Tuesday, June 30, 2020

நபியின் மகத்தான குடும்பம்





இஸ்லாமிய மாதங்களின் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தை நாம் அடைந்திருக்கிறோம். شهر الله  அல்லாஹுடைய மாதம் என்று மாநபி    அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட மாதம் இந்த முஹர்ரம் மாதம். வருடத்தின் இறுதி மாதமான துல்ஹஜ் மாதம் ஹள்ரத் இப்ராஹீம் அலை அவர்களையும் அவர்களையும் அவர்களின் குடும்பத்தார்களையும் நமக்கு நினைவுபடுத்துவதைப் போல வருடத்தின் முதல் மாதமான இந்த முஹர்ரம் மாதம் அண்ணல் நபி    அவர்களின் குடும்பமான அஹ்லு பைத்துகளை நமக்கு நினைவுபடுத்தும்.


أنَّ مَلَكَ المطرِ استأذَنَ ربَّه أنْ يأتيَ النَّبيَّ صلَّى اللهُ عليه وسلَّم، فأَذِنَ له، فقال لأُمِّ سَلَمةَ: أَملِكي علينا البابَ، لا يَدخُلُ علينا أحَدٌ. قال: وجاء الحُسينُ ليَدخُلَ، فمَنَعَتْهُ، فوثَبَ فدخَلَ، فجعَلَ يَقعُدُ على ظَهرِ النَّبيِّ صلَّى اللهُ عليه وسلَّم، وعلى مَنكِبِه، وعلى عاتِقِه، قال: فقال المَلِكُ للنَّبيِّ صلَّى اللهُ عليه وسلَّم: أتُحِبُّه؟ قال: نعَمْ، قال: أمَا إنَّ أُمَّتَك ستَقتُلُه، وإنْ شِئتَ أرَيْتُك المكانَ الذي يُقتَلُ به. فضرَبَ بيَدِه، فجاء بطينةٍ حَمراءَ، فأخَذَتْها أُمُّ سَلَمةَ فصَرَّتْها في خِمارها. قال: قال ثابتٌ: بلَغَنا أنَّها كَرْبَلاءُ. .
الراوي: أنس بن مالك المحدث: شعيب الأرناؤوط - المصدر: تخريج المسند - الصفحة أو الرقم: 13539
ரஹ்மத்தினுடைய வானவர் நபி     அவர்களிடம் அனுமதி பெற்று வந்தார்கள். நபி     அவர்கள் உம்மு ஸலமா ரலி அவர்களிடம் கதவை அடைத்து விடுங்கள். யாரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று சொன்னார்கள்.அப்போது நபியின் பேரர் ஹள்ரத் ஹுஸைன் ரலி அவர்கள் வந்தார்கள். அவரை தடுத்தார்கள். ஆனால் அவரோ சண்டையிட்டுக் கொண்டு உள்ளே நுழைந்து விட்டார்கள். நபியின் மடியில் வந்து அமர்ந்தார்கள். அந்த வானவர் நபியிடம் உங்கள் பேரரான இவரை நீங்கள் அதிகம் நேசிக்கிறீர்களா ? என்று கேட்டார்கள். ஆம் என்றார்கள்.ஆனால் உங்கள் சமூகமே இவரை ஒரு நேரத்தில் கொலை செய்யும். நீங்கள் விரும்பினால் அவர் கொலை செய்யப்படும் இடத்தை உங்களுக்கு காட்டுகிறேன் என்று சொல்லி அந்த இடத்தின் இரத்தம் கலந்த சிவப்பான மண்ணை எடுத்துக் காண்பித்தார்கள். (முஸ்னத் அஹ்மத் ; 13539)   

நபி    அவர்கள் ஏற்கனவே முன்னறிவிப்பு செய்ததைப் போன்றே ஹள்ரத் ஹுஸைன் ரலி அவர்கள் ஷஹீதாக்கப்பட்டார்கள். அவ்வாறு ஷஹீதாக்கப்பட்டது இந்த மாதத்தில் தான். நபியின் பேரப்பிள்ளைகளில் ஒருவரும் நபியின் அளவிலா அன்புக்கும் பாசத்திற்கும் உரித்தானவரும் நபியின் புனிதமான குடும்பத்தில் கட்டுப்பட்டவருமான ஹள்ரத் ஹுஸைன் ரலி அவர்கள் ஷஹீதாக்கப்பட்ட இந்த மாதத்தில் அண்ணல் நபி    அவர்களின் குடும்பத்தாரைக் குறித்து அந்த புனித குடும்பத்திற்கு அல்லாஹ் வழங்கியிருக்கிற மேன்மைகள் குறித்து அந்த குடும்பத்தார் விஷயத்தில் நமக்கு இருக்கிற கடமைகள் குறித்து இந்நேரத்தில் நாம் அறிந்து கொள்வது மிகப்பொறுத்தமாக இருக்கும்.

نَزَلَتْ هَذِهِ الْآيَةُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنْكُمْ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا فِي بَيْتِ أُمِّ سَلَمَةَ
நபியின் குடும்பத்தார்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கி விட அல்லாஹ்  நாடுகிறான். (அல்குர்ஆன் : 33 ; 33)

அஹ்ல பைத் என்று சொல்லப்படுகிற அண்ணல் நபி    அவர்களின் வம்சம் பரிசுத்தமானது, அல்லாஹ்வினால் பாதுகாக்கப்பட்டது. நபி    அவர்கள் எந்த வம்சத்தில் பிறந்தார்களோ அந்த வம்சமும் நபிக்கு பிறகு கியாமத் வரை நபியின் வம்சத்தில் யாரெல்லாம் இடம் பெறுகிறார்களோ அவர்கள் அத்தனை பேரும் பரிசுத்தமானவர்கள் என்பதும் தூய்மையானவர்கள் என்பதும் குர்ஆன் ஹதீஸ் கூறும் உண்மைச் செய்தி.

انْطَلَقْتُ أَنَا وَحُصَيْنُ بنُ سَبْرَةَ، وَعُمَرُ بنُ مُسْلِمٍ، إلى زَيْدِ بنِ أَرْقَمَ، فَلَمَّا جَلَسْنَا إلَيْهِ قالَ له حُصَيْنٌ: لقَدْ لَقِيتَ يا زَيْدُ خَيْرًا كَثِيرًا، رَأَيْتَ رَسولَ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ، وَسَمِعْتَ حَدِيثَهُ، وَغَزَوْتَ معهُ، وَصَلَّيْتَ خَلْفَهُ لقَدْ لَقِيتَ يا زَيْدُ خَيْرًا كَثِيرًا، حَدِّثْنَا يا زَيْدُ ما سَمِعْتَ مِن رَسولِ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ، قالَ: يا ابْنَ أَخِي وَاللَّهِ لقَدْ كَبِرَتْ سِنِّي، وَقَدُمَ عَهْدِي، وَنَسِيتُ بَعْضَ الذي كُنْتُ أَعِي مِن رَسولِ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ، فَما حَدَّثْتُكُمْ فَاقْبَلُوا، وَما لَا، فلا تُكَلِّفُونِيهِ، ثُمَّ قالَ: قَامَ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ يَوْمًا فِينَا خَطِيبًا، بمَاءٍ يُدْعَى خُمًّا بيْنَ مَكَّةَ وَالْمَدِينَةِ، فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عليه، وَوَعَظَ وَذَكَّرَ، ثُمَّ قالَ: أَمَّا بَعْدُ، أَلَا أَيُّهَا النَّاسُ فإنَّما أَنَا بَشَرٌ يُوشِكُ أَنْ يَأْتِيَ رَسولُ رَبِّي فَأُجِيبَ، وَأَنَا تَارِكٌ فِيكُمْ ثَقَلَيْنِ: أَوَّلُهُما كِتَابُ اللهِ فيه الهُدَى وَالنُّورُ فَخُذُوا بكِتَابِ اللهِ، وَاسْتَمْسِكُوا به فَحَثَّ علَى كِتَابِ اللهِ وَرَغَّبَ فِيهِ، ثُمَّ قالَ: وَأَهْلُ بَيْتي أُذَكِّرُكُمُ اللَّهَ في أَهْلِ بَيْتِي، أُذَكِّرُكُمُ اللَّهَ في أَهْلِ بَيْتِي، أُذَكِّرُكُمُ اللَّهَ في أَهْلِ بَيْتي
நான் உங்களிடம் உயர்வான இரண்டு விஷயங்களை விட்டுச் செல்கிறேன். ஒன்று அல்லாஹ்வின் வேதம்.அதில் ஒளியும் நேர்வழியும் இருக்கிறது. அந்த அல்லாஹ்வின் வேதத்தை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று அதை நபி    அவர்கள் ஆர்வப்படுத்தினார்கள்.பின்பு இன்னொரு விஷயம் எனது குடும்பத்தார்கள். என் குடும்பத்தார் விஷயத்தில் அல்லாஹ்வை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன் என்று மூன்று முறை கூறினார்கள். (முஸ்லிம் ; 2408)

நபியை நேசிப்பது போன்று நபியின் குடும்பத்தாரையும் நாம் நேசிக்க வேண்டும், நபியை மதிப்பது போன்று நபியின் குடும்பத்தாரையும் நாம் மதிக்க வேண்டும்.நபியை கண்ணியப்படுத்துவது போன்று நபியின் குடும்பத்தாரையும் நாம் கண்ணியப்படுத்த வேண்டும். நபிக்கு ஒரு களங்கம் வராமல் காப்பது போன்று நபியின் குடும்பத் தாருக்கும் எந்தக் களங்கமும் வராமல் நாம் காக்க வேண்டும்.அது தான் நாம் ஈடேற்றம் பெறுவதற்கான வழி.

ألا إن مثل أهل بيتي فيكم مثل سفينة نوح من ركبها نجا ومن تخلف عنها غرق
அறிந்து கொள்ளுங்கள் ! உங்களிடத்தில் என் குடுபத்தாருக்கு உதாரணம் நூஹ் நபியின் கப்பலைப் போன்றதாகும். அதில் பயணித்தவர் வெற்றி பெற்று விட்டார். அதில் ஏறாதவர் மூழ்கி விட்டார் (அல்ஜாமிவுஸ் ஸகீர் ; 8143)

நமக்கான வெற்றியும் தோல்வியும் ஈடேற்றமும் கைசேதமும் நபியின் குடும்பத்தார்களை வைத்துத்தான் இருக்கிறது என்பதை இந்த ஹதீஸ் நமக்கு தெளிவாக எடுத்துச் சொல்கிறது.

قل لا اسالكم عليه اجرا الا المودة في القربي
உறவுகளை நேசிப்பதை விட இதற்காக உங்களிடம் நான் எந்தக் கூலியையும் கேட்க மாடேன் என்று நபியே நீங்கள் கூறுங்கள். (அல்குர்ஆன் : 42 ; 23)
عن مجاهد, قوله: ( إِلا الْمَوَدَّةَ فِي الْقُرْبَى ) أن تتبعوني, وتصدقوني وتصلوا رحمي
உறவுகளை நேசித்தல் என்ற இந்த வசனத்தில் இடம்பெற்றுள்ள அந்த வார்த்தைக்கு ஹள்ரத் முஜாஹித் ரஹ் அவர்கள், நபியைப் பின்பற்றுவது, அவர்களை உண்மைப்படுத்துவது, அவர்களின் உறவுகளை சேர்ந்து வாழ்வது என்று விளக்கம் கூறுகிறார்கள். (தஃப்ஸீர் தப்ரீ)

பாக்கியங்களில் சிறந்த பாக்கியமாக இருக்கும் ஈமானை நாம் பெறுவதற்கும் அந்த ஈமான் படி நாம் வாழ்வதற்கும் அதில் நிலைத்திருப்பதற்கும் என்னற்ற  தியாகங் கள் புரிந்த நபி அவர்கள்,  நம்மிடம் எந்த பிரதிபலனையும்  எதிர்பார்க்கவில்லை.  என்றாலும், அவர்களின் மகத்தான தியாகத்திற்கு கூலியாகவும்  நன்றியாகவும் நாயகத்தின் குடும்பத்தை நேசிக்கும் படி   இறைவன் குர்ஆனில்  கட்டளையிட்டிருக்கிறான். எனவே அவர்களின் குடும்பத்தை நேசிக்காதவர்கள் அல்லாஹ்விடமும் நபியிடமும் நன்றியுடையவர்களாக  ஆக முடியாது என்பதை இந்த வசனத்தின் வழியே நாம் அறிந்து கொள்கிறோம்.

எனவே நபி    அவர்களை நேசிப்பதைப் போன்றே அவர்களின் பரிசுத்தமான குடும்பத்தைச் சார்ந்தவர்களாக அவர்களின் வம்சத்தைச் சார்ந்தவர்களாக யார் இருக்கிறார்களோ அவர்களையும் நாம் நேசிக்க வேண்டும். அது தான் நாம் உண்மையில் நபியை நேசிப்பதற்கான அடையாளம்.நான் நபியை வேண்டுமானால் நேசிப்பேன்.நபியின் குடும்பத்தை நேசிக்க மாட்டேன் என்று ஒருவர் சொன்னால் அவர் நபியின் மீது வைத்திருக்கும் நேசமும் அர்த்தமற்றதாகத்தான் இருக்கும்.

ஸஹாபாக்களும் சரி நம் முன்னோர்களான இமாம்களும் சரி நபி    அவர்கள் மீது அவர்கள் வைத்திருந்த பிரியத்தில் மரியாதையில் சற்றும் குறையாமல் அதற்கு நிகராக அதற்கு சமமாக அவர்களின் குடும்பத்தையும் நேசிப்பவர்களாக இருந்தார்கள். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், தன் குடும்பத்தை நேசிப்பதை விட நபியின் குடும்பத்தை நேசித்தார்கள். தன் பிள்ளைகளை பிரியப்பட்டதை விட நபியின் பிள்ளைகளை பிரியப்பட்டார்கள்.தன் சொந்த பந்தங்களுக்கு முக்கியம் தந்ததை விட நபியின் சொந்தங்களுக்கு முக்கியத்துவம் தந்தார்கள்.

وقال أبو بكر رضى الله عنه  والذى نفسي بيده لقرابة رسول الله صلى الله عليه وسلم أحب إلى أن أصل من قرابتي
அல்லாஹ்வின் மீது சத்தியமாக என் உறவுகளை சேர்ந்து வாழ்வதை விட நபியின் உறவுகளை சேர்ந்து வாழ்வது எனக்கு மிகவும் பிரியமானது என்று ஹள்ரத் அபூபக்கர் ஸித்தீக் ரலி அவர்கள் கூறினார்கள். (ஃபத்ஹுல் பாரி)

عن عمر رضي الله عنه انه دخل على فاطمة ، رضي الله عنها ، فقال : ( يا فاطمة ، والله ما رأيت أحدا أحب إلى رسول الله صلى الله عليه وسلم منك ، والله ما كان احد من الناس بعد أبيك صل الله عليه وسلم أحب إلي منك
ஹள்ரத் உமர் ரலி அவர்கள் ஹள்ரத் ஃபாத்திமா ரலி அவர்களைப் பார்த்து அல்லாஹ்வின் மீது சத்தியமாக உன்னை விட நபிக்கு மிகவும் பிரியமான யாரையும் நான் பார்த்ததில்லை.அல்லாஹ்வின் மீது சத்தியமாக உன் தந்தையான நபிக்குப் பிறகு உன்னை விட என்னிடம் மிகவும் பிரியமானவராக மக்களில் யாரும் இல்லை. (அல்முஸ்தத்ரக்)

أنهُ فرضَ لأسامةَ في ثلاثةِ آلافٍ وخمسمائةٍ، وفرض لعبدِ اللهِ بنِ عمرَ في ثلاثةِ آلافٍ، فقال عبدُ اللهِ بنِ عمرَ لأبيهِ : لمَ فضَّلتَ أسامةَ عليَّ ؟ فوالله ما سبقني إلى مشهدٍ، قال : لأنَّ زيدًا كان أحبَّ إلى رسولِ اللهِ صلَّى اللهُ عليهِ وسلَّمَ من أبيكَ، وكان أسامةُ أحبَّ إلى رسولِ اللهِ صلَّى اللهُ عليهِ وسلَّمَ منكَ، فآثرتُ حبَّ رسولِ اللهِ صلَّى اللهُ عليهِ وسلَّمَ على حُبِّي .
الراوي: عمر بن الخطاب المحدث: الترمذي - المصدر: سنن الترمذي - الصفحة أو الرقم: 3813
ஒரு நாள் ஹள்ரத் உமர் ரலி அவர்கள் பைத்துல் மால் பொருளை பங்கு வைத்துக் கொண்டிருந்தார்கள்.அந்த நேரத்தில் உஸாமா ரலி அவர்களுக்கு 3500 கொடுத்தார்கள். தனது மகனான அப்துல்லாஹ் ரலி அவர்களுக்கு 3000 கொடுத்தார்கள். அப்போது உஸாமாவை விட போர்க்களத்தில் நான் அதிகம் கலந்துள்ளேன். அப்படியிருக்க என்னை விட அவருக்கு அதிகம் கொடுத்த காரணம் என்ன? என்று அப்துல்லாஹ் ரலி அவர்கள் கேட்டார்கள். அதற்கு உமர் ரலி அவர்கள், உன் தந்தை உமரை விட உஸாமாவின் தந்தை ஜைது நபிக்கு மிகவும் பிரியமானவர். அந்த வகையில், உன்னை விட உஸாமா நபிக்கு மிகவும் பிரியமானவராக இருக்கிறார்.எனவே நான் என் பிரியத்தை விட நபியின் பிரியத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டேன் என்றார்கள். (திர்மிதி ; 3813)  

رأى أبن عباس زيد بن ثابت راكباً دابة فأخذ بركابه يقوده فقال له : زيد تنح يا بن عم رسول الله صلى الله عليه وسلم فقال له : هكذا أُمرنا أن نفعل بعلمائنا وكبرائنا فقال زيد : ارني يدك فأخرج أبن عباس يده فقبلها زيد وقال : هكذا أُمرنا أن نفعل بأهل بيت رسولنا صلى الله عليه وسلم
ஜைத் பின் ஸாபித் ரலி அவர்கள் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்த இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் அந்த வாகனத்தின் கயிற்றைப் பிடித்துக் கொண்டு சென்றார்கள். வேண்டாம் விட்டு விடுங்கள் என்று ஜைத் ரலி அவர்கள் சொன்ன போது, இவ்வாறு தான் எங்களின் அறிஞர்களிடமும் பெரியவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் கட்டளையிடப் பட்டிருக்கிறோம் என்றார்கள். உடனே ஜைத் ரலி அவர்கள் இப்னு அப்பாஸ் ரலி அவர்களின் கரத்தைப் பிடித்து அதை முத்தமிட்டார்கள். பின்பு இவ்வாறு தான் நபியின் குடும்பத்தாரோடு நடந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் கட்டளையிடப் பட்டிருக்கிறோம் என்று ஜைத் ரலி அவர்கள் சொன்னார்கள். (ஷிஃபா)

قال عبد الله حفيد الحسين اتيت عمر بن عبد العزيز في حاجة فقال لي اذا كانت لك حاجة فارسل الي او اكتب الي فاني استحيي من الله ان اراك علي بابي
ஹள்ரத் ஹுஸைன் ரலி அவர்களின் பேரர் ஹள்ரத் அப்துல்லாஹ் ரஹ் அவர்கள் உமர் பின் அப்துல் அஜீஸ் ரஹ் அவர்களை ஒரு தேவைக்காக சந்திக்க அவரின் இல்லத்திற்கு சென்றார்கள். அப்போது உமர் பின் அப்துல் அஜீஸ் ரஹ் அவர்கள், உங்களுக்கு ஏதாவது தேவை இருந்தால் என்னிடம் ஆள் அனுப்பி இருக்கலாமே அல்லது ஒரு கடிதம் எழுதி இருக்கலாமே இப்படி நீங்கள் என் வாசலில் வந்து நிற்பதைப் பார்த்து அல்லாஹ்விடம் நான் வெட்கப்படுகிறேன் என்றார்கள் (ஸுபுலுல் ஹுதா வர்ரஷாத்)

ஸஹாபாக்களும் இமாம்களும் நபியின் குடும்பத்தார்களை எந்தளவு நேசித்தார்கள் எந்தளவு மதித்தார்கள் என்பதற்கு இதுபோன்று எண்ணற்ற செய்திகளை உதாரணமாக சொல்லலாம்.

நபி    அவர்களின் குடும்பத்தாருக்கு அல்லாஹுத்தஆலா விஷேசமான தன்மைகளையும் சிறப்புக்களையும் கொடுத்திருக்கிறான் என்று புரிகிற அதே நேரத்தில் இன்னொரு விஷயமும் இங்கே கவனிக்கத்தக்கது. இன்றைய உலக நடைமுறையில் ஒரு தலைவரின்  குடும்பம் என்றால் சமூகத்தில் அவர்களுக்கு தனி அங்கீகாரம், அவர்களுக்கென்று தனி சலுகைகள் என உலகம் அவர்களை சங்கைப்படுத்தும், அவ்வாறு சங்கைப்படுத்த வேண்டும், தனி சலுகைகள் வழங்க வேண்டும் என்பது தான் அந்த தலைவர்களின் விருப்பமாகவும் இருக்கும். ஆனால்  நபி    அவர்கள் அவ்வாறு தன் குடும்பத்திற்கு தனி சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று விரும்ப வில்லை.விரும்ப வில்லை என்பது மட்டுமல்ல மற்றவர்களை விட அவர்களுக்கு  அதிகப்படியான கட்டுப்பாடுகளை யும் ஏற்படுத்தியிருந்தார்கள்.

சாமாண்ய மக்களுக்கு என்னென்ன  கடமைகளும் கட்டுப்பாடுகளும் இருந்ததோ அவை அனைத்தும் பெருமானாரின் குடும்பத்தைச் சார்ந்தவருக்கும் இருந்தது.  இதில்  எந்தச் சலுகையும் அவர்களுக்கு இல்லை. தொழுகை,நோன்பு  போன்ற வழிபாடு களிலும், திருமணம்  போன்ற சுன்னத்துகளிலும், குற்றவியல் சட்டங்களிலும் சாமாண்ய முஸ்லிமுக்கும்  நாயகத்தின்  குடும்பத்திற்கும் எந்தவேறுபாடும் இருந்த தில்லை,அதை நபி    அவர்கள் விரும்பவும் இல்லை.

لَوْ أَنَّ فَاطِمَةَ بِنْتَ مُحَمَّدٍ سَرَقَتْ لَقَطَعْتُ يَدَهَا

என் மகள் ஃபாத்திமா திருடியிருந்தால் அவளது கரத்தையும் நான் வெட்டியிருப்பேன். (முஸ்லிம் ; 1688)

أنَّ فَاطِمَةَ عَلَيْهَا السَّلَامُ اشْتَكَتْ ما تَلْقَى مِنَ الرَّحَى ممَّا تَطْحَنُ، فَبَلَغَهَا أنَّ رَسولَ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ أُتِيَ بسَبْيٍ، فأتَتْهُ تَسْأَلُهُ خَادِمًا، فَلَمْ تُوَافِقْهُ، فَذَكَرَتْ لِعَائِشَةَ، فَجَاءَ النبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ، فَذَكَرَتْ ذلكَ عَائِشَةُ له، فأتَانَا، وقدْ دَخَلْنَا مَضَاجِعَنَا، فَذَهَبْنَا لِنَقُومَ، فَقالَ: علَى مَكَانِكُمَا. حتَّى وجَدْتُ بَرْدَ قَدَمَيْهِ علَى صَدْرِي، فَقالَ: أَلَا أَدُلُّكُما علَى خَيْرٍ ممَّا سَأَلْتُمَاهُ، إذَا أَخَذْتُما مَضَاجِعَكُما فَكَبِّرَا اللَّهَ أَرْبَعًا وثَلَاثِينَ، واحْمَدَا ثَلَاثًا وثَلَاثِينَ، وسَبِّحَا ثَلَاثًا وثَلَاثِينَ، فإنَّ ذلكَ خَيْرٌ لَكُما ممَّا سَأَلْتُمَاهُ. .

அலீ(ரலி) அறிவிக்கிறார்கள் ;(என் துணைவியாரான) 'பாத்திமா அவர்கள் மாவரைக்கும் திருகையினால் தமக்கு ஏற்பட்ட வேதனையைக் குறித்து முறையிட்டார்கள். இறைத்தூதர்(  ) அவர்களிடம் சில போர்க் கைதிகள் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள் (அவர்களை நபி(  ) அவர்கள் முஸ்லிம்களிடையே பங்கிடவிருக்கிறார்கள்) என்னும் செய்தி ஃபாத்திமா(ரலி) அவர்களுக்கு எட்டியது. உடனே, அவர்கள் நபி(  ) அவர்களிடம் (அந்தப் போர்க் கைதிகளிலிருந்து) ஒரு பணியாளை (தமக்குக் கொடுக்கும்படி) கேட்கச் சென்றார்கள். ஆனால், நபி(  ) அவர்கள் வீட்டில் இல்லாததால் அவர்களை ஃபாத்திமா(ரலி) அவர்களால் அந்த நேரத்தில் சந்திக்க முடியவில்லை. எனவே, ஆயிஷா(ரலி) அவர்களிடம் (தாம் வந்த காரணத்தைக்) கூறி(விட்டுத் திரும்பி)னார்கள். பின்னர், நபி(  ) அவர்கள் வந்தவுடன் அவர்களுக்கு ஆயிஷா(ரலி) விஷயத்தைச் சொன்னார்கள். (விபரமறிந்த) நபி(  ) அவர்கள் நாங்கள் படுக்கைக்குச் சென்றுவிட்ட பின்னால் எங்களிடம் வருகை தந்தார்கள். அவர்களைக் கண்டவுடன் நாங்கள் எழுந்து நிற்க முனைந்தோம். நபி(  ) அவர்கள், '(எழுந்திருக்க வேண்டாம்.) உங்கள் இடத்திலேயே இருவரும் இருங்கள்' என்று கூறினார்கள். (பிறகு) நான் அவர்களின் பாதத்தின் குளிர்ச்சியை என் நெஞ்சின் மீது உணர்ந்தேன். (அந்த அளவிற்கு எங்கள் அருகில் வந்து அமர்ந்தார்கள்.) பின்னர், 'நீங்கள் இருவரும் என்னிடம் கேட்டதை விடச் சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது 'அல்லாஹு அக்பர் - அல்லாஹ் பெரியவன்' என்று முப்பத்து நான்கு முறையும், 'அல்ஹம்து லில்லாஹ் - புகழனைத்தும் அல்லாஹ்விற்கே' என்று முப்பத்து மூன்று முறையும், 'சுப்ஹானல்லாஹ் - அல்லாஹ் குறைகளிலிருந்து தூய்மையானவன்' என்று முப்பத்து மூன்று முறையும் சொல்லுங்கள். ஏனெனில், அது நீங்கள் இருவரும் என்னிடம் கேட்டதை விடச் சிறந்ததாகும்' என்றார்கள். (புகாரி ;3113)

இது தான் நபி    அவர்களுக்கும் உலகிலுள்ள மற்ற தலைவர்களுக்கும் உள்ள வித்தியாசம். தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி தன் பலத்தை வெளிப்படுத்தி தனக்கோ தன் குடும்பத்திற்கோ எந்த சலுகைகளும் கிடைக்க வேண்டும் என்று விரும்பியதில்லை.ஆசைப்பட்டதில்லை.இங்கே தான் மற்ற தலைவர்களிலிருந்து  மாநபி    அவர்கள் வேறுபடுகிறார்கள்.

அல்லாஹுத்தஆலா நபியைப் போலவே அவர்களின் குடும்பத்தார்களையும் நேசிக்கவும் அவர்களை மதித்து வாழவும்,அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்யவும், அவர்களைப் போன்று நம் வாழ்க்கையை அமைத்திடவும் தவ்ஃபீக் செய்வானாக.


1 comment:

  1. அல்ஹம்துலில்லாஹ்.
    அருமையான நபிமொழிகள்
    கோர்வையான தெளிவான நடையில் அற்புதமான ஜும்ஆ தொகுப்பு கட்டுரை.

    அல்லாஹ் தங்களது கல்வி ஞானத்தை மேன்மேலும் அதிகமாக்குவானாக ஆமீன்

    ReplyDelete