Thursday, September 30, 2021

ஹதீீஸ் எண் 31 انما االصبر عند الصدمة الاوولي

 

عَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: مَرَّ النَّبيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بامرأةٍ تَبكي عِنْدَ قَبْرٍ، فَقَالَ: «اتَّقِي اللهَ وَاصْبِري»، فَقَالَتْ: إِلَيْكَ عَنِّي؛ فإِنَّكَ لَمْ تُصَبْ بِمُصِيبَتِي، وَلَمْ تَعْرِفْهُ، فَقِيلَ لَهَا: إِنَّه النَّبيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَتَتْ بَابَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ تَجِدْ عِنْدَهُ بَوَّابينَ، فَقَالَتْ: لَمْ أَعْرِفكَ، فَقَالَ: «إِنَّمَا الصَّبْرُ عِنْدَ الصَّدْمَةِ الْأُولَى»[1]؛ متفق عليه

மண்ணரை அருகே அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணை கடந்து சென்ற நபி ஸல் அவர்கள், அல்லாஹ்வைப் பயந்து கொள். நீ பொறுமையாக இரு என்று கூறினார்கள். அதற்கு அப்பெண் என்னை விட்டு நீங்கள் செல்லுங்கள். எனது சோதனை போல் நீங்கள் சோதிக்கப் படவில்லை. அதை நீங்கள் அறிய மாட்டீர்கள் என்று கூறினாள. இவர்கள் நபி ஸல் அவர்கள் என்று அப்பெண்ணிடம் கூறப்பட்டது. உடனே அப்பெண்மனி நபி ஸல் அவர்களின் வீட்டு வாசலுக்கு வந்தாள். அந்த இடத்தில் காவலாளி எவருமில்லை. நான் உங்களை அறிய வில்லை என்று கூறினாள். அப்போது நபியவர்கள் பொறுமை என்பது கஷ்டத்தின் ஆரம்பத்திலேயே இருக்க வேண்டும் என்று கூறினார்கள். (புகாரி ; 1252)

இந்த ஹதீஸில் அப்பெண்மனியுடைய பிரியமான மகன் இறந்து போய் அவனை அடக்கம் செய்யப்பட்டு விட்டது. மகனுடைய பிரிவைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவனுடைய ஞாபகத்தில் அவனுடைய கப்ருக்கு அருகில் நின்று அழுது கொண்டிருந்த அப்பெண்ணைப் பார்த்து பொறுமையாக இரு என்று நபியவர்கள் கூறிய போது, எனக்கு ஏற்பட்ட சோதனை உங்களுக்கு ஏற்பட வில்லை என்று கூறினாள், அதற்கு பொருள் என்னவென்றால், எனக்கு நடந்த மாதிரி உங்களுக்கு நடந்தால் என்னுடைய வேதனை உங்களுக்கு தெரியும் என்று நாம் சாதாரணமாக ஒருவரைப் பார்த்து சொல்வதைப் போன்று அப்பெண்மனி நபியைப் பார்த்து கூறி விட்டாள்.

وَلَمْ تَعْرِفْهُ

வந்தது நபி என்று தெரியாதனால் தான் அப்பெண்மணி அந்த வார்த்தையை கூறினாள் என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது. அவ்வாறு தன்னை நபி என்றும் சமுதாயத்தின் தலைவர் என்றும் மக்கள் அடையாளப்படுத்த முடியாத அளவிற்கு சாதாரணமாகத்தான் நபியவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பது இதிலிருந்து நமக்கு தெளிவாகிறது. இன்றைக்கு சாதாரணமாக ஒரு முதல்வர் ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் முன்னாள் 10 கார் செல்லும். பின்னால் 10 கார் செல்லும். அவர்கள் செல்லக்கூடிய காரின் இரு புறமும் பாதுகாப்பாளர்கள் உடன் செல்வார்கள். அவர் புறப்பட்ட இடத்திலிருந்து அவர் போய் சேர வேண்டிய இடம் வரைக்கும் டிராஃபிக்கை சரி செய்து வைத்திருப்பார்கள். அவர் வருகிறார் என்பதை அந்த நடவடிக்கைகளை வைத்தே அனைவரும் அறிந்து கொள்ள முடியும். ஆனால் உலகத்தின் சர்வதேச தலைவராக இருந்த நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அவர்களுடைய ஊரில் இருந்த ஒரு பெண்மணிக்கு தன்னை அடையாளம் தெரியாத அளவிற்குத் தான் அவர்கள் இருந்தார்கள்.  மக்களோடு மக்களாக சாதாரணமாக பழகக் கூடியவர்களாக, தன்னை ஒரு தலைவன் என்று காட்டிக் கொள்ள விரும்பாதவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள் என்பதை இங்கே விளங்க முடிகிறது.

அடுத்து அப்பெண்மணி அவ்வாறு மரியாதைக் குறைவான வார்த்தைகளை சொன்ன போது உனக்காகத்தானே சொல்கிறேன். நீ இப்படி பேசுகிறாயே என்று கோபப்பட வில்லை. வேகப்பட வில்லை. அந்த பெண்ணை கடிந்து கொள்ள வில்லை. மாறாக அமைதியாக சென்று விடுகிறார்கள். காரணம், அந்தப் பெண்மணியினுடைய சூழ்நிலையை புரிந்து கொண்டார்கள். மகனை இழந்த சோகத்தில் கடுமையான கவலையிலும் நெருக்கடியிலும் இருப்பவர்களிடம் இருந்து இது மாதிரியான வார்த்தைகள் வெளிப்படுவது சகஜம் தான் என்பதை புரிந்து கொள்கிறார்கள்.

இன்றைக்கு நம்மிடம் இந்தப் பண்பு இல்லை. ஒருவர் வேகத்தில் ஏதாவது ஒரு வார்த்தை சொல்லி விட்டால் என்னைப் பார்த்து இப்படி ஒரு வார்த்தையை சொல்லி விட்டார் என்று கோபப்படுகிறோமே தவிர, அவர் எந்த சூழ்நிலையில் சொன்னார். அவர் எந்த சூழ்நிலையில் இருக்கிறார் என்பதை புரிந்து கொள்வதில்லை. அவ்வாறு ஒவ்வொருவரும் பிறருடைய சூழ்நிலைகளை புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டால் பெரும்பாலும் பிரச்சனைகளை தவிர்த்து கொள்ளலாம்.

فَلَمْ تَجِدْ عِنْدَهُ بَوَّابينَ

நபியின் வீட்டுவாசலில் காவலாளிகள் இல்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. இன்றைக்கு சாதாரணமாக ஒரு அரசு அதிகாரியை சந்திப்பதற்கு பல தடைகளை மீறித் தான் சொல்ல வேண்டும். பல நாட்கள் காத்திருந்து அனுமதி பெற்று அதற்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்து வாங்க வேண்டியதை வாங்கி அதற்கு பிறகு தான் அவரை சந்திக்க முடியும். சில நேரங்களில் அவ்வாறு சந்திக்க முடியாமலும் போகலாம். அப்படியே சந்தித்தாலும் முகம் கொடுத்து பேசுவதற்குக் கூட அவருக்கு நேரம் இருக்காது. ஆனால் நபிகள் நாயகம் ஸல் அவர்களின் வீட்டு வாசலில் அவர்களை சந்திப்பதற்கு வரக்கூடிய மக்களைத் தடுத்து நிறுக்குவதற்கு எந்த காவலாளியும் இல்லை என்பது ஒரு சமுதாயத்தின் தலைவர் சமுதாயத்தின் வழிகாட்டியாக இருக்க இருக்கக்கூடியவர், அந்த சமுதாய மக்கள் எப்பொழுது வேண்டுமானாலும் தன்னை சந்திக்கின்ற அளவிற்கு மக்களோடு மக்களாக நெருக்கமாக சகஜமாக பழகக் கூடியவராக எளிமையாக இருக்க வேண்டும் என்பதை நமக்கு தெளிவுபடுத்துகிறது.

إِنَّمَا الصَّبْرُ عِنْدَ الصَّدْمَةِ الْأُولَى

மிக உயர்ந்த பொறுமை என்பது பிரச்சனை நடந்த ஆரம்ப நேரத்தில் பொறுமை கொள்வதாகும். பொதுவாக எந்த விஷயமாக இருந்தாலும் அதனுடைய தொடக்கம் சிறியதாக இருக்கும். அது போகப் போக பெரிதாகி விடும். ஆனால் பிரச்சனைகள் என்பது தொடங்கும் போது அது பெரிதாக இருக்கும். அதிகமாக வேதனையைத் தரும். காலம் செல்லச் செல்ல அது சிறிதாகி அதனுடைய வேகம் குறைந்து விடும். எனவே அதனுடைய வேகம் குறைந்து நாட்கள் ஆன பிறகு பொறுமையாக இருப்பது உண்மையான பொறுமை அல்ல. பிரச்சனையை தொடங்கிய அந்த நேரத்தில் அது மிக வீரியமாக இருக்கின்ற பொழுது பொறுமையாக இருப்பது தான் உண்மையான பொறுமையாக இருக்கும்..

No comments:

Post a Comment