ்ரத் பிலால் ரலி அவர்களின் காலடி சப்தத்தைக் கேட்டார்கள். யார் அந்த பிலால் ? கஃபாவின் மீது ஏறி பாங்கு சொல்ல அவர்களை நபியவர்கள் பணித்த போது ألم يجد محمد غير هذا الغراب الأسود இந்த கரும் காக்கையைத் தவிர முஹம்மதுக்கு ( அவர்களுக்கு) வேறு நபர் கிடைக்க வில்லையா என்று மக்காவாசிகள் கேட்டார்கள். நாங்கள் சாப்பிட்டு போட்ட எலும்புத்துண்டை எடுத்து சாப்பிடுவதற்குக் கூட தகுதியில்லாவர் என்று பிலால் ரலி அவர்களை மக்காவாசிகள் கருதினார்கள். மிகவும் கேவலமாக தீண்டத்தகாதவராக அன்றைக்கு பார்க்கப்பட்ட ஹள்ரத் பிலால் ரலி அவர்களுக்கு கிடைத்த பாக்கியம் தான் இது.

எனவே இஸ்லாம் தீண்டாமையை அடியோடு நீக்கிய மார்க்கம். தீண்டாமையை குழிதோண்டி புதைத்த மார்க்கம். தீண்டாமை உணர்வை சமூகத்திலிருந்து முற்றிலும் நீக்கி தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் மரியாதையும் கண்ணியமும் கிடைக்க வழிவகை செய்த மார்க்கம். சமூகத்தில் சனாதனம் ஒழிந்து இஸ்லாம் கற்றுத்தந்த சமத்துவம் ஓங்க அல்லாஹ் அருள் புரிவானாக!

 

4 comments:

  1. மாஷா அல்லாஹ் பாரகல்லாஹ் மௌலானா முஹம்மத் ஷமீம் அஸ்ஹரி

    ReplyDelete
  2. பாசிசமும் வஹ்ஹாபிசமும் எதிர்க்க வேண்டியவை அல்ல! வேறோடு ஒழிக்கப்பட வேண்டும்.

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ்

    ReplyDelete
  4. ماشاء الله تبارك الله

    ReplyDelete