Wednesday, September 23, 2020

இஸ்லாம் கூறும் ஆரோக்கியத்தின் வழிகள்

 


இன்றைக்கு உலகில் மதங்களை கடந்து இனங்களை கடந்து மொழிகளை கடந்து வாழ்வின் ஏற்றுத்தாழ்வுகளைக் கடந்து அத்தனை பேரும் எதிர் பார்க்கிற தேடுகிற விரும்புகிற ஒரு விஷயம் இருக்கிறது என்றால் அது ஆரோக்கியமாகத் தான் இருக்கும். ஏனென்றால் இந்த கொரோனாவினால் எல்லா மதத்தவர்களும் எல்லா இனத்தவர்களும் எல்லா மொழியினரும் வாழ்வின் எல்லா நிலையில் இருப்பவர்களும் பாதிக்கப்பட்டு விட்டார்கள். எனவே இன்றைய சூழலில் உலகில் வாழக்கூடிய அனைத்து தரப்பு மக்களின் ஒரே எதிர் பார்ப்பும் தேட்டமும் இந்த நோய் நம்மை விட்டும் விலகி ஆரோக்கியம் கிடைக்கும் என்பது தான்.

மனித வாழ்வின் அஸ்திவாரமாக, ஆதாரமாக கருதப்படுகிற ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கு குர்ஆன் ஹதீஸ் வழியாக மார்க்கம் போதிக்கிற சில வழிகாட்டு நெறிமுறைகளை இன்றைக்கு இன்ஷா அல்லாஹ்  நாம் பார்க்க இருக்கிறோம்.

நோய் வராமல் தடுப்பதற்கும் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கும் இஸ்லாம் சொல்லுகிற முதலாவது வழிமுறை என்னவென்றால் நாம் அன்றாடம் சாப்பிடும் உணவு முறையை சரி செய்ய வேண்டும். இன்று தோன்றுகின்ற அதிகமான நோய்களுக்கும் உடல் உபாதைகளுக்கும் மிக முக்கியமான காரணம் உணவு முறை கெட்டுப்போனது தான் என்று இன்றைய மருத்துவம் கூறுகிறது. இஸ்லாமும் அதைத் தான் உணர்த்துகிறது.

உணவு முறையில் கவனிக்க வேண்டிய முதல் விஷயம் உணவு உட்கொள்கிற போது நன்கு மென்று விழுங்க வேண்டும். எதை சாப்பிட்டாலும் அதை அப்படியே விழுங்கி விடாமல் வாயிலேயே நல்ல அறைத்து கூழாக்கி அதற்கு பிறகு இரைப்பைக்கு அனுப்ப வேண்டும். நொருங்கத் தின்னால் நூறு வயது என்று சொல்வார்கள். அதற்கு பொருள் உணவை நல்ல மென்று சாப்பிட்டால் நோயில்லாமல் நீண்ட நாள் வாழலாம் என்பது தான். உணவின் இந்த முறை தான் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். இதற்கு மாற்றமான வழிமுறை நிச்சயம் நோய்களையும் உடல் உபாதைகளையும் ஏற்படுத்தும். உணவை செரிமானம் ஆவதற்கு அல்லாஹுத்தஆலா இரப்பையில் ஒரு அமிலத்தை சுரக்கச் செய்கிறான்.நன்கு மென்று உணவை கூழாக்கி நாம் அனுப்புகிற பொழுது அந்த உணவை மிக இலகுவாக அந்த அமிலம் செரிமானமாகி விடுகிறது. ஆனால் இன்றைக்குள்ள அவசர காலத்தில் நாம் செய்யக்கூடிய தவறு மெல்லாமல் உணவை அப்படியே விழுங்கி விடுகிறோம். இதனால் கொஞ்ச உணவை செரிமானமாக்குவற்குள் அந்த அமிலம் கரைந்து விடுகிறது. அதன் மூலம் நாம் உண்ணக்கூடிய உணவில் அதிகமான பகுதி சரியாக செரிமானமாகி இரத்தமாக மாறி உடலுக்கு ஆற்றலைத் தருவதற்குப் பதிலாக அவை அனைத்தும் கழிவுகளாக உடலில் தங்கி நோய்கள் ஏற்பட காரணமாக அமைந்து விடுகிறது.

மக்கள் நலனில் அக்கரை செலுத்துகிற அத்தனை மருத்துவர்களும் சொல்லும் செயதி என்னவென்றால், உண்ணுகிற உணவு செரிமானம் ஆகி விட்டால் எந்தப் பிரச்சனையும் இல்லை. செரிமானம் ஆக வில்லையென்றால் எல்லா பிரச்சனை களும் வந்து விடும் என்று சொல்கிறார்கள்.

قال كعب بن مالك رايت رسول الله ياكل بثلاث اصابع فاذا فرغ لعقها

நபி அவர்கள் மூன்று விரல்களால் சாப்பிடுவதையும் சாப்பிட்ட பிறகு விரல்களை சூப்புவதையும் நான் பார்த்தேன் என கஃப் பின் மாலிக் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் : 2032)

இதுவரை சொல்லி வருகிற உணவு முறையை இந்த ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். மூன்று விரல்களால் சாப்பிடுகிற போது கொஞ்ச உணவைத்தான் எடுக்க முடியும்.அந்த கொஞ்ச உணவு வாயிலேயே நல்ல அறைத்து கூழாக்கப்பட்டு இரைப்பைக்கு செல்லும். அதனால் உணவு நன்கு செரிமானம் ஆகி ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். இந்த உணவு முறையைத் தான் நபி அவர்கள் மூன்று விரல்களால் சாப்பிடுவதின் மூலம் நமக்கு கற்றுத் தந்திருக்கிறார்கள்.

அடுத்து, பசித்த பிறகு சாப்பிட வேண்டும். வயிற்றில் கொஞ்சம் இடம் காலியாக இருக்கிற பொழுது உணவை நிறுத்தி கொள்ள வேண்டும். வயிற்றை என்றைக்கும் நிறைக்கக் கூடாது. நமக்கு வருகின்ற அதிகமான நோய்களுக்கு இதுவும் காரணம். மார்க்கம் இதை நமக்கு தெளிவாகவே உணர்த்தியிருக்கிறது.

மன்னர் ஹாரூன் ரஷீதைப் பற்றி நமக்கு நன்றாக தெரியும். ஐந்தாவது அப்பாஸிய கலீஃபா. ஹிஜ்ரி 140 – 190 இடையில் வாழ்ந்தவர். நேர்வழி பெற்ற, மக்களுக்கு பயனுள்ள மிகச்சிறந்த ஆட்சியைத் தந்தவர். அவருடைய சபை என்றைக்கும் அறிஞர்கள் நிறைந்த சபையாக ஆலிம்கள் நிறைந்த சபையாக இருக்கும். ஆலிம்களுக்கும் அறிஞர்களுக்கும் மரியாதை செய்வதில், அவர்களது கூற்றுக்கு வழிப்படுவதில் தன்னிகரில்லாதவராக விளங்கியவர். அவரது சபையில் நடந்த எண்ணற்ற நிகழ்வுகள் இன்றைக்கும் முஸ்லிம் சமூகத்திற்கு பயனுள்ளதாக இருப்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது.

 

وقد روي، تعليقاً على الآية {وكُلُواْ وَاشْرَبُواْ وَلاَ تُسْرِفُواْ} «أن الرشيد كان له طبيب نصرانيٌ حاذقٌ، فقال ذات يوم لعلي بن الحسين بن واقد: ليس في كتابكم من علم الطب شيء، والعلم علمان: علم الأديان وعلم الأبدان! فقال له علي: قد جمع الله الطب كله في نصف آية من كتابه، وهو قوله: {وكُلُواْ وَاشْرَبُواْ وَلاَ تُسْرِفُواْ} وجمع نبينا(ص) الطب في قوله: المعدة بيت الداء والحمية رأس كل دواء، وأعطِ كل بدن ما عوّدته، فقال الطبيب: ما ترك كتابكم ولا نبيكم لجالينوس طبّاً»[16] 

உங்கள் வேத்ததில் மருத்துவ மூல விதி எதுவும் கூறப்பட்டுள்ளதா ?  என்று கலீபா ஹாரூன் ரஷீது பாதுஷாவின் சபையில் இருந்த அறிஞர் அலி பின் ஹுஸைன் அல்வாகிதி அவர்களிடம்  கிருத்துவ மருத்துவர் ஒருவர் கேட்டார்.  அலி இப்னு ஹுஸைன் அல்வாகிதீ அவர்கள், ஒட்டுமொத்த மருத்துவத்தின் அடிப்படையையும் அல்லாஹ் குர்ஆனிலுள்ள ஒரு வரியில்  கூறியிருக்கிறான்  என்றார். "அது என்னவென்று கேட்ட போது

உண்ணுங்கள் பருகுங்கள் அளவு கடந்து விடாதீர்கள்.” (அல்குர்ஆன் : 7 ; 31) என்ற வசனத்தை சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று ஒட்டுமொத்த மருத்துவத்தின் அடிப்படையையும் நபி அவர்கள்,  “இரைப்பை தான்  எல்லா வியாதிகளுக்கும் அடிப்படை. நீங்கள் உங்களின் உடலுக்கு எது தேவையோ அதைக் கொடுங்கள். பத்தியம் சிகிச்சையை விட மேலானது.” என்ற ஹதீஸில் கூறியிருக்கிறார்கள் என்பதை சுட்டிக் காட்டினார்.  இதைக்கேட்டு அதிசயித்துப் போன அந்த மருத்துவ அறிஞர், உங்களுடைய வேதமும் உங்களுடைய நபியும் மருத்துவ மேதை  ஜாலினூஸுக்கு எதையும் விட்டு வைக்க வில்லை எனக் கூறி வியந்தார். (தஃப்ஸீர் குர்துபீ)

அதே ஹாரூன் ரஷீது பாதுஷாவின் சபையில் இன்னொரு நிகழ்வு  ;

حكى أن الرشيد جمع أربعة أطباء هندي ورومي وعراقي وسوادي وقال ليصف كل واحد منكم الدواء الذي لا داء فيه فقال الهندي الدواء الذي لا داء فيه عندي هو الإهليلج الأسود وقال العراقي هو حب الرشاد الأبيض وقال الرومي هو عندي الماء الحار وقال السوادي وكان أعلمهم الإهليلج يعفص المعدة وهذا داء وحب الرشاد يزلق المعدة وهذا داء والماء الحار يرخي المعدة وهذا داء قالوا فما عندك فقال الدواء الذي لا داء معه عندي أن لا تأكل الطعام حتى تشتهيه وأن ترفع يدك عنه وأنت تشتهيه فقالوا صدقت

மன்னர் ஹாரூன் ரஷீது பாதுஷா அவர்கள் தன் நாட்டிலுள்ள மிக முக்கியமான பிரசித்தி பெற்ற மருத்துவர்களை அழைத்து நோயில்லாத மருத்துவம் எது? அதாவது எந்த மருந்தை எடுத்துக் கொண்டாலும் அது, அந்த நோயை குணப்படுத்தி விட்டு இன்னொரு நோயை உற்பத்தி செய்து விடும். இவ்வாறில்லாமல் பின்விளைவு இல்லாத மருத்துவம் எது ? என்று கேட்டார்கள். அவையில் வீற்றிருந்த மருத்துவர்கள் ஒவ்வொருவரும் ஒரு மருந்தைச் சொன்னார்கள். அதில் ஒரு மருத்துவ அறிஞர், அவர்கள் குறிப்பிட்ட ஒவ்வொரு மருந்திலும் இன்னன்ன பாதிப்பு இருக்கிறது என்று குறிப்பிட்டார். அப்படியென்றால் உங்களிடம் மிகச்சிறந்த மருத்துவம் எது  என்று கேட்டார்கள்.  உணவின் தேட்டம் வரும் வரை உணவை உட்கொள்ளக் கூடாது. உணவின் தேட்டம் கொஞ்சம் இருக்கும் போதே உணவிலிருந்து கையை எடுத்து விட வேண்டும். இது தான் பின்விளைவு இல்லாத மருத்துவம் என்று சொன்ன போது அவையினர் அனைவராலும் அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. (இஹ்யாவு உலூமித்தீன்)

வயிறு தான் எல்லா நோயுக்கும் காரணம். பத்தியம் தான் எல்லா நோயுக்கும் மருந்து என்பதை மன்னர் ஹாரூன் ரஷீதின் சபையில் நடைபெற்ற இந்த நிகழ்விலும் பார்க்க முடிகிறது.

எனவே ஆரோக்கியமான உணவு முறை என்பது பசி எடுத்த பிறகு சாப்பிட வேண்டும். கொஞ்சம் பசி இருக்கிற போதே உணவிலிருந்து கையை எடுத்து விட வேண்டும. அதேபோன்று ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். நச்சுத்தன்மை இல்லாத உணவுகளை, கலப்படமில்லாத உணவுகளை, கெமிக்கல் இல்லாத உணவுகளை, உடலுக்கு கெடுதி இல்லாத உணவுகளை, அதிலும் குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் நம் உணவு உண்ணும் முறை சீர் செய்யப்பட வேண்டும்.

ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும் நோய் வராமல் நம்மை தற்காத்துக் கொள்வதற்கும் நாம் செய்ய வேண்டிய இரண்டாவது விஷயம் உடற்பயிற்சி. இன்றைக்கு நம்மிடமிருந்து காணாமல் போன விஷயம் இது தான். பொருளாதாரத்தை மையமாகக் கொண்டு செயல்படக்கூடிய இந்த நவீன யுகத்தில் உடற்பயிற்சி செய்வதற்கு நமக்கு நேரமே இல்லாமல் போனது. பொருளாதாரத்தை தேடுகிற அவசரத்தில் உடல் நலத்தை நாம்  மறந்து விடுகிறோம். வாழ்க்கைக்கு பொருளாதாரம் அவசியம் தான். ஆனால் அந்த பொருளாதாரத்தை அனுபவிப் பதற்கு உடல்  நலம் மிக மிக அவசியம் என்பதை நாம்  நினைவில் கொள்ள வேண்டும். நபி அவர்கள் வாழ்வில் இதற்கும் வழிகாட்டுதல் உண்டு.

خَرَجتُ مع النبيِّ صلَّى اللهُ عليه وسلَّمَ في بَعضِ أسْفارِه وأنا جاريةٌ لم أحمِلِ اللَّحمَ ولم أبْدُنْ، فقال للناسِ: تَقَدَّموا؛ فتَقَدَّموا، ثم قال لي: تعالَيْ حتى أُسابِقَكِ، فسابَقْتُه فسَبَقْتُه، فسَكَتَ عنِّي، حتى إذا حَمَلتُ اللَّحمَ وبَدُنتُ ونَسيتُ، خَرَجتُ معه في بَعضِ أسْفارِه، فقال للناسِ: تَقَدَّموا؛ فتَقَدَّموا، ثم قال: تعالَيْ حتى أُسابِقَكِ فسابَقْتُه، فسَبَقَني، فجعَلَ يَضحَكُ، وهو يقولُ: هذه بتلك

அன்னை ஆயிஷா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள் ; நபி அவர்களோடு நான் ஒரு பயணத்தில் இருந்தேன். என்னை அழைத்து, "நம் இருவருக்கும் பந்தயம் வைக்கலாம்" என்றார்கள். அவர்களோடு ஓடினேன். பந்தயத்தில் நான் அவர்களை முந்தி விட்டேன். நபி அவர்கள் அமைதியானார்கள். பின்னர், சில காலத்தில் எனக்கு சதை போட்டு உடல் கொஞ்சம் கனத்து விட்டது.நடந்த பந்தய நிகழ்ச்சியை நான் மறந்து விட்டேன். இன்னொரு பயணத்தில் மக்கள் ஓடினர். அண்ணல் நபி என்னை அழைத்து, "உன்னோடு ஓடுகிறேன்" என்றார்கள். எனவே, நான் அவர்களோடு ஓட்டப் பந்தயத்தில் ஓடினேன். ஆனால், இந்தமுறை என்னை முந்தி விட்டு, சிரித்துக்கொண்டே "இது, இதற்கு முன்னால் உன்னிடம் தோற்றதற்குச்  பகரமாகி விட்டது" என்றார்கள். (அபூதாவூது : 2578)

அவர்கள் மட்டுமல்ல வளர்ந்து வருகிற இளம் சமூகத்தையும் அதற்கு ஊக்கப் படுத்தினார்கள்.

كان رسولُ اللهِ صلَّى اللهُ عليهِ وسلَّمَ يَصُفُّ عبدَ اللهِ وعبيدِ اللهِ وكُثَيَّرًا بني العباسِ ثم يقولُ : من سبقَ إليَّ فلَهُ كذا وكذا قال : فيستبقون إليهِ فيقعون على ظهرِهِ وصدرِهِ فيُقبِّلهم ويَلزمهم

நபி அவர்கள் ஒரு நாள் அப்பாஸ் ரலி அவர்களின் பிள்ளைகளான அப்துல்லாஹ், உபைதுல்லாஹ், குஸைய்யர் ஆகியோரை வரிசையாக நிற்க வைத்து, உங்களில் யார் என் பக்கம் முதலில் வருகிறீரோ அவருக்கு இன்ன பரிசு இருக்கிறது என்றார்கள். அவர்கள் அனைவரும் ஓடி வந்து நபியின் முதுகிலும் மார்பிலும் ஏறிக் கொண்டார்கள். நபி அவர்கள் அவர்களை முத்தமிட்டு அணைத்துக் கொண்டார்கள். (முஸ்னது அஹ்மது : 3/248)

நபி  அவர்கள் வாழ்வில் எத்தனையோ பணிகள் இருந்தும்  சுமைகள் இருந்தும் பொருப்புக்கள் இருந்தும் சமூகத்திற்கான  கடமைகள் இருந்தும் தன்  குடும்பத்தோடும் சிறு பிள்ளைகளோடும் கழிப்பதற்கும், தன் உடல் நலத்தை பேணுவதற்கும் நேரம் இருந்திருக்கிறது என்பதை இந்த இரு நிகழ்வுகளின் வழியே நாம் அறிந்து கொள்கிறோம். எனவே உடல் நலத்தைப் பேணுவதிலும் நாம் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்.

அதேபோன்று மிக முக்கியமாக நோய்கள் பரவிக்கொண்டிருக்கிற, நோய்களால் எண்ணற்றவர்கள் மரணித்துக் கொண்டிருக்கிற இவ்வேளையில் நமக்கு கொஞ்சம் விழிப்புணர்வும் தேவை. விழிப்புணர்வு என்றால், ஏதாவது நோய்கள் வருகிற பொழுது, அதிலும் குறிப்பாக காய்ச்சல் வருகிற போது முடிந்த வரை நாம் வெளியே வராமல், மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டிலேயே நம்மை நாம் தனிமைப்படுத்திக் கொண்டு அதை குணப்படுத்துவதற்கு முயற்சிக்க வேண்டும். ஏனென்றால்  இன்றைக்கு அதிகமான மக்கள் சொல்லக்கூடிய செய்தி என்னவென்றால், கொஞ்சம் அவசரப்பட்டு விட்டேன், விவரம் இல்லாமல் செய்து விட்டேன். மருத்துவமனையில் சேர்க்காமல் வீட்டிலேயே வைத்திருந்தால் என் அத்தாவை காப்பாத்தியிருப்பேன், என் அம்மாவை காப்பாத்தியிருப்பேன் என்று. மருத்துவமனைகளையும் அங்கு பணி செய்யக்கூடிய மருத்துவர்களையும் குறை சொல்வதற்கு வர வில்லை. இந்த மோசமான சூழ்நிலைகளிலும் தன் உடல்நிலை பாராமல் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய அவர்களை பாராட்ட வேண்டும்.நான் சொல்ல வரும் செய்தி என்னவென்றால், இன்றைக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு அதனால் இறந்தவர்களை விட அச்சத்தாலும் பயத்தாலும் இறந்து போனவர்கள் தான் அதிகம். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்குள்ள நிலைகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, அட்டாக் ஏற்பட்டு அதனால் இறந்து போனவர்கள் தான் அதிகம். எனவே அதிக விழிப்புணர்வோடு செயல்பட வேண்டிய கடமை நமக்கிருக்கிறது.

இதுபோன்ற வழிமுறைகளை நாம் பின்பற்றினால் நோய்களிலிருந்து நாம் பாதுகாப்பைப் பெறலாம், நம் உடல் நலத்தைக் காக்கலாம். அல்லாஹ் அருள் புரிவானாக.

 

 


No comments:

Post a Comment