Monday, August 3, 2020

திருமணத்தில் பரக்கத் வேண்டுமா ?



                    (இரு வருடங்களுக்கு முன்பு பேசியது)

பரவலாக எல்லா ஊர்களிலும் எல்லா பகுதிகளிலும் திருமண விஷேசங்கள் நடந்து கொண்டிருக்கிற இவ்வேளையில் திருமணம் குறித்த மார்க்கத்தின் ஒரு சில வழிகாட்டுதலை அறிந்து கொள்ள வேண்டும்.

கணவன் மனைவியாக சேர்ந்து வாழ்கிற இந்த இல்லற வாழ்க்கையை இந்த குடும்ப அமைப்பை இறைவன் மனித சமூகத்திற்கு அமைத்துக் கொடுத்ததற்கு பல நூறு காரணங்கள் இருந்தாலும் அதில் மிக முக்கியமாக மூன்று காரணங்கள் உண்டு.முதல் காரணம் திருமணம் தீய காரியங்களைத் தடுக்கும்.

يا مَعْشَرَ الشَّبَابِ، مَنِ اسْتَطَاعَ البَاءَةَ فَلْيَتَزَوَّجْ، فإنَّه أغَضُّ لِلْبَصَرِ وأَحْصَنُ لِلْفَرْجِ،.

வாலிபக் கூட்டமே! உங்களில் யார் திருமணத்தின் காரியங்களுக்கு சக்தி பெற்றிருக் கிறாரோ அவர் திருமணம் செய்து கொள்ளட்டும். நிச்சயமாக திருமணம் பார்வையை தாழ்த்தும். மறைவிடத்தைப் பாதுகாக்கும். (புகாரி ; 5066)

திருமணம் ஒரு மனிதனின் வாழ்க்கையைத் தூய்மைப்படுத்துகிறது,பாவமான காரியங்களை விட்டும் தடுக்கிறது. திருமணம் தடுக்கிறது என்று சொல்வதை விட மனைவிமார்கள் தடுக்கிறார்கள் என்று சொல்வது மிகப் பொருத்தமாக இருக்கும். வீட்டுக்கு அடங்காதவன் ஊருக்கு அடங்குவான் என்பதெல்லாம் அன்றைய காலத்து பலமொழி, இன்றைய காலத்து நவீன பலமொழி என்னவென்றால் ஊருக்கு அடங்காதவன் மனைவிக்கு அடங்கிடுவான் என்பது. திருமணத்திற்கு முன்பு வரை ஏனோ தானோ என்று ஒழுக்கமில்லாமல் சுற்றித்திரிந்த எத்தனையோ பேர் திருமணத்துற்குப் பிறகு மனைவிக்குப் பயந்து அடங்கிப் போய் விடுகிறார்கள். திருமணத்திற்கு கால் கட்டு என்று சொல்வதற்கான அர்த்தம் இது தான்,ஆக எதோ ஒரு வகையில் மனிதனை தூய்மைப்படுத்துகிற காரணத்தினால் இஸ்லாம் திருமணம் என்ற அமைப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இரண்டாவது காரணம்,திருமணம் மனிதனை தூய்மைப்படுத்தி அவனை பரிசுத்தப்படுத்துகிற காரணத்தினால் அவன் வணக்க வழிபாடுகள் சீராகி விடும்,நம் வணக்கம் சீராக வேண்டும் என்றால் நம் வாழ்க்கையில் திருமணம் அவசியம், திருமணம் செய்யாத வரை நம் வணக்கத்தில் நம் தொழுகையில் முழுமையாக ஈடுபாடும் ஒரு உயிரோட்டமும் இருக்க முடியாது.

حُبِّبَ إليَّ من دنياكم ثلاثٌ الطِّيبُ والنساءُ وجُعِلَ قُرَّةُ عيني في الصلاة

உங்கள் உலகத்திலிருந்து எனக்கு மூன்று விஷயங்கள் பிரியமாக்கப்பட்டிருக்கிறது. நறுமனம்,மனைவிமார்கள்,என் கண் குளிரிச்சி தொழுகையில் ஆக்கப்பட்டுள்ளது. (அல்பிதாயா வன் நிஹாயா 6 ; 28)

தொழுகையில் எனக்கு கண்குளிர்ச்சி இருக்கிறது என்று சொன்ன நபிகள் பெருமானார் அவர்கள், அதற்கு முன்பு மனைவிமார்களைச் சொன்னார்கள்.நபி அவர்கள் சொன்ன, செய்த ஒவ்வொரு காரியங்களில்  எண்ணற்ற அர்த்தங்கள் ஒழிந்திருக்கும்.எண்ணற்ற உண்மைகள் மறைந்திருக்கும், தொழுகைக்கு முன்பு மனைவிமார்களைச் சொன்ன காரணம் ஒரு மனிதனுக்கு அவன் செய்கிற வணக்கங்களில், அவன் தொழுகிற தொழுகைகளில் கண் குளிர்ச்சி வர வேண்டுமென்றால் அவனுக்கு வாழ்க்கைத் துணைவி அவசியம் என்பதைத்தான் இங்கு நமக்கு சுட்டிக் காட்டுகிறார்கள்.

திருமண பந்தத்தில் நுழையாமல் மணவாழ்க்கையில் அடியெடுத்து வைக்காமல் ஒரு மனிதனின் வணக்கங்கள் முழுமை பெறாது.

قال ابن عباس لا يتم نسك الناسك حتي يتزوج

ஒரு வணக்கசாலியின் வணக்கம் அவன் திருமணம் செய்யாத வரை முழுமை பெறாது என இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

மூன்றாவது காரணம் ; திருமணம் மனிதனுக்கு நிம்மதியைப் பெற்றுத்தரும். உலகத்தில் நிம்மதியைத் தேடாதவர்கள் யாரும் இருக்க முடியாது. நவீன காலத்தில் இன்றைக்கு நம் வாழ்வில் எல்லாம் இருக்கிறது.இல்லாமல் போன ஒரே விஷயம் நிம்மதி.ஆனால் மனிதன் தேடுகிற அந்த நிம்மதி மண வாழ்வில் இருக்கிறது என்று இஸ்லாம் சொல்கிறது.

ومن ايته ان خلق لكم من انفسكم ازواجا لتسكنوا اليها

அவளிடத்தில் நீங்கள் நிம்மதி பெறுவதற்காக உங்களிலிருந்தே உங்கள் ஜோடிகளை அவன் படைத்திருப்பது அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்று. (அல்குர்ஆன் : 30 ; 21)

மனிதன் தேடுகிற மன அமைதியையும் நிம்மதியையும் அல்லாஹு இல்லறத்தில் அமைத்திருக்கிறான்.

முதல் மனிதர் நபி ஆதம் அலை அவர்களை அல்லாஹ் படைத்து அவர்களை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்து அங்கே எல்லா இன்பங்களையும் அவர்களுக்குக் கொடுத்தான். சொர்க்கத்தில் எல்லாம் இருக்கிறது,எல்லா இன்பங்களும் இருக்கிறது,எல்லா சுகங்களும் இருக்கிறது,இருந்தாலும் ஒருவகையான வெறுட்சியையும், தனிமையையும்  உணர்ந்தார்கள். அப்போது அந்த வெறுட்சியையும் தனிமையையும் போக்குவதற்குத்தான்  ஹவ்வா அலை அவர்களை அல்லாஹ் படைத்தான்,ஹவ்வாவைப் பார்த்த பிறகு தான் ஹள்ரத் ஆதம் அலை அவர்கள் உண்மையான இன்பத்தை உணர்ந்தார்கள்,மனைவியைப் பார்த்த பிறகு தான் ஹள்ரத் ஆதம் அலை அவர்களுக்கு சுவனம் கூட சுவனமாகத் தெரிந்தது என்று கூட சொல்லலாம்.

மனிதன் அழும் போது அவன்  கண்ணீரைத்  துடைக்க, சாயும் போது அவனுக்கு  தோள்  கொடுக்க, களைப்பின் போது  மடிமீது தலை வைக்க,  ஆனந்தத்தில் அணைக்க, துக்கத்தில் அரவணைக்க,  துவண்டு விடும் போது  தட்டி எழுப்ப,  திணறும் போது  யோசனை செல்லஉள்ளத்தில் கொட்டிக்கிடக்கும்  பாரச்சுமைகளை இறக்கி வைக்க  இப்படி வாழ்க்கையின்  ஏற்ற  இறக்கம் ஒவ்வொன்றிலும்  கை கொடுக்க ஓர் ஆணுக்குப்  பெண்ணின்  ஸ்பரிசம் அவசியம் தேவைப்படுகிறது.சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் ஒரு ஆணின் மொத்த சந்தோசமும் ஒரு பெண்ணிடத்தில் தான் இருக்கிறது.அதனால் தான் அல்லாஹ் ஹவ்வா அலை அவர்களைக் கொடுத்தான்.

எனவே ஒரு மனிதனுக்கு நிம்மதியும் அமைதியும் வேண்டுமென்றால் அவனுக்கு நல்ல இணை வேண்டும்.

ஆனால் திருமணத்திற்கான மிகப்பிரதானமான காரணமாக இஸ்லாம் சொல்கிற இந்த நிம்மதியும் இந்த அமைதியும் இன்றைக்கு திருமண பந்தத்தில் நுழைகிற மணவாழ்வில் அடியெடுத்து வைக்கிற தம்பதிகளிடம் இருக்கிறதா? என்பது இங்கே நாம் யோசிக்க வேண்டிய செய்தி.திருமண தம்பதிகளைப் பார்த்து بارك الله لك என்று துஆ செய்யும் படி நபி அவர்கள் கற்றுத்தந்தார்கள்,நாமும் அவ்வாறு தான் துஆ செய்கிறோம்.இருந்தாலும் எத்தனை தம்பதிகளின் வாழ்வில் இந்த பரக்கத் இருக்கிறது? இன்றைக்குள்ள பல தம்பதிகளின் வாழ்வில் அந்த நிம்மதியும் இல்லை,அமைதியும் இல்லை, பரக்கத்தும் இல்லை,

திருமணத்தில் நிம்மதி இருக்கிறது என்று இறைவன் சொல்லியிருக்கிற போது அதில் நமக்கு நிம்மதி இல்லாமல் போன காரணம் என்ன ? மணமக்களுக்கு பரக்கத் செய் என்று அத்தனை பேரும் துஆ செய்தும் அவர்களது வாழ்வில் பரக்கத் இல்லாமல் போன காரணம் என்ன ? என்று குர்ஆன் ஹதீஸ் வழியில் நாம் சிந்தித்துப் பார்த்தால் நமக்கு கிடைக்கிற ஒரே பதில் இன்றைய திருமணங்கள் இஸ்லாமிய அடிப்படையில் அமைவதில்லை.அல்லாஹ் ரசூல் காட்டித்தந்த வழிமுறைப்படி நாம் நம் திருமண வைபவங்களை அமைத்துக் கொள்வதில்லை,அல்லாஹ் ரசூலின் திருப்தியோடு நடக்கிற திருமணத்தின் வழியாக இணைகிற தம்பதிகளின் வாழ்வில் தான் பரக்கத் இருக்கும்.

أنَّ جُلَيبيبًا كان امرَأً يَدخُلُ على النِّساءِ، يَمُرُّ بهنَّ ويُلاعِبُهنَّ، فقُلتُ لامرأتي: لا يَدخُلَنَّ عليكم جُلَيبيبٌ؛ فإنَّه إنْ دَخَلَ عليكم، لأفعَلَنَّ ولأفعَلَنَّ، قال: وكانتِ الأنصارُ إذا كان لأحَدِهم أيِّمٌ لم يُزوِّجْها حتى يَعلَمَ هل للنَّبيِّ صلَّى اللهُ عليه وسلَّمَ فيها حاجةٌ أم لا، فقال رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّمَ لرَجُلٍ مِن الأنصارِ: زَوِّجْني ابنتَكَ، فقال: نَعَمْ وكَرامةً يا رسولَ اللهِ، ونُعْمَ عَيني، قال: إنِّي لستُ أُريدُها لنَفْسي، قال: فلمَن يا رسولَ اللهِ؟ قال: لجُلَيبيبٍ، قال: فقال: يا رسولَ اللهِ، أُشاوِرُ أُمَّها، فأتى أُمَّها فقال: رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّمَ يَخطُبُ ابنتَكِ، فقالتْ: نَعَمْ، ونُعمةُ عَيني، فقال: إنَّه ليس يَخطُبُها لنَفْسِه، إنَّما يَخطُبُها لجُلَيبيبٍ، فقالتْ: أجُلَيبيبٌ إنِيهِ؟ أجُلَيبيبٌ إنِيهِ؟ أجُلَيبيبٌ إنِيهِ؟ لا، لعَمرُ اللهِ لا نُزوِّجُه، فلمَّا أرادَ أنْ يَقومَ؛ لِيأتيَ رسولَ اللهِ صلَّى اللهُ عليه وسلَّمَ فيُخبِرَه بما قالتْ أُمُّها، قالتِ الجاريةُ: مَن خَطَبَني إليكم؟ فأخبَرَتْها أُمُّها، فقالتْ: أتَرُدُّونَ على رسولِ اللهِ صلَّى اللهُ عليه وسلَّمَ أمْرَه؟ ادفَعوني؛ فإنَّه لم يُضيِّعْني، فانطلَقَ أبوها إلى رسولِ اللهِ صلَّى اللهُ عليه وسلَّمَ فأخبَرَه، فقال: شَأنَكَ بها، فزَوَّجَها جُلَيبيبًا، قال: فخَرَجَ رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّمَ في غَزْوةٍ له، قال: فلمَّا أفاءَ اللهُ عليه قال لأصحابِه: هل تَفقِدونَ مِن أحَدٍ؟ قالوا: نَفقِدُ فُلانًا ونَفقِدُ فُلانًا، قال: انظُروا هل تَفقِدونَ مِن أحَدٍ؟ قالوا: لا، قال: لكنِّي أفقِدُ جُلَيبيبًا. قال: فاطلُبوه في القَتلى، قال: فطَلَبوه فوَجَدوه إلى جَنبِ سَبعةٍ قد قَتَلَهم، ثُمَّ قَتَلوه، فقالوا: يا رسولَ اللهِ، ها هو ذا إلى جَنبِ سَبعةٍ قد قَتَلَهم، ثُمَّ قَتَلوه، فأتاه النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّمَ فقام عليه فقال: قَتَلَ سَبعةً وقَتَلوه، هذا منِّي وأنا منه، هذا منِّي وأنا منه، مرَّتَينِ أو ثلاثًا، ثُمَّ وَضَعَه رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّمَ على ساعدَيْه وحَفَرَ له، ما له سَريرٌ إلَّا ساعِدا رسولِ اللهِ صلَّى اللهُ عليه وسلَّمَ، ثُمَّ وَضَعَه في قَبرِه، ولم يُذكَرْ أنَّه غَسَّلَه. قال ثابتٌ: فما كان في الأنصارِ أيِّمٌ أنفقَ منها، وحَدَّثَ إسحاقُ بنُ عبدِ اللهِ بنِ أبي طَلحةَ ثابتًا قال: هل تَعلَمُ ما دَعا لها رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّمَ؟ قال: اللَّهُمَّ صُبَّ عليها الخيرَ صَبًّا، ولا تَجعَلْ عَيشَها كَدًّا كَدًّا، قال: فما كان في الأنصارِ أيِّمٌ أنفقَ منها

 

பொதுவாக அன்ஸாரிகள் தங்கள் மகள்களை நபி அவர்களுக்கு மனமுடித்து வைக்க ஆசைப்படுவார்கள். எப்படியாவது தங்கள் மகளை பெண் கேட்டு வர மாட்டார்களா என்று எதிர் பார்ப்பார்கள். ஒரு சர்வதேசத் தலைவர், வாழ்க்கையின் அனைத்திற்கும் முன்னோடி, சுவனத்தின் வழிகாட்டி, அவர்களின் சிபாரிசின்றி யாரும் சுவனம் செல்ல முடியாது, இறைவனின் மேலான அன்பைப் பெற்றவர், இந்தளவு எண்ணிப் பார்க்க முடியாத அளவு மிக உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கிற ஒருவரை தங்களுக்கு மருமகனாக ஆக்கிக் கொள்ள யாருக்குத்தான் ஆசை இருக்காது. ஒரு நாள் ஒரு அன்ஸாரித் தோழரிடம் உங்கள் மகளை எனக்கு மனமுடித்து வைய்யுங்கள் என்று நபி அவர்கள் சொன்னார்கள்.

 அல்லாஹ்வின் தூதர் என் மகளை மணமுடிக்க விரும்புகிறாரா?’ என அவர் ஆச்சரியத்தில் திக்குமுக்காடிப் போனார். "அல்லாஹ்வின் தூதரே! எத்தகைய ஆச்சரியமும் மகிழ்ச்சியுமான செய்தி இது!. எங்களது கண்களுக்கு குளிர்ச்சியான காட்சி அமையப் போகிறது!" என்றார்."நான் தங்கள் மகளை எனக்குப் பெண் கேட்டு வரவில்லை" என்று நபி அவர்கள் சொன்னார்கள். வேறு யாருக்கு? என்று கேட்டார் அந்த அன்ஸாரி. "ஜுலைபீபுக்குத் தங்கள் மகளைப் பெண் கேட்டு வந்தேன்" என்றார்கள். அந்த பதிலைக் கேட்டவுடன் நான் என் மனைவியுடன் ஆலோசனை செய்து விட்டு சொல்கிறேன் என்றார்.ஏனென்றால் ஜுலைபீப் மதீனாவில் எந்த அடையாளமோ வசதியோ லட்சனமோ எதுவும் இல்லாதவர்.அடிமையாக இருந்து இஸ்லாத்தைத் தழுவியவர். அதனால் தான் அவர் தயங்கிக் கொண்டு அவ்வாறு கூறினார்.

அங்கே சென்று நபி அவர்கள் நம் மகளை பெண் கேட்கிறார்கள் என்ற போது நபி அவர்கள் நம் மகளைப் பெண் கேட்கிறார்களா என்று சொல்லி அந்த பெண்மனிக்கும் எல்லையற்ற மகிழ்ச்சி. இல்லை, நபியவர்கள் தாம் மணமுடித்துக் கொள்ள நம் மகள் வேண்டும் என்று கேட்கவில்லை. அவளை ஜுலைபீபுக்குப் பெண் கேட்டு வந்திருக்கிறார்கள்"

அதிர்ச்சியில் உறைந்து விட்டார் அந்தத் தாய்.. ஜுலைபீபுக்கு நம் மகளை அளிக்க முடியாது" என மறுத்து விட்டார் அந்தத் தாய். நபியவர்களிடம் செல்வதற்குத் தந்தை திரும்பியபோது, தாயின் உரையாடலைக் கேட்க நேர்ந்த மகள் அவசரமாய் வந்தார். குறுக்கிட்டார்."யார் என்னை மணமுடிக்கக் கேட்டது?" தாய் மகளிடம் அனைத்தையும் விவரித்தார்.நபியவர்களிடமிருந்து கோரிக்கை வந்துள்ளது; அதைத் தம் தாய் திட்டவட்டமாய் மறுத்துள்ளார் என்பதை அறிந்ததும் மிகுந்த குழப்பமும் வேதனையும் அடைந்தார் அந்தப் பெண்.

"அல்லாஹ்வின் தூதரிடமிருந்து வந்துள்ள கோரிக்கையை நிராகரிக்கிறீர்களா? என்ன பேசுகிறோம் என்பதை உணர்ந்துதான் பேசுகிறீர்களா? இறைத் தூதரின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள். நிச்சயமாய் நமக்கு எந்தவிதக் கேடும் வந்து சேராது" என்று அந்தப் பெண் உறுதியாக கூறினாள்.

பெற்றோர் ஒருபுறம் இருக்கட்டும். தன் கணவர் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று ஒரு பெண்ணுக்குக் கனவும் எதிர்பார்ப்பும் இருக்கும்? அப்படியெல்லாம் முழுத் தகுதியுடன் இல்லாமல் சற்றுக் கூடுதல் குறைச்சலாக மணமகன் வந்து அமைந்தாலும் பரவாயில்லை; ஏற்றுக் கொள்வதில் பிரச்சினையிருக்காது. அப்படியெல்லாம் இல்லாமல் அவலட்சணம் என்பது மட்டுமே தோற்றத் தகுதியாய் இருக்கும் ஒருவருக்கு வாழ்க்கைப்பட துணிவதற்கு அசாத்திய மனோதிடம் வேண்டும். அதையும் நபியவர்கள் சொல்லி விட்டார்கள் என்பதற்காக ஏற்றுக்கொள்வது என்பது, அடிபணிதல் என்பதன் உச்சக்கட்டம்.

தன் எதிர் பார்ப்புகளையெல்லாம் பார்க்காமல் நபியவர்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டு ஜுலைபீப் ரலி அவர்களை தன் கணவனாக ஏற்றுக் கொண்ட காரணத்தினால் நபியவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி. அவ்விருவர் வாழ்க்கையில் நலவுகளை கொட்டிக் கொடுப்பாயாக! அவர்கள் வாழ்க்கையை நெருக்கடியாக ஆக்கி விடாதே! என்று மனதார துஆ செய்தார்கள்.  

அந்த துஆவின் பிரதிபலிப்பு எவ்வாறு இருந்தது என்றால், அன்ஸாரிகளிலேயே அந்தப் பெண்மனியைப் போன்று வேறு யாரும் அதிகம் செலவு செய்திருக்க முடியாது. அந்தளவு அல்லாஹ் அவர்களது வாழ்வில் பரக்கத் செய்தான். (அஸ்ஸுனனுல் குப்ரா ; 8246)

இல்லறம் நல்லறமாக மாற வேண்டுமென்றால் அந்த இல்லறத்தில் எல்லாவிதமான வளங்களும் செழிப்புக்களும் நிறம்ப வேண்டுமென்றால் நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். நம் திருமணத்தையும் அந்த திருமணத்திற்கு பின் உண்டான வாழ்க்கையும் அல்லாஹ் ரசூலுக்கு பொறுத்தமான முறையிலும் அல்லாஹ் ரசூலுக்கு கட்டுப்படும் விதத்திலும் அமைத்துக் கொள்ள வேண்டும். 

ஆனால் நம் வீடுகளில் நடக்கிற திருமணங்கள் அல்லாஹ் ரசூலின் பொறுத்தத்தோடு நடைபெறுகிறதா என்று நம் சற்று சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

ان اعظم النكاح بركة ايسره مؤنة

திருமணத்தில் அதிகம் பரக்கத்தானது செலவு மிகக் குறைவானதாகும். (அஸ்ஸுனனுல் குப்ரா ; 9274)

நபி அவர்களது காலத்தில் திருமணங்கள் அப்படித்தான் நடந்தது,

أنَّ رسولَ اللهِ صلى الله عليه وسلم جاءته امرأة فقالت: يا رسول اللهِ إني قد وهبت نفسي لك فقامت قياما طويلا فقام رجل فقال: يا رسول اللهِ زوجنيها إن لم يكن لك بها حاجة فقال رسول اللهِ صلى الله عليه وسلم: هل عندك من شيء تصدقها إياه؟ فقال: ما عندي إلا إزاري هذا فقال رسول اللهِ صلى الله عليه وسلم: إنك إن أعطيتها إزارك جلست ولا إزار لك فالتمس شيئا قال: لا أجد شيئا قال: فالتمس ولو خاتما من حديد فالتمس فلم يجد شيئا فقال له رسول اللهِ صلى الله عليه وسلم: فهل معك من القرآن شيء؟ قال: نعم سورة كذا وسورة كذا لسور سماها فقال له رسول اللهِ صلى الله عليه وسلم: قد زوجتكها بما معك من القرآن

ஒரு பெண்மனி நபி அவர்களிடம் வந்து நான் உங்களை மனமுடிக்க விரும்புகிறேன் என்று தன் விருப்பத்தைத் தெரிவித்து நீண்ட நேரமாக அங்கே நின்று கொண்டிருந்தார்.நபியின் சபையில் ஒரு நபித்தோழர், யாரசூலல்லாஹ் உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால் அந்தப் பெண்ணை எனக்கு மனமுடித்து வைய்யுங்கள் என்று சொன்னார். மஹர் கொடுக்க உன்னிடம் என்ன இருக்கிறது என்று கேட்டார்கள். என்னிடம் இந்தக் கீழாடையைத் தவிர வேறு எதுவும் இல்லை என்றார். இதைக் கொடுத்து விட்டால் நீ அணிவதற்கு என்ன செய்வாய்? வேறு எதுவும் இருக்கிறதா என்று பார். அவர் பார்த்து விட்டு எதுவும் இல்லை என்றார்.ஒரு இரும்பு மோதிரமானாலும் பரவாயில்லை தேடிப்பார் என்றார்கள். அவர் தேடிப்பார்த்து எதுவும் கிடைக்க வில்லை என்றார். உன்னிடம் எதுவும் சூரா மனனம் இருக்கிறதா என்று கேட்டார்கள். ஆம், இந்தந்த சூரா எனக்குத் தெரியும் என்றார். உனக்குத் தெரிந்த அந்த சூராக்களை அவளுக்கு நீ கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை மஹராக வைத்து உனக்கு அவளை மனமுடித்து வைத்து விட்டேன் என்று சொல்லி அவருக்கு நபி அவர்கள் மனமுடித்து வைத்தார்கள். (அபூதாவூது ; 2111) 

أنَّ النبيَّ صَلَّى اللهُ عليه وسلَّمَ رَأَى علَى عبدِ الرَّحْمَنِ بنِ عَوْفٍ أثَرَ صُفْرَةٍ، قالَ: ما هذا؟ قالَ: إنِّي تَزَوَّجْتُ امْرَأَةً علَى وزْنِ نَواةٍ مِن ذَهَبٍ، قالَ: بارَكَ اللَّهُ لَكَ، أوْلِمْ ولو بشاةٍ.

அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் ரலி அவர்களிடம் ஒருநாள் மஞ்சள் நிற அடையாளத்தை நபி அவர்கள் பார்த்தார்கள். என்னவென்று கேட்டார்கள்.நான் ஒரு பெண்ணை மனமுடிதிருக்கிறேன் என்றார். அல்லாஹ் உனக்கு பரக்கத் செய்வானாக! ஒரு ஆட்டையாவது அறுத்து வலிமா விருந்து கொடு என்றார்கள். (புகாரி ; 5155)

ஆனால் இன்றைக்கு நம் வீடுகளில் நடக்கிற திருமணங்களில் எத்தனை திருமணம் எளிமையான முறையில் நடக்கிறது? நம் பணபலத்தையும் நம் பேங்க் பேலன்ஸையும் நம் சொத்தின் மதிப்பையும்,நம் அந்தஸ்தையும மதிப்பையும் மரியாதையும் காட்டிப் பெருமை கொள்ளும் இடமாகத்தான் இன்றைய திருமணங்கள் காட்சி தருகிறது. வசதியில்லாதவர்கள் கூட பண வலிமையை காட்டாவிட்டால் நமக்கென்ன மரியாதை என்ற போலியான பந்தாவிற்கு கடன் வாங்கி பல லட்சங்களைக்  கொட்டி கடைசியில் வாங்கிய கடனை அடைப்பதற்கு படாதபாடு படுகிற நிலைகளை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இன்றைக்கு திருமணம் என்றாலே ஆடம்பரம் என்றாகிப்போனது.

நம் நாட்டின் ஓராண்டுக்கான பட்ஜெட்டே 22 லட்சம் கோடி ரூபாய் தான். ஆனால் நம் நாட்டில் திருமணத்திற்காக மட்டும் ஓர் ஆண்டில் 1.25 லட்சம் கோடி ரூபாய் செலவழிக்கப்படுகிறது. மட்டுமல்ல இந்தத் தொகை ஒவ்வோர் ஆண்டும் 25 முதல் 30 சதவீதம் வரை அதிகரித்துக்கொண்டு செல்கிறது என்றும் அந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 

பெங்களூரில் உள்ள விவசாய அறிவியல் பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு நடத்திய ஆய்வில் அந்நகரில் நடைபெறும் திருமணங்களில் மட்டும் ஆண்டுக்கு 339 கோடி ரூபாய் மதிப்புள்ள உணவுகள் வீணடிக்கப்படுவதாகச் சொல்கிறது. அப்படி வீணாகும் உணவைக் கொண்டு இந்தியாவில் உள்ள 2 கோடியே 60 லட்சம் நபர்களுக்கு ஒருவேளை வயிராற உணவு கொடுக்க முடியும் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. அப்படியென்றால், இந்தியா முழுக்க திருமண விருந்துகளில் வீணாகும் உணவுகளைக்கொண்டு எத்தனை கோடி மக்களின் பசியைப் போக்க முடியும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்,

குறைந்த செலவில் நடத்தப்படுகிற திருமணத்தில் பரக்கத் இருக்கும் என்று மாநபி அவர்கள் சொல்லியிருக்கும் போது, இப்படி தேவையில்லாத வீண்விரயங்கள் செய்து ஆடம்பரத்தை மட்டுமே குறிக்கோலாக கொண்டு நடத்தப்படுகிற நம் திருமணங்களில் எப்படி பரக்கத் இருக்கும்.எது சத்தியமோ அதைத்தான் நபி அவர்கள் சொல்வார்கள், பேசுவார்கள். நபியின் நாவு என்றைக்கும் சத்தியத்தைத் தவிர வேறு எதையும் பேசியதில்லை என்று நம்பியவர்கள் நாம். உண்மையில் நமக்கு பரக்கத் வேண்டுமென்றால் நம் திருமணங்களில் ஆடம்பரத்தை தவிர்க்க வேண்டும் வீண்விரயங்களை தவிர்க்க வேண்டும். தேவையில்லாத அனாச்சாரங்களைத் தவிர்க்க வேண்டும்.

எண்ணற்ற சிரமங்களை மேற்கொண்டு எண்ணற்ற முயற்சிகளை மேற்கொண்டு பல்வேறு உழைப்புக்களையும் தியாகங்களையும் செய்து நம் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கிற நமக்கு அதில் இருக்கும் ஒரே நோக்கம் அவர்கள் மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் இருக்க வேண்டும்,அவர்கள் வாழ்க்கை வளமாகவும் செழிப்பாகவும் பரக்கத்தாகவும் இருக்க வேண்டும் என்பது தான்.ஆனால் நாம் செய்கிற ஆடம்பரங்களால் அவர்கள் வாழ்க்கையை நாமே கெடுத்து விடக்கூடாது.

நமக்கு நம் அந்தஸ்து முக்கியமா? நம் பிள்ளைகள் வாழ்க்கை முக்கியமா? நமக்கு நம் கவுரவம் முக்கியமா? நம் பிள்ளைகளின் வாழ்க்கை முக்கியமா? நமக்கு நம் மரியாதை முக்கியமா? நம் பிள்ளைகளின் வாழ்க்கை முக்கியமா? என்பதை நாம் தான் சிந்தித்து செயல்பட வேண்டும்.

அல்லாஹ் நம் வீட்டு திருமணங்களில் பரக்கத் செய்வானாக! ஆடம்பரமின்றி நபி அவர்கள் காட்டித்தந்த வழிமுறையில் நம் இல்லத் திருமணம் நடக்க அல்லாஹ் தவ்ஃபீக் செய்வானாக!

 

 

 




No comments:

Post a Comment