அல்லாஹுத்தஆலா உலகத்தில் நம்மைப் படைத்து
நமக்கு மத்தியில் அன்பையும் இரக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறான். அன்பு இரக்கம்
என்பது நமக்கு மட்டுமல்ல உலகத்தில் இருக்கிற எல்லா ஜீவராசி களுக்கும் இருக்கிற ஒரு இயற்கைப் பண்பு. அதை
ஏற்படுத்துபவன் அல்லாஹ். நாமாக நம் உள்ளத்திலோ பிறர் உள்ளத்திலோ அன்பை விதைக்க
முடியாது.இரக்கத்தைப் புகுத்த முடியாது.
இன்றைக்கு அன்புக்கும் பாசத்திற்கும்
இலக்கணமாய் தாயைச் சொல்கிறோம்.ஆனால் அந்த தாயின் உள்ளத்தில் கூட அன்பை விதைப்பவன்
அல்லாஹ் தான். அந்த அன்பை அல்லாஹ் விதைக்க வில்லையென்றால் அந்த தாயிக்கும் பிள்ளை
மீது அன்பில்லாமல் போய் விடும். ஓரிரு வருடங்களுக்கு முன்பு சென்னையின் ஒரு
பகுதியில் இறந்த ஒரு குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. விசாரித்துப்
பார்த்ததில் அந்த குழந்தையின் தாயே அந்த குழந்தையைக் கொன்றிருக்கிறாள்.
இன்றைக்கு சாதாரணமாக வறுமைக்குப் பயந்து பெற்றக்
குழந்தையைக் கொள்வதை நாம் பார்க்கிறோம். கடுமையான வறுமை, ஏராளமான கடன்,அதனால் வாழ
வழியில்லாமல் தற்கொலைக்கு முயற்சிப்பவர்கள், அவர்கள் போய் விட்டால், அவர்களின்
குழந்தைகள் அனாதையாகி நடுத்தெருவுக்கு வந்து விடுவார்கள் என்று பயந்து குழந்தைகளைக்
கொன்று அவர்களும் தற்கொலை செய்து கொள்வதைப் பார்த்திருக்கிறோம். கல்லக்காதலுக்கு
இடையூறாக இருக்கிறது என்று சொல்லி குழந்தைகளைக் கொல்கிற இரக்கமற்ற பெண்களையும்
நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் சென்னையில் நடந்த அந்த நிகழ்வு சற்று
வித்தியாசமானது, ஏன் குழந்தையைக் கொன்றாய் என்று கேட்ட போது, என்னால பால் கொடுக்க
முடிய வில்லை, பால் கொடுத்தால் எனக்கு பயங்கரமாக வலிக்கிறது. அதனால் வேறு
வழியில்லாமல் குழந்தையைக் கொன்றேன் என்று அந்தப் பெண் சொன்னதாக ஒரு செய்தி
ஊடகங்களில் வந்தது. எனவே ஒரு தாயிக்கு குழந்தையின் மீது இரக்கம் வர வேண்டுமென்றாலும்
அதை அல்லாஹ் ஏற்படுத்தாமல் வராது.
அல்லாஹுத்தஆலா உலகத்தில் வாழுகின்ற
மனிதர்களுக்கு மத்தியில் உறவு, சொந்தம், பந்தம், நட்பு என்று பல வகையில் இணைப்பையும்
பிணைப்பையும் ஏற்படுத்தியிருக்கிறான். மனித உள்ளங்களில் அன்பை ஏற்படுத்தி அதன்
வழியே மனிதர்களுக்கு மத்தியில் அந்த இணைப்பை உருவாக்கி அதை வளர்ப்பவன் அல்லாஹ்.
மனிதர்களுக்கு மத்தியில் நாம் உறவையும்
சொந்தத்தையும் பந்தத்தையும் நட்பையும் ஏற்படுத்தி விடலாம்.ஆனால் அந்த உறவாலும் சொந்தத்தாலும்
பந்தத்தாலும் நட்பாலும் இணைந்த அந்த மக்களின் உள்ளங்களில் அன்பையும் பாசத்தையும்
பிரியத்தையும் நம்மால் ஏற்படுத்த முடியாது. நம்மால் மக்களை இணைத்து விட முடியும். ஆனால்
அவர்களின் உள்ளங்களை இணைக்க முடியாது.
உள்ளங்களை இணைப்பவன் அந்த உள்ளத்தில் அன்பையும்
பாசத்தையும் பிரியத்தை விதைப்பவன் அல்லாஹ் மட்டுமே.
لو انفقت ما في الارض جميعا ما الفت بين قلوبهم
பூமியில் உள்ள அனைத்தையும் நீங்கள்
செலவழித்தாலும் அவர்களது உள்ளங்களை உங்களை இணைக்க முடியாது. (அல்குர்ஆன் : 8 ; 63)
எனவே எத்தனை கோடிகள் கொடுத்தாலும் மனித
உள்ளங்களை ஒருபோதும் நம்மால் இணைக்க முடியாது. ஒரு தாய் என்றவுடன் மகனுக்கு
வருகின்ற அன்பு,ஒரு மகன் என்றவுடன் தாயுக்கு வருகின்ற பாசம்.இப்படியே ஒரு தந்தை, சகோதரன், சகோதரி, இவர்களுக்கு
இடையில் ஏற்படுகின்ற அந்த பிரியங்கள். இவை அனைத்தையும் உருவாக்குபவன் அல்லாஹ். அந்த வரிசையில் திருமணம் என்ற
பெயரால் இணைகின்ற கணவன் மனைவிக்கு மத்தியிலும் அல்லாஹ் தான் அன்பை
ஏற்படுத்துகிறான்.
ஒரு தாயிடமோ ஒரு தந்தையிடமோ ஒரு சகோதரனிடமோ ஒரு
சகோதரியிடமோ ஏற்படுகின்ற அந்த பிரியம் கூட ஆச்சரியம் அல்ல. ஏனென்றால் அவர்கள் ஒரே
இடத்தில் பிறந்து ஒரே இடத்தில் வாழ்ந்து ஒரே சூழ்நிலையில் வளர்ந்தவர்கள்.ஆனால் ஏதோ
இடத்தில் பிறந்து ஏதோ இடத்தில் வாழ்ந்து ஏதோ சூழ்நிலையில் வளர்ந்த ஒரு ஆணும்
பெண்ணும் இல்லறத்தில் ஒன்று சேருகின்ற போது, அந்த கணவனுக்கும் மனைவிக்கும்
மத்தியில் ஏற்படுகின்ற உண்மையான அன்பும் பாசமும் ஆச்சரியமானதும் வியப்பானதுமாகும்.
அது ஆச்சரியமாகவும் வியப்பாகவும் இருக்கிற
காரணத்தினால் தான் மனிதனைப்
படைத்தேன்,வானம் பூமியைப் படைத்தேன், பல மாறுபட்ட நிறங்களையும் மொழிகளையும்
படைத்தேன், இரவு பகலைப் படைத்தேன், இடி மின்னலைப் படைத்தேன், வானத்திலிருந்து
மழையை இறக்குகிறேன்,அந்த மழையின் மூலம் பூமியை செழிப்பாக்குகிறேன் என்று தன்
அற்புதங்களை திருமறைக்குர்ஆனில் வரிசைப்படுத்தும் இறைவன், அதன் தொடரில் திருமண
தம்பதிகளையும் அவர்களுக்குள் ஏற்படும் பிரியத்தையும் ஒரு அத்தாட்சியாக பதிவு
செய்திருக்கிறான்.
ومن ايته ان خلق لكم من انفسكم ازواجا لتسكنوا اليها وجعل بينكم مودة
ورحمة
நீங்கள் அவர்களிடம் நிம்மதி பெறுவதற்காக
உங்களிலிருந்தே மனைவிமார்களை உங்களுக்காக அவன் படைத்ததும் உங்களுக் கிடையில்
அன்பையும் இரக்கத்தையும் உருவாக்கியதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளது. (அல்குர்ஆன் : 30 ; 21)
முன்பின் அறிமுகமில்லாத முன்பின் பழக்கமில்லாத
ஒரு ஆணும் பெண்ணும் இணைந்தாலும், இணைந்த சில நாட்களிலேயே அவர்களுக்கு மத்தியில்
இனம் புரியாத அன்பும் பிரியமும் உருவாகி, இருவரும் இல்வாழ்வில் ஒன்றறக் கலந்து
ஓருயிர் ஈருடலாக மாறி விடுகிற காரணத்தினால் தான், அதை அல்லாஹ் தன் அத்தாட்சிகளில்
ஒன்றாகப் பதிவு செய்திருக்கிறான். எனவே அன்பும் இரக்கமும் இறைவனின் வல்லமையில்
கட்டுப்பட்டது.
யாருக்கு யார் மீது எப்படி அன்பு வரும் என்பது
இறைக்கு மட்டுமே தெரியும்.லைலா மஜ்னூன் வரலாறு நாம் கேள்விப்பட்டிருப்போம்.
மஜ்னூன் என்றால் பைத்தியம் என்று பொருள்.அஸலில் அவன் பெயர் மஜ்னூனல்ல, கைஸ். அந்தப்
பெண் மீது அளவு கடந்த அன்பும் எல்லையில்லாத காதலும் கொண்டு பைத்தியம் போல் நடந்து
கொண்டதினால் தான் அவனுக்கு மஜ்னூன் என்ற பெயர் வந்தது.
لما هاجت من قيس علل الحب والغرام اشفق عليه جميع الاهل ورثوا لحاله
وعرضوا علي ابيه ان يأخذه الي الكعبة ليبرأ من علته فاجابهم الي ذلك وسار ومعه
ابنه قيس فلما بلغوا الكعبة قال له تعلق باستار الكعبة وقل اللهم ارحني من حب ليلي
وازل عني هذا الجنون فقال ايها الاله الحي اني تائب اليك عن جميع الخطايا الا من
حب ليلي فاني لا اتوب
அந்தப்பெண் இன்னொருத்தனை திருமணம் செய்து
கொண்டு சென்று விட்டாள்.இருந்தாலும் மஜ்னூன் அவள் நினைவிலிருந்து மீள முடியாமல்
சாப்பிடாமல் குடிக்காமல் சட்டையைக் கிழித்துக் கொண்டு பைத்தியம் போல் நடப்பதைப்
பார்த்து அவன் உறவினர்கள் அவன் தந்தையிடம் வந்து, இவனை இப்படியே விட்டால் ரொம்ப
ஆபத்து. அதனால் கஃபதுல்லாவிற்கு அழைத்துச் சென்று வாருங்கள். அவன் திருந்தி மனம்
வருந்தி தூய்மையாகி விடுவான் என்று கூறினார்கள். அவனது தந்தையும் அவனை அங்கு
அழைத்துச் சென்று, நீ இது வரை செய்த தவறுகளுக்கெல்லாம் இறைவனிடம் மன்னிப்புக் கேள்
என்றார். அந்த நேரத்தில் அவன், யாஅல்லாஹ் நான் உன்னிடம், இது வரை செய்த அனைத்துப்
பாவங்களிலுருந்தும் தவ்பா தேடுகிறேன். ஆனால் லைலாவின் மீது நான் கொண்டிருக்கிற
பிரியத்தைத் தவிர. அதற்கு நான் தவ்பா தேட மாட்டேன் என்று கூறினான்.
எனவே ஒருவர் மீது இன்னொருவருக்கு வரும் அன்பும்
பிரியமும் எல்லையற்றது. வரையரையற்றது. எப்படியும் வரலாம். எந்த நேரத்திலும் வரலாம்.
யார் மீதும் வரலாம்.அதை உருவாக்குவது அல்லாஹ்.
இன்றைக்கு அன்புக்கு ஏங்கக்கூடிய எத்தனையோ பேரைப்
பார்க்கிறோம். காசு காசு என்று சொல்லி கணவனும் மனைவியும் வேலைக்குப் போய்
விடுகிறார்கள்.வீட்டில் பிள்ளைகள் அன்புக்கு ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.எங்கள்
பிள்ளைகளுக்கு எங்கள் மேல அன்பே இல்லை என்று கண்ணீர் வடிக்கும் எத்தனையோ
பெற்றோர்கள். என் மேல் என் கணவருக்கு அக்கரையே என்று வேதனைப்படுகிற எத்தனையோ
பெண்கள். இப்படி கிடைக்க வேண்டிய அன்பு கிடைக்காமல் ஏங்கிக் கொண்டிருக்கிற எத்தனையோ
பேரைப் பார்க்கிறோம்.
உண்மையில் ஒரு மனிதனுக்கு யாருடைய அன்பு
கிடைக்க வேண்டும். யாருடைய பிரியத்தை ஆசைப்பட வேண்டும் என்றால் யார் நம்மைப்
படைத்து நமக்கு எல்லாவற்றையும் குறைவின்றி நிறைவாகக் கொடுத்துக்
கொண்டிருக்கின்றானோ அத்தகைய இறைவனின் அன்பு நமக்கு வேண்டும். இறைவனும் அதைத்தான்
கேட்கும் படி சொன்னான்.
اللهم اني اسالك حبك وحب من يحبك وحب عمل بقربني الي حبك
யா அல்லாஹ்! உன் பிரியத்தையும் உன் அன்பர்களின்
பிரியத்தையும் உன் அன்பின் அளவில் நெருக்கி வைக்கும் அமலின் பிரியத்தையும் நான்
உன்னிடம் கேட்கிறேன் என்று நபி ﷺ
அவர்களை துஆ கேட்கும்படி
அல்லாஹ் கூறினான். (திர்மிதி ; 3235)
நபி ஸல் அவர்கள் மட்டுமல்ல இறைவனால்
அனுப்பப்பட்ட எல்லா நபிமார்களும் தங்கள் வாழ்வில் இதைத்தான் பிரதானமாக
கேட்டார்கள்.
كان من دعاء داود
يقول اللهم إني أسألك حبك وحب من يحبك والعمل الذي يبلغني حبك اللهم اجعل حبك أحب إلي
من نفسي وأهلي ومن الماء البارد
யா அல்லாஹ்! உன் பிரியத்தையும் உன் அன்பர்களின்
பிரியத்தையும் உன் அன்பை எனக்குத்தரும் அமலின் பிரியத்தையும் நான் உன்னிடம்
கேட்கிறேன்.என்னையும் என் குடும்பத்தையும் குளிர்ந்த நீரையும் விட உன் அன்பை
எனக்கு மிகப்பிரியமானதாக ஆக்கு என்பது தாவூத் நபியின் துஆவாக இருந்தது. (திர்மிதி ; 4089)
இறைவனின் பிரியம் நமக்கு வேண்டும். அவன் யாரைப்
பிரியப்படு கிறானோ அவர்களின் பிரியமும் வேண்டும். எந்த அமல்களால்
அவன் பிரியத்தை நாம் பெற முடியுமோ அந்த அமல்களின் பக்கம் தேட்டமும் நமக்கு
வேண்டும்.அது தான் நம் வாழ்வின் மிக உயர்ந்த இலட்சியமாக இருக்க வேண்டும்.அருமை
ஸஹாபாக்கள் அதைப் பெறுவதற்குத்தான் ஆசைப்பட்டார்கள்.முயற்சித்தார்கள்.
قَالَ النبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ
يَومَ خَيْبَرَ: لَأُعْطِيَنَّ الرَّايَةَ غَدًا رَجُلًا يُفْتَحُ علَى يَدَيْهِ، يُحِبُّ
اللَّهَ ورَسولَهُ، ويُحِبُّهُ اللَّهُ ورَسولُهُ، فَبَاتَ النَّاسُ لَيْلَتَهُمْ أيُّهُمْ
يُعْطَى، فَغَدَوْا كُلُّهُمْ يَرْجُوهُ،
கைபர் போரின் இரவு நபி ﷺ அவர்கள் நாளை
நான் ஒரு மனிதனின் கையில் கொடியைக் கொடுப்பேன் என்று சொன்னார்கள். அதைக் கேட்ட ஸஹாபாக்களுக்கு
அன்றிரவு முழுக்க அதே சிந்தனை. யாராக இருக்கும். யாருக்குக் கொடுப்பார்கள் என்று
இரவு முழுக்க சிந்தித்துக் கொண்டே இருக்கிறார்கள்.அத்தோடு அதை எனக்குத் தர
வேண்டும் என்று ஆசைப்படவும் செய்தார்கள்.
பொதுவாக ஸஹாபாக்கள் தலைமைக்கோ பதவிக்கோ
ஆசைப்படு பவர்களல்ல. அப்படி அவர்கள் வளர்க்கப்படவும் இல்லை. இருந்தாலும் அன்றைக்கு
அத்தனை பேரும் அந்த தலைமைக்கு ஆசைப்படுவதற்குக் காரணம் நபி ﷺ அவர்கள் சொன்ன ஒரு வார்த்தை. அதாவது,நாளை
ஒருவரின் கையில் கொடியைக் கொடுப்பேன்.அவர் எப்படிப்பட்டவ ரென்றால், அல்லாஹ்வையும்
அவனது தூதரையும் அவர் நேசிக்கிறார். அல்லாஹாவும் அவனது தூதரும் அவரை
நேசிக்கிறார்கள்.அவர் கையில் தான் அல்லாஹ் வெற்றியைத் தருவான் என்று கூறினார்கள். (புகாரி ; 3009)
தலைமை விரும்பாதவர்கள் அன்றைக்கு
விரும்பினார்கள் என்றால் நபி ﷺ
அவர்கள் சொன்ன அந்த
வார்த்தை தான்.ஸஹாபாக்கள், அல்லாஹ்வின் அன்பு கிடைக்க வேண்டும்.நாமும் அல்லாஹ்வின்
மீது அன்பு கொள்ள வேண்டும் என்று எந்தளவு
விரும்பினார்கள் என்பதற்கு இந்நிகழ்வு பொருத்தமான எடுத்துக்காட்டு.
நாமும் அல்லாஹ்விடம் அவனின் அன்பைக்
கேட்போம்.அவன் மீது அளவிலா அன்பு கொள்வோம்.
அனைவருக்கும் புரிகின்ற வகையில் அருமையான விளக்கம். தாங்கள் எல்லா வளங்களும் பெற்று நிறைவோடு பெரு வாழ்வு வாழ எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்கின்றேன்
ReplyDelete