Sunday, September 29, 2013

நன்றி செலுத்துவோம்

          நபி ஸல் அவர்கள் என்னை அதிகம் நன்றி செலுத்துபவனாக ஆக்கு என்று துஆ செய்துள்ளார்கள்.நன்றி என்பது ஒரு முஸ்லிமுக்கு இருக்க வேண்டிய சிறந்த பண்பு.நன்றி செலுத்தியதினால் ஏற்றம் பெற்ற வரலாறுகளும், நன்றி மறந்ததினால் அழிந்து போன வரலாறுகளும் குர்ஆனில் நிறையவே உண்டு. இப்ராஹீம் நபியை தேர்வு செய்தோம் என்று அல்லாஹ் சொல்லும் இடத்தில் அதற்கான காரணங்களை சொல்லும் போது அவர்களின் சிறந்த பண்புகளில் ஒன்றாக நிஃமத்துகளுக்கு நன்றி செலுத்துபவராகவும் இருந்தார் என்று நஹ்ல் சூராவில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

 إِنَّ إِبْرَاهِيمَ كَانَ أُمَّةً قَانِتًا لِلَّهِ حَنِيفًا وَلَمْ يَكُ مِنَ الْمُشْرِكِينَ (120) شَاكِرًا لِأَنْعُمِهِ اجْتَبَاهُ وَهَدَاهُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ (121) وَآَتَيْنَاهُ فِي الدُّنْيَا حَسَنَةً وَإِنَّهُ فِي الْآَخِرَةِ لَمِنَ الصَّالِحِينَ (122) 

       அதேபோன்று நன்றி மறந்த பல சமுதாயங்களை இறைவன் அழித்தும் இருக்கிறான்.எனவே நன்றி என்பது மிகவும் முக்கியமாக இருக்க வேண்டிய ஒரு பண்பாகும்.ஆனால் நன்றியுணர்வு வர வேண்டுமென்றால் நமக்கு முதலில் அல்லாஹ்வின் நினைவு வர வேண்டும்.எனவே தான் அதிகம் உன்னை நினைத்து வாழுபவனாக ஆக்கு என்றும் நபி ஸல் அவர்கள் கேட்டிருக்கிறார்கள். ஆனால் அல்லாஹ்வின் நினைவு வர வேண்டுமென்றால் நாம் முதலில் அல்லாஹ்வின் நிஃமத்துகளை புரிய வேண்டும்.

         அல்லாஹ்வின் நிஃமத்துகளை விளங்க இந்த உலகை சுற்றி வர வேண்டும் என்றோ ,வானுலகிற்கு சென்று வர வேண்டும் என்றோ அவசியமில்லை. நம்மை நாம் உற்று நோக்கினாலே நமக்கு அல்லாஹ்வின் நிஃமத்துகள் புரியும்.

         இன்றைக்கு நாம் சாப்பிடுகிறோம்.ஆனால் அந்த உணவை சக்தியாகவும்,ரத்தமாகவும் மாற்றுவது நமது உடம்புக்குள் இருக்கிற கல்லீரலும்,மண்ணீரலும் தான்.அந்த இரண்டும் இயங்கவில்லையென்றால் நாம் வாழ முடியாது.

        அதே போன்று நாம் உண்ணும் உணவு முழுவதும் சுத்தம் என்று கூற முடியாது.அசுத்தங்களும் நிறைய இருக்கும் எனவே அந்த ரத்தத்தில் உள்ள கரியமிலவாயுவை நீக்கிவிட்டு பிராணவாயுவை சேர்த்து ரத்தத்தை சுத்தப்படுத்துவது நம் உடலில் உள்ள நுரையீரல் தான்.இது அதன் வேளையை செய்ய வில்லையென்றால் நமது ரத்தத்தை சுத்தப்படுத்துவது யார்?.

       அதே போன்று அந்த ரத்தத்தை எல்லா உறுப்புகளுக்கும் அனுப்புவது நமது இதயம் தான். அது அதன் வேளையை செய்யவில்லையென்றால் நாம் வாழ முடியாது.

       மூவெப்ப மண்டலம் என்ற உறுப்புதான் நமது உடம்பில் உஷ்ணத்தை சமநிலைப்படுத்துகிறது.அது அதன் வேளையை செய்ய வில்லையென்றால் நமது உடம்பில் உஷ்ணம் சமநிலையில் இருக்காது.அப்போதும் நாம் வாழ முடியாது.

         நம் உடலில் இருக்கிற அசுத்தங்களை சிறுநீரகமும்,பெருங்குடலும் வெளியேற்றுகிறது.இவைகள் இல்லையென்றாலும் நம்மால் வாழ முடியாது. இதுவெல்லாம் எவ்வளவு பெரிய நிஃமத்துகள்.

           சாதாரணமாக நமக்கு கழிவுகள் வெளியேறுகிறதே அது நடக்கவில்லையென்றால் என்ன வாகும். இதுவே மிகப்பெரிய அருட்கொடையாகும்.ஒருவனுக்கு அவன் உடம்பில் வெளிப்படையாக எந்த உறுப்பும் வேளை செய்ய வில்லையென்றாலும் அவனுக்கு பாத்ரூம் சரியான முறையில் போனால் அதுக்காகவே அவன் ஆயுளுக்கும் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்த வேண்டும் என்று கஜ்ஜாலி இமாம் அவர்கள் கூறுகிறார்கள். 

        இப்னு சம்மாக் ரஹ் அவர்களை உபதேசம் சொல்வதற்காக ஹாரூன் ரஷீத் அவர்கள் தங்கள் அரசபைக்கு அழைத்திருப்பார்கள்.அந்த நேரம் மன்னர் அவர்கள் ஒரு சொம்பில் தண்ணீர் குடித்துக்கொண்டிருப்பார்கள்.உடனே இப்னு சம்மாக் அவர்கள் இந்த ஒரு சொம்பு தண்ணீர் உங்கள் உடம்புக்குள் செல்ல மறுத்தால் அதற்கு என்ன விலை கொடுப்பீர்கள் என்று கேட்க என் ஆட்சியின் பாதியை கொடுப்பேன் என்று மன்னர் கூறுவார்.போன தண்ணீர் திரும்பி வர வில்லையென்றால் அதற்கு என்ன விலை கொடுப்பீர்கள் என்று கேட்டபோது என் மீதி ஆட்சியையும் கொடுப்பேன் என்று மன்னர் கூறுவார் அப்போது தான் உங்கள் ஆட்சி ஒரு சொம்பு தண்ணீரை விட அர்ப்பமானது என்று இப்னு சம்மாக் அவர்கள் கூறினார்கள். எனவே ஒரு மிடர் தண்ணீர் உள்ளே செல்வதும் வெளியே வருவதும் அல்லாஹ்வின் நாட்டம் இல்லாமல் நடக்காது.அவ்வாறு செல்லக்கூடாது என்று நாடிவிட்டால் உலகத்தையே கொட்டினாலும் நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. எனவே அல்லாஹ்வின் நிஃமத்துகளை முழுமையாக நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

           நமக்கு ஏதாவது நோய் வந்து விட்டால் அல்லாஹ்வை நாம் திட்டுகிறோம். ஆனால் அந்த நோயில் கூட அல்லாஹ்வின் நிஃமத்துகளை பார்ப்பதுதான் ஒரு முஸ்லிமின் அடையாளம். 

        எனக்கு வரும் ஒவ்வொரு நோயிலும் நான்கு நிஃமத்துகள் இருப்பதை நான் பார்ப்பேன் என்று இப்னு உமர் ரலி அவர்கள் கூறுகிறார்கள். 

1.என்னை விட மோசமானவனைப்பார்த்து அவனை விட எனக்கு குறைவு தானே என்று அல்லாஹ்விற்கு ஷுக்ர் செய்வேன்.

2.அந்த நோயினால் என் தீனுக்கு எந்த குறைபாடும் ஏற்படாது எனவே அதுக்காக அல்லாஹ்விற்கு ஷுக்ர் செய்வேன்.

3.அந்த நோயில் பொருமை கொள்வேன் அந்த பொருமையைத் தந்ததற்காக ஷுக்ர் செய்வேன்.

4.அந்த நோயின் காரணமாக அல்லாஹ்விடம் நான் நன்மையை எதிர்பார்ப்பேன்.இந்த எண்ணத்தைக்கொடுத்ததற்காக அல்லாஹ்விற்கு ஷுக்ர் செய்வேன்.

       ஆக நோயிலேயே இத்தனை நிஃமத்துகள் இருக்கும் போது ஆரோக்கியத்தில் எவ்வளவு நிஃமத்துகள் இருக்கும்.இவ்வளவு அதிகமான நிஃமத்துகளைக் கொடுத்து விட்டு அல்லாஹ் அதற்காக 10 கோடியோ ,20 கோடியோ கோட்கவில்லை. அப்படியே கேட்டாலும் நம்மால் கொடுக்க முடியாது.ஆனால் அல்லாஹ் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது ஒரு 50 நிமிடத்தைத்தான் ஆம் 5நேர தொழுகைகளை மட்டும்தான் எதிர்பாக்கிறான்.ஆனால் அதைக்கூட நம்மால் கொடுக்க முடியவில்லை.அல்லாஹ் நம்மை சும்மா விடுவானா?. 

         நாம் உலக்திலே உணவு,உடை,இருப்பிடம் எல்லாம் கொடுத்து ஒரு சின்ன வேளையை ஒருவனுக்கு கொடுக்கிறோம் ஆனால் அவன் எல்லாவற்றையும் அனுபவித்துவிட்டு நாம் சொன்ன வேளையை செய்யவில்லையென்றால் நாம் சும்மா விடுவோமா. அதேபோன்று தான் அல்லாஹ்வும். 

           பொதுவாக உலக்த்திலே ஒருவர் நம்மை மிரட்டிவிட்டுப்போனால் நமக்கு தூக்கமே வராது ஆனால் என் வேதனை கடுமையானது என்று அல்லாஹ் 1400 ஆண்டுகளாக மிரட்டுகிறான்.ஆனால் நாம் யாரும் பயப்படுவதில்லை எனவே நாம் தொழுகை விஷயத்துல ரொம்ப கவனமாக இருக்க வேண்டும் வல்ல இறைவன் அருள் புரிவானாக.

No comments:

Post a Comment